கட்டுரைகள்

அனல் பறக்கும் அரை இறுதி

சேவியர் ராஜதுரை

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக தற்போதைய நிலையில் கருதப்படும்
ரூட்,வில்லியம்சன்,ஸ்மித் மற்றும் கோலி ஆகிய நால்வரின் அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதில் கோலி , ஸ்மித், வில்லியம்சன் மூவருமே 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் தங்கள் அணிக்காக ஆடியவர்கள். இதில் வில்லியம்சன் மற்றும் கோலி அணித் தலைவராக இருந்தனர்.



2008 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில் கோலி தலைமையிலான இந்திய அணி வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை எதிர் கொண்டது. தற்பொழுது மீண்டும் பதினோரு ஆண்டுகள் கழித்து அதே போல கோலி தலைமையிலான இந்திய அணியை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது.

இம்முறை கண்டிப்பாக அதே போன்றதொரு முடிவை நியூசிலாந்து அணி எதிர்பார்க்காது. அன்றைய போட்டியில் தன்னுடைய ஆல்ரவுண்டிங் பர்பாமன்ஸ் மூலம் (43 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள்) இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்தார் அணியின் கேப்டன் விராட் கோலி. இந்த உலகக்கோப்பையில் ஒரு முறை கூட விராத்கோலி பந்து வீசவில்லை. “இந்த முறையும் ஆல்ரவுண்டராக கலக்குவீர்களா பந்து வீசுவீர்களா?” எனக் கேட்ட கேள்விக்கு, “தேவையென்றால் நிச்சயம் பவுலிங் செய்வேன். அணியில் இடம்பெற்றுள்ள 5 பந்துவீச்சாளர்களுமே சிறப்பாக பந்துவீசுகின்றனர். அதனால் 6 வது பவுலருக்கான அவசியம் ஏற்படவில்லை. அவசியெமென்றால் பந்துவீசுவேன்என கூறினார். ரூட், வில்லியம்சன், ஸ்மித் மூவருமே இந்த உலகக்கோப்பையில் பந்து வீசி விக்கெட் கைப்பற்றிவிட்டனர். கோலி மட்டுமே பந்து வீசவில்லை. நியூசிலாந்து அணியின் முக்கிய பந்துவீச்சாளரான பவுல்ட் மற்றும் சவுத்தியும் 2008 நியூசிலாந்து அணியில் விளையாடியவர்கள். இந்திய அணியில் ஜடேஜா அப்போது துணைக்கேப்டனாக இருந்தார். எனவே இன்று நடைபெறும் போட்டியிலும் ஜடேஜா இருப்பார் என எதிர்பார்க்கலாம்.


தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்றதன் விளைவாக முதலிடத்திற்குச் சென்ற இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது. ஆஸ்திரேலியா அன்று வென்றிருந்தால் இந்தியா இங்கிலாந்துடன் மோதியிருக்க வேண்டும். இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்துடன் மட்டுமே தோற்றிருக்கிறோம் மற்றும் அவர்களோடு ஆடினால் காவி உடை அணிய வேண்டும் போன்ற காரணங்களால் இந்திய ரசிகர்களும் நியூசிலாந்து அணியுடன் விளையாடுவதையே விரும்புவர். நியூசிலாந்து தன்னுடைய துவக்கப் போட்டிகளில் சின்ன சின்ன அணிகளோடு போட்டி இருந்த காரணத்தால் தன்னுடைய ரன்ரேட்டை ஏற்றி வைத்துக் கொண்டது. இங்கிலாந்துக்கும் இதே நிலைமை தான். ஆனால், இங்கிலாந்து இந்தியா மற்றும் நியூசிலாந்தை
லீக் போட்டிகளில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது. நியூசிலாந்து டாப் 4 ல் இருக்கும் எந்த அணியையும் வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பையிலேயே 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது நியூசிலாந்து அணி. 2011,15,19 என மூன்று உலகக்கோப்பைகளிலுமே மொத்தமே மூன்று போட்டிகளில் தான் இந்திய அணி தோற்றுள்ளது.

கடந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சென்ற அணி அரையிறுதியில் ஆஸ்திலேியாவுடன் தோல்வியடைந்து வெளியேறியது. அதேபோலத் தான் நியூசிலாந்து அணியும் ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் 40 வருடக் கனவுடன் இறுதிப் போட்டிக்குச் சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. 4 வருட காத்திருப்பிற்குப் பிறகு மீண்டும் அதே கனவோடு இன்று விளையாடும் என்பதால் நியூசிலாந்து இறுதி வரை வெற்றிக்காகப் போராடும். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை கேப்டன் வில்லியம்சன் தொடர்ந்து க்ளாசாகவும் கன்ஸிஸ்டன்ட் ஆகவும் ஆடி வருகிறார். அந்த அணியின் அஸ்திவாரமே வில்லியம்சன் தான். வில்லியம்சனை அவுட்டாக்கி விட்டால் அணி ஆட்டம் கண்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. அதை சரி செய்ய வேண்டுமென்றால் கப்தில், டெய்லர், லதாம், நீசம் என அனைவரும் பொறுப்பாக ஆட வேண்டும். பவுலிங்கைப் பொறுத்தவரை கடந்த உலகக்கோப்பையைப் போலவே இந்த உலகக்கோப்பையிலும் அசத்துகின்றனர். இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் என்பதில் சந்தேகமில்லை. ராகுல், ரோகித், கோலி சொற்ப ரன்களில் அவுட்டாகும் பட்சத்தில் இந்திய அணி 200 களைத் தொடுவதே சிரமம். அவர்களின் திட்டம் அதுவாகத் தான் இருக்கும்.


