இணைய இதழ்இணைய இதழ் 52கட்டுரைகள்

 அந்த்வான் து செந்த் – எக்சுபெரியின் “குட்டி இளவரசன் ” – கவிஞர் நர்மி

கட்டுரை | வாசகசாலை

வாழ்க்கையைப் புறக்கணிக்க இலக்கியம் மிகவும்  சுவாரஸ்யமாக இருக்கிறது”  என்றார் பெர்னாண்டோ பெசோவா. அது எவ்வளவு பெரிய உண்மை! மீட்சி தருகிற கை ஒன்றினை பற்றிக்கொள்வதைத் தவிர சில சமயங்களில் வேறு வழியே இல்லை என்ற நிலையை இந்த உலகில் அடையும்போது, முதல் தெரிவாக தனக்கான புத்தகத்தைக் கண்டடைபவனும், அதை இறுக்கப்  பற்றிக் கொள்பவனும் பாக்கியசாலி. அப்படியான ஒரு சிறந்த புத்தகமே அந்த்வான் செந்த் _ எக்சுபெரியின்,குட்டி இளவரசன்’. அந்தப் புத்தகத்தில் உள்ள சிறப்பம்சம் இதுதான். ஒரு தடவை இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால் இனி வாழ்க்கை முழுவதும் அதை உங்களால் நிராகரிக்க முடியாத மாயத்தினை இது செய்யும்

குழந்தைகளுக்கானது என்று சொல்லப்படுகின்ற,குட்டி இளவரசன்’ ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த பெரியவர்களுக்கானது. ஒரு எழுத்தின் தரம் புத்தகத்தின் அளவிலும் பக்கங்களிலும் இல்லை என்பதை நிருபிக்கின்ற ஒரு படைப்பு இது. கிட்டத்தட்ட இருநூறுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட குட்டி இளவரசன் தன் எண்ணங்களைப் போலவே அமானுஷ்யமாகிப்போன மனிதனைப் பற்றியது . 1900 ஆம் ஆண்டு லியோன் நகரத்தில் பிறந்த அந்த்வான் து செந்த் _ எக்சுபெரி பற்றியதுநம் எண்ணங்களைப் போன்றே இந்த உலகில் இருந்து மறைந்துவிடுவது என்பது எப்படிப்பட்டது, அந்த மனிதருள் இருந்த சிந்தனைகளைப் போன்றே அவர் மாயமாகிப் போனார். அப்போது இரண்டாவது உலகப்போர் நடந்துக்கொண்டிருந்தது. எக்சுபெரி இராணுவத்தில் சேர்த்திருந்தார். 1944  ஜூலை 31 இல் கார்னிகாவில் போர்கோ என்ற இடத்தில் இருந்து விமானத்தோடு காணாமல் போயிருந்தார். அவருக்கு என்ன ஆயிற்று என்று இன்று வரை அறிய முடியவில்லை. அவர் வாழ்வில் நிகழ்ந்தவற்றைத்தான் அவர் தனது கதைகளில் படிமமாக்கியிருந்தார் என்று இலக்கிய விமர்சகர்களில் பலர் சொல்வதுண்டு. நிஜத்தையும், யதார்த்தத்தையும்  கண்முன்னே மிகத் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லி, வெற்றி பெறுகிற எழுத்துக்களுக்கென்று தனியிடம் இந்த உலகத்தில் உண்டு. அது எப்படி இருக்கும் என்பதை அந்த்வான் து செந்த் _ எக்சுபெரியின் குட்டி இளவரசன் இந்த உலகத்துக்குக் காட்டியது

கதையின் நாயகன் தனது ஆறாவது வயதில் இருக்கும்போது ஒரு அற்புதமான படத்தைக் காண்கிறான். அது ஒரு காட்டு விலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பது  போன்ற படம்

அந்தப் புத்தகத்தில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது

மலைப் பாம்புகள் இரையை மெல்லாமல் அப்படியே விழுங்கிவிடும். பின்னர் அவற்றால் அசையக்கூட முடியாது. உணவு செரிப்பதற்கு ஆகும் ஆறு மாதங்களும் அவை தூங்கிக் கொண்டிருக்கும்.” 

