![](https://vasagasalai.com/wp-content/uploads/2023/12/Picsart_23-12-20_10-08-22-473-780x470.jpg)
எனது கடைசி சவாரியை தஞ்சோங் கத்தோங்கில் முடித்துவிட்டேன் அதன் பயணி சில்லரையில்லாமல் மீதம் இருந்த இரண்டு வெள்ளியை அன்பளிப்பாகத் தந்தார். இந்நாளின் முடிவில் ஒரு அன்பளிப்பு தந்த கடவுளுக்கு நன்றி. அன்பளிப்பு தந்த எனது கைகளுக்கு முத்தமிட்டாயா என்று கடவுள் என்னிடம் கேட்பது போல் இருந்தது. இதற்கு மேலும் வண்டியை ஓட்டுவதற்கு அலுப்பாக இருக்கிறது. பயணியின் கைகளைப் பிடித்து இரவு வாழ்த்தை தெரிவித்தேன். நாளை விடுப்பு எடுத்துவிட்டு தேவாலாயம் செல்லும் மகிழ்ச்சியில் மனம் குதூகலித்துக் கிடந்தது. என் தாய்மொழியான ஐரிஷ்ஷில் ஒரு பழமொழி இருக்கிறது.
‘உன் இதயம் எங்கு இருக்கிறதோ அங்கேதான் உன்னை பாதங்கள் இழுத்துச் செல்லும்..‘. இரவின் நீளம் எதுவோ அது வரை எனது சாலைகள் நீண்டுகிடக்கின்றன. எனது வாகனத்தை அதில் வசப்படுத்திக்கொடுத்த கடவுளுக்கு இன்னொரு நன்றி.
பகலில் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு போல் அல்ல சிங்கப்பூரின் இரவு.. இருள் திராவகம் மெல்ல பகலின் வெம்மை கோப்பையை நிறைத்துக்கொண்டிருக்கிறது. அதன் நுரைகள் கொப்பளித்து தெருவெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடுக்கிலும் ரகசியத்தை பூட்டிவைத்துக்கொண்டு வானத்தில் இருந்து இறங்கியிருக்கும் இரவின் தேவதை பகலின் சாத்தானைப் போல் வெளிப்பகட்டானது அல்ல.
நகரத்தின் நள்ளிரவில் எந்த மூலையில் ‘ஈப்போ பட்டர் காஃபி‘ கிடைக்கும்? இரவு நேர சோயா தயிர் விற்பனை செய்யும் மூதாட்டி கடையின் முகவரி, கேலாங் பாரு இரவுச் சந்தையில் எங்கு உடல்வலு சத்து மாத்திரை கிடைக்கும்? மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் ஐஸ்க்ரீம் விற்கும் அங்கிள் எத்தனை மணிக்கு கதாய் பசிஃபிக் திரையரங்கு முன்பாக வருவார் என்பதை என்னைப் போன்ற ஒருவனிடமிருந்து கேட்பதே சரியாக இருக்கும். இரவில் உங்களுக்கு சாத்தியப்படாத எல்லா விஷயங்களையும் நான் அறிந்திருப்பேன்.
‘ஓ பகல்வாசிகளே ! இரவு திரிந்து அதிகாலை உயிர்த்தெழும் வேளை முதல் கதிர் ஒளியில் வைரத்தை போல் ஒளிரும் இந்நகரத்தை என்றாவது தரிசித்துள்ளீர்களா? ‘
பிரபலமான உணவக குசினியில் அதிகாலை மூன்று மணிக்கு அவித்து எடுக்கப்படும் ‘டிம் சம்‘ பலகாரங்கள் வாசனைக்கு நடுவே நான் சிராங்கூன் சாலையைக் கடந்து வீடு திரும்பும்போதெல்லாம் நினைப்பதுண்டு. கடந்து போன இரவு எனக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒவ்வொரு இரவுமே என் ரகசியக் கிடங்கில் சேமிக்க இரவு மனிதர்களையும் அவர்களின் கதைகளையும் பரிசளிக்கிறது.
