
மதிலையொட்டி உட்கார்ந்திருந்த அக்கா எந்த நிறத்தில் சேலை உடுத்தியிருந்ததென்று சரியாக நினைவைப் பிடிக்க முடியவில்லை – கரு நீலமோ கரும்பச்சையோ – ஏதொவொன்று. எதுவாயினும் கந்தலான ஆடையிலிருந்த அப்படியொருத்தியை, என் அப்போதைய முதிர்ச்சியின்மை ‘அக்கா’ என்று அழைக்கவிட்டிருக்குமாவென்று தெரியவில்லை. முகச்சுளிப்போடு விலகி நடந்துதான் முன்வளாகம் போலிருந்த அந்தச் சிறு இடத்திற்குள் அடியெடுத்து வைத்தேன். பதிமூன்று வயதில் அங்கு வருபவனை எல்லோரும் விகாரமாகப் பார்க்கப்போகிறார்களென்று நினைத்துக்கொண்டுதான் நுழைந்தேன் – ஒருத்தரும் சட்டையே செய்யவில்லை. ஒரு காவல் நிலையத்திற்கு எதுவுமே அன்னியமாக இருக்கமுடியாது என்பதாகத்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
சினிமாவில் பார்த்திருந்த நிலையங்களைப் போல அது தெரியவில்லை. என்னவோ மாதிரி கட்டி வைத்திருக்கிறார்கள். சனம் திரண்டு நிற்கும் தபால் நிலையத்தைப் போலவோ, வங்கியைப் போலவோவும் அது இருக்கவில்லை. பழைய வீடெதையும் பிடித்து இப்படி மாற்றியமைத்திருக்கிறார்களா? அதற்கான சாட்சியங்களாக எதுவும் கண்ணில் படவில்லை. முன்பு எத்தனையோ முறை அந்தப் பக்கமாக போயிருந்தாலும் உள்ளே எட்டிப் பார்த்ததேயில்லை. அப்போவோடு அவ்விடத்தைக் கடந்த நாட்களில் சரியாக அந்த வாயிலையொட்டி வரும்போது என் மணிக்கட்டில் அவரது கைப்பிடி இறுக்கம் அதிகமாவதை உணர்ந்திருக்கிறேன். அவசரமாக இழுத்துக்கொண்டுதான் போவார்.
ரேஷன் பட்டுவாடாவிற்கு நிற்பதைப் போல மூலையில் ஒரு வரிசை வேறு நின்றுகொண்டிருக்கிறது. எதிலுமே ஓர் ஒழுங்கில்லாமல் எல்லாம் காமா சோமாவென.. திரும்பிய பக்கமெல்லாம் இரைச்சல். வீட்டிலிருந்து புறப்படும்போது இருந்த நடுக்கமெல்லாம் துவக்கத்திலேயே வடிந்துபோய் விட்டதைப் போல தெரிந்தது. கூடவே, முன்நெற்றி வழுக்கை, காது மடலின் அடைசலான மயிர்க்கொத்து என, என்னுடைய தமிழ் ஐயா போலவே தெரிந்த ஒரு போலீஸ்காரரைப் பார்த்தப்போது எனக்கு சிரிப்பாகக் கூட இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்கா அப்பா அத்தனை யோசித்தார் என்று மானசீகமாக அவரைப் பரிகாசம் செய்துகொண்டேன்.
உடன் வந்திருந்த அருள் அண்ணன், அந்தத் தமிழய்யா போலீஸிடம் போய் பேசினார்.
‘சார், ஜெயசங்கர்ங்கறவங்கள பாக்கனும்..’
நிமிராமலே இன்னொரு நபரை அவர் கைக்காட்டிய விதத்தில் எத்தனை அலட்சியம்… புருவத்தில் மட்டும் பிரத்யேக மிடுக்கு.., அம்மாஞ்சி ஐயாவிற்கும் இவருக்கும் சம்மந்தமே கிடையாது. இவர் வேறு யாரோ.
கைகாட்டப்பட்ட மனிதரிடம் போய், ‘சார்.. ஃபயர் சர்வீஸ் கலியமூர்த்தி பையன்…’ என்று அண்ணன் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
சட்டென அந்த ஆசாமியின் முகத்திலிருந்த இறுக்கம் கலைந்ததைப் போலிருந்தது. “லேய்.. வாடா வாடா.. இம்மாம் பெரிய பயலாய்ட்டியா நீ? அப்பா பேசுனாப்புல காலேல… பேரென்ன மறந்துட்டேன்…?” என்று கண்களை மூடிக்கொண்டு நெற்றியைச் சுருக்கினார். நிஜமாகவே யோசித்து மீட்டுவிடுவார் என்றுதான் நினைத்தேன்.
‘அருள் பிரகாஷ்’ என்று அண்ணன் சொல்லிய பதிலை அவர் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை.
“சொன்னாப்புல… சைக்கிள் தெஃப்ட்டுதான? ஒன்னோடதாடா?” ‘டா’ என்ற இடத்திலிருந்த அழுத்தம் சட்டென இங்கிதமற்றதாகப்பட்டது.
“இல்ல சார்… இவனுது.. கீழ்வீட்டுப் பையன்..” என்னைக் காட்டினார்.
“எங்க குடியிருக்கீங்க இப்ப? அப்பா எங்கிட்டோ கச்சேரி ரோட்லன்னு சொன்ன மாதிரி…”
“ஆமா சார்.. கிருஷ்ணவேணி காலனி..”
