
பெருநீலம் தன்போக்கில் நுரைகளை உற்பத்தி செய்துகொண்டேயிருந்தது. ஏதோவொரு விசை அதை இயக்குவதுபோல. அத்தனை இயக்கத்திலும் ஓர் அமைதி. சற்றுத் தள்ளிப் போனால் இந்த நீலம் அமைவதில்லை. கடும் மாசு. சில இடங்களில் நீலம் கருப்பாகி நாற்றமடிக்கத் தொடங்கியிருந்தது. உப்பு வாசனையோடு எழும் காற்றும் மெல்லிய வெப்பக் குளிருமாய் இந்தக் கடலோடு அருகிருப்பது பரவசம். நீலப்பெருங்கடல் தன் போக்கில் நுரைத்துக் கொண்டேயிருந்தது.
*******
அப்போதுதான் கசடுகளை எல்லாம் சுத்தப்படுத்திவிட்டு, கணக்கு வழக்குக்குள் மூழ்கியிருந்த நான் காம்பவுண்டுக்குள் ஏதோ வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன். இரண்டு பேர் இன்செர்ட் செய்த சட்டை பேன்ட், ஷூ அணிந்து டிப் டாப்பாக உள்ளே நுழைந்தனர். சரக்கு எடுக்க வந்திருக்கும் கஸ்டமராக இருக்கும், மலர்ச்சியுடன் வரவேற்றேன்.
‘வாங்க சார், என்ன வேணும்?‘ புன்னகை மாறாமலே கேட்டேன்.
‘நாங்க ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் . என்ன நடக்குது இங்கே?’
அது புதிதாய் தொடங்கியிருந்த பிளான்ட். ஆள்நடமாட்டம் மிகக்குறைவான புறநகர் பகுதியில் கடற்கரையை ஒட்டி உப்பளம் அருகில் FFF (Felcia Frozen Food) என்னும் பெயரோடு அமைந்த கடல் உணவுகள் தயாரிக்கும் பேக்டரி. அந்த இடத்தைப் பகலில் பார்த்தாலே ஏதோ குற்றங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இடம் போல இருக்கும். அபப்டியோர் அமைதி. புறநகர் பகுதி என்பதால் அதிகளவில் கடத்தல் நடக்கும் இடம். குற்றங்களுக்கும் சாவமைதிக்கும் எப்போதும் தொடர்புண்டு.
‘வாங்க சார்’
கட்டிங் செய்யும் இடம், கழிவுகள் இடும் பேரல்கள், சுத்தம் செய்யும் டேபிள்கள், பேக்கேஜிங் அறை எல்லாம் சுற்றிக் காட்டிவிட்டு உள்ளே குளிர் பதன அறைக்குள் அழைத்துச் சென்று காண்பித்தேன். வந்தவர் கணவா பாக்கெட் ரெண்டும், நண்டு மீட் டப்பாவில் இரண்டையும் எடுத்தார், ‘’சார், ஓனர்ட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு வாரேன்.’’ போனை எடுத்த என்மீது மேலும் கீழும் கண்களை ஓட்டி வேலைக்குப் புதிதா என்பதுபோல் பார்த்தார்.
‘தடை செய்யப்பட்ட சரக்கு ஏதாவது இருக்கா?‘
‘எதெல்லாம் தடை செய்யப்பட்டதுன்னு எனக்குத் தெரியாது சார். நீங்க சொன்னா எது இருக்குன்னு சொல்லுதேன்.’ ஃபாரஸ்ட் ஆபீசர் என்னிடம் ஏனோ கோபப்படாமல் இயல்பாக நடந்துகொண்டார்.
பாரஸ்ட் டிபார்ட்மென்ட் அப்போது அங்கு தடை செய்யப்பட்டிருந்த கொம்பு மீன் திருக்கை, அதைப்போல் கடல் குதிரை, நட்சத்திர ஆமை, நட்சத்திர மீன், கடல் அட்டை இவற்றையெல்லாம் சோதனை செய்ய வருவார்களாம். தடை செய்யப்பட்ட உயிரினங்ளை வைத்திருந்தால் அதற்குரிய வழக்குகள் செக்ஷன்கள் தண்டனைகள் குறித்து அவர் பொறுமையாகச் சொன்னார்.
‘சார், அதுக்கெல்லாம் இங்க வாய்ப்பு கெடையாது. இங்க நாங்க ஸ்குவிட்டு, பிறானு, கிரேபு இதுதான் மெய்னா எடுக்குதோம் சார்.’
