தொடர்கள்
Trending

GoT Series Season 1- பாலகணேசன்

பாலகணேசன்

உலகம் முழுக்க ஒரு சினிமாவோ அல்லது பாடலோ அல்லது சீரீஸோ வெற்றிபெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒரு அவெஞ்சர்ஸ் போலவோ அல்லது பிலீவர் பாடல் போலவோ ஒரு தொலைகாட்சி தொடர் எளிதாக வெற்றிபெற இயலாது. காரணம் அவெஞ்சர்ஸ் திரையரங்குகளில் வெளியாகும். பிலீவர் போன்ற பாடல்கள் மிக எளிதாக யூடியூபில் கிடைக்கும். ஆனால் தொலைகாட்சி தொடர் அப்படி அல்ல. அமெரிக்காவில் ஒளிபரப்பாகும்போதே அதை மற்ற நாடுகளில் பார்க்க ஒரே வழி டோரன்ட் மட்டுமே.

காரணம் இந்த தொடர்கள் எல்லாம் அமெரிக்க தணிக்கைத்துறை அளவுகோலின்படி எடுக்கப்படுபவை. இந்தியாவில் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் கூட முழுதாக ஒளிபரப்பாகாது. இந்த பிரச்சினையை எல்லாம் தாண்டிதான் இங்கே ரசிகர்கள் அதை பார்க்கின்றனர். அதைப்பற்றி எழுதுகின்றனர். பேசுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது மக்களுக்கு அறிமுகமாகிறது. பின்னர் அதற்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாகும் தருணத்தில் பரவலாக அதை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி, ஒருகட்டத்தில் அது க்ளாஸிக் அந்தஸ்தை பெறுகிறது.

இந்த செயல்பாடு எளிதானது அல்ல. அதுவும் அந்த தொடர் முடிந்தபின்னரும் கூட தொடர்ந்து விவாதங்களை தக்கவைப்பதென்பது ஒரு சாதனையாகவே கொள்ளவேண்டும். இந்த எல்லா சாதனைகளையும் சத்தமில்லாமல் செய்துவிட்டு, இன்னும் பலரை மறுமுறை பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் கேம் ஆப் த்ரோன்ஸ். தமிழ் மெகா சீரியல்களை பகடி செய்தே பழக்கப்பட்ட ஒரு கூட்டத்திற்கு கிடைத்த பொக்கிஷமாகவே இதை கூறலாம்.

உண்மையில் கேம் ஆப் த்ரோன்ஸ் மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட ஒரு தொடர். ஏன் புத்திசாலித்தனமென்றால் ஏற்கனவே பலமுறை இதன் சாயலில் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகள் சினிமாவோ அல்லது தொடராகவோ எடுக்கவும் பட்டிருக்கிறது. ஆனால் எங்கே கேம் ஆப் த்ரோன்ஸ் சிறப்பம்சம் பெறுகிறது என்றால் கதை சொல்லும் முறையில்தான். ஒளிவுமறைவற்ற ஒரு திரைக்கதையும் அதன் ஆக்கமும் மட்டுமே இதன் மீதான பிரமிப்பை எப்போதும் அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

நாம் நல்லவர் என்று நினைக்கும் எல்லோருக்குள்ளும் ஒரு முடிவில்லாத தீயவை பற்றிய கேள்விகள் இந்த தொடர் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கப்படும்.அந்த கேள்விக்கான பதிலை நாம் கண்டறியப்போகும் தருணத்தில் அந்த கதாபாத்திரம் மரணமடையும். அதுவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு. அதேபோல் எப்போதும் இயல்பான, ராவான கதைக்களத்துக்கு மத்தியில் ஃபேண்டஸி சம்பவங்கள் புகுத்தப்படும்போது அது அந்நியமாக இருக்கும். ஆனால் இங்கே அதுவும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு அந்த ஃபேண்டஸி சம்பவங்களே இந்த தொடரை இன்னும் சுவாரஸ்யமாக்குவதுதான் மேஜிக்.

ஒரு நாவலை எப்படி திரையில் ஒரு அனுபவமாக மாற்றுவது என்கிற கேள்விக்கு விரிவான விடையாக எட்டு சீசன் கொண்ட இந்த தொடரை சொல்லலாம். ஒருகட்டத்தில் நாவலை தாண்டி பல சுவாரஸ்யங்கள் இந்த தொடரில் புகுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் தயாரிப்பாளர்கள். என்னதான் இறுதி சீசனில் நேயர்களின் எதிர்பார்ப்புகள் பல பூர்த்தி செய்யப்படவில்லை என்கிற வாதம் எழுந்தாலும் கூட இனிமேல் ஒரு தொடர் இதுபோன்று வர வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இதை தமிழில் விளக்கி எழுதுவது என்பது மிகப்பெரிய சவால். எதை விவரித்து எழுத, எதை எழுதாமல் விட என்கிற குழப்பம் இப்போதும் இருக்கிறது. ஆனாலும் இந்த முயற்சி இந்த அட்டகாசமான தொடர்க்கு செய்யும் ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

வாருங்கள்.. புது உலகம் ஒன்றில் நுழைவோம்.

**************

அத்தியாயம் 1

கிங்டம் ஆப் வெஸ்டாராஸ் அப்படிங்கிற நாட்டுல இருக்குற ராஜா பதவிதான் இங்க எல்லாருக்குமான குறிக்கோள். கதையோட ஆரம்பத்துல வெஸ்டாரசுக்கு வடக்கு பக்கம் இருக்குற ஒரு இடத்துல, அதுவரைக்கும் ஏதோ நாட்டுப்புற கதைகளா மட்டுமே மக்கள் நினைச்சுகிட்டு இருந்த white Walkers அப்படிங்கிற, இறந்தும் உயிரோட இருக்குற ஜோம்பிகள் உண்மையாவே வந்து சிலரை கொல்லுது. அதுல இருந்து தப்பிச்சு போற ஒருத்தன் இந்த விஷயத்த Winterfell பகுதியோட சிற்றரசனான நெட் ஸ்டார்க் கிட்ட போய் சொல்றான். நியூஸ் கேட்டு நெட் அதிர்ச்சி அடைஞ்சாலும் கூட, வடக்கு பக்கம் இருக்குற மிகப்பெரிய சுவரை பாதுகாக்குற பணியில இருக்குற ஒருத்தன் நாட்டுக்குள்ள வந்ததை ராஜதுரோகம்ன்னு சொல்லி அவனோட தலையை வெட்டிர்றாரு. அந்த சுவர் எதுக்குன்னா Wild Links அப்படின்னு சொல்லப்படுற நாடோடி வாழ்க்கை வாழுற மக்கள் நாட்டுக்குள்ள வந்துரக்கூடாதுன்னு பாதுகாக்க கட்டப்பட்டது. திருடர்கள், அரச குற்றம் செஞ்சவங்களுக்கு தண்டனையா இந்த சுவருக்கு நைட் வாட்ச்மேன் வேலை பார்க்க அனுப்பிருவாங்க. இந்த சுவர்ல இருக்குறவங்க கல்யாணம், காட்சி எதுவும் பண்ணமுடியாது. குறிப்பா பாதியில கிளம்பி ஓடுனா மரணதண்டனை உறுதி.

இந்த நெட் ஸ்டார்க் அப்படிங்கிற அரசன் ரொம்ப நேர்மையான ஆளு. சட்டத்தை மதிக்கிற, மகாராஜாவுக்கு விசுவாசமா இருக்குற நல்லவர். இந்த செத்துப்போனவங்க திரும்ப வந்துட்டாங்கங்கிற விஷயம் இவரோட மனசை போட்டு குழப்புனாலும் கூட, அதைவிட பெரிய குடும்ப பிரச்சினைகள் இவருக்கு இருக்குறதால அதை ஒரு விஷயமாவே இவர் எடுத்துக்கல. இவருக்கு அஞ்சி பிள்ளைங்க. அதுல மூத்தவன் ராப் ஸ்டார்க் அடுத்து அரசனாக காத்திருக்கான். அடுத்த பொண்ணு சான்ஸா ஸ்டார்க் ரொம்ப அப்பாவியான பொண்ணு. அடுத்த பையன் ப்ரான் ஸ்டார்க் எப்போ பார்த்தாலும் ஏதாவது பில்டிங் மேல ஏறி குறும்பு பண்ற ஒரு சுட்டிப்பையன். அடுத்ததா பொறந்த ஆர்யா ஸ்டார்க் ரொம்ப தைரியமான ஒரு குட்டிப்பொண்ணு. ஆனா அவளை பொண்ணுன்னு சொன்னாலே அவளுக்கு கோவம் வந்துரும். கடைசி பையன் ரிக்கான் ஸ்டார்க். பெருசா இவனை பத்தி சொல்ல ஒண்ணுமில்ல.