சைக்கிள் தொலைந்ததைப் பற்றி விசாரிக்காமல் ஏதேதோ பேசிக்கொண்டு போனார். அவர் என்னைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக மேசையை இன்னும் நெருங்கிப்போய் நின்றுகொண்டது, பலனளிக்கவே செய்தது.
“சைக்கிள் ஒன்னதா? பேரென்னடா?”
இந்த இரண்டாவது ‘டா’வில் அம்மனிதரை முழுமையாக வெறுக்க ஆரம்பித்தேன்.
“என்ன படிக்கிற?”
“நைன்த்து..”
“இங்க்ளிஸ் மீடியமா… அது சரி… பாக்க ப்ளஸ் டூ பயலாட்டம் நெடுநெடுன்னு ஒசரமா இருக்க? ஒம்பதாங்கிளாஸ்ங்கற?”
சிரிப்பதைப் போல என்னவோ செய்து வைத்தேன். பெருமிதமும் அருவருப்பும் கலந்த ஏதோவொன்று அதில் நிச்சயம் வெளிப்பட்டிருக்கும். அண்ணனிடம் கொஞ்சம் குடும்பக் குசலங்களை விசாரித்துவிட்டு, ஒரு பெஞ்சைக் காட்டி காத்திருக்கும்படி சொன்னார்.
காத்திருந்த வேளையில் வெயிலும் அங்கு நிலவிய மந்தகதியிலான பணிமுறைகளும் ரொம்பவே அலுப்பூட்டின. யார் யாரோ மனிதர்கள், பேண்ட்டு சட்டை போட்டவர்கள், லுங்கி கட்டியவர்கள், செருப்பை வாசலிலேயே விட்டு வருபவர்கள், செருப்பே இல்லாதவர்கள், கையில் என்னென்னமோ தாள்கள் – ஊதா கலர், மஞ்சள் கலர், ஏதோ பத்தரத் தாள் போன்றவை சில, கார்பன் தாள்கள்… எல்லாரும் யாரையோ பற்றி குறை சொல்லிவிடப்போகிறார்கள்… அதற்கு மட்டும்தானே இந்த இடம்… அத்தனை குற்றங்களா நடக்கின்றன? திருட்டு, கொலை… வேறேன்ன? யோசிக்கவே வரலை. கொலையா இந்த ஊரில் நடந்திருக்கப்போகிறது? எல்லோருக்கும் ஏதோ திருடுதான் போயிருக்க வேண்டும். தங்கம், வெள்ளி, சைக்கிள், பைக், கார்… காரைத் திருடமுடியுமா? சத்தம் வந்துவிடும்… பெருசு… பார்த்துவிடுவார்கள்…
நெடு நேரமாகியும் யாரும் அழைக்கவில்லை. தினமும் இத்தனை பேர் வந்து புகார் கொடுத்தால் அத்தனையையும் இங்கிருக்கும் போலீஸ்காரர்கள் கண்டுபிடித்துவிடுவார்களா? பத்து பேர் கூட இருக்கமாட்டார்கள் போல… ஒன்று, இரண்டு, மூன்று… பக்கவாட்டிலிருந்த போலீஸ் லத்தியை அப்போதுதான் கவனித்தேன்; முதன்முதலாக மிக அருகில் இப்போதுதான் பார்க்கிறேன். வெறும் மூங்கில் கம்பு என்று அது நாள் வரை நினைத்திருந்ததை, அதன் கனமும் தாட்டியான பிடியும் ஒரே நொடியில் மிரட்டிக் கலைத்தன. தொட்டுப் பார்த்துவிட்டு கையை எடுத்துக்கொண்டேன். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து உள்ளறையைப் பார்க்கமுடிந்தது. லாக் அப் மாதிரி எதுவும் கண்ணில் படுகிறதா என்று எக்கிப் பார்த்தேன். அண்ணன் தொடையில் கை வைத்து அமர்த்தினார்.
“என்னண்ண செய்யணும்..?”
“ரைட்டர் ஃப்ரீ ஆனதும் கேஸ் எழுதிப்பாங்க.. அவ்வளதான்.. கெளம்பிறலாம்..”
“சைக்கிள் கெடச்சிருமா?”
பதில் சொல்லாமல் சிரித்தார். காலையில் அவருடைய அப்பாவிடமும் இதைத்தான் கேட்டிருந்தேன். அவரும் இப்படியேதான் சிரித்திருந்தார்.
முந்தைய வருடம் வரை ஒரு லேடீஸ் சைக்கிள்தான் என்னிடமிருந்தது. முட்டி இடிக்க ஆரம்பித்தது என்பதை விட பக்கத்து வீட்டு பாலாஜியின் ஸ்போர்ட்ஸ் ரக சைக்கிளைப் பற்றிய கனவுதான் உள்ளுக்குள் போட்டு நெருக்கியது. ‘கவிதா சைக்கிள் மார்ட்’டில் போய் நின்றதும், ஏங்கியிருந்த சைக்கிளைக் காட்டி அப்பாவிடம் கேட்டேன். அப்பா சற்று யோசித்துவிட்டு, “ஒயர் ப்ரேக் வர்ற மாதிரி வேணான்டா…” என்று மேம்போக்காகச் சொல்லிவிட்டார். அசல் காரணம், அதன் விலையை அவர் கணித்திருக்க வேண்டும். அதே நேரம், பாலாஜியின் சைக்கிளை நான் எடுத்து ஓட்டிப் பார்ப்பதை அவர் கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார். ஒரு போக்காக சிந்தித்தபடியே இருந்தவர், கடைப் பையனை ஒதுக்கி முணக்கமான குரலில் ஏதோ விசாரிப்பது தெரிந்தது. முகம் மாறுவதை மட்டும் நான் கவனித்துக் கொண்டிருந்தேன். “கலர பாத்து வையி.. ரெண்டு மூனு நாள் செண்டு வந்து எடுத்துக்கலாம்..” என்றார்.
