எழுத்தாளர் மாதவராஜின் ‘க்ளிக்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஆமினா முகம்மது
கட்டுரை | வாசகசாலை
“எனக்கு உங்க கையெழுத்துப் போட்டுத் தாங்க” என நேரடியாக எழுத்தாளரிடம் அருகில் நின்று வாங்கிய புத்தகம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஓரிரு வார்த்தை கூட பேசாத நிலையிலும் அவர் இயல்பின் மீது மரியாதை கூடியிருந்தது பிரத்யேகக் காரணம்.
‘க்ளிக்’ – தோழர் மாதவராஜ் எழுதிய நாவல். அவினாசியில் நடந்த ‘புத்தாண்டு புத்தகங்களுடன்’ கொண்டாட்டத்தில் நினைவுப் பரிசாகக் கொடுக்கப்பட்டிருந்த புத்தகம். பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.
2023-ம் ஆண்டின் இறுதி நாளில் வாசித்த புத்தகங்களின் பட்டியலை பலர் பதிவிடும்போது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அவ்வளவு வாசிக்க முடியாது எனினும் ஒரு புத்தகத்தைத் தொடங்கினால் வேகமாக முடித்துவிட்ட பின்னரே அடுத்த புத்தகம் தொடங்க வேண்டும், அதிலும் ஒரு வாரத்திற்குள்ளாக முடித்துவிட வேண்டும் என்பதை ‘புத்தாண்டு இலக்கு’ ஆக ஆக்கி வைத்திருந்தேன்.
புத்தாண்டு அன்று இரவு வாசிக்கத் தொடங்கி, பயணங்களாலும் புத்தகத் திருவிழா வேலைகளாலும் 16-ம் தேதி வரை நீண்டிருந்தது. பரவாயில்லை. நல்ல முன்னேற்றம்தான்
நாவலுக்கு வருகிறேன்.
திருமணம் நடக்கப்போகும் இரு வீட்டாரிடமும் ஆளுக்கொரு டைரி கொடுத்து எழுதச் சொன்னால் அவரவர் பார்வையில் நடக்கும் சம்பவங்களை எப்படி அணுகியிருப்பார்கள்? இந்த நாவலும் அப்படித்தான் கதைமாந்தர்களின் வாயிலாக சம்பவங்களை அணுகுகிறது.
ஆச்சர்யம் என்னவெனில் தோழர் மாதவராஜால் எல்லோரின் பாத்திரங்களையும் நியாயப்படுத்த முடிகிறது. யாரொருவரையும் குற்றம் சுமத்த முடியாத வகையில் அவரவர் தரப்பு நியாயங்களை, மனித மனங்களை, மனிதனுக்குள் இருக்கும் மிருகங்களைக் கூட வெளிக்காட்டி அதுபற்றி பேசிட வைக்கிறார். டைரி என்பதே தன்னை மிகைப்படுத்தியும் புனிதப்படுத்தியும் எழுதப்படும் சுயகுறிப்புதானே? டைரியென்பது அவரவர் பக்கம் நியாயங்களைப் பற்றி மட்டுமே பேசும்.
ஆனால், ஒரு தனிமனிதர் அத்தனை பேரின் நியாயங்களை இந்த நாவலில் பேசியிருப்பதுதான் ஆச்சர்யம்.
இதில் வரும் நிறைய சம்பவங்களை நிஜ வாழ்வோடுப் பொருத்திப் பார்த்தேன். அத்தனையும் மனதுக்கு நெருக்கமானவை.
எந்த அம்மாவுக்கும் தன் மகளின் கணவன் மீது அதிருப்தியிருக்கவே செய்கிறது போலும். இறந்து போன ரவிச்சந்திரனை அவ்வபோது குறைபட்டுக்கொண்டிருக்கும் அம்மாவழி பாட்டி பத்மாவதி தன்னை செல்லம் கொஞ்சினாலும்கூட அப்பாவை ஒதுக்கிவிட்டு தன்னை அரவணைக்கும் பாசத்தில் பூங்குழலிக்கு உடன்பாடில்லை என விவரிக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு ஏன் என் பாட்டியைப் பிடிக்காமல் போனது? அவரின் இறப்பில் ஒரு துளி கண்ணீர் வடிக்காததும்கூட விஷயமே இல்லை. ஒருபோதும் அவரது இல்லாமை என்னை வேதனை கொள்ளச் செய்யாததற்கு காரணமே என் தந்தையைப் பற்றிய அவரின் ஒப்பீடுகள்தான்.
