நூல் விமர்சனம்
Trending

‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா

நூல் விமர்சனம் | வாசகசாலை

 

கவிதை என்பதற்கான வரையறையை இதுவரை  பல்லாயிரம் பேர் கூறியிருக்கக்கூடும். தான் பார்த்த  வானவில்லை, கூட இருப்பவர்களிடம் சுட்டிக் காட்டும் பிள்ளையென ஒரு கணத்தில்  தான் கண்ட அல்லது அடைந்த தரிசனத்தை சரியான  சொற்களால் பிறரிடம் கூறுவது  கவிதை என பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கவிதைத் தொகுப்பென்பது ஒரு சோலை போல. அதனுள் மலர்களும் இருக்கும், காய்களும் கனிகளும் இருக்கும். அவற்றோடு முட்களும் இருக்கும். ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு மனநிலைகளில் எழுதப்பட்டவையாக இருக்கக் கூடும். ஒன்று போல பிறிதொன்று இல்லையே எனக் குறை கூற முடியாது. சில மெல்லுணர்வை சுட்டுவதாகவும் வேறு சில சினத்தையும் ஆவேசத்தையும் காட்டுவதாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் எதிர்பார்த்தும், எந்த முன்முடிவும் இல்லாமலும் கவிச் சோலைக்குள் நுழைபவனே ஒரு  நல்ல கவிதை ரசிகனாக இருக்க முடியும்.

கவிஞர் கவியரசுவின், ‘நாளை காணாமல் போகிறவர்’  கவிச்  சோலைக்குள் மலர்களும் காய்களும் கனிகளும் நிறைந்திருக்கின்றன. கூடவே சில  முட்களும்.

 “எறும்புகள் விசேசமானவை”

கவிதைகளை எறும்புகளாக உருவகிக்கும் கவிதை. கவிதைகள் எதையெண்ணி எழுதப் படுகின்றன,  அவை என்னவாகின்றன, அவற்றால் இயல்வதென்ன என்பதை அழகாக விவரித்துள்ளார்.

//டைனோசராக மாறி அச்சுறுத்தும் விலங்குகளை  தெறிக்கவிட  வேண்டும்//

//ஒவ்வொரு முறையும் நசுங்குதல் தவிர வேறெதுவும் பெரிதாக நிகழ்ந்து விடுவதில்லை//  என்ற வரி இயலாமையை நயமாகச் சொல்கிறது.

‘புரட்சியாளர்கள்’ கவிதை வெள்ளித்திரை நாயகர்களின் வெற்றுப் புரட்சிப் பேச்சுக்களை தோலுரித்துக் காட்டுகிறது.

//சிறிய பிளேடால் கிழிந்து விடும் வெண்திரையில் தோன்றும் புரட்சியாளர்கள் சொந்தமாக எதுவுமே பேசுவது கூட இல்லை//

இவர்களின் புரட்சி என்பது  பேச்சில்தான். அதுவும் பிறர் எழுதித் தருவது என்பதை எந்தப் பூடகமுமின்றி எழுதப்பட்ட இக்கவிதை மனதில்  தைக்கிறது.

நல்ல பையன் என்று அழைக்கப்படுபவன்,  அப்படி அழைக்கப்படுவதாலேயே அடையும் துயர்களைக் காட்டுகிறது, ‘நல்ல பையன்’ கவிதை. நல்லதை மட்டுமே நினைத்து, செய்து கொண்டிருப்பவனின் வாழ்வில் எந்த வண்ணங்களும் இராது, வெண்மை மட்டுமே நிறைந்த, உற்சாகமூட்டும் திருப்பங்கள் ஏதுமில்லாத  மந்தமான வாழ்வு அது.

முதன்முதலாக
உன்னை நல்ல பையன்
என அழைக்கிறவர்
ஒருபோதும் அறிவதில்லை
நீ நிரந்தரமாக நடிக்கப் போகிறாய் என்று
நல்லதுக்காக ஒருநாள்
சாகப் போகிறாய் என்று

இந்த வரிகளின் நிதர்சனம், ‘நல்லவன்’ என்னும்  பேரால் சபிக்கப்பட்டவர்களுக்கே புரியும். தனிப்பட்ட முறையில்  எனக்கு மிக நெருக்கமான கவிதையிது. இத்தொகுப்பின் முதன்மையானது என்று நான் கருதுவதும் இதைத்தான். இக்கவிதையை வாசித்தவுடன் யோசித்துப் பார்த்தேன் என்னை அப்படி அழைத்தவர் யாரென. நல்லவேளை நினைவில்லை. இருந்திருந்தால் நானும் ஒரு குற்றவாளி ஆகியிருக்கக் கூடும்.

‘தொப்பூழ்கொடி’  உறவாகத் தொடரும் பனைகளை அழிக்க முயல்வதை கூறும் கவிதையில் பனை பற்றிய இனிய நினைவுகளைக் கிளறி விடுகிறார். நுங்கு, பனை விசிறி, நுங்கு வண்டி, கருப்பட்டி, பதநீர், கள், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என பால்யத்தின் வாழ்வை நிறைத்திருந்த பனையை விட்டு தற்போது எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்பதை எண்ணும்போது நம்மை விட்டு நீங்கிய, தாத்தா பாட்டிகளும் நினைவிலெழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

சொத்துகளைப் பிய்த்துக் கொண்ட பிள்ளைகளின் வீடுகளுக்கு மாற்றி மாற்றிப் பந்தாடப்படும் தந்தையின் வலியை விளையாட்டாய் காட்சிப்படுத்துகிறது, ‘விளையாட்டுத் திடல்’ கவிதை.

