
பசித்த மானிடம் அல்லது தரித்திரத்தை எழுதுதல்:
1)
கரிச்சான் குஞ்சுவின், “பசித்த மானிடம்” படித்தேன். தொழுநோய் பீடித்தவனை மையமாக வைத்து சொல்லப்பட்ட கதை. இதனூடாக நாற்பது ஆண்டுகால [கும்பகோண] நகர மனிதர்களின் வாழ்வும் அகமும் புறமுமாகச் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா இறந்துவிட்ட நிலையில் கைவிடப்பட்ட குழந்தையான கணேசனை சத்திரத்து மாமி ஒருவர் ஆதரவு கொடுத்து வளர்க்கிறார். இருக்க இடமும் மூன்று வேளை போஜனமும் கிடைக்கிறது. வேறென்ன வேண்டும் ஒரு பயலுக்கு? நன்றாக வளர்கிறான். ஆனால் மனிதர்கள் சும்மா இருந்தாலும் வாழ்க்கை அவர்களை சும்மா விடுவதில்லை. ராயர் ஒருவர் மூலம் அறிமுகம் ஆகும் வாத்தியார் அவனை படிக்க வைத்து ஆளாக்க அழைத்துப் போகிறார். அந்த ஊரின் பெயர் தோப்பூர்.
அங்கேதான் மாச்சி, அம்மு, கிட்டா, கணக்கய்யர், கிட்டாவின் அம்மா, கிட்டாவின் ரெண்டுங்கெட்டான் அண்ணன், என எல்லாரும் அறிமுகம் ஆகிறார்கள். நாவலின் பிரதான கதாபாத்திரங்கள் இவர்கள். ஒரு ஆசார அக்ரஹாரத்து பிள்ளைபோல கணேசன் வளர்கிறான். எல்லோருக்கும் செல்லப்பிள்ளை அவன். அவனுடைய உபநயனக் கல்யாணத்தை ஊரே சேர்ந்து விமரிசையாக நடத்துகிறது. அதில் வரும் பணம் அவன் வெளியூரில் தங்கிப் படிக்க வைக்க காரணியாக ஆகிறது. ஆனால் அந்த நிகழ்வேதான் அவன் வாழ்க்கை தடம் புரளவும் காரணமாகவும் அமைகிறது.
வயதுக்கு மீறிய வளர்ச்சி உடைய கணேசன் ரவுத்தர் (ராவுத்தர் அல்ல) ஒருவரின் பார்வையில் பட்டு அவனது அந்தப்புர நாயகன் ஆகிறான். படிப்பு கசக்கிறது. அதுவரை தன்னை ஆதரித்த மனிதர்களை கேள்விகள் ஏதுமில்லாமல் கைவிடுகிறான் கணேசன். உடல் கொள்ளும் வேகம் முன்பு மனிதர்கள் இற்றுப் போகிறார்கள். மனம் காமத்தின் கட்டற்ற வெளியில் அலைபுரள்கிறது. எல்லாம் தணியும்போது வாழ்க்கை ஒரு நிலைக்கு வந்தாலும் நாம் செய்த வினைகளின் எதிர் வினைகளுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்தானில்லையா?
பார்க்கிற ஆண்களும் பெண்களுமாக அவனை காமத் துணையாக தேர்கிறார்கள். அவனை நுகர்ந்து தெருவில் வீசியும் போகிறார்கள். உடல் கொள்ளும் மூர்க்கம் மெல்ல மெல்லத் தணியும்போது நம் அக மனதின் கதவு திறக்கிறது. பின்பு அது நம் முன் பரப்பும் கேள்விகளுக்கு நம்மிடம் விடையேது? அகம் கொள்ளும் விஸ்தீரணம் முன்னே வெறுமனே மண்டியிட்டு சரணடைய வேண்டியதுதான். மனிதர்களுக்கு வேறு மார்க்கமில்லை.