தெளிவாக மேற்சொன்ன வரிகளை மீண்டும் ஒரு முறை வாசித்துவிடுங்கள். மலைப்பாம்பு விழுங்கிய உயிரினம் அதன் வயிற்றுக்குள் உள்ளது. பிறகு குழந்தை எக்சுபெரி அதனை யோசித்து ஒரு படத்தை வரைவான். அது யானை ஒன்றை விழுங்கிய மலைப்பாம்பு பற்றியது. இந்தப் படத்தை பெரியவர்களிடம் காட்டி இந்தப் படம் உங்களை பயமுறுத்தியதா என்று கேட்பான். ஒரு தொப்பி எப்படி எங்களை பயமுறுத்த முடியும் என்று பதிலுக்கு அவர்கள் கேட்டார்கள். பின்னர் அவனுடைய படம் தொப்பியைக் குறிக்கவில்லை என்று அந்தச் சிறுவன் சொல்வான். பின்னர் மலைப்பாம்பு விழுங்கியிருக்கும் யானை அதன் வயிற்றில் தெரிவதைப் போல வரைந்து காட்டுவான். அப்போதுதான் அவன் முதன்முதலில் உணர்வான்,

பெரியவர்களுக்கு எப்போதும் எதிலும், எதைப்பற்றியும் விளக்கங்கள் தேவைப்படுகின்றது. கூடவே அவர்கள் இப்படிப்பட்ட அறிவுரைகளை குழந்தைப் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு தயாராகவே உள்ளார்கள். அதாவது, “மூடிய அல்லது திறந்த மலைப்பாம்புகளின் படங்களை ஒதுக்கிவைத்து விட்டுப் புவியியல், வரலாறு, கணிதம், இலக்கணம், ஆகியவற்றில் கவனத்தைத் திருப்பு“. 

அந்தச் சிறுவன் அந்தப் படத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பார்க்கும் எல்லோரிடமும் கேட்க முயற்சிப்பான். கிடைத்த விடைகள் எல்லாம் இப்படி இருந்தன. ” இது ஒரு தொப்பி“. கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஓவியங்கள் பற்றியோ, ஆள்புகாத காடுகளைப் பற்றியோ, விண்மீன்களைப் பற்றியோ பேசுவதை நிறுத்திவிட்டு எப்போதும்  பெரியவர்களுக்குப் பிடித்தது போன்ற பெரிய பெரிய கட்டிடங்கள் தொடர்பிலும், ஆடையணிகள் தொடர்பிலும், அரசியல்  தொடர்பிலும், விளையாட்டு அரங்குகள் தொடர்பிலும் பேசப் பழகிக்கொள்கிறான்

இப்படியாக வளர்ந்த இளைஞன் திடீரென ஒரு விமானி ஆகிவிடுகிறான். ஆறு ஆண்டுகள் கழித்து அவனது விமானம் மனித நடமாட்டம் அற்ற பிரதேசத்தில் வீழ்ந்து விடுகிறது . அந்த இடம் மனிதர்கள்  நடமாடுகின்ற பிரதேசத்தைவிட்டு ஆயிரம் மைல்கள் தொலைவில் இருக்கின்ற சகாரா பாலைவனம் . அப்போது அவன் வினோதமான ஒரு சிறிய குரலைக் கேட்பான். ஆயிரம் மைல்கள் மனித நடமாட்டம் அற்ற அந்தப் பாலைவனத்தில் தனிமையில் நின்ற அவனுக்கு அந்தக் குரல் வியப்பைத் தருகிறது. அந்தக் குரல் இதைச் சொல்லியது

தயவு செய்து எனக்கு ஒரு ஆடு வரைந்து கொடு!” 

