ஒற்றைக் கதை கொண்டுவரும் அபாயம்
இபோலாச்சி தொடரின் முந்தய பகுதிகளில் அடிச்சியை ஒரு எழுத்தாளராகவும் பெண்ணியவாதியாகவும் பல்வேறு சமூக குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராகவும் நைஜீரியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்த, நைஜீரியர்கள் சந்தித்த மற்றும் அன்றாடம் சந்தித்து வரும் சிக்கல்களை வெளிக்கொணரும் ஒரு இனப்போராளியாகவும் அறிந்திருந்தோம். அடிச்சி ஒரு நாவலாசிரியராகவும் பெண்ணியவாதியாகவும் பெற்ற புகழுக்கு இணையான பெரும் புகழை அவர் மேடைப் பேச்சாளராகவும் அடைந்திருக்கிறார். அடிச்சியின் நாவல்களில் இருக்கும் உயிர்ப்பும் துடுக்குத்தனமும் நகைச்சுவையும் பொட்டில் அடித்தாற்போல தான் சொல்ல வந்ததைச் சொல்லும் பாங்கும் அவர் மேடைப் பேச்சுகளிலும் இழையாடிச் செல்லும். ஹார்வேர்டு பல்கலைக்கழகம் முதல் டெட் டாக்ஸ் வரை அடிச்சி பேசாத மேடைகளும் சமூக வலைதளங்களும் இல்லை என்று சொல்லுமளவுக்கும் அவரது அத்தனை மேடைப் பேச்சுகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. அடிச்சியின் பேச்சுகளைக் கேட்கும் போது அவரது வார்த்தைகளுடன் நம்மை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு சாமானிய மனிதனின் குரலாக அது ஒலிக்கும். ஒரு நாவாலாசிரியராக அவரை விரும்பும் எவருக்கும் அவரை ஒரு பேச்சாளராகவும் அவரை ஏற்றுக்கொள்வதில் தடையேதும் இல்லாதபடிக்கு அவர் இரண்டு கலைகளிலுமே திறன் வாய்ந்தவர்.
மேடையில் பேசும் வாய்ப்புகளும் அடிச்சிக்கு எளிதில் கிடைத்ததன்று. பல அவமானங்களையும் அருவருக்கத்தக்க கேள்விகளையும் சவாலான தருணங்களையும் அவர் மேடையில் பேசும் போதும் நேர்காணல்களிலும் எதிர்கொண்டிருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் மேடைகளில் பேசும் போது அடிச்சி பல முறை இனவெறித் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனாலும் அவ்வாறான எதிர்மறையான கேள்விகளையும் அடிச்சி மிக லாவகமாகக் கையாளும் ஆற்றல் பெற்றவர். ஒருமுறை, ஒரு பிரென்சு இதழியளாலர் ஒரு நேர்காணலின் போது அடிச்சியையும் அவரது தாய் மண்ணையும் அவமதிக்கும் விதமாக ஒரு கேள்வியை எழுப்புகிறார். நைஜீரியர்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா? நைஜீரியாவில் புத்தகக் கடைகள் இருக்கின்றனவா? நைஜீரியர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அடிச்சியின் புத்தகங்களை வாசிக்குமளவுக்கு ஆங்கில மொழியறிவு இருக்கிறதா என்று பிரென்சு பத்திரிக்கையாளர் வினவினார். அடிச்சி அவருக்கு கொடுத்த பதிலடியினால் அவமானப்பட்டு அந்த அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த பிரென்சு அமைச்சர் ஒருவர் அந்த அரங்கை விட்டு வெளியேறிச் செல்லும்படி அந்த நிகழ்வு அமையும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அடிச்சி அவருக்கு பதிலளிக்கும் போது, “நீங்கள் உங்கள் கேள்வியால் பிரென்சுகாரர்களைப் பற்றி ஒரு மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டீர்கள், ஏனெனில் நீங்கள் பிரென்சு மக்களிடம் வாசிப்பு பழக்கம் இல்லாமல் போனதால் நைஜீரியர்களையும் அவர்களைப் போல நினைத்துவிட்டதாய் நினைக்கிறேன்” என்றார்.
