
பேருந்தில் உட்காரும் போது ஆறேழு கொலைகள் செய்த உணர்வு. ஒரே நாளில் இவ்வளவு பெரிய படுபாதகச் செயல்களை செய்தும் என்னால் இயல்பாக இருக்க முடிவது இன்னும் ஆச்சரியம். சம்பவங்களுக்குப் பின்னரும் என்னால் கோயம்பேடில் உலா வரும் நவநாகரீகப் பெண்களை ரசிக்க முடிகிறது, மானசீகமாக அவர்களிடம் உரையாட முடிகிறது. ஊரில் இருந்து கொண்டு வந்த போது சுமாராக இருந்த பை இப்போது நன்கு உப்பியிருந்தது. அதை காலுக்கு கீழே தள்ளிவிட்டு மீண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையில் நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த வேலையை விட்டு விலகிய பின் இரண்டு நாட்களுக்கு சென்னையில் ஒரு ராஜா போல சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டேன். என்னால் செய்யப்பட்ட அந்த கடைசி மணி நேர சம்பவங்கள் நிச்சயம் சகிக்க முடியாதவை என்பதால் இந்த மாநகரத்தை விட்டுப் போனால் போதும் என்றாகிவிட்டது.
இந்த வேலைக்கு எப்படி வந்தேன்? கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தேன். அந்த வயதில் வேலையில்லை என்பதே ஒரு கௌரவமாக இருந்தது. தெருவில் நண்பர்கள் நான்கு பேர் ஒரே கல்லூரியின் வெவ்வேறு துறையில் படித்தோம். ஒரே நேரத்தில் கல்லூரி செல்வது, ஒரே மாதிரியாக வீட்டுக்கு வருவது என்பதை மூன்று வருடம் பிசிறில்லாமல் செய்து வந்தோம். தினமும் வகுப்பறைக்குச் செல்வோமா என்றால் அதை உறுதியாக கூற முடியாது. அதிலும் வெள்ளிக்கிழமை காலை ஏதாவது ஒரு தியேட்டரில்தான் எங்களுக்கு விடியும். படம் முடித்த பின்பு ஆளுக்கு ஒரு பீர். படம் விட்டு வெளியே வரும் போது ஜும்மா தொழுகை முடித்தவர்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருப்பார்கள். அப்போதுதான் நானும் ஒரு இஸ்லாமியன் என்ற நினைப்பு வரும்.
வேலையில்லா நாட்கள் நன்றாகவே இருந்தது. காலையில் எழுந்து போய் நண்பனின் பெட்டிக்கடையில் நிற்போம். அது வீட்டோடு சேர்ந்த கடை. பெயருக்குத்தான் பெட்டிக்கடை. அங்கு நான்கு பாட்டில்கள் பொலிவிழந்து இருக்கும். கடைசியாக நிரப்பப்பட்ட காராசேவின் வயது மூன்று கூட இருக்கும். அங்கு போகும் வரும் பெண்களைப் பார்த்து சிரிப்பது எங்கள் பிரதான பொழுதுபோக்கு. அந்த கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே இஸ்லாமியன் என்பதால் செல்லமாக “பாய்” என விளிப்பார்கள்.
பேசிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டும் எங்கள் கூட்டம் எப்போது வேண்டுமானாலும் எல்லை மீறுவார்கள். அது ஒருவகையான விளையாட்டு. தெருவில் எங்கள் வயதையொட்டிய பெண்கள் நடந்து செல்லும் போது அவர்கள் முன்னால் யாருடைய கைலி பறிபோகும் எனச் சொல்ல முடியாது. திடீரென உருவி விட்டு சப்தமாக சிரித்துக் கொள்வோம். ஆகையால், கைலி என்பது ஒரு மேலாடையாகவும் அதற்குள் பெரும்பாலும் பெரிய கால் சட்டையை போட்டுக் கொண்டு நிற்போம்.
ஒருமுறை என் வீட்டுக்கு அருகில் இருந்த பெண்மணி வரும் போது எங்களின் ஒருவனின் கைலி உருவப்பட்டது. அது ஏற்படுத்தப்போகும் விபரீதம் புரியாமல் எப்போதும் போல சிரித்துக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றோம். மதியம் வீட்டுக்குச் சென்றபோது அசாதாரண அமைதி நிலவியது. என்றுமில்லாமல் என் துணிகள் அனைத்தும் சீராக மடிக்கப்பட்டு சலவை செய்து வைத்திருந்தார்கள். அதன் அருகே பெரிய பேக். அம்மாவிடம் பேசினேன். சுற்றி வளைத்துப் பேசும் அம்மா அன்று தெளிவாய் கத்தரித்து பேசினார்.
“மெட்ராஸ்ல ஒரு வேலை இருக்காம். இன்னிக்கு நைட்டே போகணும். எல்லா நம்ம சித்தப்பா வழி சொந்தக்காரங்க!”
பதிலுக்கு பேசாமல் படுத்துவிட்டேன். அஸர் தொழுகைக்கு பாங்கு சொல்லும்போதுதான் எழுந்தேன். தலைமாட்டில் சென்னை செல்வதற்கான டிக்கெட் இருந்தது. அது பறந்துவிடாமல் இருக்க அதன் மீது டீ கோப்பை. எல்லாம் முன்பே திட்டமிட்டது போல இருந்தாலும் ஒரு நான்கு மணிநேரத்திற்குள் எல்லாமே மாறியிருந்தது. சென்னை எனக்கொன்றும் புதிதல்ல. சிலமுறை சென்றிருக்கிறேன். ஒரு பயணியாக. அங்கு பஞ்சம் பிழைக்கப் போவது இதுவே முதல்முறை.
