சிறுகதைகள்
Trending

தினமும் பயன்படுத்து – மொழிபெயர்ப்பு சிறுகதை

கயல்

தினமும் பயன்படுத்து
Everyday use
Alice walker

நானும் மேகியும் சேர்ந்து சுத்தப்படுத்தி உருவாக்கிய அலைகளின் வடிவத்தில் இருந்த முற்றத்தில், நான் அவளுக்காக இப்போது காத்திருக்கிறேன். பொதுவாகப் பலரும் நினைப்பது போலில்லாமல், இத்தகைய ஒரு முற்றம் மிகவும் சௌகரியமானது. முற்றம் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு நீட்டிக்கப்பட்ட வாழிடம். இறுகிய களிமண்ணாலான சுத்தமான தரையும், முனைகளில் பொடிமணல் தூவிய வரிசையான சிறு குழிகளுமாக இருக்கிற இந்த முற்றத்தில் யார் வேண்டுமானாலும் வந்து அமர்ந்து, எல்ம் மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே, வீட்டுக்குள் ஒருபோதும் வராத தென்றலுக்காகக் காத்திருக்கலாம்.

தங்களைச் சந்திக்க வரப்போகிற தன் சகோதரி, இங்கிருந்து கிளம்பிப் போகும் வரை மேகி பதட்டமாகவே இருப்பாள். தன் கைகளிலும் கால்களிலும் இருக்கிற நெருப்பாலுண்டான தழும்புகளால் அழகிழந்து, அவமானத்துடன் தன் சகோதரியைப் பொறாமையும் துயரமும் கலந்து பார்த்தபடி, தன்னம்பிக்கை இழந்து மூலையில் நிற்பாள். தன் சகோதரி அவள் வாழ்க்கையை எப்போதும் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தாள் என்றும், “இல்லை” என்ற சொல்லை அவளிடம் சொல்வதற்கு யாருமே அதுவரை கற்றுக் கொள்ளவில்லை என்றும் மேகி நினைத்தாள்.

‘சாதித்த’ குழந்தைகளை மேடைக்குப் பின்புறமிருந்து அவற்றின் பெற்றோர் பலவீனமாகத் தள்ளாடியபடி வியப்புடன் எதிர்கொள்வதைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அத்தகைய தருணங்களில் பெற்றோர் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் ஒரு சேர அடைகிறார்கள் (ஒரு வேளை பெற்றோரும் குழந்தைகளும் ஒருவரை ஒருவர் சபிப்பதற்கும் அவமானப்படுத்திக் கொள்வதற்கும் மட்டும் நிகழ்ச்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்?) தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அம்மாவும் குழந்தையும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு புன்னகைக்கிறார்கள். சில நேரங்களில் தாயும் தந்தையும் தேம்பி அழுகிறார்கள். குழந்தை அவர்களைத் தன்னுடைய கைகளால் அரவணைத்தபடி மேசையின் மீது சாய்ந்துகொண்டு, எப்படி அவர்களின் உதவியின்றி இது எதையுமே தான் செய்திருக்க முடியாது என்று சொல்கிற இவ்வாறான நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

நானும் என் மகள் டீயும், இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்குத் திடீரென அழைக்கப்படுவதாக நான் சில நேரங்களில் கனவு காண்பதுண்டு. அக்கனவில் கருத்த மென்மையான இருக்கை கொண்ட லிமோசின் காரிலிருந்து, திரளான மக்கள் கூடி இருக்கிற வெளிச்சம் மிகுந்த அறைக்கு நான் அழைத்துச் செல்லப்படுகிறேன். சாம்பல்நிற ஜானி கார்சன் போன்று புன்னகைக்கிற ஒரு விளையாட்டு வீரரை அங்கே சந்திக்கிறேன். அவர் என்னுடைய கைகளைக் குலுக்கி உங்கள் மகள் எவ்வளவு சிறப்புமிக்கவள் என்று புகழ்கிறார். அடுத்த காட்சியில், நானும் டீயும் மேடையின் மீது நிற்கிறோம். டீ ஆனந்தக் கண்ணீருடன் என்னை அணைத்துக் கொண்டிருக்கிறாள். ஆர்ச்சிட் ஒரு பகட்டான மலர் என்று என்னிடம் முன்பொரு முறை சொல்லி இருந்தாலும், இப்போது ஒரு பெரிய ஆர்ச்சிட் மலர்க் கொத்தை அவள் என்னுடைய உடையின் மீது பொருத்துகிறாள். இது என் கற்பனை.

ஆனால் நிஜ வாழ்வில், கரடுமுரடான வேலை செய்கிற ஆண்களின் கைகளையுடைய பருமனான பெண்மணி நான். குளிர்காலங்களில் கம்பளியால் ஆன இரவு ஆடைகளுடன் படுக்கைக்குச் செல்கிற நான் பகலில் தளர்வான மேலாடைளை அணிந்திருப்பேன். ஒரு ஆணால் எப்படிக் கருணையேதுமின்றி காட்டுப் பன்றியொன்றைக் கொன்று சுத்தம் செய்ய முடிகிறதோ அது போல் என்னாலும் செய்ய இயலும். கடுங்குளிரின் போதும் என் உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்புச் சத்து என்னை வெம்மையாய் வைத்திருக்கும். துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான நீரைப் பெற ஐஸ் கட்டியை உடைத்தபடி நாள் முழுதும் என்னால் வெளியில் வேலை செய்ய முடியும். அடுப்பிலிருந்து இறக்கிய சமைத்த காட்டுப் பன்றியின் உடலில் இருந்து பொங்கி வெளிவரும் அதன் ஈரலைக் கொதிக்கக் கொதிக்க என்னால் உண்ண முடியும். குளிர் காலமொன்றில் காளை மாட்டுக் கன்று ஒன்றின் கண்களுக்கு இடையே கூரிய சம்மட்டியால் மிகத் துல்லியமாக அதன் மூளையைத் தாக்கி வீழ்த்தி அதன் கறியை அன்றிரவு உண்டிருக்கிறேன்.

