
அமெரிக்கன் கல்லூரியும் லாலா கடை அல்வாவும்
கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் புத்தகக் காட்சி நடந்தது. அவ்வமயம் காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. நிகழ்வு அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
அதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஐந்திலே ஒன்று எனது நூல், அது ஒரு காரணம். நான் அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவன், அது இன்னொரு காரணம். இதை அன்றைய உரையில் குறிப்பிட்டேன். ஸ்டாலின் ராஜாங்கம், அரவிந்தன் உட்பட என்னை அறிந்த எழுத்தாளர் சிலர் அரங்கில் இருந்தனர். அவர்தம் முகங்களில் வியப்பு படர்ந்தது. சில முகங்களில் எழுதியிருந்த கேள்வியை என்னால் வாசிக்க முடிந்தது: ‘இது கலை அறிவியல் கல்லூரி. இரும்படிக்கிற இந்த இடத்தில் பொறியாளனான உனக்கென்ன வேலை?’ – இதுதான் கேள்வி. நான் விடையளித்தேன்.
அந்நாளில் பள்ளிப் படிப்பு 11 ஆண்டுகளாக இருந்தது. பள்ளி இறுதியாண்டு எஸ்.எஸ்.எல்.சி எனப்பட்டது. பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் இணைக்கும் ஓராண்டுப் படிப்பு பி.யூ.சி (புகுமுக வகுப்பு) எனப்பட்டது. இதைக் கலை அறிவியல் கல்லூரியில் படிக்க வேண்டும். இந்த பி.யூ.சி.யைத்தான் நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன்.

1975 இந்தியாவிற்கு நெருக்கடியான ஆண்டு. அதாவது, ‘நெருக்கடி நிலை’ அமல்படுத்தப்பட்ட ஆண்டு. ஆனால் என்னளவில் அது ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டு. அதாவது நான் அமெரிக்கன் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட ஆண்டு. இந்த அனுமதி நிகழ்ந்த விதம் சற்று வித்தியாசமானது.
வைகைக் கரை வந்த கதை
எஸ்.எஸ்.எல்.சி வரை நான் படித்தது காரைக்குடி அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளியில். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கிறது அழகப்பா கலை அறிவியல் கல்லூரி. உடன் படித்த பலரும் பி.யு.சி.க்கு அங்குதான் போனார்கள். நான் போகவில்லை. காரணம் அப்பாவின் தொழில் நிமித்தம் குடும்பம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இடம் பெயர்ந்திருந்தது. அந்த ஊரில் கல்லூரி இல்லை. அருகாமை நகரம் சிவகாசி. அங்கு கல்லூரி இருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் பலரும் பி.யு.சி.க்கு அங்குதான் போனார்கள். நான் அங்கும் போகவில்லை. காரணம் அப்பா. அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அமெரிக்க ஆசை. அதாவது நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்க வேண்டுமென்ற ஆசை. இதைப் பள்ளிக் காலத்தில் சில முறை சொல்லியும் இருக்கிறார். அதில் ஒரு சிக்கல் இருந்தது. நிதிச் சிக்கல். அப்போது பி.யூ.சி வரை கட்டணம் இல்லை. ஆனால் மதுரையில் படித்தால் விடுதியில் தங்க வேண்டும். விடுதிக் கட்டணம் குடும்பக் கணக்கில் அதிகப் பற்றாக விழும். அது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் கிடைத்ததும் முதலில் அமெரிக்கன் கல்லூரியில் முயற்சித்துப் பார்க்கலாம் என்றார் அப்பா. காரைக்குடிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் இருக்கிறது மதுரை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையமாக மாறுவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். பெரியார் நிலையத்தில் இறங்கினோம். நேரே அமெரிக்கன் கல்லூரி போனோம். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களுக்கு பி.யூ.சி.யில் உடனடி அனுமதி (spot admission) வழங்கிக் கொண்டிருந்தார்கள். பி.யூ.சி.யில் ஏழு வகுப்புகள், மூன்று கணிதம், மூன்று உயிரியல், ஒரு வணிகம். வகுப்புக்கு 80 மாணவர்கள். நான் கேட்டது கணிதம். எனக்குக் கல்லூரியிலும் விடுதியிலும் அனுமதி கிடைத்தது.

அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அப்பா இரண்டு காரியங்கள் செய்தார். அவருக்கு நெருக்கமான நண்பர் திருப்புவனத்தில் இருந்தார். அவரிடம் அழைத்துப் போய் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இரண்டாவது, ரீகல் டாக்கீசுக்கு எதிரில் இருந்த பிரேம விலாஸ் என்கிற நெல்லை லாலா மிட்டாய் கடைக்கு அழைத்துப் போனார். இப்போது ரீகல் டாக்கீஸ் இல்லை, பிரேம விலாஸ் இருக்கிறது. இங்கே அல்வாவை வாழை இலையில் வைத்துத் தருவார்கள். வழுக்கிக்கொண்டு போகும். கைப்பிடி மிக்சரும் ஒரு தம்ளர் தண்ணீரும் இலவசம். அப்பா ஒரு பொதி அல்வா வாங்கிக்கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தோம். எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் இடம் கிடைத்ததில் அம்மாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மகிழ்ச்சியை விட அம்மாவுக்கு வியப்பு அதிகமாக இருந்தது. அம்மா சொன்ன காரணம் இதுதான். ”திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் உங்கள் அப்பா இன்றுதான் முதன்முதலாக இனிப்பு வாங்கி வந்திருக்கிறார்”.
அமெரிக்கன் கல்லூரி அன்னை
கல்லூரி விரைவில் திறந்தது. இப்போது வியத்தல் என் முறையாயிற்று. காரணம் அப்பாவல்ல, கல்லூரி. முதல் நாள், புத்தாக்க நாள் (Orientation Day). புகுமுக வகுப்பின் 560 மாணவர்களும் முதன்மை அரங்கில் (Main Hall) கூடியிருந்தோம். நிறைய ஆசிரியர்களும் இருந்தார்கள். வளாகத்தைச் சுற்றிக்காட்ட 15 புகுமுகர்களுக்கு ஒருவர் எனும் வீதத்தில் நிறைவாண்டு மாணவர்களும் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரு கையேடு வழங்கப்பட்டது. கல்லூரியின் வரலாறு, நோக்கம், பாடப்பிரிவுகள், கல்லூரியின் வரைபடம் போன்றவை அதில் இருந்தன. முதல் பக்கத்தில் இருந்தது ‘அமெரிக்கன் கல்லூரி அன்னை வாழ்த்து’. நிகழ்ச்சியும் அந்த வாழ்த்தில்தான் தொடங்கியது. பியானோ இசையுடன் மாணவப் பாடகர்களின் குரல் அரங்கை நிறைத்தது.
தமிழ் நிலை பெற்ற மதுரையிலே
தவழும் வைகை அருகினிலே
கமழ்நறுஞ் சோலை நடுவினிலே
கலைசேர் அன்னை அரசிருப்பாள்.
அமெரிக்காவின் கிறிஸ்துவ இறையடியார் சிலரால் 1881இல் மதுரைப் பகுதி மக்களின் உயர் கல்விக்காகத் தொடங்கப்பட்ட கல்லூரி இது. இந்த மண்ணில் நிலை கொண்டபோது அது கல்வியை அன்னையாய் வழிபட்டது. பாரத மாதாவுக்கு பள்ளி எழுச்சி பாடினார் பாரதியார். தமிழணங்கின் திறம் வியந்து வாழ்த்தினார் சுந்தரனார். அந்த வரிசையில் வந்தவர் பொன்.தினகரன். அவர் ‘அறிவாம் அமுதப் பாலூட்டும்’ அமெரிக்கன் கல்லூரி அன்னையைப் பாடிப் பரவசமானார். தழையத் தழையக் கட்டிய வேட்டியும் தோள் துண்டும் முறுக்கு மீசையுமாக இருப்பார் பொன்.தினகரன். அது எங்களுக்கு விரைவில் தெரிய வரும்.
புத்தாக்க நாளில் கல்லூரியின் நோக்கத்தை விளக்கினார் முதல்வர் எம்.ஏ.தங்கராஜ். Purificatus non consumptus என்கிற லத்தீன் சொற்றொடர்தான் கல்லூரியின் நோக்க வாசகம். இதை ஆங்கிலத்தில் “purified, but not consumed” என்று மொழி பெயர்க்கலாம். நெருப்பு பொன்னிலிருக்கும் கசடுகளை நீக்கும். அதைத் தூய்மையாக்கும். அதே வேளையில் ஒரு போதும் அது பொன்னை உட்கொள்ளாது. இதைத் தமிழில் ஒற்றைச் சொற்றொடரில் சொல்லிவிடலாம்- புடம் போடுதல். அமெரிக்கன் கல்லூரியும் மாணவர்களைப் புடம் போடும், அவர்களை நல்ல குடிமக்களாக்கும். இது ‘அமெரிக்கன் கல்லூரி அன்னை வாழ்த்’தில் இசையோடு வெளிப்படும்.