“இன்னிக்கே வாங்கலாம்ன்னுதானப்பா வந்தோம்..” என்ற ஏமாற்றத்தில், இன்னும் இரண்டு நாட்களில் ஒன்றாம் தேதி வந்துவிடும் என்பதெல்லாம் எனக்கு உறைக்கவேவில்லை. சொல்லிவைத்த மூன்றாம் நாளில், தன் சம்பளக் கவரிலிருந்து நேரடியாக சில ரூபாய் தாள்களை உருவிக் கொடுத்தபோதுதான் அது எனக்கு புரிய வந்தது. முந்தைய மாதம்தான் அவ்வாண்டுக்கான ஸ்கூல் ஃபீஸை வேறு கட்டியிருந்தார். இந்த சைக்கிளைத்தான் பள்ளியில் படிக்கப் போகும் அடுத்த நான்கு வருடங்களுக்கும் வைத்துக்கொள்ள வேண்டுமென அந்த நொடியில் மனம் உடனடி சங்கல்பம் பூண்டது.
“கூப்புடுறாங்க வா…” அண்ணன் உசுப்பினார்.
ரைட்டரின் மேசை உள்ளறையின் நுழைவையொட்டியே இருந்தது. உள்ளறையில் அத்தனை கூட்டம் இருக்கவில்லை. சட்டமிடப்பட்ட புகைப்படத்தில் எப்போதும் காந்தி ஏன் இதே மாதிரியே புன்னகைக்கிறார்? வேறு மாதிரி போஸே அவர் கொடுக்கவில்லையா? எப்படி, எங்கு, என்று காணாமல் போனது என்பதை விவரிக்கச் சொன்னார், மேசையிலிருந்த மனிதர். அங்கிருந்தவர்களில் அவர்தான் முதியவராகத் தெரிந்தார். இவரே கொஞ்சம் உப்பலான காந்தி போலத்தான் இருக்கிறார். திருநீரில்லாமல் நீள் கோடாக குங்குமம் மட்டும் நெற்றி வியர்வையில் ஒட்டிப் போயிருந்தது.
“நேத்தி மத்தியானம் சார்… ஸ்கூல் ஹாஃப் டேன்னு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன். காலனில மாடிப்படிய ஒட்டி ஒரு மோட்டார் ரூம் இருக்கும்… அது பக்கத்துலதான் நிறுத்துனேன். சாய்ந்தரம் வெராண்டால கிரிக்கெட் வெளையாடும்போதே சைக்கிள் அங்க இல்ல… நா அத அப்ப கவனிக்கவே இல்ல…” அறைக்குள் நுழைந்த போலீஸ் ஒருவர் என் முதுகில் லேசாக கை வைத்துவிட்டு உள்ளே போனார். கொஞ்சம் ஸ்டூலிலிருந்து எழுவதைப் போல செய்த என்னை, ‘உட்காரு’ என்பது போல முதியவர் கை காட்டினார்.
“அப்றம் நீ எப்ப பாத்த?” ரொம்பவே அக்கறையெடுத்து அவர் கேட்டதிலேயே எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது. காந்தியேதான் அவர்.
“ஆறு மணிக்கு டியூஷன் கெளம்ப வந்தப்பதான் பாத்தேன்… அப்பதான் வெளாடும்போதே சைக்கிள் அங்க நிக்கலன்னு நெனப்பு வந்துச்சு… மூணு மணிக்கு முன்னயே தூக்கிட்டு போயிட்டானுங்க..”
“என்ன சைக்கிளு..”
“ஹெர்குளஸ்.. எம்டிபி..”
ஒரு தாளைக் கொடுத்து அந்தப் பெயரை எழுதிக் கொடுக்கச் சொன்னார். “இந்த ஹேண்ட்பேரு நேரா வெச்சு ஓட்றானுகளே.. அந்த மாரியா?” அந்த வடிவத்தின் மீதான ஒரு கேலி அந்தக் கேள்வியில் தெரிந்தது.
“ஆமா சார்” தயங்கிச் சொன்னேன்.
கொஞ்சம் யோசித்தவாறு இருந்தவர், அண்ணனிடம், “எஸ்.ஐ. வருவாரு.. சும்மானாச்சுக்கும் கேப்பாரு.. யாரு.. எவட.. என்ன கேசுன்னு.. அப்ப இதயெல்லாம் ச்சொல்லவேணாம்.. நாஞ்சொல்ற மாரி சொல்லிருங்க” என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தப்போதுதான், அது காதில் விழுந்தது – கதறி ஓலமிடும் ஆண் குரல்.
என் முதுகில் கை வைத்துவிட்டு உள்ளே போனவர் ஒரு பெஞ்சின் நுனியில் அமர்ந்திருக்க, அவரது இரு பூட்ஸும் கீழே அமர்ந்திருந்த ஒருவரின் கை விரல் மூட்டுகளை தரையோடு நசுக்கிக்கொண்டிருந்தன. வெளியே நான் பார்த்திருந்த லத்தியை விட மெல்லிசான ஒன்றை அந்தப் போலீஸ் தன் கையில் வைத்திருந்தார்.
