
தேவகுமாரனுக்குள்ளிறங்கிக் கொண்டிருக்கும் ஆணிகள்
பரிசுத்தமான ஆன்மா
தன் அப்பத்தைப் பிரித்துக்கொடுப்பதற்கு முன்பு ஜெபிக்கிறது.
காட்டிக்கொடுக்கும் மனது அந்த இடைவெளியில் தான்
வளர்ந்து நிற்கிறது.
*****
தேவகுமாரன் தனக்குள்ளிறங்கிக் கொண்டிருந்த ஆணிகளை
ஒரு முறை நன்றாகப் பார்த்து சிரித்துக் கொண்டார்,
அவை ஏற்படுத்தப் போகும் பெரிய காயங்களைத் தான்
இந்த உலகம் அழியும் வரை பேசிக்கொண்டிருக்கப் போகிறதென.
உயிர்பித்தலுக்குப் பிறகும்
அந்த ஆணிகளுக்கு அது அதிசயமென்பதேத் தெரியவில்லை.
*****
தேவகுமாரன்
தன் ஆடுகளுக்கு உலகை மெள்ளக் கற்றுக்கொடுத்தார்
அது அவருக்கு
மீண்டும் உலகை உருவாக்கச் சொல்லிக்கொடுத்தது.
காந்தியைக் கொல்வது மிக எளிது.
காந்தி என்பவரை முதலில் கொல்ல முயன்றவர்கள்
இரண்டாவதாகக் கொல்வதற்குக் குறிபார்த்தவர்கள்
மூன்றாவதாகச் சரியாகக் கொன்றவர்கள்
என அனைவருமே
வரலாற்றிலிருக்கும் அவரைக் கொல்லமுடியாமல்
மிகுந்த வருத்தங்களிலே செத்துப் போனார்கள்.
*****
தாக்கப்பட்டுக் கிடப்பது
ஒரு மனிதனோ
ஒரு மதமோ
ஒரு சிந்தாந்தமோ
அல்ல
முழுவதுமாக எரிந்து முடிந்திருப்பது
ஒரு குடிலின் கூரையோ
ஒரு ட்ராம் வண்டியோ
ஒரு நகரமோ
அல்லவே அல்ல
தேசத்திற்கு முழுவதுமான மக்களின் இதயத்துகள்கள் அவை.
தேசப்பிரிவினையில் கிழிந்து கிடந்த பெரும் நீளத் துணியை
மீதமிருக்கும் ஒவ்வொரு மனித உடல்களுக்கும் சுற்றி விடுகிறார்
காந்தி.
தேசம் புது நிறத்தினில் தன் தேசப்பக்தி பாடல்களைப்
பாடத்துவங்குகிறது.
*****
காந்தி
தன் கிழிந்த துணிகளுக்கு தையல் போட்டுக்கொண்டிருக்கிறார்.
அவரின் பார்வைகள் மங்கித் தன் சதைகளையும் சேர்த்து வைத்து
தைத்து முடித்திருந்தார்.
தேசத்தின் புராதனச் சின்னத்தில் ஒன்றை
அதிலிருந்து தான் பிரித்தெடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறோம்.