...
இணைய இதழ்இணைய இதழ் 71கட்டுரைகள்

வங்காளிக் கதைகள் (இரண்டாம் தொகுப்பு) தமிழில்: சு.கிருஷ்ணமூர்த்தி – வாசிப்பனுபவம் – அமில் 

கட்டுரை | வாசகசாலை

ங்காள  சிறுகதைகள்  என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைகளின்  இரண்டாம் தொகுதியை  வாசித்தேன். சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக அதை மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்வோடு  மிக  நெருக்கமான சிறுகதைகள்எதேச்சையாக நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசித்ததுதான் இந்த நூல். ஆனால் இந்த இரண்டாம் தொகுப்பை வாசித்ததும் மற்ற தொகுப்புகளையும் வாசிக்க மனம் நாடுகிறது. இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளும் தனித்துவமானதாகவும்மிக  உயிர்ப்போடும் உள்ளன. எனக்கு மிகவும் பிடித்த சில கதைகள் குறித்து  சில வார்த்தைகளை எழுதலாம் என்று நினைக்கிறேன். இலக்கண பண்டிதர்’ என்ற கதையை சதீநாத் பாதுரி என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார். இக்கதை காட்டும் உலகம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால்நமக்குத் தெரியாத அனுபவத்தை கடத்துகிறது. மனித உணர்வுகளை ஆழமாக பதிவு செய்யும் படைப்புகள் காலம் தாண்டியும் அதனோடு மனரீதியான இணைப்பு கொள்ளமுடிவதை உணர்த்தும் அத்தகைய ஒரு கதை தான்இலக்கண பண்டிதர்’. மொழி, இலக்கணம் சொல்லிக்கொடுக்கும் ஒரு பண்டிதர், ஒரு அரசுப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்கிறார். பெண்கள் பள்ளிக்கூடம் அது. அந்த ஆசிரியருக்கோ வயது சுமார் அறுபதின் நெருக்கத்தில் உள்ளது. இவ்வளவு வயதான ஒரு மனிதரின் உணர்வுகள் எப்படி இருக்கும்? இளமைக்கால உணர்வு நிலைகளிலிருந்து அது ஏதேனும் வேறுபட்டிருக்குமா அல்லது எப்போதும் ஒரே நிலையாகத்தான் இருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு இக்கதை ஒரு சிறிய திறப்பாக உள்ளது. இலக்கண பண்டிதர் வகுப்பில் இயல்பாக பாடம் எடுக்க முடியாதவராகவே இருக்கிறார். மிக கடுமையாக, தன் வேலை, பாடம் என்று மனதை கட்டுபடுத்தி கொண்டு, கவனம் சிதறாமல் பாடம் எடுக்கிறார். மாணவிகளோடு பேசும்போது கூட மிகுந்தக் கூச்ச சுபாவம் கொண்டவராக தடுமாறுகிறார். சில சமயம் மாணவிகள் அவரைப் பற்றி நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் அவர் எப்படி தயக்கமும், இயல்பற்ற நிலையிலும் இருக்கிறாரோ அதே போன்ற நிலையில் தான் அவர் எப்போதும் இருக்கிறார் என்பதை கதையில் தெரிந்துக்கொள்ளும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பெண் மிக தைரியமாக, அவருக்கு சற்றும் சளைக்காமல், பயப்படாமல் மிகச் சுதந்திரமாக வகுப்பில் செயல்படுகிறாள். சில சமயம் அவரைக் கேட்காமலேஎனக்கு நேரமாகிவிட்டது” என்று வெளியே கிளம்பி சென்றுவிடுகிறாள். அவர் கண்டிப்பு கொண்டிருந்தாலும் அவளுடைய செயலை மனதளவில் ரசிக்கவே செய்கிறார். மாணவிகளைப் பார்த்து கேள்வி கேட்கும்போதோ, அல்லது பாடம் நடத்தும்போது கூட அவர் நேரடியாக மாணவிகளின் முகத்தை பார்த்து பேச முடியாதவராகவே இருக்கிறார். மேல்பக்கம் அல்லது ஜன்னல் பக்கம் பார்த்துகொண்டே தான் பேசுகிறார். ஒரு முறை ஒரு மாணவியை கேள்விகேட்க எழுந்து நிற்க சொல்கிறார். அந்த பெண் சற்று அழகு குறைவாக இருந்ததால் அவள் முகத்தைப் பார்த்துத் தடுமாற்றமின்றி அவரால் பேச முடிந்தது என்று ஒரு வரி அவ்விடத்தில் வரும். இது இக்கதையின் நுட்பமான தருணங்களுக்கு ஒரு உதாரணம். இது போல நிறைய இக்கதையில் உள்ளது. இவ்வளவு வயது ஆன பின்பும் ஒரு மனிதனுக்குள் நுண்ணுணர்வுகள் மிக இளமையாக இருக்க முடியும் என்பதை இக்கதை நமக்கு காட்டுகிறது. இதே கதையில் இன்னொரு நேரெதிரான ஒரு பாத்திரமாக ஒரு ஆசிரியர் வருவார். அவர் மிக சகஜமாக, எப்போதும் வெற்றிலையை மென்றுக்கொண்டே இருப்பார். அவர் இலக்கண பண்டிதருக்கு நேரெதிரான தன்மைகள் கொண்டவராக இருப்பார். மனித உணர்வுகள் பற்றிய மிக சிறந்த கதை இது.

