இணைய இதழ்இணைய இதழ் 93மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

எழுபது வயது மரம் – ஹிந்தில்: டாக்டர். ஊர்மிளா ஷிரிஷ்; ஆங்கிலத்தில்: ரிதுபர்ணா முகர்ஜி; தமிழில் – ஏ.நஸ்புள்ளாஹ்

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

ண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெற்று நிலமாக இருந்தது. கரடுமுரடான வயல்வெளியில் இன்னும் மண் குவிந்து கிடந்தது. ஆங்காங்கே சில கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு ஒரு காலத்தில் முப்பது நாற்பது குடும்பங்கள் வாழ்ந்ததாக மக்களின் மூலம் அறியமுடிந்தது. சாதி, மதம், இனம் என அனைத்து மக்களும், எல்லா வகுப்பினரும், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் என எல்லா வகையினரும் வாழ்ந்து வந்தனர். மக்கள் பெருக்கம் நகரம் முழுவதும் கூட்டமாக மாற்றியது. எங்கு பார்த்தாலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் என வளர்ச்சியானது. தெரு முனைகளில் குடிசைகள்,வீடுகள் இன்னும் தெருக்களில் ஓடும் அழுக்கு நீர், வறண்டு கிடக்கும் குளங்கள், வற்றிய ஆறுகள் பட்ட மரங்கள் மற்றும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்ட நிலம். இந்த மரம்தான் ஒரே ஓய்வு, அதன் அடியில் மக்கள் தங்கி ஓய்வெடுத்து வந்தனர். ஆடு மேய்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் என பலரும் சிறிது ஓய்வுக்காக மரத்தை நாடுவார்கள். இந்த பெரிய மரத்தின் கிளைகள் அடர்ந்து வெகுதூரம் பரவிக் கிடந்தன,அந்தக் கிளைகள் மிகவும் உறுதியானதாகவும், விருட்சமாகவும் இருந்தன, அவற்றில் பத்து ஊஞ்சல்களைக் கட்டினாலும், அவை உடையாது, அசையாது. மந்தைகள் மேய்ப்பவர்களும் பயணிகளும் இந்த மரத்தின் வயதைக் கருத்தில் கொண்டு இந்த மரத்திற்கு ‘பழைய தந்தை’ என்று பெயரிட்டனர். மரத்தை ஒரு புத்திசாலி வயதான மனிதனை விட குறைவாக யாரும் மதிப்பீடு செய்யவில்லை. காலப்போக்கில் ‘வயதான தந்தை’ ஒரு மரமாக இருப்பதுடன், ஒரு வயதான மனிதராகவும் கருதப்பட்டது. ‘பழைய தந்தை’ தனது எழுபது வருட வாழ்நாளில் மிக நீண்ட காலத்தைக் கண்டது. வளரும் நகரங்கள், மாறிவரும் கிராமங்கள், பசுமையான பயிர் வயல்களில் தொழிற்சாலைகள் அமைதல், கான்கிரீட் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வாழும் மக்களின் குழப்பமான வாழ்க்கை முறைமை. மனிதர்கள் தாங்களாகவே வீடு கட்டிக் கொண்டிருப்பது மட்டுமின்றி மற்றவர்களின் நிலங்களையும் அபகரிக்கத் தொடங்கினர். அந்த மரத்தைச் சுற்றியுள்ள சிறிய மற்றும் பெரிய மரங்கள் வெட்டப்படுவதையும், திருடப்படுவதையும் அல்லது எரிப்பதையும் அது பார்த்தது. ‘பழைய தந்தை’ வெறும் வேரூன்றி, பறக்க முடியாத பறவையைப் போல ஆதரவற்று நின்றது. மனிதர்கள் மரங்களை வெட்டி பிணங்களை அதில் எடுத்துச் செல்லும் போதெல்லாம், மனித இனத்தின் காட்டுமிராண்டித்தனம் வளர்ந்து வருவதை உணர்ந்து, அது அழுதது. இந்த பழைய மரத்திற்கு ஒரே ஆறுதல் பறவைகள் அதன் தலை மற்றும் கிளைகளில் உட்கார்ந்து கொள்வதுதான், இல்லையெனில் அது மிகவும் தனிமையாக இருப்பதாக கவலை கொண்டது, காலம் செல்லுகையில் கிளைகளின் அடர்த்தி குறைந்து, ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஒருவேளை இவ்வளவு பழமையான மரத்திற்குத் தீங்கு விளைவித்தால் சட்டவிரோதம் என்று நினைத்த திருடர்கள் அதை இன்னும் வெட்டாமல் இருந்திருக்கலாம். அடர்ந்த பலா மரங்கள், மஹுவா மரங்கள், பெர்ரி மற்றும் பிஸ்தாக்களின் தோற்றங்களை ‘பழைய தந்தை’ மரம் நினைத்துப் பார்க்கிறது. ஐயோ! இந்த சமூகம் எவ்வளவு இரக்கமின்றி அழித்துவிட்டது.