எல்லா மகள்களும் வசதியாக இருக்க, ஒரு மகள் ஆட்டோ ஓட்டுநரின் மனைவியாக இருப்பதிலோ குறைவான வருமானம் தரும் நபராக இருப்பதிலோ அவருக்கு வருத்தம் இருந்திருக்கலாம். ஆனால், மற்ற யாவரையும் விடவும் அம்மா ராணியாகவே நடத்தப்பட்டாள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லுவேன். ஆனால், பத்மாவதிகளுக்கு அது போதுமானதாக எப்போதும் இருந்ததில்லை. அதனால் பூங்குழலிகளுக்கு பத்மாவதிகள் மீது பிரியம் பெரிதாய் நிகழ்வதில்லை.
நிஜ வாழ்வோடு பொருந்திப் போவதால் பூங்குழலி-பூங்குழலி அம்மா- பூங்குழலி பாட்டி ஆகிய மூன்று தலைமுறைகளிடம் நிகழும் உள-அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இரண்டு விஷயங்கள் என்னை அதிகம் உணர்ச்சிவசப்பட வைப்பவை. எத்தகு இரத்தக் காட்சிக்கும் மனம் கலங்காது. ஆனால், சிறுபிள்ளை வேதனைப்படும் கானொளிகளை மட்டும் பார்த்துவிடவே மாட்டேன். என் பிள்ளைகளின் முகமாய் அவை மாறிப்போகும்போது மனம் அவ்வளவு ரணப்பட்டுவிட்டு அழுகையை உண்டு செய்யும். மற்றொரு விஷயம் அப்பாக்களைப் பற்றிய எந்த விஷயங்களும்!
“உன் அத்தாவ ரொம்ப மிஸ் பண்றங்குறது உன் எழுத்து வழியா புரிஞ்சுக்க முடியுது”- என என் எழுத்தைத் தொடர்ந்து கவனிக்கும் பலர் சொல்லக் கேட்டிருக்கேன். எதிலாவது, எந்த வடிவிலாவது அந்த இல்லாமையை என்னை மீறி வெளிப்படுத்திவிடுகிறேன். இதோ… புத்தகம் முடித்த பின்னர் இந்த புத்தகத்தைப் பற்றி எழுதிக்கொள்ளலாம் என்றிருந்தவளை பூங்குழலியின் தந்தை ‘ரவிச்சந்திரன் நினைவுநாள்’ காட்சிகள் வாசித்ததும் உடனே இந்த பதிவை எழுதத் தோன்றியதும்கூட அதே வகையில்தான்.
பூங்குழலி சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். ஒரு நினைவு நாளில் தன் அப்பாவின் ‘கல்லறை நாட்களை’ எண்ணிப் பார்க்கிறாள். எத்தனை நாட்கள் அந்த கல்லறைத் தனிமையில் கழித்துக்கொண்டிருக்கிறார் என தன் அப்பாவை நினைவு கூறும்போது மனம் கனக்கிறது அவளுக்கு. சாதாரண நினைவுதான். ஆனால், அந்த நினைவுகள் பேசும் பொருள் அவ்வளவு எளிதானவையல்ல. மண்ணறை, கல்லறைகளை கடக்கும் எவருக்கும் இருக்கும் அதிர்வுதானே?
இன்னொரு இடமும் ரசிக்கச் செய்யும்படி இருந்தது.
பூங்குழலி அப்பாவின் காதலி கல்யாணி. அல்லது அப்பாவைக் காதலித்தவள். நிறைவேறாத காதல். அதனால் பித்துப்பிடித்து வீதியில் அலைகிறாள்.
அப்பா இறந்தபோது பூங்குழலி அம்மாவழி தாத்தா ஊருக்கு வந்துவிட்டாள். கல்யாணியும் அதே ஊரில் தெருக்களில்தான் இப்போது அலைகிறாள். ஒரு நினைவு நாளில் பூங்குழலி அண்ணன் தன் தந்தை ஊருக்கு கல்லறைக்குச் செல்கிறான். அங்கேயும் கல்யாணி இருக்கிறாள். அந்த கல்லறையில் கல்யாணி “உன் மகளுக்கு கல்யாணம் ஆகப்போகுது” என எழுதிவைத்திருந்ததை அண்ணன் பூங்குழலிக்குச் சொன்னபோது கல்யாணி பற்றிய பூங்குழலியின் சிந்தனைகளும் கூட மனதுக்கு நெருக்கமானவை.
