இணைய இதழ்இணைய இதழ் 54தொடர்கள்

கடலும் மனிதனும்; 30 – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

கடலின் ஏரியா 51

1945ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி. மதியம் 2:10 மணிக்கு, வழக்கமான பயிற்சிகளுக்காக ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து கிளம்புகின்றன ஃப்ளைட் 19 என்று மொத்தமாகப் பெயரிடப்பட்ட ஐந்து அமெரிக்க போர் விமானங்கள். 4 மணிக்கு ஒரு ரேடியோ தகவலை அனுப்புகிறார் விமானக்கூட்டத்தின் தலைவர் சார்லஸ் டெய்லர்:

நாங்கள் வெள்ளை நிறத்தில் தெரியும் தண்ணீரை நோக்கி செல்கிறோம், எதுவும் சரியாகப் படவில்லை. எங்கே இருக்கிறோம் என்பது தெரியவில்லை

அந்த விமானக்கூட்டத்திலிருந்து வந்த கடைசி செய்தி இது. அவ்வளவுதான். 27 மனிதர்களும் ஐந்து விமானங்களும் போன இடம் தெரியவில்லை. இன்றுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது.

ஃப்ளைட் 19

1918ல் ப்ரேசிலில் இருந்து பால்டிமோருக்கு 306 பேருடன் கிளம்பிய யூ.எஸ்.எஸ் சைக்ளாப்ஸ் என்ற கப்பல், பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று அபயக் குரல்கூட எழுப்பாமல் அப்படியே காணாமல் போனது. “பருவநிலை நன்றாக இருக்கிறது, அனைத்தும் நலம்என்ற இறுதிச் செய்தியைத் தவிர அந்தக் கப்பலின் பயணம் பற்றி நம்மிடம் எந்தத் தரவுகளும் இல்லை. அமெரிக்க கப்பற்படை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் இழப்புகளைக் கொண்ட நிகழ்வு இது. இது மட்டுமல்ல, இதுவரை 50 கப்பல்களும் 20 விமானங்களும் இந்த இடத்தில் தொலைந்துபோனதாக சொல்லப்படுகிறது.

சைக்ளாப்ஸ் கப்பல்

இதன் பெயர் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). கடலுக்கு சம்பந்தமில்லாதவர்கள் கூட ஒருமுறையாவது கேள்விப்பட்டிருக்கும் இடம் இது. “இங்கே என்னதான் இருக்கிறது? என்னதான் நடக்கிறது?” என்ற ஆவலைக் கிளப்பும் வரலாறு கொண்டது. பெர்முடா முக்கோணம் என்று யூட்யூபில் தேடினால் உண்மையாகவே தகவல் சுழலில் நாம் தொலைந்துவிடுவோம். அந்த அளவுக்கு கருதுகோள்களும் கான்ஸ்பிரசிகளும் வேற்றுகிரகவாசிகளின் படங்கள் கொண்ட சுட்டிகளும் நம்மை மூழ்கடிக்கின்றன

மியாமி மாகாணம், போர்ட்டோ ரிக்கோ, பெர்முடா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான, ஐம்பது லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முக்கோணப் பகுதி இது. இதற்குப் பெயரிட்டவர் வின்செண்ட் காடிஸ் என்ற பத்திரிக்கையாளர். 1964ல் ஒரு பத்திரிக்கையில் இந்தப் பெயரை முதன்முதலில் பயன்படுத்துகிறார். ஆனால் அதற்கு முன்பேமர்மமான பகுதிஎன்ற ரீதியில் இது வரலாற்றில் பேசப்பட்டிருக்கிறது. 1950ல் மியாமி ஹெரால்ட் பத்திரிக்கையில் ஃப்ளைட் 19 விமான விபத்தின் மர்மங்கள் பற்றிப் பேசும்போதுஇந்த இடம்தான் அதற்குக் காரணம்என்ற ரீதியில் ஒருவர் எழுத, “ஆமாம்லஎன்று ஒரு குழப்ப விதை தூவப்பட்டது