“விஜயா தேட்டர் வாசல்ல சைக்கிள நிறுத்திட்டு உள்ள டிக்கட் இருக்கான்னு பாக்கப் போனேன்.. பூட்டிட்டுதான் போனேன்..” முதியவர் மேசையை அழுத்தமில்லாமல் தட்டி, “தம்பி.. அதயெல்லாம் என்னத்த பாத்துட்டு இருக்க.. கவனி.. டிக்கட் பாத்துட்டு வரதுக்குள்ள திருடுப்போயிருச்சுன்னு சொல்லு.. கேட்டுச்சா?” என்றார். எனக்கு எதுவுமே கேட்டிருக்கவில்லை. பயத்தில் தலையசைத்தேன்.
“நா எலுதிட்டு கூப்புடுறேன்.. ஒக்காந்திருங்க..”
வெளியே கிடந்த பெஞ்சை நோக்கித் திரும்பும்போது பின்னாலிருந்து கேட்டார்.
“தேட்டர் வாசல்ல சைக்கிள பூட்னியா இல்லயா?”
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதில் சொல்லாமல் நின்றேன். அண்ணனும் அவரும் சிரித்துக்கொண்டார்கள்.
வெளியே வந்ததும் திகைப்பு அடங்காமல் கேட்டேன்.
“அண்ண.. அந்தாளு கையப் போட்டு இப்டி மிதிக்கிறாங்க?”
“எதாச்சும் திருட்டு கேஸா இருக்கும்..” மிகச் சாதாரணமாக அதைச் சொன்னார்.
“ஸ்கூலுக்கு என்னத எடுத்துட்டுப் போ… எனக்கிங்க பக்கந்தான… நடந்து போயிட்டு வந்துருவேன்..” அப்பா சொல்லியபோது எனக்கு அடக்கமுடியாமல் அழுகை வந்தது. “வேறது வாங்கிறலாம்… அதையே யோசிச்சிட்டு இருக்காத..” என்னை அவர் சமனப்படுத்த முயன்றபோது, சைக்கிளைத் திருடியவனுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை எப்படி இருக்க வேண்டுமென்றுதான் என் கற்பனை அலைந்து கொண்டிருந்தது. இப்படி கை விரல் மூட்டை நசுக்குவதையெல்லாம் நான் யோசித்திருக்கவேயில்லை. இதுதான் சரி. இப்படித்தான் அவனது மூட்டுகளும் நசுக்கப்படவேண்டும். ஒருவேளை இவனே கூட என் சைக்கிளைத் திருடியவனாக இருக்கலாம். ஒருமுறை உள்ளே சென்று அவனைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமெனில், அவன் ரணப்படுவதைப் பார்க்க வேண்டும். திருடு கொடுத்தவர்களுக்கும் இப்படி நசுக்கி மிதிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தால் கூட தேவலாம்.
நினைத்த மாத்திரத்தில், ஒல்லியான ஓர் ஆசாமி உள்ளிருந்து வந்து என்னைக் கை காட்டி அழைத்தார். அண்ணனை எதிர்பாராமல் ஆர்வ மிகுதியில் நானே எழுந்து உள்ளே போனேன். முதியவர்தான் அழைத்திருந்தார். என் கண்கள் அந்தத் திருடன் பக்கம் போய் வந்தது. தன்னிடமிருப்பவைகளைத் தரையில் பரப்பிவைத்துக்கொண்டு காட்டி அழுது கொண்டிருந்தான். இப்போது அவன் சட்டை அணிந்திருக்கவில்லை. முதியவர் செறுமினார்.
“பெரிய பயலா இருந்தானே.. அவன் இல்லயா?”
“வெளியதான் ஒக்காந்திருக்காரு..” என்று அண்ணனை அழைப்பதைப் போல திரும்பினேன்.
“வேணா விடு.. நீயே கேளு… வர்ரப்ப வழில ஒரு கோயில் பாத்தியா… அதவொட்டுனாப்புல ஒரு கட இருக்கும்… போயி… அர டஜன் ஜெல் பேனா… அப்டியே ஒரு பாக்கெட் நேவி கட்டு… வாங்கிட்டு ஓடியா பாப்போம்.”
எதற்காகவோ தயங்கி நின்றேன். அவரிடம் காசு கேட்கக்கூடாது என்பதெல்லாம் தெரிந்திருப்பதையும் தாண்டிய தயக்கம் அது. அவரது தோற்றத்திற்கு அவர் காசு கொடுப்பாரோ என்றொரு நம்பிக்கை எனக்கு அரும்பியிருக்க வேண்டும். அவர் நான் நின்று கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல் எழுத்தைத் தொடர ஆரம்பித்திருந்தார். கொஞ்சம் கண்டிப்பான காந்தியாக இருப்பாராயிருக்கும்; கஞ்சனாகவும். அறையை விட்டு வெளியேற அடியெடுத்து வைத்தபோது மீண்டும் அலறல். இம்முறை லத்தி சுருண்டுக்கிடந்த அந்தத் திருடனின் முதுகில் தொடையில் கழுத்தில் தோளில் ஒரு வினாடிக்குள் சடசடவென விழுந்தது. நானாகவே வெளியே வந்துவிட்டேன். என் கற்பனைகளிலிருந்த லத்தியடியகள் பள்ளிக்கூட ஸ்கேல் அடிகள் போன்றவை. அசலின் கோரம் எனக்குள் தணியவே சற்று நேரம் ஆகும் போல இருந்தது. அண்ணனையும் அங்கு காணவில்லை.