அத்தாவின் காதலி குறித்து நானும்கூட எழுதியிருக்கிறேன். எனக்கு பெனாசீர் என பெயர் வைக்க அத்தா ஆசைப்பட்டதாகச் சொன்னபோது அது அவரின் காதலிப் பெயராக இருக்குமோ என கூட யோசித்திருக்கிறேன். “என்னைவிட அவ அழகானவளான்னு பாக்குறதுக்காக அந்த பெண் வீட்டுக்கு ஒருதரம் போயிருந்தேன்” என அம்மா சொல்லும் நேரமெல்லாம் அவ்வளவு அப்பாவித்தனம் முகத்தில் வழியும். அப்பாக்களின் காதல்கள் மகள்களுக்கு தனித்துவமானவை.
பூங்குழலிக்கும் கல்யாணியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால், நாவலின் இறுதி அத்தியாயம் வரை தேடி வந்தும் ஏமாற்றமே. கல்யாணி என்ன ஆனாள் எனத் தெரியவில்லை. ஒருவேளை தன் காதலனின் குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்ததைப் போல் பித்துப்பிடித்தவளும் மதுரைக்கே வந்திருப்பாளோ என்னவோ?
அப்பா ஊரில் இருந்த கல்யாணி ஏன் இந்த ஊருக்கு வரவேண்டும், எப்படி அவளுக்கு வழி தெரிந்தது, வருடாவருடம் எப்படி நினைவுநாளில் கல்லறைக்குச் செல்கிறாள் என்பதெல்லாம் நம்மையும் துரத்தும் கேள்விகள். சிலவேளை பூங்குழலியை விடவும் கல்யாணி மேல் அதிக கவனம் குவிகிறது.
பூங்குழலிதான் நாவலின் நாயகி என்றாலும் அவள் மீது அத்தனை பிடித்தம் இருக்கவில்லை. அவளை விடவும் பவித்ரா அழகாய் தெரிந்தாள்.
வீட்டிற்கு ஒரே பெண். பூங்குழலிக்கு நிச்சயிக்கப்பட்ட நரேனின் எதிர்வீட்டுப் பெண். திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டு கணவன் வீட்டார் கொடுத்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டவள். அவ்வபோது ஆங்காங்கே ஓரிரு வார்த்தை பவித்ராவைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் ஒரே ஓர் அத்தியாயம் மட்டுமே பவித்ராக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஓர் அத்தியாயம் மட்டுமே அவளை மொத்தமாய் பிடித்துப் போகக் காரணமானது.
ஒவ்வொருவரும் சம்பவங்களை அவரவர் பார்வையில் அணுகியிருப்பார்கள்.
முதலாவது பூங்குழலி. திருமணத்துக்கு முன்பே தன் கையில் கொடுக்கப்பட்ட முத்தம் பூங்குழலிக்கு அறுவறுப்பைத் தந்துவிடுகிறது. சந்திப்பு ஏற்பாடு செய்த குடும்பத்தினர் மீதும் தன் மேல் திணிக்கப்படும் திருமணம் மீதும் அவளுக்கு கோபம் கொப்பளிக்கிறது. அவள் பார்வையில் அந்த சம்பவத்தை அணுகும்போது சரியெனப்பட்டது.
இரண்டாவது நரேன். இருள் தந்த தைரியத்தில் நிகழ்த்திய தன் தவறுக்கு பெற்றோரிடம் பதில் சொல்லப் போவதை எதிர்கொள்ள முடியாமல் கூனிகுறுகிப் போகிறான் நரேன். அவனது பார்வையில் நாவல் வாசிக்கும்போது பரிதாபம் மேலிடுகிறது.
மூன்றாவது பவித்ரா. அவமானம் தாங்காமல் வீட்டுக்கு வந்தவனை பவித்ரா தேற்றுகிறாள். தேவதை சாயல் சூடியவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை மீளச் செய்யும்போது நாமும் மன்னிக்கத் தயாராகிவிட்டிருப்போம்.