இதுபோக, நெட் ஸ்டார்க்கோட வைப்பாட்டிக்கு பொறந்த ஒரு பையன் இருக்கான். அவன்தான் ஜான் ஸ்னோ. அப்பா மாதிரியே நேர்மையான ஆளு. மத்த எல்லார் மேலயும் ரொம்ப பாசமா இருக்குற நெட் ஸ்டார்க்கோட பொண்டாட்டி கேட்டலினுக்கு ஜான் ஸ்நோவை கண்டா மட்டும் கொஞ்சம் வெறுப்பு உண்டு. எந்த பொண்டாட்டிக்குதான் வைப்பாட்டி பையனை பிடிக்கும்? என்ன நாஞ்சொல்றது!! அப்புறம் அதே ஊர்ல இந்த புள்ளைங்களோட பிள்ளையா சின்ன வயசுல இருந்தே வளர்ந்து இப்போ இளவரசனா இருக்குற ராப் ஸ்டார்க்குக்கு நெருங்கிய நண்பனா இருக்குறவன்தான் தியோன் க்ரெஜாய். இதுபோக ஒருநாள் காட்டுக்குள்ள வேட்டையாட போனப்போ எதிர்பாராம கிடைச்ச ஆறு காட்டு ஓநாய்களையும் இவங்க ஆளுக்கொருதர் பொறுப்பெடுத்து வளர்க்குறாங்க.

இதேநேரத்துல, அங்க மஹாராஜா வசிக்கிற கிங்ஸ் லேண்டிங்-ல ராஜாவோட எல்லா உத்தரவுகளையும் நிறைவேத்துற, அவருக்கு சரியான ஆலோசனை சொல்லக்கூடிய ஹேண்ட் அப்படிங்கிற பதவியில் இருக்குற ஆளு மர்மமான முறையில செத்து போயிர்ராரு. இதனால அந்த பதவிக்கு அடுத்து யாரை போடலாம்னு யோசிக்கிற நம்ம மகாராஜா ராபர்ட் ப்ரெத்தியன் அவரோட பால்ய கால நண்பரான நெட் ஸ்டார்க்கை தேர்ந்தெடுக்கலாம்னு நினைச்சி, நேர்ல போயி இந்த விஷயத்தை கேட்கலாம்னு கிளம்பி winterfellக்கு குடும்பத்தோட போறாரு. நம்ம ராஜா ராபர்ட்டோட பொண்டாட்டி குடும்பத்தோட பட்டப்பெயர் லேன்னிஸ்டர். பொண்டாட்டி செர்சி லேன்னிஸ்டர். அவளோட கூட பொறந்த அதாவது இரட்டையரா பொறந்த சகோதரன் ஜேமி லேன்னிஸ்டர். அதுபோக அவளோட பொறந்த இன்னொரு சகோதரன் டிரியன் லேன்னிஸ்டர். இவன் ஒரு குள்ளன். அதாவது அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி. செர்சியோட பையன் ஜெப்ரி லேன்னிஸ்டர். மோசமான பையன். சின்னபையந்தான். ஆனா நான் ராஜா பையனாக்கும்ங்கிற திமிர் உள்ள பையன். அப்புறம் இவனுக்கு ஒரு தங்கச்சி, தம்பியும் உண்டு. மொத்தத்துல அந்த குள்ளனை தவிர இந்த லேன்னிஸ்டர் குடும்பத்துல எவனும் நல்லவனும் கிடையாது. உருப்படியும் கிடையாது.

நம்ம நெட் ஸ்டார்க் பொண்டாட்டி கேட்டலினோட தங்கச்சியைதான் செத்துப்போன அந்த ஹேண்ட் கல்யாணம் பண்ணியிருந்தாப்ல. அந்த தங்கச்சி அக்காவுக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கா. அதுல என் புருஷனை கொன்னது இந்த லேன்னிஸ்டர் படுபாவிங்கதான்னு எழுதியிருந்ததை கேட்டலின் தன் புருஷன்கிட்ட சொல்றா. எங்க தன் புருஷனையும் அபப்டியே கொன்னுருவங்களோங்கிற பயம் அவளுக்கு இருக்கு. ஆனா அன்னைக்கி நைட் விருந்து நடக்குறப்போ இந்த லேன்னிஸ்டர்ஸ் எல்லாருமே ரொம்ப இயல்பாதான் நடந்துக்கிறாங்க. மறுநாள் ஒண்ணா சேர்ந்து வேட்டைக்கு கூட போறாங்க. அதுவேற இல்லாம நெட் ஸ்டார்க் பொண்ணு சன்சாவை தன்னோட பையன் ஜெப்ரிக்கு கல்யாணம் பண்ணித்தர சொல்லியும் மஹாராஜா ராபர்ட் கேட்குறாப்ல.

இப்போ நாம கொஞ்சம் அப்படியே ஷிஃப்ட் ஆகி கடலுக்கு அந்தப்பக்கம் இருக்குற இன்னொரு இடத்துக்கு போவோம். இப்போ இருக்குற மகாராஜா ராபர்ட் “பைத்தியக்கார ராஜா”ன்னு சொல்லப்பட்ட ஏரிஸ் டார்கெரியன் அப்படிங்கிற அரசனை கொன்னுதான் ஆட்சியை பிடிச்சாரு. அந்த பைத்தியகார ராஜாவோட ஒரு பையனும் பொண்ணும் அப்போ நாடுகடத்தப்பட்டாங்க. பையன் விசாரிஸ் டார்கெரியன் ரொம்ப கொடூரமான ஆளு. எப்படியும் ஆட்சியை மறுபடியும் பிடிச்சிரணும்னு என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கான். அவன் தங்கச்சி டெனெரிஸ் டார்கெரியன் ரொம்பவே அப்பாவியான, பயந்த சுபாவம் உள்ள ஒரு பொண்ணு. அந்த அண்ணன்காரன் என்ன பண்றான்னா தனக்கு போர் செய்ய படை வேணும்னு, ஆதிவாசிகள் மாதிரி வசிக்கிற ஒரு குழுவோட தலைவனான கால் டிராகோ-கிட்ட போயி, என் தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி தர்றேன்.. நீ அதுக்கு பதிலா எனக்கு உரிமையான அந்த மஹாராஜா பதவியை சண்டைபோட்டு வாங்கித்தான்னு ஒப்பந்தம் பண்றான். கணபதி பேக்கரி டீலிங்கை விட நல்ல டீலிங் இது.

கல்யாணத்தப்போ பரிசா மூணு டிராகன் முட்டைகளை நம்ம அப்பாவிப்பொண்ணு டெனெரிஸ்கு தர்றாங்க. ஏற்கனவே பயந்த சுபாவம் உள்ள இந்தப்பொண்ணுக்கு இந்த ஆதிவாசி காட்டுமிராண்டிகளோட கல்ச்சர் சுத்தமா பிடிக்கல. ஏன்னா அவ புருஷன் செக்ஸ் வச்சுக்கும்போது கூட, குதிரை எப்படி செக்ஸ் வச்சிக்குமோ அப்படித்தான் பண்ணுவான். அதாவது டாக்கி ஸ்டைல். இதெல்லாம் அவளுக்கு பிடிக்கலைன்னாலும் கூட எப்படியோ சமாளிக்கிறா.

இப்போ மறுபடி வின்டெர்பெல்லுக்கு வருவோம். எல்லாரும் வேட்டைக்கு போனப்போ இந்த ஒரே பிரசவத்துல பொறந்த செர்சி லேன்னிஸ்டரும், அவ பிரதர் ஜேமியும் ஒரு பில்டிங்-ல மேட்டர் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆமாப்பா..சகோதரனும், சகோதரியும் சாகசம் பண்றாங்க. எப்பவும்போல ஸ்டார்க் பையன் ப்ரான் பில்டிங் மேல ஏறுறேன்னு அன்னைக்குன்னு பார்த்து அவங்க கசமுசா பண்ற பில்டிங் மேல ஏறி அதை பார்த்துர்ரான். அவன் பார்க்குறத ஜேமியும் பார்த்துர்ரான். கொஞ்சம் கூட யோசிக்காம,”காதலுக்காக என்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு பாரு.”னு பன்ச் டயலாக் பேசிக்கிட்டே அந்த பையனை பில்டிங் மேல இருந்து கீழ தள்ளிவிட்டுர்ரான். பையன் செத்திருந்தா பஞ்சாயத்தில்ல. ஆனா பையன் சாகல. கோமா ஸ்டேஜுக்கு போயிர்றான்.

பிரச்சினை இப்படி இருந்தாலும் கூட, நெட் ஸ்டார்க் தன்னோட பொண்ணுங்க சான்ஸா அப்புறம் ஆர்யாவை கூட்டிக்கிட்டு, பொண்டாட்டியை கோமால இருக்குற பையனை கவனிச்சுக்கோன்னு சொல்லிட்டு, அதுபோக தன்னோட மூத்தப்பையன் ராப் ஸ்டார்க் கிட்டயும், அவன் நண்பன் க்ரெஜாய்கிட்டயும் அரசாங்க பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு, மஹாராஜாவோட ஹேண்ட் பதவியை ஏத்துக்கிட்டு கிங்ஸ் லேண்டிங்-க்கு போறாரு. வப்பாட்டி பையன் ஜான் ஸ்னோ “நான் இனிமே இங்க இருந்து என்னத்த செய்ய.. நான் அந்த பெரிய சுவரோட காவல் வேலைக்கு போறேன்..”னு சொல்லிட்டு அவனும் போயிர்றான். அவன் போறதை பார்த்த நம்ம குள்ளன் டிரியன் லேன்னிஸ்டர் நானும் கொஞ்சநாள் போய் அந்த சுவர் பாதுகாப்பு எல்லாம் எப்படி இருக்குன்னு ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன்னு டூரிஸ்ட் விசால அவனும் கிளம்புறான்.

