
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறுபத்தி மூன்று வயதாகும் திரைப்பட இயக்குனர் பேலா தரிடம் ஒரு நேர்காணலில் இவ்வாறான ஒரு கேள்வி வினவப்பட்டது. “உங்களுடையப் படங்கள் பெரியத் திரைகளைக் கொண்ட திரையரங்குகள் அல்லாது பல்வேறு பிற தளங்களில் பார்வையாளர்களால் காணப்படுகையில் எவ்வாறு உணர்வீர்கள்?” அதற்கு பேலா தர் “அதை நான் வெறுக்கிறேன். உதாரணமாக, என்னுடைய “சதன்தங்கோ”(Satantango) திரைப்படத்தை ஒருவர் அலைபேசியில் கண்டதாகக் கேள்வியுற்றேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது. அப்படம் விஸ்தாரமானத் திரைக்கென்றே தீர்மானித்துப் படமாக்கப்பட்டது” எனத் துயர் தொனிக்க பதிலளித்தார்.
சமயங்களில் மடிக்கணினியில் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் பேலா தரின் கூர்மையான இவ்வரிகள் ஏதோவொரு கணத்தில் உதித்து மனப்பரப்பில் சிறு குற்றச்சலனத்தை உண்டாக்கி விட்டு அகலும். நிகழ்காலத்தில் தொழில்நுட்பங்களின் அபரிமிதமான எழுச்சிகளால் ஒவ்வொரு துறைகளிலும் ஆழப்பதிந்திருக்கும் அதன் இருப்பு பிரமிப்பூட்டுகிறது. பிற துறைகளுடன் ஒப்பு நோக்குகையில் திரைக்கலை உலகில் அவை மாற்றங்களை நிகழ்த்துகிற வேகம் மிரளச் செய்கின்றன. அனுதினமும் திரைப்படக் கலையின் உள்ளீடுகளிலும், புறக்கட்டமைப்புகளிலும், திரைப்படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறைமைகளிலும் தன் ஆதிக்கத்தை நிறுவியபடி அவை முன்னகர்கின்றன.
ஒரு திரைப்படம் பார்வையாளனை வந்தடையும் வகைப்பாடுகள் வெவ்வேறு பரிணாமங்களை கடந்து இன்று அதன் உச்சப்பட்ச சாத்தியங்களில் நிலைக் கொண்டிருக்கின்றன. விரலசைவில் படங்களை நாம் தரவிறக்கிக் காணலாம். சந்தா செலுத்தினால் வருடம் முழுவதும் காட்சிகளாலேயே நம்மை திளைப்பில் ஆழ்த்தும்படியான சேவையை அளிக்க பல பொழுதுபோக்கு இணையக் காட்சி ஊடக நிறுவனங்கள் காத்துக் கிடக்கின்றன. திரையரங்கிற்கு சென்று தான் ஒரு திரைப்படத்தை காணக்கூடும் என்கிற நிலை மாற்றம் கண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு திரைப்படத்தையும், திரையரங்கையும், பார்வையாளனையும் எந்தப் புள்ளியில் இணைத்து நிறுத்தி பொருள் கொள்வது?“அங்க காட்றத இங்கேயே என் லேப்டாப், மொபைல்ல பாக்கலாமே இதுக்கு தியேட்டர் தான் போகணும் அவசியம் இல்ல” என்கிற கூற்றில் திரையரங்குகளை வெறும் காட்சிகளை திரையில் ஒளிர விடுகிற காட்சிக்கூடம் மாத்திரமே என்கிற குறுகிய மனப்பார்வையும் அறியாமையுமே தேங்கி கிடக்கின்றன. திரையரங்கிற்குள் பொருத்திக் கொள்கிற நம் இருப்பானது புறஉலகின் உடனான நம் பிணைப்பைச் சிறிது காலம் துண்டித்துக் கொண்டு ஒரு பெரும் வனத்திற்குள் பிரவேசித்து திசை நோக்காமல் சஞ்சரிப்பது போன்றது. வனத்திலிருந்து மீளும் தருணத்தில் நம் உளம் சிறு அசைவு கண்டிருக்கும். திரையரங்கு ஒரு பெரும் வனம், அகத்தின் ஸ்தூல உரு. நம் அகத்தை பிம்பங்களால் பிரதிபலிக்கும் பிம்பக் காடு. திரையரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் கவிழும் கணத்தில் அவ்வூலகின் ஓர் அங்கமாக நாம் உருக்கொண்டு பிரம்மாண்ட திரையில் அசையும் பிம்பங்களின் ஊடாக நம்மையே காண்கிறோம். அத்தருணத்தில் அகமும் அகமும் ஒரே நேர்க்கோட்டில் நேரிட்டு மோதுகின்றன, உரையாடுகின்றன, கண்ணீர் உகுக்கின்றன, துயருறுகின்றன, குதூகலிக்கின்றன, உன்மத்த நிலையேறி பேரனுபவம் கொள்கின்றன.
