
எம்.எஸ்.வி.க்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி.யை எப்படிப் பயன்படுத்துவது? என்கிற சிக்கல் தொடக்க காலத்தில் மனதிற்குள் இருந்திருக்கும்…
காரணம் சிவாஜியின் சரித்திரப் படங்கள், குடும்பப் படங்களில் அவர் குன்றின் மீதேறி டூயட் பாடுகிற தொனியிலும் , ஊரையே மைதானத்துக்கு வரவழைத்து மேடை போட்டு அழுகிற தொனியிலுமே காட்சிகள் அமைக்கப்படும்.
எம்.ஜி.ஆர் குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர் வாக்கிங் போய்க் கொண்டேதான் பாட்டுப் பாடுவார். பெரும்பாலும் அவை பாடல்கள் அல்ல; மனிதர்களை நோக்கிய பிரகடனங்கள். நேற்றைய உலகத்தின் மீதான ஆவேச விமர்சனங்கள்; நாளைய உலகத்துக்கான அறைகூவல்கள். இந்த இருவருக்கும் தனி மனித அந்தரங்கத்தின் குரலாய் ஒலிக்கும் எஸ்.பி.பி.பொருந்துவாரா? என்பது அவர் மனதில் எழுந்த கேள்வியாய் இருந்திருக்கலாம்.
அதையும் மீறி ஆஸ்தான பாடகரை அதே இடத்தில் வைத்து விட்டு புதிதாய் வந்த வித்தைக்காரனுக்கு திண்ணையையே ஆசனமாய்த் தருகிற சாக்கில் எஸ்.பி.பி.யை கோட்டைக்குள் அழைத்து வந்து விட்டார் எம்.எஸ்.வி.
எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய ‘நாளை நமதே’ பாடலை கடந்த கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
எனக்குப் பிடித்த இன்னொரு பாடல், ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்…’ தமிழில் வெளிவந்த மென்மையான அம்மா பாடல் அது. தமிழர்களின் அம்மா செண்டிமெண்ட் உலகறிந்தது. சாப்பிட்ட பாத்திரத்தைக் கூட கழுவி வைக்கா விட்டாலும், ‘அம்மாடா… ஆட்டுக்குட்டிடா…’ என்று அனத்துவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை. ‘பத்து மாதம் சுமந்து பெற்றாள்’ என்று பாட ஆரம்பித்தால் பிரசவம் பார்த்த நர்ஸே வீட்டுக்கு வந்து விடுவார். ‘அம்மா’ பாடல்களை காலட்சேபமாகவோ, உருக்கமான சொற்பொழிவாகவோ மாற்றுவதில் தமிழ்த் திரைப்படங்கள் சளைத்தவை அல்ல. ஆனால் இந்தப் பாடலை மென்மையான குரலில் எஸ்.பி.பி. பாடியிருப்பார். ஊருக்கே அம்மா செண்டிமெண்டை கிளறி விட்டு ரேடியோவாக ஒலிக்காமல் அம்மாவுக்கு மட்டுமேயான அம்மா பாடல் இது.
“பெற்றெடுத்து பெயர் கொடுத்த
அன்னை அல்லவோ ?
நீ பேசுகின்ற தெய்வமென்பதுண்மை
அல்லவோ ?”
என்கிற வரிகளில் வானத்தில் கால் பதித்து நிற்காமல் பூமிக்கு வந்து விட்ட மகனையே நாம் காண முடியும். வீட்டுக்குள் ஓர் இடத்தில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருக்கும் எம்.ஜி.ஆருக்கு எஸ்.பி.பியின் துள்ளல் நிறைந்த குரல் மிகச் சரியாக பொருத்திப் போயிருக்கும்.
