”தேசியக் கோடி என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. நம் நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணற்ற மக்கள் மடிந்துபோய் உள்ளார்கள். நாட்டுப் பற்றின் பின்னுள்ள உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஒதுக்கிவிட முடியாது. நட்சத்திரமும் வரி கோடுகளும் அமெரிக்காவை பிரதிநிதித்துவம் செய்வதைப்போல, நட்சத்திரமும் பிறை சந்திரனும் இஸ்லாத்தை பிரதிபலிப்பதைப் போல, ஒரு நாட்டைப் பிரதிபலிக்க தேசியக் கொடி மிக மிக அவசியமானது”. என்கிறார் காந்தி. அப்படியாக நம் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி பிங்கிலி வெங்கையா.
பிங்கிலி வெங்கையா ஆந்திர மாநிலத்தில் 1876ஆம் ஆண்டு மசூலிப்பட்டினம் அருகே பத்லாபென்னுமரு என்னும் ஊரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்த வெங்கையா தனது மேற்படிப்புக்காக கொழும்பு சென்றார். இந்தியாவுக்குத் திரும்பிய அவர் ரயில்வேயில் பணியாற்றினார். பின்னாட்களில் உருதுவும் ஜப்பானிய மொழியும் கற்கவேண்டி வேலையைத்துறந்து லாகூருக்குப் பயணப்பட்டார்.
இயல்பிலேயே நாட்டுப்பற்று அதிகம் உடைய இவர் சுபாஷ் சந்திர போஸின் சுதந்திர செயல்பாடுகளால், பேச்சால் ஈர்க்கப்பட்டு பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். பயிற்சி முடிந்தவுடன் அவர் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். தனது 19ஆவது வயதில் ஆப்பிரிக்கப் போரில் பங்கேற்றார். அப்போதுதான் அவர் வாழ்வில் மிக முக்கியமான சந்திப்பு நிகழ்ந்தது. ஆமாம், அப்போது ஆப்ரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்த காந்தியை வெங்கையா சந்தித்தார். அது வெறும் சந்திப்பல்ல, வாழ்நாளுக்கான சந்திப்பு என்பதை அவர் உள்ளுணர்ந்தார். அதன் பிறகு காந்தியுடனான அவரது உறவு ஐம்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பிய வெங்கையா 1916 ஆம் ஆண்டு தேசியக் கொடியை வடிவமைக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை அவர் முதன்முதலாக தன்னுள் கருக்கொண்டார். அப்போதே பிற நாட்டுக் கொடிகள் அடங்கிய புத்தகத்தை அவர் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1921 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் காக்கிநாடாவில் நடந்தது. அப்போதுதான் இந்தியாவுக்கென ஒரு தேசியக் கொடியை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் கொடியை கவனமாக ஆராய்ந்த வெங்கையா எண்ணியவாறே தனது தாய் நாட்டின் தேசியக் கொடியை வடிவமைக்கவும் செய்தார். முதலில் பச்சை மற்றும் குங்குமப் பூ நிறங்கள் கொண்ட கொடியை வெங்கையா வடிவமைத்தார். அந்தக்கொடியே பின்னாளில் காந்தி சொன்ன மாற்றங்களுடன் 1947ஆம் ஆண்டு தேசியக் கொடியாக பரிணமித்தது. நடுவில் வெள்ளை நிறம் இடம் பெற வேண்டும் என்பதை காந்தியும் மற்றும் நீதிச்சக்கரம் இடம்பெற வேண்டும் என்பதை புகழ்பெற்ற கல்வியாளர் லாலா ஹன்சராஜும் வெங்கையாவுக்கு ஆலோசனை சொன்னார்கள். அவ்விதமேயான மாற்றங்களுடன் இந்தியாவின் மூவண்ணக் கொடியை வடிவமைத்த வெங்கையா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தன் தலைவர் காந்தியிடம் கையளித்தார். [தனது சுதந்திர போராட்டக் காலங்களில் தனது மகளை காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் வெங்கையா. எவ்வளவு பெருமிதமான ஒரு தருணம் இது!]. வெங்கையாவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அவரை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்தது. தனது யங் இந்தியா இதழில் ‘’நாட்டில் ஒவ்வொருவரும் பிங்கிலி வெங்கையாவைப் போல நாட்டுக்காக பணியாற்ற வேண்டும். அவரது சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.’’ என்று புகழ்ந்து எழுதியுள்ளார் காந்தி.
