
உனக்கான அன்பின் பரிசுகளை
முழுவதுமாய் உன்னிடம்
கொடுத்துவிட்டேன் – இன்னும்
கைநீட்டிக் கொண்டிருக்கிறாய்.
தவறியாவது பெற்ற
அன்பின் துளிகளை
கொஞ்சமாவது
சிதறவிட்டால்தானே
மனம் செழித்துப் பூத்து
அழகான மலர்ச்செண்டுகளை
உனக்காக மறுபடி
முடைய முடியும்?
அன்பின் ஈரம் காணாத
மனம் வறட்சியாகி
துளி அன்புக்குப் பஞ்சமாகி
வானம்பார்த்த பூமியாக
ஈரம் வற்றிக் கிடக்கிறது…
***********
உன்னைத் தக்கவைத்துக்கொள்ள
எடுத்து வைக்கும் ஆதங்கங்களுக்கு
என்றுமே நீ
சமாதானங்கள் செய்ததில்லை.
பேசி ஓய்ந்து, தானாக சமாதானமாகி
அடுத்த வேலையைப் பார்க்க
நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நொடியும்
இருவருக்குமான பிணைப்பு
தளர்ந்துகொண்டே போகிறது
அமைதிக்கும் அலட்சியத்துக்கும்
இடையில் ஊசலாடிக்கொண்டிப்பது
ஒன்றை நூலிழைதான்.
********
உன்னுடன் மகிழ்ந்திருந்த
பொழுதுகளில்
மற்றவர்களின் அருகாமை
விட்டுத் தனித்திருந்தேன்.
நண்பர்களை விட்டு
தள்ளியிருந்தேன்.
வீட்டாரின் உணர்வுகளை
அலட்சியப்படுத்தியிருந்தேன்
என்னைப் பராமரிப்பதற்கான
மெனக்கெடல்களில்
அமிழ்ந்து போயிருந்தேன்.
இது போதுமென்ற களிப்பில்
எதுவும் செய்யாமல் இருந்தேன்.
நீ என்னைவிட்டுப் போகும்போது
எடுத்துச்சென்ற மகிழ்ச்சி
துக்கத்தின் பிடியில் விட்டது.
தோள்சாய நண்பர்களை
நாடிச் சென்றேன்.
வீட்டில் உள்ளோரின்
கரிசனையில் எனக்கான
மெனக்கெடல்களில்
பந்தங்களின் அர்த்தம் புரிந்து
சுற்றத்தோடு பயணப்பட்டேன்..
துக்கம் என் தனிமையை
விரட்டுகிறது
மனிதத்தின் கவனத்தைத் தேட
பாதை வகுக்கிறது.
என்னை நான் உணர துக்கம்
துருப்புச் சீட்டானது.
**********
மைபொதி விளக்கு
மைபூசிய திரியாகிய எளியோன்
தன்னை அழிப்பதால்
உண்டாகும் ஜோதி
வலியோனின் சுடராக
ஜொலிப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஒளிரும் ஒவ்வொன்றின் உள்ளேயும்
மைபொதிந்து மடியும்
திரியின் மகிமை
போற்றப்படுவதே இல்லை.
பெரும் சம்பவங்களின் வெளிச்சத்திற்கு
ஆதாரமாகும் திரி
விபூதியாக பூசப்படாமல்
வெற்றியெனும் ஜோதியால்
இருட்டடிக்கப்பட்டு இன்மையாகிறது.
விளக்கில் ஒளிரும் ஜோதியாகிய
வலியோன் போற்றப்படுவதும்
ஆதாரமான மைபொதி திரியாகிய
எளியோனால் வணங்கப்படாமல்
மடிந்து சாம்பலாவதும்
கசப்பான நிதர்சனமாகிறது.
*******