தனது ஆறாவது வயதில் பெரியவர்களால் கைவிடுமாறு தூண்டப்பட்ட  மூடிய அல்லது திறந்த மலைப்பாம்பைத்  தவிர வேறு  எதையும் அந்த இளைஞன் கற்றிருக்க வில்லை. அந்தக் கேள்வியும் குரலும் அவனை ஏதோ செய்யும். எக்சுபெரியின் குட்டி இளவரசன்,   இப்படியாக பாலைவனத்தில் தனியாக மாட்டிக்கொண்ட விமானிக்கும், தனது சிறிய கோளில் இருந்து பிற உலகத்தைப் பார்க்க வந்த குட்டி இளவரசனுக்குமான உரையாடல்களே

குட்டி இளவரசனுடைய சிறிய கோளினைப் பற்றிக் குறிப்பிட வருகிற எக்சுபெரியின் வளர்ந்த மனிதன் பற்றிய கருத்துகள் ஒரு மிகச்சிறந்த மெய்யியலாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருக்கும். அந்த வரிகள் இவைதான்

பெரியவர்களுக்கு எண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். புதிய நண்பனைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேச நேர்ந்தால், அவர்கள் முக்கியமானவற்றைப் பற்றி ஒருபோதும் விசாரிப்பதே இல்லை. அவன் குரல் எப்படி இருக்கும்? அவனுக்குப் பிடித்த விளையாட்டுகள் என்ன? அவன் பட்டாம்பூச்சிகளை சேகரிக்கின்றானா? என்று உங்களை ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள். அவன் வயது என்ன? அவனுக்கு உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அவன் எடை என்ன? அவனுடைய அப்பா எவ்வளவு சம்பாதிக்கின்றார்? என்று உங்களை விசாரிப்பார்கள். அப்போதுதான் அவனைத் தெரிந்துகொண்டதாக நினைக்கின்றார்கள். நீங்கள் பெரியவர்களிடம் நான் வெளிர் நிறச் செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு அழகிய வீட்டைப் பார்த்தேன். பால்கனியில் கொத்துக் கொத்தாக ஜெரேனியம் மலர்கள் இருந்தன, என்று சொன்னால் அவர்கள் அந்த வீட்டை கற்பனைக் கண்ணால் காணச் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டைப் பார்த்தேன் என்றுதான் சொல்லவேண்டும். உடனே என்ன அழகு என்று வாய் பிளப்பார்கள். ”

விமானியிடம் ஆட்டை வரைந்து கேட்டபின் உடனே குட்டி இளவரசனுக்கு ஒரு சந்தேகம் வரும். அந்த ஆடும், அவனும், சிறு மலரும், சிறிய மரமும், மட்டுமே வாழப் போதுமான அவனது சிறிய கோளில் இருந்து பவோபாம் என்ற நச்சு மரத்தை மட்டுமே அந்த குட்டி ஆடு சாப்பிட வேண்டும் என விரும்புவான். அதேநேரத்தில் அவன் ஆசையாக வளர்த்துவைத்துள்ள அந்த ரோஜா மலரைத் தின்றுவிடக்கூடாது என்று ஆசைப்படுவான். மறுமுறை அவன் இப்படி துயரப்படுவான். ஆடு செடிகளை மேயுமானால் மலர்களை கூடத் தின்றுவிடும் அல்லவா? அதற்கு விமானி சொல்வான்ஆமாம் ஆடு பார்ப்பதை எல்லாம் தின்றுவிடும்.” 

”முள்நிறைந்த மலர்களைக் கூடவா?” என்று கேட்பான். ”ஆமாம். முள் நிறைந்த மலர்களை கூடத்தான்” என்று விமானி சொல்வார். ”அப்படியானால் முட்கள் அவற்றால் என்ன பயன்?” என்று கேட்பான். விமானி சொல்வார்,முட்கள் எதற்கும் பயன்படுவதில்லை. மலர்களுக்கே உரிய துர்புத்திதான் அது “. 

