
சூரத்தில் இலக்குவன் வரைந்த சில கோடுகள்
‘நீங்கள் இந்துவா, முஸ்லீமா?’
‘இந்து, ஐயா!’
‘பாஸ் (pass). அடுத்த கேள்வி, நீங்கள் தனியாளா? குடும்பஸ்தரா?’
‘நல்ல குடும்பி ஐயா. மனைவியுண்டு, மக்களுமுண்டு.’
‘பாஸ். சைவமா? அசைவமா?’
‘வார நாட்களில் சைவம்தான் ஐயா. வாரக் கடைசியில் கறி எடுப்போம்.’
‘ஃபெயில். நீங்கள் மடங்கிப் போகலாம்.’
இந்த உரையாடல் எனக்கும் ஒரு வீட்டு உரிமையாளருக்கும் இடையில் நடந்தது. இடம்: சூரத். காலம்: இந்த ஆண்டின் முற்பகுதி.
சூரத்தில் எனக்கு ஒரு வேலை இருந்தது. அங்கு சில மாதங்கள் தங்க வேண்டும். ஆகவே வசிப்பதற்கு ஒரு வீடு வேண்டும். என் பள்ளிக்கால நண்பனொருவன், குஜராத்தி, சூரத்தில் வசிக்கிறான். அவன் என்னை ஒரு முகவரிடம் அழைத்துச் சென்றான். அவர் எனது பணியிடத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த அடுக்ககத்தில் ஒரு வீட்டைக் காட்டினார். வீடு பிடித்திருந்தது. வாடகையும் பரவாயில்லை. வீட்டு உரிமையளர் அதே அடுக்ககத்தில் வேறு தளத்தில் இருந்தார். அவர் என்னிடம் நடத்திய நேர்காணல்தான் மேலே கண்டது.

அன்றைய தினம் இன்னும் சில வீடுகளைக் காட்டினார் முகவர். ஆனால் எல்லா இடங்களிலும் நேர்காணலின் மூன்றாவது கேள்வி முட்டுச் சந்தாக அமைந்துவிட்டது.
முதல் நாளின் முடிவில் முகவர் ஒரு உபாயம் சொன்னார். ‘சைவம் என்று சொல்லிவிடுங்கள். அசைவம் சமைத்தால் அவர்களுக்குத் தெரியவா போகிறது?’.
நான் கேட்டேன். ‘நீங்கள் சைவமா?’. ஆம் என்றார் முகவர். அதில் வியப்பில்லை. குஜராத்தில் மூன்றில் இரண்டு பேர் சைவம். ‘நீங்கள் அசைவம் சமைக்கும் வீடுகளுக்குப் போய் இருக்கிறீர்களா?’. நான் எதிர்பார்த்தது போலவே இல்லையென்றார். அதைச் சொல்லும்போது அவர் முகத்தில் தோன்றி மறைந்த பாவத்தை நான் கவனிக்கத் தவறவில்லை.
முகவரின் உபாயத்தை நான் ஏற்கவில்லை என்பதால் நண்பன் பிறிதொரு ஆலோசனை வழங்கினான். ‘நாங்கள் அசைவம்தான். ஆனால் உங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம். வெளியே சாப்பிட்டுக்கொள்வோம்.’ – இப்படிச் சொல்லச் சொன்னான். இந்தச் சமரச ஏற்பாட்டிற்கு நான் இசைந்தேன்.
வீடு தேடும் படலம் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன. பதிலை மாற்றிய போதும் பல நேர்காணல்கள் மூன்றாவது கேள்வியைத் தாண்டவில்லை. ஆனால் சில நேர்காணல்கள் நான்காவது ஐந்தாவது ஆறாவது கேள்விகளுக்கு நீண்டன. ‘உங்கள் தொழில் என்ன?’, ‘எவ்வளவு நாள் இந்த வீட்டில் தங்குவீர்கள்?’, ‘மனைவி எப்போது வருவார்?’. இன்னோரன்ன கேள்விகள். இவற்றுக்கு என்னிடத்தில் பதில்கள் இருந்தன. அவற்றைச் சடுதியில் சொன்னேன்.