ஆனால், இவையெல்லாம் தொலைக்காட்சியில் நிச்சயம் காண்பிக்கப்படாது. என் கற்பனையில் தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், என் மகள் நான் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறாளோ, நான் அப்படியே இருக்கிறேன். அதாவது, நிஜத்தில் இருப்பதைவிட நூறு பவுண்டுகள் மெலிதாகவும், என் தோல் வேகாத பார்லி ரொட்டியைப் போலவும், என் முடி பிரகாசமான விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிரக் கூடியதாகவும் இருக்கும். வேகமும் நகைச்சுவை உணர்வும் கொண்ட என் பேச்சைச் சமாளிக்க ஜான் கார்சன் திணறுவார்.

ஆனால், இந்தக் காட்சியில் ஏதோ தவறு இருக்கிறது என்பது நான் கண் விழிக்கும் முன்பே எனக்குத் தெரிந்திருந்தது. ஜான் கார்சன், ஒரு வாயாடி என்று யாருக்கு தான் தெரியாது? அந்நியமான ஒரு வெள்ளை மனிதனை நான் நேருக்கு நேராக கண்ணோடு கண் பார்ப்பேன் என்று யாரால் தான் கற்பனை செய்து பார்க்க முடியும்? நான் வெள்ளையர்களுடன் பேசுகையில் என்னுடைய ஒரு பாதத்தை எப்போது வேண்டுமானாலும் பறக்கத் தயாராவது போன்ற தோற்றத்தில் உயர்த்தியே வைத்திருப்பேன். என் தலை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவர்களிடமிருந்து விலகி ஒளிந்து கொண்டிருக்கும். ஆனால், டீ யாரையுமே நேருக்கு நேராகக் கண்ணோடு கண் தான் பார்ப்பாள். தயக்கம் என்பது இயல்பிலேயே அவளுக்கு இல்லை.

“நான் எப்படி இருக்கிறேன் அம்மா?” பிங்க் நிற காற்சட்டையும் சிகப்பு நிற மேலாடையும் தன்னுடைய மெலிந்த உடலை மூடி இருக்க, தன்னிருப்பை மட்டும் காட்டுகிற அளவுக்குக் கதவுக்குப் பின்னால் தன்னை மறைத்தபடி கேட்டாள் மேகி.
“இங்கே முற்றத்துக்குள் வா” என்றேன் நான்.

சொந்தமாக கார் வைத்து இருக்கக் கூடிய செல்வமிக்க ஒருவனின் கவனக் குறைவால், அவன் வண்டியில் அடிபட்ட நொண்டி விலங்கு; ஒரு நாய் என்று வைத்துக் கொள்வோம். தனக்குக் கருணை காட்டுமளவுக்கு அறிவற்ற யாராவது பக்கத்தில் இருக்கிறார்களா, என்று அது சாய்ந்து தேடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? அப்படித் தான் என் மேகி நடக்கும் விதமும் இருக்கும். நெருப்பு அந்த வீட்டை முழுவதுமாக எரித்து நிலத்தில் வீசியதிலிருந்து, தன் நெஞ்சின் மீது முகவாயை அழுத்தி வைத்துக் கொண்டு கண்கள் தாழ்ந்து நிலத்தைப் பார்க்க, பாதங்கள் நிலத்தைத் தேய்த்தபடி, இப்படியான ஒரு தோற்றத்தில் தான் மேகி நடக்கிறாள்.

டீ, மேகியை விட எடை குறைவானவள். நல்ல தலைமுடியும், வடிவான உடல்வாகும் கொண்டவள். அவள் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதை நான் சில சமயங்களில் மறந்துவிடுகிறேன். அந்த வீடு எரிந்து எவ்வளவு காலம் ஆயிற்று? பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் இருக்குமா? தீப்பிழம்புகளின் சத்தத்தை இப்போதும் கூட சில சமயங்களில் என்னால் கேட்க முடிகிறது. என்னை ஒட்டிக்கொண்டிருந்த மேகியின் கைகள், எரிந்து கொண்டிருந்த அவளுடைய தலைமுடி, சிறிய கருத்த காகிதச் செதில்களாக அவள் மீதிருந்து விழுந்த அவளுடைய உடை என அனைத்தும் என் கண் முன்னே தெரிகிறது. திறந்து நீண்ட மேகியின் கண்கள் அவற்றில் பிரதிபலித்த தீப்பிழம்புகளின் ஜ்வாலையால் திறந்தது போலிருந்தது.

சிறிது தொலைவில் தான் வழக்கமாக பிசினைத் துருத்தி எடுக்கும் இனிப்புப் பிசின் மரத்தின் கீழ், டீ இப்போது நின்று கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எல்லாம் எரிந்த பின் இறுதியாக அந்த வீட்டிற்குள்ளிருந்து கருத்துப்போன சாம்பல் நிறப் பலகையொன்று, சிவப்புச் செங்கல்லால் ஆன புகைபோக்கியை நோக்கி விழுவதை மிகுந்த கவனத்துடன் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். சாம்பலைச் சுற்றி நீ ஒரு நடனம் ஆடியிருக்கலாமே? என்று கூட அவளிடம் நான் கேட்க விரும்பினேன். அவள் அந்த வீட்டை அவ்வளவு வெறுத்தாள் என்று எனக்குப் புரிந்தது.