ஆனால் அதை ஏற்றுக்கொள்ள குட்டி இளவரசன் தயாராக இருக்கமாட்டான். அவன் இப்படிச் சொல்வான்,நான் உன்னை நம்பவில்லை! மலர்கள் பலவீனமானவை. அவை குழந்தை உள்ளம் கொண்டவை. அவை தங்களால் இயன்றவரை தங்களையே தைரியப்படுத்திக்கொள்கின்றன. முட்கள் இருந்தால் பயங்கரமாகத் தோற்றமளிக்கலாம் என்று நினைத்துக் கொள்கின்றன.” 

கோடி கோடி விண்மீன்களுக்கு நடுவே தனித்த ஒரு மலர் இருந்தது. அதை யாராவது ஒருவன் நேசித்தால் அந்த விண்மீன்களை காணும்போது அவனுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. அவனுடைய மலர் எங்கோ  நன்றாக இருக்கும் என்று தனக்குள் சொல்லி மகிழ்வான். ஆனால் அந்த மலரை ஓர் ஆடு மேய்ந்துவிட்டால் அவனுக்கு எல்லா விண்மீன்களும் ஒரேடியாக அணைந்துவிட்டது போல ஆகும். இது அவசியமில்லாத ஒன்று என்பதுபோல அவனுக்குத் தோன்றும்

”பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளாக மலர்கள் முட்களை உற்பத்தி செய்கின்றன. பலநூறாயிரம் கணக்கான ஆண்டுகளாக ஆடுகளும் மலர்களை மேய்கின்றன. அவ்வாறு இருக்க மலர்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு முட்களை உற்பத்தி செய்கின்றன என்பதை புரிந்துகொள்ள ஆய்வை மேற்கொள்வது இன்றியமையாதது இல்லையா?   மனிதர்கள் செய்கிற கூட்டல்களைக் காட்டிலும் இது அவசியம் இல்லையா?” என்று குட்டி இளவரசன் கேட்பான்

உலகத்திலேயே இல்லாத ஒரே ஒரு மலர் அவனுக்கு அவனது குட்டி கிரகத்தில் இருக்க, அந்த மலரை ஒரு சிறிய ஆடு ஒருநாள் காலை என்ன செய்கின்றோம் என்று உணராமல் ஒரேடியாக நிர்மூலமாக்கிவிடும் என்று நினைக்கும்போது, இது அவன் மனதை ஏதோ செய்கிறது

இந்தக் கதையில் வருகிற மலர், அது பற்றிய துயரம் என்பன நிஜ வாழ்க்கையில் அவருக்கு இருந்த காதலின் குறியீடு, அதில் உள்ள பிரச்சினைகளைதான் அவர் ரோஜாவின் படிமத்தில் பேசினார் என்று சொல்பவர்களும் உண்டு.

சுற்று வட்டாரத்தில் 325, 326, 327, 328, 329, 330 என்ற சிறிய கிரகங்கள் இருந்தன. இப்படித்தான் அவன் ஒவ்வொரு கிரகங்களாக பயணப்படுவான்

ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் குட்டி இளவரசன் அவற்றை முதலில் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தான்.

முதல் கிரகத்தில் ஓர் அரசனைச் சந்திப்பான். அதிகாரம் ஒரு மனிதனை எந்தளவு கர்வம்கொள்ள வைக்கிறது என்பதை அவன் புரிந்துகொள்வான். அதை நகைச்சுவை உணர்வோடு  அதிகாரத்தை கேள்வி கேட்பான். நீண்ட தூரத்தில் இருந்து பயணம்செய்துவந்த காரணத்தினால் ஒழுங்காக தூங்கியிருக்காத குட்டி இளவரசன் கொட்டாவிவிடுவான்.