வீடு தேடும்போது வேறு சில சுவாரஸ்யங்களும் நிகழ்ந்தன. நாங்கள் முதன் முதலாகப் போன அடுக்ககத்தின் முகப்பில் ஒரு பெரிய பிளெக்ஸ் தட்டி இருந்தது. நீல நிற இராமனின் படம். இந்த இராமன் கண்ணதாசனின் பட்டியலில் வரும் கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமனோ, அலங்கார ரூபனான சுந்தரராமனோ அல்லன்.
ராஜாராமனோ சீதாராமனோ அல்லன். வில்லேந்திய இராமன். ஆதலால் கோதண்டராமன். ஆனால் கண்ணதாசனின் இராமன்களைப் போல் சாந்தன் அல்லன். முகத்தில் சினம் பொங்கியது. கொஞ்சம் வெறுப்பும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. படத்தின் பின்னணியில் அயோத்தி கோபுரம் இருந்தது. அந்த ஆலயத்தின் ‘பிராண பிரதிஷ்டை’ நடந்தபோது இந்தத் தட்டி வைக்கப்பட்டிருக்கலாம். ஓராண்டுக்கும் மேலாக அங்கேயே இருக்கிறது. இராமனுக்கு வந்த வேலை முடியவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன். அதை யாரிடமும் சொல்லவில்லை.

இன்னொரு அடுக்ககத்திலும் இதையொத்த ஒரு தட்டியைப் பார்த்தேன். அதில் ஒரு நீண்ட தெரு காட்சி தந்தது. நடுவாந்திரமாக வில்லேந்திய இராமன். இந்த இராமனின் முகத்திலும் கருணை இல்லை, கடுமை இருந்தது. இராமன் வேகமாக நடக்கிறான். பின்னால் சீதை, அரக்குச் சிவப்பில் பட்டுச் சேலை, பின் கூந்தலை மறைக்கும் முக்காடு, நெற்றியில் இரண்டும், வகிட்டில் ஒன்றுமாக மூன்று திலகங்கள், நிறைய ஆபரணங்கள். ஓரடி பின்னால் இலக்குவன், கையில் வில், முகத்தில் சினம். இந்த மூவர் அணிக்குக் கொஞ்சம் பின்னால் ஆரவாரித்தபடி பின் தொடரும் மக்கள் திரள்.
ஏ.கே.ராமானுஜன் எழுதிய, ’முந்நூறு இராமயணங்கள்’ எனும் கட்டுரை புகழ் பெற்றது. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது. பிறகு நீக்கப்பட்டது. இந்த இராமயணங்களில் ஏதேனும் ஒன்றில் மேற்படிக் காட்சி இடம் பெற்றிருக்கக்கூடும். நானறிந்த வரை கம்பராமயணத்தில் இல்லை. இதற்குச் சற்றே நெருக்கமான காட்சி, இராமன் அயோத்தியிலிருந்து கானகம் ஏகும் ‘நகர் நீங்கு படல’த்தில் வரும். அதில் சீதை தரிப்பது பட்டல்ல, மரப்பட்டையாலான ஆடை. ‘சீரை (மரவுரி) சுற்றித் திருமகள் பின் செல’ என்பது கம்பனின் பாடல். அங்கே முன்னால் செல்வது இராமன் அல்லன், இலக்குவன். ‘இளையவன் முன் செல’ என்பது அதே பாடலின் அடுத்த வரி. கம்பனின் அயோத்தியில் மக்கள் ஆரவாரிக்கவில்லை. மாறாக இராமனின் பிரிவால் அழுது அரற்றினர்.
விழுந்தனர் சிலர்;
சிலர் விம்மி விம்மி மேல் எழுந்தனர்;
சிலர் முகத்து இழி கண்ணீர் இடை
அழுந்தினர்;
என்று நீள்கிறது கம்ப காதையில் வரும் அயோத்தி மக்களின் துயரம். அந்த சூரத் அடுக்ககத்தின் வாயிலில் வரையப்பட்டிருந்த மக்கள் இவர்கள் அல்லர். படத்தில் இருந்த இராமனும் கானகம் நோக்கிப் போவதாகத் தெரியவில்லை. அவனது நோக்கம் இராவண வதமும் அல்ல. எனக்குள் விளக்கு எரிந்தது. இவன் கம்பராமன் அல்லன், இவன் ஜெய் ஸ்ரீராமன். இந்தக் கண்டறிதலை யாருடனாவது பகிர வேண்டுமே? நண்பனிடம் சொன்னேன். அவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மாறாக என்னை உறுத்து நோக்கினான். வீடு கிடைக்கும் வரை வாயை மூடிக்கொண்டிரு என்பது அதன் பொருள்.