அதுவொரு மலை முகட்டிலிருந்து இறங்கும் சாலை. அதன் முனையில் ஒரு குழந்தையுடன் நிற்கும் பெண்ணுக்கு வயது இருபதிலிருந்து இருபத்திமூன்றுக்குள் இருக்கும். புனித மரியா நீல நிற ஜீன்ஸ்ம் வெள்ளைச் சட்டையும் அணிந்து குழந்தையை தனது வலது தோளில் தூக்கிக்கொண்டு நிற்பது போல முனையில் நின்றாள்.
டாக்சியின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு சிறிய குழந்தையைப் போல் வெளிக்காட்சிகளை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் ஒரு குழந்தையைப் பெற்றவள் போல் அல்லாது வெகு கச்சிதம். உயரமான சப்பாத்து அணிந்திருந்தாள். இந்தோனேசியப் பெண்களுக்கே உரிய அழுத்தமான சிவப்பு உதட்டைக் குவித்து அவ்வப்போது ஊதிக்கொண்டாள். நெற்றி முத்து முத்தாக வியர்த்திருந்தது. டாக்சி நெடுஞ்சாலையில் சற்றுதூரம்தான் சென்றிருந்தது.
நான், ‘மன்னிக்கவும் .. இன்னும் நீங்கள் எங்கு செல்லவேண்டும் என்று சொல்லவில்லையே..?‘ என்றேன். ‘நான் காருக்குள் புகைத்துக் கொள்ளலாமா?‘ என்றாள். ‘இல்லை, நீங்கள் இங்கு புகைக்கக் கூடாது ‘ என்றேன். உடனே பாக்கெட்டில் இருந்து உருவிய சிகரெட்டை என்னிடம் நீட்டி, ‘வேண்டுமானால் நீங்களும் ஒன்று புகைத்துக் கொள்ளுங்கள்.. ‘ எனவும், ‘வேண்டாம், நான் வண்டிக்குள் புகைப்பதில்லை. அப்படியே நீங்களும்.. ‘ என்று நிறுத்த, ‘புரிகிறது.. இந்த ஆண்களே இப்படித்தான்..பெண்களை ஒரு போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. ‘ என்றாள். திரும்பவும் நான் கேட்டேன், ‘நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? ‘
‘கடவுளிடம் அழைத்துச் செல்…. ‘ என்று குழந்தையைக் காட்டினாள். நான் முதுகுப் பார்வை கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அவள் அழுது கொண்டிருந்தாள். அரைத்தூக்கத்தில் இருந்த எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ஒரு தேவதூதனா என்ன இவர்களை கடவுளிடம் அழைத்துச் செல்வதற்கு? கடந்த வாரம் புகிஸ் ரயில் நிலையத்தில் ஏறிய ஒரு குண்டு ஆசாமி என்னிடம், ‘நான்தான் புத்தன். மனித உருவில் இப்போது சஞ்சரித்திருக்கிறேன் ‘ என்றார். ‘புத்தர் மனிதப் பிறவியல்லவா?‘ என்று கேட்கத் துணிந்தேன். அதற்கு முன்பாகவே அவர், கடந்த பிறவியில் தானொரு மான்குட்டி. மான் பிறவியிலிருந்து இப்போது மானுடப் பிறவி என்று சொல்லி, மானாகப் பிறந்து காட்டை வலம் வந்ததையெல்லாம் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். முற்பிறவி மான் என் டாக்சியின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு இப்போது இமயமலை தாண்டிக் கொண்டிருந்தது. நல்ல வேளை அவர் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. நான் அவரிடம் தொகை வேண்டாம் என்று விட்டேன். ‘கடவுளோடு ஒன்றாக டாக்சியில் பயணிப்பதற்கு காசு வாங்குவார்களா ..? நன்றி..நல்வரவு..‘ என்றேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. உலகில் தன்னை ஒருவர் புத்தனாக ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சி செய்தியை அவர் மனைவியோடு பகிரப்போவதாக மகிழ்ச்சியோடு லிஃப்ட்டில் ஏறிச் சென்றார். இந்நேரம் கடவுள் யாரென்று அவருக்குத் தெரிந்திருக்கும் என்று டாக்சியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். கடவுளோடு செல்லவும் கடவுளிடம் கொண்டு செல்லவும்தான் ஒரு ஏழை தேவதூதன் நகரத்தில் வாடகை டாக்சி ஒட்டுகிறான். எத்தனை மகத்தான பாக்கியம் எனக்கு!
