தொடர்கள்
Trending

காற்றில் கரைந்த கந்தர்வன்;3 – மானசீகன்

தொடர் | வாசகசாலை

தமிழ்த் திரையுலகில் சில இணைகளுக்கு வரலாற்றுச் சிறப்புண்டு..அதில் எவராலும் மறக்கவோ , மறுக்கவோ முடியாத ஓர் இணை எனில் அது இளையராஜா – பாலு இணைதான். எஸ்பிபி யின் மாபெரும் உச்சங்கள் அனைத்தும் ராஜாவுடன்தான் நிகழ்ந்தன. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் அந்தரங்கமாகப் பிடித்த சில குரல்கள் உண்டு. ஒருவகையில் அதுவே அவர்களுடைய ஆன்மாவின் குரல். எம்எஸ்விக்கு டிஎம்எஸ் – சுசீலா மாதிரி இளையராஜாவுக்கு எஸ்பிபி – ஜானகி. அதையும் தாண்டி எண்பதுகளில் உச்சத்தில் இருந்த ராஜாவுக்கு தன் குரலால் உறுதுணையாக இருந்த மாபெரும் ஆளுமை எஸ்பிபி. இத்தனைக்கும் இருவரும் இணையவே முடியாத அளவுக்கு வித்தியாசம் நிரம்பிய குணச்சித்திரங்கள். ராஜா பாதை தேடி ஓடிக் கொண்டேயிருந்த நதி என்றால் எஸ்பிபி பெருகி வழியும் பேரருவி. ராஜாவுக்கு யுவனைக் கூட அதட்டித்தான் அன்பு காட்டத் தெரியும். எஸ்பிபி தன் எதிரியையே கூட கண்ணீர் மல்க வணங்க வைத்து விடுகிற பேரருளாளன். கலை குறித்த இருவரின் புரிதல்களும் கூட வெவ்வேறானவை. ராஜா கலையையே வாழ்வாகக் கொண்டவர் எனில் எஸ்பிபி கனிந்த மனதால் வாழ்க்கையையே கலையாக்கிக் கொண்டவர். ராஜாவுக்கு இசை என்பது யோகம். எஸ்பிபி சித்ராவின் புடவை டிசைன் குறித்துக் கிண்டலடித்துக்கொண்டே படு அலட்சியமாக  சங்கராபரணத்தில் ஊஞ்சலாடி விட்டு மதுக்கோப்பையோடு இறங்கி வருவார். ஒரு வகையில் இருவருமே முழுமையின் இரு துண்டுகள். அவை ஒன்று சேர்ந்த போது கிடைத்த ஒலியால்தான் காற்றுக்கு மோட்சம் வாய்த்தது.

அறுபதுகளின் இறுதியிலேயே தமிழ்த் திரையுலகில் தன் இடத்தை உறுதி செய்து விட்ட எஸ்பிபிக்கு அப்போதே நட்பாக இருந்தவர்கள் ராஜா & பிரதர்ஸ் (பாரதிராஜாவும் அடக்கம்). அவர்களின் அப்போதைய மேடை நிகழ்வுகளில் எஸ்பிபிதான் ஸ்டாராக இருந்திருக்கிறார். முகம்மது  ரஃபியின் தென்னிந்திய வடிவமாக பல  மேடைகளை ஆண்டிருக்கிறார்.

பாரதிராஜா, இளையராஜா என்கிற இரண்டு இமயங்களின் திரை பிரவேசத்துக்கும் எஸ்பிபி ஏதோ ஒரு வகையில் உறுதுணையாக இருந்திருக்கிறார்..ஆனால் இருவரும் உச்சம் பெற்ற  பிறகும், அந்த விஷயத்தைப் போகிற போக்கில் கூட எஸ்பிபி சுட்டிக் காட்டியதில்லை.

தன்னுடைய நண்பனாக இருந்த ‘பண்ணைப்புரம் ராசய்யா’ இளையராஜா என்கிற மாபெரும்  கலைஞனாக வளர்ந்ததை அவர் உண்மையிலேயே பலருக்கும் முன்னால் உள்ளூர உணர்ந்திருக்கிறார்.

