இணைய இதழ்இணைய இதழ் 57சிறார் இலக்கியம்

ஜானு; 5 – கிருத்திகா தாஸ் 

சிறுகதை | வாசகசாலை

அந்தப் பெண்

“ஜானகி. உனக்கு ஏதாவது ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும். நீயே கேள்” என்றார் கமிஷனர்.

ஜானு.. ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் பதில் சொன்னாள்.

“Thank You Sir. இன்ஸ்பெக்டர் கீதா சுப்ரமண்யம் இருக்காங்க இல்ல. அந்த போலீஸ் ஸ்டேஷன்ல நான் போலீசா இருக்கணும். ஒரு வாரம்”.

அம்மாவும் அப்பாவும் பட்டென்று ஜானுவைத் திரும்பிப் பார்த்தார்கள்.

அதிர்ச்சி.

‘என்ன இவ இப்டி கேட்கறா’

இப்படி ஒன்றை அவர்கள் எதிர்பார்த்திருக்கவே இல்லை.

இருவரும் கமிஷ்னரைப் பார்த்தார்கள்.

ஆனால், கமிஷ்னரின் முகத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை.

“Haha i know janaki…” ரொம்ப சந்தோஷமாகச் சொன்னார் அவர்.

இந்த வார்த்தைகளைக் கேட்டு அம்மாவும் அப்பாவும் இன்னும் அதிக அதிர்ச்சியடைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அப்போதான் ஜானு.. பயங்கரப் பெருமையாக அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள்.

கிடைத்த அந்த சின்ன இடைவெளியில் ‘என்ன ஜானு இதெல்லாம்’ என்பது போலவே அம்மா ஒரு பார்வை பார்த்தார்.

அப்பாவோ செய்வதறியாது பதட்டமடைந்து, “சார்.. சாரி சார்.. அவ எப்பவும் போல விளையாட்டா பேசுறா.. நீங்க தவறா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்” – சொல்லும்போதே அப்பாவுக்குக் குரல் நடுங்கியது.

அப்போது ஜானு.. அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

“அப்பா.. இல்ல.. நான் நிஜமாத்தான் சொன்னேன்”.

“ஜானகி” அப்பா.. ரொம்ப மெலிதான.. ஆனால், கோவமான குரலில்.

ஜானு இன்னுமொருமுறை அப்பா அம்மாவைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கமிஷனர் பக்கம் திரும்பினாள்.

‘அடக்கடவுளே இந்தப் பொண்ணை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்’ அம்மா.

அப்போது கமிஷனர், “ஆல்ரைட்.. ஜானகி.. உனக்கு நான் ஒரு கிஃப்ட் கொடுக்கணும்ன்னு நினைச்சேன். இதை விட ஸ்பெஷலா வேற ஏதும் நிச்சயம் இருக்க முடியாது. உன் ஆசைப்படியே நீ போலீஸ் ஆகலாம். ஆனா, ஒரு வாரம் வேண்டாம். மூணு நாள் இருக்கலாம்..”.

“சார்…” பதட்டம், தயக்கம், அதிர்ச்சி எல்லாம் கலந்து இருந்தது அப்பாவின் குரலில்.

“எஸ் மிஸ்டர். பத்மனாபன்”

“ஆனா, இது எப்படி சரியா வரும் ?”

“என்ன தயக்கம் உங்களுக்கு?”

“அவ கேட்பதோட சீரியஸ்னெஸ் தெரியாம கேட்கிறா. அவ புரியாம பேசிட்டு இருக்கா” பதட்டம் குறையாமல்.

“Haha மிஸ்டர் பத்மனாபன்.. அவ புரியாம கேட்கவே இல்ல. அவ என்ன கேட்கிறான்னு தெரிஞ்சுதான் கேட்கிறா. தெரிஞ்சுதான் செய்றா”

“ஆனா சார், அவ சின்னக் குழந்தை.. அவ விருப்பப்படி இது நடந்தா கூட.. மூணு நாள்.. அவ .. அங்க .. அவ என்ன செய்யப்போறா.. அவளுக்கு என்ன தெரியும்?”

