
அன்றுதான் டோனியை முதல் முறையாக பார்த்தது . எங்கள் புதுப்படத்திற்காக போடப்பட்டிருந்த அலுவலகத்திற்கு அதைக்கொண்டு வந்திருந்தனர். இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் இந்த பத்து ஆண்டுகளை எப்படிக் கடந்துள்ளேன் என்பதை யோசிக்க விழைகிறேன். மனதிற்குப் பிடித்த வேலையை செய்துள்ளேனா என்று கேட்டால் தெரியாது. ஆனால், வாழ்க்கையைக் கெடுக்காத வகையில் கடந்திருக்கிறேன். இப்போது மனதிற்குள் சினிமா கனவுகள் துளிகூட கிடையாது. புதிய திரைப்படங்கள் பார்ப்பது கூட குறைந்து விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் இப்படி இருந்திருப்பேனா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை. சினிமா பித்தேறி திரிந்து கொண்டிருந்த காலகட்டம். சினிமாவில் அறிமுகம் ஆவது கடினம் என்றால் அதற்கு எதிர் திசையில்தான் சம்பவங்கள் எனக்கு நடந்தேறியது. எப்போது எனக்குள் சினிமா ஆசை வந்தது என்று சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால், வந்த நாள் நல்ல நாளாக இல்லை என்று இப்போது நினைத்துப் பார்க்கையில் கூட தோன்றுகிறது. ஏனோ மனதிற்குள் ஒரு வித நிம்மதி. அதிக காலங்கள் அதில் செலவிட்டுத் திரும்புவதை விட சில மாதங்களிலேயே தெரிந்துகொண்டு எந்த வித கூச்சமுமின்றி வெளியேறிவிட்டேன். எது பிடித்திருக்கிறதோ அதைச் செய்ய நினைத்தேன் பின்னர்தான் புரிந்தது. எது பிடிக்கிறது என்பது ஒன்றானால் நமக்கு எது வரும் என்பது ஒன்று. அப்படி எனக்கு சினிமா வரவில்லை என்றும் பிடிக்க மட்டும்தான் செய்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.
இப்போது மீண்டும் எனது இயக்குநரிடமிருந்து வந்த அழைப்பே இதையெல்லாம் நினைத்துப் பார்க்க தூண்டுகிறது. அங்கே எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்று நினைத்துப் பார்க்கையில் அவரின் அலைபேசியை எடுக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த இயக்குநர் எனக்கு செய்ததற்கு அவரைக் கொன்று விடலாம் என்று கூட அங்கிருந்து வெளியேறிய பின் யோசித்திருக்கிறேன். இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் எனக்கு தோல்வியே கிடைத்தது ஆகையால் அதை கைவிடும் சூழல். பின் அதற்கான மனநிலையில் இருந்து வெளியேறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இன்றளவும் அந்த ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை செயல்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது ஏனோ எழுகிறது. அதைத் தடுத்துக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் .
அவர் அப்படி என்ன செய்தார் ? கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பதை பின்னர் தெரிவிக்கிறேன். ஆனால், அதை மீறி அவரின் அழைப்பை நான் எடுத்ததற்கு காரணம் டோனிதான். டோனியுடனான உறவு மட்டுமே அந்த பதினோரு மாதங்களில் நான் கொண்டு வந்த சந்தோசமான ஒரே விசயம். அவன் குரலை நான் மீண்டும் கேட்க முடியுமா ? அவன் இன்றும் இயக்குனரிடம்தான் இருக்கிறானா? உயிரோடு இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்னை அடையாளம் கண்டுகொள்வானா? அப்படி அடையாளம் கண்டுகொண்டால் என்னை எப்படி வரவேற்பான் ? என்று மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக்கொண்டே இருக்க இயக்குநரின் போனை எடுத்தேன். அந்த நிகழ்விற்குப் பிறகு இயக்குநர் டோனியை பார்க்க என்னை அனுமதிக்கவே இல்லை. ஒரு வேளை அன்று அனுமதித்திருந்தால் இயக்குநர் துறையிலேயே கூட இருந்திருப்பேன். அப்படி என்ன என் மீது அவருக்கு கோபம் என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எழுவது போல உள்ளது. அவரிடம் அனைத்திற்குமான பதில் இருக்கும். இல்லை என்றும், பரவாயில்லை என்றும் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவர் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் கவனத்தில் இல்லை டோனியின் குரலை கேட்டிட முடியுமா என்றுதான் தோன்றியது. அவர் பேசிக்கொண்டிருந்த போதே டோனியின் குரல் கேட்கத் தொடங்கியது. பத்து மாத குழந்தையாக இருக்கும் போது வெளிப்பட்ட அதே குரல்தான். எப்படி இது சாத்தியமாகும். நான் என்பதை அறிந்து கொண்டு அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்றே பத்து மாதக் குரலாக மாற்றி குரைக்கிறதா என்று கூடத் தோன்றுகிறது. இப்படி அது நினைத்ததோ இல்லையோ ஆனால், நான் டோனியின் குரலை கண்டுபிடித்து விட்டேன் என்கிற மகிழ்ச்சியில் இயக்குநர் என்ன பேசினார்..