நெஞ்சின் நினைவு நேராக
நெருப்பில் இட்ட பொன்னாக
எஞ்சா வாய்மை உலையாக
எம்மை அன்னை புடமிடுவாள்
கவின்மிகு கட்டிடங்கள்
நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். எங்கள் குழுவிற்கு வழிகாட்டியாக வந்தவர் பீர் ஒலி. அவர் சொன்னார்: ‘பள்ளியில் நீங்கள் ஒரே வகுப்பறையில் அமர்ந்திருப்பீர்கள். ஒவ்வொரு பாட வேளைக்கும் வெவ்வேறு ஆசிரியர்கள் உங்கள் வகுப்பறைக்கு வருவார்கள். இங்கே ஒரு சின்ன மாற்றம். ஒவ்வொரு துறைக்கும் ஒரு கட்டிடம் இருக்கும். உங்கள் ஆசிரியர் அங்கே காத்திருப்பார். ஒவ்வொரு பாட வேளைக்கும் நீங்கள் அந்தந்தத் துறை சார்ந்த கட்டிடத்திற்குச் செல்ல வேண்டும்’. இப்படிச் சொல்லிவிட்டு அன்று வழங்கப்பட்ட கையேட்டில் இருந்த வரைபடத்தைப் பிரித்தார். அதில் கல்லூரியின் பாரம்பரியச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் முப்பரிமாணத்தில் துலங்கின.

சுற்றுலா தொடங்கிய இடம் முதன்மை அரங்கு (Main Hall). தமிழகத்தின் தலை சிறந்த கட்டுமானங்களில் ஒன்று. மைசூர் அரண்மனையை வடிவமைத்த ஹென்றி இர்வின் எனும் ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர்தான் இந்த அரங்கையும் வடிவமைத்தவர். கீழ்த் தளத்தில் அலுவலகங்களும் முதல்வர் அறையும் இருந்தன. மேல் தளத்தில் கூட்ட அரங்கு.
அருகாமையில் அமைந்திருப்பது பிங்ஹாம்டன் அரங்கு. பிங்ஹாம்டன் நியூயார்க் மாநிலத்தில் ஒரு நகரம். அந்த நகர மக்கள் வழங்கிய கொடையில் கட்டப்பட்டதால் அந்தப் பெயர். இங்கு உயிரியல் வகுப்புகள் நடக்கும். அந்நாளில் கணிதப் பிரிவு மாணவர்கள் உயிரியல் படிக்க வேண்டாம். போலவே, உயிரியல் மாணவர்களுக்குக் கணிதம் விலக்கு. ஆகவே அந்த ஓராண்டில் வகுப்புகளுக்காக நான் அந்தக் கட்டிடத்திற்குள் போனதில்லை. ஆனால் இலக்கியக் கூட்டங்கள் அங்குதான் நடக்கும். போயிருக்கிறேன். ஒரு முறை ந.பிச்சமூர்த்தி பேசினார். முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட கூட்டம் இந்த அரங்கில்தான் நடந்தது.
ஜேம்ஸ் அரங்கின் முழுப் பெயர் சீமாட்டி எலன் ஜேம்ஸ் அரங்கு என்பதாகும். அந்த அம்மையார்தான் இந்தக் கட்டிடத்திற்கு கொடை வழங்கியவர். இங்குதான் இயற்பியல், வேதியியல் வகுப்புகள் நடக்கும். விரிவுரை மேடையிலேயே சோதனைகள் நடத்தலாம். வேதியியல் வகுப்பறையில் கரும்பலகைக்கு மேலே பெரிய எழுத்தில் தனிம அட்டவணை (periodic table) இருக்கும். தினசரி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அடுத்தது மானுடவியல் அரங்கு. மொழிப்பாடங்கள் நடக்கும். கணித அரங்கில் இரண்டு கரும்பலகைகள் இருக்கும். மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் இழுக்கலாம்.