போகும்போது ஜான் ஸ்னோ தன்னோட தங்கச்சி ஆர்யாவுக்கு ஒரு ஒல்லியான குட்டியான வாள் ஒன்னை பரிசா குடுக்குறான். அது பேர் நீடில். அதாவது ஊசி. அபப்டியே ஊருக்கு கிளம்புற அப்பாகிட்ட போயி, எங்கம்மா யாருன்னு இப்பவாவது சொல்லுப்பான்னு கேட்குறான். அதுக்கு அவன் அப்பா இப்ப வேணாம்டா மகனே.. இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன்னு சொல்லிட்டு போறாரு. இவங்க கிளம்பிப்போன ஒருநாள் நைட்டு திடீர்னு ஒருத்தன் கோமாவுல இருக்குற ப்ரான் ஸ்டார்க்கை கொல்ல பார்க்கிறான். ஆனா எங்கிருந்தோ பாய்ஞ்சி வந்த ப்ரான் வளர்க்கிற அந்த ஓநாய் அவனை காப்பாத்திருது. இதை பார்த்த கேட்டலின், நம்ம பையன் பார்க்கக்கூடாத எதையோ பார்த்துட்டான்..அதான் இப்படி நடக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டு ஆராய்ச்சி செஞ்சா, பையன் போட்டிருந்த ட்ரெஸ்-ல இருந்து ஒரு நீளமான தங்க நிற முடி எடுக்குறா. அதுபோக கொல்லவந்தவனோட கத்தி வலேரியான் ஸ்டீல்-ல செஞ்சது. இந்த மாதிரி கத்தி லேன்னிஸ்டர் குடும்பத்துலதான் அதிகமா யூஸ் பண்ணுவாங்க. அதனால கண்டிப்பா இது லேன்னிஸ்டர் வேலையாதான் இருக்கும்னு புரிஞ்சிக்கிற கேட்டலின் எப்படியாவது தன் புருஷன்கிட்ட இதை சொல்லி அவனை வார்ன் பண்ணலாம்னு கிளம்புறா.

அங்க கிங்ஸ் லெண்டிங்-க்கு போனவங்க எல்லாம் ஜாலியா விளையாடிகிட்டு இருக்காங்க. ஆர்யா ஸ்டார்க்கும், அவனோட ஒரு ப்ரண்டும் சும்மா கத்தி சண்டை போட்டு விளையாடும்போது அங்க வர்ற அந்த இளவரசன் ஜெப்ரி லேன்னிஸ்டர், தான் கல்யாணம் பண்ணிக்கப்போற பெண்ணான சன்சா முன்னாடி கொஞ்சம் சீன போடலாம்னு நினைச்சி, கூட விளையாடுற பையனை அடிக்கப்போக, அதைப்பாத்த சுட்டிப்பொண்ணு ஆர்யா பதிலுக்கு ஜெப்ரியை அடிக்க, ஜெப்ரி ஒரு லூசுப்பையங்கிறதால, அவன் உடனே கோவப்பட்டு ஆர்யாவை அடிக்கப்போக, இதை எல்லாம் பார்த்துகிட்டு இருந்த ஆர்யா வளர்க்குற அந்த ஓநாய் வெறியோட ஓடிவந்து ஜெப்ரியோட கையை கடிச்சி வச்சிர, ஒரே கலவரம். மேட்டர் ராஜா காதுக்கு போகுது.

கிங்ஸ் லெண்டிங்-க்கு வந்த முதல் நாளே பெரிய பஞ்சாயத்து ஆனது நெட் ஸ்டார்க்குக்கு கடுப்பா இருந்தாலும் நம்ம பிள்ளைங்க தப்பு பண்ணமாட்டாங்கங்கிற நம்பிக்கையும் இருக்கு. ஆர்யா உண்மையா என்ன நடந்ததுன்னு தைரியமா சொல்றா. ஆனா தான் கல்யாணம் பண்ணிக்கப்போற பையன் மேல தப்பு வரக்கூடாதுன்னு நினைக்கிற சன்சா அபப்டியெல்லாம் ஒன்னும் நடக்கலைன்னு தன்னோட தங்கச்சிக்கு எதிராவே சாட்சி சொல்லிட, இதனால சின்ன குழப்பம் வந்தாலும் கூட, யாருக்கும் பிரச்சினை இல்லாம “பேசாம கடிச்சி வச்ச அந்த ஓநாயை கொன்னுருங்கன்னு” ராஜா தீர்ப்பு சொல்லிர்ராரு. ஆனா ஆர்யாதான் மூளைக்காரி ஆச்சே. இப்படி நடக்கும்னு தெரிஞ்சி அவ முன்னாடியே தன்னோட ஓநாயை யாருக்கும் தெரியாம காட்டுப்பாக்கம் ஓடிருன்னு அனுப்பிவச்சிட்டா. இதை தெரிஞ்சிகிட்ட மஹாராணி செர்சி அப்போ அந்த ஓநாய்க்கு பதிலா சான்சாவோட ஓநாயை கொன்னுருங்கன்னு சொல்லிர்ரா. நெட் ஸ்டார்க் கனத்த இதயத்தோட தானே அந்த ஓநாயை கொன்னுர்ராரு.

கொஞ்சநேரம் கடலுக்கு அந்தப்பக்கம் போய் பார்ப்போம். நம்ம ஆதிவாசி கும்பல், டார்கெரியனோட சேர்ந்து போய்க்கிட்டு இருக்குறப்போ ஜோரா மொர்மென்ட் அப்படிங்கிற ஒரு போர்வீரனை சந்திக்கிறா. அவர் ரொம்பநாளா இந்த ஆதிவாசிகளோட வசிக்கிறார். அவங்களோட மொழியும் கூட இவருக்கு தெரியும். அவருக்கு நம்ம டெனரிஸ் டார்கெரியனை ரொம்ப பிடிச்சி போயிருது. அவ படுற கஷ்டத்தை பார்த்து ஆறுதலா இருக்காரு. அவளுக்கு அந்த ஆதிவாசிகளோட மொழியையும் சொல்லித்தர்றாரு. டேனியும் கொஞ்சம் கொஞ்சமா தன்னோட புருஷனை தன் கைக்குள்ள போட்டுக்குறா. அதன்மூலமா செக்ஸ் வேற மாதிரியும் கூட வச்சுக்கலாம்னு தன்னோட புருஷனுக்கு அவ கத்து கொடுக்குறா.

இங்க கிங்ஸ் லெண்டிங்-ல ஒரு நாலஞ்சி மந்திரிங்க இருக்காங்க. அதுல முக்கியமானவங்க யாருன்னா லிட்டில் ஃபிங்கர்-ன்னு சொல்லப்படுற பீட்டர் பெய்லிஸ், மஹாராஜாவோட தம்பி ரென்லி ப்ராதரன், க்ராண்ட் மாஸ்டர் பைசல் அப்புறம் வாரிஸ் அபப்டிங்கிற ஒரு ஆண்மையில்லாத ஆளு. இவங்கல்லாம் சேர்ந்து ராஜாங்கத்துக்கு கடன் அதிகமா இருக்குங்கிற தகவலை ஹேண்ட் நெட் ஸ்டார்க்குக்கு சொல்றாங்க. அதேநேரத்துல செர்சி லேன்னிஸ்டர் தன் பையன் ஜெப்ரி-கிட்ட நீ சன்சாவை கல்யாணம் பண்ணுனா வடக்கு பக்கம் இருக்குற ராஜ்ஜியம் எல்லாமே நம்ம கண்ட்ரோல்லயே இருக்கும்னும், கல்யாணத்துக்கு அப்புறம் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம்னும் சொல்றா. அதுபோக இந்த கிங்ஸ் லெண்டிங்-ல எப்போ எங்கிருந்து ஆபத்து வரும்ன்னு தெரியாததால, தன்னோட பொண்ணு ஆர்யாவுக்கு வாள்பயிற்சி தர ஒரு நல்ல மாஸ்டரை நெட் ரெடி பண்றாரு.

