தொடர்கள்
Trending

காகங்கள் கரையும் நிலவெளி;5 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

ஜே டி சாலிங்கரைப் பற்றி எழுத மூன்று பிரதான காரணங்கள். ஒன்று, அவரது The Catcher in the Rye நாவல். இரண்டாவது சாலிங்கரின் காதலி ஊனா.ஓ.நீல் சாப்ளினின் மனைவியானது. மூன்றாவது பீட்டில்ஸ் புகழ் பாடகர் ஜான் லெனானை சுட்டுக் கொன்ற மார்க் டேவிட் சாப்மேன் தன்னை போலீஸ் கைது செய்யும் வரை சாலிங்கரின் The Catcher in the Rye நாவலைப் படித்துக்கொண்டிருந்தது.

Hapworth 16, 1924

ஜே டி சாலிங்கர் அமெரிக்காவின் முக்கியமான நாவலாசிரியர். அவருடைய The Catcher in the Rye நாவல் வெளியான காலத்தில் இரண்டு மாதங்களில் எட்டு பதிப்பு வெளிவந்திருக்கிறது. அவருடைய கடைசி நாவலான Hapworth 16, 1924 அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிகையான நியுயார்க்கரில் முழுமையாக வெளிவந்தது. 19 ஜூன் 1965ஆம் ஆண்டு அந்தப் பதிப்பில் வேறு படைப்புகள் எதுவும் வெளிவரவில்லை. நியுயார்க்கர் பத்திரிகை வரலாற்றில் இதற்கு முன்னும் பின்னும் இப்படி ஒரே எழுத்தாளரின் படைப்பு மட்டும் ஒரு இதழில் வெளியானதில்லை.

ஜே டி சாலிங்கர் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் யூதர்கள். பள்ளியில் படிக்கும்போதே பள்ளியின் செய்தித்தாளில் எழுத ஆரம்பித்தார். நாடகங்களில் நடித்தார். அவர் ஒரு நடிகராக விரும்பினார். ஆனால் தன் மகன் நடிகனாவதை அவரது அப்பா விரும்பவில்லை.  பள்ளியில் சாலிங்கர் ஒரு சராசரி மாணவர். அவரால் பள்ளியின் ஒழுங்கமைவுக்கு ஒத்துப்போக முடியவில்லை. நிறைய பள்ளிகள் மாறினார். எங்கு படித்தாலும் பள்ளியின் ஆண்டு மலரின் எடிட்டர் அவர்தான். அது அவரது எழுத்துத் திறமையை கூர்தீட்டிக் கொள்ள அதிகமும் உதவியது. பள்ளிப் படிப்பு முடிந்தபின் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்தும்  விலகினார். சாலிங்கரின் அப்பா மாமிச ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுத்த விரும்பி அவரை ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு அனுப்பினார். அந்த சூழல் சாலிங்கருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தத் தொழில் பிடிக்காமல் அங்கிருந்தும் வெளியேறினார். பின்னாட்களில் சாலிங்கர் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறியதற்கு இந்த இளம் வயது அனுபவமே காரணமாக அமைந்தது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி, வியன்னாவைக் கைப்பற்றுவதற்கு ஒரு மாதம் முன்பு சாலிங்கர் திரும்பவும் அமெரிக்கா வந்தார்.

அமெரிக்கா வந்த அவர் மீண்டும் பென்சில்வேனியாவில் ஒரு கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி பத்திரிகையில் சினிமா விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தார். பின்னர் அந்தக் கல்லூரியில் இருந்தும் விலகி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்குதான் அவர் STORY பத்திரிகையின் எடிட்டரான விட் பர்னட்டை சந்தித்தார். சாலிங்கரின் எழுத்துத் திறமையைப் பார்த்த பர்னட் புனைவு எழுதச் சொல்லி சாலிங்கரின் கதைகளை STORY பத்திரிகையில் வெளியிட்டார். சாலிங்கரின் முதல் புனைகதை 1940ஆம் ஆண்டு வெளியானது.

