
ஹாங்காங்கில் சில நிரபராதிகள்
கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தத் தேர்தலின் முடிவுகள் நாம் நினைத்தது போல் அமையவில்லை. நாம் போராடியதும் வாக்களித்ததும் இதற்காக அல்ல. ஆனால், இந்த முடிவால் நாம் நடத்திய போராட்டத்தின் மதிப்பு ஒருபோதும் குறைந்துவிடாது. நமது போராட்டம் தொடரும். அது முடியாது.”
இருபதாண்டுகளுக்கு முன்னால் இதையொத்த வாசகத்தை ஒரு நாடக இயக்குநர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். கமலா ஹாரிஸ் பேசியது வாஷிங்டனில். இயக்குநர் பேசியது ஹாங்காங்கில். முன்னவர் தேர்தல் முடிந்த பிறகு சொன்னார். பின்னவர் நாடகம் துவங்குவதற்கு முன்பே சொன்னார்.
22 ஜூன் 2002. நாடகம் சில நிமிடங்களில் தொடங்கவிருந்தது. திரை விலகவில்லை. மேடையில் சன்னமான வெளிச்சம். நாங்கள், நடிகர்கள், ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி வட்டமாக நின்றோம். ஒவ்வொரு ஒத்திகையும் அப்படித்தான் தொடங்கும். இயக்குனர் பேசினார். “மூன்று மாதங்களாக நீங்கள் இந்த நாடகத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறீர்கள். இதற்கு எனது மனப்பூர்வமான நன்றிகளும் பாராட்டுகளும். இந்த நாடகம் வரவேற்பைப் பெறலாம். பெறாமலும் போகலாம். நாடகத்தின் விளைவு எப்படியாகிலும், அது நீங்கள் ஒவ்வொருவரும் இதன் உருவாக்கத்தில் செலுத்திய உழைப்பின் மதிப்பை ஒரு போதும் குறைத்துவிடாது. இதை நான் நாடகம் முடிந்த பிறகு சொல்லியிருக்கலாம். ஆனால் அப்போது அதில் நாடகத்தின் வெற்றி அல்லது தோல்வியின் பாதிப்பு இருக்கும். ஆதலால்தான் இப்போதே சொல்கிறேன்.”
இப்படிச் சொல்லிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கி இருளில் இருந்த அரங்கில் ஒரு புறமாக நடந்து பார்வையளர்களுக்குப் பின்னாலிருந்த ஒளிக்கூடத்திற்குச் சென்றார். நாடகத்திற்கு ஒளியமைப்பும் அவர்தான். மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த இசையமைப்பாளர் ஆரம்ப இசையை மீட்டினார். திரை விலகியது. அரங்கில் மெலிதான வெளிச்சம் பரவியது. நாடகம் துவங்கியது.
கதையும் களமும்
நாடகத்தின் பெயர்: ‘நிரபராதிகளின் காலம்’. ஜெர்மானிய நாடக ஆசிரியர் ஸீக்ஃப்ரீட் லென்ஸ் 1961இல் எழுதிய புகழ்பெற்ற நாடகம். ஜெர்மெனிலிருந்து நேரடியாகத் தமிழாக்கியவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. நீண்ட காலமாக அச்சில் இல்லாதிருந்த நூல், இப்போது கிடைக்கிறது (க்ரியா மறுபதிப்பு 2019).

நாடகத்தின் இயக்குநர்: பயணி தரன். இந்திய அயலுறவுப் பணி (IFS) அதிகாரி. சென்னையில், ‘ஐக்யா’ எனும் குழு அமைத்து நவீன நாடகங்களை நடத்தியவர். இப்போது அவர் ஒரு முகநூல் நட்சத்திரமும் ஆவார்.