“இது மட்டும்தான் பாக்கி”, லலித், ‘பழைய தந்தையை’ கூர்ந்து கவனித்தான்.

“இதை நாம் காப்பாற்ற வேண்டும். இது இல்லாவிட்டால் நாம் இங்கு வரமுடியாது. எங்கே போவது நாம் என்ன செய்ய வேண்டும்?”- கமல் கேட்டான்

“இதை எப்படியும் காப்பாற்றுவது? என அதன் பெயரில் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

“இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு மேடம் இருக்கிறாள். ஒரு மண்டபம் கட்டியிருக்கிறாள். அவள் அங்கேயே தங்குகிறாள்.”

“தனியாகவா? இந்த வனாந்தரத்தில்? அவள் பயப்படவில்லையா?”

“அவள் ஒரு மட்பாண்ட கலைஞர்… இல்லை, அவள் களிமண் வேலை செய்கிறாள்… பாத்திரங்கள், பொம்மைகள் மற்றும் குவளைகள் மற்றும் பூந்தொட்டிகள் செய்கிறாள். அவளிடம் பேசினால் என்ன?”

லலித்தின் யோசனையை கமல் ஏற்றுக்கொண்டான். “விலங்குகள் இரவு நேரங்களில் அங்கு தண்ணீர் தேடி தெருக்களில் அலைவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்”.

“ஆனால், அவைகளுக்குப் பயந்து நாங்கள் எங்கள் வீட்டில் இருந்துவிட முடியாது!”

இரவுப் பணியை முடித்துக் கொண்டு லலித் மற்றும் கமல் இருவரும் மட்பாண்ட கலைஞரை சந்திக்கச் சென்றார்கள். லலித் வனத்துறை மாளிகையில் காவலராக இருந்தான் இன்னும் இந்த இடத்தின் மூலை முடுக்கை நன்கு அறிந்திருந்தான்.

“இப்ப இங்க இருக்கீங்களா மேடம்?”, என்று லலித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“நான் இங்கு வேலை செய்ய வருகிறேன். இது என் இடம்”.என்றாள் அவள்

“இந்த நிலத்தை ஏன் தெரிவு செய்தீர்கள்? ஒரு சில காட்டு மரங்களைத் தவிர இங்கு எதுவும் வளரவில்லையே, அவை கூட இப்போது இல்லை. நீங்கள் அதைத் தெரிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். காடு வெகுவாக குறைந்துவிட்டது, விலங்குகளும் வெளியேறிவிட்டன”.

“என்னால் அதை உணர முடிகிறது. சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான மரங்களை மக்கள் வெட்டிவிட்டனர். என்னை விட நீங்கள் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வேண்டும்”.

“உங்களுக்கு குடிநீர் எங்கே கிடைக்கும்?” லலித் உரையாடலை மாற்றிக் கேட்டான்.

“ஒரு குழாய் கிணற்றில் இருந்து. நான் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது.”

“இங்கே தண்ணீர் எப்படி இருக்கிறது? நிலத்தின் இந்தப் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்துள்ளது. தண்ணீர் எளிதில் கிடைக்காது. அதனால்தான் மக்கள் இங்கு நீண்ட காலம் தங்குவதில்லை”.

“ஆனால், குழாய் கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது.”

“மேடம், உங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைத்ததில் நீங்கள் அதிர்ஷ்டசாலி.”

“உங்களுக்குத் தேவையான தண்ணீரை இங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம்.”

“அதனால்தான் பசுக்கள் ஏன் இங்கு வந்து மேய்கின்றன என்று யோசித்தேன்”

“ஏன்? இதற்கு முன் அவைகள் இங்கு வரவில்லையா?”

“இல்லை. ஒருவேளை அவைகள் தண்ணீர் இங்கு கிடைப்பதால் வந்திருக்கலாம்.”

“நீங்கள் இங்கே வேலை செய்ய விரும்புகிறீர்களா?” மேடம் பேச்சை மாற்றிக் கேட்டாள்.

“ஆமாம். கண்டிப்பாக. என்ன வேலை மேடம்? நாங்கள் இருவரும் பகலில் ஓய்வாகத்தான் இருக்கிறோம் அதனால் எங்களால் வேலை பார்க்க முடியும்.”

“இடத்தை சுத்தம் செய்வது, காய்ந்த இலைகளை பெருக்குவது, புல் வெட்டுதல் போன்ற வேலைகள் பார்க்க வேண்டும்”.

“இங்கே புதிதாக ஏதாவது ஆரம்பிக்கிறீர்களா மேடம்?” லலித் ஆவலுடன் கேட்டான்.