டேனியல் பூர் நூலகம் ஒரு மாபெரும் சேகரம். ஒரு இலட்சம் புத்தகங்களுக்கு மேல் இருந்தன. இப்போது இன்னும் அதிகமாயிருக்கும். பி.யூ.சி மாணவர்களுக்கு மூன்று அட்டைகள். அதாவது மூன்று புத்தகங்கள் எடுக்கலாம். பழைய சஞ்சிகைகளும் இரவலாகக் கிடைக்கும். அடுத்திருப்பது மணிக் கூண்டு. காண்டா மணி கட்டியிருக்கும். பாட வேளை முடிந்ததும் கயிற்றை இழுத்து மணியடிப்பதற்கு ஒரு பணியாளர் இருப்பார். அருகில் தேவாலயம். காலை இடைவேளையின் போது ஒரு சர்வீஸ் இருக்கும். யாரும் யாரையும் தேவாலயத்திற்குப் போக வேண்டுமென்று சொன்னதில்லை. உடன் படித்த பல கிறிஸ்துவ மாணவர்கள்கூட அங்கு போய்ப் பார்த்ததில்லை. அவர்கள் இடைவேளையில் எங்களுடன் தேநீர் அருந்திக்கொண்டு இருப்பார்கள்.
வாஷ்பர்ன், டட்லி, வாலஸ், ஜம்புரோ ஆகிய நான்கும் விடுதிகள். முதலிரண்டும் பட்டப் படிப்பு மாணவர்களுக்கு. பின்னிரண்டும் பி.யூ.சி மாணவர்களுக்கு. நான் தங்கியிருந்தது ஜம்புரோ விடுதியில்.
இந்தக் கட்டிடங்கள் செங்கல் புறத்தோற்றத்தோடு வெளிப்பூச்சின்றித் துலங்குபவை. இவை அனைத்தும் இந்தோ சார்சானிக் எனும் பராம்பரியக் கட்டிட வகைமையைச் சர்ந்தவை. அலங்கார வளைவுகள், குவிமாடங்கள், ஸ்தூபிகள், சிற்பங்கள், மினார்கள், வண்ணக் கண்ணாடிகள், ஆளுயுரச் சாளரங்கள் அனைத்தும் இந்து- இஸ்லாமியக் கட்டிடக் கலைகளின் கூட்டு வெளிப்படாக இருக்கும்.
அருள்மிகு ஆசிரியர்கள்
மாணவர் பலரும் அடிப்படை வசதிகள் மட்டுமே அமைந்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள். தனியார் பள்ளிகளின் பெருக்கம் பின்னாளில் நிகழ்ந்தது. எம்மில் பலரும் முதல் தலைமுறைக் கல்லூரி மாணவர்கள். முக்காலே மூணு வீசம் பேர் தமிழ்ப் பயிற்று மொழியில் படித்தவர்கள். பலருக்கும் பி.யு.சி.யிலிருந்துதான் ஆங்கில வழிக் கல்வி தொடங்கியது. அமெரிக்கன் கல்லூரியின் பெரும் பரப்பும், பிரம்மாண்டமான வகுப்பறைகளும், பாராம்பரியக் கட்டிடங்களும், நவீனக் கட்டமைப்பும் எங்களுக்கு அச்சமூட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல் நாளிலிருந்தே எல்லோராலும் கல்லூரிச் சூழலில் ஒன்ற முடிந்தது. இதற்கு ஆசிரியர்கள்தான் முக்கியக் காரணம். அவர்கள் மாணவர்களின் பிரச்சினைகளை முன்னுணர்ந்து மிகுந்த கரிசனத்துடன் நடந்து கொண்டார்கள்.
வேதியியல் பாடம் எடுத்தவர் பேராசிரியர் பி.டி.செல்லப்பா. துறைத் தலைவர். கல்லூரியின் பொருளாளராகவும் (bursar) இருந்தார். பின்னாளில் முதல்வருமானார். தனிம அட்டவணையைத் தலைகீழாகச் சொல்லுவார். எல்லா மேதைகளையும் போல் எளிமையானவர். மாணவர்களின் முகக் குறிப்பைப் படித்தே எத்தனை பேருக்குப் புரிந்தது என்று கண்டுகொள்ளும் ஆற்றல் மிக்கவர்.