பேசுகிறார் என்பதை இப்போது புரிந்து கொள்ள முயன்றேன். அவர் டோனியை என்னிடம் கொடுக்க விரும்புவதாகச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. என்னை ஒரு போதும் இயக்குநர் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் இதுவரை நம்பியிருந்தேன் ஆனால், இன்று அவரிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று நினைத்து கூடப் பார்க்கவில்லை. அவர் என் காதில் விழுந்ததைத்தான் சொல்கிறாரா என்று மீண்டும் கூர்மையாக கவனித்தேன். ஆமாம்; அவர் அப்படித்தான் சொல்கிறார். டோனியை கொடுக்கிறேன் வந்து வாங்கிக்கொள் என்றார் மீண்டும். இப்பொழுது முழு சுய நினைவுடன் சரி என்று துள்ளிக் குதித்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்து டோனியை பார்க்க போகும் ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் டோனி…டோனி… என்று கத்திக் கொண்டிருந்தேன். இயக்குநரிடமிருந்து, அவர் தற்போது இருக்கும் இல்லத்தின் முகவரியை வாங்கிக்கொண்டேன். டோனியும் அதை தன் குரலில் சந்தோசமாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது.
இயக்குநரின் குரல் முன்பிருந்ததை விட நிறையவே மாறியிருந்தது. அவரின் முதல் படத்திற்குப் பிறகு அவரின் இரண்டாவது படம் இதுவரை வெளிவரவேயில்லை. அவருக்கு நான் டோனியின் மீது வைத்திருந்த அன்பு இன்று புரிந்ததா இல்லை, இவ்வளவு நாட்கள் அது தெரிந்திருந்தும் மறைத்திருந்தாரா என்று தெரியவில்லை. எப்படி என்னுடைய நம்பரை வாங்கினார் என்றுதான் யோசிக்கிறேன். இப்போதும் அந்த குரலில் ஜோல்ட் என்கிற மந்திரம் மறைந்திருக்கிறதா என்று தோன்றுகிறது. அது மறைந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசி நாளில் டோனி பிழைத்ததா என்று கேட்டும் சொல்லாமல் என்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்தி துரத்தி விட்டனர் அங்கிருந்து. அந்த நாள் முதல் இன்று வரை டோனி உயிரோடு இருக்க வேண்டும் என்று எவ்வளவு பிரார்த்தனை செய்திருப்பேன்?
இயக்குநர் அப்போது முதல் பட வெற்றியில் இருந்தார். அவரின் படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டது. இந்த டிஜிட்டல் எராவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்கிற பெருமையையும் பெற்றது. எங்கு திரும்பினாலும் இயக்குநரின் பேட்டிகள்தான் நிரம்பி வழிந்தது. ஒரே படத்தில் இயக்குநராக துடித்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற பலருக்கு அவரின் பேச்சு வேத வாக்காக மாறியது. ஒரு படத்தை வைத்து முடிவு செய்யக் கூடாது என்று ஒரு கூட்டம் அவரை எதிர்த்துப் பேச, மற்றொரு கூட்டம் நூறு ஆண்டுகள் கடந்தும் இந்த ஒரு படம் அவரின் புகழைப் பேசும் என்று வாதிட்டுக் கொண்டனர். இறுதிக் காட்சியில் அப்படத்தின் திரைக்கதையையே திருப்பிப் போட்டு அனைவரது மனதையும் கவர்ந்ததுதான் அந்தப் படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். அந்த ஒரு காட்சி அப்படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு போய் நிறுத்தியது. அந்த உண்மை பலரை நெருக்கமாகச் சென்றடைந்தது. அந்த நெருக்கமே அவரின் பெயரை உலகறியச் செய்து மாபெரும் வெற்றியைக் கொடுத்திருந்தது. இப்படி அவரின் அடுத்த படத்திற்கு உதவி இயக்குநராகச் சேர எண்ணற்ற விண்ணப்பங்களில் இருந்து நான் எப்படி தேர்வு செய்யப் பட்டேன் என்று அப்போது புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது அவர் எடுக்க போகும் அடுத்த படம் நாய் சம்பந்தப்பட்ட கதைக்களம் என்று. அது தான் லீட் கூட. என்னுடைய ரெஸ்யூமில் ‘இன்ட்ரஸ்ட்’ என்பதில் எதேர்ச்சியாக டாக்ஸ் என்று குறிப்பிட்டதுதான் என்னை சேர்த்துக் கொள்ள காரணம் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். அப்படி சுலபமாக உதவி உயக்குநர் அந்தஸ்துக்கு முன்னேறியிருந்தேன்.