திரையரங்குகளும் தொழில் நுட்பங்களின் புதிய கட்டுமானங்களையும், அம்சங்களையும் தன்னுள் நிகழ்த்தி தகவமைத்துக் கொண்டாலும் பார்வையாளனுக்கும், அதற்குமான இடைவெளி நீண்டு கொண்டு தானிருக்கிறது. நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் திரைகளின் அளவையும், பார்வையாளனுக்கும் அதற்குமான தூரத்தையும் சுருக்கி படம் பார்க்கும் செயல்பாட்டை உள்ளங்கைக்குள் அடக்கி பார்வையாளனின் வெகு அருகாமைக்கு நகர்ந்து வந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அது திரையரங்குகளில் சரியான ஒளி-ஒலி அமைப்புகளோடு விரிந்த திரையில் நெளியும் காட்சிகளில் உள்ளோடி ஒளிரும் ஆன்மாவை கண்டுணர்தலில் பெறப்படும் மகோன்னத நிலையின் உயிர்ப்பானத் தருணங்களைப் பார்வையாளன் அடைவதற்கான தூரத்தை எங்கோ வெகு தொலைவிற்கு இழுத்துவிட்டிருக்கிறது. ஆக, திரைப்படங்கள் பார்வையாளனை அதன் முழுஅடர்த்தியுடன் அணுகி தொடர்புற, நீண்டு விரிந்த பெரியத் திரைகளைக் கொண்டிருக்கும் திரையரங்குகளே இணைப்பு மையமாக அமைந்திருக்கின்றன என்பதை நினைவில் இருத்த வேண்டும்.
மறுபுறம் நோக்குகையில் ஒட்டுமொத்தமாக தொழில்நுட்பங்களின் மாறுபட்ட வடிவங்களையும், அதன் வீச்சையும் புறந்தள்ளுவதும் அர்த்தமற்றச் செயல். அது இயலாததும் கூட. நான் தொடர்ந்து திரைப்படங்களைக் கண்டு வரும் ஒரு திரைப்பார்வையாளன். உள்நாட்டு படங்களோடு அயல் திரைப்படங்களையும் தேடி தேடிப் பார்க்கக் கூடியவன். முன்பு இத்தகைய அயல்நாட்டு படங்களை பிலிம் சொசைட்டிகளின் திரையிடல்களிலும், திரைப்பட திருவிழாக்களிலும் மட்டுமே காணும் வாய்ப்பிருந்தது. தவிர வேறெங்கும் அது கிடைப்பதற்கான முகாந்திரம் இருந்ததில்லை. இணையம் இந்நிலையை இன்று அடியோடு புரட்டி போட்டிருக்கிறது. அது உலக திரைப்படங்களை ஓரணியில் திரட்டிப் பிணைத்துத் தருகிறது. தற்போது பெயர் அறியாத பிராந்தியங்களின் படங்கள் உட்பட அவை இணையமெங்கும் வியாபித்திருக்கின்றன. காட்சிகள் நம் சட்டைப் பைக்குள் நுழைந்து குடியேறி காலங்கள் ஆகிவிட்டன. அன்றாடத்தின் ஏதாவொரு துணுக்கைப்போல அதை நம்முடனேயே சேர்த்து சுமந்தலைகிறோம். அதன் சிறு துளியையாவது தினம் ஸ்பரிசித்துக் கடக்கிறோம். இத்தகையச் சூழலிலும் திரையரங்குகளும், திரைப்பட விழாக்களும் தொடர் இயக்கம் கொண்டிருக்கின்றன. இவற்றின் அர்த்தப்பாடுகள் யாவை? இவ்வினாவிற்கு உரிய பதிலாக இக்கட்டுரையின் துவக்கப் பத்தியிலிருக்கும் இயக்குனர் பேலா தரின் கூற்றை சுட்டிக்காட்டி நினைவுப்படுத்த விழைகிறேன்.
