சிறுகதைகள்

எம்மாரும் மத்தவங்களும் – தாரிகை

சிறுகதை | வாசகசாலை

கையில இருந்த பாத்திரத்த எல்லாம் கீழ பொத்துபொத்துனு போட்ட பொன்னுத்தாயி, “இத்தினிக்கும் சின்ன புள்ளையில ஒன் மார நல்லா தேச்சித்தான் குளிப்பாட்டிவுட்டேன், நீ வயசுக்கு வரும்போதுகூட இவ்ளோ பெருசா முண்டிகிட்டு வரல… இப்ப மட்டும் எப்படி டி இவ்ளோ பெருசா வளந்துச்சி… ஊருல இருக்குறவ கண்ணு எல்லாம் ஒன் மாரு மேலதான் இருக்கு. இம்மாபெரிய மாரானு! நம்ம வம்சத்துல யாருக்கும் இவ்ளோ பெருசு இல்ல. நீ ஏதும் தின்னு கின்னு தொலச்சியா?” ஏதாவது சொல்லுடினு, பாத்திரம் வெளக்கிகிட்டு இருந்த மவ வசந்தி தலையில ஒரு கொட்டு கொட்டுனா.

அது பெருசா வளந்தா நான் என்ன பண்ணுவேன்.. என்னைய ஏன் திட்டுற போம்மா அங்குட்டுனு மூஞ்ச திருப்பிகிட்டா வசந்தி.

யப்பப்பா… என்ன வெயிலுனு முணுமுணுத்துக்குனே வூட்டுக்குள்ள வந்த சுப்ரமணி, கொஞ்சம் தண்ணி கொண்டுவாமானு சொல்ல, பொன்னுத்தாயி பேச்ச நிப்பாட்டிட்டு, போயி உங்க அப்பனுக்கு தண்ணி கொடு… அடியே போவும்போது மேல துணிய போட்டுக்கிட்டு போ… அப்படியே நிமித்திக்கிட்டு போவாதனு சொன்னா பொன்னுத்தாயி.

வெயிலுல களச்சி வந்த அப்பனுக்கு மொதல்ல தண்ணி கொடுக்குறதா? இல்ல மேல போட துண்டையோ.. துப்பட்டாவையோ தேடுறதானு பொலம்பிகிட்டே சொம்புல தண்ணிய மொண்டு வந்தவ, கதவு மேல கெடந்த துண்ட எடுத்து மேல போட்டுக்கிட்டு அப்பன்கிட்ட தண்ணிய நீட்டி.. இந்தப்பா குடினு விசும்பிக்கிட்டே சொன்னா… தண்ணிய வாங்கி ஒருமொடக்கு குடிச்சவரு, மவ மூஞ்சிய பாத்துட்டு.. ஏன் மூஞ்ச தூக்கிவச்சிக்கிட்டு இருக்க ஒன் அம்மாக்காரி ஏதும் திட்டுனாலனு கேட்டாரு.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த வசந்தி, ஆமாம் பா எப்ப பாத்தாலும் மேல துணிய போடு துணிய போடுனு சொல்லிகிட்டே திட்டுதுப்பா.

“பின்ன திட்டாம கொஞ்சுவாங்களா…?

பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா துணிய போட்டுட்டு இரு. எங்க போனாலும் மேல துணி இல்லாம போவ வர கூடாது சரியா? அம்மா சொல்லுறதெல்லாம் கேட்டு நட. போ போயி வேலைய பாருனு” சொல்லிட்டு கட்டிலுல போயி படுத்துக்கிட்டாரு சுப்ரமணி.

ஏற்கனவே அம்மா திட்டுனதுல கோவிச்சிக்கிட்டு இருந்த வசந்தி, அப்பாவும் கண்டிச்சி பேச, ஏதும் சொல்லாம போயி மூலையில உட்காந்துகிட்டு, வீட்டு விட்டத்தை பாத்துக்கிட்டு இருந்தா.