சென்னைக்கு பஸ் ஏறும் போது இரவு எட்டு. நண்பர்களிடம் சொல்ல மனமில்லை. ஊருக்குச் சென்று பேசிக்கொள்ளலாம் என பேருந்தில் உட்கார்ந்தேன். துருப்பிடித்த பேருந்து எப்படி சென்னை வரை போகும் என இருந்தது. பேருந்து போல நடத்துநரும் பழைய ஆளாக இருந்தார். பேருந்தை இயக்கும் போது எழுந்த சப்தம் என் வாழ்க்கை மீது வீசப்பட்ட கலக்கம் போல இருந்தது. கவலை அழுத்தியது. அது வாழ்க்கை பற்றியதல்ல. இப்போது எப்படி தூங்கப்போகிறோம் என்று. எப்போது அசந்தேன் என தெரியவில்லை. எழுந்து பார்க்கும் போது பேருந்து ஒரு டீக்கடையில் நின்றது. ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்தேன். வித்தியாசமான தமிழில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அருகே இருப்பதை அறிந்தேன். மீண்டும் தூங்கினேன். என் கணிப்பு சென்னைக்கு வரும் போது வெயில் உச்சியில் இருக்கும் என்பதே. “கோயம்பேடு இறங்கு” என நடத்துநர் என் தோள்களைப் பிடித்து உலுக்கிய போது அதிகாலை மணி நான்கு. எட்டு மணி நேரத்தில் எப்படி வந்து சேர்ந்தார்கள் என அதிசயமாக இருந்தது.
கையில் ஒரு மொபைல் நம்பர் மட்டுமே இருந்தது. அந்த நம்பரை எண்ணிப்பார்க்க ஆசைப்பட்டேன். பயந்தது போல ஒன்பது நம்பர் இல்லை. அந்த எண்ணின் அதிபரிடம்தான் நான் வேலை செய்யப்போகிறேன். அது ஒரு சாப்ட்வேர் கம்பெனி என்றார்கள். அங்கு வேலை பார்க்கும் சாப்ட்வேர் எஞ்சினியர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு உதவ வேண்டும். அதுதவிர அலுவலகத்தில் அடிப்படைக் கணக்கு வழக்குகளை கவனிக்க வேண்டும். இதுதவிர அலுவலகத்திற்கு தேவையான மாதாந்திரப் பணிகள், பராமரிப்பு ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.
ஏற்கனவே பார்த்த கோயம்பேடு பேருந்து நிலையம் வேறு திசையில் நகர்த்தி வைக்கப்பட்டிருந்தது போலத் தோன்றியது. தூங்கிக் கொண்டிருப்பவரை மொபைலில் எழுப்ப வேண்டாம் என நினைத்திருந்தேன். தவிர அந்த தூரத்து உறவை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. அவரின் வயது பற்றிய அடிப்படை தகவல்கள் கூட இல்லை. என்னிடம் சொல்லப்பட்ட ஒரே தகவல், “அவர் நல்ல மனிதர்” என்பது மட்டுமே!
மணி ஐந்தைத் தொட ஒரு டீ சாப்பிட்டேன். நகரப் பேருந்துகள் வரும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். காலியான பேருந்தில் ஆட்களை அடைத்து போட்டுச் சென்றார்கள். யார் யாரோடும் பேசிக் கொள்ளவில்லை. லட்சியமிக்க தீவிரவாதிகள் போல எல்லோரும் ஒவ்வொரு திசை நோக்கி வெறித்துக் கொண்டிருந்தார்கள்.
மணி5.20!
அந்த நல்லவருக்கு அழைத்தேன். சாப்ட்வேர் துறையைச் சார்ந்தவர். இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு தூக்கிக் கொண்டிருப்பார். எங்கே நம் அழைப்பை எடுக்கப் போகிறார் என்ற அவநம்பிக்கையில் அவருக்கு அழைத்தேன். முழுமையாக இரண்டு நொடி ஆகியிருக்காது. யார் என்னவென்று விசாரிக்காமல், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். அந்த குறுகிய நேரத்தில் ஒரு யோசனை ஓடியது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் இவருக்கு அழைக்கவே மாட்டார்களா? அப்படி அழைத்தால் தடுமாற மாட்டார்களா? என யோசித்தபடி பதில் ஸலாம் சொன்னேன். என்னை அறிமுகப்படுத்தியதும், “ஒ..நீயா?” என ஒருமைக்குத் தாவினார். அதில் மெல்லிய கேலி, கிண்டல் இருப்பதாகத் தோன்றியது. ‘மரியாதையா பேசு’ என்பதோடு ஊர் கெட்டவார்த்தை ஒன்றை உதிர்த்துவிட்டு இப்படியே ஊருக்குப் போய்விடலாமா என்று கூட யோசனை வந்தது. சொந்தக்காரன் எனும் உரிமை கூட அந்த ஒருமைக்கு காரணமாக இருக்கலாம் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.
பஸ் நம்பரைச் சொல்லிவிட்டு எங்கே இறங்க வேண்டும் என்பதைச் சொன்னார். தெளிவாய் கேட்டுக்கொண்டேன். அவரின் குரலில் நார் சிக்கியது போல பிசிறடித்தது. இப்படிப்பட்ட குரலுடையவர்கள் நல்லவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது எண்ணம். அவர் சொன்ன முகவரி சொன்ன பல வார்த்தைகளில் மயிலாப்பூர், மந்தைவெளி, பசு மாடு கட்டியிருக்கும், அபார்ட்மெண்ட்க்கு எதிரே, மளிகை கடை எனும் அதிமுக்கிய அடையாளங்களை மட்டும் மனதில் பதிய வைத்துக்கொண்டு பஸ் ஏறினேன். வாழ்க்கையில் வெறுப்பும் வெறுமையும் தோளில் மாட்டியிருக்கும் பை போல அழுத்தியது. இந்நேரம் ஊரில் எனக்கு நள்ளிரவு. அதிகாலை நேரமே எனக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. பேருந்தில் தூங்கியிருந்தாலும் கால் நீட்டி படுக்கையில் உருள்வது போல ஆகாதே! பேருந்து ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். வீடுகளைக் கவனித்தேன். எல்லோரும் சுகமாகத் தூங்கிக்கொண்டு இருக்கும் காட்சி ஓடியது. அழுகை வந்தது.
