இணைய இதழ்இணைய இதழ் 49சிறுகதைகள்

அப்பா – கா. ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

ப்பா அப்படிச் சொல்லும்போது இப்போதே இவரின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல இருந்தது. பெரிதான சம்பாத்தியம் இல்லாத மனிதருக்கு இதுபோன்ற ஆசைகள் ஏன் வருகிறது என்று கோபமாக இருந்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக பிறந்தவன் பெரும்பாலும் பெண் குழந்தையாகத்தான் வளர்வான். நானும் அப்படித்தான். தடுக்கி விழுந்தால் ஒரு அக்காவின் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு அக்காக்கள் கூட்டத்தில் மூச்சுமுட்டியே வளர்ந்தவன். அம்மாவின் முதல் பேறுகாலத்திற்காக அவளது அம்மா வீட்டுக்கு சென்ற போது மாட்டு வண்டியில் போனதாக சொல்வாள். நான் பிறக்கும்போது அம்பாசிடரிலே சென்றாளாம். அம்மாவின் பிரசவ காலத்தோடு நவீன போக்குவரத்து அறிவியலும் சேர்ந்தே வளர்ந்திருக்கிறது. அக்காக்களின் தாவணி, சேலை, ஜாக்கெட்டுகளுக்கு மத்தியில் என் உடைகளைக் கண்டெடுப்பதே ஒரு பெரிய வேலை. இவர்களின் மாதவிடாய் வாடை முதல் தலைவலி தைல நறுமணம் வரை எனக்கு அத்துப்படி. தெருவில் திருமணமாகாத அனைவரும் நான் அவர்களை ‘மாமா’ என்று அழைக்க வற்புறுத்துவதும் இதை ஏதாவது ஒரு அக்காவிடம் சொல்லப்போய் அவள் நாணுவதும் எனக்கு மாதந்திர பரிச்சயம். 

விபரம் தெரிந்த வயதில் இருந்தே அப்பா வேலைக்கு போய் பார்த்ததே இல்லை. இருக்கும் விவசாய நிலங்களை குத்தகைக்கு விடுவதில் இருந்து வரும் வருமானம் ஒன்றுதான் வாழ்வாதாரம். அப்பா என்றாலே அவர் விடும் புகையில் மங்கலாகத் தெரியும் அவர் முகம்தான் நினைவுக்கு வரும். பேசும்போது கூட இருமிக்கொண்டேதான் பேசுவார். இருமலுக்கு நடுவே வார்த்தைகளை மீட்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் போகப்போக அது பழகிப்போனது. கடைசியாக பிறந்த என்னிடம் பாசமாக இருந்தாலும் கோபம் வரும்போதெல்லாம் முரட்டுத்தனமாக அடிக்கத் தயங்கமாட்டார். பெண் குழந்தைகளாக பிறக்கும் குடும்பத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்த பிறகுதான் பெரும்பாலுமான பெண்களின் பேறுகாலம் முடிவுக்கு வரும். எங்கள் வீட்டு குடும்ப அட்டையில் அக்காக்களின் பெயர்கள் எதுவுமே பிழையில்லாமல் இருந்ததில்லை. இதற்கும் அப்பாதான் காரணம். யார் முதலில் பிறந்தது என்ற சந்தேகம் அவருக்கு கடந்த வாரம் வரை இருந்திருக்கிறது. 

இப்படிப்பட்ட அப்பா, அக்காக்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்றொன்றும் விசித்திரமானவை. மூத்த அக்காவுக்கு திருமணம் நடக்கும் போது நான் எட்டுமாதக் குழந்தை. அக்காவின் கணவருக்கு அப்பாவை விட நான்கு வயது அதிகம். இவர் செய்து வைத்த முதல் திருமணமே அடுத்த அக்காவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். அடுத்த வாரமே அக்கா அடுத்த தெருவில் காய்கறிக் கடை வைத்திருந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு வந்து நின்றிருக்கிறாள். அம்மா அதிர்ச்சியாக கையில் இருந்த பாத்திரத்தை கீழே போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்பா மணமக்களை அன்போடு வரவேற்று உட்காரவைத்து சாவகாசமாக சட்டையை மாட்டிக்கொண்டு இருவருக்கும் குளிர்பானம் வாங்க வெளியே சென்றிருக்கிறார். பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாத நேரங்களில் அம்மா அந்த சம்பவத்தை அடிக்கடி நினைவுகூர்ந்து எதோ ஒரு சொல்லிலடங்கா உணர்வை வெளிப்படுத்துவாள். இப்படித்தான் ஒவ்வொரு அக்காவிற்கும் ஏதோ சம்பவத்தில் திருமணம் நிகழ்ந்திருக்க வேண்டும். 