எங்கள் அலுவலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையைச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த வார்த்தைக்கு பெயர் ‘ஜோல்ட்’. அதற்கான அர்த்தம் முதலில் பிடிபடவில்லை. இப்போதும் அதற்கான அர்த்தம் புரியவில்லை, அதை எவ்வளவோ முறை புரிந்துகொள்ள முயன்றும் என்னால் அதன் உண்மையை நெருங்க முடியவில்லை. எப்போதும் எங்கள் இயக்குநர் பயன்படுத்தும் வார்த்தையே அந்த ‘ஜோல்ட்’. உதவி இயக்குநராகச் சேர்ந்த பின் கூடும் முதல் கூட்டத்தில் அவருக்கு கொஞ்சம் முதல் படத்தின் வெற்றி மண்டையில் ஏறியிருந்ததை அவரின் உடல் மொழியில் பார்க்க முடிந்தது. இருந்தும் நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை. அந்த வெற்றியில் ஜெயிப்பதற்கான வழிகளை அவர் பாடம் எடுக்க வேறு தொடங்கியிருந்தார். அந்த முதல் நாளிலிருந்து நான் அவரிடமிருந்து வெளியேறி வந்த கடைசி நாள் வரை அந்த ஜோல்ட் என்னைத் துரத்தியது இல்லை கொல்லத் தொடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். திரைக்கதை விவாதத்தின் போது என்ன சொன்னாலும் அதில் ஜோல்ட் இல்லை. இந்த எடத்துல ஜோல்ட் வேண்டும் என்று சொல்வார். ஜோல்ட்…ஜோல்ட்… ஆபீசை சுற்றிக் கொண்டேயிருந்தது. உடன் இருந்தவர்கள் எதையோ சொல்ல ‘அதான் ஜோல்ட் அப்படிதான் இருக்கனும்’ என்பார். நான் இன்னும் குழம்பி விடுவேன். அவர் மூன்று வரி பேசுகிறார் என்றால் அதில் ஜோல்ட் என்கிற வார்த்தை கண்டிப்பாக இருக்கும். அப்போது என்னளவில் புரிந்து கொண்டது என்னவென்றால் திடுக்கிடும் காட்சி, பார்வையாளர்களை உறைய வைக்கக்கூடிய காட்சி அதுதான் ஜோல்ட். ஆனால், எங்கள் இயக்குனரின் ஜோல்ட் எது என்று என்னால் கடைசிவரை புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த புரிந்து கொள்ள முடியாத தன்மை என்னை விவாதத்தின் போது மௌனமாக்கியது. இரண்டு மூன்று முறை இயக்குநர் அதை கவனிக்கிறார் என்பது தெரிந்தும் என் நிலை தொடர்ந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களும் ‘இப்படியே இருந்தா உன்ன தூக்கி போட்ருவாரு’ என்று கண்டிக்கத் தொடங்கினர். அப்போதுதான் டோனியை எங்களின் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர் .