இறங்கி நடந்தேன். அவர் சொன்ன அடையாளங்கள் ஒவ்வொன்றாகத் தென்படுவது சிறிது மகிழ்வைக் கொடுத்தது. அது ஒரு குறிப்பிட்ட மக்கள் வசிக்கும் பகுதி. அதில் ஒரு இஸ்லாமியர் அலுவலகம் நடத்துவது வியப்பாக இருந்தது. அலுவலகத்தை நெருங்கிவிட்டோம் எனத் தோன்றியது. பெரிதாகத் தேட விடாமல் வெளியே ஒரு சிறிய பலகையில் அலுவலகத்தின் பெயர் இருந்தது. அது அப்பட்டமான வீடு. அழைப்பு மணியை அழுத்தினேன். அது வேலை செய்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மீண்டும் அழுத்தினேன். வெள்ளை கைலியை நெஞ்சு வரை ஏற்றிக் கட்டியிருந்த நடுத்தர வயது மனிதர் கதவுகளைத் திறந்து விட்டார். அந்த மனிதரை நேரடியாகப் பார்ப்பதை ஏனோ தவிர்த்தேன். ஆனால், அவர் என்னை முகத்தை ஊடுருவி அதனுள் இருந்த நன்மை தீமைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். சொந்தக்காரன் எனும் ஒரே பரிசீலனை அடிப்படையில்தான் போனில் கூட பேசாமல் இந்த வேலை கிடைத்திருக்கிறது என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன்.
அவர் என்னை அலுவலகத்தின் உள்ளே அழைத்து சென்றார். நீண்ட தாடி, அதில் சரிக்கு சமம் நரைத்திருந்தது. நெடிய தொப்பை, பருத்த உடல். அவரால் கால் தூக்கி நடக்க முடியவில்லை. அந்த டைல்ஸ் தரையில் தேய்த்துக் கொண்டே நடந்தார். அவர் அணிந்திருந்த முண்டா பனியன் சலவையாக இருந்தது. CEO என்ற அறையில் அழைத்துச் சென்று என்னைப் பற்றி விசாரிக்கும் போதுதான் இவர்தான் நிறுவனர் எனத் தெரிந்தது. அதுவும் ஒரு வகையான நேர்முகத்தேர்வு போலதான் இருந்தது. நான் சந்தித்த முதல் நேர்முகத்தேர்வு கைலி, முண்டா பனியனோடு அமையும் என எதிர்பார்க்கவேயில்லை. அவ்வப்போது தன் நீண்ட தாடியை வளர்ப்பு பூனை போல தடவிக்கொண்டார். CEO எனும் அடையாளம் அவரிடம் தென்படவேயில்லை. இவருக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யத் தெரியுமா என்ற கேள்வி கூட என்னுள் வந்து போனது.
நிறையப் பேசினார். அது கேள்விகளாக இருந்தாலும் என்னிடம் பதிலை அவர் எதிர்பார்க்கவேயில்லை. வெறும் தலையசைப்பு மட்டும் என்னிடம் இருந்தது. மெல்லிய ஏசி குளிர் கொஞ்சம் தூக்கத்தைக் கொடுத்தது. தூங்க அசரும் போதுதான் சொன்னார். “இது வளர்ந்து வரும் சாப்ட்வேர் கம்பெனி. நீ நம்ம சொந்தர்காரன் என்பதால் என்னிடம் சம்பளம் தவிர வேறு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கக் கூடாது. ஒழுக்கம் வேண்டும். ஐந்து வேளை தொழுகை அவசியம். இங்கு வேலை பார்க்கும் எல்லோரும் நம் ஆட்கள்தான்!” கடைசியாக சொன்ன ஒன்றுதான் துயரமாக இருந்தது. “அலுவலகத்தில் வேலை நேரம் தவிர்த்து வீட்டில் வேலை ஏதாவது சொன்னால் அதையும் செய்ய வேண்டும்!” என சொல்லி மேலே கையைக் காட்டினார். அவர் வீடு மேல் மாடியில் இருப்பதை அறிந்தேன். எந்த தேர்வும் இல்லாமல் வேலையில் என்னை எடுத்ததற்கு காரணம் புரிந்தது.
அலுவலகத்தில் ஒரு அறையைக் காட்டினார். அதில் பழுதடைந்த கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் கொட்டிக்கிடந்தது. அழுக்கடைந்த அந்த அறையைத் திறந்ததும் இருமல் தலைக்கு ஏறியது. சுத்தம் செய்துவிட்டு இங்கேயே தங்கிகொள்ளச் சொன்னார். ஒரு இருபது கம்ப்யூட்டர்கள் இருந்த அறையை காட்டினார். வீட்டை அலுவலகமாக மாற்றியிருக்கிறார்கள்.