நாம என்ன தப்பு செஞ்சோம் , ஏதோ என் மாரு பெருசா இருக்கணும்னு நானே உரம் போட்டு வளர்த்த மாதிரி எல்லாம் என்னையவே திட்டுறாங்க, நம்ம பக்கத்துவீட்டு கமலாவ எத்தன தடவ அவ அம்மா திட்டி இருக்கா? அவளுக்கு மாரு சப்பையா இருக்குனு அவங்க அம்மா  அவள திட்டுனத நாம எத்தனை தடவ ஒளிஞ்சிருந்து கேட்டு இருப்போம். அவளுக்கு சப்பையா இருக்குனு அவங்க அம்மா திட்டுறா… எனக்கு பெருசா இருக்குனு எங்க அம்மா என்னைய திட்டுறா..இது என்ன இட்லியா இந்த அளவுக்குதான் இருக்கணும்னு ஊத்தி வச்சு ஒட்டிக்க..ச்சே..வெறுப்பா இருக்குனு மனசுக்குள்ள பலமாதிரியான எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தாள் வசந்தி.

கடை பக்கம் போவும்போது எல்லா ஆம்பளையும் வெறிச்சி பாக்குறான் பொம்பளையும் ஒரு மாதிரி பாக்கறா , மூஞ்ச பாக்காம அடிக்கடி மாரையே பார்த்து பேசுறானுங்க. அங்க என்ன ஏதும் எழுதி ஒட்டியிருக்கா என்ன? ஸ்கூல்ல ஆறாவது  படிக்கும்போது, மேல் பை வச்ச சட்டைதான் போடுவோம். அப்ப கூட அந்த கட்டையில போற நாயி, காசு ஏதும் வச்சிருக்கியானு மேல் சட்ட பையில கைய வுடுற மாதிரி மார புடிச்சி கிள்ளியிருக்கான். அவன் சாதி பொண்ணா இருந்தா அவ மேல கை வச்சி இருப்பானா? நாம கீழனு அவன்  எளக்காரமா நினைக்குறதலா துணிஞ்சி மேல கைய வச்சான். அதுவும் சண்முகம் கடையில. அதுல இருந்து தெருவுல அந்த நாயி எந்த பக்கம் வந்தாலும், அவன பாக்காத மாதிரியே வேற பக்குட்டு ஓடியாந்துடுவேன் , இப்ப கூட அந்த பொம்பள பொறுக்கி கருப்பையாவ பாத்தா பத்திகிட்டு வருது கட்டைய எடுத்து நாலு சாத்துசாத்தனும்னு தோணுது. என்ன பண்ண மனசுல தான் நினைக்க முடியுது.

வயசுக்கு வரும்போது கூட, மாமன் சீரு கொண்டுவந்த பொம்பளைங்க சல்லடையில ரோஜா பூ, போட்டு தண்ணி ஊத்தி குளிப்பாட்டும் போது, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. ஆனா, என்னடி கொஞ்சம் கூட மாரு வரல, அதுக்குள்ள வயசுக்கு வந்துட்டா, மாரே இல்ல, நீ மாராப்பு சேலை போடப்போறனு அத்தமாருங்க கிண்டல் பண்ணாங்க.. இப்படியே தன்னோட கடந்த கால வாழ்க்கையில நடந்த விஷயங்கள எல்லாம் நினைச்சி பாத்துகிட்டு இருந்தா வசந்தி.