எங்கள் இயக்குநர் கதையின் உண்மைத்தன்மைக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மெனக்கெடுவார் என்பதை அந்த காலகட்டங்களில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த மெனக்கெடல் எல்லாவற்றிலும் தொடர்ந்தது. அப்படிதான் டோனி வந்தான். என்னதான் திரைக்கதையில் அன்பாக இருக்கிறோம் என்று எழுதினாலும், நாம் அப்படி ஒரு நாயுடன் கண்டிப்பாகப் பழகியிருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பத்து மாத குட்டியாக டோனி எடுத்துவரப்பட்டான். பின்நாட்களில் டோனி எங்கள் அலுவலகத்திலேயே இருந்தான். அனைவருடன் பழகினாலும் என்னுடன் அவன் தனிப்பட்ட முறையில் அன்பாக இருப்பதாக அங்கிருந்த அனைவருக்கும் அவனே தெரியப்படுத்தினான். நான் சொல்வதை மட்டுமே செய்வான். எப்போது நான் அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் என்மீது ஏறிக்கொள்வான். அவனுடைய கருப்பு வெள்ளை ரோமங்கள் என் துணியில் எப்போதும் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு என் மீதே கிடப்பான். விவாதங்களின் போது கூட அருகில் வந்து அமர்ந்து கொண்டு முன்னங்காலை தூக்கி தொடை மீது போடுவான். வாயில் ஊரும் எச்சிலை கால் பாதங்களில் சிந்துவான். அவனுக்கு பெயர் கூட நான் சொல்லிதான் வைத்தனர். சொல்லப்போனால் அங்கிருப்பவர்கள் அனுமதியோடு வைத்தது கிடையாது. அது நான் டோனி என்று கூப்பிட்டால் மட்டுமே வரும். அதுவரை எல்லோருக்கும் பாடம் எடுத்துக்கொண்டிருந்த இயக்குநருக்கு டோனி முதல் முறையாக அந்த செயலின் மூலம் பாடம் எடுத்ததாகப்பட்டது. சென்னை எனக்கு அறிமுகம் இல்லாத நகரம். அப்போது என்னுடைய தனிமைக்கும் வேலை சார்ந்த தலைவலிக்கும் டோனிதான் மருந்தாக இருந்தான் என்று சொல்ல வேண்டும். நான் அவனுடன் ஒரு கட்டத்தில் பேசுவதை பார்த்து உடனிருப்பவர்கள் கேலி செய்யும் அளவுக்கு முற்றிப்போனது என்றுதான் சொன்னார்கள். இதற்கு நடுவில் கதை விவாதங்கள் சூடாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்னுடைய கவனத்தையெல்லாம் டோனி எடுத்துக் கொண்டான். நான் முழுவதுமாக திரைக்கதையில் இருந்து வெளியேறியிருந்தேன். அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தேறியது. ஒரு நாள் என்னுடன் அதிகமாகப் பழகும் டோனியை குடிபோதையில் இயக்குநர் மாடியிலிருந்து வீசியெறிந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் பதறி அடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு ஓடினேன் .
அலுவலகம் எப்போதும் போலதான் இயங்கிக்கொண்டிருந்தது. என்னுடைய பதட்டத்தில் யாரும் அங்கு பங்கெடுத்துக்கொள்ளவே இல்லை. கண்கள் டோனியையே தேடியது. எப்போதும் அது இருக்கும் இடத்தில் இல்லை. அப்படியானால் கேள்விப்பட்ட செய்தி உண்மை தானா ? ஏன் இந்த இயக்குநர் இப்படி செய்ய வேண்டும் என்று மனம் பதட்டமடைந்தது. இந்த சம்பவம் பொய்யாக இருக்கக் கூடாதா என்று ஏங்கியது. மனதிற்குள் டோனி…டோனி…என்று சொல்லிக்கொண்டேன். இயக்குநரும் அங்கு இல்லை, அலுவலகத்தில் இருப்பவர்கள் நீ கேள்விப்பட்டது உண்மைதான் என்றனர். டோனி வீசப்பட்ட இடத்தில் சிதறியிருந்த ரத்தம். கண்டிப்பாக அது பிழைக்க வாய்ப்பே இல்லை என்பது போல சிகப்பேறியிருந்தது. நான் எந்த பெட்ஸ் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க என்றதற்கு ‘இயக்குநர் உன்னை இங்கே இருக்க சொன்னார்’ என்று அலுவலகத்திலேயே என்னை அமர்த்திவிட்டனர். எனக்கு மனம் முழுவதும் டோனி பிழைத்து விட வேண்டும் என்றுதான் இருந்தது. இயக்குநர் வந்தார் நான் நின்றிருப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் சென்றார். அவர் பின்னாலேயே சென்றேன். அவரும் நான் அப்படி இருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார் போல. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். நான் ‘டோனி எப்படி இருக்கு சார் ..’ என்று கேட்ட கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. நான் நிறுத்துவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட இயக்குநர் ஹாலின் நடுவில் நின்று என்னிடம் ‘அதக் கேட்டு நீ என்னா புடுங்கப் போற’ என்றார். எனக்கும் கோபம் ஏற ‘என்ன மயித்துக்கு நீ தூக்கிப் போட்ட’ என்று பதில் சொல்ல, சுற்றி இருந்தவர்கள் திகைத்து விட்டனர். என் பேச்சு எப்படி இன்னும் இயக்குநரை சூடாக்காமல் இருந்திருக்கும்?.
என் சட்டையைப் பிடித்துக்கொண்டு ‘அந்த நாய் செத்து போச்சு. இந்த நாயையும் சாகடிக்கப் போறேன் ‘ என்று சொன்னதும், அவரை அடிக்க ஓங்கின கைகளை சுற்றி இருந்த உதவி இயக்குநர்கள் தடுத்துவிட்டனர் .