நான் சொல்லி முடிக்கவும் தாமஸ் அண்ணனும் ஹ்யூபர்டும் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அதுவரை நின்றுகொண்டே இருந்தவர்களுக்கு தாமஸ் அண்ணன் சேர்கள் எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார். ‘இவர்தான் சார் ஓனர்’ நான் தாமஸ் அண்ணனைக் கைகாட்டினேன். ‘தெரியுது’ என அண்ணனிடம் சில கேள்விகள் கேட்டு திருப்தியாக முகத்தை வைத்துக் கொண்டார். வழியனுப்பும்போது சத்தமாய், ‘அண்ணே, சார் சரக்கு கேட்டாரு’ என்றேன். தாமஸ் அண்ணன் சைகையால் என்னை அமர்த்திவிட்டு மெதுவான குரலில், ‘போய் பேக் பண்ணி எடுத்திட்டு வாங்க சகாயம் அண்ணே‘ என்றபடியே ஆபீசர்களோடு வெளியே சென்றார். நான் ஹ்யூபெர்டிடம் சரக்கை எடுத்துக் கொடுத்து பேக் செய்யச் சொல்லிவிட்டு முற்றத்துக்கு வந்தேன். வெளியே ஜீப்பிலும் ஜீப்பைச் சுற்றியும் பாரஸ்ட் ஆட்கள் நாலைந்துபேர் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.
ஹ்யூபர்ட் ஜீப்பின் பின்புறம் அட்டைப்பெட்டியை ஏற்றிவைத்துவிட்டு மரியாதையான உடல்மொழியோடு ஒதுங்கி நின்றான். ஜீப் புறப்பட்டது. தாமஸ் அண்ணன் என்னிடம் திரும்பி சிறு புன்னகையோடு கனிந்த குரலில் சொன்னார்.
‘’சகாயம் அண்ணே, கொஞ்சம் அனுசரிச்சுதாம் போணும். டிபார்ட்மென்ட்காரங்களாக்கும் என்னத்தையும் செய்து வச்சிட்டுப் போய்டானுவன்னா பாடி தீராது பாத்துக்கிடுங்க. நீங்க இங்க வந்து ரெண்டு வருசம் ஆயாச்சில்லா? பழைய மாரியே இருந்தா எப்படிணே? ஆபீசர்மாருவகிட்ட பாத்துப் பேசணும் பாருங்க ’’
***********
சிறு சிறு அலைகள் நடுக்கடலில் தோன்றி மறைந்து கொண்டேயிருக்கிறது. அந்த இடங்களில் காற்றின் வீச்சு அதிகமிருக்கும் போல. சிற்றலைகள் வெளிச்ச நாட்களில் அழகு கூட்டும். அங்கு சிலநேரம் பாறைகள் இருக்கலாம். கரையிலும் மேடான இடங்களில் அலை இறங்கும் இடத்தில சுழிகள் இருக்கும். சற்று அலட்சியமாய் நின்று கொடுத்தாலும் இழுத்து உள்ளே சுருட்டிவிடும். கள்ள அலைகள். அழகும் ஆபத்துமானது இந்தக் கடல். எல்லாவற்றையும் போல.
***********
இறால், கணவா, நண்டு இந்த மூன்றும்தான் பிரதானம், இதெல்லாம் ரெடி டூ ஈட் பதத்திலான ஆயத்தத் தயாரிப்பு; சிலநேரங்களில் ஸ்வோர்ட் பிஷ், ஈ ஸ்வோர்ட், ஐரிஸ் போல பெரிய மீன்கள்.
லோட் வரும். வந்தவுடன் இறக்கி வெட்டும் மேஜையில் ட்ரேக்களை அடுக்கி வைத்துவிட்டு. ப்ரொடக்ஷன் யூனிட்டில் மீன்களை வெட்டி கழிவு அகற்றும் வேலை, அடுத்து கிளீனிங், மெர்சியும், சிசிலியும், லெட்சுமியும் சுத்தம் செய்துவிடுவார்கள். கிளீனிங் ப்ராசஸ் முடிந்தபிறகு கோல்ட் ஸ்டோரேஜ் ரூமுக்குள் வைத்துவிட வேண்டும். பிறகு பேக்கேஜிங். எல்லா ப்ராசஸும் முடிந்த லோட் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போய் குறிப்பிட்ட முகவரிகளுக்குப் போய்விடும். கணினி வேலைகளோடு எல்லா வகையான ப்ராசஸ்களையும் யார் வரவில்லை என்றாலும் அந்த வேலையையும் சேர்த்து நான் பார்த்துக் கொள்வேன். கணக்கு வழக்குப் பார்க்கும் மேஜையின் அருகில் பெரிய கண்ணாடி சட்டமிட்ட ஜன்னல். அதன் வழியே பார்த்தால் பரந்து விரிந்த நீலக்கடல். வேலை நேரங்களிலும் நான் வேடிக்கைப் பார்க்கும் ப்ளாண்டிலேயே எனக்குப் பிடித்த இடம்.
இரண்டு வருடங்களுக்கு முன் புதிதாய் வந்த போது தாமஸ் அண்ணன்தான் சொல்லிக்குடுத்தார்.