‘ப்ரியத்துக்குரிய நெடுஞ்சாலை தூய மரியாவே.. உன் மீது கருணை காட்டியதற்கு எனக்கு இதுவும் வேண்டும்.. இன்னும் வேண்டும் .. ‘ என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் .
இப்போது என்னிடம் கூறினாள், ‘என்னை நீ கடவுளிடம் அழைத்து செல்லப் போகிறாயா? இரக்கமில்லாத கடவுளிடம்? உன் வாகனத்தை அங்கு ஓட்டு..‘ என்றாள். நான் வண்டியின் டெக்கில் பொருத்தப்பட்ட வெள்ளி சிலுவையைக் கண்டு மனதிற்குள், ‘இதென்ன கடவுளே எனக்கு வந்த சோதனை.. ‘ என்று சொல்லிவிட்டு அவளின் பக்கம் திரும்பி, ‘நீங்கள் எங்கு செல்லவேண்டும் மேடம்? ஏதும் ஆபத்தில் சிக்கியுள்ளீர்கள் என்றால் உங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அவர்கள் உங்களுக்கு உதவக்கூடும்.. ‘ நான் காவல் நிலையத்தைப் பற்றிச் சொன்னதும் அவள் பயந்துவிட்டாள்.
‘வேண்டாம்.. வேண்டாம்…என்னை கடவுளிடம் அழைத்துப்போ. அழைத்துப்போ.. நான் காரிலிருந்து குதிக்கப் போகிறேன்.. ‘ என்று ஓடும் காரில் எதிர்பாராத நேரம் கதவைத் திறக்கமுயன்றாள். நான் பயந்து காரை சாலையின் ஓரமாக நிறுத்தியே விட்டேன். ‘உங்களுக்கு ஏதும் பைத்தியம் பிடித்துவிட்டதா..? நீங்கள் விழுந்து இறந்து போக என் வண்டி தான் கிடைத்ததா..?‘ கோபத்தோடு கத்த ஆரம்பித்தேன். கதவைத் திறந்து கொண்டு அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலைக்குள் ஓட ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு பின்னால் ஓடிப்போய் சமாதானம் செய்து அழைத்து வந்தேன்.
சிகரெட் பெட்டியில் இருந்து ஒரு கிராம்பு சிகரெட்டை உருவி பற்ற ஆரம்பித்தாள். குழந்தை லேசாக விசும்ப ஆரம்பித்தது. புகை காருக்கு மேலாக சுருள் சுருளாக பறந்து கொண்டது.
‘உங்களுக்கு என்ன தான் பிரச்சனை..?‘
‘இல்லை. என் பிரச்சனை புரியாது உங்களுக்கு..உங்களுக்கு மட்டுமல்ல எந்த ஆண்களுக்கும் ..ஆண்கள் மேலோட்டமாக பெண்களை புரிந்து கொள்பவர்கள்.. ஆண்கள் என்றும் நம்பிக்கையானவர்கள் அல்ல ‘ நான் பயணிகளோடு உரையாடுவதுவதை விரும்புபவன்தான். ஆனால், இம்முறை பயணியின் சுவராஸ்யமான உரையாடலுக்குள் நுழைய விரும்பவில்லை. வீடு திரும்பும் அவசரத்தில் அவளிடம் கூறினேன். ‘யாரையும் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களா?‘ என்று போனை எடுத்துக் கொடுத்தேன். அவள் அதை வாங்காமல் திரும்பிக் கொண்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக புகைத்துவிட்டு, ‘இந்நேரத்தில் ஒரு கொலையைச் செய்துவிட்டு வருகிறேன்… ‘ – என் முகம் சிவந்தே விட்டது. மண்டைக்குள் சூடேறி அவளிடமே ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவேண்டும் என்பது போல் இருந்தது.
‘ஒரு ஜோக்கை ரசிக்கத் தெரியாத அங்கிள் நீங்கள்..‘ என்று பலமாகச் சிரித்தாள். பின்பு அவள் கதையைக் கூற ஆரம்பித்தாள்.
