
தக்கையின்மீது இரண்டு கண்கள்
“இன்னொரு முறை நான் முயற்சி செய்வேன் என்று அவன் நினைத்துக்கொண்டான். தனது வலி, உடலில் மீதமிருந்த பலம், எப்போதோ போய்விட்ட பெருமித உணர்வு ஆகிய எல்லாவற்றையும் மீனின் வேதனைக்கு எதிராக நிறுத்தினான். கயிறை வீசி, காலால் அழுத்தி எவ்வளவு வலுவாக உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் ஈட்டியை உயர்த்தி ஆழமாக அதை உள்ளே இறக்கினான்…..”
– “கிழவனும் கடலும்” என்ற எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் புகழ்பெற்ற குறுநாவலில் வரும் வரிகள் இவை. அதிர்ஷ்டமற்றவன் என்று சக மீனவர்களால் பார்க்கப்படும் சாண்டியாகோவுக்கும், மார்லின் என்ற ஒரு பெரிய மீனுக்கும் இடையே நடக்கும் இழுபறியை இந்த வரிகள் விவரிக்கின்றன. தன்னுடைய இழந்த பெருமை, இளமைத் துடிப்பு, மீன்பிடி ஆற்றல் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான சாண்டியாகோவின் போராட்டம் இக்கதை. பல நாட்கள் நீளும், வாழ்வா சாவா போராட்டத்தின் இறுதியில் மீனைப் பிடித்ததும் சாண்டியாகோவுக்குள் ஒரு நிம்மதியும் பெருமிதமும் பிறக்கிறது. வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் ஒரு சாகசமாகவும் இந்தக் கதை விவரிக்கப்படுகிறது. பத்து சிறிய மீன்களைப் பிடிப்பதை விடவும் போராடி ஒரு பெரிய மீனைப் படகுக்குள் இழுத்துப் போடுவது வீரசாகசத்தின் அடையாளம் என்ற அடிப்படையிலிருந்து வரும் சித்தரிப்பு இது.
அந்த சாகச உணர்வை மையப்படுத்தியதுதான் பொழுதுபோக்குக்காக மீன் பிடிக்கும் பழக்கம். இது ‘Recreational Fishing / Game Fishing / Sport Fishing’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில், அளவில் பெரிய மீன்களைப் பிடிக்கும் போட்டியும் நடக்கும், இதை ‘Trophy Fishing’ என்பார்கள். நவீன மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, நியாண்டர்தால் மனிதர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மனிதனின் மீன்பிடிக்கும் வழக்கம் அத்தனை தொன்மை வாய்ந்தது. மீன்கள் முக்கியமான உணவு ஆதாரங்களாக இன்றும் கடலோரப் பகுதிகளில் இருக்கின்றன. பொழுதுபோக்குக்காக மீன் பிடிக்கும் வழக்கத்தில் அத்தகையை உணவுத்தேவையோ அவசியமோ இல்லை. சமூகத்தில் எல்லாமே கிடைக்கக்கூடிய இடத்தில், உச்சத்தில் இருக்கும் மன்னர்களும் பிரபுக்களும் சும்மா பொழுதைப் போக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்கள் இல்லையா? அந்த வழக்கத்தோடு இதை ஒப்பிடலாம். வேட்டையாடப்பட்ட பிறகு அந்த விலங்கு சாப்பிடப்படும் என்றாலும் உணவு அந்த செயல்பாட்டின் மைய நோக்கமாக இருக்காது. அதேதான் இங்கும் நடக்கும். வீர சாகச உணர்வு, இயற்கைக்கு எதிரான போட்டி, பொழுதுபோக்கு ஆகியவையே இந்த செயல்பாட்டின் மையங்கள்.
1496ம் ஆண்டிலேயே பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கும் வழக்கத்தைப் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இதைப் பற்றிய முதல் புத்தகம் 1653ம் ஆண்டில் எழுதப்பட்டது. ஷேக்ஸ்பியரோடு அடிக்கடி மீன்பிடிக்கச் செல்லும் ஜான் டென்னிஸ் என்ற கவிஞர், இதுபற்றிக் கவிதைகள்கூட எழுதியிருக்கிறார்! சும்மா பொழுதுபோக்குக்காக என்றில்லாமல், அளவில் பெரிய மீன்களை மட்டும் விரட்டிப் பிடிக்கும் வழக்கத்தை 1898ல் சார்லஸ் ஃப்ரெடரிக் ஹோல்டன் என்பவர் அறிமுகப்படுத்துகிறார். அதற்குப் பின்னான காலகட்டத்தில், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் இப்படி மீன் பிடிப்பதற்காகவே பல படகுகள் வடிவமைக்கப்படுகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை இந்த வழக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளர்ந்த மேலை நாடுகளில் இந்த வழக்கம் ஒப்பீட்டளவில் மிக அதிகம்.
