இணைய இதழ்இணைய இதழ் 58தொடர்கள்

கடலும் மனிதனும்; 32 – நாராயணி சுப்ரமணியன்

தொடர் | வாசகசாலை

“எனக்கு இன்னொரு பேர் இருக்கு”

2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த மீனைப் பிடிப்பதற்காக டாஸ்மேனியாவின் கடற்கரைக்குச் சென்ற நியூசிலாந்தின் கப்பல்கூட்டங்கள் பெரிய எதிர்ப்பை சந்தித்தன. “இந்த மீனைப்  பிடிக்கக்கூடாதுஎன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள்

2020ல் ஆஸ்திரேலிய இழு வலைக் குழுமம் ஒன்று இந்த மீனைப் பற்றிய ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. “சரியான முறைப்படி இந்த மீன்களைப் பிடித்து அதை மேலாண்மை செய்தால், எண்ணிக்கை குறையாமல் சரியானபடி இருக்கும், சரிந்துவிட்ட எண்ணிக்கையையும் தூக்கி நிறுத்த முடியும். இந்த மீனைப் பிடிக்கும் இடங்களில் பெரும்பாலும் மண்ணும் கல்லும்தான் இருக்கும் என்பதால் மீன்பிடி முறையால் பாதிப்பு வருவதில்லைஎன்றெல்லாம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த மீனியல் அறிஞர்கள் கடும் அதிருப்தியைப் பதிவு செய்தனர். “இந்த அறிக்கையில் இருப்பதுபோல பொய்யான, அறிவியல் அடிப்படையற்ற தகவல்களைப் பார்த்ததில்லை. இதில் இருக்கும் பல தகவல்கள் உண்மையானவை அல்லஎன்று கொதித்தனர். அது மட்டுமில்லாமல், இந்த அறிக்கையில் உள்ள பல வாக்கியங்கள், இன்னொரு மீனைப் பற்றிய அறிக்கையிலிருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுநீல டிக்”  (Blue tick) சான்றிதழுக்காக.

அதென்ன நீல டிக்?

Marine Stewardship Council என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மீனைப் பிடிக்கும் முறையாலோ பிடிக்கப்படும் எண்ணிக்கையாலோ சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இது. இதில் அங்கொன்றும் இங்கொன்றும் சில சர்ச்சைகள் வந்திருக்கின்றன என்றாலும் உலக அளவில் பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசுமையான மீன்பிடி முறைக்கான ஒரு சான்றாக இது இருந்துவருகிறது. ஏற்றுமதி உள்ளிட்ட சர்வதேச சந்தை செயல்பாடுகளில் இந்த நீல டிக் அந்தஸ்து முக்கியமான சில கதவுகளைத் திறந்துவிடும். தவிர, கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், வாடிக்கையாளர்களும் நீல டிக் இருக்கும் மீன் இனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த அங்கீகரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டதுதான் மேலே விவரிக்கப்பட்ட அறிக்கை.

சூழலியலில் பசுமைக் கண்துடைப்பு (Green washing) என்ற ஒரு கருத்தாக்கம் உண்டு. அதாவது சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதாக பாவனை செய்து அதன்மூலம் விற்பனையை அதிகரிக்கும் தந்திரம் இது. இந்த அறிக்கை முழுக்க பசுமைக் கண் துடைப்புதான் நிறைந்திருக்கிறதுஎன்று அலுத்துக்கொள்கிறார் ஆவணத்தை சரிபார்த்த ஒரு ஆராய்ச்சியாளர். அறிக்கையை விரிவாக ஆராய்ந்ததில் இந்த மீன் இனத்துக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது. இரண்டு முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து இந்த டிக்குக்காகப் போராடுகிறது ஆஸ்திரேலிய இழு வலைக் குழுமம். இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உதவியது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என்பது கூடுதல் தகவல். ஆக, அமெரிக்காவுக்கும் இந்த மீன் இனத்தால் ஏதோ ஆதாயம் இருக்கிறது.