அங்க புருஷன்கிட்ட விவரத்தை சொல்லணும்னு கிளம்புன நம்ம கேட்டலின் ஊருக்குள்ள வந்ததும் மந்திரி லிட்டில் பிங்கரை சந்திக்கிறாங்க. லிட்டில் பிங்கரும் இவங்களும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ். சொல்லப்போனா லிட்டில் பிங்கருக்கு கேட்டலினை கல்யாணம் பண்ணிக்க கூட ஆசை இருந்தது. அந்த நேரத்துல அங்க வர்ற இன்னொரு மந்திரியான வாரிஸ் அந்த கத்தியை ஆராய்ச்சி பண்றப்போ இந்த கத்தி ஒருவேளை குள்ளன் டிரியன் லேன்னிஸ்டருக்கு சொந்தமானதா இருக்கலாம்னு ஒரு யூகமா சொல்றாரு. அங்க சுவருக்கு டூர் போன குள்ளன், ஜான் ஸ்னோ கூட நல்லபடியா நட்பாகுறான். அப்போ அந்த சுவரோட இன்ச்சார்ஜ் என்ன சொல்றாருன்னா, வெளி ஆட்கள் இந்த சுவரை தாண்டி வந்துருவாங்கன்னு நாங்க பயப்படல. 1000 வருஷம் முன்னாடி காணாம போன அந்த ஜோம்பிகள் மறுபடியும் வந்துரும்னு பயமா இருக்குன்னும், அதனால இங்க இருக்குற வீரர்களுக்கு நிரைய பயிற்சி வேணும்னும் சொல்றாங்க. ஆனா அதை குள்ளன் நம்பல. இருக்குறவங்களை வச்சி சமாளிங்கன்னு சொல்லிட்டு தான் வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்புறான்.

அங்க கோமாவுல இருக்குற பையன் முழிச்சிர்றான். கால் நடக்கமுடியாதுன்னு தெரியவருது.அதுபோக அன்னைக்கு கீழ விழுந்தப்போ என்ன நடந்ததுன்னும் மறந்துர்ரான். கூட இருக்குற ஒரு பாட்டி அவனுக்கு தினமும் அந்த ஜோம்பிகளை பத்தி நிறைய கதைகள் சொல்லுது. குளிர்காலம் வரும்பொழுது அவைகள் வரும்னும், வந்தா எல்லாரையும் கொல்லாம போகாதுன்னும் அந்த பாட்டி தினமும் கதையா சொல்லுது. வேறுவழி இல்லாம அந்த பையனும் இந்த கதையை கேட்குறான்.

கடலுக்கு அந்தப்பக்கம் காட்டுமிராண்டி கூட்டத்தோட கொஞ்சம் கொஞ்சமா மிங்கில் ஆகுற டேனி ஒரு கட்டத்துல அவன் அண்ணன் மேல செம காண்டாகுறா. அந்த லூசு அண்ணனும் அதுக்கேத்த மாதிரி பண்ண, இதைப்பார்த்த ஆதிவாசிகள் அரசன் கால் டிராகோ புதுசா பொண்டாட்டி இம்ப்ரஸ் பண்ணதுல சந்தோசமா இருக்குறதால, அந்த அண்ணனையே கைதியா பிடிச்சிட்டு போறான். பத்தக்குறைக்கு இப்போ டேனி கர்ப்பமா வேற இருக்கா. மாசமா இருக்குற பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்துறதுதான ஒரு நல்ல புருஷனோட கடமை?

அங்க கோமாவுல இருந்து முழிச்ச பையனுக்கு விதம்விதமா கனவுகள் வர ஆரம்பிக்குது. அதுல மூணு கண்கள் கொண்ட ஒரு காக்கா அடிக்கடி வருது. இது நடக்கும்போதே தன்னோட சொந்த ஊரான கிங்ஸ் லெண்டிங்-க்கு திரும்ப போக சுவர்ல இருந்து வர்ற குள்ளன் டிரியன், இளவரசன் ராப் ஸ்டார்க்கை சந்திக்கிறான். நக்கல் பிடிச்ச பேர்வழியான இந்த குள்ளன், போறபோக்குல இளவரசனோட நண்பன் க்ரெஜாயை பார்த்து “நீ எங்களுக்கு அடிமையா இருந்த பயதானே” அபப்டின்னு கிண்டலும் பண்ணிட்டு போறான். இதே நேரத்துல அந்த சுவர்-ல சாம் அப்படிங்கிற ஒரு புது ஆளு வாட்ச்மேன் வேலைக்கு சேர்றான். அவன் ஒரு கோழை. வாள்சண்டை எதுவும் தெரியாது. ஆனா அவனை ஜான் ஸ்னோ-க்கு ரொம்ப பிடிச்சிருது. ரெண்டு பேரும் நண்பர்கள் ஆயிர்ராங்க.

அங்க கடலுக்கு அந்தப்பக்கம் கல்யாணமான தம்பதியர் முதன்முறையா மாப்பிள்ளை ஊருக்கு போறாங்க. ஏற்கனவே பஞ்சாயத்து கூட்டுன அண்ணன் மேலும் மேலும் இம்சையை கூட்ட, தங்கச்சி டேனி கடுப்பாகி அண்ணனையே அடிச்சுர்ரா. அவன் பண்ற அளப்பறையை எல்லாம் கேட்ட நண்பர் ஜோரா, இனிமே இவன் ராஜாவா இருக்க லாயக்கில்லைன்னும், ஒருவேளை இந்த காட்டுவாசிங்க தங்களோட படைகளை கொடுத்தாலும் அதை வழிநடத்துற திறமை உங்கண்ணனுக்கு கிடையாதுன்னும் சொல்றாரு.

அங்க கிங்ஸ் லெண்டிங்-ல நெட் ஸ்டார்க் நிம்மதியா தூங்கவே முடியாத அளவுக்கு பிரச்சினைகள். எங்க பார்த்தாலும் ஒட்டுக்கேக்குற ஆட்கள். ஒவ்வொரு மந்திரியும் தனித்தனி டீம் வச்சி வேலை பார்க்கிறான். யாரு நல்லவன், யாரு கெட்டவன், யாரை நம்புறது, நம்பவேணாம்ன்னு எதுவுமே முடிவெடுக்க முடியாத நிலைமை. ஏற்கனவே இருந்த ஹேண்ட் எப்படி செத்தாருன்னு இவருக்கு சந்தேகம் இருக்குறதால அதை பத்தி நோண்ட ஆரம்பிக்கிறாரு. அது வேற பல விஷயங்களை இவருக்கு காட்டுது. அதுபடி, ஒரு கொல்லன் பட்டறையில வேலை செய்ற ஜென்ரி அபப்டிங்கிற பையனை பத்தி விசாரிக்கிறதுல நம்ம பழைய ஹேண்ட் ரொம்ப ஆர்வமா இருந்திருக்காருன்னு தெரிய வருது. ஏன்னா இந்த ஜென்ரி நம்ம மஹாராஜாவோட வப்பாட்டி பையன். இவனை மாதிரி ராஜாவோட வப்பாட்டிகளுக்கு பொறந்த பிள்ளைங்களை பத்தி ஆராய்ச்சி பண்ணதாலதான் பழைய ஹேண்டை கொன்னுருக்கலாம்னு சந்தேகம் வருது நெட் ஸ்டார்க்குக்கு.

புதுசா ஹேண்ட் ஆனதை ராஜா கொண்டாட வேண்டி ஒரு நிகழ்ச்சி அரேஞ் பண்றாங்க. அதுல ஜெயிக்கிற ஆளு பேர் க்ரிகர். இவனோட செல்லப்பேர் மவுண்டன். அதாவது மலை. ஆளும் உருவமும் அப்படிதான் இருக்கும். இவன் அண்ணன் பேர் ஹவுண்ட். இவனுக்கு ஒரு தீ விபத்துல ஒருபக்க முகம் வெந்து போயிருக்கும். அந்த தீ விபத்து ஏற்பட காரணமே அவன் தம்பி மவுண்டன்-தான்.அதனால ரெண்டு பேருக்கும் ரொம்பநாளா பகை இருக்கு. அதேநேரத்துல டிரியன் என்கிற குள்ளன்தான் தன் பையனை கொல்ல முயற்சி செஞ்சிருப்பான்னு நினைக்கிற கேட்டலின் மறுபடியும் சொந்த ஊருக்கு போறவழியில, அதிர்ஷ்டவசமா குள்ளனை சந்திக்கிறா. உடனே அவனை சிறைப்படுத்தி பக்கத்துல இருக்குற தன்னோட தங்கச்சி ஆளுற ஊருக்கு கூட்டிட்டு போறா.

அங்க நிகழ்ச்சி நடக்குற இடத்துல இரண்டாவது போட்டியில சர் லோரஸ் அப்படிங்கிற ஆளு ஜெயிக்கிறான். ஆனா தோத்த கடுப்புல அந்த மலை தன்னோட குதிரையோட தலையை வெட்டி கொன்னுர்ரான். அதுபோக மறுபடியும் சர் லோரசை வம்புக்கு இழுக்கிறான். உடனே மலையோட அண்ணன் ஹவுண்ட் உள்ள புகுந்து சர் லோரசை காப்பாத்துறான். இந்த லோரஸ் ஒரு ஹோமோசெக்சுவல். இதை ஞாபகம் வச்சிக்கோங்க. அதேமாதிரி மஹாராஜாவோட தம்பி ரென்லி ப்ராதரனும் ஒரு ஹோமோதான். இவங்க ரெண்டுபேரும் செக்ஸ் பார்ட்னர்ஸ். அதேநேரத்துல ராஜாவும் ராணியும் தங்களோட இத்தனை வருஷ கல்யாண வாழ்க்கை எவ்ளோ பெரிய வேஸ்ட்-ன்னு பேசிகிட்டு இருக்காங்க. சிங்கிளா இருக்குறதோட அருமை இப்பவாவது புரிய வந்ததே!

