
பனி நீங்கவில்லை. முற்றுகை போட்டிருந்த மேகங்களின் நகர்வில் சூரியன் இருப்பது போல பட்டது. சுற்றியிருந்த குன்றுகளின் மீதும் தூரத்து கிராமங்கள் மீதும் அது பல வர்ணங்களை எழுத ஆரம்பித்தது. நான் அமர்ந்திருந்த புல்மேட்டின் மீதிருந்து எனது முகத்தில் சிதறிக் கொண்டிருந்த ஒளியை விசிறியவாறு இருந்தது அந்தப் பெருமரம். அதன் இலைகளின் நரம்புகளில் சிறு வெயிலின் விளக்குகள் துலங்கின. கண்களில் முத்தமிட்டன. நான் உலகின் நல்லோசைகளில் திளைத்து, அதற்கு உடல் போதாதவனாக ததும்பி வழிவதை அறிய முடிந்தது. நாத வடிவானவளும், நல்ல உயிருமான எனது கண்ணம்மா வந்து கொண்டிருப்பதன் அறிகுறிகள் புலப்படத் துவங்கியதும் எனக்கு இந்த விதும்பல் ஒரு நாகத்தைப் போல ஊர்ந்து திரும்பிப் பார்த்து மெதுவாகத் தலை தூக்கியது. விருட்டென நெட்டுருகிய அரற்றல் என்றால் அதுவும்தான். மனம் தன்னுடைய புகை போன்ற இசையினால் அதைப் பூட்டியிருந்த கதவுகளில் மோதியது. நான் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும்.
பெண்களின் கிணுங்கல்கள் மேலும் நெருங்கி வந்தன. கொஞ்சமெல்லாம் தாண்டிப் போயின. அவளது தோழிமார்கள் ! அதில் உள்ள பெருமிதங்களுக்கு, அதில் உள்ள ஆணைகளுக்கு நாம் மார்பு விரிய வேண்டும். ஆமோதித்தல் வேண்டும். சங்கொலிகளின் கூட்டிசையில் நாம் அதைப் பின்தொடர வேண்டும். ஆயின் இதோ, இளவரசியின் தரிசனம் புதிர் கூட்டி வந்து கொண்டிருக்கிறது. ஒரு கணம் மின்னிட்டாள். ஆனால் அது கனவு போல விலகி ஓடியது. மறைந்த இடத்தில் உதிக்காமல் வேறு எங்கோ வாய் விட்டுச் சிரித்தாள். நான் என்னை வெட்டிக் குவித்து அந்த மாமிசத்துக்கு நெருப்பு கொடுக்க வேண்டும் என்பது போல வேதனைப்பட்டேன். என்னுடைய கேவலம் இந்த உடம்புக்குள்ளே என்னைக் காட்டிலும் பிரம்மாண்டமான ஒன்று வாலைத் தூக்கி அடித்துப் புரண்டது. உந்தப்பட்டு எழுந்து முன்னேறி காற்றேகும் போது அந்த, வா. வா. வா… அவளுடைய இதழ்கள் பிளவுறுவதை பற்களின் மீது சூரியன் மின்னி விட்டுப் போவதை, அதன் இயற்கையாக இருந்த ஈரத்தின் கத்திக் குத்தை அடைந்தேன். தோழிமார்கள் விலகி ஓடினார்கள். கிளுகிளுத்தார்கள். நான் அவளைக் கவ்வினேன். அவளது உதடு கொஞ்ச நேரம் எனக்குள் இருந்தது. அவளது நாவையுமே எடுத்துக் கொண்டு சுவைத்தேன். சப்தங்கள் உயர்ந்தன. இளவரசியே கூட இந்த எதிர்பாராத இன்பத்துக்குத் திக்குமுக்காடி மார்பில் தள்ளி ஓடினாள்.
நான் கிறக்கத்துடன் திரும்பி மல்லாந்தேன்.
குடை மரம் என்னை மூடுவது போலிருந்தது.
நான் எனக்குள் படியிறங்கிப் போனேன்.
கடவுளே, அப்படியே எத்தனை காலம்?
யாரோ எதையோ வீசுவது போல கேட்டது. கடைசியாக அதை உணரும்போது தலையின் ஒருபக்கம் அடர்த்தியான ஈரம் படிவது தெரிந்தது. ரமேஷ் கண் திறந்து பார்ப்பதற்குள் தெரிந்த ஒரு முகம். அவன் மீண்டும் வீசினான். ரத்தம் பெருகி வெளியேறிக் கொண்டிருக்கிறது.
“எழுந்துருடா லஞ்சா கொடுக்கா.”
அவனை மரத்தில் கட்டிப் போட்டார்கள்.
அந்த ஊரில் இருந்த மொத்த ஊர்க்காரர்களும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்து திருவிழா பார்ப்பது போல வந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு வழக்கமாக மாத்திரைகளைக் கொடுக்கிற மெடிக்கல் ஷாப் ஆசாமி கூட கூட்டத்தில் வந்து நின்றிருந்தான்.