‘’எல்லாம் ஐடியாதான் வேற ஒண்ணுமில்லைண்ணே. நமக்குத் தேவை என்ன ஈல்ட். அதுக்கு கழிவு குறைவா இருக்கணும். அம்புடுதான்.‘’ நான் கட்டிங்கில் தேறினேன்.
‘’இதப் பாத்தியளா இதுதான் ஐஸ் ஜெல். நம்ம உடம்புக்கு ஒரு டெம்பெரேச்சர் இருக்கில்லா கூடினா காய்ச்சல் கொறைஞ்சா குளிர்னு. செத்துப்போன பொறவு ஒரு குறிப்பிட்ட டெம்பெரேச்சரை நெலைப்படுத்தணும் இல்லயா? அம்பிடுதான் பாத்துக்கிடுங்கண்ணே. முன்னடி எல்லாம் ஐஸ் கட்டிதான். இப்பதான் ஜெல் வந்திருக்கு. ஜெல்லை சீரா சமமா அடுக்கி பேக் பண்ணிட்டா போதும். அவ்வளவுதான்.’’ நான் பேக்கேஜிங்கிலும் தேறினேன்.
தாமஸ் அண்ணன் எல்லோரையும் அண்ணே, அக்கா என்றுதான் அழைப்பார். பேக்டரியின் எல்லா வேலைகளும் அத்துப்படி. சிறுவயதில் மீன் பிடிக்க போனதிலிருந்து உறை உணவு தொழில் வரை ஆழ்ந்த அனுபவம். இந்தத் தொழிலில் இப்போது பிரபலமாக இருக்கும் நிலோபர் சீ ஃபுட்ஸ், பசிபிக் ப்ரோசர்ஸ் எல்லோருக்கும் அவர்களின் தொடக்க காலத்தில் உறுதுணையாய் நின்றவர் தாமஸ் அண்ணன். தொழிலில் பல ஆழ அகலங்களையும் கண்டு தற்காலம் சிறு நஷ்டம் எனக் கேள்வி. வீழ்ந்துவிடாத நட்டம்தான். இந்த பேக்டரி அம்மா பேரில் வைக்க வேண்டும் என்ற ஆசையின், ஒரு சிறு முதலீட்டு நேரம் போக்கு கிறுக்கு. ஆனாலும் தினமும் வருவார். சரியான ஆட்கள் அமைந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேறு ஒரு தொழிற்சாலை. தாமஸ் அண்ணன் பெரும்பாலும் யோசனைகளைச் சொல்வதில்லை. வேலை பார்ப்பவர்களின் இஷ்டத்துக்கு விட்டுவிடுவார். ஏற்படும் சிக்கலகளை அவரவரே சந்தித்துக் கொள்ளவேண்டும். ‘சுழியில சிக்காம கடலு அறிய முடியுமா?’ என்பார்.
இதுவல்லாமல் தாமஸ் அண்ணன் நல்ல விசுவாசி. ‘’கடலுக்கு போறவங்க விசுவாசிகளா இருக்கது உயிர் பயத்தாலன்னு நெனைப்பாங்க, அப்படியில்ல. அவ்வளவு பெரிய கடலைப் பாத்தா நாம எவ்வளவு அற்பம்னு தெரியும். அதுவும் விண்வெளி மாதிரிதான். அறிய முடியாது. அந்த ரகசியங்கள் புரியாது. எல்லாம் ஆண்டவருக்க மகிமை. எதுக்கு இது? யாரு செஞ்சது இதுன்னு? குழம்பி குழம்பி தவிச்சு குழப்பம்தான் மிஞ்சும். அதுக்கு ஆண்டவர நம்பிட்டு தெளிவா இருக்கலாம். இன்னும் முழுசா நம்பிட்டா விடுதலையா இருக்கலாம். அதுதான் சொர்க்கம். நம்புதவளுக்கு சொர்க்கம் நம்பாதவகளுக்கு நரகம்னு இதைதான் சொல்லுதாவ. அறிவால ஜெயிக்க முடியாதத விசுவாசத்தால ஜெயிக்கலாம். இதுக்கு பேருதான் ஞானம். கேட்டியளா சகாயம் அண்ணே நம்மளால என்ன நடந்திரும் பாருங்க. என்ன எல்லாமோ செய்திருக்கேன். எதுவும் நம்ம கைல இல்லல்லா. இதுதான் நான் படிச்சுகிட்டது. இப்ப நான் சொந்த புத்திய பயன்படுத்த மாட்டேன் பாத்துக்கிடுங்க.. எல்லாம் ஆண்டவருக்க சித்தம். இந்த அறிவு, ஞாபகத்தில வைக்கேது இதெல்லாம் தேவையில்லாத சொம, பிளாண்டல எவ்வளவோ நட்டம் வந்தாலும் எனக்கு இங்க உள்ள வந்த ஒடன எல்லாம் மறந்திரும். ஒலகத்தில என்ன நடக்குதுன்னு தெரியாது, என்ன நடந்தாலும் கவலையும் இல்லை. ஒரு மறதி மாரி. ஆண்டவருக்கிட்ட ஒப்புக்குடுத்து பதினஞ்சு வருஷம் ஆச்சு’’
தாமஸ் அண்ணன் வேலை பார்ப்பவரிடம் அத்தனை உள்ளன்போடு இருப்பவர். அவருக்கு விசுவாசிகள் அதிகம். பண விஷயத்திலும் தாராளம். வாரமோ மாதமோ எப்போது தேவை என்றாலும் கேட்ட ஒருமணி நேரத்துக்குள் பணம் சேர்ந்துவிடும்.