தேவாலயத்தைச் சார்ந்தவர்களும், நானும், அகஸ்டாவிலுள்ள பள்ளிக்கு அவளை அனுப்புவதற்காக பணம் திரட்டியதற்கு முன்பு வரை அவள் மேகியை வெறுத்தாள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். சிறிதும் கருணையற்று பொய்களையும், மற்றவர்களின் பழக்க வழக்கங்களையும், அவர்களின் மொத்த வாழ்வையும், வலிந்து வாசித்துக் காண்பித்து எங்கள் இருவரையும் தன்னுடைய குரலுக்குக் கீழ் அறிவீனத்துடன் சிறையமர்த்துவாள். தான் உருவாக்கிய ஒரு நதியில் எங்களைக் குளிப்பாட்டி, நாங்கள் அறிய வேண்டிய அவசியமற்ற பேரறிவால் எங்களைக் கொளுத்தி, தான் படிப்பவற்றின் தீவிரத் தன்மையால் எங்களைத் தன்னுடன் சேர்த்தணைத்தாள். நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிற அதே கணத்தில் எங்களை முட்டாள்களைப் போல முன்னோக்கி நெருக்கித் தள்ளினாள்.

டீ, சிறந்த பொருட்களையே விரும்பினாள். முன்பு யாரோலோ எனக்கு அளிக்கப்பட்டு, பழையதாகிப் போயிருந்த ஒரு பச்சைநிற அங்கியை வைத்து, புதிய ஆடை ஒன்றைத் தைத்தாள். பிறகு, அதற்குப் பொருத்தமாக கருப்பு நிற மடிப்புகளை உருவாக்கி அதை ஒரு மஞ்சள் நிற ஆர்கண்டி உடையுடன் இணைத்து ஒரு நவீனமான ஆடையாக தன் உயர்நிலைப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் அணிந்து கொண்டாள் . எத்தகைய பேரழிவையும் தன்னுடைய முயற்சி எனும் கண்களால் முறைத்துப் பார்த்து எத்தித் தள்ளும் உறுதியுடன் இருந்தாள். சில நேரங்களில், அவளுடைய கண்ணிமைகள் சில நிமிடங்களுக்குத் தொடர்ந்து துடிக்காதிருக்கும். அப்போது அவளை உலுக்குகிற என் மனதின் தூண்டுதலை எதிர்த்து நான் போராட வேண்டியிருக்கும். தன் பதினாறு வயதிலேயே, தனக்கான ஒரு பிரத்யேக பாணி அவளிடம் தோன்றி இருந்ததுடன், அது என்ன பாணி என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

நான் கல்வி அறிவற்றவள். இரண்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளி மூடப்பட்டு விட்டது. ஏன் என்று கேட்காதீர்கள். 1927 இல் கருப்பின மக்கள் இப்போது இருப்பதை விட குறைவாகவே கேள்வி எழுப்பினார்கள். சிலநேரங்களில் மேகி எனக்கு படித்துக் காட்டுவாள். நல்ல மனத்துடனேயே படித்தாலும் பார்வை சரியாக இல்லாததால் தடுமாற்றத்துடன் தான் அவளால் படிக்க இயலும். தான் புத்திசாலி இல்லை என்று அவளுக்குத் தெரியும். நல்ல தோற்றமும், செல்வமும் போல விரைவுத்தன்மையும் அவளை நீங்கிக் கொண்டிருந்தது. அவள் (பாசி படிந்த பற்களைக் கொண்ட ஆர்வமுள்ள ஒருவனான) ஜான் தாமஸை மணந்து கொள்ள இருக்கிறாள்.

ஒரு நல்ல பாடகியாக நான் எப்போதும் இருந்ததில்லை என்றாலும், மேகியின் திருமணத்திற்குப் பிறகு, இங்கு ஓய்வாக அமர்ந்து தேவாலயப் பாடல்களை எனக்கு நானே பாடிக் கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். இசையின் லயத்துக்கு ஏற்றபடி ஒரு நாளும் பாட முடியாத என்னால், ஒரு ஆணின் வேலையை எப்போதும் சிறப்பாகச் செய்ய முடியும். 1949இல் நான் கிராமத்தில் இருந்த வரை பால் கறப்பதை மிகவும் விரும்பினேன். பசுக்கள் இனிமையானவை. மந்தமானவை. நாம் தவறான முறையில் பாலைக் கறக்க முயற்சித்தால் தவிர நம்மைத் தொந்தரவு செய்யாது.

நான் வேண்டுமென்றே இப்போது அந்த வீட்டுக்கு முதுகு காண்பித்து நின்றேன். எரிந்து போன அந்த வீட்டைப் போலவே, இதிலும் மூன்று அறைகள் இருக்கின்றன. இப்போதெல்லாம் யாரும் கூழாங்கற்களைக் கொண்டு கூரைகளை உருவாக்குவதில்லை ஆகவே, கூரை மட்டும் தகரத்தாலானது. நிஜமான சாளரங்களின்றி, கப்பலில் உள்ள துவாரங்களைப் போல ஓரங்களில் வெட்டப்பட்ட வட்டமும் சதுரமும் அல்லாத சில துளைகள் சாளரங்களின் பணியைச் செய்தன. விலங்குகளின் பதனிடப்படாத தோல், ஜன்னல் கதவுகளை வெளிப்புறமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த வீடும், அந்த வீட்டைப் போலவே, மேய்ச்சல் நிலத்தில் இருந்தது. டீ, இதைப் பார்க்கிற போது அதை உடைத்துப் போட விரும்புவாள் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்வதற்காக நாங்கள் எந்த இடத்தைத் ‘தேர்ந்தெடுத்தாலும்’ அவள் எப்படியாவது அங்கு வந்து எங்களைப் பார்ப்பாள் என்று ஒரு முறை எனக்கு எழுதி இருந்தாள். ஆனால், அவள் எப்போதும் தன்னுடைய நண்பர்களை அழைத்து வர மாட்டாள். மேகியும் நானும் இதைப்பற்றி யோசித்தோம். மேகி, “டீ க்கு எப்போது அம்மா நண்பர்கள் இருந்தார்கள்?” என்று கேட்டாள்.