இரண்டாவது முறையாக சொல்லாமல் கிளம்பிவிடுவோமா எனத் தோன்றியது. கொண்டு வந்த பையை ஒரு மூலையில் வைத்துவிட்டு அந்த அறையை சுத்தம் செய்யத் தொடங்கினேன். பயணத்தில் நேர்ந்த அசதி, பெருக்கும் போது எழுந்த தூசி மூக்கு துவாரத்துக்குள் சுதந்திரமாய் புகுந்து கொண்டது. சப்தம் போட்டு கெட்டவார்த்தையில் திட்ட வேண்டும் போல இருந்தது. அந்த அறையை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது என்ற உண்மை தவிர்த்து என் வாழ்நாளில் துடைப்பம் தூக்கியது அன்று தான். வெகுநேரம் பெருக்கியதில் இடுப்பு வலித்தது. அம்மாக்களின் இடுப்பு வலிக்கு இருக்கும் பாரம்பரியம் யாருமே சொல்லாமல் புரிந்தது. அந்த அறையின் குறிப்பிட்ட இடத்தை மட்டும் கூட்டி சுத்தம் செய்தேன். மீதி இருந்த பழைய பொருட்களை ஓரிடத்தில் குவித்து வைத்தேன். அங்கிருந்த பெரிய போர்வை கொண்டு அந்த எலக்ட்ரானிக் குப்பைகளை போர்த்தி மூடினேன். CEO வந்து பார்த்தார். அவர் முகத்தில் அதிருப்தி ரேகை தாடி வழியாக ஊடுருவி வெளியே விழுந்தது. என்னை பார்த்தார். “குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்!” என்றார். எந்திரத்தனமான அவரது பேச்சைக் கேட்க எனக்கு வெறுப்பாக இருந்தது. அவர் தாடியைப் பிடித்து சுவரில் மோத வேண்டும் போல இருந்தது. இனிமேல் அவர் பேசும்போது முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு நம் அதிருப்தியை காட்டியே ஆகவேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன்.
அதிநவீன வசதி கொண்ட பாத்ரூம் ஆசுவாசமாக இருந்தது. அலுப்பு தீர குளித்து விட்டு தலைதுவட்டிக் கொண்டிருக்கும் போது மொபைல் அடித்தது, அவர்தான், “குளிச்சிட்டியா? மேல சாப்பிட வா!” குளித்து முடித்ததை எப்படி அறிந்து கொண்டார் என்பது ஆச்சர்யமாக இருந்தது. சுற்றிப் பார்த்தேன், கேமரா ஏதுமில்லை.
இருப்பதிலேயே நல்ல உடையை அணிந்து கொண்டு படியேறி மேலே சென்றேன். வெகு குறுகிய படிக்கட்டுகள். வாசலில் நின்றேன். இவரை எப்படி அழைப்பது? பொதுவாக நெருங்கிய உறவுகளிடம் நெருக்கம் இல்லாத எனக்கு, தூரத்து உறவான இவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. எனக்கு மாமா உறவுமுறை என்று வீட்டில் சொன்னார்கள். அதற்காக மாமு என்றா அழைக்க முடியும்? ‘ஸார்’ என்று அழைத்தேன். வாழ்க்கையில் “ஸார்” பழக ஆரம்பித்தது அங்குதான்.
யாராவது உள்ளே அழைத்து ஊரில் இருக்கும் குடும்பத்தை விசாரிப்பார்கள் என நின்று கொண்டிருந்தேன். உள்ளே கொலுசு சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவர் வந்தார். என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். இன்னும் பார்க்க என்ன இருக்கிறது என நினைத்துக் கொண்டேன். நீண்ட யோசனைக்குப் பிறகு என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்தார். அவரே ஒரு கப்பில் டீ கொடுத்து விட்டு உள்ளே போனார். ஏதோ சாப்பிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு டீ போதவில்லை என்றாலும், வந்த இடத்தில் சூழல் மறந்து அதை அருந்திக் கொண்டிருந்தேன். கீழ் தளத்தின் இருந்த இரண்டாயிரம் சதுர அடி அப்படியே மேல் தளத்தில் எழுப்பப்பட்டிருந்தது. விசாலமான அறைகளில் இருந்து ஒவ்வொருவராக வெளிப்பட்டர்கள். வீட்டில் இவர், மனைவி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதுவும் இரட்டையர்கள். தவிர அம்மா ஓய்வு பெற்ற ஆசிரியை. அப்பா குடிநீர் வடிகால் துறையில் உச்சபட்ச பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் இன்னும் உயிரோடு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. சற்று முன்புதான் பேட்மிண்ட்டன் ஆடிவிட்டு வீட்டுக்குள் வந்தார். என்னை ஒரு புழு போல பார்த்த பார்வை அவரை பின்னாளில் பழி வாங்கிய பின்புதான் அடங்கியது.
அவரைச் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குடும்பம் என்னை ஒரு வேலைக்காரன் போலதான் நடத்தியது. மருந்துக்கு கூட குடும்பத்தை பற்றி விசாரிக்கவில்லை. ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த வர்க்க பேதம் எனும் வார்த்தையின் அர்த்தம் அன்றுதான் புரிந்தது.
நாட்கள் ஓடியது. சாப்ட்வேர் கம்பெனியின் வேலை என்பது வெளியுலகுக்குச் சொல்லப்பட்டாலும் அந்த வீட்டில் இருந்த பணிகளைத்தான் செய்ய வைக்கப்பட்டேன். மென்பொருள் வேலைக்கு வந்த எஞ்சினியர்கள் அனைவரும் வேலூரைச் சேர்ந்த உருது முஸ்லீம்களாக இருந்தார்கள். எல்லோருக்கும் என்னை விட இரண்டு மூன்று வயதுதான் கூடுதலாக இருந்தது. வேலை தவிர ஐந்து நேர தொழுகையாளிகளாக இருந்தார்கள். உணவு இடைவெளியில் உருது பயான் கேட்டுக்கொண்டிருந்தார்கள். வெள்ளிக்கிழமை தோறும் சினிமாவைத் தவிர வேறு எதுவும் கேள்விப்படாத என்னை ஜும்மா தொழுகைக்கு பகல் பண்ணிரெண்டு மணிக்கு பள்ளிவாசலில் அமர்த்தினார்கள்.