அந்தச் சித்திரத்தில் இலக்குவன் பின் சென்றாலும், சூரத்தில் அவன் சைவத்திற்கும் அசைவத்திற்கும் இடையில் ஒரு கோடு கிழித்து வைத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அது தாண்ட முடியாத கோடாக இருக்கிறது. அந்த நகரத்தில் இலக்குவன் வரைந்து வைத்திருந்த இன்னும் சில கோடுகளும் இருந்தன. அவற்றை நான் விரைவில் அறிவேன். அது பின்னால் வரும்.
ஒரு வழியாக, இரண்டாவது வாரம் ஒரு வீடு குதிர்ந்தது. ஒரு புறநகரில் எட்டு அடுக்ககங்கள் அடங்கிய வளாகம். நான் குடிபுகுந்த அடுக்கக வாயிலில் இராமர் இல்லை. பிள்ளையார் இருந்தார். ஆனால் இராமர் நான் குடியேறிய தளத்தில் இருந்தார். ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள். நான் குடியேறிய தளத்தில் ஒருவர் குஜராத்தி, சமணர். மற்ற இருவரும் வட இந்தியர்கள். இதில் ஒருவர், வீட்டின் வாயிலில் காவலாக இராமனை நிறுத்தியிருந்தார். இந்த இராமனும் சினம் பொங்கும் கோதண்டராமன்தான்.
அந்த வளாகத்திற்கு அருகே அதைப் போன்ற இன்னும் சில வளாகங்கள் இருந்தன. ஒரு பெரிய பூங்காவும் இருந்தது. அங்கே நடைப் பயிற்சிக்குப் போகலானேன். குழுக்களாகப் பிரிந்து சிலர் யோகாசனப் பயிற்சி செய்தனர். ஒவ்வொரு குழுவின் பின்னாலும் ஒரு பதாகை இருந்தது. இரண்டு பதாகைகளில் இராமர் இருந்தார், இன்னும் இரண்டில் பிரதமர் மோடி இருந்தார். கடைசியாக ஒரு குழுமத்திற்குப் பதாகை இல்லை, ஆனால் ஒரு காவிக்கொடி பறந்தது.
நடைப்பயிற்சியில் சில நண்பர்களும் கிடைத்தனர். அதில் மூன்று பேரை எடுத்துச் சொல்ல வேண்டும். முதலாமவர் ஒரு குஜராத்திக்காரர். மாநில அரசின் பொறுப்பான பணியில் இருந்தார். அவரது ஆங்கிலம் சிலாக்கியமானதாக இல்லை. எனது இந்தி அரிச்சுவடியைத் தாண்டாது. ஆகவே சரளமான உரையாடல் சாத்தியப்படவில்லை. குஜராத்தில் பணியாற்ற நான் குஜராத்தி அறிந்திருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தி தெரிந்திருந்தால் இருவரும் உரையடலாம் அல்லவா என்று ஆதங்கப்பட்டார்.