பிங்கிலி வெங்கையா ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளரும் கூட. நிலவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன் சொந்த ஊரில் கல்விக்கூடங்களை அவர் நிறுவினார். பிங்கிலி வெங்கையா தெலுங்கு,ஆங்கிலம், உருது, ஜப்பான் எனப் பல மொழிகள் கற்றவர். வைரம் தரம் நிர்ணயிப்பதிலும் அவருக்கு நிபுணத்துவம் உண்டு. அதனால் ’டைமண்ட் வெங்கையா’ என்ற பட்டப் பெயரும் அவருக்கு உண்டு. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை பருத்தி ஆய்வுக்கு ஒதுக்கிய அவர், 1911 ஆம் ஆண்டு முதல் 1916 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நாட்டின் பிரதான தொழிலாக விளங்கிய பருத்தி நூல் தொடர்பான ஆய்வுகளிலும் அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். ‘கம்போடிய பருத்தி’ வகை குறித்த அவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்க ஒன்று. Royal Agricultural Society of London அவருக்கு கௌரவ உறுப்பினர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது. விவசாயத்தில் குறிப்பிடத்தக்க ஆர்வமும் வெங்கையாவுக்கு உண்டு. கர்னூல் மாவட்டத்தில் இஞ்சி பயிரிடுவதில் பல பரிசோதனைகளை அவர் செய்து பார்த்தவர் அவர்.
இவ்வளவு தேசியப் பெருமிதங்கள் உடைய வெங்கையா, பெரும்பான்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போலவே வறுமையில்தான் 1963ஆம் ஆண்டு இறந்தார். அவரது கட்சியும், அரசாங்கமும், மக்களும் அவரைக் கருணையின்றி கைவிட்டார்கள். பொதுமக்கள் நினைவில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போனார். அவருக்கு சொந்த ஊரில் மாவட்டத்தில் ஒரு நினைவுச் சின்னம் கூட அமைக்கப்படவில்லை. மறதி நம் மக்களின் தேசிய குணம். பிங்கிலி வெங்கையாவுக்கு அரசின் குறிப்பிடத்தக்க விருதுகளோ கௌரவங்களோ அளிக்கப்படவில்லை. கடைசியில் 2009 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது. அதன் மூலம் அவர் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். 2015ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா வானொலி நிலையத்தில் அவரது உருவச்சிலை நிறுவப்பட்டு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கடந்தவாரம் வெள்ளியன்று பிங்கிலி வெங்கையா வீட்டுக்குச் சென்று அவரது மகளை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் 75 லட்ச ரூபாய் பணமுடிப்பை அளித்தார். அந்த செய்தியே இந்தக் குறிப்பு எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது. முதல்வருடான சந்திப்பின்போது தனது அப்பா பிங்கிலி வெங்கையா அறிமுகப்படுத்திய காந்தியுடனான தனது சந்திப்பை உருக்கமாக கண்டசாலா சீதா மகாலட்சுமி நினைவு கூர்ந்தார். கிட்டத்தட்ட மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு தேசியப் பெருமிதம் வாய்ந்த சுதந்திரப் போராட்ட வீரரை மீண்டும் பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டுவந்த வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பாராட்டுக்குரியவர்.