குழிகளில்
கற்களை புதைப்பதற்காக
சகோதரர்கள் விரையும் போது
வளைந்து வளைந்து ஓடும் தந்தை

 “முள்வேலி கட்டிய பிறகு இறகுப் பந்தாக மாறுகிறார்

என்ற வரிகளில் பிள்ளைகளால்  தந்தை படும்பாடு கண்முன் விரிகிறது.

மனிதர்களின் நாகரீக வசதிகளுக்காக எத்தனை பேர்,  வலியும் அழுகையுமாக தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை எண்ண வைக்கிறது ‘மலைப் பாதை’ கவிதை.

//வெடி வைத்து தகர்த்தபோது
சிதறிய பெரிய கல்//

// காலுக்கடியில் கல்வெட்டாக மாறியதும்
உள்ளேதான் இருந்தன//

ஆனால், வசதிகளை  அனுபவிப்பவர்கள் ஒரு போதும் அறிவதில்லை, அதற்குக் காரணமானவர்களின் சிதைந்த வாழ்க்கையை.

வெயிலுக்கும் இலைக்குமான உறவையும், நிழலுக்கும் மணலுக்குமான நட்பையும் உயிருள்ள பாத்திரங்களைப் போல அவற்றை உலவவிட்டு,  விவரிக்கப்பட்டுள்ளது “ஒளி/நிழல்/ இலை/மணல்” கவிதை மூலம்.

காற்றின் தயவால்
சுழன்று விழுகின்ற இலைகள்
மணலின் மடியைச் சேரும் போதெல்லாம்
நாவற்றதாகவே இருக்கின்றன

வெயிலிடம் ஓயாது பேசிய இலைகளின் பேச்சைக் கேட்க விரும்பிய மணலை அடையும்போது அவை பேச்சற்றவை ஆகிவிடுகின்றன. அழகான காட்சியனுபவம் தரும் கவிதையிது.

காணாமல் போய்விட்டவரின், காணாமல் போவதற்கு முந்தைய நாள் எப்படி இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது ” நாளை காணாமல் போகிறவர்” கவிதை.

சப்தமற்ற இலைகளாக
சிசிடிவி கேமராக்களில்
வெவ்வேறு தெருக்களில்
நகர்ந்து கொண்டிருக்கிறார்

எல்லோரையும் போலவே வாழ்ந்தவர்தான், காணாமல் போனதன் காரணமாக முக்கியமானவராக மாறிவிட்டார் என காட்சியாக விவரிக்கிறது கவிதை.

மேற்கூறப்பட்ட கவிதைகளெல்லாம் என்னைக் கவர்ந்த சில மலர்களும் கனிகளும். தொகுப்பினுள் எனக்கு உண்ணத் தெரியாத என்னால் ரசிக்க முடியாத மலர்களும் உண்டு. அவை பிறருக்கு பிடித்தமானவையாக இருக்கக் கூடும். எல்லாக் கவிதைகளும் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டியதில்லையே.

பல கவிதைகள் குறியீடுகள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை பொதுவான குறியீடுகளாக இல்லாமல் புதிதாக உள்ளன. அவை எதை உணர்த்துகின்றன என்பதைக் கண்டறிவதற்கு  பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. அக்குறியீட்டை அறியாமல் அக்கவிதையைத் திறக்கவியலாது என்பதால், அதற்கான திறவுகோலை ஏதாவதொரு இடத்தில் கவிஞர் விட்டு வைத்திருப்பார். அதைக் கண்டறியவில்லையெனில்  ஏமாற்றத்தோடு சோர்வும் அடைந்துதான் அடுத்த கவிதையை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. எனக்கு   இப்போது திறவுகோல் தட்டுப்படவில்லை என்பதால் அக்கவிதைகள் சரியில்லாதவை என்று பொருளில்லை. திறவுகோலைக் கண்டடைபவர்களுக்கு சிறந்த கவியனுபவமாக இருக்கக்கூடும். பிறிதொரு முறை வாசிக்கையில் எனக்கே கூட அது திறக்கவும் கூடும்.

நூல் கட்டமைப்பும் அட்டை வடிவமைப்பும் தேநீர் பதிப்பகத்தால் சிறப்பாகவும் அழகாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாராட்டுகள்.

ஒட்டு மொத்தமாக,   பல புதிய சொற்சேர்க்கையுடனும் புதிய குறியீடுகளுடனும் கூடிய சிறப்பான கவிதைகளும், நல்ல கவிதைகளும், எனக்குத் திறக்காத சில கவிதைகளும் கொண்ட நிறைவான தொகுப்பு.

நூல்: நாளை காணாமல் போகிறவர்
ஆசிரியர்:  இரா. கவியரசு
பதிப்பு: தேநீர் பதிப்பகம்
விலை: ரூ. 110/-

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button