நான்காவதாக பூங்குழலியின் தோழி. இதே சம்பவத்தை அவள் பார்வையில் அணுகுகிறாள். “நீ அனுமதிச்ச, அதுனால அவன் கையைப் பிடிச்சான். உனக்கு கல்யாணத்தை நிறுத்த சந்தர்ப்பம் தேவைப்பட்டுச்சு. இதைப் பயன்படுத்திக்கிட்ட” என்பதாக பூங்குழலியை உரித்துக் காண்பித்தபோது பூங்குழலி திகைத்துப் போயிருந்தாள். இதுவரை பூங்குழலி சொன்ன நியாயங்களையெல்லாம் நாமும் தகர்த்துவிட்டு நமது பார்வையில் நாவலை அணுகத் தொடங்கியிருப்போம்.
அதற்குள் நாவல் இறுதி அத்தியாயத்தில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. “அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்”. அவ்வளவே.
இதில் வரும் மனிதர்களின் குணாதிசயங்கள் தனித்துவமானவை.
-அப்பா இழந்த பின் சிரிப்பையே மறந்திருந்த பூங்குழலி.
– காதலித்த கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்து தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அப்பா ஸ்தானத்தைக் கையிலெடுத்திருக்கும் பூங்குழலி அண்ணன்.
-சம்பாத்தியத்திற்கு வழி இல்லாததால் தந்தை வீட்டிலேயே அடைக்கலம் ஆகும் பூங்குழலி அம்மா.
– தனது கட்டுப்பாட்டில் இருப்பதால் மகளை தன் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கும் பூங்குழலியின் பாட்டி. ஓரளவு நியாயமாய் நடந்துகொண்டாலும் தனக்கு கீழ் உள்ளோர் மீது ஊமையாய் அடக்குமுறை நிகழ்த்தும் தாத்தா
– ஓடிப்போன அண்ணனைக் கொண்டும், தன் தலையில் சுமத்தப்பட்ட பாரத்தைக்கொண்டும் எப்போதும் சிடுமூஞ்சியாய் இருக்கும் தாய்மாமா.
-ஒரே மகன் என்பதால் பலவித அழுத்தங்களோடு உலாவும் பரிதாபத்துக்குரிய அப்பாவி நரேனின் அம்மா.
– 1 நிமிட லிப்ட் பயணத்துக்குள் சிநேகம் விதைக்கும் ஆபிஸ் லிப்ட்மேன் இஸ்மாயில்.
இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் பூங்குழலி-நரேன் இருவரைச் சுற்றி உண்டு. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணாதிசயங்கள். பெண்களின் உலகம் எப்படியிருக்கிறது, அதை புற உலகம் எப்படிக் கையாள்கிறது,பேசுகிறது, ஆணின் பார்வைகள் என எதையும் விட்டுவைத்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையே ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல். ஊர்புறத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இருக்கும் மக்களுக்கு வேறுவித பிரச்சனை எனில் நகர்புறத்தில் இருக்கும் ஐடி ஊழியர்களின் அழுத்தங்கள், வேலை நெருக்கடி குறித்த பிரச்சனைகளைப் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. இதைதான் ‘அரசியல் இல்லாமல் எழுத முடியாது’ என தோழர் மாதவராஜ் குறிப்பிட்டிருந்தார்.
பாட்டியால் பிடிக்காமல் போன திருமணத்தை நிறுத்தும் முன்பு வரை நரேன் சுவாரசியமற்றவனாய் தென்படுகிறான். அதே நரேனுக்கு பவித்ரா, அவன் தோழி, பூங்குழலி தோழி பற்றிய பேச்சுக்களுக்குப் பின்னர் பகிர ஏராளமானதாய் இருப்பதாக அவளுக்குத் தோன்றுகிறது. தூரமாய் இருக்கும் வரை புதிராகத் தெரிந்த பூங்குழலிக்கும் அவள் விரும்பிய மனிதர்களோடு காணப்படும் பூங்குழலிக்குமான வித்தியாயம் புரியும்போது தெளிந்த நீரோடையாய் தென்படத் தொடங்குகிறாள். பூங்குழலிக்கு எரிச்சலூட்டிய நரேனின் அம்மாதான் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களைப் பகிர, அரவணைத்து ஆறுதல்படுத்தும் அருளாய் பவித்ராவிற்குத் தென்பட்டிருக்கிறது. ஒவ்வொருவர் பார்வையில் மனிதர்களும் மாறுபடுகிறார்கள். இது அத்தியாத்திற்கு அத்தியாயம் மாறுபட்டுக்கொண்டேயிருக்கிறது.