எங்கும் இருள் நிறைந்திருக்க அதைக் கீறிக்கொண்டு வெளிப்படும் ஒளிச்சிதறல்களின் தொடுதலில் வெண்திரை உயிர்க்கொண்டு காட்சிகளாய் விரிவதைக் கண்ணுறும் நொடியில் எழுந்து வரும் பரவசத்தை எந்தத் திரைரசிகனாலும் சொற்களில் விவரிப்பது கடினம். திரைப்படங்கள் பிரம்மாண்டமான திரைகளுக்கானவை. ஒரு திரைப்படம் அதன் அசலான இயல்புடன் வெளிப்பட்டு, பரிபூரணத்துடன் ஓர் அனுபவமாக பார்வையாளனை அணுகுமிடமாக திரையரங்குகளே இருக்கின்றன. இப்புரிதலை அடித்தளமாக்கிக் கொண்டு திரைப்படங்களும், திரையரங்குகளும் வெறும் கேளிக்கைக்கான ஊடகவெளியாக மட்டும் எஞ்சி விடாமலும், அதைக் கலைநோக்கில் அணுகி அதன் கலாபூர்வமான சாத்தியப்பாடுகளை வெளிக்கொணரும் தளமாகவும், கலைக் கோட்பாட்டின் அடிப்படையில் திரைக்கலையின் பரிமாணங்களையும் அதன் வெவ்வேறு முகங்களை கண்டுணரவும், திரைப்படங்கள் பார்ப்பதை ஒரு கலாச்சார நிகழ்வாக, சமூகப் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றாக வளர்த்தெடுக்கவும் உருவாக்கப்பட்டவையே திரைப்பட விழாக்கள். உலகம் முழுவதும் இன்று பல்லாயிரத் திரைப்பட விழாக்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடியிருக்கின்றன. இந்த வரியை நீங்கள் வாசிக்கும் இந்தக் கணத்திலும் ஏதாவொரு மூலையில் ஒரு திரைப்படத் திருவிழா நடந்து கொண்டுதானிருக்கும்.
இந்தியத் திரைப்பட விழாக்களிலேயே பிரசித்தி பெற்றவை என கோவா, கல்கத்தா சர்வதேச திரைப்பட திருவிழாக்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. அடுத்ததாக திரை ஆர்வலர்களின், திரைப்பார்வையாளர்களின், கலைஞர்கள், படைப்பாளர்கள், திரைக்கலை பயிலும் மாணவர்களின் ஒட்டுமொத்த அன்பையும், மரியாதையும் பெற்று ஒவ்வொரு வருடமும் அவர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிற திருவிழாவாக திருவனந்தபுரத்தில் நிகழும் கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா தனித்துவத்துடன் மேலெழுந்து நிற்கிறது.
கடந்த சில வருடங்களாக இடைநில்லாமல் தொடர்ந்து கேரளா திரைப்படத் திருவிழாவில் பங்கெடுத்து திரைப்படங்களைக் கண்டு வருகிறேன். டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் இத்திருவிழாவிற்கான அறிவிப்பு வெளியாகும் நாளிலிருந்தே மனம் திருவிழா களை தரித்து ஆர்ப்பரித்து எழுச்சியுறும். பார்க்க வேண்டிய படங்களை பட்டியலில் இட்டு நிரப்புவதும், அது தொடர்பான சிற்றாய்வுகளில் ஈடுபடுவதும், திரண்டு ததும்பும் விழாக்கால மனநிலையுடன் உழல்வதுமென பேரலாதியின் பிடியில் அப்பொழுதுகள் நகரும்.திரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய திரைப்பட திருவிழாவாக கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா தொடர்ந்து இருபத்தி மூன்று வருடங்களாக இருந்து வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். குறிப்பாக, ஒரு சமூகப் பண்பாட்டு பரப்பில் திரைக்கலையின் இருப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அப்படைப்பு செயல்பாட்டை மக்கள் ஒன்றுகூடி உள்வாங்கும் ஒரு கலாச்சார நிகழ்வாக முன்னெடுத்து அதைச் செயலாக்குவதிலிருக்கும் அக்கறையையும், ஒழுங்கையும் ஆத்மார்த்தமான அந்த உழைப்பையும் சொல்லலாம். மேலும், திருவிழா என்கிற சொல்லாட்சியின் அசலான முழு அர்த்தத்தை அங்கு நிகழ்பவை உணர்த்தும். திருவிழா நிகழும் திரையரங்கின் வாயிலில் பார்வையாளர்கள் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக கூடி உரையாடியும், இசைக்கருவிகளைக் இசைத்தும், நடனங்கள் புரிந்தும், ஓவியங்கள் தீட்டியும் பல்வேறு கலைவடிவங்களின் வழியாக ஒரு கொண்டாட்ட மனநிலையை அனைவர் மத்தியிலும் பரப்பிய வண்ணமிருப்பார்கள். மற்றொரு புறம் இன்னொரு சிறிய குழு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை குறிக்கும் சொற்கள் தாங்கிய பதாகைகளோடு அதே கலைவடிவங்களைக் கொண்டு அம்மக்கள் திரளில் அப்பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி இருப்பார்கள்.