அவள் பாதாம் தீவிலிருந்து தன் காதலன் விஜயாவைப் பார்க்கவே கப்பலில் சிங்கப்பூர் வந்திருக்கிறாள். சிங்கப்பூரிலிருந்து தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் பாதாம் தீவிலிருந்து அவ்வப்போது அவனுடய வாடகை அறைக்கு குழந்தையுடன் வந்து பார்த்துவிட்டுப் போவாள். விஜயா சிங்கப்பூர் விமான நிலையத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஒப்பந்த ஓட்டுநராகப் பணிபுரிபவன். விஜயாவும் அவளும் ஒன்றாக பெக்கான் பாரு கல்லூரியில் வரலாறு படித்தவர்கள். படிக்கும்போதே ஒருவருக்கொருவர் என்றாகிப் போனது. பின்பு இருவரும் சிங்கப்பூருக்கு அருகிலிருக்கும் பாதாம் தீவுக்கு குடியேறிய போது வருமானம் போதவில்லை என்று விஜயா மட்டும் சிங்கப்பூருக்கு பணி நிமித்தம் வந்துவிட்டான். அவளும் குழந்தையை பாதுகாப்பகத்தில் விட்டுவிட்டு ஒரு வெதுப்பகத்திற்கு வேலைக்குச் செல்கிறாள். இருவரின் வருமானத்தில் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
இம்முறை அவளது பயணத்தை விஜயாவுக்குத் தெரிவிக்கமாலேயே அவனது பிறந்தநாளுக்காக வெகு ரகசியமாக திட்டத்தை வைத்திருந்தாள். அவனுக்கு பிடித்த கால் சப்பாத்துகள், காற்சட்டை, வெதுப்பகத்தில் விஜயாவுக்காக பிரத்யோகமாக செய்யப்பட்ட ப்ரவுனி கேக்குடன் இங்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. விஜயாவின் படுக்கையில் இன்னொரு பெண் இருந்திருக்கிறாள். மாலை ஆரம்பித்த சண்டை நள்ளிரவு வரை சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் விஜயா அவளை வீட்டை விட்டே துரத்திவிட்டான்.
அவள் கதையைக் கேட்டதும் எனக்கு அவளை அப்படியே விட்டுவிட்டுப் போக மனமில்லை. ஆனால், அவளுக்கு உதவப் போய் ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்ளகூடாது என்ற முனைப்பும் இருந்தது. அவளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தந்தபின், அங்கேயே அவளை கைகழுவி விட்டு வீட்டுக்குச் செல்வது என்று முடிவுக்கு வந்தேன்.
நான் அவளை மீண்டும் டாக்சியி்ல் அமர்த்திக்கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலை கம்போங் குளமில் இருக்கும் உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். நள்ளிரவில் அங்கு கடைகள் இருக்கும்.பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு கடையில் மட்டும் கொஞ்சம் மீ(சேமியா) இருப்பதாகவும் காத்திருக்கும்படியும் கூறினார்கள்.
ஒரு சோயா பால் டின்னை அவளிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, என் பாக்கெட்டில் துளாவி அதிலிருந்த பத்து வெள்ளி தாள்களை உணவு மேசையில் எடுத்துப்போட்டேன். ‘.இது என் முழு நாள் வருமானம். ‘. வெள்ளி, சனி இரவுகளில் இருக்கும் வருமானத்தைப் போல் ஞாயிறு இரவு வருமானம் பெரிதாக இருக்காது. ‘இந்த பத்து வெள்ளி தாள்களில் என் பிரச்சனை ஓயப்போவதில்லை. உங்களுக்கு தெரியுமா.. இந்தோனேசியர்கள் மில்லியன் கணக்கில் ரூபியாவைச் செலவு செய்வது போல் அவர்களுக்கு பிரச்சனைகளும் மில்லியன் கணக்கில் இருக்கிறது .. ‘ என்றாள்.
‘இத்தொகை உனக்காக இல்லை என்றாலும்.. உன் குழந்தைக்கு.. அதன் சிரிப்புக்கு .. நாளை பாதாம் திரும்பியதும் இந்த அங்கிள் டேவிட் பெயரைச் சொல்லி அவனுக்கு ரொட்டி வாங்கிக் கொடு அல்லது பால் மாவு வாங்கிக் கொடு‘ என்றேன். அப்போது குழந்தை தூக்கத்தில் இருந்து விழித்து இருந்தான். அவளது மார்பில் சாய்ந்துக்கொண்டு அவளோடு சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான். கிழக்கு கடற்கரையிலிருந்து வீசிய உப்புக் காற்று இருவரின் கேசத்தை புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. அவளது பார்வை முழுதும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் அவள் வசிக்கும் தீவின் மீது இருந்தது. கடலுக்கு அப்பால் ஒளிரும் பாதாம் தீவின் துறைமுக விளக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் இரண்டிலும் முத்து முத்தாக கண்ணீர் பூத்திருந்தது.
