
ரமலான் இரண்டாவது நோன்பு அன்றே அரபு நாட்டில் வேலை பார்க்கும் தனது கணவனான யூசுபிடமிருந்து செலவிற்கு பணம் வந்துவிட்டதில் பதுரு சல்மாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், வந்திருக்கும் பதினைந்தாயிரத்தில் எதை வைத்து என்ன செய்வதென்ற யோசனைகளும் அவளை சற்றே பீடிக்கத் துவங்கின.
மாமியார், தன்னுடைய பெற்றோர்கள், பிள்ளைகள் என அவளையும் சேர்த்து வீட்டில் மொத்தம் எட்டு உருப்படிகள். பெருநாளுக்காக புது உடுப்புகள் எடுக்க ஒரு ஆளுக்கு ஆயிரம் – ஐநூறு என்று வைத்துக் கொண்டாலும் குறைந்தபட்சம் ஆறாயிரம் அதற்கே சென்றுவிடும்!
இதில் பெரியவன் காலேஜ் சென்று கொண்டிருப்பதால் முன்னமே தனக்கு இரண்டாயிரமாவது வேண்டுமென கட்டளை பிறப்பித்திருந்தான். அப்படிப் பார்த்தால் வந்திருப்பதில் ஒரு எட்டாயிரம் மிஞ்சும்.
பெருநாளன்று ஆகும் செலவிற்கு தனியாகப் பணம் தோது பண்ணி அனுப்புகிறேன் என்று யூசுபு சமாதானப்படுத்தியிருந்தாலும், ‘நீங்க ஏதும் சிரமப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன்’ என அவனையே சமாதானப்படுத்துமளவிற்கு அவனை விட நல்லவள்; பொறுப்பு மிகுந்தவள்.
சப்ளை கம்பெனியில் சரிவர சம்பளம் கிடைக்காமல் ஒவ்வொரு மாதமும் அவன் உழைத்த காசு எப்போது, எந்த தேதியில் கிடைக்கும் என திக்குத் தெரியாமல் அங்கே அல்லாடிப் பிழைக்கும் அவனுடைய அடிமைப் பிழைப்பு அவளும் அறிந்ததுதானே. சில வேளைகளில் சம்பளக் காசு கைக்கு வர மாதக் கடைசியாகிவிடும்! கம்பெனி விதிமுறைகள் பிரகாரம் ஒரு மாத ஊதியத்தை மட்டுமே பிடிப்பு போல வைத்திருப்பார்கள் என்றாலும், தாமத சம்பளப் பட்டுவாடாவில் மேலும் இரண்டு மாதங்களின் வியர்வைத் துளிகளும் அதற்கு துணை போல முதலாளிமார்களிடமே சேர்ந்து உறங்குகின்றன.
‘உனக்கென்ன மகராசி.. துபாய் சம்பாத்தியக்காரனோட பொண்டாட்டி’ என்று யாரேனும் பதுரு சல்மாவும் கூட அவர்களைப் போல ஒரு சாதாரண வாழ்க்கையைதான் மேற்கொண்டு வருகிறாள் என அறியாது பேசும் வேளைகளில் வெளிப்படும் அவளுடைய வெறுமை பிதுங்கிய சிரிப்புதான் அதுபோன்ற பகடிகளுக்கு பெரும்பாலும் பதிலாகும்.
விசாவிற்கு ஒரு லட்சம் வரை கட்டிச் சென்ற தனது கணவன், மூன்று மாதங்களுக்கு முன்புதான் அரும்பாடுப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு வருடங்கள் வரை இழுத்துப் பிடித்து ஒரு வழியாக அடைத்து முடித்தான் என்பதையெல்லாம் அவர்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டுமா? அல்லது தனது மகனுடைய படிப்பிற்காக விற்ற நகைகளைப் பற்றிக் கூறி அங்கலாயிக்க வேண்டுமா? குறைவான வசதிகளிலும் உரியதை நிறைவேற்றிக் கொள்ளும் தங்களது நிலையை நினைத்துப் பார்த்து, இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று அவர்களை அதிகம் பொருட்படுத்தாமல் கடந்து விடுவாள். எந்த நிலவும் தனது தேய்பிறை காலத்தையும் வளர்பிறை நாட்களையும் யாரையும் அழைத்துச் சொல்லி மாய்வதுமில்லை, தோய்வதுமில்லை. மாதக்கணக்கு என்றால் எல்லாமும்தான் என்று வெளிப்படாத நாளிலும் மௌனமாய் தனது மேன்மையைக் கடைப் பிடிக்கும்.