அரசன் முன்னிலையில் கொட்டாவி விடுவது நாகரிகத்திற்கு முரணானது. நான் இதற்குத் தடை விதிக்கிறேன்.” என்று அரசன் சொல்வான். குட்டி இளவரசனின்  பதிலைக் கேட்டுவிட்டு இப்படிச் சொல்வான், அப்படியானால் நீ கொட்டாவி விட ஆணை பிறப்பிக்கின்றேன். நான் பல ஆண்டுகளாக யாரும் கொட்டாவிவிட்டுப் பார்த்ததே இல்லை. சரி இன்னும் கொட்டாவிவிடு இது என் ஆணைஎன்பான். இப்படி அதிகாரம் எல்லாவற்றின் மீதும் ஆணையிடுவதையும், அடிபணிவதையும் எதிர்பார்க்கிறது. ஆட்சியும், அதிகாரமும், போலியான கௌரவமும், கட்டமைப்பும் அவனுக்கு சலிப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

அரசன் குட்டி இளவரசனை அவனுடைய உலகத்தில் பதவி ஆசைகளைக் காட்டி வைத்துக்கொள்ளப் பார்ப்பான். அரசன் கூறுவான், நீயே உனக்கு நீதி வழங்கிக்கொள். அதுதான் மிகக் கடினம். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும், தனக்குத்தானே நீதி வழங்கிக்கொள்வது மிகக் கடினம். நீயே உனக்கு சரியானபடி நீதி வழங்கிக்கொள்வதில் வெற்றி கண்டால் நீ ஒரு உண்மையான ஞானிஎன்பான். உண்மையில் எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் இவை. இதற்கு குட்டி இளவரசன் ஒரு பதிலை சொல்வான்.

எனக்கு நானே நீதி வழங்கிக்கொள்ள வேண்டுமானால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இங்குதான் இருந்தாக வேண்டும் என்றில்லைஎன்று கூறிக் கடந்து வருவான்.

இரண்டாவது கோளில் ஒரு தற்பெருமைக்காரன் மட்டும் வசித்து வருவான். அவனுக்கு எப்போதும் பிறர் தன்னை புகழவேண்டும், கொண்டாட வேண்டும் என்ற நினைப்பு. குட்டி இளவரசனைக் கண்டதும் அவன் தன்னை பாராட்டவேண்டும், அந்த கிரகத்தில் அவன்தான் மிக அழகானவன் என்று சொல்லவேண்டும். மிகச் சிறப்பாக ஆடையணிபவன் என்று சொல்லவேண்டும். பணக்காரன், புத்திசாலி இப்படி எல்லாம் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைப்பான். குட்டி இளவரசனிற்கு அது மிகவும்  சிரிப்பை ஏற்படுத்தும். முன்பின் அறியாத மனிதன் ஒருவனிடம், வேறு யாருமே இல்லாத  கோளில் இருந்தபடி  எப்படி இந்த தற்பெருமைகாரனால் தன்னை பாராட்டவேண்டும் என எதிர்பார்க்கவும், கேட்கவும் முடிகிறது என வியந்து போவான். குட்டி இளவரசன் நினைத்துக்கொள்வான்,பெரியவர்கள் நிச்சயமாக விசித்திரமானவர்கள்இப்படி நினைத்தவாறே அடுத்த கோளை அடைவான்.

அங்கு ஒரு குடிக்காரனைச் சந்திப்பான். அவனைப் பார்த்து இளவரசன்,என்ன செய்கிறாய்?” என்று கேட்பான். அதற்கு அவன்,நான் குடிக்கிறேன்” என்பான். ”எதற்காக இப்படிக் குடிக்கின்றாய்?” என்று கேட்க, ”மறப்பதற்காகக்  குடிக்கிறேன்” என்பான். ”எதை மறப்பதற்கு?”  என்றபோது, ”வெட்கப்படுவதை மறப்பதற்கு” என்பான். ”நீ எதற்காக வெட்கப்படவேண்டும்?” என்று கேட்க, ”குடிக்கிறேன் என்பதற்காக வெட்கப்படுகிறேன்” என்பான். உண்மையில் இந்த அர்த்தமற்ற உளறலைக் கேட்டபின், பெரியவர்கள் மிக மிக விசித்திரமானவர்கள் என்று சொல்லி அடுத்த கிரகத்தை அடைவான்.