எல்லா அக்கா, தங்கைகளுக்கும் திருமணமாகும்வரை காத்திருக்கும் அண்ணன் தம்பிகளின் காத்திருப்பு கொஞ்சம் விசித்திரமானது. மோசமான திரைப்படத்தின் முடிவிற்காக காத்திருப்பது போல. அக்காக்களின் திருமண விவகாரத்தில் விட்டேத்தியாக இருந்த அப்பா, என் திருமணப் பேச்சு எடுத்ததும் எங்கிருந்தோ கிளம்பிய விஸ்வரூபம் கொண்டார். ஜல்லிக்கரண்டியால் சலிக்க முடியாத அளவிற்கு பெண்களை சலிக்கத் தொடங்கினார். இது எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தது. வயது தந்த பக்குவமாக இருக்கலாம் என நினைத்தேன். ஒரு கட்டத்தில் அவர் சலித்துப் போட்ட பெண்களின் பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருந்தது. ஒரு தூக்கம் கிட்டாத நள்ளிரவு நேரத்தில் அப்பா சலித்துப் போட்ட பெண்களின் பட்டியலை மறுதணிக்கை செய்து கொண்டிருந்த போது ஒரு உண்மை தெரிந்தது. அந்த பட்டியல் மாதமிருமுறை தவறாமல் ரேசன் கடையில் நிற்கும் பச்சையட்டைதாரர்கள். மிகச் சாதாரண குடும்பங்கள். பச்சையாகச் சொன்னால் வரதட்சணை கொடுக்க திராணியற்றவர்கள். திருமணத்திற்கு பெண்களே கிடைக்காத சமூகத்தில் அப்பாவின் செய்கை எனை மேலும் வெறியூட்டியது. இத்தனைக்கும் என் குடும்பமும் ஒரு பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு காத்திருந்த பச்சை அட்டை வகையறாதான்! 

ஒரு வழியாக பேரம் படிந்தது. எனக்கு திருமணமும் நடந்தது. பெண்ணுக்கு எனை விட நான்கு வயது அதிகம். கிட்டத்தட்ட என் கடைசி அக்கா வயது. உலக நியதி என்று நான்கு உருப்படாத எடுத்துகாட்டுகள் சொல்லி எனை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார் என் அப்பா. அவரின் பெரும்பாலான வார்த்தைகள் ராணுவ உயரதிகாரி சிப்பாய்களுக்கு இடும் கட்டளை போலவே இருக்கும். நீ என்ன குடும்பத்துக்கு பெரிதாய் கிழித்தாய்? என்று வரும் வார்த்தைகள் என்றுமே ஒலியாக எழுந்ததில்லை. எதோ ஒரு இனம் புரியாத பயம், மரியாதையை எங்கிருந்தோ எனக்கு கற்பிதம் செய்து கொண்டே இருந்தது அவரது ஆளுமை.

ஒரு கணவன் மனைவியிடம், குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு என் அப்பாவே உதாரணம். அவரின் தினசரி செய்கைகளை நான் கடைப்பிடிக்காமல் இருந்தாலே என் மனைவி குழந்தைகளுக்கு சிறந்த குடும்பத்தலைவனாக இருந்துவிட முடியும். திருமணத்திற்கு பிறகு அவரின் தலையீடுகள் குறையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குறையவில்லை. ஒரு கட்டத்தில் வெளியே செல்ல வேண்டும் என்றால் கூட, என் மனைவி என்னிடமும் நான் அப்பாவிடமும் முன்அனுமதி கேட்குமளவிற்கு நிலைமை போனது. வயது ஏற ஏற அவரது அடக்குமுறை கூடிக்கொண்டே போனது. எந்த வகையிலும் அவரது இயலாமை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எங்களை அவரது பிடிக்குள் வைத்திருந்தார். 

சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு வராதா என நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான் ஒருநாள் குளியலறையில் அப்பா வழுக்கி விழுந்ததாக தகவல் வந்தது. அப்போது நான் அலுவலகத்தில் இருந்தேன். தொலைபேசியில் வந்த தகவலை ஊழியர் ஒருவர் கனத்த இதயத்துடன் சொன்ன போது எனையும் அறியாமல் எழுந்த மகிழ்வை எப்படியோ மோப்பம் பிடித்து அலுவலகம் முழுதும் பேசித்திரிந்தார்கள்.

ஒருவித பதட்டம் கலந்த ஆனந்தத்துடன் வீட்டுக்கு வந்தேன். அப்பாவைச் சுற்றி அக்காக்கள் பிறந்த ஆண்டு வாரியாகச் சுற்றி நின்றிருந்தார்கள். கூடவே அழுதுகொண்டும் இருந்தார்கள். அழும் அளவிற்கு அப்பா அப்படி என்ன செய்தார் இவர்களுக்கு என்று ஆச்சரியமாக இருந்தது. பெத்த மகள்களின் பெயரை ரேஷன்கார்டில் சரியாகக் கூட சொல்லி கூட பதித்து வைக்காத இவருக்கா இவ்வளவு சோகம் கொள்கிறார்கள்? பாழும்கிணற்றில் தள்ளிவிடுவதை விட இவர்களுக்கு மோசமாக ஒரு திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்த இவருக்கு ஏன் இவ்வளவு சோகம் பிழியும் காட்சிகள்? பெண்களுக்கு உரிய ஒரு குணம் என ஒன்று உள்ளது, எத்துனை துரோகம் செய்த உறவாக இருந்தாலும் அவர்களுகென்று உடலியக்கம் நிர்ணயம் செய்து வைத்த கண்ணீரை சிந்தியே தீர்வார்கள். அதைத்தான் அப்பாவுக்கு அக்காக்கள் செய்கிறார்கள். அப்பாவை பார்த்தேன். தன் ஆதாரமான வெற்று கம்பீரத்தை முழுமையாக இழந்திருந்தார். தலையில் ரத்த காயம் ஏதுமில்லை. ஆனால், ஊமைக்காயம். அது நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது. எப்போதாவது நினைவு வரும் என்றார்கள்.

ஒருவாரமாக அப்பாவை பார்த்து வருகிறேன். ஏழுநாள் தாடியில் அவரது தோல்வியை முழவதும் ஒப்புகொண்டிருந்தது போலத்தான் இருந்தது. எனக்கும் கொஞ்சம் இரக்கம் பிறந்தது என்னவோ உண்மை. அதிகாலை நான்கு மணி இருக்கும் என் அறைகதவை அப்படி யாரும் தட்டியதே இல்லை. அந்தளவுக்கு உடைக்காத குறையாகத் தட்டினார்கள். தட்டியதில் என் அதிகாலை பதற்றம் அதிகமானது. தட்டியது அம்மா. அப்பா இறந்துவிட்டார்; அழுகத் தயாராக வேண்டும் என்று அசரிரீயாக ஒலித்தது. கதவைத் திறந்தேன். அழுதபடியே அம்மா, அப்பாவுக்கு நினைவு வந்துவிட்டதாக சொன்னார். பிறகுதான் அந்த அழுகை ஆனந்தக் கண்ணீர் என்று பிடிபட்டது. பழையபடி எழுந்து நடந்துவிடுவாரோ என்று சற்று கலக்கமாக கூட இருந்தது. சொந்த பந்தம் என்று அனைவரும் வந்துவிட்டார்கள். சொந்த பந்தங்கள் அருகிலேயே குடியிருப்பது எவ்வளவு நடைமுறை சிக்கல் நிறைந்தது என்று விளங்கியது. 