அதீத தனிமை உணர்வும் தன் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாடும் இல்லாதவர் சாலிங்கர்.  இதனால் நிறைய சர்ச்சைகளுக்கு உள்ளானார். The Catcher in the Rye நாவல் கொடுத்த பெரும் புகழும் வணிக விற்பனையும் அவருக்கு தாங்க இயலாததாக இருந்தது. தன் புத்தகங்களின் அட்டையில் தன் படங்கள் அச்சிடுவதைக் குறித்து தன் அதிருப்தியை அவர் பதிப்பாளர்களிடம் வெளியிட்டார். புகழ் வெளிச்சத்தை அவர் அறவே வெறுத்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். பெரும் பத்திரிகைகள் அவருடைய நேர்காணலுக்குக் காத்திருக்க, சாலிங்கர் உள்ளூர் பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு தன்னுடைய நேர்காணலை அளித்தார். அந்த நேர்காணல் பள்ளியின் ஆண்டுமலரில் வெளியானது. அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றிலும் ஆறு அடி உயரத்துக்கு மதில் சுவர் எழுப்பி சமூக உறவுகளிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக்கொண்டவர் சாலிங்கர். சமூகத்தின் பொதுவெளியிலிருந்து மறைந்து போக விரும்பிய ஜே டி சாலிங்கர் தன்னுடைய 91 வயது வரை வாழ்ந்தார். அவர் இறப்பதற்கு முன்பே அவருக்கான அஞ்சலிக் குறிப்புகள் எழுதப்பட்டு காத்திருந்தன என்பது உண்மையே. இயல்பான செயல்பாடுகளில் திடீரென மாற்றம் கொள்ளும் ஒருவித நரம்புத் தளர்ச்சி நோய்க்கு சாலிங்கர் ஆட்பட்டிருந்தார். இதை எர்னஸ்ட் ஹெம்மிங்வேக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் கூறியுள்ளார். ‘நிலைமை கை மீறிப் போவதற்கு முன் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்’ என்று தன் நோய் பற்றி அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

 

சாலிங்கரின் மணவாழ்க்கை வெற்றிகரமான ஒன்று அல்ல. நான்கு திருமணங்கள். அதன் பின்னான மூன்று மண முறிவுகள். நாவல் வெளியான இரண்டு வருடங்களுக்குப் பிறகு சாலிங்கர் நியூ ஹாம்ப்சயர் நகரில் 90ஏக்கர் பரப்பளவுள்ள தனது பண்ணை வீட்டுக்கு குடியேறினார். அதன் பிறகு அவரது வெளியுலக தொடர்புகள் முற்றிலும் குறைந்து போயின. சாலிங்கரின் மகள் மார்கரெட் சாலிங்கர் அவருடைய அப்பாவைப் பற்றிய நினைவுக் குறிப்பு நூல் [Dream Catcher: A Memoir] ஒன்றை எழுதி வெளியிட்டார். “தன் அப்பாவும் அம்மாவும் கனவு காண்பவர்களாக இருந்தார்கள். அவர்களுடையது அழகான கனவு, ஆனால் அவர்களுக்கு எப்படி அவர்களுடைய கனவை நிஜமாக்குவது என்பது தெரியவில்லை. என் அப்பாவுக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பு என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட ஒன்று. என் அம்மா துயரத்தின் குழந்தை. அவளின் குழந்தையான நான் அடர்ந்த மரங்கள், தேவதைக்கதைகள், குழந்தைத்தனமான கனவுகள், கிழக்கே உதிக்கும் சூரியன் மற்றும் மேற்கே தோன்றும் சந்திரன் ஆகியவற்றோடு பிணைக்கப்பட்ட ஒரு குழந்தையாக வளர்ந்தேன்…’’ என்று தொடங்கும் இந்தப் புத்தகம் வாசிக்க வேண்டிய ஒன்று. ”அழகானதாகவும் அதே வேளையில் பயங்கரமானதாகவும் இருந்த உலகில் என் இளமைப்பிராயம் கழிந்தது. அது சமநிலையற்ற சூழல்.” என்று இந்தப் புத்தகத்தில் மார்கரெட் சாலிங்கர் நினைவு கூர்கிறார். எழுத்தாளனின் மனைவியாக மட்டுமல்ல, மகளாக இருப்பதும் கடினமான ஒன்று என்று இந்தப் புத்தகத்தை படித்ததும் எனக்குத் தோன்றியது. இந்தப் புத்தகத்தில் சாலிங்கர் தன் சிறுநீரைக் குடிக்கும் பழக்கம் உடையவர் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது.