ரமேஷ் சற்று கலங்கலான ஆள். மனம் திரிந்து கொண்டு விட்டது என்றார்கள். மண்டைக்குள் பிரச்சினை என்றார்கள். இதற்கு நடுவில் அவன் தனக்கு மயக்கம் தருகிற பல மாத்திரைகளைத் தேடிக் கண்டடைந்து உள்ளங்கை முழுக்க நிரப்பிக் கொண்டு அதை விழுங்கிக் கொள்ளுவான். இந்த ஊர் குதிரை வண்டிக்காரன் சென்னையில் படிக்க வைத்துக் கொண்டிருந்த தனது மகனான பாபுவை விடுமுறைக்கு அழைத்துக் கொண்டு புகைவண்டியில் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது தனது மகன் தங்கிப் படிப்பதற்கு உதவி செய்து கொண்டிருந்த பெரிய மனுஷனின் மகன் கூடவே வருவான் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது? நடு இரவில் வேறு கம்பார்ட்மெண்டில் இருந்து வெளிப்பட்டு வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்ட அவனிடம் குதிரைக்காரர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தார். ஒன்று, அப்போது ரமேஷ் போதையில் இருந்தான். இரண்டாவது, அவருக்கு தமிழும் அவனுக்குத் தெலுங்கும் தெரியாது. பாபு தன்னால் முடிந்த அளவில் பேசி வந்ததை எல்லாம் ரமேஷ் பொருட்படுத்தவில்லை. ஊரை அடைந்ததும் எப்படியோ ஒரு போன் மூலம் ரமேஷ் தங்களுடைய வீட்டிலிருப்பதை சொல்ல முடிந்தபோது, அதற்குள் நாங்கள் அவனை ஊரான ஊரெல்லாம் தேடி சலித்திருந்தோம்.
நல்ல அடி.
ஒரு வார சிகிச்சை முடிந்து குதிரைக்காரர் ரமேஷை சென்னைக்குக் கூட்டி வந்தார்.
பாவம், அவரால் முடிந்த பாஷையில் எல்லாக் கதைகளையும் விவரித்தார்.
”ஒரு வார்த்த சொன்னா கேக்க மாட்டாருங்க. காலங்காத்தால எழுந்து குளிச்சு டிபன் சாப்பிட்டு என்கிட்டே கொஞ்சம் பணம் கேப்பாருங்க. சுத்திகிட்டுப் போயி மெடிக்கல் ஷாப்ல டிரக் வாங்கிகிட்டு காலேஜ் இருக்கற மல மேல ஏறிடுவாரு. நிறைய பசங்க, பொண்ணுங்க படிக்கிற காலேஜ் சாமி. மரத்துக்குக் கீழ சாயந்திரம் வர அங்கேயேதான். சாப்பிடக் கூட வர மாட்டாரு. கொஞ்ச பேரு அவரப் பாத்துட்டு யாரு என்னன்னு என்கிட்டே கேட்டு இருக்காங்க. ஒடம்பு சரி இல்லாத பையன்னு சொல்லி வச்சேன். இப்படி பண்ணுவாருன்னு யாராவது நெனச்சுப் பாக்க முடியுமா? அந்தப் பொண்ணு சீதா லட்சுமி எவ்ளோ பெரிய வூட்டுப் பொண்ணுங்க. கண்ணுக்கு அடக்கமா மகாலஷ்மி மாதிரி இருக்கும். பேரே கூட பாருங்க, எப்டி வெச்சு இருக்காங்க? சும்மா இருப்பாங்களா? அப்புறம் நான் ஊரு எல்லைல உக்காந்து குதிர வண்டி ஓட்டற பிச்சைக்காரன், நமக்கு அங்க எந்த செல்வாக்கும் கெடையாது. யாரெல்லாம் ரமேஷ் தம்பிய போட்டு அடிச்சாங்களோ, அவங்க கால்ல எல்லாம் விழுந்தேன். அடிக்க வந்தவங்க எல்லாரையும் தடுத்து அவங்க கால்லயும் விழுந்தேன். அந்தப் பொண்ணு அப்பா அம்மா கால்ல நாங்க குடும்பத்தோட விழுந்தோம் சாமி. நல்ல சாதில பொறந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது, சண்டாளரா பொறந்துட்டமே அனுபவிக்க வேணா?”
ரமேஷ் தெளிவாக இருந்ததால் அவரைக் ஆரத்தழுவிக் கொண்டு அனுப்பி வைத்தான். அவர் ”பின்னால வந்துடாதப்பா…”” என்று சொல்லி விட்டுத்தான் போனார்.
ஒரு சந்தேகத்தில் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டும் போனார்.
