
கொல்லப்புறத்து மாவிலைகளில்
பச்சை கூடியிருந்தது
இரு வாரத்திற்குமுன்
வாசலில் முறைத்து நிற்கும்
வேம்பிலைகளிலும்
அப்படியே
வசந்தகாலத்தின் வருகை
ஒவ்வொரு உயிருக்குமாக
ஒரு கணக்கை
முன் குறித்திருக்கிறது போல
எங்கள்
வீட்டில் மட்டும்தான் அப்படி
என்றாள் மனைவி
அவளது
வசந்தத்தின்
காலயெல்லை புரியாமல்தான்
நான்
ஆண்டுகளைக் கணக்கிடுவதையே
நிறுத்திக்கொண்டேன்.
•
இயல்பாகக்
கையாட்டிப் பேசுபவர்களது
உடலும்கூட
மின்சாரம் பாய்ந்ததுபோல்
ஆடத்தான் செய்கிறது
அமர்கையில்
படுக்கையில்
நடக்கையில்
என எப்பொழுதும்
அசைந்துகொண்டே
இருக்கிறார்கள்
அசையாமலிருந்து
கடவுளாவதைத்
தவிர்க்கிறார்கள்போல.
•
எனக்கு கிட்சனைக் கண்டாலே
பயமாயிருக்கிறது
எப்போதோ அவள் சொன்னது
காற்றலைகளில் தேங்கி அது
என் செவிசேரும்போது சொன்னேன்
வள்ளி மெஸ்ஸில் வாங்கிவருவதாய்
அப்படியெனில்
அவளது கிட்சன் என்றாள்
என்னைப் பார்த்துச் சிரித்தது
பசி மட்டுமல்ல.