ஆஷா பூர்ணதேவி அவர்களின்தன்மீது இரக்கம்’ என்ற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதியவர்களின் வாழ்வை, அவர்களின் மனோநிலைகளை, அவ்வயதில் எழக்கூடிய பயங்கள் ஆகியவற்றை நகைச்சுவை இழையோடு மிக எதார்த்தமாக ஒரு சிறுகதையாக்கியிருக்கிறார். ஒரு குடும்பத்தில் வயதான முதியவர் இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் இரவு அவர் நெஞ்சு வலி வந்துவிட்டதாகச் சப்தம் போடுகிறார். அவருடைய மகன் , மருமகள், பேரப் பிள்ளைகள், அவருடைய மனைவி என எல்லோரும் அங்கு கூடிவிடுகிறார்கள். அவருக்கு ஏற்பட்ட வலியை விட அவரை விசாரிக்க எல்லோரும் இப்படி வந்ததை நினைத்து அவர் மகிழ்வார். குறிப்பாக வயோதிகம் ஆக ஆக, தான் தனிமைப்பட்டுகொண்டே செல்வதாக அவர் உணர்வார். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. குழந்தைப் பருவத்தில் தனக்கு மிக நெருக்கமாக இருந்த பேரன் பேத்திகள் கூட, வளர வளர தன்னை விட்டு விலகிச் செல்வதாக அவர் உணர்வார். முன்பெல்லாம் அவருக்குத் துணையாக அவருடைய மனைவி  இருப்பார். இப்போது குடும்பச் சூழ்நிலை காரணமாக வளர்ந்த பேத்திகள் கூடவே பாட்டி இருப்பதால், அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் அவர்களுக்குத் துணையாக அவர்களுடைய அறையில் தூங்குவதால் தாத்தாவுக்கு என்று தனியாக அறை ஒதுக்கப்பட்டு விட்டது. பாட்டியும் இப்பொழுது தன் அருகில் இல்லாமல் அவர் மிக தனிமையாகவே உணர்வார். அவரவர்கள் அவர்களுடைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், தான் கண்டுகொள்ளப்படாமலே போவதாக அவர் உணர்வார். அன்று அவருக்கு நெஞ்சு வலி வந்த போது, அத்தருணத்தை அவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தன்மீது வீட்டாரின் கவனம் ஏற்பட வேண்டும் என்பதாக விரும்புவார். எல்லோரும் சற்று பயந்துப்போய் கலக்கமாக இருப்பார்கள். ஆனால் பாட்டி மிக நிதானமாக இருப்பார். இதுபோல நிறைய பார்த்திருப்பதால் பதற்றம் அடையாமல் பயப்படவேண்டியதில்லை, இது சாதாரண  வாயு பிரச்சனை தான் என்பதாக நிலைமையை அமைதிப்படுத்துவார். சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட வலியும் மறைந்து விடும். சிறிய நேரம் தன்னால் வீட்டாரின் கவனத்தைப் பெற முடிந்தது என்று மகிழ்ந்தாலும், அந்த சூழலையே பாட்டி கெடுத்து விட்டதாக ஒருபுறம் அவருக்கு கோபமாக இருக்கும். கதையில் உள்ள சிறிய நகைச்சுவை கூட மிக முதிர்ச்சியோடு வெளிப்பட்டிருக்கும். இன்று வாசித்தாலும் இச்சிறுகதை நமக்கு நிறைய புரிதல்களை ஏற்படுத்துகிறது.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை புத்த தேவ போஸ் என்ற என்ற எழுத்தாளர் எழுதியஒரே வாழ்க்கை’ என்ற கதைதான். நாம் ஆர்வப்பட்டு இறங்கக்கூடிய ஒரு செயலில் எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்பதை மிக ஆழமாக நமக்கு உணர்த்தக்கூடிய ஒரு கதைதான் இது. புத்ததேவ் போஸ் தனக்கு மிகுந்த கற்பனைத் திறன் மிக்க கதைகள் எழுதுவது வராது என்று கூறுகிறார். அதனால் அவருடைய கதை எதார்த்தத்திற்கு மிக மிக நெருக்கமாகவே இருக்கிறதுஇந்த கதை ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப் பற்றியது. வங்காளத்தில் கலைக்களஞ்சியங்கள் எதுவும் இல்லாத