கேரளா திரைப்பட திருவிழாவை ஒவ்வொரு திரைப்பார்வையாளனும் கொண்டாடுவதற்கான மிக முக்கியக் காரணியாக ஒரு திரைப்படத்தை எவ்வித பரபரப்புக்களுமின்றி பார்வையாளன் தன்னை தயார்படுத்திக் கொண்டு அணுக ஓர் அமைதியான உகந்த சூழல் அங்கு அமைந்திருப்பதைக் குறிக்கலாம். “வாசிப்பு என்பதே ஒரு தியானம் தான்” என்று எப்போதோ படித்த நினைவு. அதை வாசிப்போடு குறுக்கி விடாமல் அனைத்து கலைவடிவங்களை அணுகுவதிலும் தொடர்புறுத்தி நோக்கலாம். ஒரு கலையாக்கத்தை அணுகுவதென்பது எவ்வித புறச்சச்சரவுகளுக்கும் இடமளிக்காமல் மன ஓர்மையுடன் அக்கலையாக்கத்தோடு தன்னை முழுவதுமாக பிணைத்துக் கொண்டு ஓர் அக உரையாடலை நிகழ்த்தி அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை தரிசிப்பதேயாகும். தியானநிலை ஆழ்மனதுடனான ஓர் உரையாடலுக்கே இட்டு செல்கிறது. கலையாக்கங்களும் அதை சரியாக அணுகும் ஒவ்வொருவரிடமும் அதையே நிகழ்த்துகின்றன. ஒரு திரைப்படம் பல்வேறு கலைகளின் கூட்டு பங்களிப்புடன் உருவாக்கப்படும் ஒரு பெரும் கலைத்தொகுப்பு. அப்பெரும் கலையாக்கத்தை ஒரு பார்வையாளன் அணுகுவதற்கு புறக்காரணிகளின் தொந்தரவுகளற்ற ஒரு பிரத்யேக சூழல் தேவைப்படுகிறது. அத்தகையச் சூழல் கேரளா திரைப்பட திருவிழாவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. அது ஒவ்வொரு பார்வையாளனிடத்திலும் திருவிழாவுடனான ஒரு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, திரையிடல்கள் நிகழும் பெரும்பாலான திரையரங்குகள் அருகருகே அமைந்திருப்பதால் திட்டமிட்டு திரைப்படங்களை காணும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை கண்டு முடித்து விட்டு பதட்டமோ, அவசரமோயின்றி மிக நிதானமாக நடந்தே அடுத்த திரைப்படத்திற்கான திரை வளாகத்தை அடையாலாம். தவிர, சற்று தொலைவிலிருக்கும் திரையரங்குகளுக்கு செல்ல குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ ஆட்டோக்களும் கிடைப்பதால் நம்மை ஆசுவாசப்படுத்தி கொண்டே அடுத்த திரையிடலைக் காண ஆயத்தமாகலாம். இது போன்ற சிறு சிறு சூழல்கள் திரைப்படத்தின் மீதான பார்வையாளனின் ஈடுபாட்டில் தாக்கம் செலுத்துகின்றன. வெளிஉலகின் உடனான உறவு தற்காலிகமாக அறுபட்டு சிந்தனையிலும், பேச்சிலும், மனவோட்டத்திலும் திரைப்படங்கள் மட்டுமே ஆக்கிரமித்தபடியிருக்கும் அந்நாட்கள் முழுவதும் திரையில் அசையும் பிம்பங்களின் ஊடாக வெவ்வேறு மொழிகள், மனிதர்கள், நிலங்கள், கலாச்சாரங்கள் வாயிலாக வெவ்வேறு வகையான வாழ்கைகளை வாழ்ந்துணர்ந்து வெளியேறுகையில் அவை தருகிற அனுபவம் ஒரு பேரொளியாய் உள்ளுக்குள் உறைந்து ஒளிர்ந்தபடியிருக்கும். அப்படியான அனுபவங்களாக சேகரமாகும் உள்ளொளிகளே அன்றாடங்களின் சலிப்பேறிய இருளடர்ந்த வீதிகளில் வெளிச்சம் பாய்ச்சி கடக்கத் துணை புரிகின்றன.