பெர்முடா முக்கோணம்

சர்காஸோ கடற்பகுதிக்கு அருகில் பிரம்மாண்டமான ஒரு ஒளிப்பிழம்பு கடலில் விழுந்ததாகவும், அந்த நேரத்தில் திசைமானிகள் குழம்பிப்போய் சுற்றியதாகவும் மர்மமான ஒளி ஒன்று வந்ததாகவும் கொலம்பஸ் எழுதியதைக் குறிப்பிடும் பெர்முடா ஆதரவாளர்கள், “முன்பிருந்தே இது புதிர்கள் நிரம்பிய இடமாகத்தான் இருந்திருக்கிறது. நாம் அதை உணரத்தான் 20ம் நூற்றாண்டு வரை ஆகிவிட்டதுஎன்கிறார்கள். 2015ல் இந்தப் பகுதியில் ஒரு கப்பல் மூழ்கியதுகூட இந்தப் புதிர் நிகழ்வுகளின் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. “இந்தக் கணக்கே தப்பு, இங்கே இதுவரை 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூழ்கியுள்ளனஎன்றுகூட ஒரு தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பிசாசு முக்கோணம்என்றும் பெர்முடா முக்கோணம் செல்லமாக அழைக்கப்படுகிறது. “அமெரிக்க விமானப்படையின் ரகசியமான ஏரியா 51 கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. எல்லாம் யூகம்தான். அதைப் போல இது கடலின் ஏரியா 51″ என்கிறார்கள் சிலர். “புதிரான இடம்என்பதற்கு உருவகமாகவே ஆகிவிட்டது பெர்முடா முக்கோணம்.

அந்தப் புதிரைக் கொஞ்சம் விடுவிக்கலாம்.

பெர்முடா முக்கோணத்தைக் கடக்கும் எல்லாம் ஏன் தொலைகின்றன என்பதற்குக் கான்ஸ்பிரசி ஆர்வலர்கள் சொல்லும் விளக்கங்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. வேறு விளக்கங்களே இல்லாதபோது எல்லாரும் சென்றடையும் இடத்தை அவர்களும் சென்று அடைந்துவிடுகிறார்கள்மிகுபுனைவு. அறிவியல் ரீதியாக இவர்களின் கருதுகோள்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. அப்படி அவர்கள் முன்வைக்கும் விளக்கங்கள்தான் என்னென்ன?

  • பெர்முடா முக்கோணத்தில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்த பிரம்மாண்ட விமானங்களையும் கப்பல்களையும் கடத்துகிறார்கள்.
  • நீங்கள்தான் அட்லாண்டிஸைப் புனைவு நகரம் என்கிறீர்கள். அது புனைவு அல்ல. உண்மையில் அட்லாண்டிஸ் என்ற நகரம் இருந்தது. அது மூழ்கிவிட்டதுஎதனால் மூழ்கியது என்று நினைக்கிறீர்கள்? அதை விழுங்கியதே இந்த பெர்முடா முக்கோணம்தான். அட்லாண்டிஸையே விழுங்கிவிட்டது என்றால் விமானங்கள் எந்த மூலைக்கு?”
  • பெர்முடா முக்கோணத்துக்குள்ளே இருக்கும் அட்லாண்டிஸ்தான் எல்லாவற்றையும் உள்ளே இழுக்கிறது.
  • பெர்முடா முக்கோணப்பகுதியில் ஒரு இணைப்பிரபஞ்சம் இருக்கிறது. அங்கே காலவெளி நிகழ்வு ஒன்று இருக்கிறது. அதை Time space warp என்பார்கள். அதுதான் அப்படியே எல்லாவற்றையும் விழுங்கிவிடுகிறது. மறைந்த கப்பல்கள் அந்த இணைப்பிரபஞ்சத்துக்கு அனுப்பப்படுகின்றன.
  • பெர்முடா முக்கோணத்தில் வேறு பரிமாணங்களுக்குப் பொருட்களை அனுப்பும் சுழல்கள் உண்டு. கப்பல்கள் அந்த வேற்றுப் பரிமாணத்துக்குள் போய்விடுகின்றன.

வற்றை நிஜமாகவே உறுதியாக நம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அட்லாண்டிஸுக்கும் பெர்முடா முக்கோணத்துக்கும் உள்ள இணைப்பைப் பற்றி சார்லஸ் பெர்லிட்ஸ் என்பவர் 1974ல் எழுதிய போலி அறிவியல் நூல் முப்பது நாடுகளில் இரண்டு கோடிப் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது! “எல்லாமே வேற்றுகிரகவாசிகளின் செயல்என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு வரைபடங்களுடன்  ஆவணப்பட தொனியில் பேசும் பல வீடியோக்களின் அச்சுவடிவ முன்னோடி அது!

இவையெல்லாம் கொஞ்சம் நம்பும்படியாக இல்லைதான்.சரி, பெர்முடா முக்கோணத்தின்மர்மத்துக்குஎன்னதான் விளக்கம்?