2)
நூறு வருட தமிழ் உரைநடைப் பரப்பில் சக பாலின விழைவை இப்படி கலையின் ஆன்மீக தளத்தில் வைத்துச் சொன்ன நாவல் வேறொன்றுமில்லை. இங்கேயும் கதை சொல்லி பாலுணர்வு தரும் அசட்டு விரசத்தை அள்ளித் தெளிக்கவில்லை. மாறாக அதை மனித உடல்களின் களியாட்டமாக மாற்றுகிறார். கணேசனும் சுந்தரியும் வீட்டுக்குள் புணரும் காட்சியை அவ்வளவு அழகுணர்ச்சியோடும் பொறுப்போடும் எழுதிப் போகிறார் கரிச்சான் குஞ்சு. எளிய மனங்கள் தேர்ந்து கொள்ளும் களியாட்டம். மனிதன் தெரிந்தேதாம் காமக் களியாட்டங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான் இல்லையா? இதிலிருந்து மனிதர்கள் தப்பவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. காமம் வாழ்வு விரிக்கும் வலை. அதில் தப்பியவர்கள் சதவீதம் மிக மிக குறைவு. நாவல் தன்போக்கில் கொள்ளும் விரிவுள் மனம் விகசித்து உறைந்து போனது உண்மை.
3)
வாழ்வின் ஆதாரப்புள்ளி எது? ஆசையா, பசியா, காமமா, பணமா, உறவுகள் தரும் பரமபத உணர்வு நிலையா, வெறுமையா, எது மனிதனை செலுத்தும் செயல் விசை? அத்தனை தள்ளட்டங்களுக்குப் பிறகும் அற்றுப் போகாத மனித ஆசையை என்னவென்று சொல்வது?
அர்த்தமின்மையின் செயல்பாடுகளால் வாழ்வை மூச்சுத்திணற வைக்கும் மனிதன் தன் இருப்பின் வழி நிலைநாட்ட விரும்புவதென்ன? பொறுப்பின்மை, வித்யா கர்வம், அந்தஸ்து, செல்வ வளம் தரும் அதிகாரம், பெண்ணாசை என மனிதனின் சகல மேன்மை கீழ்மைகளையும் அப்பட்டமாக தோல் உரிக்கும் நாவல் இது.
தொழுநோய் பீடித்தவனின் வாழ்க்கைப் பாடுகள் அவ்வளவு எளிதானதல்ல. வாழ்க்கை நம்மைத் தேர்ந்தெடுப்பது போலத்தான் நோயும் ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறதா? ‘நோய் என்பது ஒருவனின் தனிப்பட்ட குணாம்சம் உருவாக்கும் உப விளைவு’ என்கிறார் அரவிந்த அன்னை. எனில் கணேசனை பிடிக்கும் தொழுநோய் அவனது குணாம்சத்தின் விளைவா? பல கோடி அணுக்களின் களி நடனம் இந்த வாழ்வு எனில் நாம் அந்த நடனத்தை மனதின் கோணல் தந்திரங்களால் சகிக்க முடியாத ஒன்றாக்கிவிடுகிறோமா? விடையில்லை. பெருமூச்சு ஒன்று மட்டும் தான் மிஞ்சுகிறது.
4)
நாவலில் இரண்டு விஷயங்கள் என்னைப் பிரம்மிக்க வைத்தன. ஒன்று கணக்கய்யரின் விவேகம். ஊரின் பாதி சொத்தை வளைத்துப் போடுகிறார் அவர். சகலரையும் சுரண்டிக்கொழுத்து தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரப் பிரம்மப்பிரயத்தனப்படும் கணக்கய்யர் தாம் காலப்போக்கில் தனது ஆழத்துள் உறைந்து கிடக்கும் இன்னொரு மனித முகம் காட்டுகிறார். இன்னொன்று, கிட்டாவின் ரெண்டுங்கெட்டான் அண்ணன். இழவு வீட்டில் தட்சணை கேட்டு வாங்கி யாசிப்பவன். மனித மரியாதை என்பதையே என்ன என்று அறியாதவன். இழவுச் சோறு விரும்பி உண்பவன். அவனுக்கும் ஒரு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறாள் கிட்டாவின் அம்மை. கிட்டாவின் அண்ணன் இறந்து போகும்போது நினைத்துப் பார்க்கவே முடியாத பொன்னை சேமிப்பாக கொடுத்துவிட்டு போகிறான். மனித ஆளுமை என்பதுதான் என்ன? அவன் ஆவலாய்ப் பறந்து சேர்த்து வைத்ததை அனுபவிக்காமல் போவதுதான் வாழ்க்கையா? அண்ணனின் சேமிப்பை மட்டும் அல்லாமல் தனது அண்ணனின் மனைவியையும் கிட்டா தன் காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறான். கிட்டாவின் அண்ணன் மனைவி பற்றிய சித்திரத்தை எழுதாமலே கரிச்சான் குஞ்சு கடந்து போகிறார். ஆனால் கணேசனின் துயரத்தை விடவும் வாசிப்பவரின் கவனத்தைக் கோருவது அந்தப் பெண்ணின் துயர இருப்பு. கிட்டாவின் அண்ணன் இறக்கும்போது நாவல் ஒரு துன்பியல் கட்டத்தை நோக்கி நகர்கிறது. தன்னை அண்டி வாழ்ந்த பிற சமூகங்களை, மனிதர்களை, பிராமண சமூக மனிதர்கள் எவ்விதம் சுரண்டினார்கள் என்கிற சமூக விமர்சனத்தையும் நாவலாசிரியர் போகிற போக்கில் அழுத்தமாக சொல்லிப் போகிறார்.