எம்.ஜி.ஆருக்கே இப்படி என்றால் சிவாஜிக்கு இன்னும் கடினம். நாடி, நரம்பு, அணுவெல்லாம் சேர்ந்தசைய க்ளோஸப்பில் அசையும் சதை நிரம்பிய முகத்துக்கு முதிராத இளங்குரல் என்ன நியாயம் செய்து விட முடியும்? ஆனால் எழுபதுகளில் திடீரென்று சிவாஜியை யூத்தாக்கி விதவிதமான உடை அலங்காரங்களில் ஆட வைக்க வேண்டும் என்று சில இயக்குநர்களுக்கு ஒரு விபரீத ஆசை பிறந்தது. அந்த ஆசையை எம்.எஸ்.வி பாலுவுக்கான துருப்புச் சீட்டாக்கினார். ஏற்கனவே ‘திரிசூலம்’ படத்தில் ஜேசுதாஸூடன் அவர் இணைந்து பாடியதை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆனால் எஸ்.பி.பி.இறங்கி அடித்த ஒரு சிவாஜி பாடல் உண்டு.
பாடலின் தொடக்கத்திலேயே தன் டிரேட் மார்க் சேட்டையை ஆரம்பித்து விடுவார்.
“ருக்குரு ருக்குரு லுபுலு லுபுலு ரம் பம் பம் பம்”
என்கிறபோதே சிவாஜி மீதான நம் பழைய பிம்பம் சரிந்து எஸ்.பி.பி தயவால் வேறொரு ‘திருக்காட்சி’யைக் காணத் தயாராகி விடுவோம்.
“என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவைப் பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபானம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே ”
என்கிற வரிகள் சிவாஜிக்கு மட்டுமல்ல ; எஸ்.பி.பி க்கும் அப்படியே பொருத்திப் போகும். இந்திப் பாட்டில் காதை வைத்தபடி தமிழ்ப் பாட்டை விட்டு தூரமாயிருந்த, ‘ராஜாத்திகளுக்கு’ அவர்தான் அப்போது காதுகளில் அந்தரங்கம் நிரப்பும் மென்குரலின் ராஜாவாகவே உள்ளே வந்தவர். அவர் போட்ட புதிய வட்டத்தில் தொடங்கிய ஆட்டங்கள் அரை நூற்றாண்டு தாண்டியும் ஓயவே இல்லை.
“இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி”
என்கிற வரிகளுக்குப் பின்னால் அவர் இழுக்கும் இழுவை இளமைத் துள்ளலோடு இருக்கும்.
“வாலிபம் பம்பம்
சாகஸம் ஸம்ஸம்
லீலைகள் கள்கள்
ஆனந்தம் தம்தம்”
என்று ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் அவர் உருவாக்கும் சங்கீத இரட்டைக் கிளவிகள் எஸ்.பி.பி.யின் தனித்தன்மைக்கான அடையாளம்.
இன்னொரு பாடல் ‘சுமதி என் சுந்தரி’ படத்துக்காகப் பாடிய, ‘பொட்டு வைத்த முகமோ’ பாடல். இந்த ஒரு பாடலை மட்டும்தான் அவர் மேடைகளில் பாடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று அவரோடு பயணித்த நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
எத்தனையோ சவாலான பாடல்களை ‘ப்பூ’ வென்று ஊதித் தள்ளுகிற எஸ்.பி.பிக்கு இது ஒரு விஷயமே இல்லை. ஆனால் பாடல் ஒலிப்பதிவின்போது சிவாஜியின் மிகையான முகபாவங்களுக்கு தன் குரல் ஒத்து வருமா ? என்கிற சந்தேகம் அவருக்கு வந்திருக்கிறது. “நீங்கள் உங்கள் பாணியில் பாடுங்கள்..நான் நடிப்பில் சரி செய்து கொள்கிறேன்” என்று சிவாஜி கூறினாலும் எஸ்.பி.பி தனக்குள் சமாதானம் அடையவில்லை என்றே ஊகிக்கிறேன். அந்த ஆழ்மனப்பதிவுதான் நீண்ட காலமாக மேடைகளில் பாடுகிற போது அவருக்கே தெரியாமல் தடங்கலாகியிருக்கலாம்.
ஆனால் இந்தப் பாடலைக் கேட்கிறபோது இந்த மனத்தடையை நான் உணர்ந்ததே இல்லை. நாம் அதிகம் பார்க்காத நளினம் நிறைந்த வேறொரு சிவாஜிக்கான அழகு நிறைந்த காதல் பாடலாகவே இது என் மனதில் இருக்கிறது.