அதனால்தான்  வெளியே இளையராஜாவை உரிமையோடு கலாய்த்துத் தள்ளும் எஸ்பிபி ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவனைப் போல் அடக்க ஒடுக்கமாக நின்று  இளையராஜா சொன்னதை மட்டுமே அடி பிசகாமல் செய்து வந்திருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் கலை இயல்பிலேயே இந்தப் பண்பு இல்லை. தமிழ்ப் பாடகர்களிலேயே  ஓர் இசையமைப்பாளரின் மெட்டை அதன் அடிப்படை கெடாமல் சுதந்திர உணர்வோடு வேறொரு பரிமாணம் அளிக்கத் தெரிந்த பாடகர்களில் முந்தி நிற்பவர் அவர்தான். ஆனால் ராஜா எனும் விஸ்வாமித்ரனிடம் மட்டும் அவர் கமண்டல நீராகக் கட்டுப்பட்டு அடங்கியிருக்கிறார்.

இத்தனை நெருக்கம் இருந்தாலும் ராஜா தன்னுடைய தொடக்க காலத்தில் மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் ஆகியோரையே அதிகமாகப் பயன்படுத்தினார். எம்எஸ்வியுடனான எஸ்பிபி உறவு கெட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வோடு கூட  இளையராஜாவும்,  பாரதிராஜாவும் இருந்திருக்கலாம். அவரது ஐந்தாம் படமான ‘ நிறம் மாறாத பூக்கள்’ இல்தான் முதன்முதலாக எஸ்பிபி பாரதிராஜாவோடு  இணைகிறார்.( பாடலின் பல்லவியே அதுதான்…’முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’)

எழுபதுகளில் எம்எஸ்வி உருவாக்கித் தந்த வலுவான  அடித்தளத்தில் நின்றபடி  அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு ராஜா வழியாகவே நிகழ்ந்தது. எண்பதுகளில் நிகழவிருந்த அனைத்து சாதனைகளுக்கான ஒத்திகைகளையும் இருவரும் எழுபதுகளின் இறுதியிலேயே ரசிகர்களுக்குத் தந்து விட்டனர்.

துள்ளலான பாணியில் பாடி இளமை ததும்பும் குரலால் தனித்துவத்தோடு வலம் வந்த எஸ்பிபி ராஜாவின் தொடக்க கால இசையில் விரகம் பொங்கி வழியும் அற்புதமான பாடல்களைப்  பாடியிருக்கிறார்.

“பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா!”

பாடலில் ஸ்ரீதேவி அவ்வளவு அழகாக இருப்பார். எஸ்பிபி குரலில் துள்ளித் துள்ளி வழியும்  ‘விரகம்’ கேட்பவர்களை அவரவர் மனவெளியில் விஜயகுமாராக உணர வைத்து விடும்.

வா…என்கிற இழுவைக்குப் பின்

“செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி” என்கிற வரிகளை அவர் குரலில் கேட்பதுதான்           ஸ்ரீ தேவிக்கான நிஜமான ஆராதனை.

’புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் அவர் பாடிய ‘விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது’  பாடலும் இதே மாதிரியான பாடல்தான். எதிர்நிலைக் கதாபாத்திரங்களில் அசத்திக் கொண்டிருந்த ரஜினி நல்லவராகவும், பால் வடியும் முகம் கொண்ட சிவக்குமார் கெட்டவராகவும் நடித்த படம் அது. படத்தில் கிட்டத்தட்ட தியாகியாகவே வெளிப்படும் ரஜினியின் நினைவில் இருக்கிற ஒரே பசுமை ‘பழைய காதல்’ மட்டும்தான். அந்தக் காதலுக்கான சாட்சியாய் ஒலிக்கும் இந்தப் பாடலில் எஸ்பிபி முழுக் குழைவையும் குரலில் கொண்டு வந்திருப்பார்.