அடிச்சி தனது மேடைப் பேச்சுகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் நிகழத்தான் செய்கிறது. ஒருமுறை திருநங்கைகளைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாயின. “திருநங்கைகள் இந்த உலகில் ஆண்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பெறக்கூடிய சூழலிலும் அதை அவர்களைப் போலவே பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சூழலிலும் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இயல்பில் பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு அவ்வகை உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை” என்று அடிச்சி குறிப்பிட்டார். திருநங்கைகள் பெண்கள் இல்லை என்று அடிச்சி சூசகமாகச் சொல்வதாக விமர்சிக்கப்பட்டார். அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்தன. இருப்பினும் அடிச்சி மன்னிப்புக் கோர மறுத்துவிட்டார். தான் பிரயோகித்த வார்த்தைகளில் எந்த இடத்திலும் திருநங்கைகள் பெண்கள் இல்லை என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை என்றும், என்னுடைய வார்த்தைகளை அப்படியே உள்ளது உள்ளவாரு எடுத்துக்காட்டி அதில் நான் அவர்கள் விமர்சிக்கும் கருத்துக்களைப் பேசியிருப்பதாய் நிருபித்தால் மட்டுமே மன்னிப்பு கோர முடியும் என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
அடிச்சியின் பேச்சுகளில் மிகவும் பிரபலமானது டெட் டாக்ஸுக்காக அவர் நிகழ்த்திய ‘ஒற்றைக் கதை கொண்டுவரும் அபாயம்’ எனத் தலைப்பிடப்பட்ட உரையாகும். அடிச்சிக்கு எழுத்தின் பால் ஏற்பட்ட ஈர்ப்பையும், எழுதுபொருளாக எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற உந்துதலையும் அவருக்குள் உருவாக்க காரணமான காரணியின் கதையே இந்த உரையாகும். அடிச்சி மிகச்சிறு வயதிலேயே வாசிக்கத் துவங்கியவர். அவரது அம்மா அவர் இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது வாசிக்கத் துவங்கியத்தாய் குறிப்பிடுகிறார். இருப்பினும் அடிச்சி அவர் நான்கு வயது குழந்தையாக இருக்கும் போது புத்தகங்கள் வாசித்ததாய் நினைவிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஏழு வயது சிறுமியாக இருந்தபோது அவர் படம் வரைந்து வண்ணங்கள் தீட்டி அதன்வழி கதை சொல்லத் துவங்கியிருக்கிறார். ஆனால் அந்தப் படங்கள் பெரும்பாலும் அவர் வாசித்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குழந்தை இலக்கியங்களில் வரும் பனிப்பொழிவையும், ஆப்பிள் பழம் பறித்தல் மற்றும் உண்ணுதல், காலநிலைகளைப் பற்றிய சம்பஷனைகள், ஜின்ஜர் பியர் குடிப்பது போன்ற சூழல்களை விவரிக்கும் வண்ணம் அமைந்திருந்தன. அடிச்சி வளரும் போது ஆப்பிரிக்காவில் குறிப்பாக நைஜீரியாவில் பனிப்பொழிவு இல்லை என்றும் ஆப்பிள் பழங்களுக்குப் பதிலாக நைஜீரியாவில் மாம்பழமே விளைகிறது என்றும் மக்களும் ஆப்பிள் உண்பதில்லை மாம்பழமே உண்ணுகிறார்கள் என்றும் காலப்போக்கில் தன் மேலைநாடுகளின் கதைப்புத்தகங்களின் வழி அறிந்திருந்த ஒரே ஒரு கதைக்கும் அது சொல்லும் பின்னனிக்கும் நைஜீரிய வாழ்க்கை முறைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணரத்துவங்கிறார்.