*************
கடலின் இந்தப் பகுதியில் சற்று ஆழம் கூடுதல்தான். ஆழக்கடல்களில்தான் துறைமுகங்கள் அமையும். ஆழத்தில் அழுத்தம் கூடும். ஆழம் போகப் போக அங்கிருக்கும் ஜீவராசிகளின் உரு பெருக்கும். கடலின் ஆழத்தில் மலைகள் நதிகள், நீர்வீழ்ச்சிகள் கூட இருக்கும். எரிமலைகளும். அவை வெடிக்கவும் செய்யும். யாரும் அறியா பெருவெடிப்புகள்.
********
நான் தாமஸ் அண்ணனைப் பார்ப்பதற்கு முன்பு வரை அறிந்ததெல்லாம் குற்றங்கள். குற்றங்கள் மட்டும்.
சிறுபருவத்தில் துடுப்பற்று காற்றின் ஓட்டத்தில் எங்கெங்கோ அலைக்கழிந்து பாறை மோதி உடைந்து நொறுங்கிய படகொன்றின் மரக்கட்டை. சென்று கரைசேர்ந்தது காரிருளின் பள்ளத்தாக்குகளில். பருவங்கள் கூடக் கூட குற்றங்களும் வளர்ந்துகொண்டேயிருந்தது. சிறு குற்றவுணர்வும் இல்லாத குற்றங்கள். அதன் எதிர்பாராத வசீகரத்திற்காகவே மீண்டும் மீண்டும் வெறியேற்றும் குற்றங்கள். குற்றங்களின் செய்நேர்த்தி மிளிர்ந்துகொண்டேயிருந்தது. அதன் துல்லியம் மீண்டுமொரு குற்றத்தின் படிக்கட்டில் ஏற்றிக்கொண்டது.
குற்றம் – கூலி இதுதான் அங்கு நடைமுறை.
இதில் ஏமாற்றம் இருக்கக்கூடாது. இதுதான் நியதி. நான் பணக்கணக்கின் மீது காதல் கொண்டதும் இப்படித்தான். நான் இலக்கில்லா எல்லையில்லா படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டேயிருந்தேன். எவர் மீதும் ஸ்நேகமில்லை. எவர் மீதும் வெறுப்புமில்லை. ஒரு குற்றத்தில் ஈடுபடும்போது மட்டுமே நான் உயிர்வாழ்வதாக நினைத்துக்கொண்டேன். குற்றத்தின் உயிர்ப்பு என்னைக் கட்டிப் போட்டிருந்தது. ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு நியாயத்தை வழங்கிக்கொண்டிருந்தது. பருவத்துக்கு ஏற்ப குற்றங்கள் வளர்ந்து பூதாகரமாய் ஆயின. இருளுக்குள் இருந்த படகு வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது. குற்றத்தின் மீதான என் அந்தரங்க ரசனைகள், என் அதீத ஒழுங்கு, என் நேர்த்தி, என் கட்டுப்பாடு எல்லாம் மெல்ல தகர்ந்துபோக ஆரம்பித்தன. அதுவரை என் கண்களுக்குள் வராமல் மறைந்திருந்த சுடர்கள், குற்றமற்றவற்றின் அழகுகள் மெல்ல தன் இதழ்களை விரித்துத் திறந்தன. நான் நிறங்களின் ஒளிர்வை முதன்முதல் கண்கொட்டாமல் பார்த்தேன். குருதி வாசனை மட்டுமே அறிந்த என் நாசி வாசனைத் திரவியங்களின் கண்ணுக்குத் தெரியாத மயக்கத்தை அறிந்தன. அப்போது கேட்ட இசையின் ஒழுங்கு குற்றத்தின் போதையை எனக்களித்தது. ஏதோ ஒரு கரத்தின் ருசி நான் உண்ட உணவில் கலந்திருந்தது. கூட்டத்தில் என் தோல் உரசிய கைகளின் ஸ்பரிசம் என்னை ஓரிரவு முழுக்க கொன்றுபோட்டது. என் புலன்கள் ஒவ்வொன்றாய் விழித்து என்னை நான் விரும்பாத, நான் அறிந்திடாத, வெளிச்சத்தின் கரங்களில் ஒப்படைத்தன.
வெளிச்சம் குற்றத்தின் எதிரி.