இந்தப் பாடலில் ஒலிக்கும் தபேலா வழக்கமான ராஜா பாணியிலிருந்து வேறுபட்டு புதுவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். வழமையான பாடல் மரபும் கூட மாற்றம் பெற்று பல்லவிக்குப்  பிறகு அழகான தொகையறா இடம் பெற்றிருக்கும்.

“மனம் மயங்கும் மெய் மறக்கும்…ம்..ம்
புது உலகின்…. வழி தெரியும்
பெண் விளக்கே….தீ…பமே”

என்று அந்தத் தொகையறா வித்தியாசமான அனுபவத்தைத் தரக்கூடியது.

“ஓவியனும் வரைந்ததில்லையே
‌உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே”

என்கிற வரிகளில், எஸ்பிபி குரலோடு புல்லாங்குழல் இணைகிறபோது கிடைக்கிற அனுபவம் அலாதியானது. பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். காதலியின் முகத்தில்  புன்னகை வெளிப்படாமல் மனம் முழுவதும் நிறைந்து மறைந்திருப்பதை,

“கையளவு பழுத்த மாதுளை
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை”

என்று எழுதியிருப்பார். ‘பாலுக்குள் நெய்போல மறைந்திருக்கும் புன்னகை’ என்பது எவ்வளவு அபூர்வமான கற்பனை..!

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் வாணியோடு இணைந்து அவர் பாடிய

“குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்சத் துடிக்கும் உதடு ரெண்டும்
வாடியதென்ன ?
பூவிதழ் மூடியதென்ன?”

பாடலும் இதே அனுபவத்தைத் தரும். வாணியின் குரலோடு இணைகிற போது வெளிப்படும் மேஜிக் மிக முக்கியமான ஒன்று.இந்த மேஜிக்கை ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தின்

“ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்ததது”

பாடலைக் கேட்கிற போதும் உணர முடியும்..

‘பூந்தளிர்’ படத்தில் டிரம், பெல்ஸ், புல்லாங்குழல் ஆகியவற்றுக்கு இடையில்

“வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை..கண்..மணி”

என்று எஸ்பிபி குரலைக் கேட்கிறபோது உருவாவதும் அதே பரவசம் தான்.

எம்எஸ்வி யின் மேடைப் பாடல்களைத் தாண்டி ராஜா இசையில் அவர் வெளுத்து வாங்கிய மேடைப் பாடல், “என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி”…

அவரது பிற்கால மேடைப்பாடல்களின் சாமியாட்டத்திற்கான முதல் மஞ்சத்தண்ணி இதுதான்.  ஸ்ரீ ப்ரியாவை ரஜினியுடன் சேர்ந்து பார்தத்துமே தொகையறா தொடங்கி விடும். எம்எஸ்வி இசையில் உயிர் உருகப் பாடிய பாரதி வரிகளை இங்கு வேறு ராகத்தில் பாடுவார் (வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா…மார்பு துடிக்குதடி… ) எம்எஸ்வி கண்ணம்மாவை நோக்கி ஆர்மோனியத்தைக் கேவ விட்டால், ராஜா டிரம்ஸ் அதிர கண்ணம்மாவைக் கேள்வி கேட்பதற்கு எஸ்பிபியை தயார்படுத்துவார்.

அந்தப் பாடலில் நான்கு உணர்வுகள் உண்டு. அவள் செயலின் மீதான குற்றச்சாட்டு, இன்னும் விலகாத காதலின் தவிப்பு, தன்னையும் மீறி வெளிப்படும் துயரம், அதைக் கடந்து செல்வதற்காக பொய்யாக வருவித்துக் கொள்ளும் அலட்சியம்  என்று நான்கையும் எஸ்பிபி பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.

“உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விஷம்”

( குற்றச்சாட்டு)

“நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி”

(தவிப்பு)

“இந்தக் காதல் ஓவியத்தின்
பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ?