காலத்தில் முதன்முதலாக ஒரு கலைக்களஞ்சியத்தை எழுத வேண்டும் என்ற ஒரு முயற்சியில் அந்தப் பள்ளி ஆசிரியர் ஈடுபடுகிறார். முதலில் தனக்குத் தெரிந்த விஷயங்களைக் குறித்து கலைக்களஞ்சியத்தை பதிவு செய்யத் தொடங்குகிறார். அது சிறிய வட்டத்தை மட்டுமே பதிவு செய்யக் கூடியதாக இருக்கிறது. தினமும் பள்ளிக்கூட வேலை, பாடம் சம்பந்தமான பணிகள்அதுபோக வருமானம் போதாததற்காக காலையிலும் மாலையிலும் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது  என்று அவருடைய நேரம் மிக இறுக்கமானதாக இருக்கிறது. அந்நிலையிலும் அவர் தகவல் களஞ்சியத்தை உருவாக்குவதில் மிக முனைப்போடு செயல்படுகிறார். கிடைக்கின்ற சிறிய நேரத்தை தான் எடுத்துக் கொண்ட வேலைக்கான தயாரிப்புகளுக்காக, மேலும் அது சம்பந்தமான நூல்களை ஆராய்ச்சி செய்வது, குறிப்புகள் எடுப்பது என்று அவர் மிக அர்ப்பணிப்போடு செயல்படுகிறார். முதலில் மிகச்சிறிய எல்லைக்குள் மட்டுமே தன்னுடைய ஆராய்ச்சிகளையும் தன்னுடைய குறிப்புகளையும் வைத்துக் கொள்ளும் அவர், ஒரு நாள் வழியில் சென்றுக்கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவர்கள் சிலர் தாகூரின் இலக்கிய படைப்புகளை பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை வாசிக்காமல் இருப்பது ஒரு குறை என்பதாக அவர்கள் பேசுகிறார்கள். இது அந்த பள்ளி ஆசிரியருக்கு ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. தான் தாகூரின் எந்த படைப்பையும் சரியாக வாசித்ததில்லையே என்ற ஒரு எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது. உடனே அவர் தாகூரின் படைப்புகளை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார். தொடர்ச்சியாக நவீன இலக்கியங்களையும் நிறைய வாசிக்கிறார். அதிலிருந்து குறிப்புகளை எடுத்துத் தன்னுடைய கலைக்களஞ்சியத்தில் பதிவு செய்து கொள்கிறார். களஞ்சியம் என்பது பல்வேறு துறைகள் சார்ந்ததாக இருப்பதால் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களை அவர் ஆராய்ச்சி செய்வதும் அதிலிருந்து குறிப்பு எடுப்பதுமாக மிக அதிகமாக அவர் வேலை பார்க்கவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு மத்தியில் உடல்நல பாதிப்பு, வருமானம் போதாமை, வேறு பல தேவைகள் என்று   நிறைய நெருக்கடி வரும்போதெல்லாம்  அவருடைய  பணியில் சிறிய ஒரு சுணக்கம் ஏற்படுகின்றது. பல சமயம் கடுமையான நெருக்கடிகளின் போதெல்லாம் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் தன்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புகளை, தான் எழுதி வைத்துள்ள தாள்களை எல்லாம் ஒரு பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்து விடுவார். மீண்டும் தன்னுடைய நிலைமை சரியானப் பின்பு தன்னுடைய பணியைத் தொடர்வார். முதலில் சில நாட்கள், மாதங்கள் என்று ஆரம்பித்துப் பிறகு அது பல வருடங்களாக  நீண்டு கொண்டே செல்கின்றது. இந்த காலகட்டத்திற்குள் புதிய நெருக்கடிகள் அவருக்கு ஏற்படுகின்றது. தன் மகளுக்குத் திருமணம் முடிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருப்பதால், அதற்காக பணம் சேகரிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்படுகிறது. அதற்கு