இணைய இதழ் 99கவிதைகள்

அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

பவளமல்லி மரம்!

கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்
மங்கலாகி நிற்கிறது
அம்மா வரைந்த
பவளமல்லி மரம்

பின்வாசல்
முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்
புதிதாகக் குடியேறியிருக்கிறது
பறவைக் குடும்பமொன்று

சிதிலமடைந்த மதிற் சுவற்றை
நிறைத்திருக்கின்றன
குளவிக்கூடுகள்

கால்கடுக்க நின்ற
சமையல் கூடத்தில்
புதிதாக முளைத்திருக்கிறது
கரையான் புற்று

உடைந்த ஓடுகளின் வழியே
இறங்கி வருகிற நிலவில்
தெரிகிறது அவள் முகம்

மெல்லக் கவியும் இருட்டில்
மீண்டும் உறங்கிச் செல்கிறது
யாருமற்ற பழைய வீடு

காயாமல் நிற்கும்
கண்ணீர்த்துளிகளைத்
துடைத்துக்கொண்டு
வெளியேறும் மகளுக்கு
வாசலெங்கும்
பூக்களை உதிர்த்திருக்கிறது
அம்மா வரைந்த
பவளமல்லி மரம் !

*

நதியிருந்து கடலுக்கு

சிறியதும் பெரியதுமான
செந்நிறப் பூக்கள்
உடலெங்கும் சிதறிய
மெல்லிய உடையில்
குட்டி இளவரசியைப்
போலிருந்தாள்
7 வயது இருக்குமா?
என் மகளின் வயதுதான்!

மெல்ல அருகில்
செல்லச் செல்ல
விசும்பும் சத்தம்!

குரல் வழி
கண்ணீர் வழிய
வார்த்தைகளற்றுப் போன
மழலையின்
பிஞ்சுக் கரங்கள் பற்றிய
திசையில் ஓடத் துவங்கினேன்

அவள் இட்டுச்சென்ற வீதியில்
இடிந்து விழுந்த கட்டிடங்களில்
ஒளிந்து விளையாடி
குதூகலிக்கற சிறுவன் மீது
ஏவுகணை வீசிச் செல்கிறது
அரச விமானமொன்று

வெடித்துச் சிதறிய
எஞ்சிய பாகங்களில்
விளையாட ஆரம்பிக்கிறது
மற்றொரு குழந்தை

தொடர் குண்டுகளின்
அடர்புகையில்
இருண்டு கிடக்கிற
தாய்நிலத்தின்
உறைந்த குருதியில்
சலனமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறது
ஒரு மழழை

உடல்கள் உடல்கள்,
தெருவெங்கும் உடல்கள்
இரத்தம், இரத்தம்,
ஜோர்டன் நதியிருந்து கடலுக்கு…

பிரசவிக்கும் முன்பே
குண்டடிபட்டு
சிதறிக் கிடக்கிற சிசுவின் தலை;
தகப்பனோ சகோதரனோ
யாரென்றே அறியமுடியாதபடி
கட்டிடத்தின் அடியிலிருந்து
நீண்டிருக்கிற கரங்கள்;
துண்டாகிப் பிளந்து கிடக்கிற
குழந்தையின் கால்கள்;
வரிசையாக
கிடத்தி வைக்கப்பட்டிருந்த
அவள் வயதொத்த பிஞ்சு உடல்கள்;
இறுதியில் யாரது
இடிபாடுகளுக்கு இடையில்
முனகிக் கொண்டிருப்பது ?
அவளது தாயாய் இருக்குமோ?

நடந்த கால்களை
கிடந்த உடல்கள் பின்னப் பின்ன
சாவுகளுக்குப் பழக்கப்பட்டவள் போல
எதைத் தேடுகிறாய் மகளே ?

புத்தகப் பைக்குள் பென்சிலைத்
தேட வேண்டிய கரங்கள்
உடல் குவியல்களுக்கு
இடையில் யாரைத் தேடுகின்றன?

பதுங்குகுழிகளில் பிரசவிக்கிற
தாயிடமும்
ஈரம் காட்டாத ஏவுகணைகளுக்கும்
இடையில் எதைத் தேடுகின்றன பிஞ்சுக்கரங்கள் ?

ரொட்டித் துண்டுக்குக் கையேந்தி நிற்கும்
சிறுவன் கரங்களில்
துவக்குகள் பரிசளிக்கும்
ஊரில் யாரைத் தேடுகிறாள்?

என் வீ..டு இ..ங்..கே..தான்
இ..ரு..ந்..த..து!
விம்மியவளிடம்
என்ன சொல்லுவேன்?

வீடற்றுப் போனாய் மகளே என்று சொல்லவா?
நாடற்றுப் போனாய் மகளே என்று சொல்லவா?
நாங்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்க
நாதியற்றும் போனாய் என்று சொல்லவா?

சிறியதும் பெரியதுமான
செந்நிறப் பூக்களில்
உதிரம் வழிந்து
என் நெற்றி மேல் வீழ
கலைந்தது கனவு

மனித மனங்களின்
பிடறியை உலுக்க
கடைசி சாட்சியாய்
நிற்கிறாள்
குட்டி இளவரசி !

எப்போது விடியும்
அவளுக்கு?

*

aruljoewin1@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button