(துயரம்)

“ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது..ஹே”

(அலட்சியம்)

‘ஹே’ என்கிற ஒற்றைச் சொல்லை அவர் உச்சரிக்கும் விதமே அலட்சிய பாவத்தை அப்படியே கொண்டு வந்து விடும்…அதுதான் எஸ்பிபி.

இதே மாதிரி மூன்று  வெவ்வேறு உணர்வுகளை அவர் துள்ளலோடு வெளிப்படுத்திய பாடல், ‘சொர்க்கம் மதுவிலே'( சட்டம் என் கையில்).

‘பப்ப பபா பப்பப்பபா’ என்று அவரது டிரேட் மார்க் ஒலிக்குறிப்புகளும், ஒரே ஒரு நொடி கத்தும் குரலை வேண்டுமென்றே  பிசிறாக ஒலிக்க விட்டு சட்டென்று மீண்டும் தேனாகி விடும் அவரது டிரேட் மார்க் பாணிக்கான ஆரம்ப கால சோதனை முயற்சிகளில் இந்தப் பாடலும் ஒன்று.

“திராட்சை ரசம் ஊற்றி
தீயை அணைக்கிறேன்”

( காதல் துயரம்)

“பாலில் பழம் போலே
இந்தப் பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச் சொல்லி
அந்தத் தோகை கெஞ்சுவாள்”

(களியாட்டம்)

என்று இரு முரண்பட்ட உணர்வுகளைக் காட்டி விட்டு இந்த இரண்டையும் விலகி நின்று பார்க்கும் மனசாட்சியின் குரலாய்,

“நடந்த நாள் மறக்கவே
நடக்கும் நாள் சிறக்கவே”

என்று ஒலித்திருப்பார். ஒரு பாடலை வெவ்வேறு பாவங்களுடன் மூன்று பாடகர்கள் பாடினால் உருவாகும் உணர்வை ஒரே  ஆளாகத் தந்து விடுகிற ஆற்றல் எஸ்பிபிக்கு மட்டுமே உரித்தான காலத்தின் பெருங்கொடை.

தத்துவச் சாயல் கொண்ட பாடல்களை எம்எஸ்வியே ஜேசுதாஸூக்கு தர ஆரம்பித்தார். டிஎம்எஸ் தத்துவப் பாடல்களைப் பாடுகிற  போது அதில் நீதிபோதனையின் செயற்கைத் தன்மையோ, கருத்துக் குவியலாய் விளங்கும் அரசியல் பிரசங்கமோதான் வெளிப்படும். ஜேசுதாஸின் குரல் ஒரு சித்தனுக்கே உரிய அக தரிசனம் கொண்டது. ‘தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ மிகப் பொருத்தமான உதாரணம். வாழ்வின் மெய்ப்பொருளை உணர்ந்த சித்தன் மனிதர்களின் உணர்வுகளை விலகி நின்று பாடுகிற மாதிரியான ஈரம் நிறைந்த தத்துவப் பாடல்களை ஜேசுதாஸ் நிறைய பாடியிருக்கிறார்.

ஆரம்பத்தில் எம்எஸ்வியும், பிறகு ராஜாவும் அவருடைய இந்த ஆற்றலை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் இதே பாணியில் அமைந்த பாடல்களை எஸ்பிபி பாடும் விதமே அலாதியானது. ஜேசுதாஸ் போல அது சித்தனின் குரல் அல்ல; பட்டுத் தெளிந்த சம்சாரியின் குரல் அவருடையது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ராஜா இசையில் மட்டுமல்ல; பலருடைய இசையமைப்பிலும் அவர் இதே மாதிரியான பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்கான தொடக்கமாக

“ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ”

பாடலைக் கருத முடியும்..

பலரும் எஸ்பிபியிடம் ஆச்சர்யப்படுகிற இன்னொரு முக்கியமான விஷயம் அவருடைய மொழித்திறனும், உச்சரிப்பும்தான். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட எஸ்பிபி, எம்எஸ்வி எனும் வாத்தியாரின் கண்டிப்பால் சுத்தத் தமிழைக் கற்றார். ஆனால் தமிழின் நாட்டுப்புற ஒலிக்குறிப்புகளை வட்டாரத் தன்மையுடன் பாடுவதற்கான பயிற்சியை அவர் ராஜாவின் வழியாகவே பெற்றிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

தொடக்க காலப்பாடல்களில் அதற்கான சிறந்த உதாரணமாக ‘உச்சி வகுந்தெடுத்து (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) பாடலைக் குறிப்பிட முடியும்.