என்னை நானே கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துதான் அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு ஒரு வாரம் சென்றேன். என்றாலும் நாளாக தூக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. டிசம்பர் மாத குளிர் என்னை வாட்டி வதைத்தது. என்றாலும் ஐந்து மணிக்கு என் அறைக்கதவை தட்டும் அவரது கடமையில் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை. இரவு தூங்கும் போதெல்லாம் பதட்டம் என்னை ஆட்கொண்டுவிடும்.
ஒருநாள் இரவில் ஒரு தீர்மானத்தோடு தூங்கினேன். நாளை பஜ்ர் தொழுகைக்கு செல்வதில்லை என்று. வழக்கம் போல ஐந்து மணிக்கு கதவைத் தட்டினார். மெல்ல எழுந்து சென்று கதவை பாதி திறந்தேன். “சீக்கிரம் வா, ஏற்கனவே லேட்டு” என்றவரிடம், “எனக்கு காய்ச்சல், தொழுகைக்கு வர முடியாது” என்றேன். அவர் முகத்தில் ஏகமாக ஏமாற்றம். கொஞ்சம் பதற்றம் ஏறியது போலத் தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல், “இதை இப்ப சொல்ற, முன்னாடியே சொல்லிருக்கலாமே?” என்றார். உடம்பு சரியில்லை என்றாலும் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் இவரது மனநிலை எரிச்சலை ஏற்படுத்தியது. “காய்ச்சல் வரும் போதுதான் சொல்ல முடியும்!” எனச் சொல்லிவிட்டு கோபமாக கதவைச் சாத்திவிட்டு படுக்கச் சென்றேன். வேலையில் சேர்ந்த இருபது நாட்களில் என் முதல் எதிர்ப்பு இது. நீண்டநாள் செய்ய வேண்டிய ஒரு அரும்பணியை திருப்திகரமாகச் செய்து முடித்தமையால் அதன்பின் என்னால் தூங்க முடியவில்லை.
அலுவலகத்தில் வேலை அன்று சரியாக இருந்தது. அன்று மாலை வரை என்னிடம் அவர் சரியாகப் பேசவில்லை. எல்லோரும் வேலை முடிந்து சென்றதும் மேலே சென்று மொபைல் சார்ஜர் வாங்கி வரச் சொன்னார். அதுவும் வேறுபக்கம் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு சொன்னார். மேலே சென்றேன். இதுநாள்வரை முகத்தையே பார்த்திடாத இரட்டையர்களில் ஒருத்தியின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தேன். இருவரும் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவிகள். அழகாகவே இருந்தார்கள். சார்ஜரை அவரிடம் கொடுத்தேன். என்னை நேருக்கு நேர் பார்த்தார். வழக்கம் போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். என்னைத் தவிர இந்த அடிமை வேலைக்கு யார் வருவார் என்பது என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்.
“நீ ஒரு வேலை செய்யணுமே!” தாடியைத் தடவினார். ஒரு வேலையை என்னை செய்யச் சொல்லும் போது அவரிடம் ஒரு பிரத்யோக மென்சிரிப்பு ஒன்று வெளிப்படும். அந்த சிரிப்பைத் தவழ விட்டார். “ரெண்டு பாப்பாவும் குரான் கிளாஸ் போகுதுங்க. நீதான் பாதுகாப்பா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும்” அவர் சொன்ன குரான் கிளாஸ் இரண்டு தெரு தள்ளியிரும் ஒரு மதரஸா. இதற்கு மேல் மட்டமான வேலை ஏதுமில்லை என்றாலும் ஒரு யோசனையில் சரி என்றேன். ஒருமணி நேரம் வெளியுலகைப் பார்க்கலாம். தவிர பெண்கள் கல்லூரி.. பெண்கள் வருவதும் போவதுமாய் இருப்பார்கள். ரம்மியமாக இருக்கும். சினிமாவில் பார்த்த பெண்கள் போல நவநாகரீக ஆடையில் ஆற அமர ரசிக்கலாம்.
இரட்டையர்கள் முன் செல்ல நான் பின்னால் நடந்து செல்வேன். அந்த இரட்டையர்களை என்றுமே என்னால் இனம் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவர்களது உருவ ஒற்றுமை அப்பட்டமாக ஒரே மாதிரியாய் இருக்கும். அவர்களைப் பின்தொடரும் தூரம் குறைந்தால் அதில் ஒருத்தி என்னை கடுமையாக முறைத்து பார்ப்பாள். “தூரத்தை தக்கவைத்து கொள். அருகில் வராதே!” என்பதை கான்வெண்ட் ஆங்கிலத்தில் சொல்வாள். எனக்கு அவமானம் பிடுங்கித் தின்னும். நம்மை மனிதனாக கூட மதிக்காத இவளை எப்படிப் பழிவாங்குவது என யோசித்துக் கொண்டு வருவேன். இருவரில் ஒருத்திதான் திமிர் பிடித்தவள். இன்னொருத்தி சிலநேரம் என்னைப் பார்த்து மெலிதாய் சிரிப்பாள். அவளது செருப்பிற்கு மட்டும் ஒரு அடையாளம் போட்டு வைத்திருந்தேன். இருவரையும் அமெரிக்காவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே இவரின் குறிக்கோளாக இருந்தது.
