பிக் பாஸ் 3 – நாள் 38,39&40 – மணியோ இப்போ பன்னெண்டு இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?
மித்ரா
புரிதலற்ற உறவுகளும், அதனால் நேரும் உளவியல் சிக்கல்களும் எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு கடந்த நாட்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி உதாரணம். சாக்ஷி ஒருபுறம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதை கவினும் லாஸ்லியாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான் பிக் பாஸ் வைத்த மொட்டைக் கடுதாசி டாஸ்க். ‘இப்படியே பேசிட்ருந்தா எப்டி யார் பெருசுனு அடிச்சுக் காட்டுங்க’ மொமண்ட்.
சாக்ஷி-கவின்-லாஸ்லியா உறவுச்சிக்கல்களைப் பற்றியே எத்தன முறை பேசுறதுனு கடுப்பாகத் தான் இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். மனநிலை மாறுகிறது. அதைப் பற்றியெல்லாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஏனெனில் சமகாலத்தில் இளைய தலைமுறையினர் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சனை இந்த உறவுச் சிக்கல். ஒரு நேர்மையான உறவிற்கும், வெளிகள் விசாலப்பட்டதன் காரணமாக பலர்பால் மனம் ஈர்க்கப்படுவதற்கும், அது தான் சுதந்திரம் எனச் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார்கள்.
சாக்ஷி வெளிப்படையான, சுய கட்டுப்பாடுகளற்ற சாமான்ய பெண், கவினும் அப்படித் தான். அவருக்கு சாதகமான உறவைத் தரும் பெண்ணுடன் அதைத் தொடர விரும்ப சாதாரண ஆண். ஆனால், லாஸ்லியா அப்படியல்ல. பிடிவாதமும் அடம்பிடிக்கும் குணமும் கொண்ட ஒருவர். அவரால் இன்னொருத்தி சொல்கிறாள் என்பதற்காக எல்லாம் கவினை விட்டுத்தர முடியாது. அந்த முடிவை அவரே எடுக்க வேண்டும் என நினைப்பார். அதற்காக அவர் சாமர்த்தியமாக நகர்த்தும் காய்களுக்கு கவின் பழியாகிறார். பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்த கவினை, காரணமே இல்லாமல் சிறையில் தேம்பித்தேம்பி அழுது, வந்து பேச வைத்தது ஒரு சின்ன சாம்பிள். இதிலென்ன பிரச்சனை எனத் தோன்றலாம். இதே இடத்தில் சாக்ஷி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? நேரே கவினிடம் சென்று “நான் தெரியாம கோவத்துல பேசிட்டேன். மன்னிச்சுக்கோ.” எனக் கெஞ்சியிருப்பார். ஆனால் லாஸ்லியா என்ன செய்தார்? இதில் இவர் சண்டை போட்டுப் போகும் போது யாரும் பின்னால் வரவில்லையெனக் கோபம் வேறு. எத்தனை சண்டைகளில் நாம் சென்று அனைவருக்கும் ஆறுதல் சொன்னோமென யோசிக்க வேண்டும் லோஸ்லியா மேடம்.
யாரும் யாரையும் இவருடன் பேசு பேசாதே என்றெல்லாம் சொல்ல முடியாது தான். ஆனால், உறவு என்பது உணர்வுகளை மதிப்பது தானே தவிர வேறில்லை. அனைத்தையும் விட ஒரு உறவு, அது தரும் அன்பு மேன்மை பொருந்தியதாகத் தெரிந்தால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கவினுக்கு அப்படித் தெரியவில்லை. அதனால் தான் சாக்ஷி தவிப்பது நாடகமாகவும், அவரின் குற்றச்சாட்டுகள் தன்னை காலி செய்வதற்கான யுத்தியாகவும் தெரிகின்றன. தகுதியில்லாதவரிடத்துக் கையளிக்கப்படும் உணர்வுகள் இப்படித் தான் நடுத்தெருவில் கிடக்கும்.
எனக்கு நிஜமாகவே ஒன்று புரியவில்லை. இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-பெண் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே. அடித்துப் பிடித்து விளையாடலாம், சோகத்தில் தோளில் சாய்த்து ஆறுதல் சொல்லலாம், வெற்றியை அல்லது மகிழ்ச்சியை கட்டியணைத்துக் கொண்டாடலாம். இதென்ன ரகம் காரணமில்லாமல் நடுராத்திரியில் கையைப் பிடித்துக் கொண்டு கதைக்கும் நண்பர்கள். “நீ தானே அன்னைக்கு நண்பர்கள் நடுராத்திரி பேசமாட்டாங்களானு கேட்ட?” என நீங்கள் கேட்கலாம். உண்மை என்னவென்றால் நான் ஒருபோதும் என் நண்பர்களிடம் காரணமேயில்லாமல் ரொம்பப் பாசமாக எல்லாம் கையைப் பிடித்துக் கொண்டு பேசியதில்லை. அப்படியெல்லாம் வரவே வராது முதலில். இது என்ன ரக நட்போ மதுமிதா கும்பிடும் நமச்சிவாயருக்குத் தான் வெளிச்சம்.