நான் ஒரு சமயம் குற்றங்களிலிருந்தும் பிறிதொரு சமயம் வெளிச்சத்திலிருந்தும் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தேன். குற்றங்களிலிருந்து தப்பித்து குற்றங்களில் விழுந்து கொண்டிருந்த நான், குற்றங்களிலிருந்து தப்பி புலன்களின் கட்டுக்குள் வீழ்ந்துபட்டேன். அப்போதுதான் முதன் முதலில் ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டேன். பாதிப்பின் வலி அறியும் சந்தர்ப்பத்தை நான் ஏனோ எனக்குக் கொடுத்துக்கொள்ளவிவில்லை. குற்றத்தின் நதிமூலம் சிறிது காலத்தில் அழிக்கப்பட்டது. ஆனால், அதன் பாதிப்பு நீண்ட காலம் தொடர்ந்தது. அதிகாலை ஓர் வினோத உணர்வு. அன்றுதான் நான் முதன்முதலில் குற்றவுணர்வின் தீண்டலுக்கு ஆளானேன். எனக்குத் தேவை ஒரு மன்னிப்பு. படகு இனி அந்த இடத்தின் இருளுக்குள்ளும் நீடிக்க முடியாது. துரத்திக் கொண்டேயிருந்த கடைசி நேரக் கண்களை விட்டு ஓடிக்கொண்டேயிருந்தேன்.
பழைய குற்றங்களின் பழைய நட்புகளில் ஒருவன் வழிநடத்தி இங்கு வந்து சேர்ந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது. அறிமுகத்தின்போது தாமஸ் அண்ணன் என்னை ஐந்து வினாடிகள் ஊடுருவிப் பார்த்தார். உயிருக்குள் ஒரு சிறு மின்னல் வினாடி நேரம் துடித்து உடலெங்கும் பரவி வெளியேறியது. என் பாவங்கள் அடுத்த வினாடியில் கழுவப்பட்டு கரைந்தன. நான் என் குற்றங்களிலிருந்து சொஸ்தமானேன். எனக்குள் இதுவரை இல்லாதவொன்று உள்ளிருந்து ஊற்றெடுத்தது. நான் யாரோ ஒருவரால் மன்னிக்கப்பட்டேன். இது போதும் எனக்கு .
ஆகாயத்தில் வெண்கொக்குகள் சிறகடித்து உயர்ந்து பறந்தன.
*******
திடீரென மழை. வானிலிருந்து சரசரவென பல லட்சம் அம்புகள் ஒருசேர குத்தித் துளைத்தன. நீலம் நிறம் மாறியது. அதன் மேற்பரப்பெங்கும் துளைகள். மழைநீரை தாகத்தோடு அருந்திக்கொண்டிருந்தது ஆழி. கடலின் உடல் முழுதும் அம்புகள் துளைத்த இடங்களில் குமிழ்கள். அலைகளை மீறிய இரைச்சல். அலைகளுக்கு இடையேயான அமைதியைக் குலைக்கும் இரைச்சல்.
*********
சிசிலியை வேலைவிட்டு நிறுத்திய மூன்றாவது நாள் எதிர்பார்த்ததைப் போல வந்தவுடன் கோபத்தோடு ஆரம்பித்தான் குமார். பிளாண்டின் லோட் ஆட்டோ டிரைவர். அலுவலகத்தில் நான் மட்டும்.
‘’இவரெல்லாம் ஒரு மனுசனா சகாயமண்ணே, பெரிய விசுவாசின்னு வேற சொல்லிக்கிடுதாரு. இவருக்க சர்ச்சுக்குப் போனாத்தான் வேலயாம். இல்லேன்னா வேலை இல்லையாம். வேற ஏதாவது காரணம் சொல்லிருந்தாலும் ஏத்துக்கலாம் சகாயம்ணே. எந்த விசுவாசியாவது இப்பிடிச் சொல்லுவானா? அந்த பிள்ள கோவிலுக்கே போவமாட்டேன்னு இருக்கு. அதிட்டப் போய் இப்பிடிச் சொல்லலாமா? வேலையைப் பத்தி கொற சொல்லி அனுப்பிச்சி விட்டாக்கூட ஏத்துக்கலாம். முழுசா ஒரு வருசம் சகாயம்ணே அவ இங்க வந்து சேந்து. அவளைப் போல வேலை செய்யக்கூடிய ஆள இவரு எங்கயாவது பாத்திருப்பாரா? வேணும்னா பாரும் அவள வேலைய விட்டு தூக்கினதுக்கு இவரு அனுபவிப்பாரு. எத்தன கோடி குடுத்தாலும் அவளைப் போல ஒரு ஆளு அமையுமா சகாயம்ணே.’’
குமார் மூச்சு வாங்கப் பேசிக்கொண்டேயிருந்தான். நான் கணக்குப் பார்ப்பதை விட்டுவிட்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். குமார் விடாமல் கொந்தளித்து தாமஸ் அண்ணனை கரித்துக் கொட்டினான். நான் தர்மசங்கடமாய் நெளிந்தேன்.
