
மனிதர்கள்
மூடியைத் திறந்தான்
நீர் பாய்ந்தது அதற்குள்ளிருந்து
ஒரு விமானம் பறக்கத் தொடங்கியது
விமானம் பறக்கும் திசையை அறியாத விமானி
ஒரு தீவில் தரித்தான்
தீவு முழுக்க பிலால் வாடை
மூக்கைப் பொத்திய விமானி
பயணிகளை அழைத்து,
“விரைவாகுங்கள்,
அடுத்த விமானத்தில் நாடொன்றை அடைய” என்றுரைத்தான்
பறந்தது விமானம்
திசையற்றுப் பறந்து
ஒரு காட்டின் மரத்தில் தரித்தது
குரங்குகள் கூடின
பாய்ந்து பாய்ந்து சாகசம் புரிந்த குரங்குகளுக்கு
உள்ளே இருந்த மனிதர்களைப் பிடிக்கவில்லை
மனிதர்கள் வெளியில் பாய்ந்து
விமானமாகினர்.
***
பிரமை
வெட்டுக் காயத்தோடு
இரு சொற்கள் மேசையில் கிடந்தன
அவற்றை வசனமாக்கி
ஒரு கடுதாசியில்
எழுதிட முயற்சித்தேன்
இரத்தம் சொட்டச் சொட்ட
அச்சொற்கள் தன் கதைகளை
கூறி மாய்ந்தன
பின் மேசையிலிருந்த பூச்சாடிக்குள்
சுருண்ட சொற்கள் நாராகி
ஒரு சொல்லென தரையில் வீழ்ந்தது
விளையாடிக்கொண்டிருந்த
குழந்தையின் எண்ணத்தில்
பாம்பு என்ற ஒரு சொல்லாக
அச்சொல் நெளியத் தொடங்கியது
வெட்டுக் காயத்தோடு வந்த சொற்களுக்கு யாது நிகழ்திருக்கும்?
***
சோதனை
சுதந்திரம் என்ற பறவைகளை
உற்பத்தி செய்து வைத்திருந்தனர் குழந்தைகள்
விடிய விடிய
எழுதி எழுதி
விழித்து விழித்து
அப்பியாசக் கொப்பிகளில் அவற்றின் கூடுகளை அமைத்திருந்தனர்
சோதனையோடு சுதந்திரத்தைப் பறக்கவிட்டு மகிழும் குழந்தைகளுக்கு
இப்போது இரவு என வைத்துக்கொள்வோம்
அமைதியாகத் தூங்குகின்றனர்
எங்கெங்கோ பறக்கும் சுதந்திரம்
இன்றிரவு ஒரு கனவில் பேசக்கூடும்.
***