5)
காமம் தீர்ந்து போய்விட்டால் மனிதன் ஒன்றுமில்லாததாகி விடுகிறானா? மனிதன், தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்கள் கரைந்து போனால் தன்மதிப்பு இல்லாதவனாக மாறி விடுகிறானா? எனில் அவ்வளவு அற்பமானவனா மனிதன்? அவ்வளவு அற்பமானதா இந்த மானிட வாழ்வு? நாவல் எழுப்பும் ஆதாரக் கேள்விகள் இவைதான்.
6)
நாவல் என்பது வெறுமனே கதை சொல்லல் மட்டும் அல்ல. மனித வாழ்வில் ஊடாடும் பரமபத நிலையாமைகளின் குறுக்கு விசாரணை என்றும் கொள்ளலாம். எப்படி சொன்னாலும் மனித வாழ்வைத்தான் ஒரு படைப்பாளி சொல்ல விழைகிறான். அதை எவ்விதம் சொல்கிறான் என்பதில் அடங்கி உள்ளது கலையின் பெறுமதி. ஒரு கால் டம்ளர் சோப்பு நுரை ஆயிரக்கணக்கான வண்ணக் குமிழ்களை உருவாக்கிவிடும். இந்த நாவலை காற்றில் மிதக்கும் சோப்பு நுரைக் குமிழ்களின் கனமின்மையோடு சரளமாக சொல்லிப் போகிறார் கரிச்சான் குஞ்சு. (ஆனால் அவ்வளவு இலேசானதில்லை இந்த நாவல்) வண்ண வண்ணமாய் இலக்கற்று காற்றில் மிதக்கும் அதன் இருப்பும் இருப்பின்மையும் தான் மனித வாழ்வென்று சொல்லலாம் இல்லையா?
***
தேடல் உள்ள ஒரு படைபாளியால் மட்டுமே பல லட்சங்கள் வருமானம் உள்ள சினிமா துறையை விட்டுவிட்டு ஆவணப் படம் எடுக்கப் போக முடியும். அப்படியான தேடல் உள்ள ஒரு படைப்பாளி ஹேமந்த் சதுர்வேதி. உங்களில் பலர் இந்தப் பெயரை கேள்விப்பட்டு இருக்க முடியாது. அல்லது அகன்ற சினிமா திரையில் ஓரிரு நிமிடங்கள் ஹேமந்த்தின் பெயரும் மின்னிக் கடந்து போயிருக்கக் கூடும்.
ஹேமந்த் சதுர்வேதியின் அப்பா இந்திய விமானப் படையில் பணியாற்றியவர். எனவே பல இடங்களுக்கு பணி மாறுதல் அவருக்கு இருக்கும். அப்படியாக அவருக்கு அஸ்ஸாமில் பணி மாறுதல் கிடைத்தது. அப்போது ஹேமந்துக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேமந்த்தின் குடும்பம் சினிமாவுக்குப் போவது வழக்கம். அப்படியாக அவர்கள் ஒரு இந்திப் படத்துக்கு போனார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே படம் பாதியில் நிறுத்தப்பட்டது. காரணம் படத்தின் ரீல்கள் எரிந்துபோனதுதான். படத்தை முழுவதுமாக பார்க்க முடியாத சோகத்தில் ஹேமந்த் வீடு திரும்பினார். காணக் கிடைக்காத அரிய திரைப்படங்களைக் கூட எப்படியாவது பார்த்துவிட முடியும் என்கிற இந்த ’ஓ.டி.டி’ காலகட்டத்தில் கூட அவரால் அந்தப் படத்தை இன்னும் பார்க்கமுடியவில்லை. 12 பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்ட பிறகும் கூட என்பதும் வாழ்க்கையின் நகைமுரண் அல்லவா?