முதலில் அது மர்மமே இல்லை என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். வேறு எந்த கடல் பகுதியைவிடவும் இங்கே அதிகமாக விபத்துகள் நடக்கின்றன என்பதே ஊதிப்பெரிதாக்கப்பட்ட செய்தி. பல விபத்துக்கள் அன்றாடம் நடந்தபடியேதான் இருக்கின்றன, ஆனால் இந்த இடத்தில் ஒரு விபத்து வரும்போது அதை மட்டுமே விரல் விட்டு எண்ணி எல்லாரும் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள் என்பது அவர்களது வாதம்.

ஒரு சில விஞ்ஞானிகள், இங்கு உள்ள வித்தியாசமான நிலவியல்காந்தப்புலங்கள் (Geo magnetic fields) காரணமாக திசைமானிகள் சிலநேரம் தடுமாறுகின்றன என்கிறார்கள். காந்த வடக்கைக் காட்டுவதற்கு பதிலாக அவை உண்மையான வடக்கு நோக்கித் திரும்பலாம் எனவும், அதனால் கப்பல்களும் விமானங்களும் வழி தவறுகின்றன என்கிறார்கள். இதை மறுக்கும் பிற விஞ்ஞானிகள், இதுபோன்ற காந்தப்புல மாறுபாடு எங்குவேண்டுமானாலும் இருக்கலாம் என்றும், இந்த இடத்தில் மட்டும் வாகனங்கள் ஏன் தடுமாறுகின்றன என்றும் கேட்கிறார்கள்.

நார்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், தங்களது கடற்பகுதியின் தரையிலிருந்து வெடித்துக் கிளம்பும் மீத்தேன் உள்ளிட்ட வாயுக்களை ஆராய்ந்தார்கள். இவை 45 மீட்டர் ஆழமும் 800 மீட்டர் அகலமும் கொண்ட திடீர்க் குழிகளை உருவாக்கலாம் என்றும், வெளியாகும் வாயுக்களோடு கலந்து கடல்நீரே நுரையாக மாறும் என்பதால், அந்த சூழலில் மேலே இருக்கும் கப்பல்கள் திடீரென்று மூழ்கிவிடலாம் என்றும், அதுதான் பெர்முடா முக்கோணத்திலும் நடக்கிறது என்றும் ஒரு கருதுகோளை முன்வைத்தார்கள்.

இதைக் கடுமையாக மறுத்த சில விஞ்ஞானிகள், இரண்டு கேள்விகளை எழுப்பினார்கள்:

  • பெர்முடா முக்கோணத்தில் இந்த வாயு வெடிப்புகள் இருக்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம்?
  • அப்படியே இருந்தாலும் கடலுக்குள் எழும்பும் வாயுக்கள் வானத்தில் இருக்கும் கப்பலை எப்படி மூழ்கடிக்கும்?

இங்கு இருக்கும் மோசமான காலநிலை விபத்துகளுக்கு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. இங்கு உள்ள கல்ஃப் ஸ்ட்ரீம் (Gulf stream) என்ற வெப்ப நீரோட்டம் புயல்களை உருவாக்கக் கூடியது. “White Squall” என்று பெர்முடாவைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் கடுமையான புயல்கள் இங்கு வழக்கமான செய்திதான். அது தவிர, இங்கேதிடீர் அலைகள் அல்லது ரௌடி அலைகள்” (Freak/Rogue waves) எனப்படும் அலைகளும் அடிக்கடி உருவாகின்றன. “ஒரே நேரத்தில் பல புயல்கள் வீசும் ஒரு கடலில் இவை உருவாகும்என்கிறார் கடல்சார் ஆராய்ச்சியாளர் சைமன் பாக்ஸால். ஒரே நேரத்தில் பல புயல்கள் தாக்குவதால் 10 மீட்டர் உயரம் கொண்ட மூன்று அலைகள் இங்கு உருவாகின்றன என்று வைத்துக்கொள்வோம். காற்றின் அலைக்கழிப்பில் இவை சந்திக்கும்போது 30 மீட்டர், அதாவது 100 அடி உயரம் கொண்ட ஒரு பேரலையாக இவை உருவெடுக்கின்றன. அப்படிப்பட்ட அலைகள் எதையும் விழுங்கக்கூடிய ஆற்றல் படைத்தவை. ஒரு சில கடற்பகுதிகளில் அவ்வப்போது இது நடக்கும் என்றும், பெர்முடா பகுதி அந்தக் காலநிலையைக் கொண்டது என்றும் சில விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். சவுத் ஆம்டன் பல்கலைக்கழகத்தில் இந்தக் கருதுகோளை ஒரு ஆராய்ச்சிக் குழு சோதித்தது. 100 மீட்டர் கொண்ட அலைகளில், பிரம்மாண்ட கப்பல்கள்கூட உருத்தெரியாமல் மூழ்கியது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அட்லாண்டிஸ்