குஜராத்தில் இரு மொழித் திட்டமொன்று அமலில் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். ஒன்று-குஜராத்தி, அடுத்தது-இந்தி. நகரில் யாரிடம் வேண்டுமானாலும் இந்தியில் பேசலாம். அலுவல் ரீதியான கூட்டங்களைக்கூட இந்தியில்தான் நடத்துகிறார்கள். நான் தங்கியிருந்த அடுக்ககத்தில் பல வீடுகளின் உரிமையாளர்கள் குஜராத்திகள். ஆனால் குடியிருந்தவர்கள் பலரும் வட இந்தியர்கள். பல்வேறு தொழிற்சாலைகளிலும் உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் பணியாற்றினார்கள். அந்த அடுக்ககத்தில் ஓர் அறிவிப்புப் பலகை என் கவனத்தை ஈர்த்தது. அதில் அந்த வளாகத்தில் செய்யத் தக்கனவும் தகாதனவும் பட்டியலிடப்பட்டிருந்தன. அது ஒரே ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்தது. அது இந்தி. எனது நடைப் பயிற்சி குஜாரத்தி நண்பரிடம் ‘ஏன் அந்தப் பட்டியல் குஜராத்தி மொழியில் இல்லை?’ என்று கேட்டேன். ‘குடியிருப்பவர்கள் பலரும் வட இந்தியர்கள், தவிர எங்களில் பலருக்கும் இந்தி தெரியுமே’ என்றார். ‘உங்கள் மொழி, உங்கள் அடையாளம் அல்லவா?’ என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. இந்த நடைப் பயிற்சியில் இன்னும் இரண்டு பேர் உடன் வந்தனர். அவர்கள் இந்த உரையாடலிலிருந்து கவனமாக ஒதுங்கியிருந்தார்கள்.
அதில் ஒருவர், பீகாரி. சூரத்தில் பெரிய தொழிற்சாலைகள் மட்டும் 800க்கும் மேல். அதில் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். நாட்டின் 12% தொழிற்சாலைகள் குஜராத்தில் உள்ளன. இது குஜராத்தை தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிறுத்தியிருக்கிறது. (முதலிடம்? விடை: தமிழ் நாடு!)
நடைப் பயிற்சியில் இணைந்த இன்னொருவர், அரியானாக்காரர். உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றில் நிதித்துறை மேலாளர். சூரத் நகரெங்கும் சாலைகளும், பாலங்களும், மெட்ரோ ரயில் பணிகளும் நடந்த வண்ணம் இருந்தன. மின்சார, தொலைத் தொடர்பு வடங்களையும் நீர்க் குழாய்களையும் பதித்த வண்ணம் இருந்தார்கள். துறைமுகப் பணிகள் வேறு. ஒன்றிய அரசின் ஆதரவில் ரூ.150 கோடிக்கு அதிகமான மதிப்பில் நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகிறது. இதற்கு Flash Report on Central Sector Infrastructure Projects என்று பெயர். இந்தப் பட்டியலின்படி இந்தியாவிலேயே அதிகமான உள்கட்டமைப்புப் பணிகள் நடக்கும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது குஜராத். (முதலிடம்? உங்கள் ஊகம் தவறு. விடை: ஆந்திரப் பிரதேசம்).
சூரத்தின் நவீன தொழிற்சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் பெருகியவை. சூரத் நெடுங்காலமாக அறியப்படுவது இரண்டு தொழில்களுக்காக. அவை வைரமும் ஆடையும். சூரத்தையும் காசியையும் இணைத்து ஒரு பழமொழி உண்டு. ‘சூரத் நு ஜமன்; காஷி நு மரண்’. ‘சாகக் காசிக்குப் போ; சாப்பிட சூரத்துக்குப் போ’ என்பது பொருள். சூரத்தின் உணவுப் பண்டங்கள் சுவையானவை, ஆகவே சூரத்துக்குப் போ என்று இந்தப் பழமொழிக்கு ஒரு விளக்கம் உண்டு. தமிழ்ப் பயண இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான சோமலெ (1921-1986) இதை ஒப்பவில்லை. தனது ‘இமயம் முதல் குமரி வரை’ (மணிவாசகர் பதிப்பகம், புதிய பதிப்பு, 2017) நூலில் அவர் சொல்கிற விளக்கம் வேறு. வைரம் அறுவை, நார்ப்பட்டு நெசவு, ஜரிகைத் தொழில், வாழைப் பயிர் போன்று எதையாவது செய்து சூரத்தில் பிழைக்கலாம், அங்கே சாப்பாட்டுக்கு முடை வராது, ஆகவே சூரத்துக்குப் போ. இது சோமலெ தரும் விளக்கம்.