அடுத்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் இருவரும் கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தினோம். இரண்டு மூன்று பேர் சேர்ந்து என்னை அடிக்கவும் தொடங்கினர். அலுவலகத்திலிருந்து நான் வெளியேறும் போது, ‘மயிராண்டி, சினிமால நீ என்ன புடுங்குறேனு பாக்குறேண்டா’ என்று கத்திக் கொண்டிருந்தார். என்னை அலுவலகத்தின் முன் வாசலில் வந்து தள்ளிவிட்டனர் .
அன்றோடு சினிமா மீதான எல்லா கனவுகளும் கலைந்தது. எல்லாம்…எல்லாம்… அதன் பிறகு அப்பா நடத்திக்கொண்டிருந்த வேலையை எடுத்து நடத்தத் தொடங்கினேன். நாட்கள் நன்றாக ஓடியது. அடிக்கடி டோனியின் நினைவு தோன்றும். அந்த கருப்பு வெள்ளை ரோமங்கள் ஒட்டிக்கொள்ளும் அளவு அது விளையாடும் நினைவு இன்னும் மனதில் பதிந்துதான் இருந்தது. காலம் போகப் போக இயக்குநர் ஏன் அப்படி செய்தார் என்று கேட்பதையும் நிறுத்தியிருந்தேன். சிலர் அப்படித்தான் என்று வாழ்க்கையில் மறக்க வேண்டிய நிகழ்வுகளில் அதை வைத்து மீண்டும் நினைவுக்கு வராத படி வாழ்ந்து கொண்டிருந்த என்னை அதே இயக்குநரின் குரல் எல்லாவற்றையும் நினைவு கூற வைத்திருக்கிறது.
காரை அவர் கொடுத்த முகவரிக்கு முன் நிறுத்தினேன். பழைய வீடாக இருக்கக் கூடும். எங்கள் இயக்குநருக்கு முதல் பட வெற்றியின் போது தயாரிப்பாளர் கொடுத்த கார் இருக்கிறதா என்றுதான் முதலில் கண்கள் தேடியது. அது அங்கு இருப்பதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை. அவருடன் கடைசி நிகழ்வின் போது போட்ட சண்டை கண்முன் தோன்றிக் கொண்டேயிருந்தது . நான் என்ன கேட்டேன்? ‘ஏன் அந்த வாயில்லா ஜீவன இப்படி ‘ என்றுதானே கேட்டேன் அதற்கு என் மீது அவர் தொடுத்த வார்த்தைகள் இன்றும் மனதை கொன்று கொண்டுதான் இருக்கிறது.
வீட்டின் கதவு திறந்தேயிருந்தது. மனதிற்குள் அவருடன் எந்த ஒரு உரையாடலும் நிகழ்த்தாமல் டோனியை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட வேண்டும் என்று தோன்றியது. முகம் கொடுத்து பேச மனம் ஏனோ ஒப்பவில்லை. நான் பாதி திறந்திருந்த கதவை முழுவதுமாக திறந்ததுதான் நேரம்; டோனி என் வாசனையை அறிந்தவனாய் தோளின் மீது தனது முன் கால்களை போட்டு தொற்றிக்கொண்டான். சந்தோச மகிழ்ச்சியில் ஆரம்பத்தில் நான் சரியாக கவனிக்கவில்லை, பின்னர்தான் தெரிந்து கொண்டேன் டோனியின் உடம்பெல்லாம் ரத்தக் கறை படிந்திருந்தது. அதை அறிந்து அவனிடமிருந்து விலகி அவன் ஓடி வந்த இடங்களில் இருந்த ரத்தத்தை தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். ரத்த வாடை நாசியை ஏதோ செய்து கொண்டிருந்தது. மூக்கை மூடிக்கொண்டு அதன் திசையில் சென்ற எனக்கு கழுத்தின் சதை தரையில் சிதறிக்கிடக்க உடம்பெங்கும் கீறல்களுடன் மூச்சில்லாமல் கிடந்த இயக்குநரை பார்க்கையில் வேர்க்கத் தொடங்கியது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டம் கொள்ளத் தொடங்கிய உடலையும் மனதையும் பழைய சம்பவங்கள் இயல்பு நிலைக்கு திருப்பியது ..இறந்து கிடந்த உடலைப் பார்த்து மனம் ‘இது தான்டா ஜோல்ட்’ என்று சொல்ல அதை ஏற்றுக்கொண்டவன் போல குறைத்தான் டோனி . அதை நினைத்து நினைத்து வாய் விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் .
******