கேரள மாநிலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பொழிந்த தொடர் பெரும் மழையின் விளைவால் நூற்றாண்டு சந்திக்காத ஒரு கோரமான வெள்ளத்தின் பிடியில் சிக்குண்டு சிதைய நேரிட்டது. பல நூறு மக்களின் உயிர் இழப்பாலும், பல்லாயிரக்கணக்கான மக்களின் இடப்பெயர்வாலும் நிலைகுலைந்த கேரளா துயரத்தின் பள்ளத்தாக்குகளுக்குள் சரிந்தது. மெல்ல மெல்ல இக்கொடிய நிகழ்விலிருந்து கேரள மாநிலம் மீள முயன்றபடியிருந்த சமயத்தில் கேரள அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மாநிலத்தை சீரமைத்து மீட்டுருவாக்கம் செய்வதற்கு தேவையான நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு அரசின் நிதியில் இயங்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓராண்டு ரத்து செய்வதாக அறிவித்தது. கேரளா சர்வதேச திரைப்பட திருவிழா கேரள அரசின் கீழ் இயங்கும் கேரளா சாலசித்ரா அகாடமியால் நடத்தப்படுவது. ஆக, அதுவும் ரத்துப் பட்டியலில் அடக்கம். இது திரை ஆர்வலர்கள், படைப்பாளர்கள், திரைரசிகர்கள் இடையே வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் “இம்முடிவு மாபெரும் பிழை என்றும், இதற்கென உருவாக்கப்பட்ட முந்தைய வருட படங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் எனவும், நிகழ்வை ரத்து செய்யாமல் செலவுகளைக் குறைத்து எளிய முறையில் நடத்தலாம்” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சமூக ஊடகங்களிலும் திருவிழாவை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடத்த வேண்டுமென்கிற குரல்களே அதிகம் ஒலித்தன. திரைஆர்வலர்களால் முகநூலில் “Redesign IFFK” என்கிற பக்கம் துவங்கப்பட்டு திருவிழாவை எவ்வகையான மாற்று வழியில் நடத்தலாமெனக் கேட்டு அதையொட்டிய திரை ரசிகர்களின் கருத்துகளை தொகுத்துப் பதிவு செய்தது. அதில் “அரசின் நிதி தேவையை பார்வையாளர்களின் டெலிகேட் கட்டணத்தை உயர்த்துவதின் வழியாக ஓரளவு சமன் செய்து குறைந்த செலவில் திருவிழாவை நடத்த வேண்டும்” என்கிற கருத்து ஒருமித்திருந்தது. இதனிடையே பிரபலமான கொரிய இயக்குனர் கிம் கி டுக் “இது போன்ற கோரங்களிலிருந்து மக்கள் தங்களை மீட்டெடுத்து கொள்வதிலும், மீள் கட்டுமானம் செய்வதிலும் கலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கேரளா சர்வதேச திரைப்படத் திருவிழாவை ரத்து செய்யக் கூடாது” என தன் தாய் மொழியில் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் பிறகு அரசு தன் முடிவிலிருந்து விலகி திரை ரசிகர்களின் பெரும் பங்களிப்புடன் குறைந்த செலவில் திருவிழாவை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்தது. செலவுகளைக் குறைத்து எளிய முறையில் திருவிழா நடத்தப்பட்டது என்கிற போதிலும் தரத்தில் சமரசமின்றி எவ்வித குறைப்பாடுகளுமற்ற எப்போதும் போல நிறைவளிக்கும் திருவிழாவாகவே அமைந்திருந்தது. அத்திருவிழா நாட்கள் முழுவதும் கிம் கி டுக் கின் கலை குறித்தான அந்தச் சொற்களே மனதில் அதிகம் ஒலித்தப்படியிருந்தன.
திருவிழாவில் பார்த்த படங்கள்:
- The Load
- The Heiresses
- Border
- Everybody Knows
- Manta Ray
- Debt
- Aga
- Shoplifters
- Cold War
- Tumbbad
- The Bed
- Sinjar
- Rona Azim’s Mother
- Human, Space, Time and Human
- Climax
- Ee Ma Yau
- The Announcement
- Roma
- Yomeddine
- The Sisters Brothers
- Sunset
- Dovlatov
- The Wild Pear Tree
- Widow of Silence
- Capernaum
- Horizon
- Dogman
- Bulbul Can Sing
- 3 Faces
இதில் குறிப்பிட்ட சில படங்களைக் குறித்த என் அனுபவங்களை இத்தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பகிர்கிறேன்.