தன் பிரசுரம் காணாத கடிதங்களை இயன் ஹாமில்டன் அவர் எழுதவிருக்கும் புத்தகத்தில்  பயன்படுத்தக் கூடாது என்று கூறி சாலிங்கரின் சுயசரிதை எழுத விரும்பிய எழுத்தாளர் இயன் ஹாமில்டன் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு சாலிங்கருக்கு சாதகமாக தீர்ப்பானது. ஆனால் பின்னாட்களில்  சாலிங்கருக்கும் தனக்கும் ஏற்பட்ட வழக்கு விசாரணை அனுபவங்களை In search of j.d. salinger என்ற புத்தகமாக இயன் ஹாமில்டன் எழுதி வெளியிட்டார்.

தான் உயிரோடு இருக்கும்வரை The Catcher in the Rye நாவலை திரைப்படமாக்கும் உரிமையை தர சாலிங்கர் மறுத்துவிட்டார். பில்லி வைல்டரலிருந்து ஸ்டீவன் ஸ்ஃபீல்பர்க் வரை முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள். சாலிங்கர் பிடிகொடுக்கவில்லை. சாலிங்கரின் சினிமாவாக மாற்றம் அடைந்த படைப்பு என்று My Foolish Heart [1949] படத்தை மட்டும் சொல்ல முடியும். இந்தப் படம் அவருடைய Uncle Wiggily in Connecticut என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது.

சாலிங்கர் இரண்டாம் உலகப்போரில் நேரிடையாகப் பங்கேற்றவர். அப்போதே தன் முதல்  நாவலை எழுதத் தொடங்கிவிட்டார். தன் கதைகளின் வழி ஏற்கனவே சாலிங்கர் புகழ் பெற்றிருந்தாலும் தன்னுடைய முதல் நாவலை வெளியிடுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டார். நாவலின் கதாபாத்திரங்கள் நம்பகத் தன்மையுடன் இல்லை என்று கூறி சாலிங்கரின் முதல் நாவலான The Catcher in the Rye ஐ வெளியிட நியுயார்க்கர் பத்திரிகை மறுத்துவிட்டது. இன்னொரு பதிப்பாளர் ஹர்கோட் ப்ரெஸ் நாவலை திருத்தி எழுத சொன்னதை சாலிங்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நாவல் வெளிவந்து பெரும் கவனிப்பும் வணிக வெற்றியும் பெற்றது. இதுவரை 65 மில்லியன் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஊனா ஓ நீல் நாடகாசிரியர் யூஜின் ஓ நீலின் மகள். சாலிங்கரும் ஊனாவும் காதலித்தனர். இந்தக்காதல் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. பின்னர் ஊனா சார்லி சாப்ளினை மணந்தார். இந்த நிறைவேறாத காதல் கதை எனக்கு சிறு வியப்பை அளித்தது.

