இணைய இதழ் 123தொடர்கள்

நான் – ஒரு போஹேமியன் பயணி;10 – காயத்ரி சுவாமிநாதன்

இருட்டிலிருந்து வெளிச்சம் –  புத்தருக்குள் நுழைந்த இரவு

      இந்த அத்தியாயம் ஒரு சம்பவத்தை விவரிப்பதற்காக எழுதப்படவில்லை, ஒரு மனநிலையைப் பதிவு செய்வதற்காக எழுதப்படுகிறது. ‘கயா’ பெயரை மட்டும் அறிந்திருந்த இடம், வரலாற்று புத்தகங்களில் படித்த பெயர். ஆனாலும் அந்த நிமிடம் அது ஒரு இடமாக இல்லை. அது ஒரு வாசலாக இருந்தது. வேகமாகத் துடித்த என் இதயம் கூட ஒரு கணம் அமைதியானது. அந்த அமைதிதான் முதல் அடையாளம். கயா ரயில் நிலையத்தில் காலடி வைத்த அந்த நொடியே உடம்பு உணர்ந்ததைக் காட்டிலும் என் மனதுதான் முதலில் அதிர்ந்தது. அது பயமில்லை, மகிழ்ச்சியும் இல்லை, ஆனாலும் இப்போது நான் இன்னொரு வெளிச்சத்திற்குள் நுழையப் போகிறேன் என்று சொல்லாமலே சொல்லிக்கொண்ட ஒரு உள்துடிப்பு. சொல்ல முடியாத ஒரு அதிர்வு.  ரயில் என்னை கயா மண்ணில் இறக்கிவிட்ட தருணத்திலேயே என் மனம் அந்த இடத்தில் தங்கவில்லை, அது ஏற்கனவே இன்னொரு திசையில் இன்னொரு அர்த்தத்தின் தேடலில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. அப்போது தான் எதுவுமே கேட்காமல் பெயரும் தெரியாமல் ஒரு ஹிந்தி மொழி பேசக்கூடிய அண்ணா என்னுடைய பெட்டியை எடுத்து முன்னாள் நடக்க ஆரம்பித்தார். நானும் என் இன்னொரு பெட்டியை சுமந்தபடி அவர் பின்னால் தொடர்ந்து நடந்தேன், நடந்தேன், நடந்துகொண்டே இருந்தேன். ஆனாலும் பாதை வரவே இல்லை? ரோடு எங்கே? என்று என் மனதிற்குள் கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. ஆனால், அவர் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்கவில்லை, அவசரப்படுத்தவில்லை, பதற்றப்படுத்தவில்லை, பதற்றப்படவில்லை. மாறாக ஒரு அமைதியான பாதுகாப்போடு என்னை அழைத்து சென்றுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் என் மனம் சோர்ந்தபோதும் அவர் வேகம் மட்டும் தானாகவே குறைந்தது.

பிறகு, கயாவிலிருந்து போத்கயா நோக்கித் தொடர்ந்த அந்த நீண்ட இரவு பயணம், நடுநிசியில் இருள் கண்முன்னே விரிந்த கருமை, அந்த இருளின் மத்தியில் திடீரெனத் தோன்றிய ஒரு மஞ்சள் வெளிச்சம், அது மின் விளக்கு அல்ல, ஒரு அழைப்பு, “வா” என்று சொல்லும் மௌன வரவேற்பு. காரில் இருந்து இறங்கியவுடன் மழை, காற்று, இருள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து என்னைச் சுற்றி நின்ற அந்தத் தருணத்தில் என் கண் முன்னே 80 அடி உயரத்தில் புத்தர் இருட்டுக்குள் அமைதியாக அமர்ந்திருந்தார். பளபளப்பு இல்லை, ஆடம்பரம் இல்லை, ஆனாலும் ஒரு மெல்லிய வெளிச்சம் மட்டும் அவர் முகத்தை வசீகரத்துடன் இருந்தது. அது விளக்கின் ஒளி அல்ல, கருணையின் ஒளி. அந்த நிமிடம் யாரும் என்னை வரவேற்கவில்லை. ஆனால், யாரும் வரவேற்காத அந்தத் தருணம் உலகமே என்னை உள்ளுக்குள் வரவேற்றது போல் இருந்தது. என் கால்கள் ஈரமான மணலைத் தொட்டபோது ’அந்த மண் சாதாரண மண் அல்ல’ என்று என் மனம் சொன்னது. இதே நிலத்தில் ஒரு காலத்தில் புத்தர் காலடி வைத்திருக்கிறார் என்று என் உடலுக்குள் ஒரு நடுக்கத்தை எழுப்பியது. அந்த நடுக்கம் பயத்தினாலோ, பக்தியினாலோ மட்டும் இல்லை, அது என் உள்ளம் என்னோடு நேருக்கு நேர் சந்திக்கப் போகிறதே என்ற உணர்வின் அதிர்வு. அதைவிட ஆச்சரியம், அந்த புத்தர் சிலைக்குப் பின்னால்தான் நான் தங்கப் போகும் இடம்.