ஹேமந்த் சதுர்வேதி பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களுல் ஒருவர். டெல்லியின் ஜமியா மில்யா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் காட்சித் தொடர்பியலில் முதுகலைப் படிப்பை முடித்த அவர் 2002-ஆம் ஆண்டு இந்தியின் புகழ்பெற்ற இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் Company படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். பின்னர் அபர்னா சென், நஸ்ருதீன் ஷா, விஷால் பரத்வாஜ், ஃபர்ஹான் அக்தர், ரென்சில் டிசில்வா என பல முக்கியமான இயக்குநர்களுடன் பணியாற்றினார். 13 வருடங்கள். 12 படங்கள். இதுதான் அவரது சினிமா பயணத்தில் அவர் ஒளிப்பதிவு செய்த படங்கள்.
2015-ஆம் ஆண்டு படப்பிடிப்புக்காக அவர் பூடான் சென்றார். படப்பிடிப்பு ஒரு வாரத்துக்கு முன்பே முடிந்துவிட குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். ஒருவார காலம் பூடானில் தங்கியிருந்த ஹேமந்த் அங்கிருந்த புகழ்பெற்ற புத்த மடாலயங்களை தனது புகைப்படக்கருவியில் படம்பிடிக்க ஆரம்பித்தார். அந்த ஒரு வாரகாலத்தில் அவர் செய்த வேலை வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை. அவர் அந்தப் பயணத்தின் முடிவில் மும்பைக்குத் திரும்பினார். “இனி ஒளிப்பதிவாளராக பணியாற்றப்போவதில்லை…” அவர் உறுதியானதொரு முடிவை எடுத்தார். அதன்பிறகு இன்று வரை அவர் சினிமாவுக்கு திரும்பிப் போகவில்லை.
சரி, ஒளிப்பதிவாளராக பணியாற்றப்போவதில்லை என்று முடிவெடுத்தாயிற்று. அடுத்து என்ன? ஹேமந்த்துக்கு சவாலான பணிகள் எப்பவும் பிடிக்கும். ஆவணப்பட இயக்குநராக பணியாற்ற முடிவு செய்தார். பழைய பம்பாய் நகரத்தின் ஒளிப்பதிவாளர்களைப் பற்றிய ஆவணப்படத்தை முதலில் எடுத்து முடித்தார். எல்லாம் கையில் இருந்த சேமிப்பை வைத்துத்தான். அடுத்து, வாரணாசியின் இந்துஸ்தானி இசை மரபின் குரு-சிஷ்ய மரபையும் அதன் தொடர்ச்சியைப் பற்றியும் ஆவணப்படம் எடுத்தார். லட்சங்கள் கொழிக்கும் ஒளிப்பதிவாளரை விட ஒரு ஆவணப்பட இயக்குநராக அவர் மிகுந்த உத்வேகத்துடனும் மனத் திருப்தியுடனும் பணியாறறினார்.