அப்பா என்னிடம்தான் பேசவேண்டும் என்று சொல்லியபோது மார்கழி அதிகாலையிலும் வியர்வை வரழைத்தது. அருகில் சென்றேன். அப்பாவை சுற்றி நின்ற சொந்தங்கள் ஆர்வமாக வழிவிட்டன. அவர்களின் காதுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க பகிரங்க ஒட்டு கேட்புக்கு தயாரானதை சூழல் தெரிவித்தது. அப்பா மெலிந்திருந்தார். கண்களால் அழைத்தார். ‘ஏண்டா, இந்த மாச சம்பளக்கவர் வரல?’ எனக் கேட்பாரோ என அச்சம் கூட இருந்தது. என் முகத்தாடைகளை பாசமாக வருடிக்கொடுத்தார். இத்தனை வருடத்தில் இவ்வளவு மிருதுவான ஸ்பரிசத்தை பிறந்ததில் இருந்து இவரிடம் கண்டதில்லை. “ஏலே எய்யா, என் வண்டி ரொம்ப நாள் ஓடாது. நான் செத்துப்போனா மேளதாளத்தோட விமர்சையா அடக்கம் பண்ணிருய்யா. என் சாவுக்கு வர்ற எல்லாரும் வயிறு நிறைஞ்சு போகணும்!” என்று இருமலோ இல்லாமல் மிகத்தெளிவாக சொன்னார். இவர் வாயாலேயே செத்து போயிருவேன் என்று சொன்னதற்காக மகிழ்வதா? இவர் சாவுக்கு சில லகரம் செலவு செய்ய வேண்டியதை நினைத்து அழுவதா என்று புரியவில்லை. கிழவன் என்னை மட்டும் அழைத்து சொல்லியிருந்தால் விஷயம் யாருக்கும் தெரியாமல் எளிதாக முடிந்திருக்கும். இப்படி சொந்த பந்தம் சூழ்ந்திருக்கும்போது சொல்லி என்னை சங்கடத்தில் தள்ளுவதில் இருந்தே அப்பன் திருந்தவில்லை என்று தோன்றுகிறது.

ஏன் இவர் சாவிலும் எனை கடன்காரனாக ஆக்கத் துணிய வேண்டும்? அப்பாவுக்கு நான் வாங்கும் ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் அத்துப்படி அப்படியிருக்கையில் செலவுக்கு மகன் எங்கே போவான் என்று ஒரு நிமிடம் யோசிக்க வேண்டாமா? மனைவி வீட்டில் கேட்கலாம்தான். ஆனால், ஆடம்பர இழவுக்கு கேட்டால் எனை எப்படி அங்கு மதிப்பார்கள்? அப்பா மீண்டும் நினைவை இழந்தார். சொந்தங்கள் கலைந்து போயின. ஒரு சொந்தக்காரன் கூட ‘இவர் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாதே, உன் சக்திக்கு ஏற்ப அப்பாவை அப்புறப்படுத்து. என்ன பெருசா இந்த குடும்பத்துக்கு செய்தார் இவர்?’ என்று சொல்லவேயில்லை. நிகழப்போகும்ஒரு இறப்பு என் மானப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ஒருவாரம் கடந்தது. “உன் நிலை தெரியாமல் சொல்லிவிட்டேன், உன் விருப்பப்படியே எனை அடக்கம் செய்” என்று ஒரு நாள் அப்பா கனவில் வந்து சொல்லிவிட்டுப் போனார். கனவில் சொல்லி என்ன பயன்? மீண்டும் அப்பாவுக்கு நினைவு மீளவேயில்லை. வீட்டுக்கு வந்த மருத்துவர் இனி மணிக்கணக்கில்தான் இவரது வாழ்நாள் எனச் சொல்லிவிட்டுப் போனார். அப்பாவின் அக்கா எனை கட்டிப்பிடித்து அழுதார், அப்பாவின் ஆசையை நிறைவேற்றச் சொல்லி.  

பணத்திற்காக அலைய வேண்டிய நிர்பந்தம் எனை பெரிய கதவுகள் போட்டு, வீட்டுக்குள் எருமை தலை மாட்டிய, பெரிய மீசை கொண்ட வட்டிக்கடைகாரனின் வீட்டை நோக்கி தள்ளியது. உடன் வேலை பார்க்கும் நண்பர்தான் அழைத்துச் சென்றார். வட்டிக்கு கொடுப்பவரின் அறைக்கு சென்றோம் தெய்வங்கள் சூழ அமர்ந்திருந்தார். எடுத்த எடுப்பில் எவ்வளவு வேண்டும் என்றார். வேறு விசாரிப்புகளுக்கு இங்கு வேலையே இல்லை. பணம் உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால் என்னென்ன விபரீதங்கள் நிகழும் என்பதை காட்சிகளாக விவரித்தார். கேட்பதற்கு திகிலாகவும், காட்சியுடன் எனை பொருத்திப் பார்க்கும் போது அடிவயிற்றில் மின்னல் கிழித்துப் போனது. பட்டென்று எழுந்து நின்று பணம் வேண்டாம் என்று சொல்லி வெளியே வந்தேன். கூட்டிச்சென்ற நண்பர் எனை கொல்வதை போல பார்த்தார். 

