இணைய இதழ்இணைய இதழ் 94சிறுகதைகள்

கம்ப்யூட்டர் கரப்பான்பூச்சி – சிபி சரவணன்

சிறுகதை | வாசகசாலை

“வானம் ஏன் இவ்வளவு பச்சையாக இருக்கிறது?’

வானம் எப்படி பச்சையாக இருக்குமென உங்களுக்கு சந்தேகம் வருவதில் தவறில்லை. இளம் வயதிலேயே எனது கண் வெளிச்சத்தை தாங்கி கொள்ளும் சக்தியை இழந்து விட்டது. அப்போதிருந்தே நான் பல வகையான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நிறம். அந்த நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நான் பார்க்கும் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே நிறம்தான். அவ்வப்போது மாற்றங்களுக்காக கண்ணாடியை இறக்கி சில நிறங்களை அவதானித்து கொள்வேன். ஆனால், எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. நமக்குப் பிடித்த வண்ணத்தில் இந்த உலகத்தை காண்பது கூட ஒரு வகையில் சுகமான காரியம்தானே.. நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் எதை எதையோ பேசுகிறேன்? மன்னிக்கவும். எனது பெயரை உங்களுக்குச் சொல்லி இருக்க வேண்டும். சொல்லி மட்டும் என்ன ஆகப் போகிறதென்றுதான் நான் சொல்லவில்லை. நமது பிம்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் எல்லாம் தங்கள் பெயர்களை சொல்லிக் கொண்டா இருக்கின்றன? மனிதர்கள் மற்ற பொருட்களுக்கு குறிப்பிட்ட ஒரு பெயரை வைத்திருப்பதை போல் பொருட்களும் மனிதர்களுக்கு மனிதன் என்ற பொதுப்பெயரை பயன்படுத்துமோ என்று சிலசமயம் எனக்குத்  தோன்றுவதுண்டு. பொருட்கள் பேசிக் கொண்டால் இந்த உலகத்தில் மனிதன் என்ன பாடுபடுவான் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாக்கு சிவக்க உங்களுக்கு சிரிப்பு வரும். சரி, என் கதைக்கு வருவோம். 

நான் ஒரு எடிட்டர். படத் தொகுப்பாளன் என தமிழில் கூட சொல்லலாம். நீங்கள் நினைப்பது போல் சினிமாவுக்கு அல்ல கல்யாண வீடியோக்கள், மற்றும் விளம்பர வீடியோக்களை எடிட் செய்து தரும் சாதாரண எடிட்டர். எப்போது பார்த்தாலும் இருட்டில்தான் எனக்கு வேலை. என் முன்னால் இருக்கும் திரைதான் எனக்கு ஆசான். உயிர் நாடி எல்லாமே. இதை வெட்டி அதில் போடுவது; அதை வெட்டி இதில் போடுவது, வேகமாக நடப்பவனை மெதுவாக நடக்க வைப்பது, மெதுவாக நடப்பவனை வேகமாக நடக்க வைப்பது, மொக்கையாக சிரிக்கும் முகங்களைக் கூட இசையைக் கோர்த்து கதாநாயகனாக்கிப் பார்ப்பது என கடவுளுக்கு நிகரான ஒரு வேலையைச் செய்வதாக நானே நினைத்து கொள்வேன். சில சமயம் எல்லாவற்றையும் நானே கற்பனை செய்து கொள்வது கூட எனக்கு நிறைய பிரச்சனைகளை உண்டாக்கும். 

ஊரில் உள்ள அம்மாவோ பையன் என்ன வேலை செய்கிறான் என்றால், வீடியோ தையல் வேலை பார்க்கிறான் என சுருக்கமாக சொல்லி விடுகிறாள். ஒரு நாள் உதாரணத்திற்காக, அதாவது அவளுக்குப் புரிய வேண்டும் என அவ்வாறு சொன்னால் அதையே ஊர் முழுக்கச் சொல்லி என் மானத்தை வாங்கி விடுகிறாள். கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே மண்டையில் பாதி முடி காலியாகி விட்டது. இதில் ‘32 வயதாகியும் மகனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க முடியவில்லையே’ என்ற புலம்பல்கள் வேறு ஒரு பக்கம். மறுபக்கம் பெண்களிடம் எப்படிப் பேச வேண்டுமென கூடத் தெரியாத நானொரு கம்ப்யூட்டர் கரப்பான் பூச்சி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இப்படி எத்தனையோ சமூக வலைதளங்களில் எத்தனையோ பெண்களுக்கு “hai” மட்டும் அனுப்பிவிட்டு காத்திருக்கும் எத்தனையோ ஆண்மகன்களில் நானும் ஒருவன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? 