CEO வின் தந்தை ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தவர். என்னிடம் மட்டும் கடுமையாக நடந்து கொள்வார். நேரம் கெட்ட நேரத்தில் வேலை வாங்குவார். தினமும் முகத்திற்கு சவரம் செய்துவிட்டு திமிராக ‘தி இந்து’வை புரட்டுவார். அந்த நாளிதழில் முகத்தைச் சுற்றி சரமாரியாக குத்த வேண்டும் போல இருக்கும். அவரது மாதாந்திர மாத்திரைகள் வாங்க ராயப்பேட்டை செல்ல வேண்டும். அதற்கான பேருந்து கட்டணத்தை சரியாக கொடுப்பார். ஒருமுறை மீதித்தொகை கொடுக்க மறந்துவிட்டேன். அதற்காக என் நேர்மை மீது சந்தேகப்பட்ட அவருக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டும் என மனம் துடித்தது. வாங்கி வரும் மாத்திரையை மாற்றி கொடுத்து விடலாமா என்ற யோசனை கூட வரும்.
என்னை அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். மிகுந்த கட்டுப்பாடான சூழலில் வளர்ந்த அந்த வேலூர் இளைஞர்கள் என் தெருவில், கல்லூரியில் நடந்த சம்பவங்களை விளக்கும் போது உற்சாகமாக கேட்பார்கள். கம்ப்யூட்டர் முன் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கு என் பேச்சு வேறுவிதமான அனுபவத்தைக் கொடுத்தது. வாயில் புழங்கும் சரளமான கெட்டவார்த்தையைக் கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அவர்களிடம் பெரும் மாற்றம் தெரிந்ததை உறவினர் கவனிக்கத் தொடங்கினார்.
இவரின் அம்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை என்று சொல்லியிருக்கேன் அல்லவா? இவரின் குடைச்சல் வேறுவிதமாக இருந்தது. இவரின் அளவு ஜாக்கெட் கொடுத்து தைத்து வாங்குவது, சேலைக்கு முந்தியடித்து வாங்குவது, மார்க்கெட்டில் வந்திருக்கும் புது மேக்கப் சாதனத்தை முயற்சி செய்து பார்ப்பது, அதையும் என்னை விட்டே வாங்கச் சொல்வது என அவரின் உலகம் வேறு மாதிரியாக இருந்தது. ஒருமுறை அந்த புதுவித மேக்கப் போட்டுக்கொண்டு சுருங்கிய முகத்தில் விகாரமாக வந்து நிற்பதை பார்த்துச் சிரித்துவிட்டேன். அதை பெரும் அவமானமாக கருதி வேலை வாங்குவதை அதிகப்படுத்திக் கொண்டார். மொத்தத்தில் வீட்டு வேலைக்காரன் போல ஆனேன். முதலாளியின் மனைவி மட்டும் சாந்தமான ஆளாக காட்சியளித்தார்.
அம்மா போனில் பேசுவார். ‘மாமா உன்னை அன்பாக பார்த்துக் கொள்கிறாரா?’ என கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். “ம்” என்பதோடு முடித்துக் கொள்வேன். அம்மாவிடம் இங்கு நடப்பதை உடைத்துப் பேசுவது எனக்கு அவமானமாக இருக்கும் என நினைத்தேன். வேலைக்குப் போகிறான் என்ற அவர்களின் மகிழ்ச்சி ஒரு ஆறு மாதத்திற்கு நிலைக்கட்டும் என அமைதியாக இருந்துவிடுவேன்.
ஒரு சாப்ட்வேர் கம்பெனி முதலாளி ஒரு இசுலாமிய இயக்கத்தின் மீது தீவிர பற்றில் இருந்தார். அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகத்திலும் இருந்தார். அதன் காரணமாக அது தொடர்பான சில்லறை வேலையும் என் தலையில் கட்டப்பட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு திறக்க உணவுப்பண்டம் வாங்குவது, தராவிஹ் தொழுகைக்கு சிறப்பு பயான் நடக்கும். இசுலாமிய நட்சத்திரப் பேச்சாளர் யாரவது பேசுவார்கள். அவர்கள் வருகையைத் தெரிவிக்க நோட்டிஸ் அடித்து அருகில் இருக்கும் மற்ற பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என ரமலான் மாதம் முழுக்கத் தூங்க நேரமில்லாமல் உழைத்தேன். வாழ்க்கையில் நோன்பு கடைபிடித்ததும் அங்குதான்.
ஆறுமாதம் கடந்தது. வீட்டில் இருக்கும் மனிதர்களையும் அவர்கள் கொடுக்கும் வேலை மீதும் ஒருவகையான சகிப்புத்தன்மை பரவியது. சம்பளம் சரியான தேதியில் கொடுத்த வகையில் மனம் வேலையில் லயிக்க தொடங்கியது. ஒருநாள் வெள்ளிக்கிழமை. எல்லோரும் தொழுதுவிட்டு அலுவலகத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். CEO முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் ஒருவித வெறுமையுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் வாழ்க்கை குறித்தும் வேலை குறித்தும் நொந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சொன்னேன், எல்லோரும் இரவு சினிமாவிற்கு போவோம் என்று. இருந்த பதினைந்து பேரில் பத்து பேர் ஒப்புக்கொண்டார்கள். இரண்டு பேர் ஒதுங்கிக் கொள்ள, மூன்று பேர் யோசிப்பதாகச் சொன்னார்கள். ‘ஒரு சினிமா பார்ப்பதால் அல்லாஹ் கோபிக்க மாட்டான். இஷா இரவு தொழுகை முடித்துவிட்டு செல்லலாம்’ என அவர்கள் ரீதியில் பேசினேன். மொத்தம் பதிமூன்று பேர் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. இந்த விஷயம் CEO-விற்குத் தெரியக்கூடாது என முடிவு செய்தோம். அவர்களை வழிக்கு கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. அல்லது இப்படி ஒரு சந்தர்ப்பததிற்குத்தான் அவர்கள் காத்திருந்தது போலத் தோன்றியது.
