இணைய இதழ் 94கட்டுரைகள்

மீராவின் யூதாஸ்கள் – இந்திரா ராஜமாணிக்கம்

கட்டுரை | வாசகசாலை

தாஸ் மீது பிரேமாவுக்குக் காதல் எப்படி வந்ததென்று அதிகம் யோசிக்கத் தேவையில்லை. 

சித்திரவதை முகாமில் விசாரணை அதிகாரியாக இருந்த பிரேமாவின் அப்பா, நெருக்கடி காலத்திற்குப் பிறகு சாதாரண கான்ஸ்டபிளாக வேலை பார்க்க மனமின்றி ராஜினாமா செய்துவிட்டு, பழக்கதோசத்தில் தன் மனைவியையும் ஐந்து வயது மகளையும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிக்கிறார். வலிக்க வலிக்க அடித்து ரத்தவாந்தி எடுக்கவைத்த புரட்சிக்காரர்களின் கதைகளை அவர் சொல்லாத ராத்திரிகள் இல்லை. அத்தனை போராட்டாக்காரர்களின் பெயர்களும் பிரேமாவுக்கு அத்துப்படி. ஒவ்வொரு நாளும் குடிகார அப்பாவின் அடியையும் வசைகளையும் தாங்கியே வளர்ந்த பதினைந்து வயதுக்காரி, முதன்முதலாக ஏரியில் மூழ்கிய பிணங்களை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தாஸைப் பார்க்கிறாள்.

தாஸ் – முன்பொருகாலத்தில் விசாரணைக் கைதிகளில் ஒருவனாக இருந்தவன். புரட்சியாளனாகயிருந்து போலீஸின் அடிகளைத் தாங்கி, ஒருகட்டத்தில் வலி தாங்காமல் புரட்சிக் கும்பலைச் சேர்ந்த தன் காதலியைக் காட்டிக் கொடுத்து, அவளுடைய மரணத்திற்குக் காரணமானவன். தனது கைகளாலேயே தன் காதலியின் பிணத்தை பள்ளத்தாக்கின் நீருக்குள் எறிந்துவிட்டு, வாழ்நாள் முழுக்க அதன் குற்றஉணர்ச்சியில் குறுகிப்போய் தன்னை, ‘யூதாஸ்’ என்று அடையாளப்படுத்திக்கொண்டவன்.

தாஸிற்கும் பிரேமாவுக்கும் பதினைந்து வயது வித்தியாசம். அது பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையில்லை. அப்பாவின் சித்திரவதைக் கதைகளிலிருந்து தாஸ் தனித்துத் தெரிந்திருந்தான். 

”உருட்டும்போது ஆம்பளை வீரம் கழண்டு வரும்” அப்பா பயங்கரமாக எக்காளமிட்டார். ”ஆம்பளைங்க அழுவாங்க. வலிக்கிறபோது வேர்த்துப்போகும். வலிய உண்டாக்குறவனுக்கும் வேர்த்துப்போகும். உனக்கெல்லாம் என்ன தெரியும்!? அவனுங்க குடிச்ச தாய்ப்பாலக் கூட நாங்க கக்க வச்சோம்”

தாஸின் மீது ஏற்பட்ட காதலுக்கும் ஆராதனைக்கும் அடிப்படை தன் அப்பாவின் இந்த வர்ணனைகள்தான் என்பது பிரேமாவிற்குத் தெரிந்திருந்தது.

தாஸோ, பிரேமாவின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஊரிலிருந்து காணாமல் போனான்.

ஒவ்வொரு முறை அவன் தொலைந்துபோகும்போதும் பிரேமா உடைந்து போய் பிறகு அவனைத் தேடி அவனிடமே வந்தடைந்தாள். மாதங்களாக, வருடங்களாக…

”எனக்கு உங்களோட காதல் வேணும்”

”எனக்கு என்னைப் பற்றிய பெருமிதம் இருந்தது பிரேமா. அவர்கள் தகர்த்தெரிந்தது அதைத்தான். ஒரு தனிமனிதனுக்கு அவனுடைய பெருமிதம் அவனுடைய நெஞ்சுக்கூடு. அது நெறித்து ஒடுக்கப்படும்போது நான் நானாக இல்லாது போனேன். நான் வெறும் காட்டிக் கொடுப்பவன் ஆனேன்”

ஒரு குழந்தையைப் போன்று அவளை தன் மார்பில் சாய்த்து உறங்க வைத்தவன், வழக்கம்போல தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.

பிரிந்தவனிடமே திரும்பத் திரும்ப தஞ்சம் புகுவது பற்றியோ, ‘என்னை ஏற்றுக்கொள்’ என மன்றாடுவது பற்றியோ பிரேமா ஒருபோதும் வருத்தப்படவில்லை.