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் போராடி விற்கும் ஒரு மீனா? அந்த மீனின் பெயர்தான் என்ன?

அதில்தான் இருக்கிறது சுவாரஸ்யம்

1979க்கு முன்னால் இந்த மீனின் அடையாளமே வேறு. வெறும் மாணிக்கமாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த இந்த மீன், 1979ல் பாட்ஷாவாக பெயர் சூட்டப்பட்டு இன்று அமெரிக்காவின் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மிகப்பெரிய தாதாவாக இருக்கிறது.

Industrial fisheries of Orange roughy. Emptying a mesh full of Orange roughy into a trawler.

இதை சற்று விளக்கமாகவே பார்க்கலாம். 1957ல் ஒரு மீனுக்கு Slimehead என்று பெயர் சூட்டப்பட்டது. Slime என்றால் கொழகொழப்பான திரவம் என்று பொரூள். தலையில் பிசுபிசுப்பான திரவத்தை சுரக்கும் சுரப்பிகள் இருப்பதால் வந்த காரணப் பெயர் இது. 180 மீட்டர் ஆழத்துக்குக் கீழே உள்ள கடற்பகுதியில், பெரும்பாலும் கடலடி மலைகளுக்கு அருகில் வாழும் ஒரு ஆழ்கடல் இனம் இது

1975ல், நியூசிலாந்தில் ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சியின்போது இந்த மீன் எக்கச்ச்சக்கமாகக் கிடைக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.உடனே நியூசிலாந்தில் இந்த ஸ்லைம்ஹெட் மீன் இனத்தைச் சுற்றியே ஒரு மீன்பிடித் தொழில் உருவானது. நியூசிலாந்துக்காரர்களால் மட்டுமே எத்தனை மீன்களை சாப்பிட்டுவிட முடியும்? ஆகவே இந்த மீன்கள் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அமெரிக்காவிற்கு சென்றாலும் இந்த மீன் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஓரளவு விற்பனையானது, அவ்வளவே.

இதற்கிடையில்  1973ல் அமெரிக்காவின் அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான வேலையைக் கையிலெடுத்தது. “வெவ்வேறு நாடுகளிலிருந்து மீன்கள் வந்து இறங்குகின்றன, நாமும் பலவிதமான மீன்களைப் பிடிக்கிறோம். சங்கு, சிப்பி, கிளிஞ்சல், நண்டு, இறால், சுறா, பிற மீன் இனங்கள் என இங்கு 500 வகையான கடல் உணவுகள் கிடைக்கின்றன, ஆனால் மக்கள் ஒரு டஜன் இனங்களை மட்டுமே சாப்பிடுகிறார்கள். பிரபலமான மீன் இனங்கள் அழிந்துவருகின்றன, ஆனால் புரதம் சாப்பிடுவதும் அவசியமாகியிருக்கிறது. அப்படியானால் மற்ற மீன் இனங்களையும் மக்கள் சாப்பிடுவதுதான் ஒரே வழி. இவர்களை எப்படி சாப்பிட வைப்பது?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பதற்காகக் களத்தில் இறங்கியது  அமெரிக்காவின் தேசிய கடல்மீன் சேவை மையம் (National Marine Fish Serivce – NMFS) என்ற அரசாங்க அமைப்பு

சும்மா பள்ளிக்கூட ப்ராஜெக்ட் மாதிரி ஏதோ விளையாட்டாக செய்திருக்கீறார்கள் என்று நினைக்கவேண்டாம். 1973ல் தொடங்கிய இந்தத் திட்டம், எட்டு ஆண்டுகள் வரை நீடித்தது! அந்த காலத்திலேயே இந்தத் திட்டத்துக்கு எட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டது!