இயற்பியல் பயிற்றுவித்தவர் ராஜ்குமார். இளைஞர். செல்லப்பா கையை வீசிக்கொண்டு வகுப்புக்கு வருவார். ராஜ்குமார் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு தேர்வுக்கு வருவது போல் முன் தயாரிப்புகளுடனும் குறிப்புகளுடனும் வருவார். இருவரது நோக்கமும் ஒன்றுதான். மாணவர்களுக்குப் புரியும்படியாக பாடம் சொல்ல வேண்டும்.
சந்திரபாபுவும் பாண்டியராஜாவும் கணித ஆசிரியர்கள். சந்திரபாபு, வாலஸ் விடுதியின் கண்காணிப்பாளராகவும் இருந்தார். எப்போது வேண்டுமானாலும் அவரது விடுதி அறைக்குப் போகலாம். என்ன ஐயமிருந்தாலும் கேட்கலாம்.
பாண்டியராஜா ஆரம்ப கால வகுப்புகளை சரளமாகத் தமிழிலேயே எடுத்தார். பேசுகிற வேகத்தில் எழுதுவார். பின்னாளில் துறைத் தலைவராகவும் கல்லூரியின் துணை முதல்வராகவும் ஆனார். அதில் வியப்பில்லை. அவருக்கு ஒரு தமிழ் முகம் இருந்திருக்கிறது. அதைக் கல்லூரிக் காலத்தில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. 40 ஆண்டு கால உழைப்பில் சங்கத்தமிழ் செய்யுட்களுக்குத் தொடரடைவுகளையும் அருஞ்சொற் களஞ்சியத்தையும் உருவாக்கியிருக்கிறார். அதற்குக் கணினி வாயிலாகப் புள்ளியியல் முறைமையைப் பயன்கொண்டிருக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை இவரது அனைத்து ஆக்கங்களையும் ‘சங்கம்பீடியா’ எனும் வலைப்பக்கத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.

தமிழாசிரியர் பிரணதார்த்தி ஹரன், சமஸ்கிருதமும் படித்தவர். முதல் வகுப்பில் ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’ என்கிற கம்பனின் அவையடக்கப் பாடலை ஒரு பாடவேளை முழுதும் விளக்கினார். அது பாடத்தில் இல்லை என்பது வேறு. பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். வகுப்பறையில் அதைப் பற்றிப் பேச மாட்டார். என்றாலும் விவரமறிந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் அவர் நிகழ்த்திய ஒரு தொடர் சொற்பொழிவுக்குப் போயிருக்கிறேன்.
ஆங்கில ஆசிரியர் ஜே.வசந்தன். எங்களுக்கு ஜேவி சார். அவர் விரிவுரையாளர் மட்டுமல்ல. எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் கார்ட்டூனிஸ்ட்டும் ஆவார். அவரது கட்டுரைகள் ‘காரவன்’, ‘ஷங்கர்ஸ் வீக்லி’ இதழ்களில் வெளியாகும். பாலிவுட் நட்சத்திரங்களை அவர் வரைந்த கார்ட்டூன்களும், அவரது சினிமா கட்டுரைகளும் ‘பிலிம் பேர்’, ‘ஸ்டார் & ஸ்டைல்’ இதழ்களில் வெளியாகும். அவர் ஆங்கில நாடகங்களையும் இயக்கி வந்தார். பிங்ஹாம்டன் ஹாலின் திறந்த வெளி முன்னரங்கில் பார்த்த ஹாம்லட் நாடகத்தை எப்படி மறக்க முடியும்? பின்னாளில் (1981) அவர் தொடங்கிய Curtain Club பல ஆண்டுகளுக்கு மதுரை ரசிகர்களுக்கு ஆங்கில நாடகங்களை வழங்கி வந்தது.
அப்போது மதுரைப் பல்கலைக்கழகத்தில் பி.யூ.சி மாணவர்களுக்கு ஏழு நூல்கள் ஆங்கிலத் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் சுருக்கப்பட்ட பதிப்பு அவற்றுள் ஒன்று. கதைகளை அதன் பின்னணி விவரங்களோடு சொல்லுவார். அத்தோடு நிறுத்த மாட்டார். அந்தக் கதைகளின் முழு வடிவத்தை நூலகத்தில் எடுத்து வாசிக்கச் சொல்வார். அது எங்களில் பலருக்கு பெரிய சாளரத்தைத் திறந்தது. ‘இந்து’ நாளிதழை தினசரி படிக்கச் சொல்லி ஊக்குவிப்பார். ஜி.கே.ரெட்டி எழுதிய கட்டுரைகளை வகுப்பில் வாசித்திருக்கிறார்.