மத்தியிலும் தன் பணியில் பெரும் பகுதியை முடிக்கிறார். பெரிதாக பணம் சொத்து என்று சேர்த்து வைக்காமல், எல்லாவற்றையும் தன்னுடைய ஆராய்ச்சிக்காகவே செலவு செய்திருப்பார். காலங்கள் உருண்டோடி அவர் தன்னுடைய முதுமையை அடைந்து கொண்டிருப்பார். இப்போது ஒரு வழியாக அவருக்கு நிறைவளிக்கும் வகையில் தன்னுடைய பணியை முடித்து இருப்பார். அவற்றை பதிப்பிப்பதற்க்காக கல்கத்தா சென்று பதிப்பாளர்களைத் தேடி அலைவார். சில பாகங்களாக அவற்றை  வெளியிடுவார். ஆனாலும் அவருடைய கடின உழைப்பிற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் நூல்கள் சரியாக விற்பனையாகாது. ஆனாலும் தொடர்ந்து அவர் கூடுதல் உழைப்பு மற்றும் முயற்சிக்கு பிறகு வேறு பதிப்பாளர்கள் மூலம் தொடர்ச்சியாக நிறைய பாகங்களாக வெளியிடுவார் . அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருடைய பணிக்கான வரவேற்பு இல்லாவிட்டாலும்,  சிறிது சிறிதாக அது கவனிக்கப்பட்டு தொடர்ந்து பேசப்படக்கூடியதாக ஆகும். அதன் மூலமாக அவருக்கு வருமானம் கூட பிறகு ஏற்படும். ஆனால் இத்தனை ஆண்டுகள் இதற்காக அர்ப்பணித்த அவர் கடைசியில் நோய்வாய்ப்பட்டு தன்னுடைய கடைசி நேரத்தில் இருப்பார். இப்போது பெரும் அங்கீகாரங்களும் புகழும் அவருக்கு ஏற்படத்தொடங்கும். ஆனால் அதனால் இப்போது அவருக்கு பெரிய பிரயோஜனம் எதுவும் இல்லை. ஆனாலும் தான் தன் வாழ்நாளையே செலவழித்து செய்த ஒரு பெரும் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததில் மிகப்பெரும் மனத் திருப்தி அவருக்கு இருக்கும்இணையதள வசதிகள் இல்லாத காலத்தில், ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்குவது என்பது  மிகக் கடினமான பணி. அதில் சேர்க்க வேண்டிய தகவல்கள் என்பது மிக விரிவானது. தனி மனிதனாக தன் வாழ்நாளையே செலவழித்து இச்செயலை முடித்தது என்பது ஒரு அசாத்தியமான காரியம்தான். ஒரு செயலில் எவ்வளவு தூரம் நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்பதை உணர்த்தக்கூடிய ஒரு சிறுகதைதான் இதுஇன்று வாசித்தாலும் இந்த கதை நமக்குள் மிகப் பெரும் தாக்கத்தையும், அத்தோடு உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. இக்கதையைப் போலவே அர்ப்பணிப்பிற்கு உதாரணமாக விளங்கிய ஒரு வரலாற்று மனிதரைப் பற்றிய சித்தரிப்பைக் காட்டிய ஒரு இந்திய ஆங்கில நாவல் உள்ளது. அது  THE MONK, THE MOOR AND MOSES BEN JELLOUN . புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சையது அக்தர் மிர்சா எழுதிய நாவல் இது.  ஈரான் நாட்டை சேர்ந்த  மேதையான  அல்பீருணி அவர்களுடைய வாழ்க்கையை நாவலின் முக்கியமான ஒரு கதையோட்டமாக உருவாக்கி இருப்பார். அடிப்படையில் இந்த நாவல் பல விஷயங்களைத் தொட்டுச் செல்லக்கூடியதாக இருந்தாலும், குறிப்பாக என் ஆவலில் அல்பீருணி என்ற மாமேதையின் வாழ்க்கையை அவர் சித்தரித்து இருந்த விதம் மிக எழுச்சி ஊட்டக் கூடியதாக இருந்தது. புத்த தேவ போஸின் கதையில் வரக்கூடிய ஆசிரியரின் அர்ப்பணிப்பைப் போலவே அல்பீருணி தன்னுடைய வாழ்க்கையை அறிவுத் துறைக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். எந்நேரமும் அறிவியல் ,கணிதம், பிரபஞ்ச இயக்கம் என்ற