குணா கந்தசாமியின் ‘கற்றாழைப்பச்சை’ : முழுமையின் முப்பரிமாணக் கதைகள்
இரா. அருள்

யதார்த்தவாதம் உள்ளதை உள்ளது போன்று முதன்மைப்படுத்த முனைந்து, சலித்து போய், போதும் இனி இந்த 2D கோணம் சற்று 3Dயில் வாழ்வைக் காண்போம் என்று தன் கதையாடலை மேம்படுத்திக் கொள்கிறது. யதார்த்த புனைவின் பார்வைக்கோணம் மாறியதே தவிர யதார்த்தவாதம் அழிந்துவிடவில்லை. குணா கந்தசாமியின் ‘கற்றாழைப்பச்சை’ யதார்த்த புனைவு காட்டும் வாழ்வைப் பற்றின 3D கோணம்.
இந்த மூன்றாம் கோணம் கவிஞனுக்கே உரித்தான உலகம். அதனை வெறும் வார்த்தைகளைக் கொண்டு கட்டமைப்பது இயலாத காரியம். ஒரு வாக்கியத்தின் எழுவாய் பயனிலை கட்டமைப்பு, நிகழ்வு ஒன்றின் இரு பரிமாண கோணத்தை வேண்டுமானால் அளிக்க முடியும். மூன்றாம் பரிமாணம் என்பது வாக்கியத்தின் எழுவாய் பயனிலை கடந்து அதற்குள் கவிஞன் நிறைவேற்றும் புனைவின் 3D கோணத்தின் கதையாடலை கொண்டு வருகிறது. கவிஞன் புனைவு உலகத்திற்குள் பிரவேசிக்கும் போது அவனுடன் புனைவில் சாத்தியப்படுவது கவிதையின் உத்திகளும் தான்.
கவிதையின் உத்திகளை நாவலுக்குள் பிரயோகிக்கும் போது இருபரிமாணத்தின் யதார்த்தம் சற்று மெருகேற்றப்பட்டு நவீனத்துவமாகவும், மாய யதார்த்தமாகவும் உருமாற்றமடைகிறது. இந்த உருமாற்ற நிலையை கண்ணோக்கும் விமர்சனம் யதார்த்தவாதம் வேறு, நவீனத்துவம் வேறு, மாய யதார்த்தம் வேறு என அதன் வசதிக்கு ஏற்ப இனம் பிரித்துக் கொள்கிறது.
உண்மையில் இந்த பாகுபாடுகள் அனைத்தும் மூன்றாம் பரிமாணத்தில் நிகழ்த்தப்படும் யதார்த்தத்தின் வேடிக்கையின் விளைவு. எப்படியாயினும் புனைவுக்கான இலக்கிய அந்தஸ்து அதனுள் கலைஞன் மேற்கொள்ளும் யதார்த்த பரிசோதனையினாலேயே சாத்தியப்படுகிறது. புனைவு ஒன்றில் யதார்த்தவாத பரிசோதனை இடம் பெறாது போனால் அது இலக்கிய அந்தஸ்தை அடையாத புனைவின் தோல்வி எனக் கொள்ளலாம்.
இது திரைப்படத்திற்கும் பொருந்தும். ஆனால், யதார்த்தவாத செய்முறை இன்று என்னவாக இருக்கிறது என்பதுவும் கேள்விக்குரிய ஒன்று. ஒரு காலத்தில் இருபரிமாண யதார்த்தவாதமாக இருந்த புனைவில் நனவோடை யுத்தி பயன்படுத்தப்பட்ட போது அது நவீனத்துவமாக உருமாற்றமடைந்தது. இதற்கு சுந்தரராமசாமியின் கதைகளை உதாரணமாகக் கொள்ளலாம். உமா வரதராஜனின் உள்மன யாத்திரை இன்னும் சற்று கூடுதலாக கதை சொல்லியின் அல்லது பாத்திரங்களின் அக உலகத்தில் இருந்தே கதைகள் நிகழ்த்தப்படுகின்றன. யதார்த்தவாதம் புற உலகத்தை முதன்மைப் படுத்துவதில் இருந்து நகர்ந்து கதைசொல்லியின் நனவோடைக்குள் சென்றடைந்துவிடுகிறது. கதை சொல்லல் முறை இந்த உள்மன நிலையிலும் நின்றுவிடுவதில்லை. புனைவின் கதைசொல்லல் முறை நடப்பியலுக்கு மிக அருகில் சென்று கொண்டே இருக்கிறது. யதார்த்தத்தின் முழுமைக்கு சற்று அருகில் செல்ல வேண்டுமானால் கதை சொல்லியின் இலக்கிய உத்திகள் சற்று மேம்படுத்தபட வேண்டி இருக்கிறது. எழுத்தில் காட்டப்படும் அல்லது திரையில் காட்டப்படும் அந்த முன்றாவது பரிமாணம் பிரதியில்/திரையில் இருந்து சற்று வெளியே வரவேண்டியிருக்கிறது.