நாடகத்தில் இரண்டு அங்கங்கள் (Acts). சாஸோன் ஒரு கலகக்காரன். அவனும் அவனது சகாக்களும் நாட்டின் ஆளுநரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆளுநர் தப்பி விடுகிறார். சாஸோன் பிடிபடுகிறான். அவனது கூட்டாளிகள் தப்பி விடுகிறார்கள். அவர்களைக் காட்டிக்கொடுக்குமாறு சாஸோன் சித்திரவதை செய்யப்படுகிறான். பலனில்லை. இந்தக் கட்டத்தில் அவனை ஒரு சிறைச்சாலை அறைக்கு அழைத்து வருகிறார்கள். முதல் அங்கம் தொடங்குகிறது. அந்த அறையில் சமூகத்தின் அங்கத்தினர்களாகக் கருதப்படக்கூடிய ஒன்பது பேர் ஏற்கனவே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். வங்கி அதிகாரி, விவசாயி, லாரி ஓட்டி, ஹோட்டல் முதலாளி, டாக்டர், மாணவன், அச்சகத் தொழிலாளி, பொறியாளர், பேராசிரியர் என ஒன்பது பேர். இவர்கள் சமுகத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருதுபவர்கள். தங்களைப் பொருத்தமட்டில் நிரபராதிகள். இவர்களுக்கு இடப்பட்ட பணி: சாஸோனிடமிருந்து அவனது கூட்டாளிகளின் பெயர்களைப் பெற வேண்டும். அதுவரை அவர்களுக்குத் தண்ணீர் கூடக் கிடைக்காது. இந்த ஒன்பது பேரும் நயந்தும் வலிந்தும் சாஸோனிடம் பேசுகிறார்கள். அடித்துக் கூடக் கேட்கிறார்கள். சாஸோன் அசையவில்லை. பொழுது சாய்கிறது. புலர்கிறது. மீண்டும் இருள் கவிகிறது. ஒரு கட்டத்தில் சாஸோனை யாரோ கொன்றுவிடுகிறார்கள். கொன்றவர் யாரென்று தெரியவில்லை. பரவாயில்லை. எப்படியிருந்தாலும் அரசாங்கம் அதைத்தான் செய்திருக்கும். ஒன்பது பேரும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இரண்டாம் அங்கம் நான்காண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. இப்போது புரட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிடுகிறார்கள். மீண்டும் அதே நிரபராதிகள். வேறு சிறைச்சாலை. இப்போது அவர்களுக்கு இடப்பட்ட பணி: அவர்களுக்குள் யாரோ ஒருவர்தான் சாஸோனைக் கொன்றவர். அந்தக் கொலையாளியை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த இரண்டாவது விசாரணை, ‘நிரபராதி’களின் வெவ்வேறு முகங்களை வெளிக்கொணர்கிறது.
இந்த நாடகத்தை ஹாங்காங்கின் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்தியது. உலகமெலாம் இருக்கிற எல்லாத் தமிழ்ச் சங்கங்களைப் போன்றதுதான் ஹாங்காங் சங்கமும். சிறுவர் நிகழ்ச்சிகள், சிரிப்புப் பட்டிமன்றங்கள், இத்துடன் உபத்திரவமில்லாத நாடகங்கள் (இப்போது தமிழ் சினிமா) போன்றவற்றைத்தான் சங்கம் நடத்தி வந்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படியொரு காத்திரமான நாடகமும் அரங்கேறியது. பார்வையாளர்கள் மட்டுமல்ல, பங்கேற்பாளர்களும் இப்படியான நவீன நாடகத்திற்கு பழக்கப்பட்டவர்களில்லை. என்றபோதும் இந்த அதிசயம் நடந்தது.
பனுவல் எழுத்தும் வாசிப்பும்
ஒத்திகைக்கு முன்பாக இயக்குநர் நாடகப் பனுவலை வாசிக்கச் செய்தார். அது நாடகத்தைப் பற்றியும் அதன் தீவிரத்தன்மை பற்றியுமான புரிதலை உண்டாக்கியது. அப்போதே நடிகர்களும் தீர்மானமாயினர். எனக்கு ஹோட்டல் முதலாளி பாத்திரம் ஒதுக்கப்பட்டது.

