இணைய இதழ்இணைய இதழ் 62தொடர்கள்

கடலும் மனிதனும்; 34 – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

சங்காயம்: சிறிய மீன்களின் பெரிய அரசியல்

ப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த காம்பியா நாட்டில் சான்யாங் என்ற மீன்பிடி கிராமத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வறுமையான நாடுகளில் ஒன்று இது. கடனில் மூழ்கியிருக்கும் இதன் பொருளாதாரம் கிட்டத்தட்ட அதலபாதாளத்தில் இருக்கிறது. இங்கு வறுமையின் விகிதம் 48%, அதாவது இரண்டு பேரில் ஒருவர் வறுமையில் உழல்பவராக இருக்கிறார். இந்த மீன்பிடி கிராமத்தில் கொண்டு வந்து இறக்கப்படும் ஒருவகை மத்தி மீனைப் பின்தொடரப் போகிறோம்

அதோ! மத்தி மீன் கூடைகள் வந்து இறங்கிவிட்டன. சில கூடைகளில் நல்ல மீன்கள் காணப்படுகின்றன, சில கூடைகளில் இருக்கும் மீன்கள் அழுகியவையாக இருக்கின்றன. மீன் கூடைகள் வந்து இறங்கிய உடனேயே ஓடிவரும் நான்கைந்து பேர், அழுகியதும் நல்லதுமாக எல்லா கூடைகளையும் ஒரு வண்டியில் ஏற்றுகிறார்கள்.  “சரி கிளம்புகிறோம்என்பதாக மீனவர்களிடம் தலையசைத்துவிட்டு வண்டியுடன் விரைகிறார்கள். மீனவர்களிடம் பேசும்போதுதான் இதற்கான பணம் முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.

காம்பியா மீனவர்கள்

மீனவர்கள் தங்களுடைய வேலையைத் தொடர்கிறார்கள், நாம் வண்டியைப் பின் தொடர்வோம். அதே கடலோரப் பகுதியில் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்குள் வண்டி நுழைகிறது. காம்பியாவில் ஒரு வருடத்துக்கு மொத்தம் பிடிக்கப்படும் மீன்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இங்குதான் வருகிறது என்ற தகவலோடு அந்த தொழிற்சாலையைப் பார்த்தால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இங்கு வந்து கூடை கூடையாக இறக்கப்படும் மீன்கள் உடனே பதப்படுத்துவதற்காக அனுப்பப்படுகின்றன. நம்முடன்ந்த ஒரு உள்ளூர்க்காரர் ஒரு விவரத்தைத் தெரிவிக்கிறார். இந்தத் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவுநீரால் மாசுபாடுகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி ஏற்கனவே காம்பியாவின் அரசு ஒருமுறை தற்காலிகமாகத் தொழிற்சாலையை மூடியிருக்கிறது. “இல்லை, கழிவுநீரை சுத்தம் செய்துதான் கொட்டுகிறோம், கடலில் கொஞ்சம் தள்ளிதான் கொட்டுவோம்என்று சிறுபிள்ளை போல அடம்பிடித்து அனுமதிபெற்று இந்த நிறுவனம் மீண்டும் வேலையைத் தொடங்கியிருக்கிறது

பேசிக்கொண்டேயிருந்ததில் நமது மத்தி மீன்களை மறந்துவிட்டோம். பதப்படுத்தப்பட்ட மீன்கள் அரைக்கப்பட்டுவிட்டன. அழகாக பேக்கிங் செய்யப்பட்டு ஒரு கப்பலில் ஏற்றப்படுகின்றன. நாமும் அந்தக் கப்பலில் பயணிக்கலாம்