அப்ப..திடீருனு அவளுக்கு மல்லிகா ஞாபகம் வந்துச்சி. மல்லிகாவும், வசந்தியும் ஆறாம் கிளாஸுல இருந்து 10 கிளாஸு வர ஒன்னா படிச்சவங்க. ஸ்க்கூல் படிக்கும்போதே மல்லிகா மாரு பெருசா இருக்கும்.  நம்ம ஸ்க்கூல்லையே யாருக்கும் இவ்வளவு பெரிய மாரு இருந்தது கிடையாது அப்போதைக்கு, அவ எப்போதும் நெஞ்ச நிமித்திக்கிட்டுதான் நடப்பா ,எல்லா புள்ளைங்களோட சேந்து நானும் அவள எப்படி கிண்டலடிச்சிருப்பேன். கொஞ்சம் குனிஞ்சி நட, நெஞ்ச நிமித்திக்கிட்டு நடக்காதனு எவ்வளவு சொல்லிருப்போம். இவ்வளவு ஏன் நம்ம டீச்சருங்க எத்தனி பேரு அவள கூப்புட்டு இத சொல்லியிருக்காங்க. அப்ப அவ என்ன நெனைச்சி இருப்பா? ச்சே… பாவம் மல்லிகா. இப்ப நமக்கு நடக்கும்போதுதான் தெரியுது  இது இவ்வளவு வலிய குடுக்குதுனு.

ஆனா, அவள மாறி எனக்கும் எடுப்பா எப்ப பெரிய மாரு வரும்னு நெறையாவாட்டி ஆசப்பட்டு இருக்கேன் பள்ளிக்கூடம் படிக்கும்போது. கண்ணாடி முன்னாடி நிக்கும்போதெல்லாம் நெஞ்ச நிமித்தி சட்டையை இழுத்து புடுச்சி எவ்வளவு வளர்ந்துருக்குனு பாத்துருக்கேன். ஆனா, இன்னைக்கு…
வசந்தி பழசெல்லாம் நினைச்சிட்டு இருக்குபோது, வசந்தி.. ஏ ..வசந்தினு கத்தி கூப்பிட்டுட்டா பொன்னுத்தாயி… பழைய நெனப்பெல்லாம் எல்லாம் மூட்டகட்டிட்டு, இதோ வந்துட்டேன் ம்மானு சொல்லிக்கிட்டே எந்திருச்சு வந்தா வசந்தி.

“போயி நம்ம சண்முகம் கடையில சீரகம் இருந்தா வாங்கிட்டு வா, ரசம் வைக்கணும் இந்தா பத்துரூபா” ன்னு கொடுத்தா.
காச வாங்கன வசந்தி ஷால எடுத்து மேல போட்டுக்கிட்டா, இப்படி போடாத  கழுத்த சுத்தி தொங்கவிட்ட மாதிரி போடு. நீ அப்படி போட்டீனாபாரு இரண்டு சைடும் மாரு தெரியுது. தெரியாத மாதிரி சுத்தி போடுனு பொன்னுத்தாயி சொன்னவுடனே பொன்னுத்தாயை ஒரு மொற மொறச்சிட்டு அப்படியே மாத்திப்போட்டுகிட்டு கடைக்கு போனா வசந்தி.

ஏன் அம்மா எப்பப்பாரு என் மாரு மேலயே குறியா இருக்காங்க. நான் நின்னா, நடந்தா படுத்தானு எப்பா பாரு மூடு மூடுனு சொல்லுறாங்க. அதுவும் நிக்கும்போது சில நேரம் என் மாரையே பாத்துக்கிட்டு இருந்தா? எவ்வளவு கோபம் வரும். நான் வேணா கத்தி எடுத்து அறுத்துகிட்டான்னு கூட பல தடவை கேட்டுருக்கேன். ஏன்தான் எல்லாம் இப்படி இருக்காங்களோனு  நினைச்சுகிட்டே கடைக்கு நடந்து போயிட்டு இருந்தா வசந்தி.

அப்ப மாரியம்மன் கோயில் தெருவுல இருக்க சுமதி அக்கா அந்த வழியா வந்தாங்க. வசந்திய பாத்ததும், என்ன வசந்தி இப்பெல்லாம் வெளிய ஆளையே காணும். என்னாச்சி? ஏதும் பிரச்சனையானு விசாரிக்க ,அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. காலேஜ்ல எக்ஸாம் இருக்கு அதுதான் படிச்சுக்கிட்டு இருக்கேன்னேன்.