மூலப்பிரதியில் எல்லா நிரபராதிகளும் ஆண்கள். இயக்குநர் அதில் மூன்று பேரை- வங்கி அதிகாரி, டாக்டர், மாணவன்- பெண்களாக்கினார். மூலப்பிரதியில் இன்னொரு பிரச்சனையும் இருந்தது. பாத்திரங்கள் எழுத்து வழக்கில் பேசினர். உதாரணமாக, முதல் காட்சியின் துவக்கத்தில் லாரி ஓட்டி பேசுகிற வசனமிது: “என்னுடைய லாரி ஒரு சினிமாக் கொட்டகையின் முன் நிற்கிறது. அங்கிருந்துதான் என்னைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.” நிஜ வாழ்க்கையில் எந்த ஊரிலும் யாரும் இப்படிப் பேசுவதில்லை. நாடகத்தில் லாரி ஓட்டி இந்த வசனத்தை இப்படிப் பேசுவார்: “என்னோட லாரி ஒரு சினிமா கொட்டகைக்கு முன்னாடி நிக்குது. அங்கேருந்து என்ன அப்படியே புடிச்சுக் கொண்டு வந்துட்டாங்க.”
இப்படியாக இயக்குநர் மொத்தப் பிரதியையும் பேச்சு வழக்கிற்கு மாற்றினார். இதை அவரே எழுதியிருக்கலாம். செய்யவில்லை. மாறாக எல்லா உரையாடல்களையும் பேச்சு வழக்கில் பேசி, அதை ஒலிப்பதிவு செய்தார். அந்த ஒலி நாடாக்களை நடிகர்களிடம் பகிர்ந்தளித்தார். அப்போது கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது எளிதாகவில்லை. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். தமிழில் ஒருங்குறி (unicode) புழக்கத்திற்கு வரவில்லை. முரசு அஞ்சல் போன்ற மென்பொருளைத் தரவிறக்கி அதை முகப்புத் திரையில் சிறிதாக்கி வைத்துக்கொண்டால் மட்டுமே தட்டச்சு செய்ய ஏலும். எழுதியதைப் படிக்கவும் இந்தச் சடங்குகள் வேண்டும். ஆகவே அந்நாளில் எல்லோரும் செய்ததை நாங்களும் செய்தோம். காகிதத்தில் பேனாவால் எழுதினோம். இப்படி எல்லோரும் தனித்தனியாக எழுதியதை, தேவையான படிகள் எடுத்து, வரிசைக்கிரமமாக அடுக்கினோம். இது தொடர்பாகவும் நாடகம் அரங்கேறும் வரையிலான உரையாடல்களுக்காகவும் ஒரு மின்னஞ்சல் குழுமம் ஏற்படுத்திக்கொண்டோம். (வாட்சப்பிற்கு இன்னும் காலமிருந்தது.) பிரதி எழுதுதல், படி எடுத்தல், பனுவலைப் பிணைத்தல் என்பதான இந்த தொடக்ககாலப் பணிகளில் எல்லோரும் ஈடுபட்டதால் குழுவில் ஒத்திசைவு உண்டானது. அது நாடகம் அரங்கேறும் வரையும் அதன் பின்பும் தொடர்ந்தது.
இப்போது புதிய பனுவலை வாசிக்கத் தொடங்கினோம். இந்த வாசிப்புப் படலத்திற்கும், தொடர்ந்த ஒத்திகைகள் அனைத்திற்கும் அரசின் கலாச்சாரத் துறைக்குச் சொந்தமான அரங்குகளை மணிக் கணக்கில் வாடகைக்கு எடுத்தோம். வாடகை சகாயம்தான். முன்னதாக இணையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். வார இறுதி நாட்கள் நாடகத்திற்கு என்றானது.