அங்க குள்ளனை அரெஸ்ட் பண்ணி தன்னோட தங்கச்சி இருக்குற ஊருக்கு கேட்டலின் கொண்டுபோற வழியில திடீர்னு ஒரு கூட்டம் இவங்களை தாக்குது. அதை சாக்கா வச்சி குள்ளன் தப்பிச்சிருக்கலாம். ஆனா அபப்டி செய்யாம அவன் கேட்டலின் தப்பிக்க ஹெல்ப் பண்றான். அந்த நேரத்துல எங்கிருந்தோ வந்த ஒரு வழிப்போக்கனும் நல்லா சண்டை போட்டு இவங்களை காப்பாத்துறான். ஒருவழியா அவ தங்கச்சி லிசாவை சந்திக்கிறாங்க. அவ கொஞ்சம் லூசுமாதிரி நடந்துக்குறா. குறிப்பா அவளோட சிம்மாசனத்துல உக்காந்து இருக்குறப்பவே அவளோட எட்டு வயசு பையனுக்கு பால் கொடுக்குறா. என்ன பாகுபலியில ரம்யா கிருஷ்ணன் பால் கொடுக்குற ஸீன் ஞாபகம் வருதா? அக்கா சொல்றான்னு சொல்லி குள்ளனை ஜெயிலுக்குள்ள அடைச்சிர்ரா.

இங்க கிங்ஸ் லெண்டிங்-ல பழைய ஹேண்டை விஷம் வச்சி கொன்னதா மந்திரி வாரிஸ், நெட் ஸ்டார்க் கிட்ட சொல்றாரு. ஆனா யாரு கொல்ல சொன்னாங்கன்னு தனக்கு தெரியாதுன்னு சொல்றாப்ல. அதுவும் இல்லாம தேவையில்லாம பல கேள்விகளை பழைய ஹேண்ட் கேட்டதுனாலதான் அவரை கொன்னுருப்பாங்கன்னும் வாரிஸ் சொல்றான். ஆனா அவன் வேற எதையோ மனசுல வச்சிக்கிட்டு இதை சொல்றான்னு நெட் ஸ்டார்க்குக்கு புரியல.அதேநேரத்துல ஒரு பூனையை துரத்திட்டு ஓடுற ஆர்யா ஸ்டார்க் போறவழியில வாரிஸும், இன்னொருத்தனுக்கு பேசுறத ஒட்டு கேட்குறா. “ஏற்கனவே ஸ்டார்க்குக்கும், லேன்னிஸ்டருக்கும் வாய்க்கா தகராறு இருக்குன்னும், இது தொடர்ந்தா அங்க கடல் கடந்து இருக்குற டார்கெரியன்களுக்கு வசதியா போயிரும்ன்னு” அந்த ரெண்டும் பேரும் பேசிட்டு போறாங்க.

அங்க டேனி கர்ப்பமா இருக்குற விஷயத்தை தெரிஞ்சிகிட்ட மஹாராஜா இதனால நம்ம ஆட்சிக்கு பிரச்சினை வரும்னு நெட் ஸ்டார்க் கிட்ட சொல்றாரு. இந்த தகவலை மகாராஜாவுக்கு சொன்னது அநேகமா டேனியோட புது நண்பர் ஜோராவா இருக்கலாம். ஆனா ராஜாங்கத்துக்கு ஆபத்து வரும்ங்கிறதுக்காக பொறக்கப்போற குழந்தையை கொல்றது நியாயமில்லைன்னு நெட் சொல்றாரு. கூட இருக்குற மத்த மந்திரிகள் எல்லாம் சேர்ந்து அவளை இப்பவே கொல்றதுதான் ஆபத்தில்லாத விஷயம்ன்னு ராஜாகிட்ட சொல்றாங்க. அதனால மனஸ்தாபம் அடையிற நெட், உடனே தான் கிளம்புறதா சொல்றாரு. இனிமே ஹேண்ட் பதவி தனக்கு வேணாம்னும் சொல்றாரு.அந்தநேரத்துல தன்னோட தம்பியை சிறைபிடிச்சி வச்சிருக்குற விஷயத்தை கேள்விப்படுற ராணியோட இரட்டை சகோதரன் ஜேமி லேன்னிஸ்டர் நெட் ஸ்டார்க்கோட வலதுகையா இருக்குற ஒருத்தனை நடுரோட்-ல வச்சி கொன்னுர்ரான். அதை தடுக்க வர்ற நெட் ஸ்டார்க்கோட கால்ல குத்திட்டு ஜேமி தப்பிச்சு போயிர்ரான்.

இந்த மேட்டர் எல்லாம் தெரிய வர்ற ராஜா, உடனே குள்ளனை ரிலீஸ் பண்ணனும்னு சொல்ல சொல்லி நெட் ஸ்டார்க் பொண்டாட்டி கேட்டலின் கிட்ட சொல்லணும்னு அடிபட்டு இருக்குற நெட் ஸ்டார்க் கிட்ட சொல்றாரு. அப்போதான் இந்த பிரச்சினைகள் பெருசா ஆகாம இருக்கும்னும் சொல்லிட்டு மறுபடியும் தன்னோட ஹேண்டா நீதான் இருக்கணும்னு வேண்டுகோள் வச்சிட்டு வேட்டைக்கு கிளம்புறாரு மஹாராஜா. ஆனா லேன்னிஸ்டர்ஸ் வேற ஐடியா பண்ணி வச்சிருந்தாங்க. அதாவது வேட்டைக்கு போற வழியில மஹாராஜா தொடர்ந்து வைன் குடிச்சிட்டே இருக்கணும்னு அவர் கூட போற ஆள்கிட்ட சொல்லி அனுப்புறாங்க. ராஜாவும் குடிச்சிட்டே இருக்காரு.

அங்க கோமாவுல இருந்து முழிச்ச ப்ரான் ஸ்டார்க்குக்கு ஹெல்ப் பண்ண ஹொடோர் அப்படின்னு ஒருத்தனை நியமிக்கிறாங்க.அவனோட உதவியோட குதிரை ஒட்டி பழகுறான் அந்த சின்னப்பையன். அந்த நேரத்துல இளவரசன் ராப் ஸ்டார்க்கும், அவன் நண்பன் கிரேஜாயும் நாம லேன்னிஸ்டரை எதிர்த்து போர் புரிஞ்சி ஜெயிக்கணும்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அப்போ எங்கிருந்தோ வந்த வைல்ட் லிங்க்ஸ் குரூப்பை சேர்ந்த சிலர் தனியா குதிரை ஓட்டிட்டு போன ப்ரானை அட்டாக் பண்றாங்க. தாக்கின நாலஞ்சி பேரை ரெண்டு பேரும் சேர்ந்து கொன்னுர்ராங்க. ஒரே ஒரு பொண்ணை மட்டும் உயிரோட விடுறாங்க.

அங்க ஜெயில்ல இருக்குற குள்ளன், சிறை பாதுகாவலனை கரெக்ட் பண்ணி அந்த லூசு ராணியை மீட் பண்றான். பேசும்போது இப்படி விசாரணையே இல்லாம அடைச்சு வைக்கிறது நியாயம் இல்ல. வேணும்னா உங்க ஆட்கள்ல ஒருத்தனோட வாள்சண்டை வச்சி அதுல நான் ஜெயிச்சா என்னை ரிலீஸ் பண்ணுங்கன்னு சொல்றான். குள்ளன் கூட யாரு சண்டை போடுறதுன்னு எல்லாரும் கடுப்பாக, அந்தநேரத்துல குள்ளனுக்கு பதிலா நான் சண்டை போடுறேன்னு அந்த வழிப்போக்கன் வந்து சொல்றான். அவன் பேர் ப்ரோன்.செமையா சண்டை போடுவான். அதனால ரொம்ப ஈஸியா அவன் ஜெயிச்சி, குள்ளனோட சேர்ந்து மறுபடியும் கிங்ஸ் லேண்டிங்கை நோக்கி ரெண்டுபேரும் போறாங்க.

அங்க கடலுக்கு அந்தப்பக்கம், டேனி தன்கிட்ட இருக்குற டிராகன் முட்டையை நெருப்புல போட்டு அது முட்டை பொறிக்குதான்னு டெஸ்ட் பண்றா. அபப்டி பண்றப்போ அவ கையில நெருப்பு படுது. ஆனா காயம் எதுவும் ஏற்படுறது இல்ல. அவ உண்மையான சில சக்திகள் கொண்டவள்னு புரியவருது. அப்புறம் “தனக்கு பிறக்கப்போற குழந்தைக்கு தகுதியான அம்மாதான் நானுன்னு” நிரூபிக்கிறதுக்காக ஒரு குதிரையோட இதயத்தை பச்சையா மொத்தமா திங்குறா. அதை பார்த்த ஒரு மந்திரக்கிழவி டேனிதான் எல்லாத்தையும் ஆளப்போரான்னு கூவ, இதை கேட்ட அவ அண்ணன் லூசுப்பைய அந்த டிராகன் முட்டையை தூக்கிட்டு போயி வேற யாருக்காவது வித்துரலாம்னு பிளான் பண்ணி அதை திருடப்போறான். ஆனா ஜோரா அதை பார்த்துர்றாரு. இதனால கடுப்பான அவன், நல்லா தண்ணியை போட்டுட்டு தங்கச்சி புருஷனான பலம்வாய்ந்த டிராகோவை வம்புக்கு இழுக்கிறான். கடுப்பான டிராகோ “உனக்கு தங்க கிரீடம்தான வேணும்? இந்தா வாங்கிக்கோ..”ன்னு தங்கத்தை உருக்கி அப்படியே அவன் தலையில கொட்டி சாவடிச்சிர்ரான்.