பிரதிக்கும் நம் வாசிப்புக்கும் இடையில் நிகழும் ஜால உலகமே இந்த மூன்றாம் பரிமாணம். அங்கு யதார்த்தம் தன்னை முழுமையில் வெளிக்காண்பிக்கிறது. பிரதியில் சாத்தியமான இந்த முழுமையே மாய ஜாலமாக இருக்கிறது என்பது ஆச்சரியமூட்டும் விசயம்.
புனைவில் முழுமையின் யதார்த்தத்தை சாதித்துக் காட்டுபவர்கள் கவிஞர்கள் மாத்திரமோ என சொல்லவும் தோன்றுகிறது. கவிதையில் தாங்கள் சாத்தியப்படுத்திய இலக்கிய உத்திகளையும், குறியீடுகளையும் புனைவிற்குக் கடத்துகிறார்கள். அவ்வாறு இலக்கிய உத்திகள் புனைவுக்குள் இடம்பெறும் போது அவைகளின் செயல்பாடும் மூன்றாம் பரிமாணத்திற்குள் பயணிக்கிறது.
கவிதைகளில் படிமத்தின் நிலை ஒரு சிறிய கூண்டுக்குள் சிக்கித்தவிக்கும் ராட்சதப் பருந்து போன்றது. அதுவே புனைவுவெளியில் பயணிக்கும் போது வரையறை அற்ற வானம் அதற்கு பெறும் சுதந்திரத்தை அளிக்கிறது.
கவிஞர் குணா கந்தசாமியின் சிறுகதைகள் யதார்த்தத்தின் முழுமைக்காக புனைவு நடத்தும் முப்பரிமாண கதைகள். கதைகளில் படிமங்களின் செயல்பாடு வெறுமனே குறியீட்டு நிலையில் நிற்காமல் அவைகள் கதைகளின் முழுமைக்கும் வியாபித்து கதைக்கருவின் இடத்தை இடம் மாற்றம் செய்து விடுகின்றன. கதையின் வாசிப்பில் கதைக்கரு கொஞ்சம் கொஞ்சமாக தன் இருப்பை இழந்து தன்னைப் படிமத்திற்குள் தொலைத்து விட்டு காணாமல் போய்விடுகிறது.
கதையின் இறுதி முடிவு படிமம் கட்டமைக்கும் மந்திரவெளி. அதற்குள் கால வரையறை தன் தொடர்ச்சியில் அறுபட்டு முடிவின்மைக்குள் சென்றடைகிறது. ஆரம்ப யதார்த்தவாதத்திற்குள் காலக் கட்டமைப்பை கதைக்கரு தாங்கியிருந்தது. அதுவே நவீனத்துவத்தில் தொடர்ச்சியின்மையில் காலம் சுழல் வட்ட பாதையில் முதலும் முடிவும் இன்றி தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது நவீனத்துவத்தின் நனவோடை உத்தி.
குணா கந்தசாமியின் கதைகளின் கரு அதன் முடிவெல்லையான படிமத்திற்குள் சென்றடைந்து நித்தியம் என்னும் கால சூன்யத்தில் சிக்கிக் கொள்கிறது. இந்த சூன்யவெளி வெறும் சொற்களைக் கொண்டு எழுவாய் பயனிலை என்ற நிலையில் மாத்திரம் நிகழ்த்திக் காட்டப்படுவது அல்ல. புனைவின் மந்திர ஜாலம் குறியீடுகள் மூலம் நிகழ்த்தபெறுகிறது.