சூரத் ஜவளித் துறையில் பன்னெடுங்காலமாக முன்னணி வகித்து வருகிறது. எழுபதுகளில் வந்த பாலியெஸ்டரை நகரம் ஆரத் தழுவிக்கொண்டது. இன்று நாட்டில் 90% பாலியெஸ்டர் துணியை சூரத் ஆலைகள்தாம் உருவாக்குகின்றன.

வைரக் கற்களை வெட்டுவதிலும் பட்டை தீட்டுவதிலும், இந்த நகரம் இந்திய அளவில் அல்ல, உலக அளவில் முன்னணியில் நிற்கிறது. இந்தியாவில் வைரச் சுரங்கங்களே இல்லை. எனில், உலகின் 90% வைரம் சூரத்தில்தான் வெட்டப்பட்டு, பட்டை தீட்டப்படுகிறது. சாமானிய மக்களின் நலன் கருதி அரசு வைரத்திற்குக் குறைவான ஜி.எஸ்.டி விதிக்கிறது. கச்சா வைரம், வெட்டப்பட்ட/பட்டை தீட்டப்பட்ட வைரம், வைர நகைகள் ஆகியவற்றுக்கான சேவை வரி விகிதம் முறையே 0.25%, 1.5%, 3%.
சூரத்தில் சில்லறை வைர வணிகம் நடக்கும் இடங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கும் என்றார்கள். அதில் ஒன்றிற்குப் போனேன். ஒரு நண்பர் அழைத்துச் சென்றார். ஒரு நீண்ட கூடம். 200 வணிகர்கள் இருக்கலாம். உயரங் குறைந்த மேசைகளின் ஒரு புறம் விற்போர், மறுபுறம் வாங்குவோர். துண்டுச் சீட்டுகளில் மடித்துக் கொண்டு வரப்படும் சிறிதும் பெரிதுமான கற்களை மதிப்பிட்டு விலை சொல்கிறார்கள். பேரம் படிந்தால் வைரம் கைமாறும். எந்த ரசீதும் இல்லை. ஆகவே முன் குறிப்பிடப்பட்ட ஆகக் குறைந்த சேவை வரியையும் கட்ட வேண்டுவதில்லை. இது டிஜிடல் இந்தியாவாக இருக்கலாம். ஆனால், அது அந்த வணிகக் கூடத்திற்கு வெளியேதான். உள்ளே எல்லாப் பரிமாற்றங்களும் ரொக்கத்தில்தான். ஆயிரங்களும் இலட்சங்களும் சர்வ சாதாரணமாகக் கை மாறின.
வைரங்கள் பட்டை தீட்டப்படும் தொழிலகம் ஒன்று அருகிலேயே இருந்தது. அது மிகுந்த கவனமும் திறனும் பயிற்சியும் தேவைப்படும் தொழில். தொழிலாளர்கள் நட்புணர்வோடு அந்த வித்தையை விளக்கினார்கள். முன்பு குஜாராத்தித் தொழிலாளர் மட்டுமே செய்து வந்த பணியில் இப்போது வட இந்தியருக்கும் இடமளிக்கப்படுவதாக நண்பர் சொன்னார்.
நான் போயிருந்தபோது டிரம்ப்பின் அதீத இறக்குமதித் தீர்வை எனும் கத்தி இறங்கவில்லை. ஆனால் கத்தி காத்திருக்கிறது என்பதை அப்போது வணிகர்கள் அறியவில்லை. இப்போது திருப்பூர், ஆம்பூர், ஜெய்ப்பூர் முதலான தொழில் நகரங்களைப் போல் சூரத்தும் கலங்கி நிற்கிறது.