அடுத்து அபிராமி. மேற்கண்டவர்களின் முக்கோணப்புயல் பல நாட்களாக மையம் கொண்டிருப்பதால் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகிப் போன கன்டென்ட் தான் அபிராமி. ரொம்ப ரொம்ப அப்பாவியான முகேனை முழுமுற்றாக தன் ஆளுமையில் வைத்திருக்கும் மிக மிக விவரமான கேரக்டர். வந்த சில நாட்களிலேயே சேரனிடம் அபிராமி சொன்னது நினைவிருக்கலாம். “இந்த வீட்டில் டைம் பாஸ் செய்ய எனக்கொரு பாய் ப்ரண்ட் வேணும்” எனப் புலம்பிக் கொண்டிருந்தார். முதலில் கவினிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். கவின் நழுவி விடுகிறார். உடனேயே முகேன். “நான் நட்பாகத் தான் இருக்கிறேன். வெளியே எனக்கொரு காதலி காத்திருக்கிறாள்.” என்று சொல்கிறார் முகேன். மீண்டும் முன்னை விட நெருக்கமாகத் தான் பழகுகிறார்கள். இதைப்பற்றிய கேள்வி வந்த போது முகேன் சொன்ன பதில், “எனக்கு உன்னைப் பிடிக்கும். எனக்குத் தெரியும் உனக்கு வெளிய ஒரு வாழ்க்கை இருக்குனு. நான் தொந்தரவு பண்ண மாட்டேன். ஒருவேளை அது இல்லாம போனா அப்போ நான் உன் கூட இருப்பேன்.” அப்டினு அபிராமி சொன்னாராம். அதாவது நாளைக்கே முகேனுக்கு ப்ரேக் அப் ஆனால், அபி அந்தக் காதலை டேக் கேர் செய்து கொள்வாராம். முன்பதிவு முறை. வெளியே சென்றவுடன் முகேனுக்கு ப்ரேக் அப் ஆவதற்கான அத்தனை வேலையையும் தான் உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறார் அபிராமி. இது தெரியாமல் முகேன் அவரைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் ஒரு சப்ஸ்ட்யூட் வைத்துக் கொண்டு காதல் செய்வதை எந்தக் காதலியாவது விரும்புவாளா நீங்களே சொல்லுங்கள். இதில் இந்தக் கேள்வியை பொதுவில் கேட்டு விட்டார்கள் என ஒப்பாரி வேறு. பெர்சனலாம். அங்கே கவின் குடும்பப்பிரச்சனை சந்தி சிரிக்கிறது அதென்ன தேசியப் பிரச்சனையா?
பிக் பாஸ் வீட்டில் நான் மிகவும் மதிக்கும் ஒரே பெண் ஷெரின் தான். அவரின் பக்குவம் வியக்க வைப்பது. ஒரு உறவுக்கு எந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் தான் ஷெரின். ரொம்ப நாட்களாகவே ஷெரின் சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார். “இதை அலோவ் பண்ணாத. இது உன்னை சாப்ட்டுடும்.” என. அதைக் கேட்காததன் விளைவு தான் சாக்ஷியின் இன்றைய நிலை. “உன்னைய புரிஞ்சுக்காதவங்க உன்னைப் பத்தி என்னமோ சொல்லிட்டு போறாங்க அதுக்கு எதுக்கு நீ ரியாக்ட் ஆகுற. உனக்கு நான் இருக்கேன் பத்தாதா?” என கோபத்தில் சாக்ஷியிடம் கத்தியதெல்லாம் நண்பேன்டா மொமண்டுகள்.
நேற்றைக்கு மிகவும் டென்சன் ஆக்கியது சேரன் மீதான சரவணனின் ஆட்டிட்யூட் தான். ஆரம்பத்தில் இருந்து சிறந்த போட்டியாளர் பட்டியலில் ஒருமுறை கூட சேரன் பெயரை யாரும் பரிந்துரைத்தது கூட இல்லை. ஆனால் மோசமான போட்டியாளரைக் கேட்டால் முதலில் சேரன் பெயரை சொல்லி விட்டுத் தான் அடுத்த ஆப்சனுக்கே போவார்கள். கவினோ, சாண்டியோ சேரனை சொல்லி விட்டால் மற்றவர்கள் நமக்கெதுக்கு வம்பு என ஆதரிப்பார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். இந்த வார டான்ஸ் டாஸ்கில் கவனித்திருந்தால் தெரியும். சேரன் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இயல்பான இயக்குனர் பார்வை. அதனடிப்படையில் தான் சரவணன் விஜயகாந்த் போல செய்யவில்லை எனக் கூறினார். தன்னை யாராவது எதாவது சொல்லி விட்டால் உடனே அவர்களை மட்டம் தட்டி விட வேண்டும் என்ற புத்தி சரவணனுக்கு. “நான் அந்த ட்ரெஸ்ல விஜயகாந்த் மாதிரி இருந்தேன். நீங்க காமெடியா இருந்தீங்க” என மூன்று முறை கூறினார். அதையும் கண்டுகொள்ளாமல் விட்ட சேரனின் ஒரே கேள்வி, “விஜயகாந்த் மாதிரி சரவணன் செய்தாரா?” என்பது தான். நான் மேக்கப் போட்டா போதும் நடிக்கவே தேவையில்லை போன்ற பிதற்றல்கள், போயா, போடா, நீ வா போ என இத்தனை வருட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் சரவணன். மீண்டும் சொல்கிறேன் சரவணன் தட்டையான அறிவுடைய, சமூகத்தின் அனைத்து விதமான பொதுபுத்திகளையும் கற்பிதங்களையும் கொண்ட ஆண் நெடில். அவரை எல்லாம் மென்டாராக வைத்துக் கொண்டு சாண்டி, கவின் அறிவுரை கேட்பது தான் நகைமுரண்.
இதில், “எங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனைனா தெய்வத்துகிட்ட போவோம். அந்த தெய்வத்துக்கே ஒரு பிரச்சனைன்னா…” ரேஞ்சில் மதுமிதா வேறு. ஓ மை ஏசப்பா!!!