நிலையத்தை விட்டு வெளியே நடந்தபோது விருவிருவென எதிரில் ஒருவர் உள்ளே வந்தார். வளாகத்திலிருந்த ஓரிரண்டு காக்கிகள் எழுந்து நின்று கொண்டதில் அவரது இடம் புரிந்தது. சல்யூட்டுகளிலிருந்த நாடக விரைப்பு வேடிக்கையாக இருந்தது. நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். சாதாரணமான முகமனாக இல்லாமல் ஏன் இதனை இப்படிச் செய்யவேண்டும்? ஓரிரு டிப்டாப் ஆசாமிகளால் அவரை நெருங்க முடிந்தது. கோயில் குருக்கள் ஒருத்தர் சாத்வீகமாக அவருக்கொரு வணக்கம் வைத்தார். வெளியில் அமர்ந்திருந்த அக்கா எழுந்து ஓடிவந்து அவரை நோக்கி அழப்போனதை பக்கவாட்டில் நின்ற காக்கி தடுத்து நிறுத்தினார். “ஐயா பாத்துப்பாரு.. கூச்சல் போட்டுட்டு நிக்காத..” என்று அவளிடம் அவர் சொல்லியது கடக்கும்போது காதில் விழுந்தது.
அவளுக்கு என்ன புகார் இருக்கப் போகிறது? திருட்டுப் போக அவள் என்ன வைத்திருந்திருக்கப் போகிறாள்… அவள் சுற்றிக் கொண்டிருக்கும் ஆடையைத் தவிர? வேறு ஏதேனும் புகாரளிக்க நிற்பாளாய் இருக்கும். யாரேனும் அவளைக் கெடுத்திருப்பார்களாய் இருக்கலாம். கதாநாயகியைத்தானே கெடுப்பார்கள் – ஹீரோ வந்து காப்பாற்றுவான். இவளிடம் கதாநாயகிக் கூறுகள் எதுவுமே இல்லையே?
அந்தக் குங்குமப்பட்டைக்காரர் சொல்லியிருந்தவற்றைக் கடையில் சொல்லி வாங்கிக்கொண்டேன். அம்மா இருநூறு ரூபாய் கையில் பணம் கொடுத்துவிட்டிருந்தார். “அலையவிட்டுட்டு காச புடிங்கிப்பானுங்கடா…” என்று அப்பா மறுத்தபோது, அருள் அண்ணனின் அப்பாதான் பேசி எங்களை அனுப்பி வைத்திருந்தார். அதுவும் நல்லதுதான். ஒரு கணம் அப்பாவை அவர்கள் சிகரெட் வாங்கிக்கொண்டு வரச் சொல்வதாக நினைத்துப் பார்த்தேன். வந்திருந்தால் நிச்சயம் எனக்குத் தெரியாமல் இதையெல்லாம் அவரே போய் வாங்கிக்கொண்டு வந்திருப்பார். மகன் தோற்கக் கூடாது. தான் தோற்பதும் மகனுக்கு தெரிந்துவிடக் கூடாது. காலம் முழுக்க இப்படியொரு சராசரி அப்பாவாக இருந்து இப்படி உடைத்து நெகிழ்த்தியே என்னைப் பலவீனப்படுத்தியிருக்கிறார்.
“எங்கடா போன?” என்ற அண்ணன், கையிலிருந்தவற்றைப் பார்த்ததும் சற்று சங்கடப்பட்டார். “குடு.. நாங் கொண்டி உள்ள கொடுத்துட்டு வரேன்…” நானும் பின்னாலேயே போனேன்.
“எஸ்.ஐ. வண்ட்டாரு.. வாங்க சொல்லிறலாம்..” அந்த முதியவர் மேசையிலிருந்த காகிதங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஒரு மாதிரி திணறியபடி நாற்காலியிலிருந்து எழுந்தார். நான் வெளியே செல்லும்போது எதிரில் வந்தவர்தான் எஸ்.ஐ ஆக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
உள்ளிருந்த இன்னொரு அறையில், மேசையிலேயே சாய்ந்து அமர்ந்துகொண்டு, அருகிலிருந்த காவலர் ஒருவர் பரீட்சை அட்டையொன்றைக் கையில் வைத்துக்கொண்டு வாசித்த எதையையோ, தரையைப் பார்த்தவாறே எஸ்.ஐ கேட்டுக்கொண்டிருந்தார்.
நாங்கள் மூவரும் உள்ளே நுழைந்தது அவருக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தும் சற்றும் சலனப்படாத கூர்மையுடன் சொல்லிக் கொண்டிருப்பவற்றைக் கேட்பவராக நின்று கொண்டிருந்தார். முதியவரின் முதுகு குழைந்து வளைந்திருந்தது. நான் மெல்லத் திரும்பி அந்தத் திருடன் எங்கே என்று பார்த்தேன். ஆளைக் காணவில்லை.
“சொல்லுங்க..” எதிர்ப்பார்த்திருந்ததை விட எஸ்.ஐ யின் குரல் மிரட்டுவதாக இருந்தது.
“சைக்கிள் தெஃப்ட்டு ஒன்னு.. விஜயா தேட்டர் வாசல்ல..”