இப்படியே போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையில் எனது எடிட்டிங் திறமையைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் லைக்குகளை அள்ளி குவித்திருந்தாள். சரி, யாரோ ஆர்வக் கோளாறு என நினைத்தால், அவளாக வந்து பேசி என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.  ‘சாப்டியா… என்ன பண்ற..?’ இதைத் தவிர எப்படி ஒரு பேச்சைத் தொடர வேண்டுமென தெரியாத எனக்கு சொற்களின் மூலம் பெண்களை எப்படிக் கவர வேண்டும் என்ற வித்தையை கூட அந்தப் பெண்தான் சொல்லி கொடுத்தாள். கடந்த நான்கு மாத காலமாக எங்களுக்குள் உரையாடல் துவங்கி இப்போதுதான் பொது விசயங்களைக் கடந்து இருவருக்குமான விசயங்களில் வந்து நிற்கிறது. பால்யம் முதலே காதல் என்றால் என்னவெனத் தெரிந்திடாத என்னைப் போன்ற கரப்பான் பூச்சிக்கு இது புதுவித அனுபவமாக இருந்தது. 

இன்று நான் அவளைச் சந்திக்கப் போகிறேன். இதுதான் முதலாவது சந்திப்பு. இதுவே கடைசி சந்திப்பாக இருந்து விடக் கூடாது என்பதுதான் எனது தலையாய ஆசை. காலம் யாரைத்தான் சும்மா விட்டது? என்னவெனத் தெரியவில்லை. இன்றைக்கு எனக்குள் ஒரு 20 வயது இளைஞன் பிறந்து விட்டான். உள்ளுக்குள் யாரோ டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருப்பதை போல் உணர்வு. அவளை பார்க்கப் போக இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் ஒரு தம்மை அடித்து விட்டால்தான் வாசம் இல்லாமல் இருக்கும். என்னால் தம் அடிக்காமலும் இருக்க முடியாது. ஒரு கிங்ஸ் சிக்ரெட்டைப் பற்ற வைத்து அடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் டிரம்ஸ் இசை குறையத்  துவங்கியது. காலையில் சாப்பிடாததற்கும் அதற்கும் கைகள் நடுங்கத்  துவங்கின. தம் அடித்து முடித்ததும் மலம் கழிக்க வேண்டும் போல் இருந்தது. கழிப்பறையில் உட்கார்ந்தால் எனது சிந்தனைகள் பல விதமாக பறந்து திரிந்தன. என்னவோ இப்போதுதான் வயதுக்கு வந்திருப்பது போல நான் என் சருமங்களை தொட்டுப் பார்க்கிறேன். என் சருமங்கள் இவ்வளவு மென்மையாக இருந்து நான் பார்த்ததில்லை. இவ்வளவு சந்தோசமான என்னை எனக்கே நம்ப முடியவில்லை. தலைமுடியை நீவிப் பார்த்தேன். ஆங்காங்கே சில முடிகள் தெரிந்தன. மென்மையான அவற்றின் மீது கை வைத்து வருடினேன்.  எனது சொட்டை பற்றியெல்லாம் அவள் கண்டிப்பாக கவலைப்பட போவதில்லை என்பது எனக்குத் தெரியும். என் போட்டோவைப் பார்த்து விட்டு ‘கியூட்’ என புன்னகைத்தாள். அதுவும் கண்ணாடியுடன் நான் சிரிக்கும் போட்டோவைப் பார்த்தவள், “பார்க்க ஹாங்ஹாங் இயக்குனர் வாங் கார் வாய் போல் இருக்கிறாய்” என சொன்னாள். 