இம்முறையும் தனது கணவன் அனுப்பியிருக்கும் தொகையை வைத்து ஓரளவு எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்றாலும், அவளுக்கு ஒன்றுவிட்ட அக்கா சக்கரம்மாவின் கணவர் சம்சுதீன் நீண்ட நாட்களாகவே உடல்நலத் தொந்தரவுகளால் எங்கும் பிழைப்பிற்குச் செல்ல முடியாமல் வீட்டில்தான் முடங்கிக் கிடக்கிறார். ஆகையால் சக்கரமா, எப்போதாவது வாய்விட்டு ஏதாவது சிறிய சிறிய உதவிகளை பதுரு சல்மாவிடம் தயங்கித் தயங்கிக் கேட்டுப் பெறுவாள்.
சம்சுதீன் பினாங்கில் செல்வச் சீமானாக பொருளீட்டி வந்த காலகட்டங்களில் அவளது மக்களையும் தன் வீட்டுப் பிள்ளைகள் போல பாவித்து அவ்வப்போது அனுப்பிவிட்டுக் கொண்டிருந்த துணிமணிகளும், சிறிய சிறிய அன்பளிப்புகளும் பதுரு சல்மாவின் கண்களில் தோன்றி நிழலாடின. இப்போதும் கூட அவர்கள் வீட்டிற்குச் செல்லும் வேளைகளில், “நான் மட்டும் நல்லா இருந்திருந்தா, நீ நகையெல்லாம் விக்க தேவையிருந்திருக்காது; உம்மகனை நானே செலவு பண்ணிப் படிக்க வச்சிருப்பேன்..!” தன்னிலை மறந்து விசனப்படுவார். சக்கரம்மா என்ன பேசுவதென அறியாது தலையைக் கவிழ்த்துக் கொள்வாள்.
“உங்க வார்த்தையே போதும் மச்சா, இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம்ம எல்லாருடைய நிலைமையையும் நல்லபடியா மாத்துவான்; நீங்க கவலைப்படாதிய!” என்று பதுரு சல்மா அவரைத் தேற்ற முனைவாள்.
சக்கரமா ஒன்றுவிட்ட அக்காள் என்றால், சம்சுதீன் அதற்கு முந்தைய தலைமுறை வழி மாமன் மகன். பூர்வீக உறவுகள் காட்டும் பிரியமும், பற்றும் சக்கரமா – சம்சுதீன் போன்றவர்களின் மூலம் வழி வழியாய் பிழைத்து நிற்பது ஒற்றை மகளாகப் பிறந்த பதுரு சல்மாவிற்குக் கிடைத்த பெரும் ஆறுதல் போலவேத் தோன்றும்.
‘நான் மட்டும் நல்லாயிருந்திருந்தால், நானே உன் மகனைப் படிக்க வைத்திருப்பேன்!’ என்ற சம்சுதீனின் அந்த வார்த்தைகளும் உண்மையானவைகளே! பொதுவாக பணம் பணத்தோடுதான் சேரும் என்பார்கள். ஆனால், தாங்கள் நன்றாக இருந்த காலகட்டங்களில் சம்சுதீனும், சக்கரமாவும் கூடப் பிறந்தவர்கள் போல அதிகம் புழங்கியது எளியவர்களான பதுரு சல்மா – யூசுபு குடும்பத்தோடுதான். அது சம்சுதீனுடைய வாப்பா சீனி மரைக்காயர் காட்டிச் சென்ற பாதை எனவும் கூறலாம்.
உதாரணமாக, இந்த தவ்ஹீத் – சுன்னத் ஜமாத்கள் என்று ஊருக்குள்ளும் உறவுகளுக்கும் பிரிவினைகள் இல்லாத அன்றைய நாளில் கிடாயரிசிக் கொடுப்பதற்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பதுரு சல்மா பெற்றோர்களுக்கு உதவியாக, பிரான் மலைக்குச் செல்ல வண்டி ஏற்பாடு செய்து கொடுத்ததும், துணைக்கு எழுபது, எண்பது மைல்களுக்கு கூடவே சென்றதும் சீனி மரைக்காயரும் அவரது குடும்பத்தினரும்தான். மேலும் சோறாக்க வேண்டிய கிடாய் மற்றும் அரிசி பதுரு சல்மாவின் வாப்பா அமீது மரைக்காயருடையது என்றால் மற்ற பொறுப்புகளை சீனி மரைக்காயரே வலிந்து ஏற்றுக் கொண்டார். அப்படி ஒண்ணும் மண்ணுமாக ஒட்டி உறவாடியவர்கள்.