காலநிலை மட்டுமல்லாது மனிதர்களின் தவறுகளும் பெர்முடா முக்கோண விபத்துகளுக்கு முக்கியக் காரணம்என்று 2022ல் அறிவித்தார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி கார்ல் க்ரஸ்செல்நிகி. உதாரணமாக, ஃப்ளைட் 19 விமானக்கூட்டத்தில் இருந்த மற்ற எல்லாரும் பயிற்சி காலகட்டத்தில் இருந்தவர்கள், டைலர் மட்டுமே அனுபவம் மிக்கவர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். டைலரின் வரலாறும் பளபளப்பானதல்ல. இரண்டு முறை ஏற்கனவே வழி தவறி விமானத்தை செலுத்தியதாக டைலர் மீது புகார் உண்டு. இரண்டு முறையும் அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீட்க வேண்டியிருந்தது. “என் மகன் மீது பழி வந்துவிடக்கூடாதுஎன்று டைலரின் தாயார் கேட்டுக்கொண்டதால் அமெரிக்க விமானப்படை சரியான காரணத்தை ஆவணப்படுத்தவில்லை என்றுகூட ஒரு கருத்து உண்டு!

பெர்முடா முக்கோணத்தின் காலநிலை, புயல்களால் வரும் இருட்டு, குழப்பம் ஆகியவற்றால் மனிதர்கள் செய்யும் தவறுகளே இந்த விபத்துகளுக்குக் காரணம் என்கிறார் கார்ல். கடலுக்குள் ஒரு விமானமோ கப்பலோ போய்விட்டால் அது அப்படியே அடித்து செல்லப்பட்டு அரிக்கப்படும் என்பதால்தான் தொலைந்த வாகனங்களின் பாகங்கள் கிடைக்கவில்லை என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இது ஒரு புறம் என்றால், பெர்முடா முக்கோணப்பகுதியில் வழக்கமாக மீன் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள், இங்கு ஸ்கூபா டைவிங் செய்து பெரிய பவளத்திட்டுகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு பத்திரமாகத் திரும்ப வருபவர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான சை திமிங்கிலம், ரைட் திமிங்கிலம் உள்ளிட்ட பல கடல்வாழ் விலங்குகள் இங்கு வாழ்கின்றன. கப்பல்களையே ஒரு இடம் இழுத்துக்கொள்ளும் என்றால் அங்கே திமிங்கிலங்கள் எப்படி உலவ முடியும், ஆகவே பெர்முடா முக்கோணம் தீங்கற்றது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்றும் கரீபியன் தீவுகளுக்குத் தேன்நிலவுக்காக செல்லும் பயணிகளை சுமந்துகொண்டு விமானங்களும் சொகுசுக் கப்பல்களும் பெர்முடா முக்கோணத்தைக் கடந்துதான் போகின்றன

ஆகவே, இந்த இடத்துக்கு பத்திரமாக சென்று வரும் பயணங்களைப் பற்றிப் பிரச்சனையில்லை. ஆனால் அவை ஆபத்தானவையாக மாறும்போது அதற்குக் காலநிலையும் மனிதத் தவறுகளும் காரணம் என்று புரிந்துகொள்ளலாம். பழைய விபத்துகளின் தரவுகள், கப்பல்களின் குறிப்பேடுகள் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதால் அவற்றில் மனிதத் தவறுகள் எத்தனை சதவிகிதம் என்று உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் எழுகின்றன. அவ்வளவே. இப்போதைக்கு 2022ல் வந்த இந்தப் புதிய கருதுகோள் (Climate and Human error) ஓரளவு எல்லா கேள்விகளுக்கும் பதில் தருகிறது. அடுத்தாக ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்தாலும் அதுவும் இந்தக் கருதுகோளின் அடிப்படைக் கருத்துக்களை ஒட்டியே இருக்கும் என்று நம்பலாம்.

யாரும் செல்ல பயப்படும் முக்கோணம் என்று அழைக்கப்பட்ட இடம் இது என்றால், தங்களை சுற்றியுள்ள விநோதமான கடற்பகுதியிலும் பிணைந்துவாழும் மரபுமிக்க மனிதர்கள் உண்டு. அவர்களின் வரலாறு என்ன?

தொடரும்…

nans.mythila@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button