இன்னொருபக்கம் அன்னக்கி விளையாட்டுல தோத்த கடுப்புல குதிரையை கொன்ன மலை, திடீர்னு கிராமங்களுக்கு உள்ள புகுந்து இஷ்டத்துக்கு கொள்ளையடிக்கிறதும், பொண்ணுங்களை ரேப் பண்றதுமா அலப்பறை பண்றான்னு நெட் ஸ்டார்க் கிட்ட கம்பளைண்ட் பண்றாங்க. ராஜா வேற வேட்டைக்கு போயிருக்காரு. அதனால வழக்கை விசாரிக்கிற நெட், அவனை உடனே பிடிச்சிட்டு வர சொல்லி ஆர்டர் போடுறாரு. இதுக்கு நடுவுல இளவரசன் ஜெப்ரி லேன்னிஸ்டர் , சான்ஸா கிட்ட போயி ரொமான்டிக்கா பேசி, வருங்காலத்துல நீதான் என் மஹாராணின்னு ரூட்டு விடுறான். இதை கேட்டு சான்ஸா சந்தோசப்படுறப்பவே அவ அப்பா நெட் ஸ்டார்க் வந்து, இங்க போர் வர்றதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு.. அதனால நீயும் தங்கச்சி ஆர்யாவும் உடனே கிளம்பி நம்ம ஊருக்கு போங்கன்னு சொல்ல, சான்ஸா காதல் மயக்கத்துல முடியாதுன்னு சொல்றா. “எனக்கு இங்கயே இருந்து ஜெப்ரி மாதிரி தங்க நிற முடியுள்ள குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு”ன்னு சொல்றா. பெத்த அப்பன்கிட்ட பேசுற பேச்சா இது?

சரின்னு ரூமுக்கு போயி நெட் பழைய புஸ்தகங்களை நோண்டிட்டு இருக்குறப்போ அதுல மகாராஜாவுக்கு உண்மையா பொறந்த பிள்ளைங்களுக்கு எல்லாம் முடி கலர் கருப்பாதான் இருக்கும்னு போட்டிருக்கு. அப்போ கருப்பு நிற முடி இருக்குற வப்பாட்டிக்கு பிறந்தவன்தான் உண்மையிலேயே ராஜாவுக்கு பிறந்தவன். மத்த எல்லா நேர் வாரிசு குழந்தைகளோட முடியும் தங்க நிறத்துல இருக்கு. அப்போ அவனுங்க எவனுமே ராஜாவுக்கு பொறக்கலைங்கிறத நெட் கண்டுபிடிக்கிறாரு.

நெட் ஸ்டார்க்கை குத்திட்டு ஊரைவிட்டு ஓடிப்போன ஜேமி லேன்னிஸ்டர் தன்னோட அப்பாகிட்ட போய் சேர்றாரு. “நீ நெட் ஸ்டார்க்கை உயிரோட விட்டுட்டு வந்தது தப்புன்னு” அவங்கப்பா புத்திமதி சொல்றாரு. நல்ல அப்பா.நல்ல மகன். குட் பேமிலி. அப்போ போர்ன்னு ஒன்னு வந்தா லேன்னிஸ்டரோட முழுப்படைகளும் வந்து ஆதரவு கொடுக்கும்.. நமக்கு கவுரவம்தான் முக்கியம் மகனேன்னு அட்வைஸ் வேற பண்றாரு. அங்க உன் பையன் உன் பொண்ணை ஜல்சா பண்ணிக்கிட்டிருக்கான்யா..இதுல கவுரவம்தான் முக்கியமாம்!

இந்த நேர்மையா இருக்குற ஆட்கள்கிட்ட ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கும். தேவையில்லாத பிரச்சினையை இழுத்து விடுவானுங்க. இப்போ குழந்தைங்க யாரும் ராஜாவுக்கு பிறக்கலைன்னு தெரிஞ்சிருச்சில்ல? மூடிட்டு ராஜா வந்ததும் சொல்லியிருக்கலாம்ல? ஆனா இந்த நெட் ஸ்டார்க் வெண்ண நேரா மஹாராணி செர்சி லேன்னிஸ்டர்கிட்ட போயி, “இந்தா பாரு ஆத்தா. உன் ரகசியம் அம்புட்டும் எனக்கு தெரியும்..அதனால ராஜா வர்றதுக்கு முன்னாடி ஒழுங்கா ஊரை விட்டே போயிருன்னு” சொல்ல, கடுப்பான செர்சி, அந்த சூதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.. நான் பார்த்துக்கிறேன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி சொல்லிட்டு போயிருவா.

அங்க வடக்குல சுவர் இருக்குற இடத்துல எல்லாரும் ட்ரெய்னிங் முடிச்சிட்டு தகுதியுள்ள வாட்ச்மேனா ஆகுறாங்க. அந்த புதுப்பய சாம் மட்டும் வேலைக்காரனா நியமிக்கப்படுறான். சுவருக்கு அந்தப்பக்கம் இருக்குற ஏரியா எல்லாம் பாதுகாப்பா இருக்கான்னு தேடிப்பார்க்க போன மூணு நாலு பேரோட குதிரை மட்டும் திரும்பி வருது. ஆட்களெல்லாம் செத்து போயிர்ராங்க. யார் கொன்னா என்ன ஆச்சின்னு ஒன்னும் புரியல.

அங்க கடலுக்கு அந்தப்பக்கம் டேனி, ஜோரா எல்லாம் ஒரு சந்தைக்கு போறாங்க. ஜோரா அடிமைகளை கடத்துன குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டவர் இல்லையா? டேனி கர்ப்பமா இருக்குற விஷயத்தை ராஜாவுக்கு சொன்னதால, அவரோட குற்றம் மன்னிக்கப்பட்டதா சொல்லி ஒரு லெட்டர் வருது. அதை சந்தையில ரகசியமா ஒருத்தன் கொடுக்கிறான். ஆனா ஜோராவுக்கு டேனி மேல லவ்வு. இந்த நிலைமையில அவளை விட்டு போனா அவளை கொன்னுருவாங்கன்னு தெரியும். அவர் நினைச்சமாதிரியே கொஞ்சநேரத்துலயே ஒயின்ல விஷம் வச்சி டேனியை கொல்ல ஒருத்தன் முயற்சி செய்ய, ஜோரா அதை தடுக்குறார். இதை கேள்விப்பட்டு டென்ஷனாகுற டேனி புருஷன் கால் டிராகோ முதன்முறையா பொங்கி எழுந்து நாம கிங்ஸ் லெண்டிங் மேல போர் தொடுத்து ஜெயிச்சி அரசாளனும்னு சபதம் போடுறான்.

அங்க கிங்ஸ் லேண்டிங்-ல ஓவரா சரக்கடிச்சிட்டு வேட்டைக்கு போன ராஜாவை ஒரு காட்டுப்பன்னி அட்டாக் பண்ணதால உடம்பெல்லாம் காயத்தோட அரண்மனைக்கு வந்து மல்லாக்க படுத்துர்றாரு. கிட்டத்தட்ட சாகுற நிலைமை. ஹேண்ட் நெட் ஸ்டார்க்கை கூப்பிட்டு,”நான் சாகப்போறேன். என் மகன் ஜெப்ரி அரசனாகுற வரைக்கும் நீதான் இந்த நாட்டை பார்த்துக்கணும்.”ன்னு சொல்றாரு. அதை ஒரு உயில் மாதிரி எழுதுறாரு நெட். அப்படி எழுதும்போது “ஜெப்ரி லேன்னிஸ்டர் குறிப்பிட்ட வயது வரும் வரை”னு எழுதாம, “இந்த அரசர் பதவிக்கு தகுதியான வாரிசு கிடைக்கும் வரை”ன்னு எழுதுறாரு. இப்போ அவசர அவசரமா சம்பவங்கள் நடக்கப்போற நேரம். அதை புரிஞ்சிகிட்ட ராஜா தம்பி ஹோமோசெக்ஸு, உடனே செர்சியை பிடிச்சி அடைச்சு வச்சாதான் நல்லதுன்னு சொல்ல, நேர்மையான லூசான நெட், “அதெல்லாம் வேணாம்.. ரூல்ஸ்படி என்ன பண்ணணுமோ அதைத்தான் பண்ணனும்னு” சொல்லிட்டு போயிர்றாரு.

