நைஜீரியனின் பெருஞ்சுமை
மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும், அவை புழங்கும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த புரிதல்கள் அவசியப்படுகிறது. ஒரு நாட்டின் கலாச்சாரத்தின் தொன்மையும் வளமையும், அதன் மொழிகளிலும், இலக்கியங்களிலும் பிரதிபலித்து, அவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. கலாச்சாரம் சார்ந்த புரிதலோடு ஒரு மொழியையும் அதன் இலக்கியத்தையும் அணுகும்போது, அவற்றைக் கையாள்வது மேலும் இலகுவாகிறது. குறிப்பாக நைஜீரிய எழுத்துக்களைப் புரிந்து கொள்ள, நைஜீரியர்களின் கலாச்சார பின்னணியை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாக கருதப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலில், நைஜீரிய கலாச்சாரத்தின் பழமையும், அதன் கட்டமைப்பின் கடினத்தன்மையும், நைஜீரியர் அல்லாத இலக்கிய வாசகர்களின் புரிதல்களை பாதிக்கும் முக்கிய காரணியாக அமைகிறது. இரண்டாவதாக, காலனியாதிக்க காலத்தில் சிதைக்கப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நைஜீரிய கலாச்சார கட்டமைப்புகள், அதன் இலக்கியங்களில் காணப்படும் பழமையான கலாச்சார பின்னணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட, நைஜீரிய வரலாற்று நூல்களை கொண்டு, நைஜீரிய கலாச்சாரத்தையும், அதன் இலக்கியத்தையும் அணுகுவது முற்றிலும் இயலாத காரியம். ஏனெனில், ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் உண்மை தன்மை அற்றவையாகவும், ஆங்கிலேயர்களுக்குச் சாதகமான கருத்துக்களையும் சம்பவங்களையும் கொண்டு புனையப்பட்டவையாகவும் இருக்கின்றன. இந்த கோட்பாடு நைஜீரியாவுக்கு மட்டுமல்லாமல், உலகின் அனைத்து காலனி நாடுகளுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, ருடியார்டு கிப்ளிங் ( Rudyard Kipling) எடுத்தாழும் ‘வெள்ளைக்காரனின் சுமை’ (White Man’s Burden) எனும் கோட்பாடு, காலனி நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் நாகரிகம் அற்றவர்கள் எனவும், அவர்களை நாகரிக வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்துவது ஆங்கிலேயர்களுக்குப் பெருஞ்சுமையாக இருந்தது எனவும் குறிப்பிடுகிறது. இத்தகைய உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள், காலனி நாடுகளின் கலாச்சாரத்தின் மீதான தவறான புரிதல்களை அடிப்படையாகக் கொண்ட, ஆங்கிலேயே மனநிலையோடு எழுதப்பட்ட நைஜீரிய வரலாற்று நூல்களை தாண்டி, நைஜீரிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் அவசியத்தையும் உணர்த்துகின்றது.
ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப்பெரிய பழங்குடியினக்குழு, இபோலாந்து (Igboland) என்று அறியப்படும் தென்கிழக்கு நைஜீரிய பகுதியில் வாழும் இபோவாகும் (Igbo). இபோ இலக்கியங்களைப் புரிந்து கொள்ள, அவர்களின் கலாச்சார பின்னணி மிகவும் அவசியமாகிறது. ஏனெனில், நைஜீரிய எழுத்தாளர்களில் பெரும்பாலானோர், ஆங்கிலேயர்கள் நைஜீரியர்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பண்பாடு குறித்துப் பரப்பிய அவதூறான அனுமானங்களை உடைப்பதற்காகவே எழுத வந்ததாக குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவே நைஜீரிய இலக்கியங்கள் முழுமுற்றாக அவர்களின் கலாச்சாரம் சார்ந்து புனையப்பட்டவையாக இருக்கின்றன. காலனியாதிக்க காலத்திற்கு முற்பட்ட இபோ இன மக்களின் நிலமாக அறியப்படும் இபோலாந்து, கிழக்கில் நைஜர் (Niger) நதியையும், மேற்கில் கிராஸ் (Cross) நதியையும், தெற்கில் டெல்டா பிரதேசங்களையும், வடக்கில் வெப்பமண்டல புல்வெளிகளையும் எல்லைகளாகக் கொண்டிருந்ததாக நைஜீரிய எழுத்தாளர் குறிப்பிடுகிறார்கள். பயிர்த்தொழில் அவர்களின் முக்கிய தொழிலாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் இபோ இனமக்கள் ஏறத்தாழ இருநூறு குழுக்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் தங்களது எல்லைகளை புதர்களை (Bushes) கொண்டு வரையறுத்துக் கொண்டனர். இபோ இனமக்களின் புதர் கலாச்சாரம் (Bush Culture), ஆஸ்திரேலிய புதர் கலாச்சாரத்தை போன்றது அல்ல. இபோக்கள் புதர்களை எல்லைகளாக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வேட்டையாடிய பொருட்களை மட்பாண்டங்களில் சேகரித்திருக்கிறார்கள். இந்த இபோ குழுக்களில் எழுத்தாளர் 20 வகையான இபோ மொழி வழக்குகள் பயன்பாட்டில் இருந்ததற்கும் இபோ இலக்கியங்களில் சான்றுகள் இருக்கின்றன. காலனி ஆதிக்கத்திற்கு பிற்பட்ட காலங்களில், இந்த சிறு இபோ குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கான, வலுவான ஒரு கட்டமைப்பினை நிறுவும் பொருட்டு, ஒன்றிணைந்த மிகப்பெரிய இபோ குழுவாக உருமாற்றம் பெறுகிறது. இந்தக் காலகட்டத்தில், இபோ மக்கள் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். கல்வியறிவு மற்றும் போர்த்திறன் இரண்டையும் செம்மைப்படுத்தி இருக்கின்றனர்.