சாப்ளினுடன் ஊனா ஓ நீல்

ஜே டி சாலிங்கரை சந்திக்கும்போது ஊனா ஓ நீல்-க்கு 16 வயது. சலிங்கருக்கு 22 வயது. அழகும் அப்பாவித்தனமும் நிறைந்த பெண்களை சாலிங்கருக்கு அதிகம் பிடிக்கும்.  ஊனா ஓ நீல் அப்படியான பெண்ணாக இருந்தார். அவருடைய அப்பா நோபல் பரிசு பெற்ற நாடகாசிரியர் யூஜின் ஓ நீல். ஊனாவின் பெற்றோர்கள் அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே பிரிந்துவிட்டனர். ஆனால் ஊனாவுக்கு இளம் வயதிலியே பெரிய தொடர்புகளும் புகழும் கிடைத்தன. அது அவரது அப்பாவினால் கிடைத்தது. ஆனால் பெரும் குடிகாரரான அப்பாவை அவர் வெறுத்தார். அப்பாவைப் போல் அல்லாத, தன் எதிர்காலத்தை செம்மை செய்யக்கூடிய ஒரு ஆணை அவர் திருமணம் செய்ய விரும்பினார். சாலிங்கர் அப்படியான ஓர் ஆணாக இருப்பார் என் ஊனா நினைத்தார். இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இந்தக் காதல் அதிக நாள் நீடிக்கவில்லை. சாலிங்கர் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கிய நேரம் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற சென்றார். அவர்களின் சந்திப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் சாலிங்கர் ஊனாவுக்கு தினமும் பத்து பக்கங்களுக்கு மிகாமல் கடிதம் எழுதுவதைத் தொடர்ந்தார். அக்கடிதங்கள் ஊனாவுக்கு ஒருவித சலிப்பை அளித்தன. சாலிங்கர் தான் எதிர்பார்த்த ஆண் இல்லையென்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. தன் அப்பாவின் இன்னொரு தொடர்ச்சியாக சாலிங்கர் அவருக்குத் தோன்றினார். சாலிங்கரின் நீண்ட கடிதங்களுக்கு பதில் எழுதுவதை ஊனா நிறுத்தினார். இருவரின் பிரிவு கிட்டத்தட்ட உறுதியானது. அந்த சமயத்தில்தான் 1942 ஆம் வருடம் சாப்ளினின் படத்தில் ஆடிஷனுக்கு போனார் ஊனா நீல். அது ஒரு வாழ்நாள் சந்திப்பு. அதன் பிறகு சாப்ளின்தான் அதுவரை தான் தேடிய ஆண் என்று ஊனா முடிவு செய்தார். அதே வருடம் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.அப்போது இருவருக்கும் 35 வருட வயது வித்தியாசம் இருந்தது. ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

”ஊனா ஓ நீல்-உடனான சந்திப்பை தன் வாழ்வின் மறக்கமுடியாத நிகழ்வு” என தனது சுயசரிதையில் சாப்ளின் குறிப்பிடுகிறார். மேலும் ”ஊனாவைச் சந்தித்தபிறகுதான் உண்மையான மகிழ்ச்சி என்பது என்னவென்று நான் அனுபவித்து தெரிந்துகொண்டேன் என்றும் ஊனா என் வாழ்க்கையில் வந்தது நல் அதிர்ஷ்டம்” என்றும் சாப்ளின் குறிப்பிட்டுள்ளார். சாப்ளினின் இறப்பு வரை இவர்களது மண உறவு தொடர்ந்தது.

***

டென் பெட்டிட்க்ளர்க் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பிறந்தார். அவரது அம்மா ஒரு எழுத்தாளர். உடல் குறைபாடு உடைய குழந்தைகளை பராமரிப்பது பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார். டென் பெட்டிட்க்ளர்க் சிறுவயதில் இருந்தே எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார்.  Miami Herald உள்ளிட்ட உள்ளூர் பத்திரிகைகளில் நிருபராக வேலை பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த ஹெர்னெஸ்ட் ஹெம்மிங்வேயின் நாவல்களை அப்படியே நோட்டுப் புத்தகத்தில் எடுப்பார். அப்படியாவது ஹெம்மிங்வேயின் எழுத்துத் திறமை தனக்கு கைகூடும் என்று அவர் திடமாக நம்பினார். தன் 21வயதில் San Francisco Chronicle பத்திரிகையில் கொரிய யுத்த ரிப்போர்ட்டராக வேலை செய்திருக்கிறார். பின்னர் கியூப புரட்சி பற்றி செய்தி சேகரித்தும் எழுதியிருக்கிறார்.

Miami Herald பத்திரிகையில் வேலை பார்க்கும் போது அவருக்கு ஹெம்மிங்வேயின் நாவல்களைப் பற்றி விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணம் அதற்குப் பிறகான அவர் வாழ்வையே மாற்றப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது. ”ஒரு நாவலாசிரியராக ஹெம்மிங்வேயின் பங்களிப்பு என்பது ஆங்கிலத்தில் சிறு சிறு வாக்கியங்களை உருவாக்கியது மட்டும்தான்” என்று அவர் ஹெம்மிங்வேக்கு ஒரு கடிதம் எழுதினார்.  பின்னர் மனம் வருந்தி இன்னொரு கடிதத்தில் தான் எழுதியது உண்மையில்லை என்றும் உங்களது சாகச புனைவுகளுக்கு நன்றி என்றும் தினமும் உங்களது நாவலை நோட்டுப் புத்தகத்தில் பிரதி செய்து எழுத்துக்கலையை பயிற்சி செய்வதாகவும் டென் பெட்டிட்க்ளர்க் குறிப்பிட்டிருந்தார்.