ஒரு சினிமா பார்ப்பதைப் போல் நாவல் செல்லும் பாணியிலும் திடீர் ட்விஸ்ட். ‘செல்லமே’ படத்தைப் போலவே பவித்ரா-நரேன் உறவு செல்கையில் இருவருக்கும்தான் திருமணம் ஆகப்போகிறதென நினைத்திருக்கத் தூண்டும். அதேபோல் பூங்குழலி திருமணம் மறுக்கக் காரணம் அவளின் நண்பர்களாக கொண்டுவரப்பட்ட கதாபாத்திரங்கள்தானோ என நினைக்கத் தூண்டும். இஃது யாதுமின்றி அவரவர் உறவுமுறைகளையும் நேர்மையாக்கி வைத்திருக்கிறார் ஆசிரயர். மிகையற்ற, கலப்படமும் அற்ற நல்லதொரு கதைக்களமும் கதாப்பாத்திரங்களும் வேகுசிறப்பு!
அத்தியாயத் தலைப்புகள் நாவலின் உயிர். என்னளவில் விசித்திரமான முயற்சி. அதை கவனிக்காமல் நாவல் தொடர்ந்தால் புரிய சிரமம். அத்தியாயங்களுக்குத் தேதி, நேரம், காலத்தை தலைப்பாகக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொருமுறையும் அத்தியாயம் நடக்கும் காலம் எதுவென மீண்டும் மீண்டும் தலைப்பை நோக்கிச் சென்று தெளிவுபடுத்திவிட்டே தொடர வேண்டியிருக்கிறது. அதில்தான் அதீத சுவாரசியம். ஒரே நேர்கோட்டில் கதை பயணிக்காமல், ஒரு வட்ட எல்லைக்குள் கலைத்துப் போட்ட முத்துக்களை ஒவ்வொன்றாய் எடுத்துக் கோர்ப்பதுப் போன்றதொரு வாசிப்பனுபவத்தைத் தந்திருந்தது.
இதில் சொல்லப்பட்டிருக்கும் நிறைய உவமைகளில் என்னை அதிகம் கவர்ந்த சில இடங்களைச் சொல்லியே ஆக வேண்டும்.
சென்னைச் சாலையில் பயணிக்கும் வாகனங்களைப் பார்ப்பதில் இருக்கும் சுவாரசியமற்ற நிலையை ‘பெரிய மராத்தானில் எல்லோரும் ஒன்றுபோல் சென்றுக்கொண்டிருப்பதாகப் பட்டது’ என்கிறார்.
ஐடி அலுவல பல அடுக்கு தளத்திற்கு அப்பால் ஜன்னல் வழியே பார்க்கப்படும் காட்சியை, “ஞாயிற்றுக்கிழமை ஹிந்து பத்திரிக்கையின் விளம்பரப் பக்கங்களைப் போல் விரித்து கிடக்கிறது நகரம்” என்கிறார்.
தூக்கத்தில் புன்னகைக்கும் குழந்தையின் மாயக்கணம், இழந்து போன குழந்தைத்தனங்களை மனிதர்களுக்கு மீட்டுத் தரும் கடல், குழந்தையாய் இருந்தபோது பார்த்தவர்களிடம் வளர்ந்தபிறகும் தானாகவே குழந்தையாகிவிடுகிறோம், உலகில் கொடுமையானது முட்டாள் போல் பாவனைச் செய்வது– என இன்னும் இன்னும் அதிகமாய் ஆங்காங்கே தூவிச் செல்லும் வாக்கியங்களின் வழியாக ஒரு நிமிடம் நம் வேகத்தை நிறுத்தி சிந்திக்க வைக்கவும் தவறவில்லை.
சிறந்த புத்தகத்துடன் இவ்வருடம் தொடங்கப்பட்டதில் திருப்தி எனக்கு.
புத்தகப்பெயர்: க்ளிக்
வகை: நாவல்
எழுத்தாளர்: மாதவராஜ்
பக்கங்கள்: 248
விலை: 250
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
*****