என்னடி பொழுதன்னிக்குமா படிக்கிற. அப்படியே வெளியில வந்தியா. நம்ம வயசு புள்ளைங்க கிட்ட பேசுனியானு, கொஞ்சமாவது இருடினு சுமதி சொல்ல, சரிக்கானு தலைய ஆட்டுனா வசந்தி.

அப்புறம் உங்கிட்ட ஒன்னு கேக்கணும். தப்பா நெனச்சிக்காத. யெப்படி டி உனக்கு மட்டும் நல்ல எடுப்பா பெரிய மாரா இருக்கு எனக்கும் ஏதும் ஐடியா சொல்லேன். நானும் ஃபாலோ பண்ணுறேன். உன் மாமன் வேறே என்ன எப்ப பாரு திட்டிகிட்டே இருக்கான். சப்பச்சி சப்பச்சினு. ஆனா, உன் வூட்டுக்காரன் ரொம்ப கொடுத்து வச்சவன் நீ தான் செம்ம கட்டையா இருக்கியே!

அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. ஏன் இப்படி எல்லாம் என்கிட்ட பேசுறீங்க? கேக்குறீங்க?

சரிவிடுடி. கோவிச்சிக்காத. உன் அக்காதானே கேட்டேன். அப்புறம் ஒன் அம்மாக்காரிகிட்ட இதெல்லாம் சொல்லாத அப்புறம் என்புள்ளகிட்ட என்ன பேசுனனு என்னைய திட்டுவா.

வசந்தி ஏதும் பேசாம அமைதியா நடந்துபோனா…

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம், நான் இங்க ஓயர்மேன் தங்கவேல பாக்க வந்தேன். நான் போறேன். நீ போடினு சொல்லிட்டு சுமதி மேற்கால தெருவுக்கு போனா..

கடைக்கு போன வசந்தி சீரகம் வாங்கிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகிட்டு இருந்தா. பக்கத்து வீட்டு வயசான கிழவி திண்ணையில உட்காந்து வேடிக்க பாத்துட்டு வெத்தல போட்டுக்கிட்டு இருந்தா, சேலைக்கு கீழ அந்த கிழவியோட மாரு தொங்கிபோயி இருந்தத பாத்தா வசந்தி எப்பவும் ஜாக்கெட்டு போடாம வட்டம் மாதிரி சேலைய மட்டும் உடம்புல சுத்திருப்பா செல்லம்மா கிழவி. அவ சேலையும் ரொம்ப சுருங்கி போயி மாரு தொங்குறது நல்லா தெரியும். வயசான கிழவிங்குறதால யாரும் கண்டுக்க மாட்டாங்க. கிழவிக்கு வயசானதால சரியா கண்ணும் தெரியாது, காதும் கேக்காது. அப்படியே பொழப்ப ஓட்டுது. ஆனா, வயசுல இந்த செல்லம்மா கிழவி அவ்வளவு அழகா இருப்பானு எங்க அம்மா சொல்லி கேட்டுருக்கேன். நல்ல உயரம், ஒடம்பு, கலருன்னு ஆளு பாக்க நச்சுனு இருப்பாளாம். அப்பெல்லாம் ஊருல நெறையா ஆம்பள கண்ணு இந்த கிழவி மேலதான் இருக்குமாம். பொம்பளைங்களும் பாத்து பொறாம படுவாங்களாம். எனக்கு எப்படி பெரிய மாரு இருக்கோ, அதே மாதிரி இந்த கிழவிக்கு வயசுல நல்ல எடுப்பா பெருசா இருக்குமாம். என்னைய திட்டும்போது ஒருதடவ அம்மா இப்படி சொல்லி திட்டிருக்கா. கிழவிய பாத்துக்கிட்டே வீடு வந்து சேர்ந்தா வசந்தி.