கப்பல் வியட்நாமில் போய் இறங்குகிறது. அங்கே அந்த மீன்பெட்டிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு, பெயர் அச்சிடப்பட்டு வேறு ஒரு கப்பலுக்குப் போகின்றன. அந்தக் கப்பல் நேராக சீனாவுக்குப் போய் இறங்குகிறது. சீனாவின் துறைமுகத்திலிருந்து அந்தப் பெட்டிகள் வேகமாக மிகப்பெரிய ஒரு லாரியில் ஏற்றப்பட்டு ஒரு பெரிய தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்தத் தொழிற்சாலையில், பதப்படுத்தப்பட்டு அரைக்கப்பட்ட மீன்களோடு வேறு சில பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. ஒரு தீவனம் தயாராகிறது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து வழக்கமாகத் தீவனங்களை வாங்கும் பண்ணை முதலாளிகள், தீவன மூட்டைகளை வாங்கிக் கொண்டுபோய் தாங்கள் வளர்க்கும் சால்மன் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். தீவனத்தை தினமும் தின்னும் சால்மன் மீன்கள் கொழுத்து வளர்கின்றன. ஒரு குறிப்பிட்ட எடை வந்ததும் பண்ணைகளில் அறுவடை நடக்கிறது. சால்மன் மீன்கள் பிடிக்கப்பட்டு, தரத்துக்கேற்ப பிரிக்கப்படுகின்றன. முதல் தர மீன்கள் ஏற்றுமதிக்காக அனுப்பப்படுகின்றன. அவை நேராக அமெரிக்காவில் போய் இறங்குகின்றன. இறக்குமதியாகும் இந்த மீன்களை வாங்கும் மொத்த வியாபாரி அதை அமெரிக்காவின் பிரபல உணவகத்துக்கு விற்கிறார். கூட்டம் அலைமோதும் வெள்ளிக்கிழமை இரவு மெனுவில் இளம் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது சால்மன் மீன் பற்றிய அறிவிப்பு – “Special Entree: Salmon with Garlic Butter”.

காம்பியாவில் இருந்து கிளம்பிய ஒரு மீன், யார் கண்ணுக்கும் தெரியாமலேயே அமெரிக்காவுக்குப் பயணிக்கும் கதை இது. காம்பியா மட்டுமல்ல, வியட்நாம், பெரு சிலி என்று கணக்கிலடங்காத மூன்றாமுலக நாடுகளின் மீன்கள் இப்படித்தான் தினமும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இதில் இன்னொரு கவலையளிக்கும் தகவலையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலக அளவில் பண்ணை மீன் உற்பத்தியில் முதன்மை வகிக்கும் சீனா, ஆப்பிரிக்க நாடுகளின் மீன்வளத்தை அதிகமாகக் குறிவைத்திருக்கிறதாம். குறிப்பாக இங்கே இருக்கும் மீன்களைத் தீவனமாக எடுத்துக்கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுகிறதாம். ஆப்பிரிக்காவின் பல மீன் தொழிற்சாலைகள் ஏற்கனவே சீனாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. கடன் பொறிக்குள் பல ஆப்பிரிக்க நாடுகளை சிக்கவைத்திருக்கும் சீனா, இந்த நாடுகளின் மீன்பிடித்துறையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது. “சீனாவுக்காக மீன்பிடித்துத் தருபவர்கள் இங்கே அதிகரித்துவிட்டார்கள், அவர்கள் அண்டைநாடுகளிலிருந்து இங்கே வந்து அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் மீன்பிடிக்கிறார்கள், எங்களது இயல்பான மீன்பிடித் தொழிலின் இறையாண்மை பாதிக்கப்படுகிறதுஎன்று கவலை தெரிவிக்கிறார் ஒரு ஆப்பிரிக்க மீனவர்.

தீவனத்தை ஒட்டிய மீன்பிடித் தொழிலின் சிக்கலான வலைப்பின்னலுக்குள் இது ஒரே ஒரு கண்ணி மட்டுமே. நூல்கண்டு போல சிக்கிக்கொண்டிருக்கும் தனித்தனி சரடுகளைப் பிரித்தெடுத்து ஆராய்ந்தால் தலை சுற்றுகிறது. அதில் இன்னும் சிலவற்றையும் பார்த்துவிடுவோம்.