கடலுக்கும் மனிதனுக்குமான உறவில் இது அதிகம் கண்டுகொள்ளப்படாத புள்ளி எனலாம். மீன்பிடித் தொழில், அதில் இருக்கும் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், தொழில்ரீதியாக இல்லாமல் சும்மா இப்படி மீன்பிடிப்பது, ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி வந்து யார் பிடித்த மீன் பெரியது என்று போட்டி வைப்பது ஆகிய செயல்பாடுகள் பொதுவெளியில் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால், இதைப் பற்றிப் பேசுவது அவசியம் என்றும், நாம் நினைப்பதைவிடவும் இந்தத் துறை பெரியது எனவும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள். உதாரணமாக, வருடத்துக்கு எத்தனை மீன்கள் பிடிக்கப்படுகின்றன என்ற கணக்கில் இந்தத் துறையையும் சேர்த்தால் மொத்த மீன்களின் கணக்கு 14% அதிகரிக்கும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்! அவ்வளவு பெரிய துறையாக இருந்தாலும் இது அதிகம் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கிறார்கள்!உலகெங்கிலும் பல நாடுகளில் இந்த வழக்கம் உண்டு. ஒரு ஆண்டில் உலக அளவில் இந்த முறையில் மட்டும் 4700 கோடி மீன்கள் பிடிக்கப்படுகின்றன! இது ஒரு சாகசத்துக்காக மட்டுமே பிடிக்கப்படுகிறது என்பதால் பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில் இரண்டு பங்கு மீன்கள் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்படுகின்றன. ஆனாலும் 1566 கோடி மீன்கள் மீதம் வரும், அவை எல்லாமே பிடிக்கப்படுகின்றன என்று நாம் புரிந்து கொள்ளலாம். இது ஒரு உலகளாவிய சராசரி மட்டுமே. ஒட்டுமொத்தமாகப் பிடிக்கப்படும் மீன்களை இன்னும் துல்லியமாகக் கணக்கெடுத்தால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இந்தப் பொழுதுபோக்கு இயற்கைசார்ந்த இடங்களில் பயணிக்கக்கூடிய ஒரு அனுபவத்தைத் தருகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது, ஒரு மீனை வெற்றிகரமாகப் பிடிப்பது வெற்றியடைந்த ஒரு உணர்வைத் தருகிறது என்று மீன் பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்குக் கிடைக்கும் நன்மை தாண்டி, இந்த வழக்கத்தால் சூழல் பாதிப்புகள் / சமூக பாதிப்புகள் ஏற்படுமா? இந்த வழக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
முதலில் சூழலியலுக்கு இந்த வழக்கத்தால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம். சில இடங்களில், சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முதலில் கவனித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கும் குரல்களாக இவர்கள் இருக்கிறார்கள். பஹாமாஸ் தீவுகளில் இது நடந்திருக்கிறது. விஞ்ஞானிகளோடு இணைந்து, சில முக்கிய ஆராய்ச்சிகள், கணக்கெடுப்புகளில் இவர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இவர்களது உலகளாவிய தகவல் தொடர்பு வலைப்பின்னல் பெரிது என்பதால், சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு விஷயத்தை இவர்களால் உடனே எடுத்துச் செல்ல முடிகிறது.