பணத்திற்கு வேறு வழியே இருப்பது போல தெரியவில்லை. பேசாமல் அவரின் கடைசி ஆசையை நிராகரிப்பு செய்தால்தான் என்ன என்று கூட ஒரு எண்ணம் வந்தது. இப்படி வீம்பாய் நின்று செய்தே ஆகவேண்டும் என்கிற உணர்வு எங்கிருந்து வந்தது? வேறு யாரிடம் இருந்து வந்திருக்க வேண்டும்? என் அப்பாவிடமிருந்துதான். இல்லையென்றால் மாமனார் பணம் தருகிறேன் என்று சொன்ன போது ஏன் நான் கடுமையாக மறுக்க வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில நேரம் நாமே அப்பாவாகி விடுகிறோம். எடுத்ததை முடிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அப்பா. ஆனால், அது பெரும்பாலும் நல்லதாய் இருக்க வாய்ப்பே இல்லை.   

அன்று சோர்வாய் வீட்டுக்கு வரும்போது வெளியே கூட்டம் நின்றது. அப்பாவின் நினைவு திரும்புதல் கூட்டம் போல இருந்தாலும் கொஞ்சம் அமைதி தெரிந்தது. சற்று அருகில் சென்றதும் அம்மாவின் கூக்குரல் கேட்டது. வண்டியைத் திருப்பினேன். அது நேராக வட்டிக் கடைக்காரன் வீட்டு வாசலில் போய் நின்றது. இரண்டாவது முறையாக எனைப் பார்த்தவர் மிக வாஞ்சையாக கேட்ட பணத்தை முன் அடுக்கினார். அரசு முத்திரைத்தாள் இரண்டு, மூன்றில் கையெழுத்து வாங்கினார். நன்றி செலுத்திவிட்டு செல்லும்போது போது பணம் வராவிட்டால் நிகழுப்போகும் சம்பவத்தை வெகு விரைவாய் சொல்லி வழியனுப்பி வைத்தார். துக்கவீட்டுக்கும் வட்டிக்கடைக்காரன் வீட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. 

வீட்டுக்கு வந்தேன். எனக்கு முன்பே எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. என்னைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். புஷ்டியான மஞ்சள் பையை பார்த்த சித்தப்பா ஒருவர் அதை கவனமுடன் வாங்கிக்கொண்டு, இனி எல்லா விஷயத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதிகூறினார். பணம் மட்டும் இருந்தால் அதுவே எல்லாவற்றையும் பார்த்துகொள்ளும்.

அம்மா எனை கட்டிபிடித்து கதறி அழுதாள். அவளை உதறிவிட்டு குளிக்கச்சென்றேன். எனக்கு முன் இங்கு அப்பா குளித்திருக்க வேண்டும். நல்ல வாசனையாக இருந்தது. குளித்து முடித்ததும் வீட்டுக்கு வெளியே ஒரு வேனில் சமையலுக்குப் பெரிய பெரிய அண்டாக்கள் வந்து இறங்கியது. துக்கவீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்கள் என்பதால் இரண்டு வீடு தள்ளி உள்ள காலி மனையிடத்தில் பந்தல் போட்டு அங்கேயே சமைக்கவும் பரிமாறவும் ஏற்பாடுகள் நடந்தன. துக்கவீட்டில் சாப்பிடக்கூடாது. ஆனால், நான்கு வீடு தள்ளி அவர்கள் போடும் சாப்பாடை சாப்பிடலாம் என்பது எவ்வளவு வசதியான சால்ஜாப்பு. வாழ்நாளில் பிச்சைக்காரனுக்கு கூட உணவளிக்காத ஒருவனின் இறப்புக்கு கிடாய் விருந்து நடப்பது நகைமுரண்தான். 

காதைப் பிளக்கும் இருவகையான இசைக்கு ஏற்பாடு செய்திருந்தார் சித்தப்பா. எங்கு இழவு விழுந்தாலும் மது அருந்திவிட்டு அங்கு ஆடும் இரண்டு பெரியவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தூரத்து உறவினர்கள். எல்லா இழவிலும் சம்பிரதாயம் செய்யும் இவர்கள் கைக்காசை போட்டு மது அருந்தி இறப்புக்கு சிறப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். 