“ம்ம்.. வாசிங்க…”
“கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை, தேதி…” என்று அவர் வாசிக்கத் தொடங்கியதுமே எனக்கு குழப்பமாக இருந்தது. என்னுடைய சைக்கிள் முந்தைய நாள்தான் களவு போயிருந்தது. ஒருவேளை நான் சொல்லியதை அவர் சரியாக எழுதிக்கொள்ளவில்லையோ என்று லேசாகக் கலவரமானேன். இடைமறித்து சொல்லவும் தைரியம் எழவில்லை. அவர் ரொம்பவே நீளமாக சொல்லிக்கொண்டு போனார். அப்படி அநாவசியமாக நீட்டி முழக்கியதில், தான் எழுதிய விதத்தின் மீதான கர்வம்தான் தெரிந்தது. ‘சைக்கிள்’ என்பதைத் தவிர நான் சொல்லியிருந்த எதுவுமே அவரது பேருரையின் அடக்கத்தில் இருக்கவில்லை.
முடிவில் எஸ்.ஐ. என்னிடம், “பூட்டிருந்தியா இல்லையா?” என்றார். பதற்றத்தில் ஆமோதித்து தலையசைத்தேன். அந்த அறையை விட்டு வெளியே வரும்போது மீண்டும் அதே அலறல் கேட்டது. இன்னொரு மூலையில் வைத்து வேறொருவர் அவனை அடித்துக்கொண்டிருந்தார். இடுப்பில் அரைஞாண் கயிறு கூட இல்லாமல், முழு நிர்வாணமாக அவனைப் பார்த்ததும் எனக்கு நடை இடறியது. அண்ணனும் சற்று தடுமாறவே செய்தார். எங்களைப் பார்த்ததும் தன் குறியை மறைக்கப்போன அவனது கையிலேயே அடுத்த லத்தியடி விழுந்தது. அதன் வீச்சு அவனது விதையிலும் பட்டது. இரண்டு கைகளால் பொத்திக்கொண்டு அவன் கீழே சரிந்து விழுவதைப் பார்க்கவே முடியவில்லை. கீழே செப்பு தாயத்துடன் ஒரு சிவப்பு கயிறு அறுந்துக் கிடந்தது.
“வெளிய போயி ஜெயசங்கர பாருங்க.. அவருதான சொல்லிவுட்டது?” முதிய போலீஸ் கேட்டதும் அண்ணன் சரியென்பதைப் போல தலையாட்டிக் கொண்டார். சில தாள்களின் அடியில் என்னிடம் பெயர் எழுதி வாங்கிக்கொள்ளப்பட்டதும் இருவரும் வெளியே வந்து ஜெயசங்கரிடம் நின்றோம். அவர் அண்ணனை அருகில் அழைத்து ரகசியம் போல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவனின் நிர்வாணத்தில் நான் பேதலித்துப் போயிருந்தேன். ஒரு சைக்கிளுக்கு இத்தனை அடிகள் அவசியமில்லை என்று தோன்றியது. பொருளைத் திருப்பிக் கொடுத்துவிட்டால் அவனை விட்டுவிடலாம் என்று மனதிற்குள் தீர்ப்பு சொல்லிக் கொண்டேன்.
அந்த ஜெயசங்கரிடம் விஷயத்தைக் கேட்டுக்கொண்ட அண்ணன், கட்டடத்தின் பக்கவாட்டு சந்தின் வழியாக பின்புறமிருந்த திடலுக்கு அழைத்துப் போனார். அந்த அக்கா இப்போது மதில் சுவரையொட்டி குத்த வைத்தபடி அழுது கொண்டிருந்தது. யாரும் அதைக் கண்டுக்கொள்ளவில்லை. அந்த அழுகையும் யாருடைய கவனத்தைக் கோரும் விதத்திலும் இருக்கவில்லை. இவளுடைய பொருள் எதையோதான் உள்ளேயிருப்பவன் திருடியிருப்பானோ? பாக்கெட்டிலிருந்த பொருட்களை அவன் பரப்பி வைத்திருந்ததில் என்ன இருந்தது… சில்லறைகள், பீடிக்கட்டு, வத்திப்பெட்டி… வேறெதுவும் சரியாகத் தெரியவில்லை. அதற்கே ஒருவனை அம்மணமாக்கி அடிக்கிறார்களா?
சற்று நேரத்தில் அந்தத் திடலுக்கு வந்த ஜெயசங்கர், “பாத்துரலாமா?” என்று சொல்லியபடி ஒரு மரத்தடியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.
என்னவென்று புரியாத குறுகுறுப்புடன் அண்ணனைப் பார்த்தேன். கொஞ்சம் புரிந்ததைப் போலவும்தான் இருந்தது. உறுதிப்படுத்திக்கொள்ளத்தான் அண்ணனிடம் கேட்டேன்.
“சைக்கிள்தான்.. வா…” அமுத்தலான குரலில் சொன்னார்.
“கெடச்சிருச்சா?” அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் நசுக்கி வைத்த குரலில் கேட்டேன்.
“வா..வா..” என்று வேகமாக முன்னே போய்க்கொண்டிருந்தார்.
“வளந்த தம்பி இங்கிட்டு வாங்க… இதப் புடிங்க” என்று ஒரு தார்பாலினின் முனையை என்னிடம் கொடுத்துவிட்டு மரத்தை அரைச் சுற்றாகச் சுற்றி இன்னொரு முனையைப் பற்றி, “அப்டியே இலுத்து சுத்தி இந்தப் பக்கமா வா” என்றார். கனமாகத்தான் இருந்தது. அண்ணனும் சேர்ந்துதான் இழுத்துப் போட்டார். மறைவில் ஆறு சைக்கிள்கள் நீளமான ஒரே சங்கிலியால் இணைத்துக் கட்டி பூட்டிடப்பட்டிருந்தன.