“அந்தப் பெரிய வலைப்பின்னல்தான் பிரச்சனையே. மீனவர்களின் கூட்டுறவு சங்கங்களைவிட உரத்த குரல் படைத்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். சில நேரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மறுதலித்துவிட்டு இவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படுகின்றன” என்று சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “ஒன்றிரண்டு பெரிய மீன்களைத்தான் பிடிக்கிறார்கள்” என்ற பொதுப் புரிதல் இருப்பதால் இவர்களால் ஏற்படும் தாக்கம் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. சுற்றுசூழல் பாதுகாப்பு, மீன்பிடி உச்சவரம்பு, தடை செய்யப்பட்ட பகுதி என்பது போன்ற விவாதங்கள் வரும்போது திடீரென்று, “நாங்களும் இதில் பங்குதாரர்கள்” என்று இவர்கள் முளைத்துவிடுகிறார்கள், பிறரின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இது ஒரு முக்கியமான நடைமுறைச் சிக்கல். இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, “நீங்கள் இந்த அளவுக்கு மீன்களைப் பிடிக்கிறீர்கள். இது தொடர்ந்தால் இப்படியான பாதிப்புகள் ஏற்படும்” என்று சொல்லக்கூட நம்மிடம் சரியான தரவுகள் இல்லை என்பது கூடுதல் சோகம்.
இதுமட்டுமின்றி, இவர்களது செயல்பாடுகளால் நேரடியான சூழல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவர்களது எண்ணிக்கை குறைவு என்றாலும் சில நாடுகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் மீன்பிடிக்கக்கூட இவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அந்த சூழலின் மீன் எண்ணிக்கை நேரடியாக பாதிக்கப்படுகிறது.
அழிந்துவரும் மீன்களை இவர்கள் குறிவைக்கும்போது அழிவின் விகிதமும் வேகமும் அதிகரிக்கிறது.
ஒன்றிரண்டு மீன்கள் மட்டுமே பிடிக்கப்பட்டாலும் சில இனங்களில் அதிகமான பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, குறைவான எண்னிக்கையில் முட்டையிடும் மீன்கள், ஒரு சில வாழிடங்களை மட்டுமே நம்பி வாழக்கூடிய, எளிதில் பிடிபடக்கூடிய மீன்கள் அதிகமாக அழியும்.
ஒரு சில மீன் இனங்களை மட்டுமே தேடி, போட்டிக்காக அவற்றில் மிகப்பெரிய மீன்களை மட்டுமே பிடிப்பது மீன்களின் வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும். ஒரு இனத்தில் அளவில் பெரிய மீன்கள் மட்டுமே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பது அந்த குறிப்பிட்ட மீன் இனத்தின் பரிணாமப் போக்கையே மாற்றியமைக்கலாம்.
இனப்பெருக்க காலத்தில் அளவில் பெரிய மீன்கள் பிடிக்கப்பட்டால் அவற்றின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்படும். அளவில் பெரிய மீன்களே முட்டையிடும் பருவத்தில் இருக்கும் வளர்ந்த மீன்கள் என்பதை இங்கே கவனிக்கவேண்டும். அவை மட்டுமே தேடி அழிக்கப்படுவது நல்லதல்ல
ஒருவேளை அந்த மீன்கள் மீண்டும் நீரிலேயே விடப்பட்டாலும் அவை பிழைத்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காயங்கள், உடல் சோர்வு, பிடிக்கப்பட்டதால் வந்த மன உளைச்சல், கண்ணுக்குத் தெரியாமல் உள் உறுப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றால் அவை இறக்கவும் வாய்ப்பு உண்டு. மீன்பிடிக்கும் தூண்டில்கள் கடலுக்குள் தவறி விழும்போது அவற்றில் இருக்கும் மெல்லிய இழைகள், உலோகக் கம்பிகள் ஆகியவை கடல் விலங்குகளை பாதிக்கின்றன. பெரிய மீன்பிடிப் படகுகளால் கடல் வாழிடங்கள் சீர்குலைகின்றன. படகுகளின் இரைச்சலால் ஒலி மாசு ஏற்படுகிறது. ஒரு சில பாதுகாக்கப்பட்ட இடங்களில், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கும் வழக்கம் அதிகரித்த பிறகு பொதுவான கடல் சூழல் பாதிக்கப்பட்டிருப்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.
சில சமயங்களில், பிடிப்பதற்கு மீன்கள் வேண்டும் என்பதற்காகவே அந்த நீர்நிலைகளில் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மீன் குஞ்சுகளை விட்டு அவற்றை வளர்த்தெடுக்கிறார்கள்! இது பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் நடக்கிறது. ப்ரிட்டனில் உள்ள பல குளங்களில் ‘லார்ஜ் மவுத் பாஸ்’ எனப்படும் ஒருவகை மீன்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருக்கும் இனங்களை இந்தப் புது மீன்கள் என்ன செய்யும் என்பது ஒரு முக்கியக் கேள்வி.