அன்றைக்கு பதுரு சல்மாவின் உம்மா ஆமீனம்மா ஆக்கிச் சென்றிருந்த கட்டிச் சோறையும், இறால் வறுத்ததையும் சம்சுதீன் ருசித்து ருசித்து சாப்பிட்டது இன்றும் அவள் கண்களில் விரிந்து அவள் மனம் அதுபோன்ற மகிழ்ச்சி வெள்ளங்கள் பொங்கி வழிந்த நாட்களுக்காக ஏங்கியது. மேலும் அன்று பெண்கள் செலவு சாமான்கள் அரைத்துக் கொடுக்க சீனி மரைக்காயரும், அவருடைய வீட்டு வேலைக்காரர் அகமது தம்பியும் நின்று ஆக்கிய அந்த இறைச்சியாணச் சோற்றின் வாசமும், சுவையும் நினைத்துப் பார்த்தால் இன்றும் கூட அவளது நாவை காரமாக்கி, வாயில் எச்சில் ஊற வைத்துவிடும்.
மேலும் சீனி மரைக்காயர் தனது இயலாத காலத்திலும் தனது வயோதிகத்தையும் பொருட்படுத்தாமல், நேரம் தூரம் பார்க்காமல், அவர்களது பூர்வீகமான தேவிப்பட்டினத்திலிருந்து பதுரு சல்மாவின் தந்தை ஊரான செந்தலைபட்டினம் வரை பார்க்க வந்துச் சென்றதெல்லாம் அசைபோட்டவளாய் அண்ணாந்து வானத்தைப் பார்ப்பாள், இரு ஊர்களுக்கும் இடையே முளைத்த அழகிய வானவில் போல உறவுகளும், அவர்கள் தந்த ஞாபகங்களும் வண்ண வண்ண அடுக்குகளாய் வளைந்து, விரிந்து கிடப்பது போல் கண்டு பாச மழைகளிலும், முத்தங்களிலும், கண்ணீரிலும் சிக்குண்டவள் போல் சிறிது நேரம் நினைவுகளில் பிடியில் நெஞ்சதிரப் போராடுவாள். அந்த நாட்களிலிருந்து மீளும் போது அவள் முகம் சிறுமியிலிருந்து சமகாலத்திற்கு மாறியிருக்கும். சூழும் இறுக்கங்கள், எல்லாவற்றையும் நொடிகளில் தட்டையாக்கிவிடும். பெருமூச்சு விட்டபடி, மறைந்த சம்சுதீன் பெற்றோர்களுக்காக உளமார இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்வாள்.
‘அவ்வோ குடும்பத்துக்கு இப்படியா ஒரு நெலம வரணும்!’ என மீண்டு்ம் ஒரு முறை மீள முடியாமல் ஆதங்கப்பட்டு முடித்தாள்.
நடந்தவைகள் யாவும் ஏதோ ஒன்றில் முடுக்கி விடப்பட்டு சட்டென்று உணர்ச்சிப் பெருக்குகளில் ஆழ்த்தி விடுகின்றன. இருப்பினும் அதிக நேரம் அதிலேயே உழன்று கிடக்க முடியாமல், வாழ்வின் எதார்த்தங்களை உணர்ந்து அப்பிடியிலிருந்துக் கடந்து வரும்போது அதே நொடியில் எல்லாம் நீர்த்துப் போகவும் செய்கிறது.
சக்கரம்மாவைப் பற்றி சிறு குறிப்பு வரைவதென்றால்… சக்கரம்மா இவளுடைய தாய் வழி பாட்டியாரின் அக்கச்சியாள் பேத்தி. பாட்டியார்மார், உம்மாமார் வழியில் இப்போது பேத்திமார்களும் இயன்ற நேரங்களில் ஒருவருக்கொருவர் துடித்துக் கொண்டுதான் வருகிறார்கள். இந்த உறவு முறையிலும் இரத்தம் இன்னும் மணத்துக் கொண்டுதான் இருக்கிறது.
சக்கரம்மாவிற்கும் சம்சுதீனுக்கும் ஆண், பெண் என நான்கு மக்கள்! பினாங்கில் ஓட்டல் வைத்து நடத்தி வந்ததில் ஏற்பட்ட எதிர்பாராத தொடர் சரிவுகளால், நன்றாக வாழ்ந்து வந்த குடும்பம் இப்போது வெள்ளிகள் உதிர்ந்த வானம் போல் ஆனது.