ஆனால் டீக்கும் சில நண்பர்கள் இருந்தனர். பள்ளி இல்லாத நாட்களில், பிங்க் நிற சட்டைகள் அணிந்து ஊர் சுற்றித்திரியும் கள்ளத்தனமான சிறுவர்களும், எப்போதும் சிரிக்காத பதட்டமான சிறுமிகளும் தான் அவள் நண்பர்கள். கவர்ச்சியான அவளுடைய பேச்சாலும், அழகான உருவத்தாலும், சுண்ணாம்புக் காரக் கரைசலில் வெடித்துக் கிளம்பும் குமிழ்கள் போல பிறர் மனதைத் துன்புறுத்தும் கேலியான அவளுடைய நகைச்சுவையாலும் ஈர்க்கப்பட்டு அவர்கள் அவளைக் கொண்டாடினார்கள். அவள் அவர்களுக்கும் வாசித்துக் காண்பிப்பதுண்டு.

அவள் ஜிம்மி டியைக் காதலித்துக் கொண்டிருந்தபோது, எங்களுக்கென்று செலவிட அவளிடம் நேரமே இருந்ததில்லை. ஏனெனில், தன்னுடைய குற்றம் கண்டுபிடிக்கும் ஆற்றல் முழுவதையும், அவள் அவன் மீதே பிரயோகித்துக் கொண்டிருந்தாள். பிறகு வெளிநாட்டுக்குச் சென்ற அவனோ, நகர்ப்புறத்தில் வசித்த அறியாமையும் பகட்டும் கொண்ட குடும்பம் ஒன்றின் இழிவான பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். டீ க்கு தன்னைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரமில்லை.

இன்று இங்கு வரப்போகும் டீயைச் சந்திக்க நான் காத்திருக்கிறேன். அதோ, அவர்கள்! மேகி, காலை இழுத்துக்கொண்டு நடக்கும் தன்னுடைய வழக்கமான நடையில் வேகமாக வீட்டுக்குள் ஓட முயற்சி செய்தாள். ஆனால் நான் அவளை நிறுத்தி ” இங்கு வா” என்றேன். அவள் நின்றபடிக்கு தன் குதிகாலால் மணலில் ஒரு கிணற்றைத் தோண்டத் துவங்கினாள்.

கடுமையான சூரியக் கதிர்களின் இடையே அவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் காரில் இருந்து கீழே வைக்கப்பட்ட அந்த காலைப் பார்த்த உடனேயே, அது டீ தான் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. அவளுடைய பாதங்களைக் கடவுளே ஒரு விதமான பாணியில் வடிவமைத்தது போல அவை எப்போதும் சுத்தமாக இருக்கும். காரின் அந்தப்பக்கம் இருந்து ஒரு குள்ளமான பருத்த மனிதன் இறங்கினான். முகம் முழுக்கக் கிடந்த ஒரு அடி நீளமுள்ள அவன் தலைமுடி கோவேறு கழுதையின் வாலைப் போல அவன் தாடையிலிந்து சுருண்டு தொங்கியது. மேகி தன் மூச்சுக்காற்றைப் பதற்றத்துடன் உள்ளிழுத்தாள். திடீரென நெடுஞ்சாலையில் நம் பாதத்தின் எதிரே ஒரு பாம்பு சீறுவதைப் போல ஒலித்தது அந்த “அஹ்ஹ்ஹ்ஹ்” எனும் ஓசை.

இப்போது திரும்பி டீ யைப் பார்க்கிறேன். தகிக்கிற இந்தப் பகல் பொழுதில் நிலம் வரை தாழ்ந்து தொங்கிய அவள் ஆடை, சூரியனின் கதிர்களைக் கிரகித்து அதனை அவற்றுக்கே திரும்ப வீசும் அளவுக்கு மஞ்சளும் ஆரஞ்சு வண்ணமுமாக பளிச்சிடும் நிறத்தில் இருந்தது. என் கண்களைக் கூசச் செய்த அந்த ஆடை உமிழ்ந்த வெப்பக் காற்றில் என்னுடைய முகம் முழுதும் சூடானது. தங்கக் காதணிகள் அவளுடைய தோள்கள் வரை தொங்கிக் கொண்டிருந்தன. தன் அக்குளில் சிக்கிக்கொண்ட ஆடையின் மடிப்புகளை இழுப்பதற்காக அவள் தன் கையை உயர்த்தியபோது, அது காப்புடன் உரசியபடி ஓசை எழுப்பியது. அவள் எங்களை நெருங்கி வந்த போது அந்த ஓசையை நான் ரசித்தேன். மேகி இப்போது மறுபடியும் ஆஹ்ஹ்ஹ் என்றாள்.

இரவைப் போல அடர் கருப்பு நிறத்திலிருந்த டீயின் தலை முடி ஆட்டின் மீது வைக்கப்பட்ட கம்பளியைப் போல நேராக நிமிர்ந்து நின்றது. அதன் முனைகளைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இரண்டு பன்றி வால்கள் அவள் காதுகளுக்குப் பின் இரண்டு சிறிய பல்லிகள் மறைந்து கொண்டிருப்பதைப் போலக் காட்சியளித்தது.

“காலை வணக்கம்!” என்றாள் டீ. அவள் அணிந்திருந்த ஆடை அவள் உடலில் இருந்து வழுக்கிக் கொண்டிருந்ததால், அவள் அப்படியே காற்றில் மிதப்பது போல வீட்டுக்குள்ளே நுழைந்தாள். அவளைப் பின் தொடர்ந்து வந்த தொப்புள் வரை முடி சூழ்ந்திருந்த பருத்த குள்ளமான அந்த மனிதன் வாயெல்லாம் பல்லாக, “என் அம்மாவுக்கும் சகோதரிக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்” என்றான். மரியாதை நிமித்தமாக மேகியை அணைத்து முகமன் சொல்ல முன்னேறினான். ஆனால், அதிர்ந்து தடுமாறிய அவள், என்னுடைய நாற்காலியின் மீது மோதி கீழே விழுந்தாள். நடுங்கிக் கொண்டிருந்த அவளுடைய தாடையின் மீது வியர்வை பெருகி வழிந்தது.