அந்த கிரகத்தில் ஒரு வியாபாரியைச் சந்திப்பான். அவன் பிறருடன் கூட கதைக்க நேரமற்று கணக்கு எழுதிக்கொண்டிருப்பான்அவன் ஐம்பது கோடியே பதினாறு இலட்சத்து இருபத்திரெண்டாயிரத்து எழுநூற்றி முப்பத்தொன்று விண்மீன்களை கணக்கு வைத்துக்கொண்டிருப்பான். இந்த விண்மீன்கள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை என்பான். இந்த வியாபாரிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்அந்த வியாபாரி குட்டி இளவரசனிடம் இப்படி சொல்வார்.

நிச்சயமாக யாருக்குமே சொந்தமில்லாத ஒரு வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உன்னுடையது. யாருக்குமே சொந்தமில்லாத ஒரு தீவைக் கண்டுபிடித்தால் அது உன்னுடையது. உனக்கு முதன் முதலாக ஒரு கருத்து தோன்றினால், அதை நீ பதிவு செய்து வைத்துக்கொள்கிறாய் என்றால் அது உன்னுடையதுவிண்மீன்கள் எனக்குச் சொந்தம் ஏனென்றால் அவற்றை சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்று எனக்கு முன்பு யாருக்கும் தோன்றவில்லைஇவ்வாறு பலதரப்பட்ட மனிதர்களை குட்டி இளவரசன் பயணம் செய்த கிரகம் முழுவதும் காண்பான். இந்த கதை முழுவதுமான உரையாடல் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிற மனிதர்களின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  

மனிதர்கள் வாழ்கிற இயந்திரத்தனமான கர்வமான வாழ்க்கை அவனை சலிப்படையச் செய்யும். அதில் அவர்கள் திருப்தியடைந்து மற்றவர்களையும் தாழ்வாக நடத்துவது, போதிப்பது என்பது   அவனை இன்னும் நகைப்புக்கு உள்ளாக்கும். இப்படி அவன் ஏழு கோள்களுக்குப் பயணம் செய்வான். ஏழாவது கோளில்தான் விமானியைச் சந்திப்பான். பாலைவனத்தைக் கடக்கிற இடைவெளியில் அவனுக்கும் விமானிக்கும் இடையில் ஒரு அழகான நட்பு மலர்ந்திருக்கும்.

எப்போதாவது ஒருசமயம் மனதில் உள்ளதை அப்படியே சொல்லக்கூடிய அளவு ஆத்மார்த்தமான உறவைச் சந்திப்போம். நட்பு ஏற்படும் பின்னர் பிரிவைச் சந்திக்க நேரலாம். அது காலத்திற்கும் ஒரு வலியை, தவிப்பை, பூர்த்தி செய்யமுடியாத இடைவெளியை விட்டுச்செல்லும். விமானி எதிர்பாராத சமயத்தில் குட்டி இளவரசனைச் சந்திப்பான். இருவரும் ஒத்த இரசனைக்காரர்கள். மனம்விட்டுப் பேசுவார்கள். ஒருவர் மனம் இன்னொருவருக்குப் புரிகிறது. அழகான நட்பு ஒன்று அங்கு உருவாகிறது. இறுதியில் என்ன ஆகிறது இவை எல்லாம்தான் குட்டி இளவரசன்அவன் பயணம் செய்த ஏழு கோள்களில் அவன் சந்தித்த மனிதர்கள், உரையாடல்கள், அவை தனிமனித இருப்பையும், பொது வாழ்வையும் எப்படி எல்லாம் கேள்விக்கு உட்படுத்துகின்றன என்பதன் தத்துவார்த்த படைப்பாக குட்டி இளவரசன் காணப்படுகிறது.

******

rajanarmi0@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button