உத்திரப்பிரதேசத்தை பூர்வீகமகக் கொண்டவர் ஹேமந்த் சதுர்வேதி. ஆகவே வருடா வருடம் கும்பமேளா திருவிழாவுக்குச் செல்வது அவரது வழக்கம். உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நேரம். வழக்கத்தை விட கும்பமேளா விழா விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று பொறுப்பேற்ற அரசு எல்லாவிதத்திலும் தன் மூக்கை நுழைக்க, அந்த வருடம் கும்பமேளாவை தவிர்க்க முடிவு செய்தார் ஹேமந்த். வேறு என்ன செய்யலாம் என்று உள்ளுக்குள் எண்ணங்கள் ஓடின. மனம் போன போக்கில் அலகாபாத்தின் தெருக்களில் நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பழைய ஒற்றை சினிமா தியேட்டர்கள் கண்ணில் பட்டன. அவற்றின் வடிவமைப்பும் பழமையும் ஹேமந்த்தை கவர்ந்தன. ஆம், அவருடைய அடுத்த திட்டம் தொடங்கிவிட்டது. உத்திரப்பிரதேசத்தின் பழமையான, இன்னும் மூடப்படாமல் உயிர் தரித்திருக்கும் ஒற்றைத் திரையரங்குகளை புகைப்படங்களின் வழி ஆவணப்படுத்த ஆரம்பித்துவிட்டார். கேட்பதற்கு மிக எளிதான ஒன்றாக இருக்கும் இந்தத் திட்டம் சாதாரணமான ஒன்றல்ல. ஹேமந்த் இதுவரை 12 மாநிலங்களில் 32 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளார். ஏறத்தாழ 625 ஒற்றைத் திரையரங்குகளை படம்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். புகைப்படங்களை வைத்து டெல்லி, மும்பை நகரில் புகைப்படக் கண்காட்சியும் நடத்தியுள்ளார். கையில் செலவுக்கு பணமும், கேமராவும் இருந்துவிட்டால் தனது நான்கு சக்கர வாகனத்தில் புறப்பட்டுவிடுவார் ஹேமந்த். சென்றடையும் நகரத்தின் ஒற்றைப் பழமை போர்த்திய திரையரங்குகளைக் கண்டடைவது அவ்வளவு சிரமமான வேலை இல்லை ஹேமந்த்துக்கு. தேநீர்க்கடையின் முகம் தெரியாத மனிதர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், உதிரி மனிதர்கள் என அவருக்கான செய்தியை தகவல்களை ஏந்திக்கொண்டு அந்த எளிய மனிதர்கள் காத்திருப்பார்கள். பின்னர் திரையரங்குகளை புகைப்படங்களாகவும் தகவல்களாகவும் ஆவணப்படுத்துவது மட்டுமே தன்னுடைய வேலை என்கிறார் ஹேமந்த். திரையரங்குகளின் கட்டுமானம்[Architecture], கட்டுமானங்களின் வழியே வெளிப்படும் அழகியல், அதன் வழிவெளிப்படும் [முதலாளி] மனிதர்களின் குணாம்சம், புரெஜெக்டர் ஆபரேட்டர்கள், திரையரங்குகளின் பெருக்கத்தால் உருவான உதிரி தொழிலாளர்கள், அதுசார்ந்த வணிகம் எல்லாமும் ஹேமந்த்தின் ஆவணப் புகைப்படங்களில் அழகாக வெளிப்படுகின்றன.
“பணம் கொழிக்கும் பாலிவுட்டில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு இப்படி அலைவது கஷ்டமாக இல்லையா?” என ஹேமந்த்திடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. 13 வருடங்கள் சினிமாவில் பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் சவாலாக, கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற உத்வேகம் இருந்தவரை நான் சினிமாவில் பணியாற்றினேன். எனக்கு இந்த வேலை சலிப்பு தர ஆரம்பித்த உடனே நான் தொடர்ந்து சினிமாவில் பணியாற்றத்தான் வேண்டுமா என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.மேலும் சினிமாவில் செய்த வேலைக்கான சம்பளத்தைப் பெற போராடுவதும், தனது குழுவினருக்கு சம்பளம் பெற்றுத்தர போராடுவதும் எனக்கு சங்கடத்தை அளித்த விஷயங்கள். இவையெல்லாமும் நான் சினிமாவில் இருந்து விலக பிரதான காரணங்கள். இப்போது நிலையான வருமானம் இல்லை என்றாலும் மனத் திருப்தியும் தன் நேரம் தன் கட்டுப்பாட்டில் இருப்பதும் நிறைவான விஷயங்கள் என்று அவர் பதில் சொன்னார்.
ஆம், ஆத்ம திருப்தியும் தன்னுடைய நேரம் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என சிந்திப்பதும் ஒரு கலை மனசு. ஹேமந்த் சதுர்வேதி ஒரு கலைஞர். அசலான கலைஞர். அதனால்தான் அவர் தன்னுடைய ஒளிப்பதிவாளர் பணியை விட்டுவிட்டு ஆவணப்பட இயக்குநராக செயல்பட முடிந்திருக்கிறது. ஹேமந்தின் ஆவணப் புகைப்படங்களை நிறைய பார்த்திருக்கிறேன். அவரது ஆவணப்படங்களை காண மிக ஆவலாக இருக்கிறேன்.
தொடரும்…