மீன்களைத் தீவனமாகப் பயன்படுத்தும் வழக்கம் கடந்த நூற்றாண்டில்ருவானது. 1892ல் நார்வே அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி, மீன்களை அரைத்து உருவாக்கப்படும் தீவனங்களைப் பண்ணை விலங்குகளுக்குக் கொடுத்தால் நல்ல வளர்ச்சி இருக்கிறது என்று நிரூபித்தது. 1917ல் அமெரிக்காவின் பண்ணை விவசாயிகள் அனைவரையும் மீன் தீவனத்துக்கு மாறச்சொல்லி அந்த நாட்டின் விவசாயத்துறை வலியுறுத்தியது. அப்போதிலிருந்து தொடங்கியதுதான் இந்த மீன் தீவன முறை. இவ்வாறு தீவனமாக உருவாக்கப்படும் மீன்கள் பெரும்பாலும் கோழி அல்லது பன்றிப்பண்ணைகளுக்கே அனுப்பப்பட்டு வந்தன. 1980களில் நன்னீர்/உவர் நீர் பண்ணையில் மீன்கள் மற்றும் இறால்களை வளர்க்கும் பழக்கம் அதிகரித்தது. அப்போது, அந்தப் பண்ணைகளுக்கும் மீன்கள் தீவனமாக அனுப்பப்பட்டன. ஒரு கட்டத்தில் விலங்குப்பண்ணைகள் வேறுவகை தீவனங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தன. இன்றைய சூழலில், உருவாகும் மீன் தீவனங்களில் 70 சதவிகிதம் மீன் மற்றும் இறால் பண்ணைகளுக்குத் தான் அனுப்பப்படுகிறது.

காம்பியா உதாரணத்தில் நாம் பார்த்தது, சிறிய படகுகளில் பிடிக்கப்படும் ஒரு வகை மத்திமீன். தீவனத்துக்காகப் போகும் எல்லா மீன்களும் இதுபோன்ற சிறு படகுகளில் பிடிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், மீன்பிடித் தொழிலில் மதிப்பே இல்லாதது என்று கருதப்பட்ட ஒரு விஷயத்துக்கு இந்த தீவனத்துறைதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அதுதான் சங்காயம். 

இழுவை மடி போன்ற பெரிய வலைகளில் மாட்டுகிற, வணிக ரீதியாகப் பயன்படுத்த முடியாத மீன்களுக்கும் பிற கடல் உயிரிகளுக்கு அவ்வளவாக விலை இருக்காது, இதை  “சங்காயம்என்பார்கள்ஆங்கிலத்தில் இது Bycatch/Discard என்று அழைக்கப்படுகிறது. இவற்றை அப்படியே கடலில் தூக்கி வீசுவதுதான் வழக்கம். சென்னையின் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உட்பட பல இடங்களில் இதுபோன்ற மீன் கழிவுகள், நண்டுகள், குஞ்சு இறால்கள், பொடி மீன்கள் ஆகியவை மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த சங்காயம்தான் தீவன உற்பத்திக்கு அடித்தளமாக மாறியது. ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்த சங்காயத்தை, தீவனத்துறை ஒரு வணிகப் பண்டமாக மாற்றியது.அதுவரை குப்பையில் எறியப்பட்ட கடல் உயிரினங்களும் பொடி மீன்களும் திடீரென்று விலைக்கு எடுக்கப்பட்டன

முதலில் இது ஒரு உபரி வருமானமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால், “சங்காயத்துக்காகவே மீன்பிடிக்கச் செல்வது” என்ற வழக்கம் இப்போது வந்திருக்கிறது. “மீனவர்களைக் குறை சொல்ல முடியாது. பொதுவாக மீன்களின் வரத்து குறைந்திருக்கிறது. மீன்பிடிக்கும் செலவு அதிகரித்திருக்கிறது. அடிக்கடி காற்றும் மழையும் புயலும் இருப்பதால் கடலில் அவர்கள் செலவழிக்கும் நிகர நாட்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்தத் துறையில் மீனவர்கள் அல்லாத பிறரும் வணிகர்களும் நுழைந்துவிட்டதால் நிதி சம்பந்தப்பட்ட நெருக்கடிகளும் போட்டியும் இருக்கின்றன. ஆகவே இவர்கள் சங்காயத்தைத் தேடிச்செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்” என்கிறார் பத்திரிக்கையாளர் சைலேந்திர யஷ்வந்த். 