***
அது 1996 ஆம் வருடம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என மூன்று ஆசிய நாடுகள் சேர்ந்து போட்டிகளை நடத்தின. காலிறுதிப் போட்டியில் அபாரமாக பாகிஸ்தானை வென்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆடியது. இப்போது இருப்பது போல கைபேசியிலியேயே போட்டிகளைக் காணும் வசதியெல்லாம் அந்நாட்களில் இருக்கவில்லை. எங்கள் ஊரில் தொலைக்காட்சி நான்கே வீடுகளில் மட்டுமே இருந்தது. எனது மாமாவும் தோழருமான தேவமுருகன் அவர்களுடைய வீடு அதில் ஒன்று. மாமா ஒரு நல்ல கம்யூனிஸ்ட் ஆதரவாளர். அவர் நல்ல கம்யூனிஸ்ட்டா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்த எங்கள் ஊரில் சனநாயகப் பண்பு அதிகம் இருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. படித்தவர்கள் பெரும்பாலும் பாசிஸ்ட்டுகளாக, அதிகார நாட்டம் உடையவர்களாக, தம்மைத்தவிர சக மனிதர்கள் [Others] பற்றிய சுதந்திர சிந்தனை இல்லாதவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையில் என்னை சக மனிதனாக பொருட்படுத்தி மதித்து தனக்கு சமமாக நடத்தியவர் தோழர் மட்டும்தான். ஒரு கம்யூனிஸ்ட்டால் மட்டும்தான் இதுமாதிரியான விதிவிலக்கான முன்னெடுப்புகளை எடுக்க முடியும் என்று பின்னால் நான் உணர்ந்துகொண்டேன்.
என்னை மதிப்புடன் நடத்தியதோடு மட்டுமல்லாமல் அவருடைய பொக்கிஷமான நூலகத்தில் நடமாடவும் புத்தகங்களை எடுத்துப் படிக்கவும் எனக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார். அவருடைய நூலகத்தில் இருந்த புத்தகங்கள் பெரும்பாலானவை ரஷ்ய மொழிபெயர்ப்பு ஆக்கங்கள். குறிப்பாக ‘’ராதுகா’’ பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள். என் பதினான்கு வயதில் டால்ஸ்டாயையும், தாஸ்தாவெஸ்கியையும், செகாவையும், இவான் துர்கனேவையும், மாக்சிம் கார்க்கியையும் வாசித்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே சிலிர்ப்பாகவும் கொஞ்சமே கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது. படிப்பு நேரம் போக மிச்சம் இருக்கும் நேரங்களில் நான் தோழரின் நூலகத்தில்தான் கிடந்தேன். என் வயசுப் பையன்கள் பீடி குடிக்கவும் இரவில் நகரத்துக்கு சினிமா பார்க்கவும், அயலார் தோட்டங்களில் இளநீர் திருடவும் போய்க்கொண்டிருக்கையில் நான் ரஷ்ய இலக்கிய ஆக்கங்களில் வழி தவறி அலைந்துகொண்டிருந்தேன். பனி மிகுத்து பெய்யும் பீட்ஸ்பர்க்கின் தெருக்களில் என் கனவுகளில் நான் கால்கள் புதைய நடமாடினேன். என் இளம்வயதுக் கற்பனையைத் தூண்டியதில் ரஷ்ய மொழிபெயர்ப்பு படைப்பாக்கங்களுக்கு பெரும் பங்குண்டு. அப்போதைய இரண்டுங்கெட்டான் வயதில் அந்த ரஷ்ய இலக்கிய ஆக்கங்களில் இருந்து நான் என்ன பெற்றுக் கொண்டேன் என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால் பின்னாட்களில் என் சிதறுண்ட ஆளுமையை ஒரு முழுமைக்கு அல்லது உத்தேச வடிவுக்குக் கொண்டுவர அப்போது படித்த ரஷ்ய ஆக்கங்களே எனக்கு உதவி செய்தன என்பதை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். ஆகவே… ஆம் நண்பர்களே, என்னுடைய பாதரசம் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக ஆண்டன் செகாவின் புத்தகம் வெளிவந்தது வெறும் தற்செயல் அல்ல. என் பால்யத்தின் அனாதைத் தன்மைக்கு ஒரு முடிவுகட்டிய ரஷ்ய ஆக்கங்களுக்கு என்னால் செய்ய முடிந்த சிறிய கைம்மாறு, அவ்வளவுதான்.
