இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 13

தொடர் | வாசகசாலை

கொஞ்ச நாளுக்கு முன்னால் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து இந்திய உணவகத்துக்குச் சென்றிருந்தேன். இந்திய உணவுக்கு நான் அடிமைதான் இருந்தாலும் வீட்டுக்கு அருகிலிருக்கும் தாய்லாந்து உணவகம் என் முதல் தேர்வாக இருக்கும் அல்லது ஜப்பானிய சுஷி உணவகம். அடிக்கடி சுஷி சாப்பிட மாட்டேன். ஆனால் அங்கு மட்டுமே கிடைக்கும் வஸாபிக்காகச் செல்வேன். அதே ஜப்பானிய உணவகத்தில் கிடைக்கும் கடலுணவு சாலடும் சூடான சாக்கேவுக்கு இணையாக எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. அதே போல வியட்நாமியர்களின் உணவும் பிடிக்கும். ஸ்ப்ரிங் ரோல் ஆரோக்கியமான மற்றும் எளிதான உணவு. வட்ட வடிவ அரிசியில் செய்த அப்பளம் போன்ற தாளை வெதுவெதுப்பான நீரில் நனைத்து இறைச்சியும் கீரையும் மிளகாயும் வைத்து சுருளாகச் சுற்ற வேண்டும். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் ஸ்ப்ரிங் ரோல் சுருட்டுவதை ஒரு கலையாகப் பார்க்கிறேன். இப்படிச் சுற்றப்பட்ட ரோலை நிலக் கடலை சாஸில் நனைத்துச் சாப்பிட வேண்டும். எக்ரோல் நம்மூர் சமோசா போல மொறுமொறுவென்று வறுக்கப்பட்ட உணவு. அதுவும் பிடிக்கும். பின்னர் சூப் வகைகள் அத்தனையும் பிடிக்கும். அன்னாசி பழம் போட்ட மீன் சூப் தேவாமிர்தம். இந்த உணவகங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது. இந்திய உணவை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற அலட்சியமும் அவைகளுக்காக இரண்டு அல்லது மூன்று மைல் பயணிக்க வேண்டுமென்ற அலுப்பின் காரணமாக இந்திய உணவகங்களுக்குச் செல்வதில்லை. இன்னொரு காரணம், வெளிநாடுகளில் நாம் எதிர்பார்க்கும் ‘இந்திய’ உணவுகள் கிடைக்காது. உதாரணமாக தோசை வகைகள் எனக்குப் பிரியம். ரவா தோசை என் உயிர். ஆனால் கிடைக்காது. அல்லது அதைச் சாப்பிட நீங்கள் பத்து மைல் பயணிக்க வேண்டியிருக்கும். நல்ல உணவுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் இந்திய உணவகங்கள் ஒவ்வாமல் போனதற்கு காரணம் இந்தப் பணியாளர்கள் இந்தியர்களை நடத்தும் விதம் அவலமானது.