முதற்கட்டமாக நூற்றுக்கணக்கான பொதுமக்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. “சில வகை மீன்களை விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் என்ன காரணம்?” என்ற கேள்விக்கணை தொடுக்கப்பட்டது. முடிவுகள் வந்ததும், “அட! நம்ம நினைச்ச அதே பிரச்சனைதான்என்று ஆசுவாசமடைந்தது கடல்மீன் சேவை மையம். குறிப்பிட்ட மீன்வகைகளின் பெயர்தான் முக்கியக் காரணம் என்றும், நிறைய பொதுப்பெயர்களைக் கொண்ட மீன்கள் குழப்பமாக இருப்பதால் தவிர்ப்பதாகவும், சில மீன்களின் பெயர்களைப் பார்த்தாலே சாப்பிடத் தோன்றவில்லை என்றும் பெரும்பாலான பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

தங்களை ரொம்ப உயர்வானவர்களாக நினைத்துக்கொள்ளும் அமெரிக்க நுகர்வோர், மீன்களின் பெயர்களுக்கு எதிராக எப்படியோ முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். ஊர்வன இனம், கொறிவிலங்கு இனம் அல்லது அசுத்தமான பண்ணைவிலங்கு ஆகியவற்றை நினைவுபடுத்தும் பெயர்கள் கொண்ட மீன்களை அவர்கள் விரும்புவதில்லைஎன்று இந்த மன ஓட்டத்துக்குப் பின்னால் இருக்கும் உளவியலை 1981லேயே விவரித்திருக்கிறார் ப்ரையன் மில்லர் என்ற எழுத்தாளர். Rat tail, Pigfish போன்ற மீன்கள் வெறுக்கப்படுவதற்குக் காரணம் இதுதான் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தக் கட்டுரை எதை நோக்கிப் போகிறது என்று இப்போது யூகித்திருப்பீர்கள். பெயர்தான் பிரச்சனை என்றதும் கடல்மீன் மையம் அதைத் தீர்க்க முடிவு செய்தது. நிறைய கிடைக்கிறது என்றாலும் மோசமான பெயர் இருப்பதாலேயே நிராகரிக்கப்படும் மீன் இனங்களின் பட்டியல் எடுக்கப்பட்டது. நம்முடைய ஸ்லைம் ஹெட் மீனும் அந்தப் பட்டியலில் இருந்தது. “கொழகொழப்பான தலைகொண்ட மீன்என்ற பெயருக்கு பதிலாக, “Orange Roughy” என்ற பெயர் சூட்டப்பட்டு ஜிகினா மினுக்குடன் மீண்டும் சந்தைப்படுத்தப்பட்டது இந்த மீன் இனம்.

அதன்பிறகு நடந்தது எல்லாமே வரலாற்றில் பலமுறை ஏற்கனவே நடந்த நிகழ்வுகள்தான். ஆரஞ்ச் ரஃபியின் விற்பனை எக்கச்சக்கமாக அதிகரித்தது, அமெரிக்கா தொடர்ந்து இதை இறக்குமதி செய்தது. நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இது கட்டுப்பாடின்றி பிடிக்கப்பட்டது. 1980களில் சராசரியாகவே தொண்ணூராயிரம் டன் அளவுக்கு இந்த மீன் பிடிக்கப்பட்டது. ஆரஞ்சு ரஃபியை மையமாகக் கொண்ட மீன்பிடித் தொழில் கொடிகட்டிப் பறந்தது. ஆரம்பித்த வேகத்தில் சரியவும் தொடங்கியது. பத்தே ஆண்டுகள்தான். 1990களின் இறுதியில் நியூசிலாந்தில் இருந்த எட்டு மீன்பிடிப் பகுதிகளில் மூன்று பகுதிகளில் இந்த மீன் வரத்து மொத்தமாக நின்றுபோனது