கிரிக்கெட்டைப் பற்றிச் சொல்லவந்து ரஷ்ய மொழியாக்கங்களுக்குள் போய்விட்டேன் இல்லையா? காரணம் இருக்கிறது. சுகுணா சித்தியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் தோழரில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். சுகுணா சித்தி தோழரின் தங்கை. தோழரைப் போலவே என்னிடம் பலமடங்கு அன்பு காட்டியவர். அவருக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் எனக்கும் பிடிக்கும். சித்திக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முஹம்மது அஸாருதீனை மிகவும் பிடிக்கும். ஆகவே எனக்கும். காரண காரியமெல்லாம் ஒருவரை பிடிப்பதற்குத் தேவையா என்ன? நமக்குப் பிடித்தவர்கள் சிலர் மேல் கொள்ளும் பிரியம் நம்மையும் ஜலதோஷம் போல தொற்றிக்கொள்ளும் இல்லையா? அப்படி. ஆனால் தோழரின் இன்னொரு தங்கையான கலை சித்திக்கு அஜய் ஜடேஜாவைப் பிடிக்கும். அஜய் ஜடேஜாவும் அஸாருதீனும் சேர்ந்து விளையாடும்போது தொலைக்காட்சிக் கூடம் களேபரமாக இருக்கும். அதன் கூடுதல் பயன் என்னவெனில் எங்களைப் போன்ற ஆட்களுக்கு கூடுதலாக ஒரு கோப்பை தேநீரோ காஃபியோ வறுத்த கடலையோ கிடைக்கும் என்பதுதான்.
இந்தியா-இலங்கை மோதிய உலகக் கோப்பை போட்டியின் பகலிரவு ஆட்டத்தை என்னால் மறக்க இயலாது. அந்தப் போட்டியில் இந்தியா, மிகச்சிறிய தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளூர் கிரிக்கெட் ஆடத் தகுதியுள்ள இலங்கை அணியிடம் தோற்றது எங்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியது எனலாம். அன்றைய இரவு சுகுணா சித்தி சாப்பிடவில்லை. எனவே நானும் சாப்பிடவில்லை. அவர் அழுதுகொண்டே தூங்கிவிட்டார். எனக்கு உறக்கம் கொள்ளவில்லை. வெற்றி தோல்வி குறித்த எந்தவொரு அபிப்பிராயமும் இல்லாத நான் ஏன் சாப்பிடாமல் உறக்கம் கொள்ளாமல் தவித்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். அது அன்புக்கு நாம் செய்யும் சிறு வெகுமதி அல்லாமல் வேறென்ன, சொல்லுங்கள்?
ஒரு பெரிய நீர்க்குமிழி போல உருவாகி மறைந்த கதை முகம்மது அஸாருதீனுடையது. இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர். சிறந்த துடுப்பாட்டக்காரர். கபில் தேவ், கவாஸ்கர், ரவி சாஸ்திரி என சாதனையாளர்களுக்கு சற்றும் குறைவில்லாத அடுத்த தலைமுறை கிரிக்கெட் ஆட்டக்காரர்.
முஹம்மது அசாருதீன் வாழ்க்கை நிறைய திருப்பங்கள் கொண்டது. 1984ஆம் வருடம் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் அறிமுகமான அசாருதீன் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சதமடித்த சாதனையை நிகழ்த்தியவர். திலீப் வெங்சர்க்கர், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் மங்கத் துவங்கியிருந்த காலகட்டம் அது. இந்திய அணிக்குள் ஆட வாய்ப்பு கிடைத்த அவர் கெட்டியாக பிடித்துக்கொண்டார். அதன் பிறகு அவர் அடைந்த புகழ் சொல்லித் தீராதது. அடைந்த வெற்றிகள் பிரம்மாண்டமானவை. 47 ஐந்து நாள் போட்டிகளிலும், 174 ஒரு நாள் ஆட்டங்களிலும் அவர் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார். அணித்தலைவராக போட்டிகளின் வெற்றி சதவீதமும் அப்போதைய சாதனைதான். பின்னால் அவரது சாதனையை சவுரவ் கங்குலியும் மகேந்திர சிங் தோனியும் முறியடித்தனர் எனினும் அவர் ஒரு முன்மாதிரி அணித்தலைவர். எங்கள் பள்ளியில் பியூன் வேலை செய்பவரைக் கூட மரியாதையாகத்தான் கூப்பிட முடியும். ஆனால் அணித்தலைவரான அஸாருதீனை அசார் என்று பேர் சொல்லிக் கூப்பிட முடியும். களத்தடுப்பில் சோடை போனால் அசார் என்று சொல்லி அழைத்து அவரைத் திட்ட முடியும். இதெல்லாம் அவரைப் பற்றிய என்னுடைய ஆச்சரியங்கள். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அவரது ஆட்டம் ஒருவித மயக்கத்தை அல்லது கிறக்கத்தை அந்நாளில் உண்டுபண்ணியது. மணிக்கட்டை பயன்படுத்தி லெக் திசையில் அவர் அடிக்கும் ஓட்டங்கள் ரசானுபவமானவை.