“காம்பியா போன்ற ஒரு ஏழைநாட்டிலிருந்து அமெரிக்கா தனக்கான உணவு ஆதாரத்தைத் தேடுவதுவேண்டுமானல் அறத்தின் அடிப்படையில் பிழையாக இருக்கலாம். ஆனால் இந்த சங்காயம் எப்படியாக இருந்தாலும் வீணாகப் போகும் பொருள்தானே! அதில் வருமானம் இருந்தால் என்ன தவறு?” – என்று நமக்குத் தோன்றலாம். சற்று பொறுங்கள், இன்னும் சில சரடுகளை அந்த வலைப்பின்னலிலிருந்து பிரிக்க வேண்டியிருக்கிறது.

முதலாவது, சங்காயம் என்ற விஷயமே சுற்றுச்சூழலுக்குக் கேடானது. வணிக ரீதியாக இந்த மீன்களுக்கோ கடல் உயிரினங்களுக்கோ மதிப்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இவை அனைத்துக்குமே சூழல் ரீதியான மதிப்பும் பங்களிப்பும் உண்டு. இவற்றைப் பிடிப்பதன்மூலம் கடல் சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே, சங்காயத்தின் விகிதத்தைக் குறைப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும். ஆனால் அதற்கும் விலை இருக்கிறது எனும்போது, அந்த இலக்கு கைவிட்டுப் போய்விடுகிறது. 

இரண்டாவது, “சங்காயத்தில் தூக்கி வீசப்படும் மீன்களில் எதுவுமே உணவுக்குப் பொருந்தாது, எல்லாமே குப்பைதான்” என்ற கருத்தே தவறானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 2017ல் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய ஆய்வில், தீவனத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் மீன்களில் 90 சதவிகிதம் உணவு மீன்கள் என்று கண்டறியப்பட்டது! அந்த ஆராய்ச்சியில் இன்னும் ஒரு தகவலும் வெளிவந்தது. ஒரு ஆண்டில், உலகில் பிடிக்கப்படும் மொத்த மீன்களில் 27%, அதாவது 20 மில்லியன் டன்கள் தீவனத்துக்கு அனுப்பப்படுகின்றனவாம். பிடிக்கப்படும் மீன்களில், தீவனத்துக்கு மட்டுமே கால்வாசி மீன்களை நாம் அனுப்பிக்கொண்டிருக்கிறோம். சந்தை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தீவன நிறுவனங்களின் குறுக்கீடு ஆகியவற்றாலேயே இந்த மீன்கள் உணவுத்தட்டுக்குப் போகாமல் தீவனமாக மாறுகின்றன என்று அந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. 