நொடி நேரத்திற்கு உயர்ந்தெழுந்த உற்சாகம் அந்த ஆறில் என்னுடையது இல்லையென்று தெரிந்ததும் அப்படியே வடிந்தது. நான்கு சாதாரண ரகத்திலும், இரண்டு ஸ்போர்ட்ஸ் ரகத்திலும் இருந்தன. அடையாளம் காட்ட அழைத்து வந்திருக்கிறார்கள்; என்னுடையது இதில் இல்லை; என்றாவது அது பிடிப்பட்டுவிடும்; அடிக்கடி இப்படி வந்து நான் அடையாளம் காட்ட வேண்டியதிருக்கும் – நம்பிக்கையும் சோர்வும் மாறி மாறி வதைத்தன. அவற்றிலிருந்து ஸ்போர்ட்ஸ் ரக வண்டியை மட்டும் தனியாக எடுத்து நிப்பாட்டி, “ரெண்டுமே கருப்பு வண்டிதான்… ஆனா இது கொஞ்சம் புதுசா இருக்கு… உன்னோடது என்ன கலரு..?” என்றார்.
ப்ளாக் என்று சொல்லப்போய் தயங்கி நிறுத்தி, “கருப்புதான் சார்” என்றேன்.
“சரியாப் போச்சு.. அப்ப இதையே எடுத்துக்கலாம்” என்று அந்தப் புதியதாகத் தெரிந்த சைக்கிளின் சீட்டில் தட்டினார். எடுத்துக்கொள்வதா? குழப்பத்துடன் அண்ணனைப் பார்த்தேன். மலர்ந்த முகத்துடன் சைக்கிளை ஆராய ஆரம்பித்திருந்தார்.
“என்னடா ஓகேவா?” ஜெயசங்கர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
“என்னோட சைக்கிள் கெடைக்காதா?” எப்படி துணிச்சலைத் திரட்டி இந்தக் கேள்வியைக் கேட்டேனென்றே தெரியவில்லை. பதில் சொல்லாமல் முதுகில் பலமாக அடித்தார். சிரித்துக்கொண்டுதான் அப்படி செய்தாரெனினும் வலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே அடித்திருக்கவேண்டும்.
“இதே இருக்கட்டும்…” அண்ணன் சொல்லிவிட்டார். என்னுடைய சைக்கிளை விட ஒரு படி உயரிய ரக வண்டிதான் அது. ஸ்போக்ஸ் கம்பிகளில் எதிரொளிக் கண்ணாடிகளெல்லாம் பொருத்தியிருக்கிறான் அதன் உரிமையாளன். பராமரிப்பிலிருக்கும் அக்கறையில், பொருளின் பண மதிப்பின் மீதான மரியாதைதான் தெரிகிறது. யாருக்குத் தெரியும்? அவனும் அன்று மாலை தன் சைக்கிள் தொலைந்துப்போனது தெரியாமல் அந்த இடத்திலேயே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்; அவனும் அதற்கு முந்தைய வருடம் வரை மனதிற்குள் புழுங்கிக்கொண்டே லேடீஸ் சைக்கிளை ஓட்டியிருக்கலாம்; அவனுடைய அப்பாவும் ஒன்றாம் தேதி வரை காத்திருக்குமாறு அவனிடம் சொல்லாமல் சொல்லியிருக்கலாம். மகனுக்கு முன் தோற்க விரும்பாத இன்னொரு அப்பாவின் சம்பளக் கவரைத்தான் அண்ணன் ஒரு துணியைக் கொண்டு தூசுத் தட்டுகிறார்.
“எனக்கு இது வேணாம்..” என்று வாய்க்குள்ளேயே சொல்லி ஒத்திகை பார்த்தேனே ஒழிய, காற்று கூட தொண்டைக்குழியைத் தாண்டவில்லை.
ஜெயசங்கர் மரத்திலேயே பொந்து மாதிரியிருந்த ஓரிடத்தில் கையை வைத்து கொத்தாக சுருட்டியிருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டார். சுற்றிமுற்றிப் பார்த்து சற்று தூரத்தில் கிடந்த ஒரு கருங்கல்லைக் காட்டி, “லேய்.. அத எடுத்துட்டு வா..” என்றதும், அருளண்ணன் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தார்.
சைக்கிள் படுக்கவைக்கப்பட்டது. அந்தப் பையிலிருந்து சிறிய உளி போல ஒன்றையெடுத்து கருங்கல்லைக் கொண்டு சைக்கிள் சீட்டின் அடியிலிருக்கும் கம்பியில் பொறிக்கப்பட்டிருந்த எண்களை ஜெயசங்கர் சேதப்படுத்தினார். அண்ணனும் சைக்கிள் உந்தாமல் பிடித்துக்கொண்டார். என்ன செய்கிறார்கள் என்பதே விளங்கவில்லை. பைக்குள்ளிருந்து ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து பற்றவைத்தவர், உருகி விழும் சொட்டுகளை அவ்விடத்தின் மீதே ஊற்றிக் காயவிட்டு மீண்டும் சுரண்டிவிட்டார். சைக்கிளின் ப்ரேக் ஒயரிலிருந்து கொஞ்சமாக க்ரீஸையெடுத்து அந்த இடத்தில் பூசி, அதே பையைக் கொண்டு நன்றாகத் தேய்க்க ஆரம்பித்தார். முடிவில் அவ்விடம் சேதமாகி நெடுநாளான மாதிரி தெரிந்தது.
உளியைக் கொண்டு டம் டம் என்று அடிக்கும்போது அந்தத் தெரியாத அப்பா ‘மூனு நாள் கழிச்சு வந்து வாங்கிக்கலாம்’ என்று அந்தத் தெரியாத சகாவிடம் சொல்லிக்கொண்டிருப்பதாக நினைத்துப் பார்த்தேன்.