மனிதர்கள் தன் அன்புக்குரியவர்களை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறார்கள்? அன்பின் பெயரால் அழைத்துச் சென்று பின்பு துரோகத்தின் பள்ளத்தாக்கில் அவளை அவன் தள்ளிவிட்டது போல் உணர்வதாகக் கூறினாள். பெற்றோர்களின் விருப்பத்தையும் மீறிய அவளது தெரிவு விஜயா. முற்றாக குலைந்து போயிருந்தாள். இனி பூமிக்குத் திரும்ப முடியா மரணம் போல் அவன் மீது கோபத்தால் பொங்கி வழிந்து கொண்டிருந்தாள். நாளை அதிகாலை முதல் கப்பலுக்கே திரும்பச் சொல்லி அவளை வலியுறுத்தினேன். மேலும் இப்போது அவனைப் போய் சந்திப்பது சரியாக இருக்காது என்றும் கூறினேன். ஆனால், அவள் பித்துப்பிடித்தவள் போல் கடற்கரைக்குப் போவதும், நீரில் கால் நனைப்பதும், திரும்புவதுமாய் இருந்தாள். தன் கைகளைத் திருப்பி திருப்பி பார்த்தாள். தன் கைகள் சிவப்பாக இருப்பதாகக் கூறினாள். தன்னை துர்தேவதை ‘போந்தியனாக் ‘ தீண்டிவிட்டதாகக் கூறினாள். இங்கு ஏதாவது வாழை மரம் இருக்கிறதா? அவளை நான் திரும்பி அனுப்பிவிட்டு விஜயாவிடம் போய் பேசிவிடுகிறேன் என்று ஏதேதோ அவள் பேசிக்கொண்டிருந்தாள்.
நான் அவளை கடற்கரையிலிருந்து அழைத்து வந்து உனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி கொஞ்ச நேரம் கடற்கரைக் காற்றில் அமைதியாக அமரும்படி கேட்டுக்கொண்டேன்.
நான் அவளுடன் மணலில் அமர்ந்திருந்து விட்டு காலையில் கப்பல் துறைமுகத்தில் விட்டுவிடுகிறேன் என்று கூறியும், தன்னை தனியாக விட்டுவிட்டுச் செல்லும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். குழந்தை இப்போது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது. நான் கடற்கரை மணலில் திரும்ப நடக்க ஆரம்பித்தேன். தூரத்திலிருந்து பார்த்தேன். நள்ளிரவு தூய மரியாள் தன் குழந்தையை மடியிலிட்டு கடலுக்கு முன்னால் பிரார்த்திக் கொண்டிருப்பது போல் தோன்றியது. நான் வெகு தூரம் வந்துவிட்டேன்.
‘என் பெயர் கார்த்தினி … இந்தேனேசிய பெண்ணுரிமைக்காகப் போராடினாரே.. அவரின் நினைவாக அப்பா எனக்கு இந்த பெயரை வைத்தார்… இன்றிரவு படுக்கைக்குப் போகும் முன் உங்கள் பிரார்த்தனையிலோ அல்லது நாளைய தேவாலய பிரார்த்தனையிலோ இந்த பெயர் உங்களுக்குத் தேவைப்படும் ‘
இத்தீவு முழுதும் பல உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர்கள், வாடகைக்குப் பதிலாக முத்தத்தை பரிசாகத் தரும் பாலியல் தொழிலாளிகள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என பல பயணிகள் என்னுடன் இருக்கைகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். பகிர்ந்து கொள்வது இருக்கைகளை மட்டுமல்ல, அவர்களின் கதைகளை. யாருக்கும் தெரியாத பால்ய கால ரகசியங்களை, மனைவிக்குத் தெரியாத காதலிகளை, சிறிய வயதில் பலசரக்குக் கடையில் திருடி சாகசம் செய்ததை இப்படி அவர்கள் எல்லோருக்குள்ளும் யாராலும் கேட்கப்படாத கதைகள் இருக்கின்றது.