‘’விடு குமாரு, அவளுக்க சாமர்த்தியத்துக்கு எங்க போனாலும் வேல கெடைக்கும்டே’’
‘’அப்படியில்லண்ணே அதுக்குன்னு இப்படி அவருக்க சர்ச்சுக்கு வந்தாத்தான் வேலைங்கது என்ன கணக்குண்ணே. எனக்குப் புரியல’’ குமாரின் குரல் ஆதங்கமாக மாறியிருந்தது.
அன்று பின்மதியம் சிசிலி கணக்குத் தீர்த்துப் பணம் வாங்கிப்போக வந்திருந்தாள். கொஞ்ச நேரம் வழக்கத்துக்கு மாறாக எதுவும் பேசாமல் சேரில் உட்கார்ந்திருந்தாள்.
‘’எக்கா எக்காண்ணு சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டாரு சகாயம்ணே. சொந்த அண்ணனப் போலயில்லா நெனச்சேன். எனக்கக் கத எல்லாம் அவருக்குத் தெரியுமில்லா. நான் இனி எங்கப் போவேன்னு கொஞ்சமாது யோசிச்சுப் பாத்தாராண்ணே? இது ஆண்டவருக்க இறுதி முடிவு.. சர்ச்சுக்கு வரலேன்னா இனிமே வேலைக்கு வராதேங்காரு“. மூக்கை உறிஞ்சினாள். “சரி, நான் எப்படியோ போறேன் அவருக்கென்ன? எனக்கத் தனிப்பட்ட விஷயத்தை இவருக்காண்டி மாத்தணுமா?” சிசிலி கண்கலங்கிக் கொண்டே கணக்கு முடித்து சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினாள்.
அவள் போன பிறகு நெடுநேரம் தாமஸ் அண்ணனைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருந்தேன். எனக்கு முன் இங்கிருந்த பிரில்லின்ட் நிறைய சொல்லியிருக்கிறான். ஒருகாலத்தில் தாமஸ் அண்ணன்தான் இந்தத் தொழிலில் ராஜா. கடலுக்கு போனால் வீட்டுக்கு வந்தால்தான் உண்டு. நிச்சயம் இல்லாத வாழ்க்கை. அதுகொடுத்த துணிச்சல் எப்போதும் அவரிடம். இந்தத் தொழிலில் யாரும் சாதாரணமாகத் தாக்குப் பிடித்துவிட முடியாது. ஆள் படை பணம் என அதற்கான எல்லா பலத்தோடும் இருப்பவர். இன்றிருக்கும் தாமஸ் அண்ணனின் பழைய பின்புலம் இங்கு யாருக்கும் தெரியாது. எனக்கும்; பிரில்லின்ட்டுக்குமேக் கூட முழுதாய் தெரியாது.
அது அப்படித்தான் சில நேரங்களில் ஒரு எதிர்பாராத அலை படகைக் கொட்டிக் கவிழ்த்துவிடும். முற்றிலும் புதிதாய் மாற்றிவிடும். தெய்வ சங்கல்பம், ஆண்டவரின் சித்தம், ஒரு மறுவாய்ப்பு எதுவாகவும் இருக்கலாம். அதைத் தொடர்வதுதான் உண்மையான பிரயாசம். அதுதான் அசல் சத்திய சோதனை.
*******
கடலின் நீரோட்டங்கள் விநோதமானது. கடலுக்குள் ஒரு பெரு நதி உடைப்பெடுத்து ஓடுவதுபோல நீரோட்டம் வேகம் இருக்கும். மேற்பரப்பில் தெரியும் நீரோட்டம் போலவே அடிப்பரப்பின் நீரோட்டம் வெளிப்படாது. இருதிசை எதிர் நீரோட்டம் எதிரெதிர் திசையில் நிகழும்போது மேற்பரப்பில் நீளவாக்கில் பாசிகள் மிதக்கும். ஒருதிசை நீரோட்டம் இழுத்துக் கொண்டு போய்விடும். படகும் வலையும் ஓரிடத்தில் நிற்காது. அடிப்பரப்பின் நீரோட்டம் புலப்படாதது. நீரோட்டங்கள் காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.
*********
தாமஸ் அண்ணன் கோபப்படுவதில்லை. கடந்த வாரத்தில் ஒருநாள் மாலை எல்லா ஸ்டாஃப்களும் போனபிறகு கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் வந்தார்.
‘அந்த பொண்ணு சிசிலி கத உங்களுக்குத் தெரியுமில்லா சகாயமண்ணே. ‘
அவள் வந்த புதிதில் ஒரு வாரம் என்னைத்தான் வண்டியில் பஸ் ஸ்டாப்புக்கு கொண்டுவிடச் சொன்னாள். ஒரு வாரத்துக்குப் பிறகு நான் நேரடியாகவே தாமஸ் அண்ணனிடம் சொல்லி தவிர்த்துவிட்டேன்.