நாம் முதலில் பார்த்த காம்பியா உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். ஆப்பிரிக்காவிலேயே மிக அதிகமாகக் கடல் உணவு சாப்பிடுபவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஆனால் இங்கு நிலவும் சூழல் காரணமாக அங்கு உணவு பாதுகாப்பு என்பதே அற்றுப் போய்விட்டது. மீன்களின் விலை உயர்ந்திருப்பதால் அவற்றை வாங்க முடியவில்லை என்று காம்பியாவின் குடிமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இங்கு கடுமையான ஊட்டசத்துக் குறைபாடும் நிலவுகிறது.இந்த சூழலில் நியாயமாக அவர்களது உணவுத்தட்டுதானே கவனிக்கப்படவேண்டும்? மாறாக, அவர்களது கடல் வளங்கள் அமெரிக்கர்களுக்கு உணவூட்ட ஏன் சுரண்டப்படுகின்றன? “உணவு ரீதியாக பாதுகாப்பற்ற நாடுகளிலிருந்து உணவுப்பாதுகாப்பு அதிகம் உள்ள மேலை நாடுகளுக்கு மேலும் உணவு தரவே இந்தத் தீவனத் துறை உதவுகிறது” என்று சூழலியலாளர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மேலை நாடுகள் உணவை மட்டும் எடுத்துக்கொண்டு, தீவன உற்பத்தியால் வரும் சூழல் கேடுகளையெல்லாம் நைஸாக மூன்றாமுலக நாடுகளுக்குத் தள்ளிவிட்டிருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

சிறிய நாடுகளை சுரண்டுவது வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் பண்ணை மீன்களுக்கும் தீவனம் வேண்டுமில்லையா? தீவன மீன்களைப் பிடிக்கும் முறையில் இருக்கும் அரசியலை சரிசெய்துவிட்டால் இதைத் தொடர்ந்து செய்யலாமே” என்று நமக்குள் கேள்வி எழலாம். ஆனால் மீன்களைத் தீவனமாகப் போட்டு மீன் வளர்க்கும் முறையே தவறு என்கிறார்கள் மீனியலாளர்கள். மீன் பண்ணைகளில் Feed Conversion Ratio என்ற ஒரு கோட்பாடு இருக்கிறது. எத்தனை கிலோ தீவன மீன் இருந்தால் ஒரு கிலோ வளர்ப்பு மீன் கிடைக்கும் என்ற கணக்கு இது. இந்தக் கணக்கு இனத்துக்கு இனம் மாறுபடும் என்றாலும், மீன்களைத் தீவனமாகப் பயன்படுத்தும்வரை இது நஷ்டக்கணக்காகத்தான் இருக்கும் என்று மீனியலாளர்கள் கணிக்கிறார்கள்.

ஒரு புரிதலுக்காக சில கணக்குகளைப் பார்க்கலாம். ஒரு கிலோ இறால் வளர்க்க 1.6 கிலோ மீன் தீவனம் தேவை. 1997களின் கணக்குப்படி, ஒரு கிலோ சால்மன் மீனை வளர்க்க, 3 கிலோ தீவனம் தேவையாக இருந்தது. ரொம்பவும் போராடி, திக்கித் திணறி இப்போதுதான் அதை 2 கிலோவாகக் குறைத்திருக்கிறார்கள். கேரை/சூரை என்றெல்லாம் அழைக்கப்படும் Tunaவின் நிலைமை இன்னும் மோசம்! ஒரு கிலோ சூரை மீனை வளர்க்க 20 கிலோ தீவனம் தேவைப்படும்! இதில் இன்னொரு விஷயத்த்தையும் நாம் கவனிக்க வேண்டும், இங்கே தரப்பட்டிருப்பது எல்லாம் ஒரு கிலோ மீனை வளர்ப்பதற்குத் தேவையான மீன் தீவனத்தின் அளவுதான், அது நேரடியான மீன் அளவு அல்ல. ஒரு கிலோ மீன் தீவனத்தை உற்பத்தி செய்யவே 5 முதல் 6 கிலோ மீன்கள் தேவைப்படும்! அப்படியானால் நிகர மீன் தேவையைக் கணக்குப் போட ஒவ்வொரு அளவையும் ஐந்தால் பெருக்கவேண்டியிருக்கும்!

இவ்வளவு மீனை வீணாக்கியபிறகு சத்துக்களாவது மிஞ்சுகிறதா என்று பார்த்தால் அதிலும் மந்தநிலைதான். தீவனமாகப் பயன்படுத்தப்படும் மீன்களிலிருந்து பண்ணை மீன்களுக்குப் பாதி சத்துக்கள்தான் போகின்றனவாம். தீவனமாக அரைக்கப்படும் அந்த மத்தி மீனை நேரடியாக நாம் சாப்பிட்டாலே நிறைய சத்துக்கள் கிடைக்கும்!