சூரத்தில் பொருட்கள் பலவும் சகாய விலையில் கிடைக்கின்றன. 135 மில்லி தேநீரின் விலை ரூ.10. அரைக் கோப்பைத் தேநீரும் பிரபலம். விலை ரூ.5. குளிரூட்டப்பட்ட, கண்ணாடித் தள்ளு கதவுடன் கூடிய சலூனில் முடி திருத்தக் கட்டணம் ரூ.60- ரூ.70. பானி பூரிக் கடைகள் இல்லாத நடைபாதைகள் குறைவு. முதலில் ஒரு கொட்டான் தரப்படும். பிறகு ஆறு ஜாடிகளில் உள்ள ஆறு வண்ண நீர், குட்டி பூரிகளில் வரிசையாக நிரப்பிப் பரிமாறப்படும். உபரியாக உருளைக் கிழங்கு மசாலா நிரப்பிய பூரியும் கிடைக்கும். எல்லாவற்றுக்குமாக விலை ரூ.20. குஜராத்தி நாளிதழின் நறுக்கை உள்ளே வைத்து விறைப்பாக இஸ்திரி போட்டுத் தருவதற்கு உருப்படி ஒன்றுக்கு ரூ.7. இப்படியான விலைவாசி சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கலாம். ஒரு ஊரின் விலைவாசி மக்களின் வாங்கும் சக்தியைப் பொருத்தும் அமையும் என்பார்கள்.
வைரப் பட்டறைக்குப் போயிருந்த போது தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறித்து விசாரித்தேன். அந்தத் தொழிலில் புரளும் செல்வத்திற்கும் அவர்கள் பெறும் ஊதியத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஒரு தொழிலாளரின் சராசரி நாள் ஊதியம் ரூ.400 முதல் ரூ.500 வரை என்றார் என் நண்பர்.
உடையாருக்கும் இல்லாருக்குமான இடைவெளியை நகரத்தின் பல இடங்களில் காண முடிந்தது. இரு சாரருக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டை இலக்குவன் வரைந்திருக்கக் கூடும். பின்வரும் புள்ளி விவரம் இதைத் துலக்கமாக்கும்.
உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GSDP, 2023) குஜராத் முன்னணியில் இருக்கிறது. இந்திய அளவில் ஐந்தாவது இடம், ரூ. 24 இலட்சம் கோடி (தமிழ்நாடு, இரண்டாம் இடம், ரூ. 27 இலட்சம் கோடி). ஆனால் இந்தச் செல்வத்தின் பலன் குஜராத்தில் எல்லோருக்கும் போய்ச் சேர்வதில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் பட்டியலில் (Niti Aayog, 2023, MPI) குஜராத் பின்னால் இருக்கிறது. 15ஆம் இடம், 9% குஜராத் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் . (தமிழ்நாடு இந்தப் பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோர்- 1.4%, தேசிய சராசரி- 11.3%).
இலக்குவன் வரைந்த இன்னொரு கோட்டுடன் இந்தக் கட்டுரையை முடித்துக்கொள்ளலாம். சூரத்தின்
இன்னொரு முகத்தை சௌக் பஜார் எனும் பகுதியில் காண முடிந்தது. நகரின் மக்கள் தொகையில் 12% இஸ்லாமியர். இவர்களில் கணிசமானோர் வசிக்கும் பகுதி இது. ஒரு காலத்தில் பிளேக் நோய் பீடித்த நகரம் சூரத். இன்று இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது. ஆனால் சௌக் பஜார் பகுதியைப் பற்றி அவ்விதம் சொல்வதற்கில்லை. தூய்மைக் குறைவு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வசதிக் குறைவும் துலக்கமாகத் தெரிந்தது. கடைகள் வரிசையாக இருந்தன. ஆனால் அவை பகட்டானவை அல்ல. அப்படியான கடைகள் நகரின் பிரதானப் பகுதிகளில் இருந்தன. அடுக்கு மாடி மால்களில் நவீனக் கடைகளும் உணவகங்களும் திரையரங்குகளும் கண்ணைப் பறிக்கும் அலங்காரத்திலும் வெளிச்சத்திலும் மூழ்கி இருந்தன. இந்த மால்களில் எங்கேயும் சௌக் பஜாரில் நான் கண்ட பர்தாப் பெண்களைப் பார்க்கவில்லை. சமீபத்தில் மதுரை ஆதீனம் வர்ணித்த ‘குல்லா அணிந்த தாடி வளர்த்த’ ஆண்களையும் பார்க்கவில்லை.
கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டை இலக்குவன் இடையில் எங்கேயோ வரைந்து வைத்திருப்பான் போல. அவர்கள் அந்தக் கோட்டைத் தாண்டுவதில்லை.
தொடரும்…
– Mu.Ramanathan@gmail.com