“செங்கரையான் தின்னிருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழிய நம்பவில்லை”

என்கிற இடங்களில் அவருடைய உச்சரிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கும். நம்பிக்கைக்கும், சந்தேகத்திற்கும் இடையில் தடுமாறும் குழந்தை மனம் கொண்ட ஒருவனின் துயரத்தை அவர் மிக அழகாகத் தன் குரலால் படம் பிடித்துக் காட்டியிருப்பார். முதல் இடைவெளியில் தாலாட்டையும், இரண்டாவது இடைவெளியில் பேயோட்டும் இசையையும் ராஜா பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பார்.

“பட்டியில மாடு கட்டி பால கறந்து வச்சா
பால் திரிஞ்சு போனதுன்னு சொன்னாங்க
சொன்னவுங்க வார்த்தையில சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல”

என்றெல்லாம் அவர் பாடுகிற போது கிராமியத் தமிழ் உச்சரிப்பு ,பாடலின் உணர்வோடு இரண்டறக் கலந்திருக்கும்.

இளையராஜா தொடக்க காலத்தில் செய்த சில சோதனை முயற்சிகளுக்கும் எஸ்பிபி பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார். ரேடியோவில் ஒலிப்பது போல் பாடும் ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்தத்தது’ ( இளமை ஊஞ்சலாடுகிறது), ராஜாவின் மரபுத் தமிழ் பரிச்சயத்தால் உருவான  இடைவெளி இல்லாத நீண்ட பல்லவிகளை ஒரேயொரு மூச்சில் அநாசயமாகப் பாடுவது ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ’( ஆறிலிருந்து அறுபது வரை ), பேருந்தில் பயணிக்கிற போது பயணிகள், நடத்துநர் உரையாடல்களுடன் இணைந்து ஒலிக்கும் அகங்களின் டூயட் ‘என் கண்மணி உன் காதலி  (சிட்டுக்குருவி) என்று பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

எஸ்பிபி- ராஜா இருவரும் இணைந்து எழுபதுகளின் இறுதியில் உருவாக்கிய இசைக்கோலங்களில் மிகப்பெரிய சாதனைப் பாடலாக நான் கருதுவது ‘இளமை எனும் பூங்காற்று’ பாடல்தான் ( பகலில் ஓர் இரவு).

‘பொன்னாரம் பூவாரம்’ பாடலும் இதே படத்தில் இடம்பெற்ற ஒன்றுதான். ஆனால் அதில் வெளிப்பட்ட விரகத்தை இந்தப் பாடலில் காண முடியாது..

இந்தப் பாடல் மீது எனக்கு வேறு வகையான விமர்சனம் உண்டு. பதின்பருவத்துப் பெண் ஒருத்தியை சூழலைப் பயன்படுத்தி உணர்ச்சியைத் தூண்டி விட்டு ஓர்  இளைஞன்  பயன்படுத்திக் கொள்வதே பாடலின் சூழல். கிட்டத்தட்ட பாடலில் காட்டப்படுவது பாலியல் வல்லுறவுதான். ஆனால் கேமரா கோணமும், இயற்கைக் காட்சிகளின் அழகும், ஸ்ரீ தேவியின் நுண் உணர்வு கொண்ட நடிப்பும் பாடலைக் காணும்போது பதைபதைப்பு ஏற்படுத்துவதற்குப் பதிலாக நம்மை ஆழ்ந்து ரசிக்க வைத்து விடுகிறது. சிறுவயதாய் இருக்கும்போது  தொலைக்காட்சியில் இந்தப் பாடல் ஒலித்தால் யாராவது ஒரு நல்லவர் ரிமோட்டைக் கையில் எடுத்து என் வண்ணக் கனவுகளை சிதைத்து விடுவார். எனக்கான ‘விலக்கப்பட்ட கனியாய்’ அந்த வயதில் இந்தப் பாடலையே உணர்ந்திருந்தேன். என் தனிமையை நிரப்பும் இசைக்குறிப்புகளில் அப்போது இந்தப் பாடலுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வயது கூடி பக்குவம் வந்த பிறகுதான் தவறான ஒரு விஷயத்தை ரசித்திருக்கிறோம் என்பது புரிய வந்தது.