சொந்தங்கள் பல இருந்தும், சக்கரமாவும் உதவிக்கென்று எங்கேயும், யாரிடமும் சென்று நின்றதில்லை. முதலில் நிலங்கள், பிறகு நகைகள், அதற்குப் பிறகு உடுத்தாத புடவைகள், கடைசியாய் மேலதிகமாய் உடுத்திக் கொண்டிருந்தப் புடவைகள்… என ஒன்றொன்றாய் விற்று, விற்று தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதில் புடவைகள் அத்தியாயத்தில்தான் பதுரு சல்மாவின் உதவிகள் சக்கரமாவிற்குத் தேவைப்படத் தொடங்கின. அதுவும் அவளுடைய கணவனான சம்சுதீன் உட்பட யாருக்கும் தெரியாமல் விற்க வேண்டும். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கைக்குரிய பாத்திரமாய் பதுரு சல்மா மட்டும்தான் சக்கரம்மா கண்களுக்கும் புலப்பட்டாள்.
அதில் இன்னொரு நடைமுறைக் காரணமும் இருந்தது, பதுரு சல்மாவின் பள்ளித் தோழி, காமாட்சியின் வாழ்க்கைதான் பதுரு சல்மாவிற்கு பல நேரங்களில் ஊக்கங்கள் கொடுக்கும். வாழ்க்கையில் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாமென்ற உத்வேகங்களை பலப்படுத்தும்.
காமாட்சி ஒரு கைம்பெண்; ஊரு ஊராய் சென்று புடவைகள், சட்டை துணிகள் விற்று தனது பிள்ளைகளை கரைச் சேர்த்துக் கொண்டிருப்பவள். அவளது பிள்ளைகளும் கல்லூரி, பள்ளியெனப் படித்து வருகின்றனர். புதிய துணிகளுக்கு அதிக முதலீடு இல்லாமல் தவித்த தருணமொன்றில் உடுத்திய ஓரிரு நல்ல சேலைகளை வெள்ளாவி பிடித்து குறைந்த விலைக்கு விற்க ஆரம்பித்தவள், அதற்கான தொடர் வாடிக்கையாளர்களைக் கண்டு வியக்கவும் செய்தாள். அந்த வியப்பை ஒரு சிநேகிதியாக பதுரு சல்மாவிடம் பகிர்ந்து கொள்ள, அதை சக்கரம்மாவிடம் எதிர்பாராதவிதமாக பேச்சோடுப் பேச்சாக கொண்டு செல்லவும் நேர்ந்தது.
அப்போது கணவனுக்குத் தெரியாமல் தனது புடவைகளை காமாட்சி மூலம் விற்றுத் தரும்படி பலவீனமானக் குரலில் சக்கரம்மா கேட்கவும், பதுரு சல்மா ஆடிப் போனாள். அதிர்ந்து, உடைந்து போனாள். அன்று அக்காள் – தங்கை இருவரும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தனர்.
ரொம்பவும் பகட்டாக இருந்து சட்டென்று சரிந்துப் போவதற்கு சிறிய சிறிய ஏற்ற இறக்கங்களுடன் நகர்ந்துச் செல்லும் தன்னுடைய இந்த எளிய வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று தனக்குள் ஆறுதல் கொள்ள ஆரம்பித்தாள் பதுரு சல்மா.
அவளுடைய ஒரு சின்ன நினைவு கூறல்… தொடுத்துச் செல்லும் பின்னணி சம்பவங்கள், கதையை எங்கேயோ நகர்த்திக் கொண்டிருக்கிறது…! எண்ணங்களுக்கு நாமே கடிவாளம் போட்டால்தான் உண்டு. ஆகவே, பதுரு சல்மாவும் தனது நெடிய கடந்தக் கால சஞ்சாரங்களை முடித்துக் கொண்டு ஒரு வழியாக நிகழ் உலகிற்கு வந்தாள்.
இப்போதும் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்றவொரு பெருமூச்சுடன், தன்னுடைய கணவன் யூசுபு அனுப்பியிருக்கும் பணத்தில் ஒரு மூவாயிரமாவது சக்கரம்மா கையில் கொடுக்க வேண்டுமென உறுதி கொண்டாள். ஆனால், எப்படி மிச்சம் பிடித்து அதை நிறைவேற்றுவது என்பது மட்டும்தான் கேள்விக்குறி. தனது பிள்ளைகளின் ஆசைகளையும், மாமியார் மற்றும் பெற்றோர்கள் சார்ந்த கடமைகளையும் எந்தவித குறையுமில்லாது நிரப்பமாக நிறைவேற்றவும் வேண்டுமே என்கிற எண்ணமும் பரிதவிப்பும் அவளை ஒரு புறம் அழுத்திக் கொண்டிருந்தன.
