கட்டுரைகள்

இது யாருடைய வகுப்பறை?; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்

கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர் ஆயிஷா நடராசன் எழுதிய, ‘இது யாருடைய வகுப்பறை?’ என்ற நூலை நூலகத்தில் பார்த்தபோது இது ஏதோ பள்ளியாசிரியர்களுக்கான  வழிகாட்டி நூல் போல என்று தோன்றினாலும், வாசிப்போம் என்று எடுத்து வந்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க எவ்வளவு முக்கியமான ஒரு நூலை வாசிக்கிறேன் என்று பிரம்மிப்பாக இருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் என் பள்ளி வாழ்க்கையைப்  பற்றி யோசித்துகொண்டிருந்தேன். பதினாலு வருடங்களில்  எந்தளவு எனக்கு பிரயோஜனம் கிடைத்திருக்கிறது  என்று யோசித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏதோ மூட்டை மூட்டையாக புத்தகங்களை மனனம் செய்து ஒப்பிவித்து வந்ததாகத் தோன்றுகிறது. என் சுய தேடலின்றி இத்தனை ஆண்டுகள் நான் படித்த பாடங்களினால்  எனக்கு என்ன பயன் என்று யோசிக்க யோசிக்க அதன் அர்த்தமின்மை எனக்குள் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.  அவ்வகையில் இந்நூல் கண்ணில் பட்டதும் வாசிக்கத் தூண்டியது. இந்நூலில் நம் கல்விமுறையை, அதில் உள்ள சிக்கல்களை, போதாமைகளை தெளிவாக விளக்கிகொண்டே  செல்கிறார் நூலாசிரியர். முன்னர் இந்தியாவில் இருந்த கல்விமுறைகளான  குருகுலங்களோ, தேவாலய கல்வியோ, மதரசாக்களோ எல்லோருக்கும் பொதுவான கல்வியாக இல்லாமல் மதம் சார்ந்ததாக இருந்தது என்றும், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கல்விமுறை மதம்சாரா (SECULAR)  பொதுவான கல்வியாக அமைக்கப்பட்டது என்று கூறும் நூலாசிரியர், பிரிட்டிஷார் கொண்டுவந்த பள்ளிகல்விமுறையின் சில  உள்நோக்கத்தை பற்றியும் விரிவாக ஆராய்கிறார். இந்தியர்கள் தங்களுக்கு  கட்டுப்பட்டு நடப்பவர்களாக, அடிமைத்தன மனோபாவம் (COLONIZED MIND) கொண்டவர்களாக ஆக்குவதே அவர்களின் கல்வித்திட்டம் என்கிறார். அதுபோல, பள்ளிக்கூட அமைப்பு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டதே தொழிற்புரட்சிக்கு பின் வந்த காலத்தில் வேலைக்கு சென்றுவிடும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  பாதுகாப்பான இடத்தில் விட்டுசெல்லவேண்டும் என்ற காரணத்திற்காகதான் என்ற தகவலையும்  தருகிறார். இன்றைய கல்விமுறையில் உள்ள  குறைபாட்டின் வெளிப்பாடுதான் படித்து முடித்த பலர் இன்னும் சுய சிந்தனையோ தேடலோ அற்றவர்களாக, பணம் சம்பாதிப்பதே வாழ்வின் ஒரே லட்சியம் என்று  இருப்பதற்கும், பொதுபுத்தியின் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாமல்  இருப்பதற்கும்  காரணம் என்ற மிக முக்கியமான ஒரு காரணத்தை சொல்கிறார். பள்ளிக்கல்வி ஒரே வடிவில் சுடப்படும் சப்பாத்திகளைப் போல மானவர்களை தயார் செய்கிறது என்று அவர் கூறுவது நிதர்சனம். உண்மையான  கல்வி ஒரு மனிதனை திறந்த மனதுள்ளவனாக, தேடல் கொண்டவனாக, சிந்தனையாளனாக ஆக்கவேண்டும். இன்றைய கல்வியின் வடிவம் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் போட்டியில் மாணவர்களை