இந்தப் பனுவல் வாசிப்பில் உடனிகழ்வாக இரண்டு செயல்கள் நடந்தேறின. ஒன்று, பாத்திரங்களின் பின்புலத்தைக் கட்டமைத்தல். இரண்டு, வசனங்களின் அழுத்தம் தரவேண்டிய இடங்களை நிர்ணயித்தல்.
பாத்திரங்களின் பின்புலம்
நாடகத்தில் ஒன்பது நிரபராதிகளும் ஒரு கலகக்காரனும் வருகிறார்கள். அவர்களின் வயது, ஊர், குடும்ப வாழ்க்கை, ஆர்வங்கள் முதலான எதுவும் நாடகத்தில் வராது. ஆனால் அவற்றை, ‘கலந்து பேசி’ எல்லோருமாக முடிவு செய்தோம். உதாரணமாக, வங்கி அதிகாரி, நாகர்கோவில்காரர், கிறிஸ்துவர், கணவன் பள்ளி ஆசிரியர், இரண்டு பிள்ளைகள், கொஞ்சம் ஈசினோபிலியா பிரச்சனை உள்ளவர்…இப்படி அந்தப் பாத்திரம் உருப்பெற்றது. இப்படிக் கட்டமைக்கப்பட்ட பாத்திரங்களின் பின்புலம் எதுவும் பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை கதையின் மையக் கருவுக்கு அவசியமுமில்லை. என்றாலும் நடிகர்கள் தங்களை அந்தப் பாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள இவை பயன்படுமென்று கருதினார் இயக்குநர். மேலதிகமாக, நாடகத்தில் காலமும் தேசமும் சுட்டப்படுவதில்லை. எனினும் இது தமிழில் நிகழ்த்தப்பட்ட ஜெர்மானிய நாடகம். பாத்திரங்கள் உள்ளூர்த்தன்மை பெறவும் இந்தப் பின்புலம் உதவியது.

வசனங்களில் அழுத்தம்
நாம் பேசுகிறபோது இயல்பாகவே ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு தொடருக்கோ அழுத்தம் கொடுப்போம். இந்த வாக்கியங்களை நாமே உருவாக்குகிறோம். நாமே பேசுகிறோம். ஆதலால் எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நம் உள்ளுணர்வு அறியும். நாடகத்தின் பிரதியை நாடகாசிரியரும் இயக்குநரும் உருவாக்குகிறார்கள். ஆகவே எங்கே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நடிகர் அறியார். இதையும் கலந்து பேசி, எந்தெந்தச் சொற்களுக்கு அழுத்தம் நல்கினால் அதன் பொருள் துலங்குமோ அப்படிச் செய்தோம். இதுவும் பனுவல் வாசிப்பின்போதே முடிவாகியது. உதாரணமாக, ஹோட்டல் முதலாளி பேசுகிற வசனம் இது: “நாளைக்கு பல் டாக்டர்களோட மாநாடு ஒண்ணு நடக்கப்போகுது. அதில கலந்துக்கப்போற எல்லோருமே என்னோட ஹோட்டல்லதான் தங்கறாங்க. “இந்த வசனத்தில், ‘மாநாடு’, ’எல்லோருமே’, ’என்னோட’ ஆகிய சொற்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்று முடிவானது. அதன் மூலம் பாத்திரத்தின் தன் முனைப்பு வெளிப்பட்டது.