இருந்தும் மனம்,ஒரு நிலைக்கு வரவில்லை. இருக்கும் காசை வைத்து பெருநாளை கடந்துவிடலாம். பிறகு? ‘பார்த்துக்கொள்ளலாம் பதுரு, அல்லாஹ் இருக்கிறான்!’ என்று தனக்குள் முனங்கியபடி, அலையலையாய் எழுந்துக் கொண்டிருந்த அத்தனை சிந்தனைகளுக்கும் கேள்விகளுக்கும் தற்காலிகத் தடுப்புச் சுவர் எழுப்புவது போல் அந்த நேரத்திற்கு குழப்பங்கள் அனைத்தையும் தள்ளி வைத்தாள்.
அடுத்த நாள் பெருநாள் துணிமணிகள் எடுக்க பட்டுக்கோட்டைச் செல்ல வேண்டும்; அதற்கு மூத்தவன் சிராஜை தன்னோடுக் கூட்டிக் கொண்டாள். அவன் மனதிலோ கேட்டதை விட கூடுதலாக செலவுகள் வந்தாலும் பரவாயில்லை, விருப்பமானவற்றை எடுத்து விட வேண்டுமென்ற திட்டங்கள் தலைத் தூக்கிக் கொண்டிருந்தன.
மணிக்கூண்டைத் தொட்டிருந்த பூம்புகார் சில்க்ஸ் சென்றவர்கள் முதன்முதலில் பதுரு சல்மாவின் வாப்பா அமீதிற்கு கொஞ்ச காசில் இரண்டு சட்டைத்துணிகள் எடுத்தனர். பிறகு சிராஜின் ராஜாங்கமாகிப் போனது. ரெடிமேடிலேயே சட்டை, பேண்ட் என இரண்டாயிரத்தி சொச்சத்திற்கு எடுத்து, பெற்றவளை விழி பிதுங்க வைத்தான்.
மேலும் மாமியார், உம்மா, வாப்பா, மகன்களுக்கு வெள்ளை, கலர் கட்டங்கள், பூக்கள் போட்டதென அனைவருக்கும் வயதிற்கு தகுந்த வண்ணம் ஒவ்வொரு தினுசில் ‘கிப்ஸ்’ ஷோ ரூமில் கைலிகள் எடுக்க வேண்டும். பெண்களுக்கு மேல்துண்டு எனும் பிறைகள் போட்ட தாவணிகள் தெரிவு செய்ய வேண்டும்! கூட்டிக் கழித்து வரும் தொகையை நினைத்து, பதுரு சல்மா தடுமாறத் தொடங்கினாள்.
இருப்பினும் வானத்தில் எதுவும் முளைத்திருக்கிறதோ இல்லையோ, வெள்ளிக்கிழமை இரவுகள் தரும் நம்பிக்கையைப் போல வலிந்த ஒரு புன்னகையை நெஞ்சிலிருந்து உறிந்து உதட்டில் பூட்டிக் கொண்டாள் அந்த எளிய வீட்டுப் பேரழகி. மேலும் வளர்ந்த மகனின் இரசனைகளுக்கேற்ப அவனது உடைத் தேர்வுகளைக் கண்டு உள்ளூர பெருமைப்பட்டுக் கொள்ளவும் அவள் தவறவில்லை. இளையவன் மற்றும் மூன்று பெண் மக்களுக்கும் ஐநூறு, அறுநூறு ரூபாய்களில் பார்க்கவும், அணியவும் முடிந்தவரை தரமான துணிகளாகவே வாங்கினாள். அங்கேயே கிட்டத்தட்ட ஆறாயிரத்திற்கும் மேல் கையிருப்புக் கரைந்து விட்டது!
வாங்கிய கணக்கிற்கு சிறிய அன்பளிப்பாக பில்லோடு, மணி பர்ஸ் ஒன்றை மஞ்சள் நிற தலையணை போல் உப்பியபடிருந்த துணிப்பையினுள் திணித்தார்கள். பதுரு சல்மா திணிக்கப்பட்ட அந்த பக்கட்டை ஆவலோடு எடுத்துப் பார்த்தாள்.
பதுரு சல்மா மணி பர்ஸை ‘பக்கட்’ என்றுதான் சொல்வாள். அவள் மட்டுமல்ல அந்த ஊர்ப்பக்கம் அவள் தலைமுறைக்காரர்கள் பெரும்பான்மையினர் அப்படிதான் அதை அழைத்து வந்தனர்.