நான் எதையும் திட்டமிடவில்லை. போத்கயாவில் தங்க வேண்டும் என்று மட்டும் நினைத்தேன். ஆனால், இயற்கை என்னை புத்தரின் அருகிலேயே வர வைத்தது. அந்த இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்த அத்தியாயம் இங்கே முடிவதில்லை. இது ஒரு வாசல்.  அந்த வாசலைத் தாண்டி உரையாடல் தொடங்குகிறது. காலை வெளிச்சம் மெதுவாக இருளின் கரையை உரசித் திறந்தபோது, போத்கயா மண் ஒரு புது மூச்சை எடுத்தது. அந்த மூச்சுக்குள் நானும் கலந்து நின்றேன். நேற்று இரவின் கண்ணீரை இன்னும் துடைக்காத கண்களோடு இருந்தேன். அந்த நேரத்தில் வந்தான் ஒரு சின்னத் தம்பி. வண்ணத்துப்பூச்சி போலப் பல நிறங்களில் பூத்திருந்த அந்த ஆட்டோவின் சக்கரங்கள் கூட சிரித்துக்கொண்டே சுழன்றன.

அவன் பெயர் ஷக்கில். தன் குடும்பத்திற்காக சாலையை வாழ்வாக்கிக் கொண்டவன். “நீ படிக்கலையா?” என்று நான் கேட்டபோது, அவன் சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது. அந்த சிரிப்பில் விதியின் குறையில்லை, வாழ்க்கையின் வீரியம் மட்டுமே இருந்தது. அந்த சிரிப்பு பழகியதா?  அல்லது பல பிறவிகளின் நினைவா? ம்ம்ம்… ஒரு உடன்பிறந்த தம்பி போல பாதுகாப்பும், ஒரு தோழன் போல நெருக்கமும் அந்த கண்களில் துடித்தது. அவன் என்னை ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். நான் திருப்தியாக சாப்பிட்டேன். ஆனால், அதைவிட நிறைந்தது அந்த அன்பின் அமைதி.

பிறகு, மீண்டும் பயணம்… சக்கரங்கள் மண்வாசத்தை கிளறிக்கொண்டே என்னை ஒரே திசையில் எடுத்துச் சென்றன. முதல் காலடி அந்த நிலத்தில் பதிந்த தருணத்தில் உடம்பிற்குள் ஒரு மின்னல். “நான் ஒரு காலத்தில் இங்கே இருந்தேன்” என்ற மறந்த நினைவின் அதிர்வு. என் முன் நின்றார் 80 அடி புத்தர். நான் அவரைப் பார்க்க நினைத்ததே இல்லை. அவரைப் பற்றிய பாடல்களைத்தான் கேட்டிருக்கிறேன். ஆனால், அந்த நிமிடத்தில் பாடல்கள் மௌனம் ஆயிற்று, மௌனம் உரையாயிற்று.

“மீண்டும் நீ இங்கே வந்திருக்கிறாயா?” என்று அவர் கண்கள் என்னைக் கேட்டது போல, நானும் “ஆம், மறுபடியும் இங்கேயே வந்துவிட்டேன்” என்று என் இதயம்  பதில் அளித்தது. அந்தத் தருணத்தில் நானும் அவரும் மட்டுமே இருந்தோம். உலகம் ஓரங்கட்டியது, காலம் நின்றது, நான் மறந்தேன் என்னை, அவர் நினைவில் என்னைக் கண்டேன். அது தரிசனம் அல்ல, அது உரையாடல் அல்ல, அது ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் கரைந்த நிமிடம். அந்த மண்ணில் என் காலடிச்சுவடு விழுந்தபோது அவர் மௌனம் என் உள்ளத்தில் மலர்ந்தது. அந்த மலரின் வாசனை இன்னும் என் மூச்சில் தங்கி இருக்கிறது.

        தொடரும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button