அவசரமாக மைக் செட்டில் அப்பாவின் அருமை பெருமை குறித்து பாடலாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. வாழ்வில் அறமென்றால் என்னவென்று தெரியாத மனிதர் கூட இறந்ததும் அறத்தின் நினைவுகூறலுக்கு இலக்காகிவிடுகிறார். 

நடப்பது யாவும் கனவு போல இருக்கிறது. வாசலில் நின்று வருபவர்களின் துக்கத்தை கை வழியாக இதயத்துக்கு ஏற்றிக்கொள்ள முயல்கிறேன். துக்கம் விசாரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக உறவினர் ஒருவர் அப்பாவை ‘பாவம், நல்ல மனுஷன்’ என்றார். இறப்பு எனும் இயற்கை ஒருவனை தூயவனாக்கி விடுகிறது. அரசாங்கம் அவன் மேல் குற்றமே இருந்தாலும் விடுவித்து அவனை வழியனுப்பிவைக்கிறது. சமூகத்தை பொறுத்தவரை மரணம் மீளவே முடியாத ஒரு பெரிய முடிவு. 

அப்பா இறக்கும் போது மாலை இருட்டிவிட்டது. இப்போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. மாலையில் இறப்பவர்கள் அடக்கமாக ஓர் இரவை காத்திருக்க வேண்டும். நெருங்கிய சொந்தங்கள் அழுதே ஓய்ந்து இப்போது தூங்கப்போய்விட்டார்கள். அக்காக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு அக்காவை கூப்பிட்ட அம்மா அவளின் கணவர் சாப்பிட்டுவிட்டாரா என விசாரித்தார். அம்மா அதிர்ச்சியில் இருந்து மீண்டு வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டதாகத் தோன்றியது. அப்பா நினைவு தவறிருக்கும் போது மூச்சு எழுந்து அடங்குமே தவிர உடலில் வேறு எந்த அசைவும் இருக்காது. இப்போது கூட அப்படி இருப்பது போலத்தான் தோன்றுகிறது.

பல இரவுகளைக் கடந்திருப்பேன். பல இரவுகள் எப்படி கடந்தது என்றுகூடத் தெரியாது. ஆனால், இந்த இரவு என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் இரவில் விடியலுக்கு காத்திருப்பது எத்தனை நீளமானது என்று விளங்கியது. வந்தவர்களின் கையைப் பிடித்தே நான் ஓய்ந்துவிட்டேன். மறுநாளுக்கு தயாராகும் உணவின் வாசம் உள்ளே புகைந்துகொண்டிருந்த ஊதுபத்தி வாசத்தைத் தாண்டி மூக்கை துளைத்தது. எப்போதும் வீட்டுக்கு பால் அதிகாலை நான்கு மணிக்கு வந்துவிடுமாம். வாழ்வில் முதன்முறையாக பால்காரனை இன்றுதான் பார்க்கிறேன். கூட்டத்தை பார்த்துவிட்டு அதிகபடியான பால் பாக்கெட்டுகள் வேண்டுமா என்று கேட்டுவிட்டு, வந்ததற்காக அப்பாவையும் வாங்கிவிட்டு சென்றார். இரண்டு தெரு தள்ளியிருக்கும் மசூதியின் பாங்கு ஒலித்ததும் வெளிச்சம் வரத் தொடங்கியது. கூடவே இரண்டாம் கட்ட உறவினர்களும் வரத் தொடங்கிவிட்டார்கள். ஒருவன் இறந்த கணத்தில் எழும் அழுகை சத்தம் நேரம் ஆகஆக வெறும் மரியாதையான நினைவு கூறலாக மாறிவிடும். அப்படித்தான் இப்போது வருபவர்கள் தள்ளிநின்று சம்பிரதாய கும்பிடு மட்டுமே வைக்கிறார்கள். 

காலை சாப்பாடு கிட்டத்தட்ட முடிந்து மதிய சாப்பாடுக்கு ஆயத்தமாகி விட்டது கூட்டம். சித்தப்பா அருகில் வந்து பணம் போதவில்லை என்றார். மனைவியை அறைக்கு அழைத்துச் சென்று சங்கிலியை வாங்கிக்கொண்டு அதை சித்தப்பாவிடம் கொடுத்தேன். மனிதர் உற்சாகமாக வாங்கிக் கொண்டு சென்றார். 