மேலும் அவளுக்கு சிறு வயதிலிருந்தே பக்கட்டுகளைப் பார்ப்பதும், பெரிய மனுஷி போல புழங்குவதும் பிடித்தமான விளையாட்டு. அறியாத வயதுகளில் சிப்பிகளும், முற்றத்தில் எறியப்படும் பேருந்துச் சீட்டுகளும்தான் அவளுக்கு காசு, பணம். ‘டூடூசி’ விளையாட கண்ணாடி வளைவித் துண்டுகளையும் அதில் போட்டு ஆட்டி, வரும் சத்தங்களைக் கேட்டு மகிழ்வாள்.
பூம்புகார் சில்க்சில் கொடுத்த பக்கட் நன்றாகவே இருந்தது. ஜிப் பகுதி நீங்கலாக கரும்பச்சை நிறத்தில் வளவளவென்று இருந்த அந்த பக்கட்டிற்கு பதிலாக றோஸ் கலர் இருக்கிறதா எனக் கேட்டுப் பார்த்தாள். அதுதான் இருக்கிறது என அடுத்த ஆளுக்கானப் பார்வை வீசி, நகரும்படி செய்கை காட்டினார் கல்லாவில் வீற்றிருந்த வெள்ளையுடை காசாளர்.
அடுத்து பெரியவர்களுக்கு கைலி, தாவணிகள் வாங்க அதற்கான கடைக்குச் சென்றனர். சிராஜ் இரண்டு வெள்ளை கைலிகளை எடுத்துக் கொண்டான். இரண்டு கலர் கைலி என்று தலையை சொரிய, பெற்றவள் இயலாமையில் மஞ்சணத்திப் பூப்போல் முறைக்கவும் மற்றவர்களுக்கு எடுக்கத் தொடங்கினர். அங்கே ஒரு இரண்டாயிரம் செலவாகி விட்டது. கையில் வெறும் ஆறாயிரத்துச் சில்லரை மீதமிருந்தது.
தனக்கு புடவை எடுப்போமா, பார்த்துக் கொள்ளலாமா என யோசித்துக் கொண்டேயிருக்கும்போதே மகனே வாய்விட்டுக் கேட்டுவிட்டான். அவனுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. கிப்ஸ் கடையில் கொடுத்த ஜவுளிப் பைகளை வாங்கச் சொன்னாள். அவன், கர்சீப்… என்று இழுத்தபோதுதான் அவளுக்கும் நினைவுக்கு வந்தது. ‘அமீது வாப்பாவிற்கும் சேர்த்து மூன்று எடு!’ என்றாள் அதில் இருநூறு போனது. உபரி வியாபாரம் ஆனதினாலோ என்னவோ அல்லது முதலில் வைக்க மறந்து போனாரோ… மணி பர்ஸ் ஒன்றை கடைசி நேரத்தில் எடுத்து, சிவப்பு நீல நிறங்களில் எழுத்துகள் அச்சிட்டிருந்த அந்த தடித்த பாலித்தீன் பையில் போட்டார் அந்தக்கடை உரிமையாளர்.
மேலும் அவர், அவள் முகத்தைப் படித்தவர் போன்று, பில்லை மறுக்கூட்டல் செய்து, அதில் நூறைக் குறைத்து தன்னால் இயன்ற ஒரு சிறு உதவியையும் செய்து ‘இப்போது சந்தோசம்தானே?’ என்பது போல் அவர்களைப் பார்த்தார். சிராஜ் மட்டும் நன்றி தெரிவிப்பது போல் பதிலுக்குச் சிரித்தான். பதுரு சல்மா பக்கட்டின் கலரை கவனித்தாள் ‘றோஸ்’தான்; ஆனால், மனதை கவ்விக் கொள்ள ஆரம்பித்த திடீர் பாரத்தில் அதைத் தொட்டெல்லாம் இரசிக்க முடியவில்லை. யோசிக்காமல் அவசரப்பட்டு, நிறைய செலவழித்து விட்டோமோ என்ற பெரும் தவிப்பில் தனது இடது புறத்து விரல்களை இறுக மடித்து, ரேகைகள் நைய்ய உள்ளங்கையை சுருட்டிக் கொண்டாள். வியர்வை பிசுபிசுத்தது. வலது கையில் ஆசையாசையாய் வாங்கிய துணிமணிகளின் பொதி அவளை வெறிக்கச் செய்தது.
‘வாம்மா, உனக்கு ராஜா சில்ஸ்ல புடவை பாக்கலாம்’ எனப் பிடிவாதமாய் அவளை இழுத்துச் சென்றான் மகன்காரன். சொல்லமுடியாத கலக்கத்தோடு ஒரு சிறுமியைப் போல் அவன் பின்னாடியே சென்றாள். நிறைய எடுத்துப் போட்டார்கள். அவள் முன்னூறு நானூறில் எடுக்க மனதை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மகன்காரனோ பட்டுப்புடவை போல் காட்சியளித்த ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள புடவையை எடுக்கச் சொன்னான். சீறும் சேவலின் கொலைவெறிக் கண்களோடு அவனைக் கோபித்த வண்ணம் எதுவும் வேண்டாம் என நடக்கத் தொடங்க, அவளை அங்கேயே சமாதானப்படுத்தி குறைந்த விலையிலேயே ஒன்றை எடுக்க வைத்தான்.