காட்சிப் பிரிப்பும் மனநிலையும்
இந்த முன்னேற்பாடுகள் முடிந்ததும் ஒத்திகைகள் தொடங்கின. இரண்டு அங்கங்களையும் தலா 13 காட்சிகளாகப் பிரித்தார் இயக்குநர். ஒவ்வொரு காட்சி முடிவிலும் திரை விழாது. இரண்டு அங்கங்களின் இடையில்தான் திரை விழும். கதைப் போக்கில் மாற்றம், பாத்திரங்களின் தன்மை மாற்றம், பகல்-இரவு மாற்றம் என்று பல காரணங்களையொட்டி காட்சிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு காட்சியும் ஒரு மனநிலையை பிரதிபலிக்கும். அந்த மனநிலையை வெளிக்கொணரும் விதமான நடிப்பை பாத்திரங்கள் வெளிப்படுத்துவார்கள். இந்தப் பகுப்பு முறைகளை பார்வையாளர்கள் கண்டுகொள்ளாமல் போவதற்கான வாய்ப்பே மிகுதி. அவர்கள் கண்டுகொள்ள வேண்டும் என்பதும் இயக்குநரின் நோக்கமில்லை. இவை எல்லாமாகச் சேர்ந்து நாடகத்தின் செய்தியை பார்வையாளருக்குக் கடத்த வேண்டுமென்பதே நோக்கம்.

உதாரணமாக, இரண்டாவது அங்கத்தில், கொலையாளியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பரஸ்பரக் குற்றஞ் சாட்டல்கள் நடக்கும். ஒவ்வொருவருக்கும் கொலை செய்வதற்கான காரணம் இருந்திருக்கும். அதை அவர்கள் மறுப்பதும் நடக்கும். இப்படியாக வங்கி அதிகாரி விசாரணை வலைக்குள் வருவார். அவர் முன்னாள் ஆளுநரின் தலைமைக் காவல் அதிகாரியின் ரகசியக் கணக்குகளைப் பராமரித்தார் என்பது பொறியாளருக்குத் தெரிந்திருக்கும். அதை அவர் சபையில் வெளிப்படுத்துவார். வங்கி அதிகாரியால் மறுக்க முடியாது. ஆனால் அதற்கான சமாதனத்தைச் சொல்லுவார். இந்தக் காட்சிக்கான மனநிலையாக பிரார்த்தனை என்பதை வைத்திருந்தார் இயக்குநர். இதை வெளிப்படுத்தும் குறியீடாகக் கை கோர்த்தல் என்பதையும். காட்சிப் போக்கில் விவசாயி, பேராசிரியர், ஹோட்டல் முதலாளி ஆகிய பாத்திரங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் கைகோர்ப்பார்கள். அந்தக் காட்சியின் முடிவில் வங்கி அதிகாரி ஒரு தேவாலயத்தில் பாவமன்னிப்புக் கோருகிற தொனியில் இப்படிச் சொல்வார்: “போலீஸ் ஆஃபிசரோட கணக்குகளை நான் பாத்துக்கிட்டிருந்தேன். அதை நான் ஒத்துக்கிறேன். இந்த ஒரு விஷயத்தில மட்டும் நான் அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமானவளா இருந்தேன். யார் வாழ விரும்புறாங்களோ அவங்களை, அவங்க மனசுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்யக் கட்டாயப்படுத்த முடியும்தானே?”-
இப்படிச் சொல்கிற போது அவர் குரல் உடையும். கைகள் கோர்த்திருக்கும்.
அசைவின்றி ஆகாது
நாடகத்தின் வசனப் பிரதிக்கு இணையானது அசைவுப் பிரதி (movement script). அரங்கில் எல்லா நேரமும் ஒன்பது, ‘நிரபராதிகள்’ இருப்பார்கள். முதல் அங்கத்தில் சாஸோனும் இருப்பான். இடையில் அரசப் பிரதிநிதிகளும் வருவார்கள். இவர்கள் மேடையில் எங்கேங்கே நிற்க வேண்டும்? அல்லது அமர வேண்டும், அல்லது படுக்க வேண்டும்? எங்கிருந்து எவ்விதம் நகர வேண்டும்? அப்போது அவர்தம் உடல்மொழியும் முகபாவமும் கையசைவும் எவ்விதம் இருக்க வேண்டும்? இவற்றின் ஆவணம்தான் அசைவுப் பிரதி.