சினிமாவிற்கு வர சம்மதித்த பெரும்பாலும் வேலூர் இளைஞர்களுக்கு அது வாழ்வில் பார்க்கப்போகும் முதல் சினிமா. அன்று வேலை முடியும் வரை அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் வழிக்கு கொண்டு வந்த மகிழ்வில் இருந்த என்னை ஒரு புரட்சியின் தூதுவன் போல பார்த்தார்கள். உறவினரிடம் இரவு வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டேன். இரவு எனக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். வாழ்க்கையில் நிகழப்போகும் முதல் அற்புதத்திற்கு காத்திருந்தார்கள். சத்யம் திரையரங்கில் நடு சீட்டில் அமர்ந்தோம். என் அருகில் உட்கார அவர்களுக்குள் ஒரு மெல்லிய போட்டி நடந்ததை உள்ளுக்குள் ரசித்தேன். அந்த கூட்டத்திற்கு நான்தான் தலைவன்.
அது ஒரு நல்ல நகைச்சுவைப் படம். நண்பர்களுக்குள் நிகழும் கலாட்டாவை கதையாகப் பின்னியிருந்தார்கள். அதில் வரும் நண்பர்களைப் பார்த்ததும் எனக்கு ஊர் ஞாபகம் வந்தது. விரைவில் ஊருக்குப் போக வேண்டும். குறைந்தபட்ச ஒரு மூன்று மாதமாவது அவர்களுடன் இருந்து பொழுதைக் கழிக்க வேண்டும் போல இருந்தது.
இவர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது. குழந்தைகள் போல சிரித்துக் கொண்டே பார்த்தார்கள். நிறைய பேரை அன்றுதான் சிரித்தே பார்த்தேன். இளம் தாடியைத் தாண்டி சிரிப்பு வெளியே வந்து விழுந்ததை நானும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்தோம். மீண்டும் இதுபோன்ற ஒரு படத்திற்கு வர வேண்டும் என பேசிக்கொண்டார்கள். இது ஹராம் என்று ஒரு தரப்பு பேசிக்கொண்டது. ஒரு பெரிய சாகசத்தைச் செய்து முடித்த திருப்தியில் நான் அவர்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருந்தேன்.
ஒருவாரம் நகர்ந்தது. ஒருநாள் உறவினர் அழைத்தார். கண்களில் கோபம் கொப்பளிக்க எனக்காகக் காத்திருந்தார். விஷயம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பதில் தாக்குதலுக்கு தயாராக இருந்தேன். “நீ செஞ்சது ஒரு ஷைத்தான் வேலை. உன்னப் போய் நம்பி வேலைக்கு வச்சது என்னோட தப்பு. எவ்வளவு தைரியம் இருந்தா பசங்களை சினிமாவுக்கு கூட்டிட்டு போயிருப்ப? இன்னிக்கு சினிமாவுக்கு கூட்டிட்டு போவ. நாளைக்கு சாராயம் குடிக்க கூட்டிட்டு போவ. அந்த குடும்பத்துல எல்லாரும் என்னய நம்பித்தான் ஒப்படைச்சிட்டுப் போயிருக்காங்க!” என இன்னும் நிறையப் பேசினார். நான் மனதளவில் என் உடமைகளை மூட்டை கட்டிக்கொண்டிருந்தேன்.
பேசி முடித்து அவரே சமாதானமானது போலத் தெரிந்தது. என் தோள்களைத் தொட்டு அறிவுரைக்குத் தயாராக இருந்தார். நான் எழுந்து நின்றேன். “நான் ஊருக்குப் போறேன். வேலைக்கு நீங்க வேற ஆள் பாத்துக்கங்க!” அமைதியாகப் பேசிய இந்த வார்த்தையை அவர் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் கோபத்தில் கத்தத் தொடங்கினார். இம்முறை சொந்தக்காரனாகப் பேசினார். எனக்கு கோபம் இன்னும் கொஞ்சம் ஏறியது. முடிவில் மாற்றமில்லை என்பதை உறுதியாகச் சொன்னேன். மெல்லிய குரலில் அவர், “புது ஆள் வர்ற வரைக்கும் ஒருவாரம் மட்டும் இரு!”
அந்த ஒருவாரம் யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு சென்றதை யார் சொன்னது என்ற ஆராய்ச்சிக்குள் மனம் இறங்குவில்லை. இங்கிருந்து போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என அமைதியாக இருந்து கொண்டேன். இவர்கள் பழையபடி பயான், குரான் என்று பழைய பாதைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
வீட்டில் இருந்தவர்களின் நடவடிக்கை இன்னும் கடுமையாகத் தொடங்கியது. குறிப்பாய் ப்ரிட்ஜில் எடுத்து வைத்த பழைய பதார்த்தம் எனக்கு உணவாக வைக்கப்பட்டது. எல்லாம் மீந்து போனது. சோறில் கை வைத்தால் குளிர். எங்கிருந்தோ வந்த மிருகம் தலைக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது. போதாக்குறைக்கு CEO-வின் அத்தா மிக இழிவாக நடந்து கொண்டார். “நீ இங்கிருந்து போனா ஊரில் பிச்சை எடுக்குற சூழல் கூட வரலாம்!” என்று அவர் இரட்டை பேத்திகளுக்கு முன்பு பேசினார். அதில் ஒருத்தி என்னைப் பார்த்து கிண்டலாகச் சிரித்து வைத்தாள். வெறி உச்சிக்கு ஏறியது. இவர்களைப் பெரிதாக ஏதும் செய்ய முடியாது. நம் சக்திக்கு உட்பட்டுச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
அன்று கடைசி நாள். CEO-வின் அம்மா அதிகாரமாக அழைத்து அவரின் ஜாக்கெட்டை வாங்கி வரச் சொன்னார். மூளை குறுகுறுத்தது. கடைக்கு நடந்தேன். ஜாக்கெட்டை வாங்கினேன். சற்று தள்ளி நடந்தால் ஒரு பெரிய நிலப்பரப்பு இருக்கும். அதற்குள் செந்தட்டி செடி இருப்பதை கவனித்திருக்கிறேன். அதை கவனமாக பறித்து ஜாக்கெட், மற்றும் முந்தி அடிப்பதற்கு கொடுக்கப்பட்ட சேலையில் செந்தட்டியை தேய்த்து விட்டேன். மனம் அடங்கவில்லை. மிகச் சிறிய தண்டனையாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் பறித்து அதில் தேய்த்து விட்டேன்.