“ஆமாம், இந்த முழுப் பகுதியிலும் நான் ஆயிரம் மரங்களை நட விரும்புகிறேன்”

“ஆயிரம் ஆயிரம்! ஆயிரம்?” லலித் மீண்டும் மூன்று முறை வினவினான்.

“ஆம். இதில் ஆச்சரியம் என்ன? நீங்கள் வனத்துறையில் வேலை செய்கிறீர்கள், எனவே உங்களுக்கு நிறையவே மரங்களுடன் தொடர்பிலிருக்க வேண்டும்”.

“மேடம், இந்த மண்ணில் மரங்களை நட ஆழமான அகழிகளை தோண்டுவதற்கு நாங்கள் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும் எங்கும் பாறைகள் உள்ளன. மழையின் போது நாம் அவற்றை நட வேண்டும் இல்லையெனில் விலங்குகள் அதை அழித்துவிடும்.”

“எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். நான் முடிவு செய்துவிட்டேன், கண்டிப்பாக செய்யலாம்”.

“மேடம், எந்த வகை மரங்களை நட விரும்புகிறீர்கள்?”

“ரோஜா மரம், சீத்தாப்பழம், வேம்பு, மாம்பழம்” என மற்றும் பலவற்றை வரிசையாக அடுக்கிக்கொண்டு போனாள்.

“இந்த இடத்தைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்று நினைக்கிறேன்… கள்வர்கள் ஒரே இரவில் செடிகளைத் திருடிச் சென்றுவிடுவார்கள்”. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேச்சை தொடர்ந்தனர்.

“மேடம், உங்களுக்குத் தெரியுமா, இரவில் மிருகங்கள் இங்கு வரும்.”

“எனக்குத் தெரியும். நான் மிருகங்களுக்காக ஒரு குளம் கட்டுகிறேன்”.

“இவள் ஒரு பெண்ணா அல்லது சூனியக்காரியா? இவள் எதற்கும் பயப்படவில்லையே?” கமல் லலித்தின் காதுகளில் கிசுகிசுத்தான்.

“அங்கே அந்த பழைய மரத்தைப் பார்த்தீர்களா…?”, மேடம் மரத்தைக் காட்டி கேட்டாள்.

“ஆம் மேடம், வயதான மரம்!’ அதை இங்கே ‘பழைய தந்தை’ என்றுதான் சொல்கிறோம்” இருவரும் இப்போது மேடத்திடம் தெளிவாகப் பேசினார்கள்.

“மரம் எங்கள் பழைய தந்தையைப் போன்றது! அதன் அன்பின் பேரில் நான் இங்கு வந்துள்ளேன்”.

“இவள் ஒருவித சூனியக்காரி என்று நான் நினைக்கிறேன்” லலித் கிசுகிசுத்தான் “அல்லது அவள் பைத்தியமாக இருக்க வேண்டும். ஒரு காட்டுக்குள் தனிமையாய் ஒருவர் எவ்வாறு வாழ்வது?”

“நான் இந்த வயலையும் இந்த நிலத்தையும், வாங்கினேன்.”

“ஏன் மேடம், இதில் என்ன விசேஷம்?”

“என் மூதாதையர்கள் அந்த மரத்தை நட்டார்கள் இப்போது அது எவ்வளவு தனிமையாக இருக்கிறது என்று பாருங்கள். அதனுடன் குடும்பமாக இருந்த மரங்களை திருடர்கள் வெட்டிக் அழித்து விட்டார்கள்”, மேடம் சிந்தனையுடன் கூற, அவள் குரலில் பரிதாபம் நிறைந்திருந்தது.

“மேடம், நீங்கள் பேய்கள் மற்றும் ஆவிகளை நம்புகிறீர்களா?”


“ஆமாம் ஆவிகள் இங்கு வருமா? அவைகள் வந்தால் சொல்லுங்கள் நான் அவைகளைச் சந்திக்க விரும்புகிறேன்”, என்று சிரித்தபடி கூறினாள் மேடம்

“இல்லை, இல்லை தெய்வீக ஆவிகள்”, என்று கமல் மெதுவாக கூறினான்.

“மேடம், நீங்கள் தனியாக இருக்கிறீர்களா அல்லது”

“வேறு ஆட்களும் உள்ளனர்”.

“அப்படியானால் நல்லது, ஏனென்றால் இங்கே தனியாக இருப்பது ஆபத்தானது.”