இலங்கை அணியுடனான மோசமான உலகக் கோப்பை போட்டி தோல்விக்குப் பிறகு நாங்கள் கொஞ்ச காலம் கிரிக்கெட்டை பற்றி பேசாது இருந்தோம். ஆனாலும் அஸாரூதின் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் சுகுணா சித்தியின் முகம் பிரபஞ்சம் அளவுக்கு புன்னகையில் விரியும். அதனாலேயே எனக்கு அஸாருதீனை மிகவும் பிடிக்கும். இதற்கிடையில் நான் வேலூரில் கல்லூரியில் இடம் கிடைத்து ஊரை காலிசெய்து வெளியேறினேன். என் உலகம் கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது. கிரிக்கெட்டின் இடத்தை வேலூரின் வெயில் பொழுதுகளும், பொது நூலகமும், சுதந்திரமாகக் காணக்கிடைத்த சினிமாக்களும், சுஜாதாவும் பின்னே பாலகுமாரனும் என் உலகை ஆக்கிரமித்திருந்தார்கள்.
ஒரு விடுமுறை நாளில் கல்லூரியில் இருந்து ஊர் திரும்பியபோது சுகுணா சித்தி இறந்துவிட்டார்கள் என்று அம்மா எனக்குச் சொன்னார். என் பதின் வயதில் நான் எதிர் கொண்ட முக்கியமான என்னை நொறுக்கிப்போட்ட மரணம் சுகுணா சித்தியினுடையதுதான். திருமணம் ஆகி சந்தோஷமாக வாழ்க்கையை முன்னெடுத்த சுகுணா சித்தி பேருந்து விபத்தில் இறந்து போனார். அவர் முகத்தைக் கூட நான் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. தனியே கிணத்து மேட்டில் அமர்ந்து முடிந்தமட்டில் அழுது தீர்த்தேன். வேறென்ன செய்ய இயலும்? பின்னாளில் அஸாரூதின் சூதாட்டப் புகாரில் சிக்கி கிரிக்கெட்டை விட்டு வெளியேறியபோது உடைந்துபோன ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அந்த செய்தி கேட்ட தருணம் சுகுணா சித்தியின் பிரபஞ்சப் புன்னகைதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால் பாருங்கள், அஸாருதீன் பற்றிய எதிர்மறை செய்தியை காதுற சுகுணா சித்தி அப்போது உயிரோடு இல்லை. ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் அந்தச் செய்தியை கேள்விப்பட்டு பின் ‘சரி இருக்கட்டும் என்ன இப்ப?’ என்றுதான் கேட்டிருப்பார் என்று நான் நினைத்துக்கொள்கிறேன். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?
***
இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் நேற்று [14.03.2021] சென்னையில் காலமானார். காலம் ஆனார் என்கிற வார்த்தையை நான் ஒருவித சென்சிபிலிட்டியுடன் இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஏனெனில் மரணம் என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டும்தான். படைப்புச் செயலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களுக்கு மரணம் என்பதே இல்லை. எனவே ஜனநாதன் மரணிக்கவில்லை. பூத உடல் துறந்து காலம் ஆகிவிட்டார்.