சரி, அப்படியானால் பண்ணைகளே வேண்டாமா? என்றால், அது ஒரு சிக்கலான கேள்வி. ஒரு நட்சத்திரக் குறியிட்டு “நிபந்தனைகளுக்குட்பட்டது” என்று முன்னறிவிப்பு செய்துவிட்டுதான் பண்ணைகளை அனுமதிக்கவேண்டும். பண்ணைகளால் ஏற்படும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள், உதாரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இறால் பண்ணைகள் ஏற்படுத்திய பாதிப்பு போல எந்த விதமான பாதிப்பும் இருக்காது என்று உறுதிசெய்யவேண்டும். ஒரு கடல் உணவைப் பண்ணை முறைக்கு மாற்றுவதற்கு முன்னால் இந்த தீவன விகிதம் சரியாக ஆராயப்படவேண்டும். பொதுவாக ஊன் உண்ணிகளில் இந்த விகிதம் மிகவும் அதிகம் என்பதால் இறால், சால்மன், சூரை போன்றவற்றைப் பண்ணைகளில் வளர்ப்பது தவிர்க்கப்படவேண்டும். இந்தப் பண்ணைகள் ஏற்கனவே இயங்கிவரும்பட்சத்தில் மாற்றுத் தீவனங்கள் உடனடியாக உருவாக்கப்படவேண்டும். தீவன நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும். சிறிய மீன்களை குப்பை மீன்களாகப் பார்க்காமல் அவற்றை புரதச்சத்து மற்றும் உணவுப்பாதுகாப்புக்கான ஆதாரங்களாகப் பார்க்கும் மனநிலை அரசாங்கத்துக்கு வரவேண்டும். 2019ல் இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு அங்கன்வாடிகளில் சிறு மீன்களைக் குழந்தைகளுக்கு உணவாக வழங்கும் திட்டத்தை ஒடிஷா மாநிலம் வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. அதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இந்தப் பட்டியல் மலைப்பாக இருக்கலாம், ஆனால் அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டால் இது எளிதானதுதான். ஒரு அளவுக்கு மேல் மீன் பண்ணைத் துறையை நம்மால் கட்டுப்படுத்திவிட முடியாது. ஆனால் வழக்கமான உற்பத்தித் துறை மாடலைத் தவிர்த்துவிட்டு சூழல்ரீதியாக அதை அணுகினாலே சீர்குலைவைத் தடுக்கலாம். “மீன் தீவனங்களைத் தவிர்த்து, சால்மன் போன்ற ஊன் உண்ணி மீன்களுக்கு பதிலாகக் கெண்டை போன்ற தாவர உண்ணிகளை அதிகம் வளர்த்தாலே உலக அளவில்  ஒரு ஆண்டுக்கு 37 லட்சம் டன் தீவன மீன்களை காப்பாற்றலாம். இது மட்டுமல்ல, இந்த முறையைப் பின்பற்றினால் நிகர பண்ணை உற்பத்தியும் 6.1 மில்லியன் டன் அதிகரிக்கும்!” என்கிறது மார்ச் 2022ல் வந்த ஒரு ஆய்வு. பல நூறு சிறிய மீன்களைப் போட்டு ஒரு பெரிய மீனை வளர்க்கும் முறைக்கு எப்படியாவது நாம் முடிவு கட்டவேண்டும், இல்லாவிட்டால் எதிர்காலம் தடுமாற்றமாகத்தான் இருக்கும். 

உணவுக்காக அழிக்கப்படும் மீன்களின் கதை இது என்றால், பொழுதுபோக்குக்காக அழிக்கப்படும் கடல் உயிரினங்களும் உண்டு, அது என்ன வரலாறு?

(தொடரும்…)

nans.mythila@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button