அப்புறம் லிட்டில் பிங்கரை கூப்பிட்டு, சப்போஸ் ஏதாவது அசம்பாவிதம் நடந்தா கோட்டையோட தலைவர் நம்ம பக்கம் இருக்குறமாதிரியும், நம்ம சொல்றதை உடனே செய்றமாதிரியும் இருக்குற மாதிரி வச்சிக்கோங்கன்னு நெட் சொல்றாரு. அவனும் மண்டையை ஆட்டுறான். ஆனா லிட்டில் பிங்கர் ஒரு மகா மோசமான ஆளு. பத்தாக்குறைக்கு தன்னோட சின்ன வயசு க்ரஷை கல்யாணம் பண்ணிக்கிட்டவன்கிற கோவம் வேற நெட் ஸ்டார்க் மேல இருந்ததால, ஜெப்ரி அரசனாக தகுதியான வாரிசு இல்லைன்னு அறிவிக்க ராஜசபையை நோக்கி நெட் போறப்போ அந்த கோட்டையோட காவலர்களை நெட் ஸ்டார்க்குக்கு எதிரா திருப்பிவிடுறான் லிட்டில் பிங்கர். கூட வந்தவங்க எல்லாரும் செத்துப் போயிற, நெட் ஸ்டார்க்கை கைது பண்ணி அடைச்சிர்றாங்க.

இதுக்கு நடுவுல கோட்டையிலே இருக்குற எல்லா ஸ்டார்க்கையும் கொல்ல சொல்லி உத்தரவு போடுறாங்க. சான்ஸா ஏற்கனவே பயந்தாங்கொள்ளி. உடனே ரூமுக்கு ஓடுறா. ஆனா அங்க மலையோட அண்ணன் பாதி வெந்த மூஞ்சி ஹவுண்ட் அவளுக்காக காத்திருக்கான். இன்னொருபக்கம் ஆர்யா ஸ்டார்க் அங்க வாள்பயிற்சி எடுத்துட்டு இருக்குறப்போ அவளை கொல்ல ஆள் வர்ராங்க. அந்த திறமையான வாள்பயிற்சி தர்ற மாஸ்டர் அவளை காப்பாத்துறாரு. ஆர்யா எஸ்கேப் ஆகுறா. தப்பிக்கிற வழியில ஒரு பையன் இவளை தொட, பயந்து போயி திரும்புற ஆர்யா, அவகிட்ட இருக்குற நீடிலை வச்சி அந்த பையனை குத்தி கொன்னுர்ரா. முதல் சம்பவம் பை ஆர்யா ஸ்டார்க்.

அங்க செர்சி லேன்னிஸ்டர் உடனே அவசர அவசரமா தன்னோட மகன் ஜெப்ரிக்கு பட்டம் சூட்ட தயாராகுறா. பத்தாக்குறைக்கு பயந்து போய் இருக்குற சான்சாவை கூப்பிட்டு,”இந்தமாதிரி இந்தமாதிரி நம்ம அப்பா நெட் ஸ்டார்க்கு ராஜ துரோகம் பண்ணிட்டாரு. தன்னோட பதவியை துஸ்பிரயோகம் செஞ்சுட்டாரு”ன்னு தன்னோட அண்ணன் ராப் ஸ்டார்க்குக்கு லெட்டர் எழுதணும்னு சொல்லி செர்சி மிரட்ட, அதுக்கும் சம்மதிக்கிறா. ஆனா அங்க ராப் ஸ்டார்க் ஏற்கனவே போருக்கு தயாராகி தனக்கு ஆதரவா இருக்குற வடக்கு பகுதியை சேர்ந்த எல்லாரையும் ஒன்னு சேர்த்துட்டு, தான் வர்ற வரைக்கும் வின்டர்பெல்லை பார்த்துக்க சொல்லி தன்னோட இளைய தம்பி, காலில்லா காக்கா கனவு காணுற ப்ரான் ஸ்டார்க் கிட்ட சொல்லிட்டு போறான்.

இதுக்கு நடுவுல தப்பிச்சு போய்க்கிட்டு இருக்குற குள்ளனும் அவன் கூட்டாளியான ப்ரோனும் நடுவுல அவங்களை ஏற்கனவே தாக்கின அதே கூட்டத்தை சந்திக்கிறாங்க. தன்னோட புத்திசாலித்தனத்தால அவங்களை சமாளிக்கிற குள்ளன், மறுபடியும் பயணத்தை ஆரம்பிக்கிறான். இன்னொரு பக்கம் அங்க சுவர் இருக்குற இடத்துல, இவங்க தேடிக்கொண்டு வந்த இறந்தவங்களோட பிணங்கள் மறுபடியும் உயிரோட வருது. எப்படியோ அதுங்களை தீயிலே போட்டு கொளுத்திட்டு தப்பிக்கிறான் ஜான் ஸ்னோ.

இன்னொருபக்கம் கடலுக்கு அந்தப்பக்கம் இருந்து நம்ம டேனியும் அவளோட புருஷனும் படையெல்லாம் திரட்டி போருக்கு ரெடி ஆகுறாங்க. கடல் கடந்து போக கப்பல் வேணும். அதுக்கு பணம் வேணும். அதனால போறவழியில இருக்குற கிராமங்களை எல்லாம் கொள்ளையடிக்குது அந்த காட்டுமிராண்டி கூட்டம். அதோட சேர்ந்து பொண்ணுங்களை ரேப் வேற பண்றாங்க. இதைப்பார்த்த டேனிக்கு அதிர்ச்சி. அதனால கோவமடையிற அவ தன் புருஷன்கிட்ட சொல்லி அதை நிறுத்த சொல்றா. அவனும் பொண்டாட்டி சொல்றதை கேட்டு நிறுத்துறான். ஆனா இது அவனோட படையில இருக்குற பலருக்கு பிடிக்கல. அதுல ஒருத்தன் நேரடியா டிராகோ கூட சண்டைக்கு வர அவனை டிராகோ கொல்றான்.ஆனா கொல்றதுக்கு முன்னாடி அவன் டிராகோ-வை காயப்படுத்துறான்.

இளவரசன் ராப் ஸ்டார்க் படையோட போறப்போ நடுவுல ஒரு பெரிய நதி வருது. அந்த நதி இருக்குற ஊரோட சிற்றரசன் ஸ்டார்க் குடும்பத்துக்கு கட்டுப்பட்ட ஆளுதான்னாலும் கூட சரியான காமக்கொடூரன். எழுபது வயசு ஆளு அவன். ஆனாலும் இப்பவும் சின்னப்பிள்ளைங்களை கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்குறதை ஒரு வேலையாவே வச்சிருக்கான். அதனால உங்களை நான் நதியா க்ராஸ் பண்ண விடணும்னா உன்னோட ரெண்டு பொண்ணுங்கள்ள ஒருத்தியை எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுன்னு கேட்டலின் கிட்ட கேட்குறான். இதைக்கேட்டு டென்ஷனாகுறான் ராப் ஸ்டார்க்.அப்புறம் ஒருவழியா நதியை க்ராஸ் பண்றாங்க.

இன்னொருபக்கம் ஜான் ஸ்னோ தன்னோட அப்பாவுக்காக தன்னோட சகோதரன் போருக்கு போற நியூஸை கேள்விப்பட்டு உடனே நைட் வாட்ச்-ல இருந்து கிளம்புறான். ஆனா அவனோட புது நண்பர்கள் “நைட் வாட்சை விட்டு போறது தேச துரோகம்”னு எடுத்து சொல்லி அவனை அங்கேயே இருக்க வைக்கிறாங்க. அங்க ஜேமி லேன்னிஸ்டர், டிரியன் லேன்னிஸ்டர், வழிப்போக்கன் ப்ரோன் எல்லாரும் அப்பா லேன்னிஸ்டர் கூட இருக்காங்க.போர் நடக்குற அன்னைக்கி ராப் ஸ்டார்க் ஒரு பிளான் பண்ணி தன்னோட படையில் பத்துல ஒரு பங்கை மட்டும் அனுப்பிச்சி வைக்கிறான். அவங்களை ரொம்ப ஈஸியா லேன்னிஸ்டர் படைகள் தோற்கடிக்குது. இவங்க ஜெயிச்ச குஷியில இருக்கும்போது திடீர்னு தன்னோட முழுப்படையோட வர்ற ராப் ஸ்டார்க் போர்ல ஜெயிச்சி ஜேமியை சிறைபிடிக்கிறான்.

காயம்பட்ட டிராகோவுக்கு எந்த வைத்தியம் பார்த்தும் சரியாகல. ரொம்ப கஷ்டப்படுறான். கூடவே டேனியும் கஷ்டப்படுறா. வேற வழியில்லாம பிளாக் மேஜிக் பண்ணி காப்பாத்த நினைக்கலாம்னு அவனோட குதிரையை பலிகொடுத்தும் அவனுக்கு குணமாகல. இதான் சந்தர்ப்பம்ன்னு ஏற்கனவே காண்டுல இருந்த சில ஆதிவாசிங்க டேனியை கொல்ல முயற்ச்சி செய்ய, அதை ஜோரா தடுக்குறாரு. அந்நேரம் நடக்குற களேபரம் காரணமா டேனிக்கு பிரசவ வலி வருது.