”கற்றாழை பச்சை” சிறுகதை புனைவில் குறியீடு நடத்தும் மாய ஜாலத்தைப் பற்றி பேசுகிறது. இதில் குறியீடு வெறுமனே குறியீடாக நில்லாமல் அது கதைக் கருவின் இடத்தை ஆக்கிரமித்து தானே கதையாக மாறுகிறது. கற்றாழையின் சாரம் கதையின் சாராம்சம். என்றோ யாராலோ பெறப்பட்ட சாபத்தால் வாழ்வின் சாரத்தை இழந்து போன குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் கற்றாழை போன்று சாரம் இழக்காமல் இருக்கிறார். லிங்குவை வெறுமை சூழ்ந்து கொண்ட நிலையை கவிஞனின் மொழி இவ்வாறு இவ்வாறு விவரிக்கிறது, “காலத்தின் வெளித்தோல் உரிந்துபோய் எல்லா நாட்களும் இன்னொன்றின் நகல்களாகவே இருந்தன. வலி, தனிமை, காமம் போன்றவை ஒரு மலைப்பாம்பின் உடலாய் அவரை இறுக்கிய போது அவர் நிர்தாட்சண்யமாய் தன் ஆறாவது அறிவை மயக்கமூட்டிக் கொண்டார்”. சாரத்தை இழக்காத லிங்குவின் வாழ்க்கை நம்பிக்கையின்மையில்/வறட்சில் ஈரப்பதத்தோடு வாழும் ஒருவனுடைய வாழ்க்கை. தன்னுள் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்தை அவர் உணரும் தருணம் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறது, “மரத்தின் உச்சாணிக்கிளைவரை சுற்றிப்படர்ந்து உச்சியில் அசையும் கொடியின் துளிர்நுனியைப் போல் தன் தற்கணம் இருப்பதாகவும் இறந்தகாலத்தின் நினைவுகள் இன்னும் வேர் அளிக்கும் உயிர்ச்சாறே தன்னை உயிர்த்திருக்க வைத்திருப்பதாகவும் லிங்கு நம்பினார்”. இந்த கதை அதன் கருவின் காலம், அதன் முடிவு நிலை என எதுவும் இல்லாமல் வறட்சி என்னும் சூன்யவெளியில் மழையும் செழிப்பும் கொண்ட கதையாக மாயத்தில் நிகழ்த்தப்படுகிறது. வறட்சியின் மத்தியில் தான் மாத்திரமே மழையின் குளிர்மையை அனுபவிக்கும் கற்றாழையாக லிங்கு இன்மைக்குள் கரைந்து விடுகிறார். இங்கு லிங்குவின் அனுபவம் புதுமைப்பித்தனின் ”கயிற்றரவு” கதையில் வரும் பரமசிவம் பிள்ளையின் அனுபவத்திற்கு ஒத்திருக்கிறது. லிங்குதான் பரமசிவம் பிள்ளையோ?
இங்கு கற்றாழை வெறுமனே குறியீட்டு நிலையில் நிற்காமல் படிமமாக மாறி முழு கதையையும் தன்னுள் கிரகித்துக் கொள்கிறது. நவீன இலக்கியத்தில் அவல ரசத்தின் (tragedy) உச்சத்தைத் தொட்ட கதை துன்பக்கேணி. ’துன்பக்கேணி’ என்னும் பாரதியின் இந்த வார்த்தை பிரயோகத்திற்கு கதை வடிவம் கொடுத்தவர் புதுமைப்பித்தன். அதே துயரத்தின் கேணி ”தங்காள்” கதையில் படிமமாக கதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கதை தொன்மத்தில் இருந்து படிமத்திற்குள்ளான நகர்வு என வாசிக்கலாம். நல்லதங்காள் என்ற தொன்மம் நவீனத்தில் ஊடுருவி தும்பக்கேணி என்னும் தொன்மக்கதையாக மாறுகிறது. கொலை செய்துவிட்டு சிறை சென்ற கணவனை மீட்டுக்கொண்டுவரும் தங்காள் தன் மகள்களை கரையேற்றியவளாக நிற்கும் போது, இந்த தங்காவையும் அவள் குழந்தைகளையும் உயிர் குடிக்க இனி எந்தக் கிணறும் இல்லை என்று நிம்மதியில் வாசிப்பைத் தொடரும் போது ஊழ் தங்காளை காலம் கடந்து துன்பக்கேணி நோக்கி நடத்துகிறது. சிறையில் இருந்து மீண்ட தங்காளின் கணவன் அரசியல்வாதிக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைக்கிறான். பொறாமைக்காரர்களின் அரிவாளின் கூர்மை அவன் கழுத்தில் இறங்குகிறது. கணவனை இழந்த தங்காளுக்காக இன்னும் தொன்மத்தின் தங்காள் கிணற்றுக்குள் காத்துக் கொண்டிருக்கிறாள். கிணறு என்ற படிமம் கதையின் இறுதியில், “நிராசை படிந்த கண்களுடன் கிணற்றின் ஓரத்தில் ஒண்டி நின்ற அம்முதியவளிடமிருந்து ஒலித்துக் கொண்டிருந்த தேம்பல்கள் மெல்ல அடங்கின. இருட்டு பழகிய கண்களால் படிக்கல் ஏதுமில்லாத அக்கிணற்றுக்குள் இருந்து அவள் நிமிர்ந்து பார்த்தாள். நானும் பார்த்தேன் மேலே வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தன. இருவரும் காத்திருக்கத் தொடங்கினோம்” என்று கதை அதன் முடிவில் படிமத்தில் சென்றடைந்து இப்பிரபஞ்ச வெளியை நோக்கிப் பார்க்கிறது. இது கவிஞன் கட்டமைக்கும் பிரபஞ்சம் பற்றின மூன்றாம் கோணம்.