பையன்கள் அன்றைய பேச்சில் அவனை எவ்வளவோ கேள்விகள் கேட்டார்கள். ரமேஷ், எனக்கு அந்தப் பெண்ணை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது என்பதாக திரும்பத் திரும்ப சொன்னான். அவளை தனது நினைவுகளுக்குள் கொண்டு வந்து முகத்தை ஓர்மை செய்து கொள்ள முடியவில்லையாம். மாத்திரை வாங்க அலைந்து திரிந்து மரத்துக்கடியில் வந்து சேருவதற்குள் உடல் முழுக்க வியர்வையால் நனைந்து நாற்றமடிக்க ஆரம்பித்து விடும். போதாத குறைக்கு நான் பீடி சிகரெட்டை விட்டுவிட்டு மலினமாகக் கிடைத்த சுருட்டை வேறு புகைக்க ஆரம்பித்திருந்தேன். அதன் வீச்சத்தை சொல்லி முடிக்க முடியாது. நல்ல ஆடைகள் அணியாத, தலை கலைந்து பற்களில் எல்லாம் கறையோடு, பைத்தியம் போல தோற்றமளிக்கக் கூடிய ஒருவன் தன்னை வழி மறித்து வாயில் முத்தமிடுவது என்றால் அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்? நான் அதையேதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். சொல்லப் போனால் என்னை நினைத்தே எனக்குக் குமைச்சலாக இருக்கிறது.
அணைத்து வைத்திருந்த ஒரு துண்டு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.
பாபுவை அழைத்து அந்தப் பெண் அவ்வளவு அழகா என்று பல முறையும் ரமேஷ் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
பாபு இப்போது சென்னையில்தான் இருக்கிறான்.
ஐ.டி யில் வேலை. நல்ல சம்பளம். குதிரைக்காரர் உயிரோடு இல்லை. அவ்வப்போது ஊருக்கு சென்று விட்டு வருகிறேன் என்றான். ஒருமுறை சென்னையைத் தாண்டி நடந்த ஒரு கேமிராக் கண்காட்சியில் அகஸ்மாத்தாக சந்தித்துக் கொண்டோம். நம்பர் வாங்கி வைத்துக்கொண்டு அவ்வப்போது அழைக்கவே செய்வான். ஒரு தடவை அவனது ஊரில் இருந்து ஒரு பெண்ணைக் கடத்தி வந்து விட்டேன் என்றும் சென்னையில் வைத்து ரிஜிஸ்தர் எல்லாம் பண்ணிக்கொண்டேன் என்றும் சொன்னான். அதற்காக பிளாட் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன், குடித்தனத்தை துவங்கி விட்டோம் என்பது நல்ல சாகசமாகவே பட்டது. சென்னையில்தான், மூன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரிசப்சன் வைக்க நானும் ரமேஷும் போயிருந்தோம். மணப்பெண் கீதா லட்சுமி அப்படி ஒரு அழகு. நான் என்ன சொல்லப்போகிறேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும், அவள் சீதா லஷ்மியின் மகளேதான்.
ரமேஷ், பாபுவை வெகுநேரம் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பொன்மொழிகள் எல்லாம் சொன்னான் என்று நினைக்கிறேன். கடைசியாக, ”நான் உன் அப்பா மாதிரி” என்று சொன்னது கேட்டது, எனக்கு அது பிடிக்கவில்லைதான், சிலருக்கு வயது ஏறும்போது மனது அப்படி கொழகொழப்பாகப் போய் விடுகிறது. திரும்புகையில் அமைதியாக வந்தான்.
இரண்டு நாளில் ரமேஷ் வீட்டில் இருந்து அழைத்தார்கள்.
வெகு காலம் கழித்து முன்பு பழக்கமாக இருந்த மாத்திரைகளை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறான். ஹெவி டோஸ். பழைய ஆரோக்கியம் எதுவுமில்லாமல் அதே திருவிளையாடலில் ஈடுபட்டால்? பிட்ஸ் வந்து விட்டிருக்கிறது. சிகிச்சைக்கு அப்புறம் இரண்டு நாள் உறக்கம் நிற்காமல் படுக்கையிலேயே இருந்தான். ஒரு கட்டத்தில் நண்பர்கள் அனைவரும் பக்கத்தில் இருந்தோம்.
அவனுக்கு அவளது முகம் நினைவில் வந்து விட்டிருக்கிறது.
கண்ணை மூடிக்கொண்டால் கூட மறைந்து போக மறுக்கிறது.
ஒவ்வொரு முறையும் அவள் உதித்து வந்தவாறு இருப்பதால் எந்த நேரத்திலும் ஹார்ட் அட்டாக் வந்துவிடும் போல இருக்கிறது என்றான்.
அவன் கண்ணீரோடு ஒன்றைச் சொல்லியபோது எனக்கே கூட நெஞ்சு வலிப்பது போலிருந்தது.
அவனை போஷித்தவாறு இருந்த மனைவி குழந்தைகளை கேண்டீனில் சாப்பிட்டு வாருங்கள் என்று அனுப்பி விட்ட பிறகு அவன் அதை சொன்னான்.
”நான் அவளை மிகவும் காதலித்தேன் தாசா !”