“ஆனால், அவருக்கு முடி இருக்குமே? என நான் கேட்க, “முடி இல்லையென்றால் நீ மனிதனே இல்லை என்றாகி விடுமா? சும்மா அதையே சொல்லிப் புலம்பாதே… உனக்கிருக்கும் அழகான கண்களை, அது அவதானிக்கும் உலகைப் பார், உன்னால் இன்று சந்தோசமாக சிரிக்க முடிகிறதே என நினைத்துக் கொள். உன் கண்களால் பல வண்ணங்களைக் காண முடிவதை விட வேறென்ன வேண்டும்?” என்று சொல்லி என்னைத் தேற்றினாள். 

கழிவறையிலிருந்து வெளியேறி, குளிக்கத் துவங்கியதும், என்ன மாதிரியான சட்டையைப் போடலாம் என ஒரே குழப்பமாக இருந்தது. எதையாவது ஒரு டீசர்டை போட்டுக் கொண்டு போவோம். ‘சொட்டையை ஏற்றுக் கொண்டவள் சட்டையை ஏற்றுக் கொள்ளாமல் போய் விடுவாளா என்ன?’ என முடிவெடுத்து, புளு ஜீன்ஸும், எனக்குப் பிடித்த ஹார்லி டைவர்சன் டீசர்டையும் போட்டுக் கொண்டு கிளம்பினேன். 

எப்போதும் அறையிலேயே பாதி காலத்தை கழிப்பதால் செண்ட் போடும் பழக்கம் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால், இன்றைக்கு எதாவது நல்ல செண்ட் போட்டு அவளைக் கவர வேண்டுமென எனத்  தோன்றியது. பொதுவாக வேர்வை நாற்றம், பெண்களைக் கவரும் என்பார்கள். ஆனால், என்னால் என் வேர்வை நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது. அவள் என்ன பாவம் செய்தாள். அறையில் நண்பன் ஒருவன் வைத்திருந்த பாக்கெட் செண்ட்டை எடுத்து அடித்து கொண்டு நுகர்ந்து பார்த்துக் கொண்டேன். நன்றாகத்தான் இருக்கிறது. நமது வேர்வை நாற்றத்திற்கு, இது கொஞ்சம் பரவாயில்லை எனத்  தோன்றியது. 

அவள் சரியாக மாலை 4 மணிக்கு சந்திக்கலாம் என சொல்லியிருந்தாள். ஏனென்றால், மாலையின் மஞ்சள் வெயில் அவளுக்கு மிகவும் பிடிக்குமாம். ஒரு சிறிய ரயில் நிலையத்திற்கு வரச்  சொல்லியிருந்தாள். நான் வண்டியில் செல்லும் போதே என்ன என்னவோ கற்பனை செய்து கொண்டே சென்றேன். முதல் முதலாக ஒரு பெண்ணின் அருகாமையை அனுபவிக்கப் போகிறேன். அவளது விரல்களைத் தொட்டுப் பார்க்கப் போகிறேன். கண்களோடு, கண்கள் சந்தித்து காதலை பரிமாறப் போகிறேன். கேட்கவே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது இல்லையா? சாலையில் நான் செல்லும் போது, வேறு எதோ மேகங்களூடே பயணிப்பது நியாபகம் வந்தது. அதாவது திருமண தம்பதியினர் மண்டபத்தில் பூ கொடுத்துக் கொண்டதை மேகத்தில் கொடுத்தது போல் எடிட் செய்வது போல இதுவும் ஒரு அற்ப கற்பனைதான். 

வண்டியை ரயில்வே ஸ்டேனுக்கு முன்பாக நிறுத்திவிட்டு மேம்பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தேன். சூரியன் அப்போதுதான் தன் ஓய்வு நேரத்தை நெருங்கி போய் கொண்டிருந்தான். சூரிய ஒளி என் கண்களுக்கு பச்சை நிறத்தில் தெரிந்தது. லேசாக கண்ணாடியை இறக்கிப் பார்க்கலாம் எனத் தோன்றினாலும் பார்த்தால் கண் பயங்கரமாக எரியும் எனத் தோன்றவே அந்த முயற்சியை கை விட்டேன். அவளிடமிருந்து திடீரென அழைப்பு வந்தது. எனக்கு உடனே கை கால் எல்லாம் உதற ஆரம்பித்து விட்டது. 