சூழலுக்குள்  தன்னை அவர் ஒப்பு கொடுத்திருந்தார். அரசியல் மாற்றங்கள், போர்கள் என்று உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தாலும் அதனால் சிறிதளவும் தாக்கம் பெறாமல் தன்னுடைய அறிவு சார்ந்த செயல்பாட்டில் மிகத்தீவிரமாகவே அவர் இருந்தார். கணிதத்தில் அவர் மிகப்பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதை பல புத்தகங்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். அரசியல் மாற்றங்கள் போர்கள் படையெடுப்புகள் என்று நடந்து கொண்டிருந்த சூழலிலும் அறிஞர்களுக்கு மத்தியிலான அறிவு பரிமாற்றம் என்பது எந்த வகையான தடையும் இன்றி நடைபெற்றுக்  கொண்டிருந்தது என்பதை இந்நாவல் அழகாக காட்டுகிறது. அரசியல் மாற்றங்கள் அறிவுசார் தொடர்புகளை எவ்வகையிலும் பாதிக்கமுடியாது என்பதை  இந்நாவல் நமக்கு காட்டும். எந்த இடையூறுகளும் இன்றி அமைதியாக போய்க் கொண்டிருக்கும் அல்பீருனி அவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் அந்நாட்டு மன்னர். அவருடைய அரசியலுக்கு அடிபணிய வைக்க முயல்கிறார். ஆனால், அல்பீருணி  இது போன்ற அரசியல் விளையாட்டுகளில் தன்னால் தலையிட முடியாது என்பதாக மறுக்கிறார். இதனால் கோபம் அடையும் அரசன் அவரை பழிவாங்க நினைத்து அவரை இந்தியாவிற்கு அனுப்புகிறார். அவர் அறிவியலை வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை அவருடைய துறைக்கு சம்பந்தம் இல்லாத கடினமான வேலையில் ஈடுபடுத்துகிறார். தன்னுடைய வாழ்நிலம், தன்னுடைய மக்கள், தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிகள், வீடு எல்லாவற்றையும் துறந்து முற்றிலும் அந்நியமான ஒரு பகுதிக்கு அவர் வருவார். இது போன்ற நிலைக்கு தள்ளப்படக்கூடிய ஒரு சாதாரண மனிதன் மிகவும் துயரமுற்று சஞ்சலத்திற்கு உள்ளாவான். ஆனால் அறிஞரான அல்பீருனியோ இது போன்ற ஒரு கஷ்ட காலத்தையும் தனக்கு சாதகமான ஒன்றாக மாற்றிக் கொள்கிறார். இந்தியா எங்கும் அலைந்து திரிந்து மக்களோடு மக்களாகப் பேசி அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்கிறார், அதோடுமட்டுமில்லாமல்  இங்கு உள்ள பழைய நூல்கள், அறிவியல், கணிதம், இலக்கியம், மத நூல்கள், இந்திய மொழிகள் என்று நிறைய  கற்றுக் கொள்கிறார்இந்த காலகட்டத்தில்  சுமார் 15,000 பக்கங்கள் அளவிற்கு அவர் இந்தியாவைப் பற்றி பதிவு செய்து ஒரு அசாதாரணமான சாதனையை செய்து முடிக்கிறார். இன்று கல்வித்துறையில், இந்தியாவைப் பற்றிய படிப்பாக கருதப்படக்கூடிய ‘இந்தியவியல்’ (INDOLOGY) என்ற படிப்பை நிறுவியவர் என்று அல்பீருணி கருதப்படுகிறார்.   புத்த தேவ போஸின் கதையில் வரக்கூடிய ஆசிரியரும் சரி, மிர்சா அவர்களின் நாவலில் வரக்கூடிய அல்பிரூனியும் சரி,  இருவருடைய வாழ்க்கையும் ஒரே போக்கில் இருந்தவை தான். இருவருமே தங்களுடைய வாழ்க்கையை அறிவு சார்ந்தத் தேடலுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்கள். அர்பணிப்பு வேறு, இடைவிடாத அர்பணிப்பு வேறு.  இடைவிடாத அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை இவ்விரண்டு மனிதர்களும் நமக்கு உணர்த்துவார்கள். 

*******

amilwriter@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.