இதற்கு நடுவில் பரபரப்பான ஒரு அறிவியல் உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது. எழுபதுகளில் இந்த மீன்பிடித் தொழில் ஆரம்பித்தபோது, இந்த மீனின் சராசரி வயது 30 என்பதாக ஒரு கணக்கீடு இருந்தது. தொண்ணூறுகளில், அதாவது இந்த மீன்பிடித்தொழில் சரியத் தொடங்கியபோதுதான், இந்த மீனின் சராசரி ஆயுட்காலம் நூறுக்கும் மேலே என்பது தெரிய வந்தது! நூறு வருடங்கள் வரை வாழ்கிற இந்த மீன் இனம், சுமார் 30 வருடங்களுக்குப் பிறகுதான் இனப்பெருக்கத்தையே ஆரம்பிக்கிறது! அது மட்டுமில்லாமல், வருடாவருடம் இனப்பெருக்கம் செய்யாத, இனப்பெருக்க விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் மீன் இனங்களில் இதுவும் ஒன்று. ஆகவே, இந்த மீன்களைப் பிடிப்பது நல்லதல்ல என்பது எல்லாருக்கும் புரிந்தது. அதாவது, நீண்ட ஆயுட்காலம் கொண்ட மீன் என்பதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து இந்த மீன்களைப் பிடித்து அழித்துவிட்டால், அங்கு மீன்பிடித் தொழில் நின்றுபோனால்கூட அவை மெள்ள இனப்பெருக்கம் செய்து பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமில்லை. போனது போனதுதான்.

அது மட்டுமில்லாமல், இந்த மீன்களை வழக்கமாகப் பிடிக்கும் இடங்களும் மீன்பிடி முறைகளுமே சரியானவை அல்ல என்கிறார்கள் சூழலியலாளர்கள். கடலடி மலைகள் (Sea mounts) போன்ற வாழிடங்களுக்கு அருகில், இழுவை வலைகள் மூலமாக (Bottom Trawl nets) ஆழ்கடல் பகுதியில் இந்த மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இழுவை வலையோ ஆழ்கடல் மீன்பிடித்தொழிலோ கடலடி மலைகளுக்கு அருகில் மீன்பிடிப்பதோ மூன்றுமே சுற்றுச்சூழலுக்குக் கேடானவைதான்:

  • இழு வலைகளால் வரும் சூழலியல் ஆபத்துகள் பற்றி ஆயிரக்கணக்கான அறிக்கைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 2010ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இழு வலைகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் வரைகூட அந்த பாதிப்பு தொடர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஆழ்கடல் மீன்பிடித்தலைப் பொறுத்தவரை, சுற்றுச்சூழலை பாதிக்காத வரையில் மீன்பிடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்கிறது TRAFFIC என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. ஆக, அதிகமாக ஆழம் கொண்ட பகுதிகளில் நடக்கும் மீன்பிடித் தொழிலே ஆபத்தானது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
  • இன்னும் கடலடி மலைகளின் சூழலியலையே நாம் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையில், இங்கே வணிகரீதியாக மீன்பிடித்தொழில் நடப்பது ஆபத்தானது.

இது மட்டுமில்லாமல், இந்த மீன்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்துக்காக ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடும்போதுதான் வலைவீசிப் பிடிக்கப்படுகின்றன. இந்தப் போக்கேல்லதல்லஎன்று சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இத்தனையையும் மீறி ஆரஞ்சு ரஃபி தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. “ஏழைகளின் சிங்கிறால்” (Poor man’s lobster) என்று இந்த மீனை வர்ணிக்கும் சமையல் கலைஞர்கள், “இந்த மீன் ஒரு வெள்ளைத் தாள் போன்றது, உங்களது சமையல் கலையால் இதில் வேண்டிய சுவையை ஓவியமாகத் தீட்டிக்கொள்ளலாம்என்று சப்புக்கொட்டுகிறார்கள். “கிடைப்பது கடினம் என்றால்கூட இந்த மீனைத் தேடிப் பிடித்து வாங்குங்கள்என்று சமையல் குறிப்புகள் வலியுறுத்துகின்றன. எழுபதுகளுக்கு முன்னால் இந்த மீன் கேட்பாரற்று இருந்தது என்பதையே நம்ப முடியாத அளவுக்கு இந்த மீனின் பெருமை பேசப்படுகிறது.