“மிஸ்டர் பத்மனாபன், நம்மைச் சுற்றி நடப்பதை எல்லாம் நீங்களும் நானும் பார்ப்பது வேற விதமா இருக்கும். குழந்தைங்க பார்ப்பது வேற விதமா இருக்கும்.. ம்ம்.. இவ தெரிஞ்சுக்கட்டுமே. இவ பார்த்தது போல் இல்லாத ஒரு உலகம் இவளுக்குப் பக்கத்துலயே இயங்கிட்டு இருக்குன்னு.. புரிஞ்சுக்கட்டுமே”

“ஆனா, இவளைத் தனியா எப்படி அனுப்புறது சார். புரியாத சூழல் தெரியாத மனிதர்கள்” அம்மா.

“அம்மா. இவ சொன்னதுல இருந்தே புரிஞ்சுக்க முடியுது இன்ஸ்பெக்டர் கீதா கூட இவ எந்தளவுக்கு ஒன்றிப் போயிருக்கான்னு. அதனால எந்தப் பிரச்சனையும் வராது. கவலைப்படாதீங்க. இது எல்லாத்தையும் தாண்டி ஜானகி ஒரு முன்னுதாரணமா இருக்கட்டும்”

“ஆனா, மூணு நாள் ஸ்கூல் லீவ் கிடைக்கணுமே..” அம்மா.

யோசனையோடு கமிஷனர், “ம்ம் ஒரு நிமிஷம்..”

ஜானுவிற்கு மூன்று நாளைக்கான விடுமுறைக் கடிதத்தைக் கமிஷனர் தன் கைப்பட எழுதிக்கொடுத்தார்.

அதை அப்பாவிடம் கொடுக்கும்போது இப்படிச் சொன்னார்.

“எனக்கு ஜானகி கேட்டதை மறுக்க விருப்பம் இல்ல. மறுப்பதற்கான காரணங்களும் இல்ல. நீங்க கவலைப்படாதீங்க. பார்ப்போமே அவ என்ன செய்றான்னு”

அம்மாவும் அப்பாவும் அமைதியாக இருந்தார்கள்.

கமிஷனர் தொடர்ந்தார்.

“ஜானகி. நீ என்ன யோசிச்சு இப்படி ஒன்னைக் கேட்டன்னு எனக்குத் தெரியாது. ஆனா, நீ சரியாத்தான் யோசிச்சிருப்பாய்ன்னு நான் நம்பறேன். அடுத்து வரப்போற மூணு நாள் நீ போலீஸ். சந்தோசமா?”

“ரொம்ப மகிழ்ச்சி சார். Thankyou..”

***

அடுத்த நாள் காலை.

காவல் நிலையம்.

இன்ஸ்பெக்டர் கீதாவின் அறை.

அப்பா ஜானுவைக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் விட்டுவிட்டு வெங்கடேசன் சாரிடம் பேசிச் சென்றார்.

இன்ஸ்பெக்டர் கீதா இன்னும் வந்திருக்கவில்லை.

இன்ஸ்பெக்டர் அறையில் ஜானுவுக்கென்று தனியாக டேபிளும் சேரும் போடப்பட்டு இருந்தன.

ஜானு அவளின் பேக்கை டேபிளுக்கு அருகே கீழே வைத்துவிட்டு அமைதியாகப் போய் சேரில் உட்கார்ந்து கீதாவின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

உட்கார்ந்தபடியே அறையைச் சுற்றிலும் பார்த்தாள்.

அப்போது இவளின் இடது புறத்திலிருந்த சுவர் ஜன்னலின் மேல் பார்வை பதிந்தது. அங்கே ஒரு கருப்பு நிறப் பறவை அங்குமிங்கும் நகர்ந்து நகர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தபடியே இருந்தாள் இவள்.

சிறிது நேரத்தில்.. இன்ஸ்பெக்டர் கீதா அறைக்குள் நுழைந்தார்.

கீதாவைப் பார்த்த ஜானு சட்டென்று எழுந்து நின்று விஷ் பண்ணினாள்.

“குட்மார்னிங் கீதாக்கா”

“Hey ஜானகி குட்மார்னிங் .. சிட் சிட்”

ஜானு உட்கார்ந்து கொண்டாள்.

கீதா அவரின் இருக்கையில் அமர்ந்து அலைபேசியைக் கையில் எடுத்தார்.