உடல் பருமன் காரணமாக, என்னால் இப்போதெல்லாம் வேகமாக நடமாட முடிவதில்லை. தரையில் உட்கார்ந்தால், உடனே எழுந்து கொள்ள முடியாமல் சில நொடிகள் அப்படியே உட்கார்ந்த வாக்கில் நான் அசைந்து கொண்டிருப்பேன். கீழே விழுந்து கிடந்த என்னையும் மேகியையும் பார்த்து “எழாமல் அப்படியே இருங்கள்” என்ற டீ, வெண்ணிறக் குதிகால்கள் காலணிகள் வழியாக வெளிக் காண்பித்தபடி திரும்பினாள். காரை நோக்கி சென்றவள் ஒரு போலராய்ட் கேமராவுடன் வேகமாகத் திரும்பி வந்தாள். அந்த வீட்டின் முன் அமர்ந்திருந்த என்னையும் எனக்குப் பின்னால் நடுங்கியபடி இருந்த மேகியையும் புகைப்படத்துக்கு மேல் புகைப்படமாக எடுத்துத் தள்ளினாள். ஒரு புகைப்படத்தில் கூட அந்த வீடு விட்டுப் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். முற்றத்தின் விளிம்பில் அசை போட்டுக் கொண்டிருந்த பசுவையும் என்னையும், மேகியையும், அந்த வீட்டையும் மாறி மாறி புகைப்படம் எடுத்தாள். பிறகு, அவள் அந்த போலராய்ட் புகைப்படக் கருவியை காரின் பின்பக்க இருக்கையில் வைத்துவிட்டு வந்து என்னுடைய முன் நெற்றியில் முத்தமிட்டாள்.

இதற்கிடையில், அஸ்ஸலாமு அலைக்கும், மேகியினுடைய கைகளைப் பிடித்துக் குலுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். மேகியோ வியர்வைச் சூட்டில் வெம்மையாகவும், அச்சத்தால் மீனைப் போலவும் சில்லிட்டிருந்த தன் கைகளைப் பின்னே இழுத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தாள். அவன் மேகியின் கைகளை நாகரீகமாகக் குலுக்க விரும்பினாலும், ஒருவருடன் எப்படிக் கை குலுக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியவில்லை போலிருந்தது அக் காட்சி. எப்படியோ அவன் அந்த எண்ணத்தை வெகு சீக்கிரம் கைவிட்டிருந்தான்.

“வா வா டீ” என்றேன் நான்.
“இல்லை அம்மா” என்றாள் அவள் “டீ இல்லை. வேங்கரோ லீவாணிக்கா கெமாஞ்சோ”
“டீக்கு என்ன ஆனது”? நான் அறிந்து கொள்ள விரும்பினேன்.
“அவள் இறந்து விட்டாள்”, என்றாள் வேங்கரோ. என்னை ஒடுக்குகிறவர்களின் பெயரால் நான் அழைக்கப்படுவதை இன்னும் என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது”
“உன்னுடைய அத்தை டிஸியின் பெயரால் தான் நீ அழைக்கப்பட்டாய் என்பது என்னைப் போலவே உனக்கும் தெரியும்” என்றேன் நான். டிஸி என்னுடைய சகோதரி. அவள் தான் இவளுக்கு டீ எனப் பெயரிட்டாள். டீ பிறந்த பிறகு நாங்கள் எங்கள் சகோதரியை “பெரிய டீ” என்று அழைத்தோம்.
“ஆனால், அவள் யாரின் பெயரால் அழைக்கப்பட்டாள்?” எனக் கேட்டாள் வேங்கரோ.
“பாட்டியம்மாள் டீயின் பெயரால் என நினைக்கிறேன்” என்றேன் நான்.
“அவள் யாரின் பெயரால் அழைக்கப்பட்டாள்” என்று கேட்டாள் வேங்கரோ.
“அவள் தாய்” என்றேன் நான்.
வேங்கரோ களைப்படைந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். “இது என் நினைவுக்கு எட்டிய வரை” என்றேன் நான். ஆனால் உண்மையில் உள்நாட்டுப் போரையும் கடந்து கிளைக் கதைகளாக அதை என்னால் கொண்டு சென்றிருக்க முடியும்.

“நீங்கள் சொல்வது சரி” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றான் அஸ்ஸலாமு அலைக்கும்.
“அஹ்ஹ்ஹ்ஹ்” என ஒலியெழுப்பினாள் மேகி.
” டிசி நம்முடைய குடும்பத்திற்குள் வரும்போது நானே இங்கு இல்லை. அப்படியிருக்க நான் எதற்காக அதை அவ்வளவு தூரம் ஆராய வேண்டும்?” என்றேன்.
கார் வாங்கப் போகும் ஒருவர் அதை சுற்றி வந்து மேற்பார்வையிடுவது போல இளித்தபடி அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவ்வப்பொழுது அவனும் வேங்கரோவும் எனக்குப் பின்னால் கண் ஜாடை காட்டிக் கொண்டார்கள்.
“நீ இந்தப் பெயரை எப்படி உச்சரிக்கிறாய்” என்று நான் கேட்டேன். “உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அந்தப் பெயரால் நீங்கள் என்னை அழைக்க வேண்டாம்” என்றாள் வேங்கரோ.
“ஏன் அழைக்கக் கூடாது? நாங்கள் உன்னை அந்தப் பெயரால் அழைக்க வேண்டும் என்று நீ விரும்பினால் நாங்கள் அழைக்கிறோம்”.
“முதலில் அது சிறிது விகாரமாக ஒலிப்பதாகத் தோன்றலாம்” என்றாள் வேங்கரோ.
” அதைத் திரும்ப ஒரு முறை சொல். நாங்களும் அதற்குப் பழகிக் கொள்வோம்” என்றேன்.