குறிப்பிட்ட அளவிலான மீன்களே தொடர்ந்து பிடிக்கப்படுவது நேரடியான பாதிப்பைத் தரும் என்று தெரிவிக்கிறது 2007ல் வந்த ஒரு ஆய்வறிக்கை. பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கும் வழக்கம் அதிகமாக இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் 1956 முதல் 2007 வரையிலான ஆவணங்களை ஆராய்ந்ததில், அங்கு பிடிக்கப்பட்ட மீன்களின் சராசரி எடை 19 கிலோவிலிருந்து 2.3 கிலோவாகக் குறைந்திருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. அளவு / எடை மட்டுமல்லாமல், எந்த இனம் அதிகமாகக் கிடைக்கும், எது குறைவாகக் கிடைக்கும் என்பதுபோன்ற பிற அலகுகளும் மாறியிருக்கின்றன. இது அளவுசார்ந்து மீன்களைக் குறிவைப்பதால் நடக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பொழுதுபோக்குக்காக மீன்பிடிப்பவர்கள் ஏற்படுத்தும் இத்தகைய பாதிப்பு, பொதுமக்களையும் மீனவர்களையும்கூடத் தாக்குகிறது. மீன்களின் அளவும் எடையும் குறைகிறது என்றாலும், மீன்பிடிப் பயணத்துக்கான செலவு குறைவதில்லை என்பதால் சிறிய, தரம் குறைந்த மீன்களுக்கு அதிக விலை தரும் இடத்துக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். தங்களுக்கு விருப்பமான மீன்களையோ அளவுகளையோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மீன்களின் எண்ணிக்கை குறைவதால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
பொழுதுபோக்குக்காக மீன்பிடிப்பவர்கள் சிலநேரம் அயல் ஊடுருவி இனங்களை நீர்நிலைகளில் விட்டுவிடுகிறார்கள், இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, மூணாறு மற்றும் நீலகிரி பகுதிகளில் காணப்படும் ‘ட்ரவுட்’ என்ற மீன் இனம், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கும் வெளிநாட்டவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் சரியான தரவுகள் இல்லாததால் பொழுதுபோக்குக்காக மீன்பிடிப்பது பற்றிய சரியான சட்ட வரைமுறைகளை நம்மால் உருவாக்க முடியவில்லை. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பொழுதுபோக்குக்காக மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஒரு சில நாடுகளில், குறிப்பிட்ட இனங்களைப் பொழுதுபோக்குக்காகப் பிடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதைத் தாண்டிய தெளிவான வரைமுறைகளோ சட்டங்களோ இல்லை.
அதே நேரம், வளர்ந்துவரும் நாடுகளில் இது ஒரு சுற்றுலா செயல்பாடாக முன்னிறுத்தப்படும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. “நமது நாட்டை சர்வதேச Sports Fishing தலமாக மாற்றலாம்”, “கவனிக்கப்படாத வாய்ப்புகள்”, “சுற்றுலாத் துறைக்கான புதிய செயல்பாடு” போன்ற தலைப்புகளில் இதன்மீது கவனம் பாய்ச்சுகிறார்கள். உலக அளவில் இதுகுறித்த குழப்பமான சட்டங்கள் இருக்கும் சூழலில், வளரும் நாடுகளில் இது ஒரு குடிசைத் தொழிலாகத்தான் முதலில் உருவாகும். இதைத் தொடக்கத்திலேயே நெறிமுறைப்படுத்டினால் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
பொதுவான மீன்பிடித் தொழில்மூலமும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றாலும் உணவு, மீனவர்களுக்கான வாழ்வாதாரம் என்று பல முக்கியமான தேவைகளை அது நிறைவேற்றுகிறது. ஆனால், பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கும் வழக்கத்தில் அப்படி எதுவும் இல்லை என்பதால் அதைத் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது. வழக்கமான மீன்பிடித் தொழிலோடு ஒப்பிடும்போது இதுபற்றிய தரவுகளும் சட்டங்களும் குறைவு. ஆகவே இதைக் கூடுதல் வேகத்தோடு கவனிக்க வேண்டும்.
உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கு பொழுதுபோக்கு மீன்பிடித்தலுக்கான 26 கூட்டமைப்புகள் இருப்பதாக 2015ல் வந்த ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக இவற்றில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நன்னீர் மீன்களைப் பிடிக்கும் ஆர்வலர்களுக்காகத்தான் என்றாலும், இதில் கடல்சார்ந்த மீன்பிடி பொழுதுபோக்கைக் கொண்டவர்களும் உண்டு. குறிப்பாக அந்தமான் தீவுகளில் இது மிக அதிகம். ஒரு மாதத்துக்கு 90 முதல் 120 படகுகள் (ஒவ்வொன்றும் ஐந்து பேர் உட்காரக்கூடியவை) இதற்காகவே இயக்கப்படுகின்றன என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பொழுதுபோக்குக்காக மீன்பிடிப்பவர்களால் இந்தியாவில் அதிகமாகக் குறிவைக்கப்படும் 22 இனங்களை ஆராய்ந்ததில், 9 இனங்கள் அழிந்துவரும் நிலையில் இருப்பது தெரிய வந்தது. இந்த 22 இனங்களில் ஐந்து இனங்கள் பற்றிய தரவுகள் நம்மிடம் இல்லை என்பதால் அவற்றையும் பாதிக்கப்படக்கூடிய மீன்களாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியானால் பிடிக்கப்படும் இனங்களில் 63% அழிந்துவரக்கூடியவை! இவற்றில் எல்லாமே பிடித்து அழிக்கப்படுகின்றன என்பதில்லை, ஆனால், பிடிக்கப்பட்ட மீன்களில் தவறுதலாக ஒன்றிரண்டு இறந்தால்கூட அது பாதிப்புதான்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உலகமெங்கும் இந்த வழக்கம் அதிகரித்தது என்பதைப் பல பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. கையில் அதிக நேரம் இருந்ததால், தங்களது வீடுகளுக்கு அருகில் இருக்கும் ஓடைகளில் மீன்பிடிக்கப் பலர் பழகியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இதில் தீவிரமாக உள்ளே நுழைந்தால் அடுத்த சில ஆண்டுகளில் பொழுதுபோக்குக்காக மீன்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதற்குள் சில புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

இப்போது புதிதாக அளவில் சிறிய மீன்களை மட்டுமே பிடிக்கும் “Microfishing” என்ற ஒரு வழக்கம் அதிகரித்து வருகிறது. இது ஜப்பானில் முன்பே இருந்த நடைமுறைதான் என்றாலும் உலகமெங்கும் இது பரவிக்கொண்டிருக்கிறது. இந்த மீன்கள் அளவில் சிறியவை என்பதால் கவனமாகக் கையாளவில்லை என்றால், நீரில் மீண்டும் விட்டாலும் அவை பிழைப்பது கடினம். அதேநேரம் அளவில் மிகச்சிறிய மீன்களின் உயிரியலை ஆராயவும் இந்த ஆர்வலர்கள் விஞ்ஞானிகளுடன் கைகோர்க்கிறார்கள். இந்தப் போக்கு ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆராய்ச்சிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
ஒரு வாழிடத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகே உரிமங்கள் வழங்குவது, சரியான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் நீரில் திரும்ப விடப்படுகின்றனவா என்று கண்காணிப்பது, தூண்டில் முள் அளவுக்கான உச்ச வரம்புகள், மீன்பிடிப் போட்டிகளுக்கான சரியான கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இந்த வழக்கத்தை அனுமதிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் இருந்தால் மட்டுமே, மூன்றாமுலக நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் இந்தத் துறையை நெறிமுறைப்படுத்த முடியும். ஒரு வாழிடத்தை அணுக்கமாக அறிந்துகொள்ளும் இந்த ஆர்வலர்களை சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் ஈடுபடுத்தவும் வழிமுறைகளை உருவாக்கலாம். இவற்றையெல்லாம் செய்யும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பிறகே பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்கும் வழக்கம் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மனதில் வைத்துக்கொள்வதும் அவசியம். பொழுதுபோக்குக்காக மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்ட பழக்கம் இது என்றால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மனிதர்கள் கடல் விலங்குகளை நாடிய கதையும் உண்டு. அது என்ன வரலாறு?
(தொடரும்…)