“எங்க இருக்க?” 

“பாலத்துல” 

“பிளாட்பாம் 2-ல இரு காபி கடை இருக்குல அதுக்குப் பக்கத்துல இருக்கிற சேர்ல உக்காந்திருக்கேன் வா…” 

எனச் சொல்லிவிட்டு போனை வைத்தாள். அதுவரை சாதாரணமாக இருந்த என் இதயத் துடிப்பு படபடவென அடிக்க ஆரம்பித்தது. எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்த நேரத்தில் என் கால்கள் தடுமாற ஆரம்பித்தன. இரண்டாவது தண்டவாளத்தை நோக்கி என் கால்கள் படியில் இறங்க மிக சிரமபட்டன. என் கண்கள் கண்ணாடிக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தது. நான் என் கால்களால் வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் ரயில் சத்தங்கள் எல்லாம் ஸ்லோமொஷனில் கேட்பது போல் தோன்றியது. எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மனிதர்கள் எல்லாம் மிக வேகமாக பாஸ்ட் மோஷனில் நகர்ந்தார்கள். இதென்ன கொடுமை, எனக்கே எடிட்டிங்கா எனத் தோன்றியது. 

பின்னர் ஒருவழியாக அவள் சொன்ன காபி கடையின் அருகே போனேன். அவள் நீல நிற சுடிதார் அணிந்து வருவதாகச்  சொல்லியிருந்தாள். காபி கடையின் அருகே ஒரு பெண்ணும், கூட ஒரு சிறுவனும் பச்சை நிற உடையில் அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களின் அருகே சென்று, “ஏங்க, இங்க புளூ சுடி போட்டு ஒரு பொண்ணு உக்காந்துருந்துச்சு பாத்தீங்களா?” – என்றதும், அவள் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தாள். அதே சிரிப்பு, என்னை ஆட்கொண்ட அதே சிரிப்பு, அவள் சிரிப்பில் எப்போதும், சிறு சிறு கட்கள் இருக்கும். அப்படி சிரிப்பதுதான் அவளுக்கு அழகென கூடச் சொல்லலாம். 

“டே லூசு. உனகென்ன மாலைக்கண் நோயா?” என இயல்பாக கேட்டாள். 

நான் லேசாக கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்தேன். ஆமாம் அவளேதான். நீல நீற சுடிதார். கண்ணாடியில் மூஞ்சி கொஞ்சம் ஜவ்வாக இழுத்துக் கொண்டு தெரிந்ததில் கொஞ்சம் குழம்பி விட்டேன். எனக்கு உடம்பே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது. எப்படி இவளால் இப்படி எதார்த்தமாகப் பேச முடிகிறது. என்ற குழப்பத்தோடு அவள் அருகில் உட்கார்ந்தேன். அவளுக்காக வாங்கி வந்திருந்த சாக்லெட்டை கொடுத்தேன். அவள் வாங்கி அருகிலிருந்த சிறுவனுக்கு கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த சிறுவன், “ம்மா.. ஐ டோண்ட் லைக் கிட் கேட்” 

என திரும்ப அவளுக்கே கொடுத்தான். ‘அம்மாவா?’ என என்னை அறியாமல் வார்த்தையை விட்டான். 

“ஆமா, இவன் ஏன் பையன்.. எனக்கு டிவோர்ஸ் ஆகி டூ இயர்ஸ் ஆகுது.” 

எனக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை. அடக்கி கொள்ள முடியாத கோபம் வந்தது. அவள் முகத்தை பார்க்கப் பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டேன். 