”தாஸ், உங்களை நான் கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைச்சீங்களா?”

”நீ இனி என்னைத் தேடிக்கிட்டு வராதே”

”எனக்குத் தேடிப் போறதுக்கு வேற யாருமில்ல”

  • ‘யூதாஸின் நற்செய்தி’ – கே.ஆர்.மீரா – எதிர் வெளியீடு

சக போராட்டக்காரர்களைக் காட்டிக் கொடுத்ததன் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் ஆணின் மீது, சித்திரவதைக் கதைகளைக் கேட்டே வளர்ந்த சிறுமிக்கு உண்டாகும் காதல்தான் ’யூதாஸின் நற்செய்தி’.

புதினம் முழுக்க ரத்தவாடையும், பெண்ணின் தவிப்பும் ஒன்றுடன் ஒன்று கலந்து பரவியிருக்குமாறு எழுதியிருக்கும் கே.ஆர்.மீரா சமீபகாலமாக ஆச்சர்யப்படுத்துகிறார். இவரது கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்களின் உடல்மொழியாகட்டும், மனஉளைச்சலாகட்டும், தீர்மானங்களாகட்டும், வாசிப்பவர்களைக் கொஞ்சமே கொஞ்சம் அசைத்துப் பார்க்கத்தான் செய்கின்றன.

”என்னை அழ வைப்பதற்கு நான் அவனை மட்டுமே அனுமதிப்பேன்”

ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் உச்சபட்ச அன்பானது இப்படித்தான் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

மீண்டும் மீண்டும் நிராகரிக்கும் ஒருவரிடமே தன்னை ஒப்புக் கொடுக்கத் தவிக்கும் அன்பிற்கு, போக்கிடமென்பதே இருப்பதில்லை. அது எப்போதும், ”உன்னைத் தேடி வந்துவிட்டேன் பார்த்தாயா!” என்றபடி சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.

ஆனால், இக்கதையை வாசிப்பவர்களுக்கு விடப்படும் சவால்களோ இன்னும் கடினமானவை. நம்மால் ஒருபோதும் தாஸ் மீது குற்றம் சுமத்தவோ, அவனை வெறுத்து ஒதுக்கவோ முடிவதில்லை. பிரேமாவின் தேடலுக்கு சற்றும் சளைத்ததல்ல, யூதாஸின் மறுப்பு.

”பாறைக்கட்டின் மேல் நான் நின்றிருந்தேன். அவர்கள் என்னிடம் அவளைக் கீழே எறியச் சொன்னார்கள். ரத்த வாந்தியெடுத்து நான் சக்தியற்றுக் கிடந்தேன். ரத்தம் ஆணின் ரகசியம் பிரேமா. அதை வாந்தியெடுக்க வேண்டி வரும்போது அவன் தகர்ந்துபோவான். குனிந்து நின்றுதான் நான் அவளை எறிந்தேன். அவள் கூடவே விழுந்து போய்விடவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், மரத்தில் கட்டிவைத்த வடக்கயிற்றின் ஒரு முனை எனது இடுப்பில் இருந்தது. உலகத்தில் மிகவும் சபிக்கப்பட்ட காதலன் நான் பிரேமா. இடுப்பிலோ பாதங்களிலோ கட்டு விழும்போது மனிதன் மிருகமாகிவிடுவான். மனிதனுக்குத் தேவை சுதந்திரம். ஓடவும் நடக்கவும் மட்டுமல்ல. சிந்திக்கவும், கனவு காணவும், சாகவும்”

எங்கெல்லாமோ தேடி அலைந்து மூச்சுவாங்க வந்தடையும் பிரியத்திடமிருந்து அரக்கத்தனமாய் வெளியேறுகிறவர்கள் பற்றி வாசிக்கும்போதெல்லாம் நாம் பரிதவித்துப் போகிறோம். மீராவின் நாயகர்கள் அந்த அரக்கத்தனத்தைத்தான் செய்கிறார்கள் அல்லது அதை நோக்கித்தான் நகர்கிறார்கள்.

வாழ்நாள் முழுக்க தாகம் தீராமல் ஏரிக்குள் சவங்களை எடுத்துக் களைத்த யூதாஸிற்குப் பரிட்சயப்பட்ட முகத்தின் சாயல் இருப்பதில் ஆச்சர்யமில்லை.

யூதாஸின் நற்செய்தி – மோ.செந்தில்குமாரின் மொழிப்பெயர்ப்பில் மறுக்க முடியாத மாயம் செய்திருக்கிறது.

கே.ஆர்.மீரா – சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கதை சொல்லும் வித்தை அறிந்திருக்கிறார்.

********

indhirarajamanickam@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button