இணைய இதழ்இணைய இதழ் 65தொடர்கள்

இபோலாச்சி; 01 – நவீனா அமரன்

தொடர் | வாசகசாலை

ஒரு பெருங்கதையின் முன்கதை

ப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள வளமையும் செழுமையும் வாய்ந்த நாடான நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. 1991 ஆம் ஆண்டு வரை நைஜீரியாவின் தலைநகராக விளங்கிய லேகாஸ் (Lagos), நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். மத்திம கால மற்றும் சமகால நைஜீரிய இலக்கியங்களில், லேகாஸ் பற்றிய குறிப்புகளும், நகரமைப்பு, வாழ்விட பகுதிகள், அந்நகரின் உணவுமுறை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த விவரிப்புகளும், லேகாஸ் சார்ந்த சித்தரிப்புகளும் அதிகம் காணப்படுவதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான நைஜீரிய எழுத்தாளர்கள், தாங்கள் பிறந்த ஊர்களிலிருந்து லேகாஸ் நகருக்கு குடிபெயர்ந்து இருப்பதும் தான். 

எழுத்தாளர் 350 இனக்குழுக்களை கொண்ட நைஜீரிய தேசம், முப்பத்தி ஆறு மாநிலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரான புளோரா ஷா (Flora Shaw) முதன்முதலில் நைஜீரியா என்னும் பெயரைக் குறிப்பிட்டு, ஜனவரி 8, 1897 ஆம் ஆண்டு,  தி டைம்ஸ் (The Times) பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அது முதற்கொண்டு அந்நாட்டிற்கு நைஜீரியா என்ற பெயர் விளங்கியதாகவும், அங்கு பாயும் நைஜர் நதியின் பெயரைக் கொண்டே அந்நாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. நைஜர் நதியின் எண்ணெய் வளம்தான், அந்நாட்டையே அச்சுறுத்தக் கூடிய பெரும் போருக்கும் காரணமாக இருந்தது. 

நைஜீரியாவில் எண்ணற்ற மொழிகள் பேசப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலான மொழிகளுக்கு இன்றுவரை எழுத்துருக்கள் கிடையாது. ஆங்கிலம், அரபிக் மற்றும் லத்தீன் மொழியின் எழுத்துருக்களைத் தான் இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள். நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் பேசும் ஹவுஸா (Hausa) மற்றும் எரூபா (Yoruba) மொழிகள் அரபி மொழியின் எழுத்துருவையும், கிறிஸ்தவர்கள் அதிகம் பேசும் ஈபோ (Igbo) ஆங்கில எழுத்துருவையும் பயன்படுத்தி எழுதப்பட்டு வருகிறது. நைஜீரிய மொழிகளுக்கு எழுத்துரு இல்லாமல் போனதற்கு பல காரணங்களில் ஒன்றாக அதன் இலக்கியமும் சொல்லப்படுகிறது. 

 

தொன்மையான இலக்கிய வரலாறு கொண்ட பழம்பெரும் நாடுகளைப் போலவே நைஜீரியாவிலும் இலக்கியம் வாய்மொழி இலக்கியமாகத் துவங்கியிருக்கிறது. எரூபா இனமக்கள் தங்கள் குழந்தைகளை நிலவொளியில் அமர்த்தி, ஆப்பிரிக்காவின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை மற்றும் பண்பாடு முதலியவற்றை போதிக்கும் வகையில் அமைந்த கதைகளைக் கூறி இருப்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அவ்வகையில் இவ்வாறான வாய்மொழிக் கதைகள் தான் நைஜீரியாவின் முதல் இலக்கியமாக கருதப்படுகிறது

இந்த வாய்மொழி கதைகள் பெரும்பாலும் போர்களிலும் விலங்கு வேட்டைகளிலும், ஆப்பிரிக்க அரசர்களின் வீரதீரச் செயல்களை கவிதை வடிவிலும் நீதிக்கதைகள் ஆகவும் குழந்தைகளுக்கு போதித்து வந்துள்ளனர். பெரும்பான்மையான நைஜீரிய இனக்குழுக்கள் இன்றளவும் பழங்குடி வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருவதால், முற்காலம் தொட்டு கல்வியில் அதிக கவனம் செலுத்தாத காரணத்தினாலும் அக்கதைகளை அவர்கள் எழுத்துருவில் பதிவு செய்து வைக்க தவறிவிட்டனர். இந்த வாய்மொழிக் கதைகள் பல தலைமுறைகளைக் கடந்து வந்த போது அதன் எண்ணிக்கையும் அதிகரித்தது. அத்தனை கதைகளையும் மனதில் மட்டுமே நிறுத்திக் கொள்வது கடினமான போது, நைஜீரிய பழங்குடிகளுக்கு எழுத்துரு மிக அவசியமானது. எனவே அவர்கள் தங்களை ஆண்டுவந்த அயல் நாட்டவர்களின் எழுத்துருக்களை கொண்டு தத்தமது மொழிகளை எழுதலாயினர். 

நைஜீரியாவின் முதல் வரலாற்று ஆசிரியரான பேடு அஜுவான் (Bade Ajuwon) தனது கட்டுரையில் (Oral and Written Literature in Nigeria), எழுத்தறிவிற்கு முற்பட்ட நைஜீரியா, எங்களை வாய்மொழியாக கூறுவதை ஒரு கலையாக பயின்று வந்தது என்று குறிப்பிடுகிறார். நைஜீரியர்களின் வாய்மொழி இலக்கியங்கள் உலகை வெல்லும் நோக்கம் கொண்டவை அல்ல. அவை முழுக்க முழுக்க சாமானிய மனிதர்களுக்காக உரைக்கப்பட்டவை. இந்தக் குறிக்கோள் அடிக்கோடிடும் அவற்றின் உன்னதமான பண்பு தான், இன்று நைஜீரிய இலக்கியங்கள் உலக மக்களின் இதயங்களை வென்று கொண்டிருக்க காரணமாகும். 

(தொடரும்…)

அடுத்தது 

writernaveena@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button