பஸ் ஸ்டாண்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையோரக் கடைகளில் வாங்கிய தீனி சாமான்கள், பெண்பிள்ளைகளுக்கான ஜோடிப்புப் பொருட்களுக்கான செலவுகள் போக, கையில் வெறும் ஐயாயிரமே மிச்சப்பட்டது. வாங்கிய ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சியோடு ஒருவித கசப்பும் இயலாமையும் கலந்திருந்தது. வீட்டிற்கு வந்துதும் துணிப்பைகளைக் கண்டு முகம் மலர்ந்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளைப் பார்த்ததும் அவள் கொண்டிருந்த இறுக்கங்கள் தளர்ந்து, அவளது இதழ்கள் அந்நேரத்திற்கானச் சிரிப்பை சூடிக்கொண்டது.
மீதமிருந்த தொகையை சுருட்டி, புது றோஸ் கலர் பக்கட்டிற்கு எந்திரம் போல மாற்றினாள். இங்கிருந்துதான் அவளுக்குள், சக்கரம்மாவிற்கு பணம் கொடுத்துதான் ஆக வேண்டுமா என்ற எண்ண ஊசலாட்டங்கள் அவளை அசைத்துப் பார்க்கத் தொடங்கின. அந்த இரவு முழுக்க அதே யோசனையிலேயே கிடந்தாள்.
காலையில், எல்லாவற்றிக்கும் இறைவனிடம் பாரத்தை சுமத்திவிட்டு, அந்த பக்கட்டிலிருந்த தாள்களில் இரண்டாயிரத்தைக் குறைத்து, முன்பு வைத்திருந்தப் பழைய பக்கட்டிற்கு மடை மாற்றினாள். மூவாயிரம் ரூபாயோடு சக்கரம்மா வீட்டிற்கு றோஸ் கலர் பக்கட்டோடு சென்றாள். இரவு போலில்லாமல், அந்த சமயம் ரொம்பவே சந்தோசமாகவும், நிறைவாகவும், இலகுவாகவும் தன்னை உணர்ந்தாள்.
செல்லும்போது அந்த றோஸ் கலர் பக்கட்டு அழுந்துவதை இரசித்தாள். அதிலிருந்து இரண்டாயிரத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு தன்னுடைய செலவுக்கு வெறும் ஆயிரம் மட்டுமே வைத்திருக்கிறேன் எனச் சொல்ல வேண்டும். இயன்றதைதானே செய்யவும் முடியுமென்ற எண்ணோட்டங்கள் அவளுக்கு அத்தனை சமாதானத்தையும் தரவில்லைதான். என்ன செய்வது? நீரின் பாதையில் செல்லும் இலை போல சூட்டையும் குளுமையையும் இரு புறங்களில் அனுபவித்தாள்.
பொலிவிழந்த மாளிகையினுள் புகுந்து நகரும் நிலவின் சிறு பிரதி போல பதுரு சல்மா அந்த வீட்டின் மதில் கதவைத் திறந்து சென்றாள். சக்கரம்மாவும் அவளது கணவன் சம்சுதீனும் எப்போதும் போல இன்முகம் தாங்கியவர்களாக அவளை வரவேற்றனர். அவர்களது கண்களில் ஏதோ ஒரு புத்துயிர் பெற்ற பிரகாசம் மினுங்கியது. சுற்றிய பஞ்சு மூட்டை போல வெள்ளைத் துப்பட்டியில் வந்து நின்ற பதுரு சல்மாவைக் கண்டதும் ஆதுரமாய் ஓடி வந்து, கடைசிப் பெண்பிள்ளை கதீஜா, பதுரு சல்மா மடியில் ‘மாமி!’ என்று ஏறிக் கொண்டாள். அவளும் பாசமிகு மாமியாய் பிள்ளையின் தலையில் ஈரம் பொங்க முத்தமிட்டாள். மகிழ்ச்சியில் சிரித்தபடி சின்னப்பெண் சிணுங்கினாள். கதீஜாவின் பட்டுப்பொன் முடியின் வாசம் பதுரு சல்மாவின் நாசிகளை நிறைத்தது.