“இந்த விசயத்த சொல்லிருந்தா நீ ஏன் கிட்ட பேசிருக்க மாட்டனு தெரியும். இருந்தாலும் மீட் பண்ணும் போது சொல்லணும்னு தோணுச்சு” 

என்னால் சுத்தமாக அவள் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதயம் படு வேகமாக அடித்து கொண்டது. அவள் என் கண்களுக்கு மிக அருவருப்பாகத் தெரிந்தாள். அதற்கு மேல் அங்கிருக்க கூடாதெனத்  தோன்றியது. எப்படியாவது இங்கிருந்து போய் விடவேண்டுமென ஆயத்தமானேன். அவள் என் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து கொண்டிருந்தாள். நான் எழுந்திருக்க ஆயத்தமாகும் போது ஒரு ரயில் எங்கள் முன்பாக வந்து நின்றது. அதன் சத்தத்தில் என்னால் மேலும் தொடர முடியவில்லை. மீண்டும் அப்படியே அமர்ந்தேன். என் கண்களுக்கு அந்த ரயில் மிக அதி வேகத்தில் நகர்வதை போல் தோன்றியது. அதிலிருக்கும் மனிதர்கள் குதித்து விழுந்து ஓடுவதை போல் நான் கற்பனை செய்து கொள்ளாவிட்டாலும், எனது திரையில் அதுவே காட்சிகளாக மாறியிருந்தது. 

“உன் கோபத்துல நியாயமிருக்கு” என்றவாறே என் விரல்களை எடுத்து தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள். 

அப்போதுதான் எனது காதுகளுக்கு எல்லா சத்தங்களும் சாதாரணமாகக் கேட்டன. அவள் கை ரோமங்கள் என் ரோமங்களோடு மோதிக்கொள்ளும்போது இதயத்தில் வயலின் இசை கேட்க ஆரம்பித்தது. மிக சாந்தமாக நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். 

அவள் என்னை நெருங்கி உட்கார்ந்து, என் காதருகே வந்து, அவளது உதடுகளைத் திறந்து காற்றின் மூலம் ஓசையை அனுப்பினாள். அந்த ஓசையில், நீ என்னை புரிஞ்சுப்பன்னு எனக்குத் தெரியும். அதுதான் சொல்லல.. ஐ எம் சாரி” என்றாள். 

நான் என் உள்ளங்கைகளால், அவளது உள்ளங்கைகளை அழுத்தி என் ஆறுதலை வெளிப்படுத்தினேன். அவளது மகன் இவை எல்லாவற்றையும் மிக சாதாரணமாகப் பார்த்தான். நான் அவனது தலையை வருடிக் கொடுத்து புன்னகைத்தேன். அவன் என்னைப் பார்த்து பொய்யாக புன்னகை செய்தான். 

இருவருக்கும் காபி வாங்கி வந்து மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்தோம். 

அவள் ஒரு மிடறைப் பருகிவிட்டு, “இந்த காபி சூடுதான் கொஞ்சம்  பதட்டத்தைக் குறைச்சிருக்கு” என புன்னகைத்தாள். 

“நம்ம வாழ்க்கை திரைக்கதை இல்ல, வேணுங்கிற மாதிரி நம்மளால காலத்த மாத்தி போட்டு எடிட் பண்ண முடியதுல்ல” என்றேன். 

“என்னடா தத்துவமெல்லாம் பேசுற?” என செல்லமாகக் கிள்ளினாள். 

எனக்கு இன்னும் அவளை நெருங்க வேண்டுமென்று தோன்றியது. என் மூச்சுக்காற்றை அவள் மீதும், அவள் மூச்சுக்காற்றை என் மீதும் படர விட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆத்மாக்கள் தங்களை பரிமாறிக்கொள்ளும். நான் கொஞ்சம் நெருக்கமாக அவளருகே சென்று கண்களை, கண்களோடு கோர்த்து அவள் விழிகளைப் பார்த்தேன். அவளது கருவிழியைச் சுற்றிய வெள்ளைப் படலத்தில் மின்னல்களைப் போல சிவப்பு நரம்புகள் கூடியிருந்தன. அவளது பருத்த மேல் உதட்டில் உள்ள ரேகைகளைப் பார்த்தேன். கொஞ்சம் கருநிறத்திலுள்ள உதடுகளில் கொஞ்சம் கவர்ச்சி கூடுதலாகவே இருந்தது. இப்போதே அவளை அள்ளிப் பருக வேண்டுமென்ற எனக்குத்  தோன்றியது. 