பின் ஜானுவைப் பார்த்து, “ஒரு நிமிஷம்”

கொஞ்சம் நேரம் அலைபேசியைப் பார்த்துவிட்டு.. பின்பு அதை டேபிள் மேல் வைத்துவிட்டு ஜானுவின் பக்கம் திரும்பி.. மென்மையான குரலில், “ஜானகி ..”

“கீதாக்கா …”

இருவரும் பரஸ்பரப் புன்னகை.

“நான் இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. அன்னைக்கு சட்டுனு எங்கிருந்தோ வேகமா ஓடி வந்த.. எங்க எல்லாரையும் அவசரமா உன்கூட கூட்டிட்டுப் போன.. இன்னிக்கு.. இப்போ.. இங்க இருக்க”

ஜானு அமைதியாகப் புன்னகைத்தாள்.

“உன்னோட ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் தெரியுமா?”

“தெரியும் கீதாக்கா”

“எல்லாரும் என்ன சொன்னாங்க?”

“எல்லாரும் செம்ம ஹேப்பி”

“ம்ம் குட்.. என்ன க்ளாஸ் படிக்கிற?”

“ஃபோர்த் ஸ்டாண்டர்ட்”

“உனக்கு உன் அம்மா அப்பா இல்லாம இங்க தனியா இருக்க பயமா இல்லையா..?”

“இல்ல கீதாக்கா”

“ம்ம்..”

ஜானு புன்னகை.

“உனக்கு ஏன் இதைச் செய்யணும்னு தோணுச்சு..?”

சட்டென்று.. பயங்கர அமைதியாகி கீதாவைப் பார்த்தாள் ஜானு.

இந்தக் கேள்வியை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

இந்தக் கேள்விக்கு அவளுக்குப் பதில் தெரியவில்லை. தான் இதை எதற்காகச் செய்ய நினைத்தோம் என்று அவளுக்குத் தெரியவில்லை..

அமைதியாகவே இருந்தாள்.

அந்த ஜன்னல் பறவையைத் திரும்பிப் பார்த்தாள். அது அங்கு இல்லை.

மீண்டும் கீதாவின் பக்கம் திரும்பினாள். அதே அமைதியோடு.

இவளின் அமைதியைப் புரிந்துகொண்ட கீதா தொடர்ந்தார்.

“Hahaa சரி அதை விடு”

“ம்ம்” தலை அசைத்தாள் ஜானு.

“மூணு நாள்”

“ஆமா கீத்தாக்கா”

“இந்த மூணு நாள் நீ என்கூட தான் இருக்கப்போற”

“ஓகே ..” சந்தோஷமாக

“ம்ம் .. இல்ல .. இப்படி எடுத்துக்கலாம் .. இந்த மூணு நாளும் நான் உன்கூட தான் இருப்பேன்”

“ரெண்டும் வேற வேறயா கீத்தாக்கா..?”

“ஆமா..”

கீதாவுக்குச் சிரிப்பு வந்தது ஜானு இப்படிக் கேட்டது.

பேசி முடித்த கீதா டேபிள் மேலிருந்த ஏதோ ஒரு கோப்பினைத் திறந்து படிக்க ஆரம்பித்தார்.

கொஞ்சம் நேரம் அமைதியாகச் சென்றது.

ஜானு மீண்டும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலமாரி.. மின் விசிறி.. கோப்புகள்.. தொலைபேசி அழைப்புகள்.. அறைக்குள் வந்து சென்ற மற்ற காவலர்கள்.. ஜன்னல்.. கீதாக்கா .

இன்னும் கொஞ்சம் நேர அமைதிக்குப்பின் தயக்கத்தோடு ஜானு கேட்டாள்.

“நான் இப்போ என்ன செய்யட்டும்..?”

கீதா புன்னகை.

“உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செய்யலாம்”.

“நான் வெளிய போய்ப் பார்க்கட்டுமா?” ஜானு.

“ம்ம் .. பாரேன்”

“ஓகே..”

ஜானு எழுந்து இன்ஸ்பெக்டர் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அங்கே இருந்த எல்லாரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

நடு அறையில் நின்று பார்த்தாள் இவள்.

வெளியாட்கள் வருவதும் போவதும்.. அவர்கள் இங்குள்ள காவலர்களிடம் பேசுவதும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன.