மூத்த அக்கா எனை வற்புறுத்தி சாப்பாடு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தாள். உண்மையில் யாராவது வற்புறுத்தி சாப்பிட வைக்க மாட்டார்களா என்று கடந்த பணிரெண்டு மணிநேரம் காத்திருந்தேன். சாப்பாடு சுவையாக இருந்தது. பரிமாறும் குழுவிற்கு நான்தான் பணம் பட்டுவாடா செய்பவர் என்று தெரிந்திருக்க வேண்டும். உணவு குறைய குறைய அள்ளிவைத்து மகிழ்வித்தார்கள். இது யாவும் வட்டிக்கு வாங்கிய பணம் என்று ஒரு முருங்கைக்காயை உரியும் போது உரைத்தது. அதற்கு மேல் உணவு இறங்க மறுத்து பாதியில் மூடினேன். 

மீண்டும் ஒரு குளியலை முடித்துவிட்டு நீர் மாலைக்குத் தயாரானேன். ஒருவழியாக எல்லா சடங்கும் முடிவுக்கு வந்தது. எப்போது வேண்டுமானாலும் அப்பாவின் உடல் எடுக்கப்படலாம் என்பதற்கு அடையாளமாய் அழுகை சப்தம் சற்று அதிகமாகவே கேட்டது. எனக்குத்தான் நேற்றில் இருந்து ஒரு பொட்டு அழுகைக்குக் கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நானும் அப்பாவுடலான இனிமையான தருணங்களை நினைவு கூர்ந்து அழ முயற்சிக்கிறேன். மருத்துக்கு கூட கண்களில் நீர் கோர்க்கவேயில்லை. 

எங்கள் ஜாதி ஆட்கள் இறந்தால் ஒரு வாகனம் வரும். அதுதான் உடலைச் சுமந்து கொண்டு இடுகாடு வரை வரும். ஜாதியும் இடுகாடு வரை வருவது அதுதான் கடைசி என்று நினைக்கிறேன். அப்பாவை வாகனத்தில் கிடத்தினார்கள். வாகனத்தில் முன்னே நான் நடந்து செல்ல செல்ல வாகனமும் பணிவாக பின்நோக்கி வந்தது. அங்கும் சில சம்பிரதாயம் நடந்து முடிந்தன. வெட்டியான் பொறுப்பாக சிதைக்கு தீ மூட்டும் முஸ்தீபுகளில் இருந்தார். தலைமாட்டின் மேல் இருந்த வறட்டியில் சூடம் இருந்தது. அதில் தீ வைத்தேன். அந்த தீ முழுதாகப் பரவ வாய்ப்பே இல்லை. வெட்டியான் என் கையில் இருந்த தீ பந்தத்தை வாங்கி அவனே ஏழு இடங்களின் தீ வைத்தான். அப்பா கொழுந்துவிட்டு எரிந்தார். திரும்பிப்பார்க்காமல் நடக்கச் சொன்னார்கள். எனக்கோ திரும்பிப்பார்க்க வேண்டும் போல இருந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் திரும்பிப் பார்த்தேன். அப்பா முழுவதுமாய் தீயின் பிடிக்குச் சென்றுவிட்டார். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டோம்.

ஆட்டோவில் இருந்து இறங்கிய என்னை தெருவே வேடிக்கை பார்த்தது. வீட்டுக்குள்ளே சென்றேன். அப்பா அதிகமாக வெளியே சென்று பார்த்ததே இல்லை. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் அவரது கட்டளை ஒலித்துக்கொண்டே இருக்கும். இன்று அவரில்லாமல் வீட்டுக்குள் சென்ற என்னை பார்த்து அம்மா கேட்டார், அப்பா எங்கடா? என்று அழுதபடியே கேட்டார். அறைக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டேன். வெளியே எனக்காக ஒருவர் காத்திருந்தார். மனைவி வீட்டாரின் நெருங்கிய உறவு என்றார்கள். கடாமீசை, கரியநிறம், அகலமான உருவமைப்பு கொண்ட இவர் வட்டிக்கடைக்காரனை அழுத்தமாக நினைவுப்படுத்த எங்கிருந்தோ வந்த விம்மல் அழுகையாக வெடித்துக் கிளம்பியது. அவரையே கட்டிபிடித்து அழுகத் தொடங்கியிருந்தேன். கணக்கு ஒப்படைக்க வந்திருந்த சித்தப்பா அருகில் இருந்தவரிடம் சொன்னது காதில் கேட்டது, “பயலுக்கு அப்பா மேல அம்புட்டு பாசம்!”

*******

rabeek1986@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button