விரைவில் நாங்கள் அந்தப் பெயர் குறித்த விவாதத்தை எங்கள் உரையாடலின் பாதையில் இருந்து விலக்கினோம். அஸ்ஸலாமு அலைக்குமின் முழுப் பெயர் இரு மடங்கு நீளமாகவும் மூன்று முடங்கு கடினமாகவும் இருந்தது. அதன்மீது இரண்டு அல்லது மூன்று முறை நான் இடறிய பிறகு அவன் என்னிடம் நீங்கள் என்னை ஹக்கீம் என்கிற முடி திருத்துபவன் என்று மட்டும் அழைத்தால் போதுமானது என்றான். அவன் ஒரு முடி திருத்துபவனா என்று நான் கேட்க விரும்பினாலும், அது உண்மையில்லை என்று நான் நினைத்ததால், அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

“பன்றி போன்ற சில கால்நடைகளைப் பராமரிக்கும் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களைச் சந்திக்கிற போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறுகிறார்கள். ஆனால் கைகளைக் குலுக்குவதில்லை. கால்நடைகளுக்கு உணவிட்டு, வேலிகளைப் பொருத்திக் கொண்டு, உப்பு இட்டபடி, கூடாரங்களை அமைத்தபடி, வைக்கோலைக் உலர்த்தியபபடி ஓய்வின்றி எப்போதும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வெள்ளையர்கள் அவர்களுடைய கால்நடைகள் சிலவற்றுக்கு விஷம் வைத்த போது தங்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தி இரவு முழுவதும் காவல் காத்தார்கள். அதைப் பார்ப்பதற்காகவே நான் ஒன்றரை மைல் தூரம் நடந்து சென்றேன்” என்றேன்.

ஹக்கீம் என்கிற முடி திருத்துபவன், “அவர்களுடைய சில கோட்பாடுகளை நான் ஏற்கிறேன். ஆனால் விவசாயம் செய்வதும், கால்நடைகள் வளர்ப்பதும் என்னுடைய பாணி இல்லை”. ( வேங்கரோ (டீ) உண்மையில் அவனை மணம் செய்து கொண்டாளா என்று அவர்களும் என்னிடம் சொல்லவில்லை நானும் அவர்களைக் கேட்கவில்லை).

நாங்கள் உண்பதற்காகத் தரையில் உட்கார்ந்த உடனேயே அவன் தான் சீமைக்கீரை உண்பதில்லை என்றும், பன்றி இறைச்சி அசுத்தமாக இருப்பதாகவும் சொன்னான். ஆனால்,எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் உண்ட வேங்கரோ இனிப்பு சீனிக் கிழங்குகளை உண்டபடி வேகமாக பேசிக் கொண்டிருந்தாள். எல்லாமே அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாற்காலிகள் வாங்கப் போதுமான வசதியில்லாததால் அவளுடைய தந்தை தயாரித்த நீண்ட இருக்கையையே நாங்கள் இன்னும் மேசைக்குப் பதிலாக பயன்படுத்திக் கொண்டு இருந்த விசயம் உட்பட.

“அம்மா!” என்று உற்சாகமாகக் கூவிய டீ ஹக்கீம் பக்கம் திரும்பி “இந்த நீளமான இருக்கைகள் இவ்வளவு அழகானவை என்று எனக்கு இதுவரை தெரியாது. அதன் அழுத்தமான அச்சுகளை நாம் உணர முடியும்” என்று தன் கையை அந்த இருக்கைக்கு மேலே படரவிட்டபடி சொன்னாள். பாட்டியம்மாள் டீ வெண்ணெயால் செய்த உணவுப் பண்டத்தின் மீது தன்னுடைய கைகளை மூடிக்கொண்டு ஒரு பெருமூச்சு விட்டவள், “நான் எடுத்துக் கொள்ளட்டுமா என்று உங்களைக் கேட்க விரும்பிய பொருள் ஒன்று இங்கிருக்கிறது” என்றாள். பிறகு மேஜை மீதிருந்து குதித்து தயிர் கடையும் சட்டியும் மத்தும் சாத்தி வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் மூலைக்குச் சென்றாள். அதில் ஒட்டியிருந்த பால் இப்போது மிக மோசமாகக் கெட்டுப் போயிருந்தது. அவள் அந்த சட்டியையும் மத்தையும் மீண்டும் மீண்டும் பார்த்தாள்.
“இந்தத் தயிர் கடையும் சட்டியின் மூடி தான் எனக்கு வேண்டும்” என்றாள். “நாம் வைத்திருந்த ஒரு மரத்திலிருந்துதானே பெட்டி மாமா இதைச் செதுக்கினார் ?” என்று கேட்டாள்.
“ஆமாம்” என்றேன் நான்.
“அஹ் அஹ்” என்று மகிழ்ச்சியாக ஒரு ஓசையை எழுப்பியவள் “எனக்கு அந்த வெண்ணெய் கடையும் மத்தும் கூட வேண்டும்” என்றாள்.
அந்த முடி திருத்துபவன், “பெட்டி மாமா தான் அதையும் செதுக்கினாரா? என்று கேட்டான்.
டீ (வேங்கரோ) என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
யாருக்கும் கேட்க வாய்ப்பற்ற ஒரு குரலில் ” டீ அத்தையின் முதல் கணவரான ஸ்டாஷ் என்று அழைக்கப்பட்ட ஹென்றி தான் அந்த வெண்ணெய் கடையும் மத்தைச் செய்தார்” என்றாள் மேகி.
“மேகியின் மூளை ஒரு யானையின் மூளையைப் போன்றது” என்றாள் வேங்கரோ சிரித்தபடி.