பொதுவாக என் உணவுகளை நானே சமைத்துக் கொள்கிறேன் என்றாலும் பணியின் காரணமாக பெரும்பாலான நேரங்களில் உணவகங்களில் தான் தஞ்சமடைகிறேன். இத்தாலிய உணவகங்கள் எளிமையானத் தேர்வு. கொஞ்சம் விலையுயர்ந்த உணவு என்றால் Legal Seafood. இது ஒரு பெரிய நிறுவனம். அமெரிக்கா எங்கும் கிளைகள் கொண்ட உணவகம். எப்போதெல்லாம் இந்த உணவகத்துக்குச் செல்கிறேனோ அப்போதெல்லாம் சொந்தவீட்டுக்கு போவது போன்ற உணர்வு ஏற்படும். அவ்வளவு நல்ல கவனிப்பு. நம் உணர்வுகளை புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வார்கள். உதாரணமாக ஒரு பெரும்புள்ளியுடன் இந்த உணவகத்தில் சந்திக்க நேர்ந்தால் எங்கள் உரையாடலில் குறுக்கிடாதவாறு அதே சமயம் எங்கள் உணவுகள் சரியான முறையில் சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிடும். பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் பாடல் பாடப்பெற்று அதற்குரிய  முறையில் கவனிக்கப்படுவார்கள். இது Legal Seafood போன்ற பெரிய கடைகளுக்கானது மட்டுமன்று, நான் மேலே சொன்ன இத்தாலிய, ஜப்பானிய, தாய்லாந்து மற்றும் இத்தாலிய உணவகங்களிலும் நடக்கும். பெரும்பாலும் பெண்கள் தான் பரிமாறுவார்கள். ஹனி, டியர் என்று அழைப்பார்கள். வாடிக்கையாளர்களே நம்முடைய உண்மையான முதலாளிகள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அது ஏனோ இந்திய உணவகங்களில் நடப்பதில்லை. ரியா போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். ரியா சமீபத்தில் நான் கண்டெடுத்த இந்திய உணவகத்தில் பணிபுரியும் தோழி. ஒருவேளை அவள் வராத நாளில் நான் உணவகம் சென்றால் சாப்பிடாமல் திரும்பிவிடுவேன். ஆனால் பெரும்பாலும் இந்தியர்கள் நட்பாக இருப்பதில்லை. இதில் பால் பேதமெல்லாம் இல்லை. இருபாலர்களும் அப்படித் தான் நடந்துக் கொள்கிறார்கள். நட்பாக நடந்துக் கொள்ளவிட்டாலும் பரவாயில்லை, ஏன் இங்கே சாப்பிட வந்தோம் என்று வருந்தும் நிலைக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வலுக்கட்டயமாக ஒரு புகழ் பெற்ற இந்திய உணவகத்துக்குள் நுழைந்தேன். முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்களுள் ஒருவர் எங்களை ஒரு மேஜையில் அமர்த்தினார். மேஜை அவ்வளவு அழுக்காக இருந்தது. கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஒருவர் பத்து நிமிடத்துக்குப் பிறகு வந்து சுத்தம் செய்தார். நான் ஒரு பியர் ஆடர் கொடுத்தேன். ஃப்ளையிங் ஹார்ஸ். அடுத்த பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு ஒரு பெரிய பியர் பாட்டிலை என் முன் கொண்டு வந்து வைத்தார்கள். எனக்கு அதிலொன்றும் குறையில்லை. இப்படி பாட்டிலுடன் கொண்டு வைப்பதற்கு இரண்டு நிமிடம் போதாதா? பியர் பரிமாறுவதற்கென்று ஒரு முறையிருக்கிறது. பியர் ஊற்றப்படும் பெரிய க்ளாஸ் தனியாகக் குளிரூட்டப்பட்டிருக்க வேண்டும். அதில் குளிர்ந்த பியரை பக்கவாட்டில் சாய்த்து ஊற்ற வேண்டும். இது ஏதுமில்லாமல் பியர் பாட்டிலையும் க்ளாஸையும் கொண்டு வந்து வைக்க நான் ஏன் உணவகம் சென்று பியர் அருந்த வேண்டும்?