ஒருவாரம் கழித்து எடிட்டோரியலுக்கு ஹெம்மிங்வேயிடமிருந்து போன் வந்தது. யாரோ போனில் விளையாடுகிறார்கள் என்றுதான் டென் பெட்டிட்க்ளர்க் முதலில் நினைத்தார். ஆனால் ஹெம்மிங்வே நீங்கள் உடனே கியூபா கிளம்பி வாருங்கள், நாம் மீன் பிடித்து பொழுதைக் களிக்கலாம் என்று சொன்னார். கியூபா கிளம்பிச்சென்ற டென் பெட்டிட்க்ளர்க் விமான நிலையத்தில் ஹெம்மிங்வேயைச் சந்திக்கும்வரை நடப்பதை நம்பமுடியாமல்தான் இருந்தார். ஹெம்மிங்வேயின் நண்பராகிவிட்ட பிறகு கியூபாவில் பொழுதுகள் பொன்போலக் கடந்தன. ஒருநாள் மீன் பிடிக்கும்போது ஹெம்மிங்வே தனது முடிக்கப்படாத நாவலான Islands in the Stream பற்றி, “நாவல் வெளிவந்தால் ஒரு சிறப்பான படத்தை இந்நாவலிலிருந்து உருவாக்கவிட முடியும்” என்று டென் பெட்டிட்க்ளர்க்கிடம் சொன்னார். 1961 வருடம் ஹெம்மிங்வே இறந்த பிறகு அந்த முடிக்கப்படாத நாவலை மையமாக வைத்துதான் Islands in the Stream படத்துக்கு திரைக்கதை எழுதினார் டென் பெட்டிட்க்ளர்க். நாவலின் ஹெம்மிங்வேயிச சாராம்சத்தை சரியாக திரைக்தையாக்கிய படம் என்று பாராட்டுக்கள் பெற்றது. டென் பெட்டிட்க்ளர்க் முதலில் திரைக்கதை எழுதிய படம் Red Sun. சார்லஸ் பிரான்ஸனும், ஜப்பானிய நடிகர் தொஷிரோ மிஃபுனேவும் சேர்ந்து நடித்த வெஸ்டர்ன் ஸ்பாகட்டி வகைத் திரைப்படம் அது. அதன்பிறகு பல்வேறு தொலைக்காட்சி தொடர்களை அவர் எழுதினார்.

டென் பெட்டிட்க்ளர்க்குக்கு ஐந்து வயதாகும்போது அவரது அப்பா சியாட்டிலில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றார். அது கிறிஸ்துமஸ் பண்டிகை நேரம். “அலங்கரிக்கப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டிரு, இதோ வந்துவிடுகிறேன்” என்று அவரது அப்பா  சொல்லிவிட்டுப் போனார். ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை. டென் பெட்டிட்க்ளர்க்கும் அவரது அக்காவும் அரசாங்க ஆதரவற்றோர் விடுதியில்தான் வளர்ந்தனர். டென் பெட்டிட்க்ளர்க் ஒரு எழுத்தாளராக விரும்பினார், காலம் அவரை ஹெம்மிங்வேயிடம் கொண்டுபோய் சேர்த்தது. இருவருக்குமான நட்பை மையமாக வைத்து Papa: Hemingway in Cuba என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. கியூப புரட்சிக்குப் பின்பாக அங்கு படம்பிடிக்கப்பட்ட முதல் ஹாலிவுட் திரைப்படம் என்ற பெருமையை உடையது இந்தப் படம். ஹெம்மிங்வே 29 வருடங்கள் கியூபாவில் வசித்தார். அவர் வசித்த வீட்டிலேயே இந்தப் படம் படம்பிடிக்கப்பட்டது. ஹெம்மிங்வேயை பப்பா என்றுதான் டென் பெட்டிட்க்ளர்க் அழைப்பார். அவரது எல்லா படைப்புகளிலும் தந்தை-மகன் உறவு பிரதானமாக இருந்தது. அவர் ஹெம்மிங்வேயை தான் இழந்துவிட்ட அப்பாவின் ஸ்தானத்தில்தான் வைத்திருந்தார். டென் பெட்டிட்க்ளர்க் அறியாத அப்பாவின் அன்பைத்தான் அவர் ஹெம்மிங்வேயிடம் கண்டடைந்தார் என்று எனக்குத் தோன்றுகிறது.

