
அடிச்சியின் ஊதா நிற செம்பருத்தி
வசீகரமான மொழிநடையும் வாசகரை கட்டிப் போடும் கதை சொல்லும் விதமும் அடிச்சியின் எழுத்துகளின் தனித்த அடையாளங்கள். தனது நாவல்களுக்காக அவர் தேர்வு செய்யும் கதைக்களங்களும் மிக நேர்த்தியானவை. நைஜீரியாவைப் பற்றிய கதைகளை பலர் இதுவரை எழுதி இருந்தாலும், எழுதியவர் அனைவரும் சொல்லத் தயங்கும், நடுங்கும், வெளிப்படுத்த மறுக்கும், திட்டமிட்டு மறைக்கும் உண்மைகளை அசாதாரண தைரியத்துடன் எழுதிச் செல்லும் ஆற்றல் அடிச்சிக்கு உண்டு. பலர் கேள்விக்கு உட்படுத்தாமல் எளிதில் கடந்து சென்ற சமூக அவலங்களை அவர் தனது எழுத்துகளில் வலிய நின்று சுட்டிக்காட்டுகிறார். ஆயினும், அறிவார்த்தமான எழுத்துகளும் சமூக சீர்கேடுகளைப் பேசும் நாவல்களும் வாசகர்களுக்குத் தரும் ஒரு இறுக்கமான மனநிலையை அடிச்சியின் எழுத்துகள் ஏற்படுத்துவதில்லை. மாறாக, வாசிப்பதற்கு மிகுந்த சுவாரசியமும், வாசகரின் எண்ணவோட்டத்தை ஒருமுகப்படுத்தி, அவரின் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஒரு குழந்தையைப் போல, காட்சிகளை விவரிக்கும் விதத்தில் ஒரு அமைதியான நதியைப் போல, வழிநடத்திச் செல்லும் திறனை அடிச்சியின் எழுத்துகள் பெற்றிருக்கின்றன. அழகியலும் மெய்ஞானமும் சமகாலச் சிந்தனைகளும் ஒரு சேர கலந்த கலவையாக அவை மிளிர்கின்றன.
அடிச்சியின் நாவல்கள் ஏறத்தாழ 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய ‘Purple Hibiscus’ என்னும் நாவலை தமிழில் ‘ஊதா நிற செம்பருத்தி’ என்ற தலைப்பில் பேராசிரியர் பிரேம் மொழிபெயர்த்துள்ளார். அடிச்சியின் சிறுகதைத் தொகுப்பான ‘The Thing Around Your Neck’ என்னும் நூலை எழுத்தாளர் சமயவேல் ‘உன் கழுத்தை சுற்றிக் கொண்டிருப்பது’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அடிச்சி எழுதிய ‘We Should All Be Feminists’ என்னும் நீள்கட்டுரை ஏறத்தாழ 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் அரசு, அடிச்சியின் இந்த நீள்கட்டுரையை மொழியாக்கம் செய்து, ஸ்வீடனில் வாழும் 16 வயதைக் கடந்த அனைத்து பள்ளிகே குழந்தைகளுக்கும் புத்தக வடிவில் இலவசமாக வழங்கியுள்ளது. பல உலக நாடுகளின் அரசுகளும், அமைப்புகளும் எண்ணற்ற விருதுகள் வழங்கி அடிச்சியின் எழுத்துகளைச் சிறப்பித்து வருகின்றனர். மேலும் அவரின் ‘Half of a Yellow Sun’ மற்றும் ‘Americanah’ ஆகிய நாவல்கள் திரை வடிவம் கண்டுள்ளன.
அடிச்சியின் இத்தனை சிறப்புகளுக்கும் அடிக்கோலிய புத்தகமாக அவரின் முதல் நாவல் ‘Purple Hibiscus’ விளங்குகிறது. காலனி ஆதிக்கத்திற்கு பிந்தைய சுதந்திர நைஜீரியா எதிர்கொண்ட சிக்கல்களை இபோலாச்சியில் வெளிவந்த முந்தைய கட்டுரைகள் வழி அறிந்திருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பிந்தைய நைஜீரியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணி மிகவும் நலிவுற்றிருந்தது. அடிச்சியின் ‘ஊதா நிற செம்பருத்தி’ இந்தப் பின்னணியையே கதைக்களமாக கொண்டுள்ளது. விடுதலை பெற்ற நைஜீரியாவில் நிலவிய உள்நாட்டுப் போர் மூலம் உருவான சூழல்கள், ஒருபுறம் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த நைஜீரியர்கள், அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களான நைஜீரியர்கள், ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக இருந்து பல நிறுவனங்களை நடத்தி பணம் சம்பாதித்து வந்த நைஜீரியர்கள், மற்றொருபுறம் பூர்வகுடி நைஜீரியர்கள், ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்ட நலிவுற்ற நைஜீரியர்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் அடையாமல் நைஜீரிய மண்ணின் பழம்பெரும் கடவுள்களையும் நாட்டார் தெய்வங்களையும் வழிபட்டு வந்த நைஜீரியர்கள், ஆங்கிலேயருக்கு அடங்க மறுத்து புரட்சியிலும் கிளர்ச்சியிலும் ஈடுபட்ட நைஜீரியர்களையும் வைத்து, 15 வயதான கம்பிலி (Kambili) என்னும் பெண் கதாபாத்திரத்தின் வழி, நடுநிலைத் தன்மையுடன் பேசும் அடிச்சிக்கு, முதல் நாவலில் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு ஏற்படும் எந்தவித தடுமாற்றமும் இல்லாத, தெள்ளத் தெளிவாக சொல்லும் திறன் வாய்த்திருப்பது ஆச்சரியம் தான்.