அதிகம் தாமதிக்காமல், சக்கரமாவை மட்டும் சமையற்கட்டு பக்கம் அழைத்து பணத்தைக் கொடுக்க வேண்டுமென்பது அவளது அடுத்த நகர்வு. என்னதான் உள்ளுக்குள் பாசமும் அக்கறையும் இரத்தமும் சதையுமாக பின்னிப் பிணைந்திருந்தாலும், நேரத்திற்கு நேரம் ஊசலாடிக் கொண்டிருக்கும் பலவீனமான மனதையும், பணம் போதியும் போதாது வாழும் வாழ்க்கையையும் வைத்துக் கொண்டு பாவம் அவளும்தான் என்ன செய்வாள்?
ஓரிரு நிமிடங்கள் இயலபாகப் பேசிக்கொண்டிருந்தவள், சங்கேத பாவனையோடு எழுந்து அடுப்பங்கரை பக்கம் சென்றாள்.
மெல்ல உள்ளிலிருந்து மணி பர்ஸை எடுக்க கை செல்ல, அவளின் கையைப் பற்றியபடி, ஒரு வித பரபரப்போடு கொல்லைப் பக்கம் அவளை இழுத்துச் சென்றாள் சக்கரமா. அங்கே கிடந்த நாடாக் கட்டிலில் ‘ஒங்கிட்ட ஒரு விசயத்தைப் பகிர்ந்துக்கணும், கொஞ்சம் உக்காரு’ என்று அவளை அதில் அமரச் சொன்னாள். அருகில் கிடந்த பிளாஸ்டி நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு, உணர்ச்சிப் பொங்கியவளாய் பதுரு சல்மாவைப் பார்த்தபடி நடந்த சேதியை சொல்ல ஆரம்பித்தாள்…
“எளயவன் தமீமு வாட்டையில போயிருக்கான் தங்கச்சி, எதுத்தாப்ல சேவு மரைக்கா வந்திருக்காக. போனவை நிறுத்தி, இந்தா உங்க வாப்புச்சிக்கிட்ட இந்த காச குடுன்னு ஐநூர்வா நோட்டு ரெண்ட கையில திணிச்சிருக்காக! புள்ள தெகச்சுப் போயி, வாப்புச்சுதான் வஃபாத்தாயிட்டாங்களேனு மருகி சொல்லியிருக்கான். மரைக்காவுக்கும் அப்பத்தான் நெனவும் வந்துருக்கும் வலைக்கி! அப்படியாப்பா… ஞாவகத்துல இல்லாம தந்துட்டம்ப்பானு தந்தத வேங்கிட்டாகளாம். புள்ளைக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம வந்துட்டான். ஊட்டுக்கு வந்தவன், யேங்கிட்ட சொன்னதும் சொலக்குனு ஆச்சி! குடுத்தவரு, அத திரும்ப வேங்காம இருந்திருந்த ரெண்டு மூன்று நாளு ஓடியிருக்குமேனு ஒரு பக்கோம் தோணிச்சின்னா, இன்னொரு பக்கோம் நம்ம நெலம ஜக்காத்து வேங்குற அளவுக்கா ஊரு முழுக்க தெரிஞ்சிக் கெடக்குனு ஒரே சஞ்சலமாவே மனசுக் கெடஞ்ச்சி புள்ள!” கலங்கிய சக்கரம்மாவின் நிலையைக் கண்டு மீண்டும் ஒரு முறை துடிதுடித்துப் போனாள் பதுரு சல்மா. மகாராணியாட்டம் எப்படி வாழ்ந்தவள்! இப்படியா நமக்கும் கீழுள்ளவள் போல் நொடிஞ்சிக் கிடக்கணும் என்று மனக்கண்ணீர் வடித்தாள்.
“எல்லாத்துக்கும் அல்லா இருக்காங்க்கா…!” என்றபடி, மீண்டும் மணி பர்ஸை எடுக்க கையைக் கொண்டுச் சென்று, எடுத்ததும் ஜிப்பைத் திறக்க முயல, சிறுமி கதீஜா ‘அய் மாமியோட மணிபர்சு நல்லாருக்கு!’ என்று அதை கைப்பற்றிக்கொண்டாள். பெற்றவள் கோபப்பட்டு, கை ஓங்கி அவளிடமிருந்து பிடுங்க முயல, ‘இருக்கட்டும் அக்கா, ஒனக்கு தரத்தான் கொண்டு வந்தேன்’ என்று துப்பட்டியால் பாதி முகத்தை மூடியபடி எழுந்து வந்துவிட்டாள். மேலும் அங்கிருக்க அவளால் முடியவில்லை.