தமிழ் சினிமாவில் வர்க்க உணர்வை ஒரு வித முதலாளியின் மகளை காதலிக்கும் தொழிலாளி என்கிற அளவில்தான் நம் முன்னோடி இயக்குநர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த கம்யூனிசம் சார்ந்த புரிதல் அவ்வளவுதான். இதில் பெரிய சிறிய என்ற பேதமெல்லாம் இல்லை. அதையெல்லாம் தமிழ் சினிமாவில் உடைத்த முதல் இயக்குநர் என்று எஸ்.பி.ஜனநாதனை தாராளமாகச் சொல்ல முடியும். பெரிய சித்தாந்தங்களைச் சொன்னால் மக்கள் புரிந்துக்கொள்ள மாட்டார்கள் என்ற மாயக் கற்பிதத்தை உடைத்தவர் அவர். இனி அவர் போல் தெளிவாக சினிமா மொழியில் மக்களுக்கான சித்தாந்த அறிவை புகட்டும் இயக்குநர் நம் தமிழ் சினிமாவில் இல்லை.
ஈ, பேராண்மை, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்கள் அதன் குறைகளைத் தாண்டி தனித்துவம் மிக்கவை. அதன் தனித்துவம் என்பது வெகுமக்கள் சினிமாவை சரியான அளவில் புரிந்துகொண்டிருந்த ஜனநாதன் என்கிற இயக்குநரால் உருவாக்கப்பட்ட ஒன்று. அசலான சினிமா கலைஞர் அவர். போலிகளை புறம் ஒதுக்கி எளிமையை நோக்கிப் பயணப்பட்டவர். அந்த எளிமை அவருக்கு இயற்கை படத்திலேயே கைகூடி வந்திருந்தது. அதனால்தான் அரதப்பழசான ஒரு முக்கோண காதல் கதையை அமரத்துவம் வாய்ந்த ஒரு செல்லுலாய்ட் சித்திரமாக அவரால் மாற்றித்தர முடிந்தது. இயற்கை ஒரு எளிய காதல் கதைதான். ஆனால் காதல் மனித மனங்களில் உருவாக்கும் நட்சத்திர இருள் வெளிச்சங்களை பூடகமில்லாத திரைமொழியில் சொன்னது என்கிற வகையில் இயற்கை ஒரு குறிப்பிடத்தக்க முன்னோடித் திரைப்படம். நம்மில் எல்லோரும் இயற்கை தாஸ்தெவெஸ்கியின் ’வெண்ணிற இரவுகள்’ பாதிப்பில் உருவான படம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு என்பது என்னுடைய எண்ணம். இன்னொரு ரஷ்ய படைப்பாளியான அலெக்ஸாந்தர் கிரீனின் ‘செந்நிற கடற்பாய்கள்’ என்கிற நாவலின் தாக்கத்தில் உருவானதுதான் இயற்கை திரைப்படம்.
கம்யூனிச அரசியல் கருத்தியலை வெகுமக்கள் தளத்தில் சினிமா மூலம் கொண்டுசென்ற திரைக்கலைஞர் அவர். மறைந்த முன்னாள் முதல்வர், நடிகர் எம்.ஜி.ஆர் பற்றி அவர் பேசிக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். வெறும் தகவல்களாக அவை நம் முன்னே வீழ்ந்து மரிக்காது. அந்தத் தகவல்களினூடே அவரது பார்வையும் சேர்ந்து நம்மிடையே வந்து சேரும். அந்தப் பார்வை ஒரு கம்யூனிஸ்ட்டினுடைய அசலான பார்வை. கோணல் இல்லாதது. அவ்வளவு சுவாரசியமான, அதேவேளையில் பரவலாக நாம் அறியாத செய்திகளாக அவை இருக்கும். நகைச்சுவையும் மனிதர்கள் அனைவரும் சமம் என்கிற சாராம்சமும் பின்னிப் பிணைந்தவை அவரது உரையாடல்கள். ஒருமுறை எழுத்தாளர் பாக்கியம் சங்கர் மற்றும் கவுதம சன்னா ஆகியோருடன் ஜனநாதனின் மைலாப்பூர் வீட்டுக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் செலவிட்டது மறக்கவியலாத அனுபவக் குவியல் என்றே சொல்லலாம். அங்கே அவரது வீட்டில் வேலை செய்யும் அம்மா[இங்கே வேலைக்காரி என்கிற வர்க்க பேதம் உண்டாக்கும் விளியை நான் கவனமாகத் தவிர்க்க விரும்புகிறேன்] சமைத்த உணவை அனைவரும் வட்டமாகச் சேர்ந்து அமர்ந்து உண்டோம். அப்போது எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை இங்கே நினைவு கூர்வது அதன் பொருத்தப்பாடு கருதிதான்.