“அவ்வளதான்.. அங்க முன்னாடி வந்துருங்க.. நா எழுதிக்க சொல்றேன்..” என்றவர் மற்ற சைக்கிள்களை அதே சங்கிலியைப் போட்டு இணைத்துக் கட்டினார். இதை எடுத்துக்கொண்டு எப்படி வீட்டுக்குப் போவது? இதெல்லாம் அப்பாவுக்குத் தெரிந்திருக்கும்; அதனால்தான் போக வேண்டாமென்று மறுத்திருக்கிறார். அந்தச் சந்தின் வழியாக வரும்போது அண்ணனிடம் சொன்னேன்.
“இந்த சைக்கிள் வேணாண்ண..”
“ஏன்டா புடிக்கலயா.. நல்லாத்தானருக்கு வண்டி..”
சற்று நேரத்திற்கு முன்பு எனக்கு தோன்றியதையெல்லாம் அவரிடம் சொல்லக் கூச்சமாக இருந்தது.
“இல்ல.. இதோட நெஜ ஓனரு நாளைக்கு நா ஓட்டிட்டுப் போவும்போது பாத்துட்டான்னா?” ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சொன்னேன் என்றாலும், நிஜமாகவே அந்தப் பயமும் இருக்கத்தான் செய்தது.
“இது நம்மூரு வண்டியாவே இருக்காதுரா.. ஒன்னோடத எவனாச்சும் கும்போணத்துல வெச்சு ஓட்டிட்டு இருப்பான்.. அப்புடிதான் இது..”
அவனுடைய அப்பாவும் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டாம் என்று சொல்லியிருப்பாரா? ஆனால் அவனுக்கு இந்த ஜெயசங்கரைத் தெரிந்து வைத்திருக்கும் ஓர் அருள் அண்ணன் இருக்கமாட்டார்; அவனுக்கு மாற்று சைக்கிள் கிடைக்காமலே கூட போகலாம்.
“இல்லண்ண.. அப்பா திட்டுவாரு நிச்சயமா.. வேணான்னு சொல்லிரலாம்”
“சும்மா வாடா செத்த.. ஒன்னுஞ் சொல்லமாட்டாரு.. நா பேசிக்கிறேன்..”
ஜெயசங்கர் மீண்டும் இருக்கைக்கு வந்து சேர்ந்ததும், இருவரையும் அழைத்து, “காலேல பதினோரு மணிக்கு கோர்ட்டுக்கு வந்து வண்டிய எடுத்துக்கலாம்.. நாதான் வருவேன் அங்க..” என்றார்.
அண்ணனிடம் திரும்பி, “உள்ள ரைட்டர்கிட்ட ஒரு முன்னூரூவாயக் கொடுத்துட்டுப் போயிரு.. கோர்ட்டுக்குஞ் சேத்துதான்..” என்றதும் அண்ணன் தலையாட்டிக் கொண்டார்.
உள்ளறைக்குள் போகும்போது அண்ணன் கேட்டார் “காசிருக்காடா?”
“நூர்ரூவா இருக்கு”
“சரி கொடு..” என்றவர் மேற்கொண்டு காசையும் வைத்து ரைட்டரிடம் கொடுத்தார். அவர் எந்த பாவனையும் இல்லாமல் வாங்கி சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார். எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிக்கூட பார்க்கவில்லை. நிற்க வேண்டுமா கிளம்பலாமா என்று இருவருக்குமே தெரியவில்லை. அடி வாங்கிக் கொண்டிருந்த ஆளைத் தேடினேன். அவ்விடத்தில் அந்த அறுந்துபோன அரைஞாண் கயிறு மட்டும் கிடந்தது.
“வர்ரோம் சார்”
அதற்கும் பதிலில்லை. வெளியே வந்துவிட்டோம்.
வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது, உள்ளுக்குள் ஏதோ கனமாக இருந்தது. வந்திருக்கவே வேண்டாம். இந்தப் புகாரே கொடுத்திருக்க வேண்டாம்.
மதில் அருகிலிருந்த அக்கா நியூஸ் பேப்பரில் வைத்து இரண்டு ரஸ்க்கு துண்டுகளை நீட்டியபடி நின்றிருந்தது. அழுகை ஓய்ந்த பின்னான விசும்பல் சன்னமாகக் கேட்டது. அக்காவின் எதிரில் நின்றவர், ப்ளாஸ்டிக் பையிலிருந்த டீயை ஊற்றிக் குடிக்க குவளையின்றி நேரடியாக வாய் வைத்து அவதி அவதியாகக் குடித்துக் கொண்டிருந்தார். முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் தயங்கி நடையை நிறுத்தினேன். மேல்சட்டை அணியாத உடம்பில் தடிப்பு தடிப்பாக கன்றிப்போயிருந்தது. கைலியை என்னவோ போல சுற்றிக் கொண்டிருந்தார். முன்வளாகத்தில் தெரிந்த மற்ற முகங்களை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவரை மீண்டும் பார்த்தேன். இப்போது அவரையெனக்கு திருடன் என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை. அப்பாவின் கை என் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்து இழுப்பதைப் போலிருந்தது.
காட்சியும் கருவும் மனசில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் எழுத்து! கதை சொல்லும்உத்தி அழகாக ஒரு பூப்போல மலர்கிறது. வாழ்த்துகள் மயிலன் ! பேசுகிறேன்!