“ஆ..ஆ கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ ஓஓ”
என்கிற வரிகளில் வெளிப்படும் ஆலாபனையில், ‘இயற்கை எனும் இளைய கன்னி’ பாடலில் வருகிற அதே முதிராத குரலையே காண முடிகிறது என்றாலும்,
“தரையோடு வானம்
விளையாடும் நேரம்
இடையோடு பார்த்தேன்
விலையாகக் கேட்டேன்”
என்கிற இடத்தில் தமிழில் நாம் அதிகம் கேட்காத இந்திப் பாடல்களின் தன்மை கொண்ட உணர்வைப் பெற முடியும்.
இந்தப் பாடலில்,
“மலைக்கோட்டைப் பூவில்
மணம் இல்லையென்று
கலைக்கோட்ட ராணி
கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி
நிழல் போல மறைந்தாள்”
என்கிற வரிகளை ஜெயலலிதாவை நோக்கி அவர் பாடியிருப்பார்.
கலையுலகிலிருந்து அரசியலை நோக்கி நகர்ந்து பெரு வெற்றி பெற்று ஒரு மின்மினியைப் போல் திடீரென்று மறைந்த ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த வாழ்வே இந்த சரணத்தில் அடங்கியிருப்பது ஆச்சர்யமான தற்செயல் நிகழ்வுதான்.
நாற்பதுகள் வரை புராணம், ஐம்பதுகளில் வரலாறு, சமூகச் சீர்திருத்தம், அறுபதுகளில் குடும்ப செண்டிமெண்ட் என்று நகர்ந்த தமிழ்த் திரையுலகத்தில் எழுபதுகளில்தான் துள்ளலான இசையோடு டூயட் பாடுகிற நாயகர்களை திரையில் காட்டுகிற சூழல் உருவானது. எம்.ஜி.ஆரின் பாடல் காட்சிகளில், ‘இலவச மசாஜ் சர்வீஸை’ நாம் காண முடிந்தாலும் குரலில் துள்ளலை உணர முடியாது. சிவாஜி படத்தின் பல காதல் பாடல்களில் அவரது நடிப்புத் திறனை நாம் அடையாளம் கண்ட அளவிற்கு காதலை உணர்ந்திருக்க மாட்டோம். ஆனால் விதிவிலக்கான ஆளாய் அப்போதைய காதல் மன்னனாக வலம் வந்த ஜெமினி கணேசன் பாணியில் பல குட்டி காதல் மன்னன்கள் எழுபதுகளில்தான் உருவெடுத்தார்கள். முத்துராமன், சிவக்குமார், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் என்று நீண்ட இந்த வரிசைக்கு பொருத்தமான குரலாக எஸ்.பி.பி.யே இருந்தார்.
எம்.எஸ்.வி யுடனான அவரது முதல் பயணமே ஜெமினிக்காகத்தானே தொடங்கியது? ‘முள்ளில்லா ரோஜா’ என்ற பாடலில் NCC நேவி பிரிவு மாணவரைப் போல் வெள்ளை நிறத்தில் பனியன், டவுசர் போட்டு சிவக்குமார் காதல் செய்வதற்கு எஸ்.பி.பி யே உதவியிருப்பார். ‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் பூங்காவில் நிகழும் காதல்களை காட்சிப்படுத்தும்,
“மாதமோ ஆவணி
மங்கையோ தாவணி”
பாடலில் எஸ்.பி.பி.யும் ஒரு காதலனுக்குக் குரல் கொடுத்து ‘காதலுக்கு மரியாதை’ செய்திருப்பார். ‘ இன்று முதல் செல்வமிது என்னழகு ‘ பாடலில் சி.ஐ.டி. மோடிலேயே திரியும் ஜெய்சங்கர் காதல் மன்னனாக மலர எஸ்.பி.பிதான் காரணம். சுரேஷ் , நதியாவிற்கு முன்பாகவே சைக்கிள் ஓட்டிக் கொண்டே காதல் செய்தவர் ஜெமினிதான். ‘மாலதி’ படத்தில் அந்தப் பாடலை எஸ்.பி.பி.தான் பாடியிருப்பார். ஆனால் நிஜமாக சைக்கிளை ஓட்டாமல் வெறுமனே பெடல் போட்டுக் கொண்டு கேமராவை நகர்த்தி எடுக்கப்பட்ட அந்தப் பாடலுக்கு உயிர் தருவது அவர் குரல் மட்டுமே.