கலந்துகொள்ள தயார் செய்வதுபோல்தான் உள்ளது. மேலும், அது மாணவர்களின் மனதை விரிவுப்படுத்தாமல், குறுகிய, சுய நல வேட்கையும், பொருள் தேடல் மட்டுமேயுள்ளவனாக  மாற்றுகிறது என்கிறார். இதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். பலர் தாங்கள் படித்து இந்த வேலைக்கு போய் இவ்வளவு சம்பாதிக்கவேண்டும், வசதியாக வாழவேண்டும் என்பதையே தங்கள் கல்வியின் நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை வரலாறு படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவரோடு பேசிகொண்டிருந்தபோது, அவர் வரலாற்றில் ஆர்வமாக இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன். ஆனால் பேச்சின் கடைசியில் அவர் ‘எப்படியாவது நன்கு படித்து நல்ல வேளையில் சேர்ந்து சம்பாதித்து, ஒரு வீடு காரு எல்லாம் வாங்கி வாழ்க்கையில் செட்டிலாகிவிடவேண்டும்’ என்று பெருமூச்சோடு சொன்னபோது எனக்கு பெரும் ஏமாற்றமாக  இருந்தது. அவருடைய நோக்கம் நிச்சயம் தவறல்ல, ஆனால் பொருள்சார் வெற்றியை மட்டுமே  தன்னுடைய முழூ  நோக்கமாகக் கொண்டிருப்பதுதான் தவறு. இத்தகைய மனோநிலைக்கு நம் கல்விமுறையும் முக்கிய காரணம் என்று நிச்சயம் சொல்லமுடியும். இன்றைய கல்வியாசிரியர்களுக்கு முன்மாதிரியாக 2000  வருடங்களுக்கு முன்னே கிரேக்கத்தில்  இருந்தவர்கள் தான் SOPHIST  தத்துவவாதிகள். அவர்கள் சாக்ரடீசுக்கு முன்பு  இருந்தவர்கள். ஆசிரியர் மாணவர் என்ற அதிகார அமைப்பில் இயங்கியவர்கள். “எங்களுக்கு தெரியும் நாங்கள் கூறுவதை நீங்கள் கற்றுகொள்ளுங்கள்” என்ற ரீதியில் தான் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன. எச்டைன் கார்ட்னர் எழுதிய தத்துவ வரலாற்றை பற்றிய அற்புதமான நாவலான, ’SOPHIES WORLD’ ல் சோபிஸ்ட் தத்துவவாதிகளை பற்றி கூறும்போது, ‘போதனை முறையில் செயல்பட்ட  அவர்கள் தங்கள் தத்துவங்களை நிறைய புத்தகங்களாக வெளியிட்டனர், ஆனால் இதற்க்கு நேர்மாறாக சாக்ரடீஸ் யாருக்கும் ‘உபதேசிக்காமல்’ பிறரோடு சேர்ந்து  கலந்துரையாடினார், விவாதித்தார். அவருடைய அணுகுமுறை ஆசிரியர் மாணவர் என்ற அதிகார ரீதியில் இல்லாமல் சகமனிதர்களோடு சேர்ந்து ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முற்பட்டார். “தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நம்புவதுதான் உண்மையான ஞானிக்கு அடையாளம்” என்ற அவருடைய  கூற்றிற்கு அவரே உதாரணமாக திகழ்ந்தார். இன்னொரு சுவாரசியமான விஷயம் சோபிஸ்டுகள்  தங்கள் தத்துவங்களை நூல்களாக வெளியிட்டார்கள். ஆனால் இன்று அவற்றில் ஒன்று கூட மிஞ்சவில்லை. ஆனால், சாக்ரடீஸ் எதையுமே எழுதவில்லை, தன் வார்த்தைகளை பதிவு செய்ய கூட  முயலவில்லை. ஆனால் இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும்கூட அவருடைய வார்த்தைகளை மக்கள் படிக்கிறார்கள், ஆராய்கிறார்கள். இந்நூலாசிரியர் மிக முக்கியமான ஒன்றை குறிப்பிடுகிறார் அது சாச்ரடீசுக்கும் பிளேடோவுக்குமான உறவு. அதுபோல, பிளேட்டோவுக்கும் அறிஸ்டாடளுக்குமான உறவு. அதாவது ஆசிரிய மாணவ உறவு. அது அதிகாரமிக்கதாக இல்லாமல் நட்பானதாக