மூவிலாண்ட், ரீகல், பரமேஸ்வரி திரையரங்குகளில் ஆங்கிலப் படங்கள் வரும். ஜேவி ஹிட்ச்காக்கின் ரசிகர். Rear Window மதுரைக்கு வந்தபோது போய் பார்க்கச் சொன்னார். பலரும் பார்த்தோம். அடுத்த வகுப்பில் அந்தப் படத்தின் திரை மொழியைக் குறித்துப் பேசினார். சிலர் மீண்டும் அந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆர்வம் வந்ததும் அவரால்தான்.
ஜேவிக்கு அவரது உயரம் தெரியும். ஆங்கிலச் சொற்களைக் கூட்டிக் கூட்டிப் படித்துக்கொண்டிருந்த எங்களின் உயரமும் தெரியும். ஆனால் அவரது பேச்சில் எந்தத் தோரணையும் இராது. தோளில் கை போட்டுக்கொண்டு பேசும் நண்பனின் தொனிதான் இருக்கும்.

ஒருமுறைதான் இனிப்பு வரும்
எல்லா வசந்த காலமும் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும்? பி.யூ.சி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்தன. எனக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. தமிழகத்தில் அப்போது எட்டு பொறியியற் கல்லூரிகள்தாம் இருந்தன. டிரங்கு பெட்டி, ஜமுக்காளம், தலையணை சகிதம் என்னை இராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் கோவைக்கு அழைத்துப் போய் CITயில் சேர்த்துவிட்டார் அப்பா. ஆனால் யாருக்கும் இனிப்பு வாங்கித் தரவில்லை. CITயில் கடைசி செமஸ்டர் படிக்கிறபோதே அரசுத் துறையில் வேலை கிடைத்தது. அப்பா அவரது முகவரிப் புத்தககத்தில் என் பெயருக்குக் கீழே ASSISTANT ENGINEER, PWD என்று தலைப்பெழுத்தில் எழுதி வைத்தார். பிற்பாடு தனியார் துறைக்கு மாறினபோது அந்தப் பொறுப்பின் பெயரை எழுதிக்கொண்டார். 1995இல் ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தேன். அம்மாவுடன் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார். ஆனால் இந்த சந்தர்ப்பங்கள் எதிலும் அப்பா எங்களுக்கு இனிப்பு வாங்கித் தரவில்லை. அவரளவில் அமெரிக்கன் கல்லூரி என்னை அனுமதித்துக்கொண்ட நாள்தான் லாலா கடையில் அல்வா வாங்கிக் கொண்டாடுவதற்குத் தகுதியான நாள். மற்றவை அதன் பின் விளைவுகள், அதனால் அல்வா அவசியமில்லை என்று அவர் கருதியிருக்கலாம்.
அமெரிக்கன் கல்லூரியை நிர்மாணித்தவர்களில் ஒருவர் அருள்தந்தை ஜம்புரோ. சாதி, மத, இன அடையாளங்களைத் தாண்டி எளிய மனிதர்களுக்கு உயர் கல்வி கிடைக்கவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அது நிறைவேறி வருகிறது. அமெரிக்கன் கல்லூரியில் புடம் போடப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உலகெங்கும் பரவி நிற்கிறார்கள். தத்தமது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயன்மரமாய் பழுத்துப் பலன் தருகிறார்கள்.
தொடரும்….
– Mu.Ramanathan@gmail.com
மிக அருமை
ஒவ்வொரு புதிய படைப்பிலும் ஆசிரியரின் எழுத்துக்களின் ஜொலிப்பு அதிகமாவதைக் காணலாம்
இவருடைய இந்த படைப்பு அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில் முதன்மையாக இடம்பெற வேண்டிய ஒரு பொக்கிஷம் என்றே கருதுகிறேன்
அமெரிக்கன் கல்லூரி பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனுடைய சிறப்புகளை இப்பொழுதுதான் அறிந்தேன்
‘புத்தாக்க நாள்’ மற்றும் ‘அமெரிக்கன் கல்லூரி அன்னை வாழ்த்து’ இரண்டும் ஒரு அற்புதமான விஷயங்கள். பாராட்டுதலுக்குரியது
இதுவரை செய்யவில்லை என்றால் இனியாவது எல்லா கல்லூரிகளும் இந்தப் பழக்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்
அடுத்த கணங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் ஆசிரியரே
????????✒✒????????????