இந்த வரிசையில் வந்த பாடல்களின் உச்சமாக நான் கருதுவது, ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் அவர் பாடிய, ‘வான் நிலா நிலா அல்ல’ பாடலைத்தான். மான், மீன், தான், காய், என்று ஒற்றைச் சொல்லிலேயே பாடலை உருவாக்கி விடும் ஆற்றல் படைத்த கண்ணதாசனின் ‘லா’ பாடல் இது. தமிழில் இயைபுக்கென்று ஓர் அழகு உண்டு. இன்று வரை பல மேடைப் பேச்சாளர்கள் அதை வைத்தேதான் பொழப்பை ஓட்டுகிறார்கள். அதை அடித்துத் துவைத்து அலசி காயப் போட்டு அயர்ன் பண்ணி மீண்டும் போட்டு மீண்டும் போட்டு கிழித்துக் குப்பையாக்கியவர் என்று டி.ஆரைச் சொல்லலாம். ( நா ஒரு நரி / நீ ஒரு பரி/ முதுகை வந்து சொரி….எனக்கு தெரியாது நீக்கு போக்கு/ வந்ததில்லடா வயிற்றுப் போக்கு/ வாடா நீயும் பொறம்போக்கு…etc)
ஆனால் இந்தப் பாடலில் ஒவ்வொரு ‘லா’ வுக்கும் எஸ்.பி.பி விதவிதமாய் உயிர் கொடுத்திருப்பார்.
பாடலின் தொடக்கமே அந்த லாலாலா தான். வயலினை மிகப் பொருத்தமாக எம்.எஸ்.வி.பயன்படுத்தியிருப்பார்.
‘மானில்லாத ஊரிலே’ என்கிற இடத்தில் ஓர் நொடி மட்டும் சட்டென்று மாறுகிற குரலும்
‘சா…யல் கண்ணிலா?’ என்கிற இடத்தில் சா…யலை’ அவர் இழுத்து உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருக்கும்.
பாடலின் நடுவில் காதலின் தாங்க முடியாத வலியை ,அதனால் ஆண் அடைகிற தாள முடியாத தவிப்பை,
“இன்பம் கட்டிலா
அவள் தேகக் கட்டிலா ?”
என்கிற வரிகளைப் பாடுகிற போது வெளிப்படுத்தியிருப்பார்.
“தீதிலா காதலா ஊடலா கூடலா”
என்று காதலியின் முன்னால் அடுக்கிச் சொல்கிறபோது அந்த சோகத்தையும் தாண்டிய உற்சாகம் பிறந்து விடுவதை நுட்பமாகப் பாடியிருப்பார்.
“நீயில்லாத நாளெல்லாம்
…
நான் தேய்ந்த வெண்ணிலா ”
என்று முடிக்கிற போது அவர் குரலில் சரணாகதி நிறைந்த துக்கமும், வயலினின் அழுகையும் பாடலை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விடும்.
சந்தேகமே இல்லாமல் எஸ்பிபி யின் மிக முக்கியமான பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்று. காதலைப் பாடுகிறபோது அவர் வெளிப்படுத்துகிற சோகம் சாதாரண மானுடத் துக்கமாக இருக்காது. அவர் தன் அபூர்வமான மேதமையுடன் அந்தப் பாடலைக் காவியத் துக்கமாக மாற்றி விடுகிறார். நீண்ட நேரமாக குளத்தில் ஒற்றைக் காலோடு நிற்கும் கொக்கை வரைய முடியாமல் கேன்வாஸை விசிறியடித்து விட்டு தன் மீது விழும் ஒற்றை மலர் கண்டு ஓவியன் அடைகிற துக்கம் அது. இயக்குநர் , பாடலாசிரியர் இருவரும் உருவாக்கித் தந்த சட்டகத்தில் அமர வேண்டிய பாடலை அதையும் தாண்டிய சுதந்திரத்துடனும் கூட உருவாக்க முடியும். அந்த சுதந்திரத்தின் இரட்டைச் சிறகுகளாகவே எம்.எஸ்.வியும், எஸ்.பி.பி யும் சிறகசைத்திருக்கின்றனர் என்பதை இப்போது என்னால் உணர முடிகிறது.
தொடரும்…