இப்போது இந்த மீன் அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த மீன் பிடித்தொழிலை விட மனமில்லாமல் நாடுகளும் நிறுவனங்களும் போராடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மேனியா வரை சென்றாவது ஆரஞ்சு ரஃபியைப் பிடித்து ஏற்றுமதி செய்யவேண்டும் என்று நியூசிலாந்து தவிக்கிறது. பொய்த்தகவல்கள் நிறைந்த அறிக்கையோடு ஒரு நீல டிக் வாங்க ஆஸ்திரேலியா முயற்சி எடுக்கிறது. ஆரஞ்சு ரஃபி மீன்களின் அழிவுபற்றிக் கவலை இல்லாத வணிக அமைப்புகளோடு சூழலியல் ஆர்வலர்கள் மல்லுகட்டிக் கொண்டிருக்கிறார்கள்

கடல் உணவின் பன்முகத்தன்மை அதிகரிப்பது என்பது நிச்சயமாக வரவேற்க்கத்தக்கது. ஆனால் அது வணிக நோக்கில் இல்லாமல் உணவுப் பாதுகாப்பு, சிறு/குறு மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட மீனை உணவுப்பட்டியலில் சேர்ப்பதற்கு முன்னதாக அந்த மீனின் எண்ணிக்கை, சூழலியல், இனப்பெருக்க விகிதம் ஆகியவை பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். “கடையில் கிடக்கு, ஆனா யாரும் வாங்கல, என்ன பண்ணலாம்?” என்று ஆடித்தள்ளுபடி முதலாளிகள்போல அமெரிக்க அரசு தட்டையாக யோசித்து மீன்களுக்குப் பெயர் மாற்றியதில் ஏற்பட்ட சூழல் பேரிடர் இது.

புதிய தலைவலியாக,2021ல் ஆசிய கெண்டை மீன் வகை ஒன்றிற்கு எப்படிப் பெயர் மாற்றுவது என்று அமெரிக்க கடல்மீன் மையம் யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. சூழலியலாளர்கள் நகம் கடித்துக் காத்திருக்கிறார்கள். ஆரஞ்சு ரஃபியைப் போலவே புதுப்பெயர் சூட்டப்பட்டு அழிவதற்காக மீன்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வரலாற்றிலிருந்து அமெரிக்கக் கடல்மீன் மையம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

இன்னொருபுறம், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளின் உணவுப்பழக்கத்தில் வணிகம் எந்த அளவுக்கு மையப்புள்ளியாக இருக்கிறது என்பதையும் இந்தப் பேரிடர் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் இப்போதுவரை அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர நகரங்களைப் பொறுத்தவரை, ஒரு மீன் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது, அந்த மீனைத் தனக்கு சமைக்கத் தெரியுமா இல்லையா, விலை எப்படி இருக்கிறது போன்ற காரணங்களுக்காகத்தான் மக்கள் பெரும்பாலும் மீன் வாங்குகிறார்கள், இதை என்னுடைய களப்பணிகளின்போது உணர்ந்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக வந்திருக்கும் இணையவழி மீன் விற்பனை மையங்கள் இதை எப்படி மாற்றியமைக்கும் என்பது கவலைக்குரிய கேள்விதான். அவை முக்கிய இடம் பிடித்தபிறகு இங்கேயும் ஆரஞ்சு ரஃபி கதைகள் உருவாகலாம். காலம்தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்.

உணவுக்காக அழிக்கப்பட்டுவரும் மீனின் கதை இது என்றால், மருந்துக்காக அழிக்கப்படும் கடல் இனங்களும் உண்டு. அது என்ன வரலாறு?

(தொடரும்…) 

nans.mythila@gmail.com

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button