
தனியன்
பிழைப்பு நிமித்தம்
வெளியூர் வந்தவன்
ஆறு மணிக்கு மேல் ஏதேனுமொரு
தேநீர் கடை வாசலில்
நண்பர்கள் விலகிச்செல்ல
தனித்து விடப்படுகிறான்.
சாவியை அவனது ஆட்காட்டி
விரலென பாவித்து
உள்ளிழுத்துக் கொள்ளும்
அவனது ஒற்றை அறை
அவனுக்கு அன்னையின்
மடியாகிறது.
நிசியில் துர்கனவொன்று
திடுக்கிட்டு எழுப்ப
அலைபேசியில் அவனது
குழந்தையின் படத்தை
தேடி எடுத்து தூக்கம்
தொலைக்கிறான்.
அவனது தனிமைபோக்க
நீங்கள் அவனுடன்
உரையாடத் தேவையில்லை.
நாளை அலுவலகத்தில்
சற்றே அவன் கண்ணயருகையில்
“வேலை கிடைப்பதே
எத்தனை பெரிய விஷயமென”
நினைத்தபடி ஏளனமாய்
முகம் சுளிக்காதீர்கள்.
***
கதை கதையாம்…
வாழ்ந்து கெட்டவனொருவன்
நிறை போதையில்
பாலத்தின் ஓரத்தில்
உளறியபடி புரள்கிறான்
கடந்து செல்லும் யாருக்கும்
அவனது புலம்பல் புரிந்திடவில்லை.
கரையோர கோரைகள் மட்டும்
காற்றிலசைந்து அவன் கதையை
கேட்டுக் கொள்கின்றன.
சுரண்டப்பட்ட ஆற்றின்
நீரோடிய காலங்களை
நதியோரக் காற்று
மறுமொழியக்கூடும் அது
ஆழ் நித்திரைக்கு
சென்று கொண்டிருக்கும்
அவனுக்கு மட்டுமே
புரிந்திடவும்கூடும்.
***
காலம்
பின்பனிக் காலத்தில்
குளிர்ந்த உன் வாசலை
சுத்தம் செய்திட
உயர்த்திக் கட்டிய
கொண்டையுடனும்
முற்றிலும் விலகிடாத
தூக்கத்துடனும்
கதவு திறக்கும் உன்னை
மெல்ல மேலெழும்பும் சூரியன்
தரிசிக்கிறது
அன்று முதல்தான்
இன்னொரு பருவத்தையும்
துவக்கி வைக்கிறது.
***
விழித்திருக்கும் இரவு
காய்ச்சல் கண்ட
குழந்தையின் நெற்றியில்
கை வைத்துப் பார்க்கிறார்
நள்ளிரவில்
விழித்துக் கொள்ளும் தந்தை.
கண்கள் மூடி
விழித்திருக்கும் குழந்தை
உள்ளங்கைச் சூட்டை வைத்தே
இனம்காண்கிறது தந்தையை.
இருவருக்குமிடையே
தூக்கமின்றி
புரண்டு கொண்டிருக்கிறது
நேச இழைகளால்
பின்னப்பட்ட இரவொன்று.
*****