இயக்குநர், மேடையை நீளவாக்கில் முன், பின், இடை என்று மூன்றாகப் பிரித்தார். பிறகு குறுக்காக, வலம், இடம், நடு என்று மூன்றாகப் பிரித்தார். ஆக, மேடை ஒன்பது துண்டுகளாகப் பிரிக்கப்பட்டது. மேடைக்கு நடுவே அட்சரேகை, தீர்க்கரேகை போல கண்ணுக்குத் தெரியாத கோடுகள் ஓடி இந்த ஒன்பது துண்டுகளை உருவாக்கின.
இப்போது இயக்குநர் ஓர் அட்டவணையை உருவாக்கினார். அதில் எல்லாப் பாத்திரங்களின் பெயர்களும் மேலே இருக்கும். ஒவ்வொரு பாத்திரமும் பேசுகிற வசனம் அந்தந்தப் பாத்திரத்தின் கீழ் இடம்பெறும். அது போது, அந்தப் பாத்திரம் எந்தத் ‘துண்டில்’ இருக்க வேண்டுமென்பதும், அவர் வெளிப்படுத்த வேண்டிய பாவமும் உடல் மொழியும் அந்த வசனத்தின் கீழே தரப்பட்டிருக்கும். அதற்கு நேராக, அதே நேரத்தில் மற்றைய பாத்திரங்களுக்குக் கீழ் அவரவர்கள் இருக்க வேண்டிய இடமும் வெளிப்படுத்த வேண்டிய பாவமும் தரப்பட்டிருக்கும். ஒரே வசனத்தின் இடையில் பாத்திரங்கள் இடம் மாறினால், அதுவும் அசைவுப் பிரதியில் இடம் பெறும்.
நான் ஏற்றிருந்த ஹோட்டல் முதலாளி பாத்திரம் விவசாயியிடம் சற்றுத் துச்சமாகவும், வேதாந்தம் பேசும் பேராசிரியரிடம் எரிச்சலுடனும் நடந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற உடல்மொழியும் பாவனைகளும் அசைவுப் பிரதியில் இருக்கும். சில பாத்திரங்கள் பேசும்போது ஹோட்டல் முதலாளியின் அசுவாரசியத்தை வெளிப்படுத்தும் விதமாகச் சில கையசைவுகள் இருக்கும். ஒத்திகைகளில், நான் இந்த அசைவுகளைத் தெரிந்தும்/மறந்தும் தவறவிட்டுவிடுவேன். இயக்குநரால் எல்லோரையும் கவனிக்க முடியாது. ஆனால் அவர் கையாட்கள் (movement coordinators) வைத்திருந்தார். அவர்கள் பிரதியிலிருந்து நான் தவறவிடும் ஒவ்வொரு அசைவையும் கண்டறிந்து கோள் சொல்பவர்களாக இருந்தனர். இயக்குநர் எல்லா நடிகர்களும் அசைவுப் பிரதியை அட்சரம் பிசகாமல் பின்பற்ற வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
இசைபட நடித்தல்
இசையமைப்பாளார் ஒரு கீ- போர்டுடன் மேடைக்குக் கீழே, நட்ட நடுவில், பார்வையளர்களுக்கு முதுகைக் காட்டி அமர்ந்து கொண்டார். இந்த நாடகத்தில் இரண்டு கூறுகள் முக்கியமானவை. ஒன்று- நாடகம், பாத்திரங்கள் இடையே மட்டுமல்ல, பார்வையாளர்கள் இடையேயும் குற்ற உணர்வைத் தூண்ட வல்லது. இரண்டு- நகரும் காலம். இவை இரண்டையும் குறிக்க முறையே இதயத் துடிப்பையும் கடிகார ஓசையயும் பயன்படுத்தினார் இசையமைப்பாளர். இவ்விரண்டு இசைக்கூறுகளும் நாடகம் நெடுகிலும் ஒலித்தன.