சுற்றி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஜானுவின் கண்கள்.. அந்த அறையின் ஒரு ஓரத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணின் மேல் பதிந்தது.

கீதாவின் அறையைத் திரும்பிப் பார்த்த ஜானு மெல்ல நடந்து அந்தப் பெண்ணின் அருகில் போனாள்.

அந்தப் பெண் தன் மடியில் ஒரு கைக்குழந்தையை வைத்திருந்தாள்.

அவளின் அருகில் பெஞ்சில் உட்கார்ந்தாள் ஜானு.

அந்தப் பெண்ணிடமிருந்து வெளிப்பட்ட ஒரு மெல்லிய நடுக்கத்தை ஜானுவால் உணர முடிந்தது.

அவள் யாருக்காகவோ எதற்காகவோ பயப்படுகிறாள் என்று தோன்றியது இவளுக்கு

மெல்லிய குரலில் அந்தப் பெண்ணிடம் பேசினாள்.

“நீங்க யாருக்காகவாவது வெயிட் பண்றிங்களா..?”

இதை அந்தப்பெண் எதிர்பார்த்திருக்கவில்லை போலும். இவளைத் திரும்பிப் பார்க்காது ஒரு மெல்லிய அசைவை வெளிப்படுத்தினாள் அவள்.

“என் பேர் ஜானகி”

இதைக் கேட்டு அந்தப்பெண்.. குனிந்திருந்த தலையை இன்னும் நன்றாகக் குனிந்து கொண்டாள்.

“நான் இங்க மூணு நாள் வருவேன்.. இன்னிக்குத்தான் முதல் நாள்”

“.”

“உங்களோட பேர் என்ன..?”

“.”

மடியில் இருந்த குழந்தையைப் பார்த்த ஜானு.

“பாப்பா பேரு..?”

இவள் பேசுவது எதையும் தான் கேட்டுவிடக்கூடாது என்றும் இவளின் வார்த்தைகள் எதுவும் தனக்குள் ஊடுருவிவிடக்கூடாது என்றும் அந்தப்பெண் உறுதியாய் இருப்பது ஜானுவுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ஜானு.. அமைதியாக அந்தப் பெண்ணின் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள்.

கொஞ்சம் நேரத்துக்குப்பின் ஒரு காவலர் அந்தப்பெண்ணை அழைத்தார்.

உடனே எழுந்து.. தன் புடவைத் தலைப்போடு அந்தக் குழந்தையைச் சேர்த்துத் தூக்கியபடி அந்தக் காவலரிடம் சென்றாள் அந்தப்பெண்.

பின் ஏதோ ஒரு பதிவேட்டில் கையெழுத்திட்டாள்.

ஜானு அப்போதுதான் கவனித்தாள்.. அந்தப்பெண் தன்னுடைய வலது உள்ளங்கையில் கட்டுப் போட்டிருந்தாள்.

கையெழுத்துப் போட்டு முடித்துவிட்டு அழுத்தமான வேகத்தோடு வாசற்கதவை நோக்கி நடந்தாள் அந்தப்பெண்.

ஜானு வேகமாக எழுந்து அந்தப் பெண்ணின் பின்னால் போனாள்.

அவள் படிகளிறங்கி அதே வேகத்தோடு வெளியே சென்று மறைந்துவிட்டாள்.

ஜானு வாசற் கதவருகே நின்று அந்தப் பெண் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் சில நிமிடங்கள்

அப்போது பின்னாலிருந்து கீதாவின் குரல் கேட்டது

“ஜானகி ..”

சட்டென்று கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள் ஜானு 

“கீதாக்கா”

“நாம வெளிய போறோம். திரும்பி வர்றதுக்குக் கொஞ்சம் நேரம் ஆகும். ஏதாவது எடுக்கணும்ன்னா எடுத்துக்கோ..”

“ஓ வெளிய போறோமா..”

குதூகலமாக ஓடிப்போய் அவளுடைய தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதே வேகத்தோடு ஓடி வந்தாள்

கீதா வெளியே ஜீப்பின் அருகே நின்று கொண்டிருந்தார்

வெங்கடேசன் சார் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தார் 

“எங்க போறோம்” ஜானு

“ஹாஸ்பிடல்க்கு”

(ஜானு தொடர்வாள்…)

kritikadass86@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button