இபோ பழங்குடியின பயிர்த்தொழில் உருவாக்கத்தின் தொன்ம கதைகளில் ஒன்று, அவர்களின் நாகரிகத்தின் பழமைக்குச் சான்று பகர்வதாக அமைகிறது. அதன் கூற்றுப்படி, இபோ இனத்தின் வாழ்விடம் உருவான போது உலகம் நீரால் நிறைந்து இருந்தது. இபோ இனத்தின் முதல் ஆண் இஜீ (Eze) என்றும், முதல் பெண் ந்ரீ (Nri) என்றும் அறியப்படுகிறார்கள். நீரால் சூழ்ந்த உலகில், இஜீ, ந்ரீ மற்றும் அவர்களின் குழந்தைகளும், ஒரு எறும்புப் புற்றின் மேல் நின்று, சுக்வூ (Chukwu) என்று அழைக்கப்படும் இபோ கடவுளிடம் உணவு கேட்டு முறையிடுகிறார்கள். சுக்வூ, அவர்கள் உண்பதற்கு யாம் ஒன்றைத் தருகிறார். (Yam – தமிழின் சேனைக்கிழங்கு அல்ல, மாறாக கப்பை கிழங்கு போன்ற வேறு ஒரு கிழங்கு வகையைத் தான் நைஜீரியர்கள் யாம் என்று அழைக்கிறார்கள்). இரண்டாம் நாள் அவர்கள் உணவு கேட்டபோது, சுக்வூ அவர்களுக்கு யாம் விதை ஒன்றை தருகிறார். தண்ணீர் சூழ்ந்திருக்கும் நிலத்தில் எப்படி பயிர்செய்வது என இஜீ கேட்டபோது, சுக்வூ அவ்கா (Awka) என்னும் இரும்பு கொல்லனை அழைத்து வரச்சொல்லி, இரும்பு ஊது கோல் கண்டு நீரை உறிஞ்சி வெளியேற்றும் படி கட்டளையிடுகிறார். அதன் பின் அவர்களின் குழந்தைகளில் இருவரை பலிகொடுத்து, அந்த நிலத்தில் புதைத்து அவர்கள் மேல் பயிரிடுமாறு சுக்வூ கட்டளையிட்டதாக அந்த கதை கூறுகின்றது.
இந்த தொன்ம கதையின் சாத்தியங்களை ஆராய்வதை விட, அதன் கூற்றுகளில் இருந்து அறிந்து கொள்ளக்கூடிய செய்திகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கலாம். ஆதிகாலம் தொட்டு, இபோ பழங்குடியின மக்களிடம் மதமும் கடவுள்களும் இருந்திருக்கிறார்கள். கடவுள்கள் அவர்களது வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்திருப்பதை இக்கதை உறுதி செய்கிறது. பழங்காலம் முதல் அவர்கள் பயிர்த்தொழில் மேற்கொண்டிருக்கிறார்கள். இரும்பு மற்றும் இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள் பயன்பாட்டில் இருந்திருப்பதை இந்தக் கதையின் மூலம் அறியமுடிகிறது. ஆங்கிலேயர்கள், இத்தகைய தொன்மையும் பழமையும் வாய்ந்த நைஜீரிய கலாச்சாரத்தை சிதைத்து, நிறத்தின் அடிப்படையில் அவர்களை நாகரிகமற்றவர்கள் என வரையறுத்து, ஐரோப்பிய நாகரிகம் தான் உலகின் தலைசிறந்த நாகரிகம் எனக்கூறி அதைப் பின்பற்றும் படி அவர்களை வற்புறுத்தினர். இந்த கலாச்சார திணிப்பு மற்றும் சிதைப்பு சார்ந்த வலிகளைப் பதிவு செய்யும் நைஜீரிய இலக்கியத்தோடு, அதே வலிகளைக் கடந்து வந்த தமிழ் மனநிலையையும், ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய இடைவெளியை, அவை தமிழ் வாசகர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கக் கூடியவையாகத் தான் இருக்கின்றன.
(தொடரும்…)