
அலைகளின் முதுகிலேறும் வீரன்
குளிர் மேக நிரைகள்
யானைக் கூட்டமென மலையேறும்
பெருங்குறிஞ்சியில்
மூங்கிலரிசிகள் புன்னகைக்கும்
புலியின் உறுமலெனக் கவிதையைக் கண்டேன்
அதன் கூர் உகிர்கள் பூமியில் பட்டும்படாமல்
தாவுவதைப் போல நானும் அதைத் தொடர்ந்தேன்
களிறு மிதித்த சிறுபள்ளங்களில் தேங்கிய நீரில்
மிதக்கும் வேங்கைப் பூக்களை மெல்ல விலக்கி
அதனைப் பருகும் செந்நாய்களின்
மந்திர ஊளைகளில் முதுமொழியைக் கற்றேன்
அருவிச் சுனைகளில்
நழுவும் பிஞ்சு பலாக்காயாய்
ஆறோடு மருதத்தில் நுழைந்தேன்
செங்கழு நீர்க் கொடிகளைக் கொம்புகளில்
சுற்றிய இருள் போல் கறுத்த எருமைகள்
ஊருக்குள் நுழைகின்றன
அதன் உடலெங்கும் வீசும்
சகதியின் வாசத்தில் மையெடுத்தேன்
கொள்வாய்க் கழுகுகள் அமர இடமின்றி
விரையும் பாலைகளில்
நிலமெல்லாம் அலையும் அதன் நிழலென
கவிதையைக் கண்டேன்
ஈர நண்டுகள் தம் வயிற்றினைக் கிழித்து
ஈன்றெடுக்கும் நெய்தல் வெளிகளில்
கரைகளுக்குக் குதிரைகளையோட்டி வரும்
அலைகளின் முதுகில் வீரனென ஏறி அமர்கிறேன்.
•
விமானக் கூடையில் வரும் கர்ணன்
அக்கம்பக்கத்து ஏச்சுகளுக்கு
அஞ்சிய நவீன குந்தி
விமானக் கூடையில் அமரவைத்து
மேகக் கங்கையில் விடுகிறாள்
வெஸ்டர்ன் யூனியன் வில்லில்
செல்லும் வெள்ளி அம்புகள்
தங்கையின் காதுகளுக்குக்
குண்டலங்களைக் கொண்டுசெல்கின்றன
தம்பியின் படிப்பைத்
துரோணாச்சாரியார் கரையேற்றுகிறார்
துரியோதனின் நட்போடு
குதிரை லாரித் தேரிலேறி செல்லும்
குடும்பத் தேரோட்டியான புலம்பெயர்ந்த கர்ணன்
போர்க்கவசங்களைக் கழட்டிவிட்டுச்
சமயங்களில் கவிஞனாகிறான்
•
பனடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகள்
வெண்ணிறத் தூவிகள் மெல்ல அசைய
நம்பிக்கையின் ஆதூரத்துடன்
தொண்டைக்குழியிலிருந்து வயிற்றுக்குள்
இறங்கிக்கொண்டிருக்கிறது பனடால் வில்லை
வலியே அதன் பிரியமான உணவு
பனடால் வலியை மெல்ல கொரித்துக்கொண்டிருப்பதன்
ருசியைப் பசிய நரம்புகள் உணர்கின்றன
எல்லோரின் கைப்பைகளிலும் பனடாலின் வாசனை
வான்தொடும் கட்டடங்கள் நிறைந்த சாலைகள்
பனடால் சக்கரங்கள் பூட்டிய சாரட்டுகளில் ஏறி
விரைந்து கொண்டிருக்கிறது நகரம்
•
மாய மலர்
காதில் கல்வெள்ளி வளையங்களுடன்
வானம் பார்த்த வண்டாக ரீங்கரித்துப்
பால்வெளியெங்கும் பாடித் திரிந்தேன்
அலை கடல் தாண்டிப் புதிர் நிலம் நுழைந்தேன்
விண்ணுயர்க் கட்டடங்கள் உதிர்த்த வைரக் கற்களில்
மின்னொளிர் வெளிச்சம் தகதகத்தன
மெல்ல அவற்றை விலக்கி நடந்தேன்
பொன்னொளிர்ப் பூக்கள் தண்ணெனச் சுடரும்
பெருங்காடொன்றில் கால்கள் பதித்தேன்
ஒவ்வொரு மலராய்த் தொட்டு நடந்தேன்
மலையெங்கும் மந்தாரை வாசம்
மனமெல்லாம் மந்தாரை ஓசை
நிலமெல்லாம் மந்தாரை வண்ணம்
உயிரெல்லாம் மந்தாரைக் குளுமை
மந்தாரை மணக்கும்
மந்தாரைக் கனவு அதற்குள்
மந்தாரை இவளென்று
ஓர் ஏகாந்த நினைவு
மந்தாரை விலக்கி
மந்தாரை நடக்க
மந்தாரையைப் பழிக்கும்
மாய மலரொன்று கண்டேன்
காண்தொறும் காட்சியாகி
காண்கின்ற கண்ணுமாகி
கருதுகின்ற நினைவுமாகி
நினைவுதொடும் விழிப்புமாகி
நிலமெலாம் விரிந்தது மாயமலர்
மறுகணம் மலருக்குள் மலரென
மாறி நின்றேன்