ஜனநாதன், அவர்களது உதவியாளர்கள், கதை விவாதத்துக்கு வந்தவர்கள் நாங்கள் மூவர் என அனைவரும் கூட்டாக உணவு உண்டோம். நான் ஜனநாதன் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அவரது தட்டில் உணவு தீர்ந்து போனது. அருகில் இருந்த நான் உணவுப் பாத்திரத்தை அவர் இருக்கும் பக்கமாகத் தள்ளி ஒரு சிறு உதவியைச் செய்தேன். “உணவைப் பரிமாறவா?” என்று கேட்டேன். அதற்கு அவர் கோபித்துக்கொண்டார். “எனக்கு வேணும்னா நான் போட்டுக்குறேன்ங்க, நீங்க எதுக்கு எனக்கு பரிமாறனும்?”என்று சிறிய கோபத்துடன் சொன்னார். அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்து நான் மன்னிப்பு கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே,“நாம யாருக்கும் அடிமை இல்லை, நமக்கும் யாரும் அடிமை இல்லை.. இதைப் படித்து அறிந்தால் மட்டும் போதுமா? நிஜவாழ்க்கையில் செயல்படுத்த வேண்டாமா?” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அதன்பிறகு என்னுடைய வேலைகளை முடிந்தமட்டும் நானே செய்வதற்கு என்னைப் பழக்கிக் கொண்டேன் என்று சொல்லவேண்டும். அவர் எல்லா வகையிலும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தார். சில மாதங்களுக்கு முன்பு நான் கொண்டுவர இருக்கும் குரு தத் பற்றிய புத்தகத்துக்கு உதவி கேட்க அவரை அழைத்தேன். என்னை ஞாபக அறிமுகம் செய்துகொண்டு புத்தகம் பற்றி சொன்னேன். “மாதிரி புத்தகம் அச்சடித்து கொண்டுவாங்க பார்க்கலாம்.” என்றார். இனி அவரைப் பார்க்க முடியாது. ஆம் அவர் ‘காலம்’ ஆகிவிட்டார்.
பரவலான புத்தக வாசிப்பும் சினிமா குறித்த அறிவும் சித்தாந்தப் புரிதலும் கொண்ட இயக்குநர் அவர். இந்த சரிவிகிதத்தை நாம் இன்னொரு தமிழ் சினிமா இயக்குநரிடம் எதிர்பார்க்க இயலாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இயக்குநர் படத்தொகுப்பாளர் லெனின் மற்றும் இயக்குநர் அகத்தியன் ஆகியோரிடம் சினிமா பயின்றவர்.வ்உலக சினிமாவை உள்ளூர் மக்களுக்குத் திரையிட புரஜெக்டரை தோளில் சுமந்து திரிந்த அவ்வனுபவங்கள் அவரை செதுக்கின என்று சொல்வது மிகையானதில்லை. சினிமாவில் உதவி இயக்குநராக இருந்தபோதும் சரி, சினிமாவில் ஜெயித்தபோதும் சரி, அவர் ஒரு கம்யூன் வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். தன உதவியாளர்களை அத்தனை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்திய இயக்குநரை நான் பார்த்ததில்லை. சினிமாவின் எளிய ரசிகன் என்கிற அளவில் அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலி.
தொடரும்…