‘அவ மாப்பிள வேலைக்குப் போவமாட்டான். இவளுக்கும் அவனுக்கும் மூணு வருசமா சண்டயாம். இப்ப மாப்பிளைகூட இல்ல. நல்லா வேல பாப்பா இல்லேங்கல. ஆனா, புதுசா யாரும் வேலைக்கு வந்திரப்பிடாது. ஏதாவது சொல்லி அவுகள வேலைய விட்டு தொரத்திடுதா. நானும் எல்லாம் அறிஞ்சும் ஒண்ணும் சொல்லல. இப்ப ஒரு மாசமா டிரைவர் குமாருதான் பைக்கில கொண்டு விடுதான். அவனுக்கு ரெண்டு பிள்ளையோ. ஊருல ஒரு மாரி பேச தொடங்கியாச்சு. நீங்க சொன்னவுடனே நான் மாத்திவுட்டேன் பாத்தியளா? எதுக்கு வேல செய்யக்கூடிய ஆளுவளுக்கு பெறச்சனைகள் வரக்கூடாதுன்னு நெனைக்கேன். அதுவுமில்லாம இது வெறும் அவுக ரெண்டுபேருக்கும் உள்ள விஷயமில்ல. குடும்பத்தில எல்லாருக்குமில்லா பாதிப்பு. குமார்ட்டையும் பேச முடியாது. இவகிட்டையும் கேக்க முடியாது. கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்ய நெறைய அனுபவங்கள். வேற வழிதான் பாக்கணும். சகாயம்ணே.’
நானே உணராத சிறு முடியளவு மென்மையான கோபத்தோடு தாமஸ் அண்ணன் சொல்லிமுடித்தார்.
*******
இரண்டு நாள் கழித்து லோட் ஏற்ற குமார் வந்திருந்தான். அன்றும் நான் மட்டுமே ப்ளாண்டில் இருந்தேன்.
‘என்ன சகாயம்ணே. ஒங்க மொதலாளி என்ன சொல்லுதாரு.’
‘அவருக்கு என்னடே தங்கம். ஆருகிட்டையும் சுடுசொல்லு பேச மாட்டாரு. இந்தா போன வாரம். நெத்திலி மீனு வந்துது. ரெண்டு பாக்ஸ். ஆக்கள் யாருமே கெடையாது . ஐஸ் போட்டு வைக்கச் சொல்லிட்டாரு. காலைல ஐஸ் போட்டுட்டேன். அன்னைக்கு ஒரு சோலியா சீக்கிரம் போணும். சாயங்காலம் மறுபடியும் ஒரு ஐஸ் அடிக்கணுமில்லியா அவசரத்தில மறந்திட்டேன். அடுத்த நாள் காலைல கூப்பிடுதாரு. சகாயம் அண்ணே. கொஞ்சம் கவனமா இருக்கணும். ஐஸ் போடலியே. அப்படிங்காரு. வேற மொதலாளின்னா கெண்டைக்கு மண்டைக்கு கேப்பானுவ. இவரு சிரிச்சிகிட்டே பச்சப்புள்ளைக்குச் சொல்லுத மாரி சொல்லுதாரு.‘
‘போண்ணே, என்ன பெரிய நட்டம்? அதை கருவாட்டுக்கு குடுப்பாரு. இல்லேன்னா எண்ணைக்கு குடுப்பாரு. இல்லியா தீவனத்துக்குக் குடுப்பாரு. பெரிய நஷ்டம் ஒண்ணுமில்லையே. அவரு அன்பானவரு கடுஞ்சொல்லு பேச மாட்டாருன்னா அவருக்கு வேல நடக்கணும். இது மொதலாளிமாரு எப்பவும் செய்யேது தானே.’
‘நீ என்னடே பெரிய கம்மியூனிஸ்து மாறி பேசுக. அவரு எத்தனவேருக்கு என்னென்ன செய்திருக்காருன்னு வெளியே கேட்டுப்பாரு. இந்த மெர்சி பிள்ளைக்க அம்மையும் அப்பனும் சுனாமில செத்துப் போய்ட்டாவ. இவருதான் எல்லாம் நின்னு நடத்தினாரு. சும்மா பைசா குடுத்தா நல்லாருக்காதுன்னு வேல போட்டு குடுத்தாரு அவளுக்கு வேலயே செய்யத் தெரியாது. அந்த பிள்ள லெட்சுமி இருக்கால்லா கோடி ரூவா குடுத்தாலும் வேற எங்கயும் போவாது. அவளுக்க மாப்பிள்ள இன்னைக்கு உயிரோட இருக்கான்னா அது தாமஸ் அண்ணன்னாலதான் பாத்துக்கோ.’ நான் கொஞ்சம் குரல் தொனியை மாற்றினேன். ‘சிசிலிய வேலைய விட்டு நிக்கச் சொன்னது எல்லாருக்கும் நல்லதுக்குத்தான். தெரியாம பேசாதடே குமாரு’
‘சரி இருக்கட்டு . ஒரு தடவ மன்னிச்சு விட்டா என்ன இப்ப? பெரிய விசுவாசியாம் விசுவாசி’
சட்டென வாய்க்குள் ஒரு கெட்டவார்த்தையை முணுமுணுத்தான் குமார்.