அடிச்சி தனது வீட்டில் வேலை செய்த ‘பிடே’ என்னும் சிறுவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தச் சிறுவனைப் பார்த்து அடிச்சியின் தாய் எப்போதும் பச்சாதாபம் கொள்வார். அடிச்சி ஏன் என்று வினவினால் அவனது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடுவதாய் அடிச்சியின் தாய் குறிப்பிடுவார். அடிச்சி உணவை உண்ணாமல் தட்டில் மீதி வைத்தால் கூட பிடே போன்ற சிறுவர்களுக்கு உணவே கிடைக்காத நிலையில் உணவை மீதி வைப்பது தவறு என்று அவரது தாய் கண்டிப்பார். இன்னிலையில் ஒருநாள் பிடேயின் வீட்டிற்கு அடிச்சி சென்ற போது பிடேயின் தாய் சிறுமியான அடிச்சியிடம் அழகாகப் பின்னப்பட்ட ஒரு கூடையைக் காட்டி அதை பிடேயின் சகோதரன் பின்னியதாகக் குறிப்பிடுகிறார். அடிச்சி அதுவரை பிடேயையும் அவனது குடும்பத்தையும் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவர்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள் என்று மட்டுமே நினைத்திருந்தார், ஆனால் அவர்களுக்கென்று தனித்திறமைகள் இருக்குமென அவர் எண்ணியிருக்கவில்லை. ஏனெனில் அடிச்சிக்குச் சொல்லப்பட்ட பிடேயின் கதைப் படி அவர்கள் மிகுந்த ஏழ்மையில் உலழ்வதால் அவர்களுக்கு வேறு திறன்களைக் கற்கவோ பயிற்சிசெய்து பார்க்கக்கூடிய சூழலோ இருக்குமாறு சித்தரித்துப்பார்க்கவியலாத மனநிலையை அக்கதை அடிச்சியின் மனதில் உருவாக்கிவிட்டது.
அடிச்சி அமெரிக்காவிற்குத் தனது மேற்படிப்பிற்காகச் சென்றபோது அவரது அறையில் அவருடன் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண், ஆப்பிரிக்கா/நைஜீரியா என்றாலே கொலை, கொள்ளை, போர், பாதுகாப்பற்ற நிலை, படிப்பறிவற்ற கலாச்சரமற்ற இருண்ட மக்கள் வாழும் நிலம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்படி இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதுகிறீர்கள் என்று வினவினார். அடிச்சி சொல்லும் வரை நைஜீரியாவில் ஆங்கிலம் ஆட்சிமொழி என்பது அப்பொண்ணுக்குத் தெரிந்திருக்கவில்லை. அடிச்சியிடம் இசையைப் பற்றி பேசிய அப்பெண் நைஜீரியர்கள் பழங்குடிகளை இசையைத் தான் கேட்பார்கள் என்று தான் அறிந்திருப்பதாய் தெரிவித்தார், மாறாக அடிச்சி அவரது ஒலிப்பதிவுப் பெட்டியில் மரியா காரே (Mariah Carey) என்னும் அமெரிக்க பாடகரின் பாடலை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தார். அடிச்சியைப் பார்ப்பதற்கு முன்னமே ஆப்பிரிக்காவைப் பற்றித் தான் கேள்வியுற்ற ஒற்றைக் கதையைக் கொண்டு அடிச்சியை அப்பெண் சித்தரிக்கத் துவங்கிவிட்டார்.
ஆப்பிரிக்காவைப் பற்றிய பிரபலக் கருத்துக்கள் ஆப்பிரிக்காவை வெளியுலகுக்கு சித்தரித்துக் காட்டியிருக்கும் பிம்பமானது, சிறுமி அடிச்சிக்கு பிடேயின் குடும்பத்தைப் பற்றிய சித்தரிப்புகளைப் போன்றது என்பதை அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்தபிறகு தான் அடிச்சி புரிந்துகொண்டார்.
ஒரு கதையை யார் சொல்கிறார்கள், எப்படிச் சொல்கிறார்கள், எதற்குச் சொல்கிறார்கள், ஏன் சொல்கிறார்கள் என்பதின் பின்னனியில் இருப்பவர்களின் வானளாவிய அதிகாரம் தான் அந்தக் கதையின் களத்தில் வாழும் மக்களைப் பற்றிய எதிர்மறைப் புரிதல்களை கதைகளைக் கேட்பவர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது. எந்தக் கதையைக் கேட்கும்போதும் அதை அப்படியே நம்பிவிடுவதில் இருக்கும் அபத்தம் தான் கதைகளைச் சொல்பவர்களின் முதுகெலும்பாக இருக்கிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் ஒவ்வொரு கதைக்கும் பல முகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு முகத்தைப் பார்த்துவிட்டு ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம் எனக்கூறுவது முறையாகாது என தனக்கான தன் தாய் நாட்டுக்கான கதையைத் தானே சொல்லவும் எழுதவும் வந்தவர் தான் அடிச்சி.
(தொடரும்…)