“இந்த மூடியை எங்கள் வீட்டு பால்கனி மேசையின் நடுப்பகுதியில் நான் வைத்துக் கொள்வேன்” என்றவள் அந்த மூடியின் மீது வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டைக் கீழே தள்ளிவிட்டு, “வெண்ணெய் கடையும் மத்தை கலை நயமான ஒரு பொருளாக எப்படி மாற்றுவது என்பதைப் பற்றி, நான் இதற்கு மேல் தான் யோசிக்க வேண்டும்” என்றாள். அவள் அந்த மத்தை எடுத்து ஒரு உறையில் இட்டு நன்றாக சுற்றி மூடினாள். ஆனால் அதன் கைப்பிடி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு நொடி அதை என் கைகளில் ஏந்தினேன்.வெண்ணெய் கடைவதற்காக கட்டை விரலாலும் மற்ற விரல்களாலும் மேலும் கீழும் தொடர்ந்து இழுப்பதால் ஓரங்கள் தேய்ந்து போயிருந்த பல பகுதிகள் அந்த மத்தில் காணப்பட்டது. பெரிய டீயும் ஸ்டாஷும் வாழ்ந்த வீட்டின் முற்றத்தில் வளர்ந்த மெல்லிய மஞ்சள் நிறமுடைய மரத்திலிருந்து அது செதுக்கப்பட்டிருந்தது.

இரவு உணவுக்குப்பின், மேகி சமையலறையில் பாத்திரத்தைக் கழுவத் தொடங்கினாள். என் கட்டிலருகே வந்த டீ வேங்கரோ, அதன் கீழ்ப் குதியினூடாகக் கைகளை அலை போல செலுத்தித் துழாவிய பிறகு, இரண்டு கம்பளிப் போர்வைகளுடன் வெளியே வந்தாள். அவற்றில் ஒரு போர்வை, தனித்திருக்கும் நட்சத்திரம் போலவும், இன்னொன்று மலையைச் சுற்றி நடை பயில்வதாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. பாட்டிமா டீயும், பெரிய டீயும் இணைந்து உருவாக்கிய அவற்றை, வழக்கமாக நான் வீட்டின் தாழ்வாரத்தில் தொங்க விட்டிருப்பேன். பாட்டிமா டீ ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய உடைகளின் துண்டுகளாலும், தாத்தா ஜட்டல்ஸ் பெய்ஸ்லியின் சட்டைத் துண்டுகளாலும் அவை உருவாக்கப் பட்டிருந்தன. சிறிய தீப்பெட்டி அளவுக்கு இருந்த மிகச்சிறிய வெளுத்துப்போன ஒரு நீலத் துண்டு, புகழ்வாய்ந்த எஸ்ரா தாத்தா அவர்கள் உள்நாட்டுப் போரின் போது அணிந்த சீருடையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.
“அம்மா! கம்பளியாலான இந்தப் பழைய போர்வைகளை நான் எடுத்துக்கொள்ளவா?”ஒரு பறவையின் இனிமையான குரலில் கேட்டாள் வேங்கரோ.

சமையலறையில் இருந்து எதோ கீழே விழும் ஓசையை நான் கேட்டேன். ஒரு நிமிடத்துக்குப் பிறகு சமையலறைக் கதவு சத்தத்துடன் மூடப்பட்டது.

“நீ ஏன் வேறு ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளக்கூடாது?” என்று கேட்டேன்.” இந்தப் பழைய பொருட்கள், உன்னுடைய பாட்டியம்மாள் தான் இறப்பதற்கு முன் கத்தரித்த சில அங்கிகளில் இருந்து நானும் பெரிய டீயும் உருவாக்கியவை”
“இல்லை. எனக்கு வேண்டாம். அவை இயந்திரம் கொண்டு தைக்கப்பட்டுள்ளன” என்றாள் வேங்கரோ.
“அது அவற்றை நீண்ட நாள் உழைக்கச் செய்யும்” என்றேன் நான்.
” அது விஷயமே இல்லை” என்றாள் வேங்கரோ. “இவையெல்லாம் பாட்டியம்மாள் உடுத்திய ஆடைகளின் துண்டுகள். இந்தத் தையல் எல்லாம் அவள் தன் கைகளாலேயே செய்தவை”
“ஆகா!” அந்த கம்பளிப் போர்வைகளைத் தன்னுடைய மணிக்கட்டில் பாதுகாப்பாக ஏந்திக் கொண்டு அவற்றை வருடினாள்.
” இதிலுள்ள இளஞ்சிவப்பு நிறமுள்ள சில துண்டுகள் அவளுடைய அம்மா அவளுக்குக் கொடுத்த பழைய ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்டவை” என்று சொல்லிக்கொண்டே நான் அந்தக் கம்பளிப் போர்வைகளை எட்டித் தொடப் போனேன். டீ வேங்கரோ, நான் அதைத் தொட முடியாதபடி பின்னால் நகர்ந்தாள். அதாவது அவை ஏற்கனவே அவளுக்குச் சொந்தமாகி விட்டிருந்தனவாம்.
அவற்றைத் தன்னுடைய நெஞ்சின் மீது வைத்து இறுக்கி அழுத்திப் பிடித்தபடி அவள் மறுபடி பெருமூச்சு விட்டாள்.

“உண்மை என்னவென்றால், மேகிக்கும், பாங்கி ஜான் தாமஸூக்கும் திருமணப் பரிசாக அவற்றைத் தருவதாக நான் ஏற்கனவே உறுதி அளித்து இருக்கிறேன்” என்றேன்.

இதைக் கேட்டதும் தேனீ ஒன்றினால் கொட்டப்பட்டதைப் போல மூச்சுத் திணறினாள் டீ.

