கட்டுரைகள்

வங்கிகள் தேசியமயமாக்கல்: நோக்கமும் தேக்கமும்..!

மணி தனுஷ்கோடி

சுந்தர் சி இயக்கிய “வின்னர்” படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை  வெகுபிரசித்தம். அதில் ஒரு காட்சியில் கட்டதுரை ரியாஸ் கான் குடும்பத்தின் வயலை, கைப்புள்ளையான வடிவேலு நாசம் பண்ணியதாக பஞ்சாயத்துக்காட்சி ஒன்று வரும்.

அதில் இவனுங்க வேலைவெட்டி இல்லாம சுத்தறதாலதான் இதெல்லாம் பண்றானுங்கன்னு ஒருத்தர் சொல்லுவார். அப்போ வடிவேலு, ‘ஆமா வேலைவெட்டி இல்லாமதான் சுத்துறோம். வேனும்னா ஒரு பேங்க் ஒண்ணு கட்டிக்கொடுங்க’ என்று சொல்வார். அப்படித்தான் முன்னர் தனியார் வங்கிகள் இருந்தது.

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் (19.07.1969) மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திராகாந்தி நாட்டிலுள்ள 14 வங்கிகளை தேசியமயமாக்குவதாக அறிவித்தார்.அதற்கு முன்புவரை குறிப்பிட்ட சிலருக்காக மட்டுமே வங்கிகள் செயல்பட்டு வந்தன. டாட்டாவுக்கும் பிர்லாவுக்கு தனியே வங்கி இருந்தது. அவர்களின் பெருமுதலீட்டை அவர்களுக்குள்ளாகவே கடன் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் வழக்கம்போல லேவாதேவி செட்டிமார்கள் என்றழைக்கப்பட்ட செட்டியார்கள் இந்தியன் வங்கியையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும் நடத்தி வந்தார்கள்.

வங்கிச் சேவை என்பது அப்போது குறிப்பிட்ட சிலருக்கானது மட்டுமே. நகர்ப்புறங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் செயல்பட்டது. ஏழை எளிய மக்களுக்கெல்லாம் வங்கிச் சேவை கிடைக்க வாய்ப்பே இல்லை. விவசாயக்கடனெல்லாம் வசதிபடைத்த விவசாயிகளுக்கே கிடைத்து வந்தது.

தேசியமயமாக்கலுக்கு முன்பு வங்கிகள் திவாலானால் மொத்த பணமும் திவால்தான். ஆனால் வங்கிகளை தேசியமயமாக்கியதன் நோக்கம் வங்கிச் சேவைகளை எல்லோருக்குமானதாக மாற்றுவதற்காகத்தான் என்றாலும் கூடவே அரசின் திட்டங்களுக்கு வங்கிகள் நிதி வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான். பொது மக்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத்தொகைகள் அரசுக்கு கடனாக வழங்கப்பட்டு அதன் வட்டி வருவாய் மூலம் மக்களின் வைப்பு நிதிகளுக்கு கணிசமான வட்டி வழங்கப்பட்டது.

அரசின் கட்டுப்பாட்டுக்குள் வங்கிகள் வந்ததும் அரசியல்வாதிகளின் தலையீட்டில் வங்கிகளின் நடைமுறைகள் மாற்றம் பெற்றன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் ஓரளவு சிறப்பாக்கப்பட்டதால்தான் பெரும்பாலான மக்களின் முதலீடுகள் இன்று வங்கிகளில் பாதுகாப்பாக உள்ளது. மிகப்பெரிய மோசமான நிதிச் சீரழிவு நிலை ஏற்பட்டு அமெரிக்காவின் பெரிய வங்கிகளே திவால் ஆனபோதும் இந்தியாவின் வங்கித்துறை பெரிதான பாதிப்புக்குள்ளாகவில்லை.  முதலீட்டாளர்களும் இழப்பைச் சந்திக்கவில்லை.

மேலும் சில பொதுத்துறை வங்கிகளில் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளால் முறையற்ற தொழிலதிபர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டு அது வாராக்கடனாகி வங்கிகள் நட்டப்பட்டாலும் இழுத்து மூடும் நிலைக்கு செல்லவில்லை. குளோபல் ட்ரஸ்ட் வங்கி தவிர… அதிலும் கூட முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஹர்ஷத் மேத்தா பங்கு வர்த்தகத்தில் வங்கிகள் மூலம் முறைகேடாய் பணம் பெற்றுக்கொண்டு மாபெரும் ஊழல் செய்த போதும் வங்கிகளின் மக்கள் பணம் பாதுகாக்கப்பட்டது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்பும் சாமான்ய மக்களுக்கு அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பெரிதாக அந்த வங்கிச்சேவை சென்று சேரவே இல்லை. இந்தக்குறையை ஓரளவிற்கு கூட்டுறவு வங்கிகள் தீர்த்து வைத்தாலும் அதிலும் அரசியல்வாதிகளின் கைவரிசை உண்டு. 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பிரதமர் மோடியின் ‘ஜன் தன்’ வங்கிக்கணக்கு திட்டத்தில் 3 கோடியே 40 லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள். ஆனால் அதில் தனியார் வங்கிகளில் இணைந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே. மேலும் தற்போது அரசு பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணம் ஏழை எளிய மக்களை வங்கிகள் பக்கமே செல்லவிடாமல் தடுக்கிறது.

அதேவேளை வங்கிகளில் முதலீடு மற்றும் வரவு செலவுக் கணக்கில் பணம் இருந்தால் வருமானவரித்துறை நடவடிக்கை நம்மீது இருக்குமோ என்ற சாதரண மக்களின் பயமும் நியாயமானதே.

வங்கிகளை தேசியமயமாக்கி ஐம்பதாண்டுகள் நிறைவுற்றாலும் இன்று வரை வங்கிகளின் சேவை முழுதாய் எல்லோருக்கும் சென்று சேரவே இல்லை என்றே கூறலாம்.

இறுதியாக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதின் நோக்கம் பாதி நிறைவேறி விட்டது எனலாம், அதாவது அரசியல்வாதிகளுக்கு லாபம்….! சாமானிய மக்களுக்கு அல்வா..!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button