அடுத்தது நாங்கள் மூவரும் கேட்பாரில்லாமல் ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தோம். ஆர்டர் எடுக்க வந்தவர் எங்களை பஃபேவுக்கு செல்ல வற்புறுத்தினார். இதையெல்லாம் வாசிக்கும் உங்களுக்கு என் தரப்பு புரியாமல் போகலாம். ஆனால் சொல்ல வேண்டியது என் கடமை. இதுதான் அராஜகம். சாப்பிட வந்த எங்களின் விருப்பத்தைக் கேட்காமல் எப்படி எங்களை பஃபே போகச் சொல்லலாம்? முடியாது என்று மறுத்துவிட்டேன். உணவு தனிப்பட்ட முறையில் தயாரிக்க நேரமாகும் என்றார். நான் மட்டும் சென்றிருந்தால் குடித்த பியருக்கான காசை விட்டெறிந்துவிட்டு வெளியேறியிருப்பேன். ஆனால் நண்பர்கள் சாதுவானவர்கள். காத்திருந்து சாப்பிடுவதாக சொன்னார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் எங்களுக்கு பரிமாறப்பட்ட அனைத்தும் தவறான ஆர்டர்கள். மீண்டும் மாற்றிக் கொண்டு வர பத்து நிமிடம். வந்த உணவு எதுவும் சூடாக இல்லை. இவையனைத்தும் அரங்கேறுகையில் ஒரு வருத்தமோ மன்னிப்போ யாரும் தெரிவிக்கவில்லை. பணியாள பொடிசுகள் கல்லா ஓரமாக நின்றுக் கொண்டு செல்போன் நோக்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இதில் வருத்தம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் இவ்வுணவகத்தில் இப்படித் தான் நடந்தேறுகிறது. இருந்தாலும் கூட்டம் அள்ளும். அங்கு சாப்பிட வரும் ஒருவருக்குக் கூடவா இந்தத் தவறுகளை சுட்டிக் காட்டத் தோன்றவில்லை? இது அங்கு மட்டுமல்ல, இன்னும் சில இந்திய உணவகங்களில் இப்படித்தான். ஆனால் எங்கும் எப்போதும் விலை தற்போதைய பெட்ரோல் விலைக்கு நிகரனாது. இந்திய உணவங்களைத் தவிர்த்து மற்ற உணவகங்களில் இப்படி நடந்திருந்தால் அன்றைய உங்கள் உணவு செலவை உணவகமே ஏற்கும். அல்லது அதை ஈடு செய்ய கிஃப்ட் கார்டுகள் வழங்கப்படும். அல்லது குறைந்தபட்சம் உணவக மேலாளர் வாடிக்கையாளரிடம் மன்னிப்பும் இனிமேல் இப்படி நடக்காது என்ற உறுதிமொழியும் கொடுப்பார்.

ஓர் அந்நிய நிலத்தில் வசிக்கும் போது சொந்த மண்ணின் தொடர்புகள் மிகவும் முக்கியம். அமெரிக்காவின் சிறப்பாக இதைப் பார்க்கிறேன். இந்நிலத்தில் குடியேறிய இத்தாலியர்களும் அயர்லாந்தவர்களும் சீனர்களும் தொடக்கம் முதலே இனக்குழுவாக வாழ்ந்து அதே சமயம் இந்த மண்ணுக்கான கலாசாரத்தையும் விடுக்கொடுக்காமல் வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இதில் பல்வேறு சாதக பாதகங்கள் இருக்கின்றன. என்னுடைய அடுத்த நாவலில் புனைவாக இதனை எழுத ஆசைப்படுகிறேன். இருவேறு கலாசாரங்கள் சங்கமிப்பதை நம் இந்தியர்கள் பிரச்சனையாகவே பார்க்கிறார்கள் என்பது என் கருத்து அதனால் தான் இந்திய உணவகங்கள் இப்படித் தரம் தாழ்ந்து நடந்துக் கொள்கின்றன.

இன்னும் இரண்டு மாதத்துக்கு எதைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை. காலையில் ஆவிப் பறக்க இட்லியும் காரமான மிளகாய் சட்னியும் தான் என்னை எழுப்பிவிடுகிறது. திருச்சி பக்கம் நண்பர்கள் வந்தால் தெரியப்படுத்துங்கள். திருவானைக்கோவிலில் நல்ல தோசைக் கடை இருக்கிறது. மொறுவலாக சிவந்த தோசையும் சாம்பாரும் அட்டகாசமாக இருக்கிறது. அப்படியே கொஞ்சம் தள்ளி ஸ்ரீரங்கம் சென்றால் உளுந்து மற்றும் இதர பருப்பு வகைகள் சேர்ந்த வடை கிடைக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே கொஞ்சம் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கலாம்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button