ஆரம்ப இசை, பார்வையாளர்களை நாடகத்தின் கதைக் கருவுக்கும் அதன் தீவிரத்தன்மைக்கும் தயாராக்கியது. அதில் பல கூறுகள் கலந்திருந்தன. அதிகாரத்தைக் குறிக்கப் போர் முரசு, கலகக்காரனைக் குறிக்க ஓலம், அரசு வழிமுறைகளில் இருக்கும் சடங்குத்தன்மையைக் குறிக்க அணிவகுப்பு, கொலையைக் குறிக்க துப்பாக்கிச் சத்தம், மதங்களின் பரிமாணத்தைக் குறிக்க தேவாலய மணியோசை. இவற்றுடன் முன் குறிப்பிடப்பட்ட இதயத் துடிப்பும் கடிகார ஓசையும் ஆரம்ப இசையில் இணைந்தன.
ஒத்திகை
ஒத்திகைகள் மூன்று மாதங்கள் கிரமமாக நடந்தன. முதலில் வட்ட வடிவில் கை கேர்த்து நிற்போம். அடுத்து உடற்பயிற்சி. இது ஒரே மாதிரி இராது. அன்றைய தினக் காட்சிப் பகுப்புக்கு ஏற்றாற்போல மாறும். அப்படியாக இந்தப் பயிற்சிகளை இயக்குநர் வடிவமைத்திருந்தார். இவை உடலைத் தயாராக்குவதற்கும் காட்சிக்கான மனநிலையைப் பெறுவதற்கும் உதவின.
தனித்தனிக் காட்சிகளின் ஒத்திகைகள் முடிந்ததும், மொத்த நாடகத்தின் தடையுறா ஒத்திகை (run-through) நடந்தது. அடுத்து ஆடையணி ஒத்திகை (dress rehersal). முதல் அங்கத்தில் நிரபரதிகளுக்கு உடை கறுப்பு-வெள்ளையாகவும், இரண்டாம் அங்கத்தில் சாம்பல் நிறமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. முதல் அங்கத்தில் தெளிவாகத் தோன்றிய அம்சங்கள் இரண்டாம் அங்கத்தில் ஐயத்திற்கிடமாக மாறுகிறது என்பதாக இதை வாசிக்கலாம். சாஸோனுக்கு சிவப்புக் கால் சராயும் கை இல்லாத டீ ஷர்ட்டும். காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முகத்தை மறைக்கும் முகக்கூடு இருந்தது. ஆடையணி ஒத்திகைகளில் இசையமைப்பாளரும் சேர்ந்துகொண்டார்.
நாடகம் ஹாங்காங் நகர்ப் பல்கலைக்கழகத்தின் வை-ஹிங் அரங்கில் நடந்தது. நாடகத்திற்கு இரண்டு-மூன்று நாட்கள் முன்னதாக இந்த அரங்கத்தை மேடை ஒத்திகைக்காக (stage rehearsal) வாடகைக்கு எடுத்தோம். சிறைக் கம்பிகளைச் சுட்டும் விதமாக சில கோல்கள் நடப்பட்டன.
இந்த அரங்கத்தின் ஒளி அமைப்பு சிறப்பானது. ஒளியமைப்புக்கு இயக்குநர் தனியாக ஒரு பிரதி எழுதி வைத்திருந்தார் (lighting script). அதை சில ஒத்திகைகளில் விளக்கவும் செய்தார். அது நடிகர்களின் பாடத்திட்டத்திற்கு புறம்பாக (out of syllabus) இருந்ததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடை ஒத்திகையில்தான் அதன் வீச்சு முழுவதுமாகப் புரிந்தது. அந்த அரங்கில் முன் குறிப்பிடப்பட்ட ஒன்பது ‘துண்டுகளில்’ ஏதேனும் ஒன்றிலோ அதற்கு மேற்பட்ட ‘துண்டுகளில்’ மட்டுமே ஒளியேற்றுவது சாத்தியம். ஓரிடத்தில் மட்டும் கற்றையான ஒளிக்கற்றையை (spot light) உண்டாக்கலாம். அதன் அண்டை அயலில் குறைவான ஒளியையும் கொண்டு வரலாம். இரவுக்கும் பகலுக்கும் நாடகத்தில் வேலை இருந்ததால் அதற்கேற்படி ஒளியை மாற்றலாம். எல்லா விளக்குகளின் பயன்பாட்டைச் சரிபார்க்க
ஒளிக் கட்டுப்பாட்டு அமைவுடன் (lighting console) கூடிய மேடை ஒத்திகை பயன்பட்டது.
இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். கடைசியாக நடந்த ஆடையணி ஒத்திகையும் அரங்க ஒத்திகையும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து (back-to-back) இரு முறை நடத்தப்பட்டன. அதாவது முதல் முறை முழு நாடகமும் (1:30மணி நேரம்) ஒத்திகை பார்க்கப்பட்ட பின், உடனடியாக இன்னொரு முறை முழு நாடகமும் ஒத்திகை பார்க்கப்பட்டது. இப்படி அரங்கேற்றத்துக்குச் சில நாட்களே இருந்தபோது நான்கு ஒத்திகைகள் நடந்ததால், எல்லோருக்கும் வசனமும், அசைவுகளும் தண்ணீர் பட்ட பாடாகிவிட்டது. இதனால், திரை மறைவில் நின்றுகொண்டு நடிகர்களுக்கு வசனங்களை எடுத்துக்கொடுக்கும் prompter தேவைப்படவில்லை.
அரங்கேற்றம்
குறித்த நாளில் நாடகம் அரங்கேறியது. ஹாங்காங்கில் சுமார் 2500 தமிழர்கள் இருக்கலாம். 250 குடும்பங்கள் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். 300 ஹாங்காங் தமிழர்கள் கட்டணம் செலுத்தி நாடகத்திற்கு வந்தனர். நாடகம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நாடகக் குழுவைப் பாராட்டினர்.
ஒரு வாரம் கழிந்தது. உடற்பயிற்சியும் வசனங்களும் அசைவுகளும் இல்லாமல், இலகுவான மனநிலையில் குழுவினர் அனைவரும் சந்தித்தோம். எல்லோருக்கும் இயக்குநரிடம் ஒரு கேள்வி இருந்தது- “அடுத்த நாடகம் எப்போது?”ஆனால் யாரும் அந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே இயக்குநர் சொன்னார்: “இனி நான் ஹாங்காங்கில் எந்த நாடகத்தையும் இயக்கப் போவதில்லை.” எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த முடிவு புதிய இயக்குநர்களை உருவாக்கியது. அதே ஆண்டில் மேலும் இரண்டு நவீன நாடகங்கள் ஹாங்காங்கில் மேடையேறின. அவை பற்றிப் பின்னொருக்கில்.

‘நிரபராதிகளின் காலம்’ நாடகக் குழு:
நடிகர்கள்: எம்.ஆர்.சீனிவாசன் [அச்சகத் தொழிலாளி]; கார்த்திக் ஹரிஹரன் [பொறியாளர்]; வி.ஆர்.முரளி நாராயணன் [பேராசிரியர்]; ராஜேஸ்வரி சீனிவாசன் [வங்கி அதிகாரி]; எஸ்.பிரசாத் [விவசாயி]; ஆர்.அலமேலு [டாக்டர்]; கே.சிவக்குமார் [லாரி ஓட்டி]; மு.இராமனாதன் [ஹோட்டல் முதலாளி]; எஸ்.வைதேஹி [மாணவர்]; கே.ஜி.சீனிவாசன் [சாஸோன்]; எம்.அப்துல் காதர் [மேஜர் (அங்கம் 1), காவலர் (அங்கம் 2)]; பிரகாஷ் நாகராஜ் [காவலர் (அங்கம் 1), காப்டன்(அங்கம் 2)].
உடை, ஒப்பனை: எஸ்.வேதேஹி.
இசை: ஆர்.பி.ஜெயராம்.
ஒளியமைப்பு, இயக்குநர்: பயணி தரன்.
தொடரும்…..