***

மார்க் டேவிட் சாப்மேன் – இசை ரசிகர்கள் மறக்க முடியாத பெயர். அவர்களின் ஆழ்மனதில் நான்கு புல்லட்டுகளாக பதிந்துவிட்ட பெயர். முக்கியமாக ஜான் லெனான் இசையை விரும்பியவர்கள் மறக்கவே முடியாத பெயர் டேவிட் சாப்மேன். இவர் நியூயார்க்கின் அட்டிக்க சிறையில் கடந்த நாற்பது வருடங்களாக இருக்கிறார். இதுவரை பதினோரு முறை பரோலில் வருவதற்கு மனு செய்தும் இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நிராகரிப்புக்காக சொல்லப்படும் காரணம் ”சாப்மேனின் விடுதலை அவரைப் போன்ற குற்றவாளிகளுக்கு ஒரு தவறான முன்மாதிரியாக இருந்துவிடக்கூடும்” என்பதுதான். 1980 ஆம் வருடம் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி லெனானின் மனைவியின் கண்முன்னே இவர் ஜான் லெனானை சுட்டுக்கொன்றார். அடுத்த நாள் டிசம்பர் 9 ஜான் லெனானின் பிறந்தநாள். ஆனால் அவர் உயிரோடு இல்லை. சுட்டுக்கொல்வதற்கு முன் இவர் லெனானிடம்  அவரது  இசை ஆல்பத்தின் மீது ஆட்டோகிராஃப் வாங்கினார். ”ஆட்டோகிராஃப் வாங்கியபின் லெனானை சுட்டுக்கொல்ல என் மனம் ஒப்பவில்லை. எனக்கும் என் மனசாட்சிக்கும் பெரிய விவாதமே நடந்தது. ஆனால் கடைசியில் நான் எதற்காக வந்தேனோ அதை செய்யாமல் வீட்டுக்கு திரும்பிப் போகக்கூடாது என்று முடிவு செய்தேன். அதன் பின்னர்தான் லெனானை சுட்டுக்கொன்றேன்” என்று டேவிட் சாப்மேன் அந்தக் கொடுமையான கணங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

ஜான் லெனானை சுட்டுக் கொன்றதும் அங்கிருந்து டேவிட் சாப்மேன் தப்பியோடவில்லை. அமைதியாக அமர்ந்து ஜே டி சாலிங்கரின் The Catcher in the Rye நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். பின்னர் போலீசிடம் அவர் கூறிய வாக்குமூலம் ”என்னுடைய நான் என்பது சந்தேகமேயில்லாமல் ‘ஹோல்டன் காஃபீல்டு’ தான் [சாலிங்கர் நாவலின் முதன்மைக் கதாபாத்திரத்தின் பெயர்]. என்னுடைய சிறுபகுதி ‘நான்’ தீமையின் முழு உருவமான சாத்தானாக இருக்கலாம்,ஒருவேளை.”  பின்னாளில் ”ஏசு கிறிஸ்துவை விடவும் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழு” என்று ஜான் லெனான் கூறியதும் அவரது மிதமிஞ்சிய உலகளாவிய புகழும் அவரைக்கொல்ல காரணமாக இருந்தது என்றும் டேவிட் சாப்மேன் கூறியுள்ளார்.

இதற்குமேல் ஒரு ‘ஜான் லெனானின் ரசிகனாக’ என்னால் டேவிட் சாப்மேன் பற்றி எழுதமுடியவில்லை.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button