உரிமைபூர்வமாக இருந்தது. சாக்ரடீசின் கருத்தை  பிளேடோவால் மறுக்கமுடியும், அவரின் கருத்தை அரிஸ்டாடிலால் மறுக்கமுடியும். இந்தளவிற்கு அவர்கள் சுதந்திரமிக்கவர்களாக, ஜனநாயகமிக்கவற்களாக இருந்தனர் என்று கூறுகிறார். இன்று நம் கல்விமுறையில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான இடைவெளி மிக அதிகமானதாக தான் உள்ளது. அடிப்படை நோக்கமான மாணவரின் ஆளுமையை, தனித்திறமையை வெளிகொண்டுவருவதில் காட்டும் அக்கறையைவிட, விதிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அம்மாணவன்  அடிபணிந்து நடக்கிறானா என்று கண்காணிப்பதில் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அடுத்தவரோடு பேசினால் பெயரை எழுதி கொடுப்பது, இடம் விட்டு இடம் மாறி உட்க்கார்ந்தால் அடிப்பது  போன்ற சிறு சிறு விஷயங்களில்  காட்டப்படும் கடுமை மாணவர்களின் மனதில் காரணமற்ற பயத்தையும் ஒரு அடிமைத்தன மனோபாவத்தையும் தான்  ஏற்படுத்தும். கல்விக்கூடங்களில், இன்னும் பாடசாலைகளில் கூட மாணவர்களை கடுமையாக தாக்குவதும், உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் தண்டனைகளை கொடுப்பதும் நடக்கத்தான் செய்கின்றன. நானே நேரில் கண்ட ஒரு அனுபவம் எப்போதும் என் நினைவில் இருக்கிறது. சரியாக ஒரு மாணவன் படிக்கவில்லை, சொல் பேச்சை கேட்பதில்லை போன்ற பெற்றோரின் குற்றச்சாட்டுகளுக்கு பாடசாலை ஆசிரியர் நான்காவது வகுப்பு படிக்கும் ஒரு  பையனை அவன் கதற கதற அடித்து இழுத்து சென்று ஒரு அறையில் அவனுடைய மேல் சட்டையை கழற்றி விட்டு கூட்டிவந்து பிற மாணவ மாணவியர் முன்பு நிற்கவைத்து தண்டனை கொடுத்தார். அவன் அழுதுகொண்டே நின்ற காட்சி இன்றும் நினைக்கும்போது மனதில் பெரும் கொந்தளிப்பு  ஏற்படுத்துகிறது. இது தண்டனை என்ற பெயரில் செய்யப்பட்ட அராஜகம். இதுபோன்ற வன்முறை நிரம்பிய தண்டனைகளுக்கும், செயற்கையான கட்டுப்பாடுகளுக்கும், கொடுக்கப்படும் அதீத கவனம்  மாணவர்களின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடுவதோடு, உளவியல் ரீதியான சிக்கலையும் ஏற்படுத்தும். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக்கூட தீவிபத்து நமக்கு தெரியும். அந்த தீவிபத்தின்போது பள்ளியின் மேற்கூரை எரிந்துகொண்டிருந்ததை கண்டும் குழந்தைகள் ஆசிரியருக்கு பயந்து வாய்மேல் விரல் வைத்துகொண்டு உட்கார்த்திருக்கிரார்கள். இறந்த குழந்தைகளின் உடலைப்பார்க்கும்போது அதில் வாய்மேல் விரல்வைத்தவண்ணம் சில குழந்தைகளின் உடல் காணப்பட்டது என்கிற அதிர்ச்சிகரமான தகவலை நூலாசிரியர் தருகிறார்.  பள்ளிகூட பாடத்திட்டங்களை தாண்டி ஒட்டுமொத்த  கல்விமுறையில்  உள்ள பிரச்சனைக்கு  இதன் அமைப்பில் உள்ள குறைபாடுகளே முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை பற்றி விளக்கும் நூலாசிரியர்  ‘விவசாயம்தான் ஒரு நாட்டினுடைய அடிப்படையும், பொருளாதாரத்துக்கான முக்கிய காரணமும் ஆகும். விவசாயம் உற்பத்தித்துறையில் வரக்கூடியது. அதற்க்கு உதவக்கூடியவகையில் உள்ளதுதான் தொழில்துறை. அது விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்துகொடுக்கும். அதற்க்கு