ஆனால் அது அவ்வளவு எளிதானதா என்ன?

ரோகித் ஷர்மா உச்சபட்ச பார்மில் உள்ளார். இந்த உலகக் கோப்பையில் மட்டுமே 5 சதங்களை அடித்துள்ளார். இந்த ஒரே வருடத்தில் மட்டும் பத்து சதங்களை அடித்து மிரள வைத்துள்ளார். 2003 உலகக் கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்ததே இதுவரையில் சாதனையாக இருந்து வந்த நிலையில் ரோகித் தற்போதே 647 ரன்கள் அடித்துள்ளார். அந்த சாதனையை ரோஹித் இன்று முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். ரோகித்திடம் ரசிகர்கள் 200 ரன்களை எதிர்பார்க்கின்றனர். ரோகித்தும் அதை விரும்புகிறார். எனவே கண்டிப்பாக இந்த முறை இரட்டை சதத்திற்கு முயல்வார். ரோகித் தன்னுடைய முதல் 100 ரன்களை அடிக்கும் பந்துகளின் எண்ணிக்கையில் பாதி கூட அடுத்த 100 ரன்கள் கடக்க எடுத்துக்கொள்ள மாட்டார்.100 ரன்களுக்கு பிறகு ஆடக்கூடிய ரோஹித்தின் ஸ்ட்ரைக்ரேட் எதிரணிகளை அச்சமூட்டக்கூடிய ஸ்ட்ரைக்ரேட் ஆக இருக்கும். எப்போதும் சதங்களில் ரன்சேர்க்கும் கோலி இந்த முறை அரைசதங்களிலே ரன் சேர்த்துள்ளார். ரோஹித்திடம் இரட்டைச்சதத்தையும் கோலியிடம் சதத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ராகுல் ஒரு சிறப்பான துவக்கத்தை கொடுக்க வேண்டும் என கவனமாக ஆடுகிறார். மிடில் ஆர்டரும் கை கொடுக்கும் பட்சத்தில் அணி பெரிய ஸ்கோரை பதிவு செய்யலாம்.


பந்துவீச்சில் பும்ரா எதிரணியினரை மிரள வைத்துக் கொண்டிருக்கிறார். ப்ளாட் பிட்சாக இருந்தாலும் சரியான லயன் அன்ட் லென்த்தில் வீசி அங்கேயும் பேட்ஸ்மேனை திணறச் செய்கிறார். இந்தியாவின் பொக்கிஷம் பும்ரா என்பதில் துளியும் சந்தேகமில்லை. “தற்போதைய நிலையில் பும்ரா யாராலும் தொடக் கூட முடியாத பவுலராக இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் அவரை மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும்என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் வெட்டோரி கூறியுள்ளார்.

இவருடைய பத்து ஓவர்கள் கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். பாண்ட்யாவும் தற்போது நன்றாக பந்து வீசுகிறார். கடந்த போட்டியில் நிறைய ரன்கள் வழங்கியிருந்தாலும் புவனேஷ்குமார் மிகச்சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. அவரும் மிக முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுக்களை எடுப்பதிலும் டாட் பால் வீசுவதிலும் கை தேர்ந்தவர். மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தால் குல்தீப்பின் பந்துவீச்சை எதிர் கொள்வது கடினம்.


இதுவரை இந்திய அணி 7 முறை நியூசிலாந்து அணியை உலகக்கோப்பையில் எதிர் கொண்டுள்ளது. இதில் மூன்றில் இந்தியாவும் நான்கில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. தற்போதைய நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட பலமாக உள்ளது. இருந்தாலும் 44 வருட கனவோடு வரும் நியூசிலாந்து அணி தன் நூறு சதவீத உழைப்பைப் போடும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் இரண்டே போட்டிகள் தான். பதினொரு வருடத் தோல்விக்கு பழி தீர்க்கவும், 44 வருட நியூசிலாந்து அணியின் கனவை நிறைவேற்றவும் இந்த இரண்டு போட்டியில் வென்றால் போதும். எனவே நியூசிலாந்து அணி அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்காது.
அதே போல கோலி இந்த உலகக்கோப்பையை வாங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். தன் கேப்டன்சிப் மீதான விமர்சனங்களை இந்த இரண்டு போட்டிகளில் பெறும் வெற்றியின் மூலம் மாற்றி விட முடியும். தோனிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். சச்சினுக்கு தோனி உலகக் கோப்பை வென்று அனுப்பி வைத்தது போல தோனியை உலகக் கோப்பை வென்று அனுப்பி வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமும்.

எனவே இந்திய அணியும் இந்த இரண்டு போட்டிகளையும் வெல்ல தன் முழு உழைப்பையும் போடும் என்பதால் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது .

ஆனால் இந்த போட்டி நடக்க இயற்கை கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்.இல்லையென்றால் நியூசிலாந்தின் கனவு கனவாகவே போய்விடும்.மழை காரணமாக போட்டி இன்று ரத்தானால் நாளை நடைபெறும்..

நாளையும் ரத்து செய்யப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டி “கிரிக்கெட்டின் மெக்கா”என அழைக்கப்படும் லார்ட்ஸில் நடைபெறும்.அங்கு வெற்றிபெற்று செல்வதே மைதானத்திற்கு தரும் மதிப்பாயிருக்கும்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button