ஆனால் இந்தப் பாடலை பார்க்காமல்  கேட்கிறபோது அந்தப் பதைபதைப்பு நமக்குள் உருவாகி விடும். ஒரு அபலையின் குழந்தைத்தனமும், காமுகனின் வெறியும் இந்த இருவரையும் பொம்மைகளாக்கி ஆட்டி வைக்கும் காமத்தின் விஸ்வரூபமும், இந்த அனைத்தையும் கருணை நிரம்பிய மனதோடு வேடிக்கை பார்த்தபடி பாடும் லௌகீகத்தில் முதிர்ந்த ஓர் மனதின் துயரம் நிரம்பிய குரலும் பாடலை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விடும். ‘தபேலா’ ஸ்பெலிஸ்டான ராஜா இசையமைத்த பாடல்களில் தபேலா இல்லாத அரிதான பாடல்களின் வரிசையில் இதுவுமொன்று.

போங்கோஸ் ஒலிக்க மேற்கத்திய இசை பாணியில் தொடங்கும் பாடல் இது..நம் மனதில் உருவாகும் அதிர்வைக் குறிக்க டிரம்ஸ், காமத்தின் தூண்டுதலை உணர்த்தும் கிடார், விலகி நின்று துயரத்தின் குரலாய் ஒலிக்க புல்லாங்குழல் என்று பொருத்தமான இசைக்கருவிகளை ராஜா பார்த்துப் பார்த்து பயன்படுத்தியிருப்பார்.

“தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?”

என்று முதல் சரணத்திலேயே கண்ணதாசனின் மன உணர்வை எஸ்பிபி துளியளவும் குறையாமல் குரலில் தந்திருப்பார்.

“மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது?”

என்கிற வரிகளில் ‘தேகம் துடித்தால் கண்ணேது’ என்பதெல்லாம் ஞானத்தின் சொற்றொடர். கண்ணதாசனின் அரை நூற்றாண்டு அனுபவத்தை ஒரு இளைஞன் அப்படியே உள்வாங்கி குரலில் வெளிப்படுத்துவதெல்லாம் கலை தருகிற வரம்தான்.

“கூந்தல் கலைத்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் எந்த நிலையோ ?”

என்கிற வரிகளில் வெளிப்படுவது காமம் அல்ல. பெண்ணின் நிர்வாணம், காமத்தின் தழல் இரண்டையும் அலட்சியப்படுத்தி விட்டு இரு எளிய உயிர்கள் மீது பெருகும் கனிவும், வாழ்வெனும் விளக்கின் முன் விட்டில்களாகி விழும் மனிதர்களின் துயரத்தை புரிந்துகொள்ள முயலும் உயர்ந்த மனிதனின் தேடலும்தான்.

“அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ ? எந்த உறவோ”

என்கிற இடத்தில் வெளிப்படும் பரிவு ஒரு தகப்பனுடையது. காமத்தின் அசைவுகளை நீலப்படமாக எண்ணிக் களி கொள்ள வைக்கிற காட்சியமைப்பை ஞானத்திற்கான பயணமாக உருமாற்றிக் கொண்ட கவிஞரின் ஆழ்மனதை மிகச் சரியாகக் கண்டுணரும் தரிசனம் வாய்க்கப் பெற்றதால்தான் ராஜாவும், எஸ்பிபியும் தங்கள் இணைவின் அகரத்தையே சிகரமாக்கி விட்டனர்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button