அடுத்ததாக தான் சேவைத்துறையான மருத்துவமும், கேளிக்கையும் வரும். ஆனால் இன்று இந்த சேவைத்துறைகளுக்கு அதிக கவனம் தரப்பட்டு  விவசாயம் புறக்கணிப்பிற்கும், அலட்சியத்திற்க்கும் தள்ளப்படுகிறது. விவசாயிகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் விவசாயிகள்  தங்கள் பிள்ளைகளை விவசாயத்திற்கு பதில் வேறேதேனும் கல்விக்கற்க வைக்கும் நிலைதான் ஏறப்ட்டிருக்கிறது. இதைவிட கொடுமை  அப்பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் தங்கள் பெற்றோர் விவசாயிகள் என்று கூறிக்கொள்ளக்கூட வெட்கப்படும் நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டுமென்றால், நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் உற்பத்தித்துறையான விவசாயத்திற்கு அதிக கவனம் தரப்பட வேண்டும் அத்தோடு விவசாயத்திற்கு ஏற்றார்போல அதன் வல்லுநர்களை உருவாக்கும் கல்விமுறைதான் இன்று  தேவை’ என்று  கல்விமுறையின் இந்த நிலைக்கு  காரனமாக அதன்   பின்னால் இருக்கும்  பொருளாதார காரணங்களை  ஆராய்கிறார். பிரச்சனையின் ஆழத்திற்கே சென்று அலசுவதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அமைப்பில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யவேண்டிய அவசியத்தை இந்நூல் காட்டுகிறது. உலகிலுள்ள முன்மாதிரிகல்வி அமைப்புகளாக பின்லாந்தையும்  கியூபாவாவையும் அதன் கல்வி திட்டத்தையும் பற்றி விரிவாக விளக்கும் அதே நேரம், குழந்தைகளின் நலனுக்காக போராடிய பெரும்கலைஞனான சார்லி சாப்ளினைபற்றியும், குழந்தைகளின் நலனுக்காகவும், கல்விக்காகவும் மிகப்பெரும் பங்களிப்பாற்றியிருக்கும் மாண்டிசேரி அம்மையார்  அவர்களைப்பற்றியும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நூல் முடிவுப்பகுதியில் சில முக்கிய விஷயங்களை தொட்டு முடித்திருக்கிறார். இன்றைய இணையதள உலகில் அனைத்தையும் வீட்டிலிருந்தே பெற்றுவிடமுடியும் என்ற நிலை உருவாகியிருக்கும்போது மாணவர்கள் ஆசிரியரை தேடி பள்ளிக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. .அப்படியென்றால் இன்றைய காலத்தில் ஆசிரியரின் பணிதான் என்ன ? என்ற கேள்விக்கு பதிலாக  மாணவர்களின் தனித்திறமையை, ஆர்வத்தைக்கண்டறிந்து அதில் அவர்கள் மேலும் சிறப்பாக முன்னேற வழிகாட்டியாக, இன்னும் சமூகத்தின் தேவைக்கேற்ப பல்வேறு துறைகளில் அவர்கள் சிறப்படைய ஒரு வழிகாட்டியாக, ஊக்கிவிப்பாளராக உதிவியாளராக ஒரு ஆசிரியர் இருக்கவேண்டும் என்பதுதான் இன்றைய ஆசிரியரின் முக்கிய பணி. நூலை முடிக்கும்முன் ஆசிரியர்களின் சிறப்பைப்பற்றி சிசெரோ கூறிய வார்த்தைகளை கொண்டு முடிக்கிறார். அவை : ‘’NO PEOPLE CAN RISE ABOVE ITS LEVEL OF THE TEACHER’’

‘’எந்த சமூகமும் தனது ஆசிரியர்களின் நிலையை  தாண்டும் சிறப்பையடைய முடியாது’’.

கல்வித்துறையின் இன்றைய தேவையும் அதில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களை பற்றியும்  இந்நூல் மிக ஆழமாக விவாதித்திருக்கிறது.

 

முஜ்ஜம்மில் – 9500179876

 

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button