அவள் பதட்டமே இல்லாமல் என்னைப் பார்த்தாள். அவள் விழியில் காமத்தின் ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. ஒரு ஆணின் அருகாமை, அதுவும் பிடித்த ஆணின் அருகாமை அவளது உடலின் உஷ்ணத்தை தூண்டியது. ரயில் நிலையத்தில் இருந்த வெப்பமும், எங்கள் உடலிலிருந்து கிளம்பிய வெப்பமும், சேர்த்து எங்கள் அருகாமையைப் பற்றி எரித்தது. அவளது கை விரல்கள் மட்டும் ஒரு ஈரத்தோடிருந்தது. நான் அல்பத்தனமாக ஆவேசத்தோடு அவளது கன்னத்தில் முத்தமிட்டேன். உடனே அவளது மகன் என்னை கோபத்தோடு அடிக்க வந்து விட்டான். அவளும் என்னை ஒரு அற்ப புழுவை போல் பார்த்தாள்.  

“சரி, நான் கிளம்புறேன்” என்றவள் எழுந்து எங்களுக்கு முன்பிருந்த ரயிலில் தன் மகனோடு ஏறிக் கொண்டாள். 

நான் பிரம்மை பிடித்தது போல அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஏறிய ரயில் கிளம்பியதும்தான் எனக்குள் படிந்திருந்த அதிர்வு மெல்லத் தணிந்தது. இவள் ஏன் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து வைத்திருந்தாள்? கண்டிப்பாக அவளை நான் காதலிக்கப் போவதில்லை. என்னால் எப்படி இன்னொருவர் பையனுக்கு அப்பாவாக முடியும்? எண்ணங்கள் என்னை வதைத்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக உணர்வின்றி அதே இருக்கையில் அமர்ந்திருந்தேன். 

பகலெல்லாம் தூங்கி விட்டு இரவில் வேலை செய்வதுதான் எனக்குப் பழக்கம். அன்றும் அப்படித்தான். அடித்துப் போட்டதைப் போல் தூங்கினேன். நான் அவளை மறக்க நினைத்தாலும், மனம் அவளைப் பற்றிய எண்ணங்களை விடுவதாய் இல்லை. தூக்கம் கொஞ்சம் புத்தியை கூர்மையாக சிந்திக்க வைக்கிறது. காதலுக்கு புத்தியுடன் சிந்திப்பது முட்டாள்தனம். காதலுக்கான கேள்விகளை நாம் இதயத்திடம்தான் கேட்க வேண்டும். காதல் எப்போதும் பைத்தியக்காரத்தனங்கள் நிறைந்தது என்கிறார்கள். என்னைப் பொருத்தவரை பைத்தியக்காரத்தனம்தான் காதல். இன்னொருவர் நம் மீது முழுமையாக அன்பைச் செலுத்தும்போது பைத்தியக்காரத்தனத்திற்கு இடமில்லாமல் இருக்காது. மனித வரலாறு எப்போதும் காதலுக்கு முட்டாள்தனமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. காதல் ஒரு அற்பமான அனுபவம் என நினைத்திருந்தேன். உடல் தேவைக்காக இதனைச் செய்கிறார்கள் எனத்  தோன்றினாலும் கூட இது கண்டிப்பாக உடல் தேவை மட்டும் இல்லை என்பதே இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. 

மிகவும் தயக்கத்தோடு அவளிடம் என் காதலைச் சொல்லி விடலாம் என நினைத்து அவளுக்கு அழைத்தேன். போன் ரிங் ஆகி டக்கென கட் ஆகி விடுகிறது. நான் கூட முதலில் வேறு யாருடனோ பேசுகிறாள் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னர்தான் தெரிந்தது அவள் என் எண்ணை பிளாக் செய்து வைத்திருக்கிறாள் என்று. எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. 

நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் ஜன்னல் கம்பிகளின் வழியாக இந்த உலகத்தைப் பார்ப்பதுண்டு. துருபிடித்த அந்த கம்பிகளினூடே பச்சை வண்ணக் கொடிகள் சுற்றியிருக்கும். அவை காற்றுக்கு அசையும் போதெல்லாம் என்னோடு பேசுவதாய் நினைத்தேன். அவள் என் தோற்றத்தைப் பார்த்து என்னை நிராகரித்திருப்பாளோ அல்லது இவன் வெறும் உடல் தேவைக்காகத்தான் தன்னை நெருங்குகிறான் என நினைத்து இவ்வாறு செய்கிறாளோ என நினைத்தேன். தனிமை எனக்குள் துக்கத்தை எப்போதும் தேக்கி வைத்திருக்கும். அவை எல்லாம் இப்போது வெடித்துக் கிளம்பியது. என்னை அறியாமல் நான் உடைந்து அழ ஆரம்பித்தேன். யாருமில்லா நான்கு சுவர்களுக்கு மத்தியில் அழுவது கூட ஒரு வகையில் சுகமான அனுபவம்தான். அப்போது யாரும் நம்மைத் தேற்ற வேண்டியதில்லை. தேற்றுதல் நமக்குள்ளிருந்தே தொடங்கும். அவ்வாறு தனிமையில் துக்கத்தை வெளிப்படுத்துவது எனக்குப் பிடித்திருக்கிறது. துக்கத்தில்தான் மனிதர்கள் உண்மையான மனிதர்களாக மாறுகிறார்கள் என்று கூட எனக்குத் தோன்றும். அழுது முடிக்கையில் துக்கத்தில் கொஞ்சம் சர்க்கரைத் துகள்கள் விழுந்து கரைந்து போவதைப் போல் இருந்தது. ஜன்னலில் சுற்றியிருந்த அந்த பச்சை நிறக் கொடி என் தலையைத் தொட்டு என்னை சாந்தப்படுத்தியது. தனிமையில் இருப்பவனை பூமியிலிருந்து அத்தனை கைகளும் ஆறுதல் படுத்தும் என நம்புகிறேன். அதுதான் இப்போதும் நடக்கிறது. 

ஒரு வேளை அவள் வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டிருக்கலாம். அவளுக்கான காதலை என் காம இச்சையினால் தர முடியாது என்று கூட நினைத்திருக்கலாம். ஆம்; எப்படிப் பார்த்தாலும் நானும் ஆண்தானே. எனக்குள்ளும் அந்த அற்ப குணம் இருக்கத்தானே செய்யும். அழட்டும், அவளுக்கு இனி காதலை மட்டுமே தரக்கூடிய காதலர்கள் கிடைக்கப் போவதில்லை. அப்படிக் கிடைத்தால் எனக்கு பூரண சந்தோசம். அவளும் இப்படித்தான் எனக்காக வேண்டிக் கொண்டிருப்பாள். எங்கள் இருவருக்குள்ளும் படிந்திருக்கும் அந்த நினைவுகளையும், அதில் வழிந்தோடும் காதலையும் யாராலும் அழித்து விட முடியாது. 

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் என் வேலையைத் துவங்க வேண்டும். முகம் முழுவதுமாய் சிரித்து கொண்டு கேமராவைப் பார்க்கும் திருமண தம்பதியினரின் முகங்களைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு துள்ளல் இசை கிளம்புகிறது. ஆம், மனிதர்கள் முழுமையாக சிரிக்கும் போது பாருங்கள். உங்கள் மனம் அவர்களோடு சேர்ந்து சிரிக்கும். நான் மீண்டும் எடிட்டிங் வேலையைத் துவங்கினேன். வேலை படு மும்முரமாக இருந்தது. முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமென்பதால், கொஞ்சம் கடினமாக உழைப்பைப் போட்டால் பெரிதாக சம்பாதிக்கலாம். தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில், போனில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதில் “சாரி…” எனப் போட்டிருந்தது. நான் எனக்குள்ளாக சிரித்துக் கொண்டே இது கண்டிப்பாக அவளாக மட்டும் இருந்துவிடக் கூடாதென நினைத்துக் கொண்டேன். 

******

sibikannan555@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button