முன்பு பணிபுரிந்த பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளர் வேலையை இழந்து, வாடகை கார் ஓட்டுநராகப் போகிறேன் என்ற முடிவில் நான் உறுதியாக நின்ற போது என் குடும்பத்தினரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏழாயிரம் வெள்ளி வருமானத்திலிருந்து இரண்டாயிரம் வெள்ளிக்குள் முழுக்குடும்பத்தின் செலவையும் சுருக்கிக்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. அவர்களை சமாதானப்படுத்த நான் தேர்ந்தெடுத்தது என் பயணிகளின் கதைகளைத்தான். என் மகள்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலையில் இருந்து திரும்பும்போது அவர்களுக்குரிய கதைகளுடனே திரும்புவேன் இப்போது சந்தித்த நெடுஞ்சாலை மரியாவையும் சேர்த்து. அவர்களுக்குத் தெரியாத உலகத்தை ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் அவர்களுக்காக வாசித்துக் காட்டுவேன்.
சில மனிதர்களின் கதைகள் வெறும் கதைகள் அல்ல. அவர்களின் நினைவுகள் சில நேரங்களில் என் பகலை புசித்து, தூங்க விடாத மிருகமாய் மாறி மீண்டும் என்னை இரவுக்குள்ளே துரத்திவிடுவார்கள். அவ்வப்போது என் தூங்கா இரவுகளில் வந்து சிரிக்கும் அவன். எல்லாப் பயணிகளும் ஓட்டுநரிடம் கேட்பது போலே அவனும் – ‘அவசரமாகப் போகமுடியுமா அங்கிள்..? ‘
அவன் பெயர் காளீஸ்வரன். இந்திய கட்டடத் தொழிலாளி. ஒரு கட்டுமானத் தளத்திலிருந்தே எனது வாடகை வண்டியை அவன் அமர்த்தியிருந்தான்
‘பண்டிகை காலம். டிக்கெட் கிடைக்கவில்லை..விமான நிலையம் சென்றே டிக்கெட்டை புக் செய்ய வேண்டும்.. நான் அவசரமாக நாடு திரும்ப வேண்டும்.. ‘ என்றான். அவன் முகம் அழுது வீங்கி இருந்தது. ஏதோ அவசரச் சூழல் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
‘தாராளமாகப் போகலாம்…‘ என்று கொஞ்சம் வேகத்தைக் கூட்டினேன். பின் இருக்கையில் அமர்ந்திருந்தவன், தன் கைக்குட்டையால் முகத்தை பொத்திக்கொண்டு அழுதான். தன் அம்மா காட்டில் பாம்பு கொத்தி ஆறு மணி நேரங்களாக யாராலும் பார்க்கப்படாமல் இறந்து கிடந்ததாகவும், தான் ஈமக்கிரியைகளுக்காக ஊருக்குத் திரும்புவதாகவும் என்னிடம் கூறினான். தனியாக இருக்கும் ஒரு மனிதனைத் தீண்டும் மரணம் போல் கொடியது ஏதுமில்லை. அதைவிடக் கொடுமை அதை நினைத்து தனியாக ஒரு நாட்டில் அழுது கொண்டிருப்பது. அம்மாவை உனக்குப் பிடிக்குமா என்று கேட்டேன். அவன் சுக்குநூறாக உடைந்து அழ ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்ததும் என் அம்மா என்னை அழைத்துக்கொண்டு ஞானஸ்தானம் வழங்க தேவாலயம் அழைத்துச் சென்றது. அதற்காக ப்ரத்யோகமாக ரவை, பாதாம் பருப்பில் ‘சுஜி ‘ செய்தது எல்லாம் எனக்கு முன்பாக பால்யமாக சாலையில் நின்று கொண்டிருந்தது. அவளின் ‘சுஜி ‘ க்கு என் நாக்கு அடிமை. டச்சுக்காரர்கள் உலகெங்கும் கப்பல் எடுத்துச் சென்று அரசாண்டபோது சுவைமிக்க ‘ சுஜி ‘யையும் உடன் எடுத்துச் சென்றதாகக் கூறுவாள் கோவாவில் இருக்கும் என் ஐரிஷ் பாட்டி. டச்சுக்காரர்கள் ‘பெண் ‘ இல்லாமல் கூட திருமணம் செய்துவிடுவார்கள். ஆனால், சுஜி இல்லாமல் எங்கும் இருக்க மாட்டார்கள் என்று அம்மா சிங்கப்பூர் – யுரேசிய அப்பாவை மணமுடித்தபோது சுஜியை இங்கும் கொண்டுவந்தாள். என் திருமணத்திற்கு அவள் செய்த சுஜியைச் சாப்பிட்டு விட்டு மோதிரம் அணிவிக்கவேண்டும் என்று இருந்தவள், அதற்கு முன்பாகவே அம்மா இறந்து போனாள்.