“விஸாரியுங்கள், வேலையின்றி இருக்கும் அனைவரையும் இங்கு அழைத்து வாருங்கள். எனக்கு இங்கு வேலை செய்யக்கூடிய நிறைய ஆட்கள் தேவை. பக்கத்து கிராமங்களில் உள்ளவர்கள் உள்ளூர் சாராயத்தைக் குடித்துக் கொண்டு வேலையில்லாமல் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இங்குள்ள வயதான தந்தையின் தோட்டத்தில் வந்து வேலை செய்யும்படி அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் இருவரும் தண்ணீர் அல்லது தேநீர் குடிக்கிறீர்களா?”

“தண்ணீர் தாருங்கள்.”

கமலும் லலித்தும் பயந்த விழிபிதுங்கலுடன் சுற்றிப் பார்த்தனர்

யாரோ இந்த இடத்தை வாங்கியதாக மக்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். காடுகளுக்குள் ஒரு பங்களா இருப்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள், அங்கு மக்கள் வந்து தங்கி, காட்டில் அழகை ரசிக்க செய்தார்கள். ஆனால், இந்தக் காட்டில் வீடு கட்டுவதும், இந்த காட்டில் மண்டபம் கட்டுவதும் பைத்தியக்காரத்தனத்திற்கு உட்பட்டது! 

மேடம் இங்கே முழுமையாக குடியேறியதும் அது புரியும். இந்த இடத்திற்கு இதற்கு முன்னரும் ஆட்கள் வந்து விட்டுப் போயிருக்கிறார்கள் மேடமும் போய்விடுவார்கள். வயதான தந்தை ? 

கமலும் லலித்தும் தங்கள் மதிய உணவுப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, தங்கள் டவல் துண்டுகள், கைக்குட்டைகள், தேவவையான தடிகள் என எடுத்துக் கொண்டு பிரார்த்தனையின் தோரணையில், அவர்கள் சொன்னார்கள்- “வயதான தந்தை மரமே நீங்கள் உண்மையில் எங்கள் மூதாதையராக மாறிவிட்டீர்கள் நீங்கள் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும். உங்களது பசுமையான குடும்பமாக உறவாடுவதற்காக நாங்கள் மேலும் மரங்களையும் செடிகளையும் நடுகிறோம். நீங்கள் இங்கே இப்படி இருப்பதால்… பசுமையால் மேலும் நாங்கள் எங்கள் வாழ்க்கையைப் பெறுகிறோம். மேடம் வயதான தந்தையே உங்களை பாதுகாக்க தயாராகிவிட்டார்.”

ஆனால், மேடத்தின் வார்த்தைகள் உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்று கமலுக்கும் லலித்துக்கும் இன்னும் சந்தேகமாகவே இருந்தது!

******

ethirpirathigal@gmail.com 

*******

ஊர்மிளா ஷிரிஷ்

1959இல் பிறந்த டாக்டர் ஊர்மிளா ஷிரிஷ் தன் இலக்கிய வாழ்க்கையில் பத்தொன்பது சிறுகதைத் தொகுப்புகளையும் மூன்று நாவல்களையும் பல மொழிபெயர்ப்பு தொகுப்புகளையும் எழுதியுள்ளார். அவரது கதைகள் புகழ்பெற்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைளில் வெளிவந்துள்ளன மற்றும் அவரது கதைகள் உருது, பெங்காலி, கன்னடம், சிந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் பல பிராந்திய மற்றும் தேசிய இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார் மேலும் அவரது கதையான “பத்தர் கி லக்கீர்” தூர்தர்ஷனில் ஒரு தொலைத் தொடருக்காகத் தழுவி எடுக்கப்பட்டது. தற்போது, ​​அவர் மத்திய சாகித்ய அகாடமி, புது தில்லியின் பொதுக் குழுவில் உறுப்பினராக உள்ளார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் உயர் கல்வித் துறையில் நிர்வாகப் பதவியில் இருந்து ஓய்வு பெற்று தனது எழுத்துப் பணியைத் தீவிரமாகத் தொடர்கிறார்.

ரிதுபர்ண முகர்ஜி

ரிதுபர்ணா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள ஜோகமயா தேவி கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் ஆய்வு பீட பேராசிரியராக உள்ளார். அவர் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார் மேலும், தற்போது IIIT புவனேஸ்வரில் மேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆஃப்ரோ டயஸ்போரிக் இலக்கியத்தில் பாலின உறவு குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஆபிரிக்க மற்றும் இந்திய இலக்கியம் மற்றும் பிந்தைய காலனித்துவ மற்றும் பெண்ணிய கோட்பாடுகள் மற்றும் ஆங்கில மொழி கற்பித்தல், இரண்டாம் மொழி கையகப்படுத்தல் மற்றும் தொடர்பு ஆய்வுகள் ஆகியவை அவரது ஆர்வமுள்ள பகுதிகளில் அடங்கும். அவர் தனது பணி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு வெளியே ELT ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ESL ஆசிரியராக பணியாற்றுகிறார்.

*********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button