பொழுது சாஞ்சதும் கிரிக்கெட் விளையாட போன கண்ணன் வீட்டுக்கு வந்தான். கண்ணனும் அவன் பங்குக்கு வசந்திகிட்ட நைட்டி போட கூடாது, ரொம்ப டைட்டா எந்த துணியும் போட கூடாது, லெக்கின்ஸ் ஜீன்ஸ் இதெல்லாம் போட கூடாதுனு தங்கச்சிக்கு கண்டிஷன அடுக்கிட்டே போனான். ஏன்னா பசங்க பொண்ணுங்களோட ட்ரெஸ்ஸ வச்சி, அவங்கள எப்படி பாப்பாங்க, டைட்டா ட்ரெஸ் போட்டா எப்படி கிண்டல் பண்ணுவாங்கனு எனக்கு தெரியும். அதுனால நீ இந்த மாதிரி எல்லாம் இருக்க கூடாது. என் தங்கச்சிய எவனும்  அப்படி கிண்டல் பண்ண கூடாதுனு நிறைய தடவ வசந்தி கிட்ட சொல்லுவான் கண்ணன். பதிலுக்கு வசந்தியும், பசங்க இப்படி பாக்குறது தப்பில்ல, பொண்ணுங்க இப்படி ட்ரெஸ் போடுறது தப்பா? பாக்குற உங்க பார்வையிலதான் தப்பு இருக்குனு சொல்லி அண்ணன்கிட்ட நல்ல அடியும் வாங்கிக் கட்டிருக்கா வசந்தி.

இஞ்சினியரிங் நாலாவது வருஷம் படிச்சிட்டு இருக்கான் கண்ணன். அவன் படிக்குற காலேஜ்லயே தங்கச்சி வசந்தியையும் சேர்த்து விட்டான். வசந்தி இரண்டாவது வருஷம் படிக்கிறா.

இருட்டுனதும் எல்லாம் சாப்பிட்டு 10 மணி வாக்குல படுத்தாங்க. மல்லாக்க படுத்து இருந்த வசந்திய, பொன்னுத்தாயி, தெனம் உன்கிட்ட சொல்லுவாங்களா? பொம்பள புள்ளையா ஒருக்கலிச்சி படுக்க தெரியாதா? கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கம் இல்லாம மல்லாக்க படுத்து இருக்க. நீ என்ன ஆம்பளையா அப்படி படுக்கற, அண்ணன், அப்பா இருக்காங்கனு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. ஒழுங்கா ஒருக்களிச்சுப் படுனு சொன்னா பொன்னுத்தாயி, இந்தா மேல துணிய போட்டுக்கோனு ஷால தூக்கி வசந்தி மேல போட்டா.

பதில் ஏதும் பேசாத வசந்தி துணிய மாரு மேல போட்டுக்கிட்டு ஒருக்களிச்சி படுத்தா. விளக்க அணைச்சிட்டு எல்லாரும் தூங்குனாங்க. ஆனா, வசந்திக்கு மட்டும் துக்கம் வரல. அவ மனசுல ஆயிரம் கேள்விகளும், வெறுப்பும், கோபமும், வருத்தமும் இருந்துச்சி. எல்லாம் அவ முன்னாடி  கடலலை மாதிரி மனசுல வந்துவந்துபோயிகிட்டு இருந்துச்சி. தினமும் காலையில எழுந்ததுல இருந்து நைட் தூங்குறது வர இதுபோல ஆயிரக்கணக்குல சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஒவ்வொரு நாளுதான் வேறெயே தவிர திட்டுக்களும், பேச்சுக்களும் ஒன்னுதான்னு நினைச்ச வசந்தியோட கண்ணுல இருந்து வந்த கண்ணுத் தண்ணி அவ துப்பட்டாவுல விழுந்து கரஞ்சது.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. அம்மம்மா எவ்வளவு வலி நிறைந்த வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button