”எட்டாவது கன்னி” தொன்மத்தை தன்னுள் உள்ளடக்கிய கதை. இக்கதை நாவலுக்கு உண்டான கருவை சுமக்கும் கதையாகும். நாவிதர்களின் வாழ்க்கையை சுருக்கமாக கூறிவிட்டு முடிவடைகிறது. நாவலின் பெரும் வெளி சிறுகதையின் சட்டகத்திற்குள் உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கிராமமே ஆஜானுபாகுவாக அமர்ந்து கொண்டு தனக்கு சேவை செய்யும்படி ஒரு குடும்பத்தை பணியமர்த்துகிறது. தன் மாபெரும் உடலுக்கு திருச்சேவகம் செய்ய ஒரு நாவித குடும்பம் பணிக்கு அமர்த்தப்படுவதை வாசிக்கும் போது அது வாசிப்பின் கோபத்தை சீண்டுகிறது. சிகை திருத்தவும், நகங்களை வெட்டவும் சேவகனாக நாவித குடும்பம் ஒரு கிராமத்திற்கே தொண்டூழியம் செய்கிறது. மேலும், வைத்தியத்திற்கு வைத்தியனாகவும் சேவகம் செய்வது விந்தையான ஒன்று. இதில் புஷ்பா எட்டாவது கன்னியாக மாறுவது அவள் நீலியாகவே மாறுவது போன்று உள்ளது. தன்னிடம் அத்து மீறுபவனின் உடல்/குடல் முற்களால் அல்லது தன் நகங்களால் குத்தி கிழிக்கப்படும் என்பதை தொன்மத்தின் மூலம் கதை உணர்த்துகிறது.
”குளம்படி நிலம்” கொங்கு மண்டலத்தின் காணியாளர்களின் வாழ்க்கையை வெறும் கதையாகச் சொல்லாமல் மண் வாசனையையும், ஆடுகளின் புழுக்கை வாசனையையும் சுவாசித்து உணரும் கதையாக தன் கவிதை மொழியை உரைநடைக்குள் புகுத்தி சாதித்துவிடுகிறார்.
இவ்வாறு கற்றாழைப்பச்சை சிறுகதைத் தொகுப்பில் உள்ள பதினாறு கதைகளில் அவைகளின் வரிசைப்படியே முதல் நான்கு கதைகளும் செய்முறை நேர்த்தியில் கலையம்சம் நிறைந்த கதைகளாக உள்ளன. இவைகளை செய்முறை நேர்த்தி என்று சொல்லும் போது அது யதார்த்தவாதத்தின் சாதனை என்று சொல்ல வேண்டும். அதாவது யதார்த்தம் தன் முழுமையைக் கண்டடைந்த கதைகள். இவைகள் முப்பாரிமாண நிலையில் நிகழ்த்தப்படும் கதைகளாகும்.
மற்ற கதைகள் சிறந்த புனைவுகளாக தங்களுடைய இருபரிமாண நிலையில் நின்றுவிட்ட கதைகள் என்று சொல்லலாம். பிரதியிலேயே அதாவது திரையிலேயே நின்றுவிடும் கதைகள். பிரதியை எடுத்து வாசிக்க முற்படும் வாசகனுக்கு மந்திர உலகம் ஒன்று அவன் கண் முன் காத்துக் கொண்டிருக்கிறது. நடப்பியல் அங்கு தன் முழுமையில் தரிசனமாகி வாசகனை திகைப்படைய வைக்கிறது. எனவே குணா கந்தசாமியின் கற்றாழைப்பச்சை வெறும் வாசிப்பனுபவத்திற்கானதாக மட்டும் இல்லாமல் கொங்கு மண்டல வாழ்க்கையை அதன் முழுமையில் வாசகனுக்குத் திரையிட்டுக் காட்டுகிறது. கதைகளில் படிமத்தின் மீதான வாசிப்பு வெறும் காட்சிப்படுத்துதலாக நிற்காமல் ஐம்புலன்களின் அனுபவமாக, கேட்டல், உணருதல், பார்த்தல், நுகருதல் என மாறிவிடுகிறது. இந்த முப்பரிமாணக் கதைகள் அனைத்தும் கல்குதிரையில் வெளியான கதைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.