அங்க ஜெயில்ல இருக்குற நெட் ஸ்டார்க்கை மந்திரி வாரிஸ் சந்திக்கிறான். உன் குழந்தைங்க உயிரை காப்பாத்துறதுக்காகவாவது நீ குத்தம் செஞ்சேன்னு ஓத்துக்கோன்னு வாரிஸ் சொல்ல, அவன் சொல்றதுல நியாயம் இருக்குறமாதிரி இருந்ததால நெட் ஸ்டார்க் சரின்னு சொல்றான். ஆனா அது ஒரு சூழ்ச்சின்னு நெட்டுக்கு தெரியாது. ஊருக்கு நடுவுல, மக்களுக்கு முன்னாடி நின்னு நான் ராஜதுரோகம் செஞ்சேன்னு ஒத்துக்க ரெடியாகுறார் நெட் ஸ்டார்க். எப்படியோ தப்பிச்ச ஆர்யா அந்த மக்கள் கூட்டத்துல ஒருத்தியா நிக்குறா. சன்சா தன்னோட வருங்கால அத்தை மற்றும் வருங்கால புருஷன் ஜெப்ரியோட அதே மேடையில நிக்கிறா. “உங்கப்பன் தான்தான் குற்றவாளின்னு மக்கள் முன்னாடி சொன்னா அவனை உயிரோட விட்ருவோம்”ன்னு செர்சி சொன்னதை லூசு மாதிரி நம்பிட்டு அங்க நிக்கிறா சான்ஸா. ஆனா அந்த ஜெப்ரி ஒரு மோசமான பையன்னு நாம ஏற்கனவே பார்த்தோம். இப்போ ராஜா வேற ஆயிட்டான்.அதனால நெட் தான் குற்றவாளின்னு சொன்னதும் உடனே,”வெட்டுங்க இந்த துரோகியோட கழுத்தை.. கொட்டட்டும் அவனோட ரத்தம்..”ன்னு சொல்ல, நேர்மையான நெட் ஸ்டார்க்கோட கழுத்துல ஒரு வெட்டு விழுது. தலை துண்டா போயி விழுது.

இந்த சம்பவம் நடந்து முடிஞ்சதும் அழுதுட்டு இருக்குற ஆர்யா எங்க போறதுன்னு யோசிக்கிறா. பழைய ராஜாவோட வப்பாட்டி பையன் கென்றி-யை நைட் வாட்ச்சுக்கு அனுப்ப சொல்லி சொல்றாங்க. அங்க போர்க்களத்துல இருக்குற ராப் ஸ்டார்க்குக்கும், அவங்க அம்மாவுக்கும் நெட் கொல்லப்பட்ட தகவல் போய் சேர எப்படியும் லேன்னிஸ்டர்ஸை பழிவாங்கி தீரணும்னு முடிவு பண்றாங்க. இதேநேரத்துல மஹாராஜாவோட தம்பியான ரென்லி தனக்கும்தான் உரிமை இருக்குன்னு ஒருபக்கம் யோசிக்க, இன்னொருபக்கம் அவனோட இன்னொரு அண்ணன் ஸ்டென்னிஸ் ப்ராத்தரன் ராப் ஸ்டார்க் கூட இருக்காரு. ஆனா எல்லாரும் முழுமனஸா ராப் ஸ்டார்க்-தான் சரியான தலைவனா இருப்பான்னு முடிவு பண்றாங்க.

கைதியா இருக்குற ஜேமி லேன்னிஸ்டர் தான்தான் ப்ரான் ஸ்டார்க்கை பில்டிங்-ல இருந்து தள்ளிவிட்டதா ஒத்துக்குறான். ஆனா ஏன் செஞ்சேன்னு சொல்லமாட்டேங்குறான்.இதுக்கு நடுவுல லேன்னிஸ்டர் அப்பா ரெண்டு ப்ராத்தரன் சகோதரர்களும் இப்போ சண்டைக்கு வருவாங்கன்னு புலம்புறாரு. எறியிற கொள்ளியில எண்ணெய் ஊத்துற மாதிரி, இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம் இந்த லூசுப்பைய ஜெப்ரி, நெட் ஸ்டார்க்கை கொன்னதுதான்னு குள்ளன் அவங்கப்பாவை ஏத்தி விடுறான். இதைக்கேட்ட அப்பா லேன்னிஸ்டர் அப்போ நீ உடனடியா கிங்ஸ் லேண்டிங் போயி ஹேண்ட் பதவியை ஏத்துக்கோ. உங்க அக்கா செர்சியையும், அவ பையன் ஜெப்ரியையும் அடக்கி வைன்னு சொல்றாரு. ஆனா அங்க போறப்போ இங்க நீ எப்பவும் கூடவே வச்சிருக்கிற ஒரு வேசிப் பொம்பளையை கூட்டிட்டு போகாதன்னு சொல்றாரு. ஆனா அதையெல்லாம் ஒத்துக்குற மூடுல குள்ளன் இல்ல.

அங்க ஜெப்ரியோட அலப்பறை தாங்கமுடியல. இஷ்டத்துக்கு நாக்கை வெட்டுறது, ஆளை கொல்றதுன்னு அரசாட்சி பண்றான். பத்தாக்குறைக்கு தன்னோட எதிர்கால மனைவியான சன்சாவை கூட்டிட்டு போயி, அவளோட அப்பா தலையை ஒரு கம்புல சொருகி நட்டு வச்சிருக்கிறத காட்டுறான். சைக்கோ நாய். கடுப்பாகுற சான்ஸா அவனை மாடியில இருந்து தள்ளிவிடலாம்னு போகும்போது, ஹவுண்ட் வந்து தடுத்துர்ரான்.

அங்க நைட் வாட்ச்-ல இன்னொரு பிரச்சினை. வைல்ட் லிங்ஸ்-ன்னு சொல்லப்படுற அந்த பெரிய கூட்டம் ஒன்னு ஒரு பெரிய ஆர்மியை ரெடி பண்றதா தகவல் வருது. தலைநகர்ல நடக்கப்போற போரை விட இது முக்கியமானதுன்னு சொல்லி அந்த நைட் வாட்ச் கமாண்டர் அவரே ஒரு படையோட கிளம்பி சுவரை தாண்டி வெளிய போறாரு.

அங்க கடலுக்கு அந்தப்பக்கம் பிரசவ வலியில துடிச்ச டேனிக்கு பொறந்த குழந்தை பிறந்தபோதே இறந்துபோச்சின்னு தெரிய வருது. இதுக்கு நடுவுல கால் டிராகோ-வோட மொத்த படையும் டேனியையும், கோமாவுல இருக்குற அவன் புருஷனையும் விட்டுட்டு போயிர்ராங்க. ஜோரா மட்டும் கூட இருக்காரு. அப்புறந்தான் புரியுது இது எல்லாமே பிளாக் மேஜிக் பண்ண வந்த ஒரு பொம்பளையோட வேலைன்னு.வேற வழியே இல்லாம எதுக்கும் உபயோகம் இல்லாம இருக்குற தன்னோட புருஷனை டேனியே தலைகாணி வச்சி அமுக்கி கொன்னுர்ரா. அப்புறம் நம்ம ஊர்ல புருஷன் செத்தா முன்னொரு காலத்துல உடன்கட்டை ஏறுவாங்க இல்லையா? அதுமாதிரி டேனியும், தன் புருஷனுக்காக வளர்த்த தீயில, கூடவே அந்த மூணு டிராகன் முட்டைகளையும் வச்சிட்டு தீ மூட்ட சொல்லிருவா. அவளை ரகசியமா காதலிக்கிற ஜோரா இது வேண்டவே வேண்டாம்ன்னு கெஞ்சியும் கேட்காம டேனி தீக்குள்ள இறங்குவா.

மறுநாள் காலை. தீயெல்லாம் அணைஞ்சிருச்சி. அங்க டெனெரிஸ் டார்கெரியன் என்கிற டேனி உடையெல்லாம் தீயில எரிஞ்சி போயி நிர்வாணமா நிக்கிறா. அவளோட தோள்ல ரெண்டு பக்கமும் ரெண்டு டிராகன் குட்டி , அதுபோக அவளோட கையில ஒரு டிராகன் குட்டி நிக்குது. ஆமா.. அந்த மூணு முட்டையும் குஞ்சு பொறிச்சிருச்சி. ஒரு புது அரசி அங்க நிக்கிறா.

அங்க கிங்ஸ் லேண்டிங்-ல செர்சி லேன்னிஸ்டர் தன் பையனோட சேர்ந்துட்டு அளப்பரை பண்றா. இன்னொருபக்கம் அங்க அப்பாவை கொன்ன ஆத்திரத்துல இருக்குற ராப் ஸ்டார்க் போர்ல லேன்னிஸ்டரை ஜெயிச்சே ஆகணும்னு கங்கணம் கட்டிட்டு இருக்கான். குள்ளன் டிரியன் லேன்னிஸ்டர் ஹேண்ட் பதவியை ஏத்துக்க கிங்ஸ் லேண்டிங் நோக்கி போறான். ஆர்யா ஸ்டார்க் ஒருவழியா தப்பிச்சு ஓடுறா. இவங்க எல்லாரோட லட்சியமும் என்னவானதுங்கிற கேள்வியோட முதல் சீசன் முடியுது.

தொடரும்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button