வீட்டுக்கு வந்து கொடுத்தேன். என் முகத்தைப் பார்க்காமல் வெடுக்கென்று பறித்து கொண்டு சென்றார். மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சி. படியில் இறங்கி நடந்து வரும்பொழுது இரட்டையர்கள் மேலே ஏறி வந்தார்கள். ஆங்கிலத்தில் என்னைப் பார்த்து ஒருத்தி மிக கேவலமாகச் சிரித்தாள். அதில் இன்னொருத்திக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவளும் சிரித்தாள். கை பரபரத்தது. கீழே உட்கார்ந்து ஒரு காதல் கடிதம் எழுதினேன். எழுதி முடித்ததும் ஒரு யோசனை. எழுதுவது என முடிவான பின் ஏன் ஒருத்திக்கு மட்டும் எழுதுவானேன். எழுதிய கடிதம் போலவே இன்னொரு கடிதம் எழுதினேன். என்னை சமமாகக் கருதாத இவர்களை இந்த காதல் கடிதம் சமப்படுத்தும் என நம்பினேன். இருவரும் மதரஸா சென்றார்கள். அவர்கள் நான் வருவதை எதிர்பார்க்கவில்லை. பின்னால் சென்றேன். போகும்போது ஒருத்திக்கு கொடுத்தேன். அதிருப்தியோடு வாங்க மறுத்தாள். அதில் தவறாக ஏதுமில்லை என நம்பவைத்து கடிதத்தை வாங்க வைத்தேன். இன்னொருத்தியின் கைப்பையில் ரகசியமாக கடிதத்தை திணித்துவிட்டேன். என் உடமையை முழுமையாக எடுத்துக் கட்டினேன். அலுவலகத்தில் நான் அன்றாடம் உபயோகப்படுத்தும் லேப்டாப்பை பார்த்தேன். கை பரபரத்தது. லேப்டாப் கீ போர்டில் ஒரு பேனாவை வைத்து மூடினேன். உள்ளே ஏதோ நொறுங்கிய சப்தம் கேட்டது. கொஞ்சம் திருப்தியாக இருந்தது.
எல்லோரிடமும் சொல்லிவிட்டு CEO-வை பார்த்தேன். அவர் வேறுபக்கம் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். நினைத்த மாதிரி அவரால் இன்னொருவரை வேலைக்கு வரவழைக்க முடியவில்லை. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். அந்த பெண்களிடம் கடிதம் கொடுத்திருக்கக் கூடாதோ என ஒரு பக்கம் பயம் நெளிந்தது. ஊருக்குப் போய் பார்த்துக் கொள்வோம் என வாசலில் செருப்பை மாட்டினேன். என் செருப்புக்கு அருகே ஓய்வு பெற்ற அதிகாரியின் மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள உட்லேண்ட் செருப்பு கிடந்தது. ஒரு செருப்பை மட்டும் காலில் ஏத்திக் கொண்டு வந்து நூறடி தொலைவில் இருக்கும் ஒரு ஆவின் பால் பூத் அருகே விட்டுச் சென்றேன். எல்லோரையும் ஒரு வகையில் பழி வாங்கிய திருப்தியோடு கோயம்பேடு வந்துருந்தேன்.
ஊருக்குப் போவது ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அடுத்து என்ன செய்வது என மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அலைபேசி ஒலித்தது. அது CEO. இவ்வளவு சீக்கிரம் மாட்டிக்கொள்வேன் என நினைக்கவில்லை என்றாலும் எந்த கேஸில் பிடிபட்டேன் என்ற ஆர்வம் ஒரு பக்கம். இனி அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்வது என்ற முடிவுடன் ‘ஹலோ’ என்றேன். “எங்க இருக்க?” குரலில் மெல்லிய கனிவு. இடத்தைச் சொன்னேன். ஐந்து நிமிடத்தில் வந்து நின்றார். அவர் கையில் ஒரு பை. என்னிடம் நீட்டினார். திறந்து பார்த்தேன், அலுவலகத்தில் நான் பயன்படுத்திய லேப்டாப். அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. “நீ போய்ட்டா இந்த லேப்டாப்பை யாரும் யூஸ் பண்ண மாட்டாங்க. நீயே வச்சுக்க!” அதோடு பையில் ஒரு மாத சம்பளத்தை திணித்து விட்டுக் கிளம்பினார். அங்கேயே அமைதியாக நின்றேன். தப்பித்து வந்து குற்றவாளி போல இருந்தது. பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். இது எனக்கான லேப்டாப் என முன்பே தெரிந்திருந்தால் உடைக்க அவசியம் இருந்திருக்காது. திறந்து பார்த்தேன் உள்ளே பேனாதான் உடைந்திருந்தது, லேப்டாப்பிற்கு எந்த சேதமும் இல்லை. அதை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். பேருந்து கிளம்பியது.
******