கதையில், கம்பிலி இபோ இனத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார நைஜீரியப் பெண். கம்பிலியின் தந்தை யூஜின் ஒரு மதம் மாறிய நைஜீரிய கிறிஸ்தவர். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளை பிறவிக் கிறிஸ்தவர்களை காட்டிலும் மிகக் கடுமையாக கடைப்பிடிப்பவர். கண்முடித்தனமான ஆணாதிக்க மனநிலையை கொண்டவர். கம்பிலி, அவரின் தம்பி ஜாஜா மற்றும் அவர்களின் தாய் பீஃட்ரிஸ் என அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அதட்டி அடித்து கீழ்ப்படிய வைக்கும் மனநிலை கொண்டவர் யூஜின். தினசரி நாளிதழ் ஒன்றையும், பிஸ்கட் முதலான பலவகை பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருபவராக அவரது கதாபாத்திரத்தை அடிச்சி சித்தரித்து இருக்கிறார்.
யூஜின் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் அடிச்சி, வழிபடும் தெய்வம் முதல் வீட்டில் உண்ண வேண்டிய உணவு வரை நைஜீரியர்கள் எவ்வாறு ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கும் ஆதிக்கத்திற்கும் உட்பட்டு இருந்தார்கள் என்று எடுத்துரைக்கிறார். மனதளவில் இந்த அடிமைத்தனம், சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 62 ஆண்டுகளுக்குப் பின்னும் நைஜீரியர்களிடம் தொடர்வதாக அவர் கூறுகிறார். ‘ஊதா நிற செம்பருத்தி’யில் யூஜின் தனது தகப்பனார் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை எனும் ஒரே காரணத்திற்காக அவரை ஒதுக்கி வைக்கிறார். தகப்பனின் இறப்பு மற்றும் ஈம காரியங்களில் கூட கலந்து கொள்ளாமல் அவரை முற்றிலுமாக புறம் தள்ளுகிறார். பேரக்குழந்தைகள் தாத்தாவை வருடத்தில் ஒருமுறை பார்ப்பதற்கு அனுமதித்திருந்த யூஜின் அவர்கள் தாத்தாவிடம் எந்தவொரு பொருளையும் வாங்கி உண்ணக்கூடாது என்று ஆணையிடுகிறார். நைஜீரியர்கள் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு எதிர்கொண்ட அல்லல்கள் நைஜீரிய வரலாற்றில் நெளியும் பாம்புகள் என்றால், நைஜீரியர்களில் ஒரு சாரார் அடிமைகள் போல், தீண்டத்தகாதவர்கள் போல், இரண்டாம் தர குடிமக்கள் போல், சக இனத்தவரான நைஜீரியர்களாலேயே கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர் என்பது நைஜீரிய வரலாற்றின் அழுக்குப் பக்கங்களாகும். அடிச்சி நெஞ்சுரத்துடன் நைஜீரிய வரலாற்று தாள்களின் இரண்டு பக்கங்களையும் எழுதினார். மதம் சார்ந்த போராட்டங்களும் படுகொலைகளும் நைஜீரியாவில் நடந்தேறியதற்கு மதம் என்னும் மதம் கொண்ட மனிதர்கள் தான் காரணம் என இக்கதை வழி அடிச்சி நிறுவ முற்படுகிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆங்கிலேயப் பாதிரியார் மற்றும் கிறிஸ்தவராக மதம் மாறி தொண்டு செய்து வந்த நைஜீரிய பாதிரியார் என இரண்டு கதாபாத்திரங்களைக் கொண்டு நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் கொண்ட இரு வேறு முகங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
‘ஊதா நிற செம்பருத்தி’ அடிக்கோடிட்டுக் காட்டும் இரண்டாவது முக்கிய பிரச்சினை தாய்மொழி அழிப்பு அல்லது சிதைப்பு மற்றும் அந்நிய மொழித் திணிப்பு என்பதாகும். இந்த மொழிச் சிதைப்பை நிறுவ அடிச்சி மீண்டும் யூஜின் கதாபாத்திரத்தையே எடுத்துக் கொள்கிறார். பல்லாண்டுகளாக இபோ இனத்தவர் பேசி வந்த இபோ மொழியையும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதெனக் கருதி யூஜின் புறக்கணிக்கிறார். கோபம் கொள்ளும் வேளைகளில் மட்டுமே யூஜின், இபோ மொழியை பிரயோகப்படுத்துவார். இதன் மூலம் இபோ மொழி மீது உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கு ஒரு அச்சமும் நடுக்கமும் ஏற்படும் வகையில் அவர்களது மனநிலையை மாற்றி அமைக்க முற்படுகிறார். கதையில் குழந்தைகள், தங்கள் தகப்பனுக்கு எதிரான போராட்டத்தை மொழியிலிருந்தும் கிறிஸ்தவ மத புறக்கணிப்பில் இருந்தும் தான் துவங்குகிறார்கள்.
‘ஊதா நிற செம்பருத்தி’யில் சுதந்திர நைஜீரியா எதிர்கொண்ட பன்முகப் பிரச்சனைகளை அடிச்சியின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது விடுதலை பெற்ற இந்திய தேசமும் ஏறத்தாழ அவற்றுக்குச் சமானமான பிரச்சனைகளை எதிர்கொண்டதை இந்திய வாசகரால் பொருத்திப் பார்க்க முடியும். மேலும் உணர்வுபூர்வமான மொழிநடையும் லாவகமான கதை சொல்லலும் நேர்த்தியான கதைக் கட்டமைப்பும் எந்த நிலத்தின் வாசகரையும் உள்ளிழுத்து தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அவை அடிச்சியின் எழுத்துகளை என்றும் நிலைத்திருக்க செய்யும்.
(தொடரும்…)