எனக்குள் என்ன நிகழ்ந்தது தெரியவில்லை. ஆவேசமாய் எழுந்தேன். பழைய குற்றங்களின் காட்சிகள் மூளைக்குள் ஓடி மறைந்தன. குமார் ஒரு கணம் என்னைக் கண்டு திகைத்து ரெண்டடி பின்வாங்கினான்.
‘ஒனக்கு என்னல தெரியும் அவரப் பெத்தி ராஸ்கல். ‘
என் முகம் முழுக்க ரத்தம் ஏறி சூடேறியது . ஒருமுறை தலையை உதறிக்கொண்டேன்.
‘அவருக்க மொவன். மூத்தப் பிள்ளை. சின்னப்பையன். ஒரு மூணு வயசுதாம் இருக்கும். தெருவுல வ்ளாண்டிட்டிருந்திருக்கான். எவனோ ஒருத்தம் வேகமா பைக்கில வந்தவன் இடிச்சிட்டான். இடிச்ச இடில பிள்ள ஸ்பாட் அவுட்டு. பைக்குக்காரன் பிள்ளயக் கொன்னுட்டாம். மொத்த தெருவும் கூடி நிக்கு. எல்லாம் சொக்காரனுவ. சுத்திட்டானுவ. பைக்குக்காரன் குடிச்சிருக்காம். அவருக்க சொந்தக்காரம் பூரா பைக்குக்காரன கொன்னுரலாம்னு நிக்கானுவோ. தாமஸ் அண்ணன் எல்லாரையும் பிடிச்சு தள்ளிட்டு பைக்குக்காரன கெட்டிச்சேந்து பிடிச்சுகிட்டாரு. லே! என்னையக் கொன்னிட்டு இவனைக் கொல்லுங்கல. ஆண்டவரு கொடுத்தாரு ஆண்டவரு எடுத்துக்கிட்டாரு. போங்கலே எல்லாரும் போங்கலேன்னு அந்த பைக்குக்காரனை போவச் சொல்லிட்டு பிள்ளையக் கட்டிப்பிடிச்சிட்டு ரோட்டிலேயே விழுந்திட்டாரு. இது நடந்து ஒரு பதினஞ்சி வருசம் இருக்கும்.’
என் குரல் கம்மியது. தழுதழுத்து சத்தம் வரவில்லை. தீனமாய் கேட்டேன்.
‘’நான் செய்வனா? நீ செய்வியா? சொல்லுலே? அதைவிடு அவன் மேல ஒரு கேஸ் கூடக் குடுக்கல. வந்த போலிஸ்காரனுவகிட்டயும் தாமஸ் அண்ணன் துட்டு குடுத்து கழிச்சு வுட்டுட்டாரு. அப்படியாப்பட்டவர்ல அவரு . என்னல பேசுத நீ?’
உடல் வேர்த்துக்கொட்டி, குரல் நடுங்கி, கண்களில் நீர்முட்டி சொல்லிமுடித்துவிட்டு தளர்ந்து சேரில் அமர்ந்தேன்.
நீண்ட மௌனம். சற்று நேரம் எல்லாம் ஸ்தம்பித்து நின்றது, தூரத்தில் அலை அடிக்கும் சத்தம் மட்டும், குமாரால் நிற்க முடியவில்லை. சட்டென சுவற்றைப் பிடித்துவிட்டு உட்கார்ந்தான்.
‘எண்ணே கொஞ்சம் தண்ணி குடு.’
நான் என் மேஜையில் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்தேன்.
மொபைல் அழைத்தது. தாமஸ் அண்ணன். ‘’சகாயம் அண்ணே இந்த வாரம் வரமாட்டேன் பாத்துக்கிடுங்க. வண்டில விழுந்ததில சின்ன அடி. வீட்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு சொல்லுதாவ. வேற எதுவும் பெறச்சனைகள் இல்லையே? அங்க எல்லாத்தையும் பாத்துக்கிடுங்க. சரி வைக்கேன் என்ன?’
*******
மழை ஓய்ந்திருந்தது. வெயில் சிறிது மேலெழ மீண்டும் நீலம் மெல்ல சாயம் ஏறியது. சாயத்தின் வெளிச்சம் மெல்ல மெல்ல எல்லா இடத்திலும் பரவியது. பெருநீலம் அமைதியாயிருந்தது. எப்போதும்போல. எல்லாவற்றையும் யாரிடமோ ஒப்படைத்துவிட்டு. தன்போக்குக்கு.