“மேகிக்கு இந்தக் கம்பளிப் போர்வைகளினுடைய மதிப்பு தெரியாது. அவள் இதைத் தினசரி பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் அளவுக்கு கீழான ரசனை உள்ளவள்”

மேகி அப்படிப்பட்டவள் என்று தான் நானும் நினைக்கிறேன். யாரும் பயன்படுத்தாமல் எவ்வளவு காலமாக நான் அவற்றைப் பாதுகாத்து வருகிறேன் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். அவள் அதை நிச்சயமாக தினம் தினம் பயன்படுத்துவாள் என்று நான் நம்புகிறேன்”

டீ வேங்கரோ கல்லூரிப் படிப்புக்காக வெளியூர் சென்றபோது, அந்தக் கம்பளிப் போர்வையை ஏற்றுக்கொள்ளும்படி அவளிடம் கேட்டதையும் “அவை பழங்காலத்தவை. இன்றைய நாகரீக பாணியில் இல்லை” என அவள் ஒரேயடியாக மறுத்ததையும் நான் இந்த நேரத்தில் அவளிடம் சொல்லிக்காட்ட விரும்பவில்லை.
“ஆனால் அவை விலைமதிப்பற்றவை” என்று தன் வழக்கமான கோபத்துடன் அவள் இப்போது,
“மேகி அவற்றைக் கட்டிலின் மீது போடுவாள். ஐந்து ஆண்டுகளுக்குள், ஏன் இன்னும் குறைவான காலத்திலேயே அவை கந்தலாகி விடும்” என்றாள்.
” இது போன்ற கம்பளிப் போர்வைகளை எப்படி உருவாக்குவது என்று மேகிக்குத் தெரியும்” என்றேன் நான்.
டீ வேங்கரோ என்னை வெறுப்புடன் பார்த்தாள். “நீங்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறீர்கள். விஷயம் இந்த கம்பளி போர்வைகள், இந்தக் கம்பளிப் போர்வைகள் பற்றியது” என இரண்டு முறை அழுத்திச் சொன்னாள்.
“சரி” தோற்றுப் போனவளாக நான் கேட்டேன் “நீ அவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?”
“அலங்காரமாக சுவரில் தொங்க விடுவேன்” என்று, ஏதோ அது ஒன்று தான் கம்பளிப் போர்வைகளின் பயன்பாடு என்பது போலச் சொன்னாள்.

இதற்கிடையில், கதவின் அருகே வந்து நின்றிருந்த மேகியின் பாதங்கள் ஒன்றோடொன்று உரசித் தேய்த்தன. இதுவரை எதையும் வெற்றி கொள்ளாத, எதையும் தனக்காக ஒதுக்கி வைத்துக் கொள்ளாத ஒருவரின் குரலில், “அவள் அதை எடுத்துக் கொள்ளட்டும் அம்மா. இந்தக் கம்பளிப் போர்வைகள் இல்லாமல் கூட பாட்டியம்மாள் டீயை என்னால் நினைவு கூர முடியும்” என்று சொன்னாள் மேகி.

நான் அவளை முறைத்துப் பார்த்தபோது, அவள் தன்னுடைய கீழுதட்டில் செக்கர் பெர்ரியாலான மூக்குப் பொடியைப் பூசி இருந்ததைக் கவனித்தேன். கையடக்கமான நாய்க்குட்டி ஒன்று மயக்க நிலையில் இருப்பதான ஒரு தோற்றத்தை அது அவளுடைய முகத்துக்குத் தந்தது. பாட்டியம்மாள் டீயும், பெரிய டீயும் கம்பளிப் போர்வைகளை எப்படி உருவாக்குவது என்று அவளுக்குக் கற்று கொடுத்திருந்தார்கள். மேகி தன்னுடைய அழுக்கான கைகளைத் தன் பாவாடையின் மடிப்புகளில் மறைத்தபடி நின்று தன் சகோதரியை அச்சம் போன்ற ஒரு உணர்வுடன் பார்த்தாளேயொழிய, கோபப்படவில்லை. அது மேகியின் பழக்கம். கடவுளின் எண்ணம் இப்படித்தான் இருக்கும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.

“நீ வேறு ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்” என்று இப்போது தீர்மானமாக நான் டீயிடம் சொன்னேன். இதைக் கேட்ட டீ ஒரு வார்த்தை கூடப் பதில் பேசாமல் ஹக்கீம் என்கிற முடி திருத்துபவனை நோக்கிச் சென்றாள்.

நானும் மேகியும் அவளை வழியனுப்ப காருக்கு அருகே சென்றபோது, “நீங்கள் அதைச் சிறிதும் புரிந்து கொள்ளவில்லை” என்றாள்.
“நான் எதைப் புரிந்து கொள்ளவில்லை?” அவள் என்ன தான் சொல்லப் போகிறாள் என்று நான் உண்மையிலேயே அறிய விரும்பினேன்.
“நம்முடைய பாரம்பரியத்தை” என்றாள் அவள்.

பிறகு மேகியிடம் திரும்பி அவளை முத்தமிட்டாள். ” நீயும் ஒரு நல்ல நிலைமைக்கு உன்னை ஆளாக்கிக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே நமக்கான விடிவு காலம் தோன்றியிருக்கிறது. ஆனால், நீயும் அம்மாவும் வாழ்கிற இந்த வாழ்க்கை முறையில் அதை நீ எப்போதுமே அறிய வாய்ப்பில்லை” என்றபடி, அவள் தன் மூக்கின் நுனி முகவாய் என முகம் முழுவதையும் மறைத்த ஒரு குளிர் கண்ணாடியை அணிந்துகொண்டாள். பதிலுக்கு மேகி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை ஒருவேளை அந்தக் குளிர் கண்ணாடிகளை நோக்கிக் கூட இருக்கலாம். ஆனால், அச்சங் கொண்டதாக இல்லாமல் அது உண்மையான ஒரு புன்னகையாக இருந்தது.

அந்தக் காரின் புழுதி அடங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த பிறகு, நான் மேகியிடம் ஒரு சிட்டிகை மூக்குப்பொடியைக் கொண்டு வருமாறு கேட்டேன். பிறகு வீட்டுக்குள் சென்று படுக்கும் வரை அந்த முற்றத்தில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தோம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button