தன் நிறுவன அட்டையை என் காரிலே விட்டிருந்தான் காளீஸ்வரன். அவனது நிறுவனத்தில் அட்டையை திருப்பி அளிக்கச் சென்றபோது அவன் இந்தியாவுக்கு தன் அம்மாவின் இறுதி கிரியைகளை செய்யச் சென்றுவிட்டான் என்று வரவேற்பறையில் இருந்த பெண் கூறினாள். இச்சிறிய உலகத்தில் ஒரு முறை எங்களோடு பயணித்தவர்களை மறுமுறை காணும் அதிர்ஷ்டம் என்றாவது வாய்ப்பதுண்டு. அப்படி ஒருமுறை காளீஸ்வரனை பார்ப்போம் என்று நான் உறுதியாக நம்பினேன். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மழைநாளில் போர்ட் கேனிங் கார் நிறுத்த சதுக்கத்தில் காரை நிறுத்திவிட்டு தினசரி நாளிதழை புரட்டும் போது காளீஸ்வரனின் புகைப்படத்தை எதேச்சையாகக் கண்டேன். கட்டுமானத் தளத்தில் மிகப்பெரிய கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்து போயிருந்தான். இன்றும் என் கனவுகளில் அவன் வருவான் . நான் என் அம்மா சமைத்த ‘சுஜியை ‘ அவனுக்கு பரிசளிப்பேன். அவன் எனக்கு பாம்பு கொத்திய கால்களுடன் இருக்கும் அம்மா பிழிந்த முறுக்குடன் வருவான். விடைபெறுவான். உலகில் யாருக்குத்தான் பிடிக்காது அம்மா கையால் தயாரிக்கப்பட்ட நஞ்சென்றாலும்…
அதிகாலையில் தேவாலயம் செல்வதற்காக வீட்டில் இருந்து எத்தனித்தபோது மகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லத் தாமதமாகிறது என்று செல்லும் வழியில் இறக்கி விடும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். சரியென்று நானும் ஒத்துக்கொண்டேன். நான் காரை எடுப்பதற்காக வண்டி நிறுத்ததிற்குச் சென்றபோது கீழே தினசரியை விற்றுக்கொண்டிருந்தவரிடம் நாளிதழை வாங்கிப் படித்தேன். நடுப்பக்கத்தில் வெள்ளைச் சட்டையுடன் அடையாளம் தெரியாத மாது கைக்குழந்தையுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு அடுக்கு மாடியிலிருந்து வீழ்ந்து கிடந்தாள். அதற்கு கீழ் செய்தியில் ஒரு யுவதியும் இளைஞனும் படுக்கையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். இரண்டும் வேறு வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் என்று காவல் துறையினர் போதுமான தகவல்களைக் கோரியிருந்தனர். மகளை இன்னொரு வாடகை வண்டியில் அமர்த்தி அனுப்பி விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலையின் பக்கம் வண்டியை வேகமாகச் செலுத்தினேன். என் கண்கள் கூசுமளவுக்கு விண்ணிலிருந்து எண்ணற்ற சூரியக் கதிர்கள் விழ ஆரம்பித்திருந்தன. நகரம் தன் நாக்கிலிருந்து ஒவ்வொரு ரகசியமாகத் துப்பிக்கொண்டிருந்தது.
********
Bon Voyage சிறுகதை சற்றுமுன் வாசித்தேன். நல்ல மொழிநடை வாய்த்திருக்கிறது ரியாஸ் உங்களுக்கு….என்னது டக்கென்று கதை மாறுகிறதே என யோசித்தேன்… முடிவு ஒரு எதிர்பாராத திருப்பம்! பாராட்டுகள்.. வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.